தமிழ்க் கிறிஸ்தவ இதழ்கள் ஓர் ஆய்வு – அ.மா. சாமி

சென்னையில் ஹிகின்ஸ்பொட்டம் புத்தக நிலையத்தில் – தமிழ்க் கிறிஸ்தவ இதழ்கள் ஓர் ஆய்வு – என்ற தலைப்பில் தமிழகத்தின் ஜனரஞ்சக வார இதழான ராணி ஆசிரியர் அ. மா. சாமி அவர்கள் எழுதி, சென்னை நவமணி பதிப்பகம் வெளியிட்டுள்ள ஒரு நூலை நான் பார்க்க நேர்ந்தது. அத்தகைய ஆய்வின் பலனென்ன என்று அறிந்துகொள்ளும் ஆர்வத்துடன் அதை நான் பெற்றுக் கொண்டு வீடு திரும்பினேன். நூலை வாசித்து முடித்தபின் அதுபற்றி எழுத வேண்டிய அவசியத்தை உணர்ந்தேன். கிறிஸ்தவ இறையியலை மட்டுமே அறியத்தரும் நமது இதழில் இத்தகைய ஆக்கங்களுக்கு இடம் கொடுப்பதில்லை என்பது வாசகர்கள் அறிந்த உண்மை. இருந்தாலும் கிறிஸ்தவத்தை கிறிஸ்தவரல்லாதவர்கள் எக்கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள் என்பதை நாமெல்லோரும் ஓரளவுக்கு அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், கிறிஸ்தவ இதழ்களுக்கு இருக்க வேண்டிய தகுதிகள் பற்றி கிறிஸ்தவர்களாகிய நாம் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இதனை நான் எழுதத் தீர்மானித்தேன்.

நூலாசிரியரான அ. மா. சாமி ஒரு கிறிஸ்தவரல்ல. கிறிஸ்தவரல்லாத ஒருவர் கிறிஸ்தவ இதழ்களை எவ்வாறு ஆராய்ந்துள்ளார் என்று அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் நூலைப் படித்தேன். உண்மையில் ஆசிரியர் பலமுக்கிய கிறிஸ்தவ பிரமுகர்களையும், பத்திரிகையாளர்களையும் சந்தித்துப் பேசியும், பல இடங்களுக்குப் போயும் நல்லபல தகவல்களைச் சேகரித்துத் தந்துள்ளார். தமிழில் எப்போது எழுத்துக்கள் அச்சில் கொண்டு வரப்பட்டன, தமிழில் முதலில் அச்சில் வந்த கிறிஸ்தவ நூலெது? என்பது போன்ற தகவல்களும் இவைபற்றி அறிந்துகொள்ள ஆர்வமுள்ளவர்களுக்கு நிச்சயம் பயன்படும்.

கிறிஸ்தவ இதழ்கள் என்ற பெயரில் தமிழில் 1500க்குக் குறையாத இதழ்கள் வெளிவந்துள்ளன என்ற ஆசிரியரின் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் தனது பட்டியலில் ஆசிரியர் ரோமன் கத்தோலிக்க மதத்தைச் சார்ந்த இதழ்களையும், கிறிஸ்தவ இதழ்கள் என்ற பெயரில் உலவும் பொழுது போக்கு, அரசியல், கலை இதழ்களையும் சேர்த்துக் கொண்டுள்ளார். ஆகவே, இவையனைத்தையும் ஒட்டுமொத்தமாக “கிறிஸ்தவ” இதழ்கள் என்று கூறமுடியாது. இவ்விதழ்களில் பெரும்பாலானவை தமிழகத்தில் இருந்து வெளிவந்துள்ளன. ஆசிரியர் மலேசியா, ஸ்ரீ லங்கா மற்றும் மேலை நாடுகளில் இருந்து வெளியிடப்பட்டுள்ள இதழ்கள் பற்றியும் குறிப்புகள் தந்துள்ளார். இந்நூலை வாசித்தபோது இரண்டு அம்சங்களைப்பற்றி அறிந்து கொள்வது எனது முக்கிய நோக்கமாக இருந்தது. தமிழில் உள்ள கிறிஸ்தவ இதழ்கள் யாவை? அவை எவ்வாறு தோன்றின? என்று அறிந்துகொள்வது எனது முதலாவது நோக்கம். இதை நிறைவேற்றி வைப்பதில் ஆசிரியர் நிச்சயம் உதவினார் என்றுதான் கூறவேண்டும். எனது அடுத்த நோக்கம் கிறிஸ்தவ இதழ்கள் பற்றிய கிறிஸ்தவரல்லாத நூலாசிரியரின் கணிப்பு என்ன? என்பது. இதில் எனக்கு ஆச்சரியமும், அதே நேரத்தில் கவலை தரக்கூடிய அம்சங்களும் இருந்தன.

