கத்தோலிக்க மதகுருக்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்த எரிமலையாம் லூதரின் வாழ்வில் வசந்தகால வானம்பாடியாக சங்கீதமிசைத்தார் கேட்டி.
லூதரின் கேட்டி
மார்டின் லூதருடைய வாழ்க்கையில் திருமணம் எதிர்பாராதவிதமாகவே நடந்தது. கத்தோலிக்க மடத்தில் இருந்து பெண்கள் தப்புவதற்காக லூதர் உதவி வந்தார். அவ்வாறு ஒரு முறை அவர் உதவி செய்த பெண்கள் குழுவில் கெத்தரின் வான் போரா இருந்தார். லூதர் கெத்தரினை தனது நண்பர்களில் ஒருவருக்கு மணமுடித்து வைப்பதில் பெரு முயற்சி செய்தார். ஆனால், கெத்தரின் அவரைத் திருமண முடிக்க மறுத்து லூதரை மணமுடிப்பதில் ஆர்வம் காட்டினார். இறுதியில் லூதரே கெத்தரினை மணமுடித்தார். லூதரின் திருமணத்தில் ஐரோப்பா முழுவதுமே ஆர்வம் காட்டினது. அதை எதிர்த்துப் பழித்துப் பேசியவர்களும் அநேகம். ஆனால், லூதர் எல்லையில்லாத மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தார். லூதர் ஆசையாக தனது அன்பு மனைவியை எப்போதும் கேட்டி என்று கூப்பிடுவது வழக்கம். கேட்டி லூதரின் வாழ்வில் பெருமாறுதல்களைக் கொண்டு வந்தார். திருமணத்திற்கு முன் லூதரின் வேலை மிகுதியால் ஒரு வருடம் அவருடைய கட்டில் சீர் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலைமையில் கேட்டியின் வருகை லூதருக்கு எத்தகைய சந்தோஷத்தை அளித்திருக்கும்.
கேட்டி நன்றாகப் படித்திருந்ததோடு மிகுந்த புத்திசாலியாகவும் இருந்தார். வீட்டு வேலையிலும், பன்றி வளர்ப்பிலும் பெரும் ஆர்வம் காட்டினார். வீட்டுப் பொருளாதாரத்தைத் திறம்பட நடத்திவந்தார். அதிகாலையில் எழுந்து தனது பெரியவீட்டின் அனைத்துத் தேவைகளையும் திறமையாக நிறைவேற்றி வந்தார். லூதரின் வீட்டுக்கு அநேகர் வந்து போவது வழக்கமாக இருந்தது. சீர்திருத்தத்தின் அதிகாலை நட்சத்திரமாக இருந்த மார்டின் வீட்டிற்கு அநேகர் வந்து சென்றதில் ஆச்சரியமில்லை. அப்படி வருவோரனைவரையும் மனங்கோணாமல் உபசரித்து அவர்களுடைய தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுவதில் கேட்டி வல்லவராக இருந்தார். பிள்ளைகளையும் இவை எல்லாவற்றிற்கும் மத்தியிலும் கவனத்தோடு வளர்த்து வந்தார்.
கணவனுடைய காரியங்களிலும் கேட்டி அதிக ஆர்வம் காட்டி தேவையான உதவிகளைச் செய்து வந்தார். மார்டின் நோய் வாய்ப்பட்டிருந்த காலங்களில் சிரத்தையோடு கவனித்துக் கொண்டதோடு, தவறாது வேதத்தின் பல பகுதிகளை ஒவ்வொரு நாளும் பல மணித்தியாலங்களுக்கு வாசித்துக் காட்டினார்.
கேட்டியின் பக்தியைக்குறித்து லூதர் பல முறைக் குறிப்பிட்டுள்ளார். அவருடைய வேத அறிவும் சிறந்ததாக இருந்தது. கேட்டி வீட்டையும், பொருளாதாரத் தேவைகளையும் திறமையாகக் கவனித்துக் கொண்டதால் லூதரால் சீர்திருத்தப்பணிகளில் கவலையற்று ஈடுபட முடிந்தது. லூதர் இதற்காகத் தன் மனைவியைப் பலமுறை பாராட்டத் தவறவில்லை. லூதரின் கடிதங்கள் இதற்கு தொடர்ந்தும் சாட்சி பகருகின்றன.