இது வேதபூர்வமான கிறிஸ்தவத்தின் அடிப்படையில் அமைந்த ஆய்வல்ல

கிறிஸ்தவரல்லாத இந்நூலாசிரியர் கிறிஸ்தவத்தைப்பற்றிய அரைகுறை அறிவுடன் இவ்வாய்வை மேற்கொண்டுள்ளார். தமிழ்மக்கள் மத்தியில் கிறிஸ்தவம் என்பது ரோமன் கத்தோலிக்க மதம், யெகோவாவின் சாட்சிகள் (காவற்கோபுரம்), யேசுவிஸ்ட், அட்வன்டிஸ்ட் அனைவரையும் உள்ளடக்கிய ஒரு மதம் என்ற எண்ணம் பரவலாக நிலவுகிறது. ரோமன் கத்தோலிக்க மதத்தில் இருந்து பிரிந்து சென்ற கிரேக்க வைதீக சபையும் (Greek Orthodox Church) கிறிஸ்தவ சபையாகவே இந்நூலில் காட்டப்பட்டுள்ளது. ரோமன் கத்தோலிக்க மதத்திலிருந்து பிரிந்து சொன்ற சீர்திருத்தக் கிறிஸ்தவர்கள் (Protestant) ஏன் பிரிந்து சென்றார்கள் என்ற விளக்கம் புரியாமல் அவர்களைத் தொடர்ந்து ரோமன் கத்தோலிக்க சமயத்தோடு சம்பந்தப்படுத்தியும் இந்நூலில் காட்டப்பட்டுள்ளது. இந்நூலை வாசிப்பவர்களுக்கு கிறிஸ்துவின் பெயரைப் பயன்படுத்திக்கொள்ளும் அனைவருமே கிறிஸ்தவர்கள் என்ற தப்பான எண்ணமே ஏற்படும் என்று கூறினால் அது மிகையாகாது. இதுவே இந்நூலாசிரியருடைய எண்ணமுமாகும். இத்தகைய எண்ணத்தையே நூலாசிரியருக்குத் தகவலளித்துள்ளவர்கள் தந்துள்ளார்கள். ரோமன் கத்தோலிக்க இதழ்கள் இந்நூலில் கிறிஸ்தவ இதழ்களாகப் படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளன. கிறிஸ்தவரல்லாத ஒருவர் கிறிஸ்தவத்தைக் குறித்து எழுத முனையும்போது இத்தகைய தவறுகள் ஏற்படுவதில் ஆச்சரியமில்லை. அத்தோடு தமிழகத்து கிறிஸ்தவர்கள் மத்தியில் முக்கிய பிரமுகராக இருக்கும் தலித் விடுதலைத் தளபதி என்று அழைக்கப்படும் பேராயர் எஸ்ரா சற்குணம் (இந்நூலுக்கு அணிந்துரை அளித்துள்ளார்), தயானந்தன் பிரான்ஸிஸ் போன்றோரின் சமயசமரசக் கோட்பாடுகளினாலும், அரசியல் நடவடிக்கைகளினாலும் கிறிஸ்தவர்களே குழம்பிப்போகும்போது, கிறிஸ்தவத்தைப் பற்றிய தப்பான எண்ணங்கள் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களுக்கு ஏற்பட்டிருப்பதில் ஆச்சரியம் இருக்க முடியாது. ஆகவே, இந்நூல் தமிழில் வெளிவந்துள்ள கிறிஸ்தவ இதழ்கள் பற்றிய ஆய்வு என்ற த‍லைப்பைக் கொண்டிருந்தபோதும், மெய்க்கிறிஸ்தவத்தின் அடிப்படையில் வெளிவந்துள்ள இதழ்களை ‍வேதபூர்வமான கிறிஸ்தவக் கண்ணோட்டத்தில் ஆராயும் ஒரு நூலென்று கூற முடியாது.

தென்னிந்தியாவில் கிறிஸ்தவத்தின் ஆரம்பம்

தென்னிந்தியாவிற்கு கிறிஸ்தவம் எப்போது வந்தது என்பது பற்றி எழுதும் எல்லோருமே தோமையரைப்பற்றி எழுதாமல் இருக்கமாட்டார்கள், வாய்வழிவந்து பரவியுள்ள, நம்பத்தகுந்த வரலாற்று ஆதாரமெதுவுமே இல்லாத தோமையரின் தென்னிந்திய வருகையின் அடிப்படையில் உலவும் கண்மூடித்தனமான நம்பிக்கைகளுக்கு அளவே இல்லை. இந்துவிற்கு ஒரு இராமர் என்றால் நமக்கும் ஒருவர் வேண்டாமா? என்பது போல்தான் தோமையர் பற்றிய கதைகள் உள்ளன. அது மட்டுமல்லாமல் கிறிஸ்தவத் திருமறைக்குப் புறம்பான பல போதனைகளுடன் அப்போஸ்தலர்களில் ஒருவரான தோமையரைச் சம்பந்தப்படுத்திப் பேசும், எழுத்துக்களும் அதிகம். இத்தகைய தகவல்களின் அடிப்படையில் நூலாசிரியர் தென்னிந்தியாவில் கிறிஸ்தவத்தின் ஆரம்பத்தை வர்ணித்துள்ளார்.

1612 ஆம் ஆண்டில் இலண்டனில் இருந்து கிழக்கு இந்தியக் குழு இந்தியாவுக்கு வந்தபோது அவர்களுடன் சீர்திருத்தக் கிறிஸ்தவம் இந்தியாவுக்கு வந்தது. 1706 இல் டேனிஸ் மிஷனரியான சீகன்பால்கு தரங்கம்பாடி வந்தார். 1792 இல் வில்லியம் கேரி இந்தியாவுக்கு வந்தார் என்பது வரலாறு.

கிறிஸ்தவர்களின் தமிழ்த்தொண்டு

இந்தியாவிற்கு அச்சுக்கலையைக் கொண்டு வந்தவர்கள் கிறிஸ்தவர்கள். இந்தியாவில் அச்சிடும் தாள் தயாரித்தவர்கள் கிறிஸ்தவர்கள். இந்தியாவில் அச்சிடும் மைத்தொழிற்சாலை அமைத்தவர்கள் கிறிஸ்தவர்கள். இந்தியாவில் முதல் நூலைத் தயாரித்தவர்களும் கிறிஸ்தவர்களே. இத்தனைப் பெருமைகளுக்கும் தாயகமாக இருந்தது தமிழகமே என்ற உண்மையை இந்நூல் சுட்டிக்காட்டுகிறது. இந்தியாவின் முதல் தாள் ஆலையும், மை ஆலையும் தரங்கம்பாடியிலேயே அமைக்கப்பட்டன. டேனிஸ் சீர்திருத்த சபையைச் சேர்ந்த சீகன்பால்கே 1714 ல் நற்செய்தியையும், பழைய ஏற்பாட்டுப் பகுதிகளையும் முதலில் தமிழில் தரங்கம்பாடியில் அச்சிட்டார். தமிழில் முதலாவது வெளிவந்த இதழ் “தமிழ் மெகசின்” என்ற பெயரில் மாத இதழாக சென்னையில் இருந்து 1831 இல் வெளியிடப்பட்டது.

கிறிஸ்தவத்தைப்போல் எந்த மதமும் தமிழுக்குத் தொண்டாற்றவில்லை என்று கூறும் ஆசிரியர், இன்று நாம் படிக்கும், எழுதும் உரைநடைத் தமிழை உயிருள்ள மக்கள் தமிழாக்கியவர்கள் கிறிஸ்தவத் தொண்டர்களே என்பதையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை. அத்தமிழ்ப் பணியில் கத்தோலிக்கருக்கும் பெரும் பங்குண்டு என்பதை நாம் மறுக்க முடியாது. தமிழில் உரைநடை ஆரம்பத்தில் இல்லாமலில்லை. ஆனால், அன்றைய நடையில் மெய்யெழுத்துக்களுக்குப் புள்ளி இருக்கவில்லை. முற்றுப்புள்ளி கிடையாது. எறும்புக்கூட்டம் ஊறுவதுபோல் வரிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். கிறிஸ்தவ ஊழியர்களே பேச்சுத் தமிழை உரைநடைத் தமிழாகவும், வீட்டுத் தமிழாகவும் மாற்றினார்கள். தமிழ்த் தொடரை சந்தி பிரித்து எழுதிய‍தோடு கால்புள்ளி, அரைப்புள்ளி, முற்றுப்புள்ளி போன்றவற்றையும் அறிமுகப்படுத்தினார்கள். கிறிஸ்தவர்களுடைய தமிழ்ப்பணிக்கு உறுதுணையாக இருந்தது அச்சுதான். ஆசிய மொழிகளில் முதன் முதலில் அச்சுக் கண்டது தமிழே. அது மட்டுமல்லாது காலத்துக்குக் காலம் மாறிக்கொண்டு வந்த தமிழ் வரிவடிவம் மாறாது நிலைபெற்றதற்கும் கிறிஸ்தவமே காரணம். ஐரோப்பாவில் சீர்திருத்தக் கிறிஸ்தவம் பரவ அச்சின் ஆற்றல் ஒருகாரணமாக இருந்ததை உணர்ந்து சீர்திருத்தக் கிறிஸ்தவ மிஷனரிகள் தென்னிந்தியாவிலும் அச்சுப் பணியை ஆரம்பித்து அதில் முன்னோடிகளாக இருந்தனர். அக்காலத்தில் பெரும்பாலான அச்சகங்கள் அவர்கள் வசமே இருந்தன.

கிறிஸ்தவத் தமிழ்

ஆரம்பத்தில் தமிழில் கிறிஸ்தவ வேதவிளக்கங்களைத் தரமுனைந்தவர்கள் அதிகமாக வடமொழிக் கலப்புள்ள ஒரு எழுத்து நடையை உருவாக்கிவிட்டதையும் நூலாசிரியர் சுட்டிக் காட்டுகிறார். இத்தகைய போக்கு கிறிஸ்தவர்களுக்கே தனியாக ஒரு கிளை மொழியை ஏற்படுத்திவிட்டது என்கிறார் சாமி. ஆரம்பத்தில் கிறிஸ்தவர்கள் மத்தியில் தமிழில் எழுத முனைந்தவர்கள் பெரும்பாலும் ஐரோப்பிய மிஷனரிகளாக இருந்ததே இதற்குக் காரணம். ஆனால், இது நாளடைவில் மாற்றமடையாமல் தொடர்ந்து நி‍லைத்து கிறிஸ்தவர்களுக்கே சொந்தமான ஒரு தனிகிளை மொழியை (Dialect) உருவாக்கிவிட்டது. உதாரணத்திற்கு சர்வேசுவரன், தேவன், ‍இரட்சகர், ஆத்துமா, ராச்சியம், சித்தம், ஏகாதிபத்தியம் போன்ற சொற்களைக் கூறலாம். சாகித்திய அகாடமி பரிசு பெற்ற “புதிய உரைநடை” என்ற தனது நூலில் பேராசிரியர் டாக்டர் இராமலிங்கம், தரமற்ற எழுத்து நடையைப்பற்றி விளக்கும்போது, “விவிலியத்தமிழ் என்று பிரித்துப் பேசும் அளவுக்கு ஒரு புதிய தமிழே உருவாகியுள்ளது” என்று இந்நூலாசிரியரின் கருத்தையே பிரதிபலிக்கிறார். தமிழில் வடமொழி மற்றும் திசைச் சொற்கள் இருந்தபோதும் அவற்றைத் தேவைக்கேற்பவே பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ‍சென்னையில் நான் சந்தித்துப் பேசிய தமிழறிஞராகிய தஞ்வாவூர் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் இதுபற்றிக் குறைபட்டுக் கொண்டார். கிறிஸ்தவரல்லாத அப்பெரியவர், என்னைப் பார்த்து நீங்கள் எங்களுக்கு உதவும் வகையில் ஏன் நல்ல தமிழில் கிறிஸ்தவ விளக்கங்களைக் கொடுக்கக் கூடாது? என்று கேட்டதில் எந்தத் தவறும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. கிறிஸ்தவத்தின் வளர்ச்சிக்கு இத்தகைய எழுத்து நடை தடையாக இருக்கிறது என்று நூலாசிரியர் நமது கவனத்திற்குக் கொண்டு வந்திருப்பதை நாம் வரவேற்கத்தான் வேண்டும்.

கிறிஸ்தவ இதழ்களின் தரம்

1812 முதல் 1996 வரையில் வெளிவந்துள்ள இதழ்களை ஆராய்ந்துள்ள நூலாசிரியரின் ஆய்வைப் பார்க்கும்போது மேல்நாடுகளில் இருந்து ஆங்கிலத்தில் வெளிவரும் இதழ்களின் அளவிற்கு தமிழில் தரமான கிறிஸ்தவ இதழ்கள் வெளிவந்துள்ளனவா என்பது சந்தேகமே. “தரமான கிறிஸ்தவ இதழ்” என்று கூறும்போது வேதபூர்வமான இறையியலின் அடிப்படையில் மட்டும் அமைந்த ஆக்கங்களைக்‍கொண்டு கிறிஸ்துவை மகிமைப்படுத்தும் வகையிலும், கிறிஸ்தவர்களின் ஆவிக்குரிய வாழ்க்கைக்குப் பயன்படும்விதத்திலும் வெளிவரும் இதழ்களை மட்டும் நான் குறிப்பிடுகிறேன்.

இந்நூலில் பெரும்பாலான இதழ்களைப்பற்றிய விபரமான குறிப்புகளைப் பெற முடியவில்லை. அதனால் பல இதழ்களின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள முடியாமலிருக்கிறது. தனது பட்டியலில் ஆசிரியர் கிறிஸ்தவப் பெயர் கொண்டவர்களையும், கத்தோலிக்கர்களையும் ஆசிரியர்களாகக்கொண்டு வெளிவரும் முற்போக்கு, அரசியல், இலக்கிய இதழ்களையும், திரைப்படச் செய்திகளைத் தாங்கி வரும் இதழ்களையும், ஊர் நடப்புகளை விளக்கும் நாளிதழ்களையும் இணைத்துக் கொண்டுள்ளார். உதாரணத்திற்கு, டொமினிக் ஜீவாவின் முற்போக்கு சிற்றிதழான “மல்லிகையையும்”, நாளிதழான “தினத்தூதையும்”, புலவர் தெய்வநாயகத்தின் “திராவிட சமயத்தையும்” கூறலாம். இவற்றை எப்படிக் கிறிஸ்தவ இதழ்களாகக் கருதலாம் என்பது புரியவில்லை. வரிக்குதிரைக்கு உடம்பில் வரி இருக்கிறது என்பதற்காக, உடம்பில் வரி இருக்கும் மிருகங்கள் எல்லாம் வரிக்குதிரைகளாகிவிட முடியுமா என்ன?

ஆக, இந்நூலில் தரப்பட்டுள்ள கத்தோலிக்கம் மற்றும் ஏனைய மத இதழ்களையும், வெறும் இலக்கிய, முற்போக்கு, அரசியல், திரைப்பட செய்திகளைத் தாங்கி வரும் இதழ்களையும் ஒதுக்கிவிட்டு கிறிஸ்தவர்களால் வெளியிடப்படும் கிறிஸ்தவ இதழ்கள் என்ற பெயரில் உள்ளவற்றை மட்டும் பார்த்தால் இவற்றில் பெரும்பாலானவை ஜெபக்குறிப்புகளைத் தாங்கி வரும் துண்டறிக்கைகளாகவே இருக்கின்றன. இவற்றையும் இதழ்கள் என்ற வட்டத்திற்குள் ஆசிரியர் கொண்டுவந்துள்ளார்.

கிறிஸ்தவ இதழ்களைப்பற்றி ஆசிரியர் தரும் பல சுவையான தகவல்களுடன் இவ்வாக்கத்தை முடிக்க எண்ணுகிறேன். நூலாசிரியர் கிறிஸ்தவரல்லாதவராக இருந்தபோதும் கிறிஸ்தவ இதழ்கள் என்ற பெயரில் வெளிவரும் பல இதழ்களின் குறுகிய நோக்கங்கள் அவருடைய கண்களுக்குத் தப்பவில்லை. இவற்றையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். கிறிஸ்தவ இதழாசிரியர்களும் வாசகர்களும் இவற்றைக் குறித்து சிந்தித்துப் பார்ப்பது நல்லது.

நூற்றுக்கணக்கான கிறிஸ்தவ இதழ்கள் தமிழில் வெளிவந்துள்ளபோதும் இவற்றில் 90% மாத இதழ்கள் என்றும், அவையும் தொடர்ந்து மாத இதழ்களாக வெளிவரத் தடுமாறி பாதியில் நின்று விடுகின்றன என்றும் நூல் கூறுகிறது. ஒரு இதழின் பின்அட்டையைக் கொண்டு அது கிறிஸ்தவ இதழா இல்லையா என்று அறிந்து கொள்ளலாம் என்ற கூறும் ஆசிரியர், எல்லாக் கிறிஸ்தவ இதழ்களினதும் பின்பக்க அட்டை அநேகமாக ஒரே மாதிரியாக இருக்கிறது என்றும், If undeliverd kindly return to: என்று எல்லா இதழ்களிலும் இருக்கும் என்றும் கூறுகிறார்.

பெரும்பாலான கிறிஸ்தவ இதழ்கள் “தனிச்சுற்றுக்கு மட்டும்” என்று இருக்கும் என்றும், பலவற்றில் வெளிவந்த தேதியே இருக்காது என்றும் தெரிவிக்கிறார். தேதி இருந்தால் பழைய இதழ் என்று ஆகிவிடும் அதனால் தேதி அச்சிடுவது இல்லை என்று ஒரு ஆசிரியர் கூறியதாக நூல் தெரிவிக்கிறது. இதழ்களின் பெயர்களைக் கொண்டு கிறிஸ்தவ இதழ்களை அடையாளம் கண்டு கொள்ள முடியும் என்று கூறும் ஆசிரியர் சில தமிழ் இதழ்களுக்கு ஆங்கிலப் பெயர் மட்டுமே இருக்கிறது என்றும் கூறுகிறார். கிறிஸ்தவ பத்திரிகைகளை “தீபிகை” என்று கூறும் வழக்கமும் ஆரம்பத்தில் இருந்ததாக நூல் தெரிவிக்கிறது.

ஜெப இதழ்கள் பற்றி இந்நூல் பின்வருமாறு கூறுகிறது: “ஜெப இதழ்களில் சாட்சிகள் அதிகமாக இருக்கும், நிதி அனுப்புங்கள் என்ற கோரிக்கைக்கு குறைவே இருக்காது. இந்த இதழ்களுக்காகத்தான் பேச்சிலே ஏசு! மூச்சிலே காசு! என்ற பழமொழி ஏற்பட்டது போலும்! “சமாதான பிரபு” என்ற இதழின் ஆசிரியர் போதகர் ஜேம்ஸ் சந்தோஷம் சொந்த வீடு வாங்கப் பணம் கேட்கிறார். 1996 ஜீன்-ஜீலை இதழில் அவர் எழுதியிருப்பது: தற்போது குடியிருக்கிற வீட்டை உடனடியாகக் காலி செய்ய வேண்டும் என்ற நிலையில் போதகர் இருக்கிறார். ஜீன் மாதத்தில் வேறு வீட்டிற்கு குடியேற வேண்டும். நம் போதகருக்கு சொந்த வீடு இருந்தால் இப்படிப்பட்ட கஷ்டங்கள் ஏற்படாமல் இருக்கும் அல்லவா! எனவே, தேவன் அவருக்கு சொந்த வீட்‍டைக் கட்டித்தரும்படி‍யாக பாரத்துடன் ஜெபியுங்கள். அதே நேரத்தில் சொந்தமாக வீடு வாங்குவதற்கும் போதகரிடத்தில் பணமில்லை! கர்த்தர் அற்புதம் செய்தால்தான் சொந்த வீடு கிடைக்கும்! உங்களால் முடியுமானால், கர்த்தர் ஏவுதல் கொடுத்தால், இதற்காக உதவி செய்யுங்கள்.”

கிறிஸ்தவ இதழாசிரியர்களில் பலர் ஆசையின் காரணமாகவே இதழ் நடத்துகிறார்கள் என்பது நூலாசிரியரின் கணிப்பு. இவர்களுக்கு “இதழியல் உத்தி எள்ளளவும் தெரிவதில்லை. மளமளவென்று எழுதி, அச்சிட்டு, இதழ் என்று வெளியிட்டு விடுகிறார்கள். அதனால்தான் மிக விரைவிலேயே கடை விரித்தோம், கொள்வார் இல்லை என்று மூடிவிடுகிறார்கள். கிறிஸ்தவ இதழ்களின் விற்பனையும் குறைவு. ஆயிரம் இதழ்கள் விற்பனையாகும் இதழ்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். வாசகர் வட்டம் மிகச்சிறியது. பாளையங்கோட்டையிலும், நெல்லையிலும் மட்டும் இருநூறு இதழ்கள் வெளிவருகின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!” என்கிறார் சாமி. கிறிஸ்தவ இதழ்களைப் பணம் கொடுத்து வாங்கிப் படிக்க கிறிஸ்தவர்கள் முன்வர வேண்டும். அதேவேளை பணம் கொடுத்து வாங்கிப் படிக்கத் தகுதியுள்ள தமிழ்க் கிறிஸ்தவ இதழ்களை இன்று கண்டு பிடிப்பதும் கல்லில் நார் உரிப்பது போல் கஷ்டமாகவே இருக்கிறது என்ற உண்மையையும் நாம் உணர வேண்டும்.

தனிப்பிரசங்கிமார் வெளியிடும் இதழ்களைப்பற்றி கிறிஸ்தவ இதழாசிரியரான ஆர். எஸ். ஜேக்கப் என்பவரின் கருத்தை நூல் விளக்குகின்றது. “தனிப்பிரசங்கிமார் வெளியிடும் இதழ்களில் பல தனிமனித வழிபாடாகவும் – இருளில் இருக்கிற மக்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வரமுடியாதபடி புதிய புதிய மூடக்கருத்துக்களை வளர்ப்பனவாகவும் – மக்களிடமிருந்து நன்கொடை வசூலிப்பவனவாகவும் உள்ளன.”

ஜெப இதழ்கள் இலவசமாக தரப்படுகின்றன. ஆனால், காணிக்கை கேட்கிறார்கள்! காணிக்கை அல்லது நன்கொடை பெறுவதில்தான் எத்தனை பாடு! என்று ஆசிரியர் விளக்குகிறார்.

“இவ்வூழியத்திற்கு சந்தாவாகக் குறிப்பிட்ட தொகை நிர்ணயிக்கப்படவில்லை. கர்த்தர் உங்களோடு பேசுகின்றபடி செய்யுங்கள்” – வளரும் செடி (மார்ச் 96)

“இம்மாத இதழை அச்சடிக்க எனது மோட்டார் சைக்கிளை விற்கிறேன்” – என் நேசரின் கடிதம் (ஜீலை 94)

“இப்பத்திரிகை சந்தாப் பத்திரிகையுமல்ல. அதே சமயம் இலவச பத்திரிகையுமல்ல. ரொம்ப நாளாக ஓசிக்குப் படிப்போர் இதை நினைவில் வையுங்கள்” – வான்சுடர் (ஜீலை 94)

“அந்தக் கதையெல்லாம் வேண்டாம்! உடனே பணத்தை அனுப்புங்கள்” என்கிறது “நல்வாழ்வு” என்ற இதழ்.

கிறிஸ்தவரல்லாத ஒருவரால் கிறிஸ்தவ இதழ்களின் தரத்தை ஆராய முடியாது. இது இந்நூலின் மிகப்பெரிய குறைபாடாகும். இதையே ஒரு கிறிஸ்தவர் எழுதியிருந்தால் அதிகம் பயன்பட்டிருக்கும். நூலாசிரியர் கிறிஸ்தவ இதழ்கள் இறையியலைத் தவிர அரசியல், சமூகம், பொருளாதாரம், கலை, இலக்கியம் போன்றவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். அதாவது துக்ளக், குமுதம், கல்கி, ராணி போல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதுபோல் தெரிகிறது. இதெல்லாம் கிறிஸ்தவம் என்றால் என்ன என்று புரியாததால் ஏற்படும் குழப்பமாகும். கிறிஸ்தவ இறையியலுக்கும் மனித வாழ்க்கைக்கும் சம்பந்தமில்லை என்று இவர்கள் எண்ணிவிடுகிறார்கள். கிறிஸ்தவ இறையியல் நடைமுறை இறையியல். கிறிஸ்துவை விசுவாசித்து, கிறிஸ்தவ வேதத்தை சரியாகப் புரிந்து கொண்டால் மட்டுமே ஒருவரால் கிறிஸ்தவ வாழ்க்கையை சமுதாயத்தில் சிறப்பாக வாழ முடியும். சமூகத்துக்கும் தொண்டு செய்ய முடியும். வேதபூர்வமான கிறிஸ்தவ இறையியல் சமுதாயத்தின் எல்லா அம்சங்களையும் அலசும் இறையிலாகும். நாட்டின் பஞ்சம், பட்டினி, அரசாட்சி, குடும்ப வாழ்க்கை, குடும்பக் கட்டுப்பாடு, ஆண், ‍பெண் உறவு, சாதிச் சிக்கல், மதவெறி என்று கிறிஸ்தவ வேதம் பேசாத பொருளில்லை. கிறிஸ்தவ இதழ்கள் இவைபற்றி வேதபூர்வமாக ஆராய்ந்து, வேதபூர்வமான விளக்கங்களை மட்டுமே தர வேண்டும். கர்த்தர் எந்தக் கண்ணோட்டத்தில் இவையனைத்திற்கும் விளக்கம் கொடுக்கிறாரோ அந்தக் கண்ணோட்டத்தில் மட்டுமே எழுத வேண்டும். வேதத்திற்கு விரோதமான எழுத்துக்கள் கிறிஸ்தவ இதழ்களில் இடம் பெறக்கூடாது. இன்று வெளிவரும் இதழ்களில் உள்ள பெரும் குறைபாடு அவை வேதத்தை அடிப்படையாகக் கொண்டிராமல் இருப்பதுதான். எனவே அவற்றில் வேத பூர்வமான கிறிஸ்தவ இறையியலுக்கும் இடமில்லாமல் இருக்கிறது. அத்தோடு எழுத்து நடையும் வாசிக்கும் ஆர்வத்தைக் கிளறுவதாக இல்லை. இதை எப்படிக் கிறிஸ்தவரல்லாத இந்நூலாசிரியருக்குப் புரிய வைப்பது?

கிறிஸ்தவப்பணி புரிகிறோம் என்ற பெயரில் தனிமனித வழிபாட்டிற்கும், குப்பையைக் காசாக்கும் கருவியாகவுமே பெரும்பாலான இதழ்கள் செயல்பட்டு வருவதால் கிறிஸ்தவர்களும், கிறிஸ்தவர்கள் அல்லாதோரும் கூட இன்று கிறிஸ்தவ இதழ்களைப் பார்த்துக் குழம்பிப் போயிருக்கிறார்கள். நூலாசிரியரான சாமி, இன்றைய கிறிஸ்தவ இதழ்கள் தரமில்லாமல் இருக்கின்றன என்ற கருத்தை நம்முன் வைக்கிறார். வேத அடிப்படையில் அவர் இம்முடிவுக்கு வரவில்லை. இருந்தபோதும் கிறிஸ்தவத்தின் அடிப்படையில் பார்க்கும்போது இம் முடிவுக்கே கிறிஸ்தவர்களும் வருவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

One thought on “தமிழ்க் கிறிஸ்தவ இதழ்கள் ஓர் ஆய்வு – அ.மா. சாமி

  1. \ வேத அடிப்படையில் அவர் இம்முடிவுக்கு வரவில்லை. இருந்தபோதும் கிறிஸ்தவத்தின் அடிப்படையில் பார்க்கும்போது இம் முடிவுக்கே கிறிஸ்தவர்களும் வருவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.\\

    இந்த நூலை நானும் படித்துள்ளேன். மிக மிக சிரமத்தின் மத்தியில்தான் செய்துள்ளார். கத்தோலிக்க மற்றும் ஏனைய கிறிஸ்தவ மத பிரிவுகள் கிறிஸ்தவம் என்ற வகுதிக்குள்தான் அடக்கப்படுகின்றன. யெகோவாவின் சாட்சிகளும் அப்படிதான். எனவேதான் அவற்றினையும கிறிஸ்தவ இதழ்கள் என கருதியுள்ளார்.. நூலகப் பாகுப்பாட்டின் அடிப்படையல் பார்த்தால் அது சரிதான். இத்தகைய ஆய்வுகளுககு அதிக காலநேரம் தேவைப்படும். அத்துடன் பணச் செலவும் அதிகம் ஏற்படும். நூலகவிஞ்ஞானம் மற்றும் கிறிஸ்தவ அறிவுடன் விசுவாசி ஒருவரே இத்தகைய பணிகளை மேற்கொள்ள முடியும.

    Like

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s