விசுவாச ஜெபமா?

“உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால் அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய்பூசி, அவனுக்காக ஜெபம் பண்ணக்கடவர்கள். அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும். நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாக இருக்கின்றது.” (யாக்கோபு 5:14-17).

யாக்கோபு ஐந்தாம் அதிகாரத்தின் இவ்வசனங்கள் கிறிஸ்தவர்களில் அநேகருக்கு மிகவும் பரிச்சயமான வசனங்களாகும். Faith Healers என்று தம்மை அழைத்துக்கொண்டு கிறிஸ்தவர்களுக்கு சுகம்கொடுக்க முன் வந்திருக்கும் பல கெரிஸ்மெட்டிக் பச்சோந்திகள் தங்கள் செயல்களை நிரூபிக்க இவ்வசனங்களை உதாரணம் காட்டுவார்கள். இவ்வசனங்களின் அடிப்படையில் தம்மிடம் வருபவர்களுக்கு எண்ணெய் பூசி விசுவாச ஜெபம் செய்து சுகமளிக்க முயலும் கைங்கரியத்தை ரோமன் கத்தோலிக்க குருக்களும், பல கெரிஸ்மெட்டிக் சபைகளும், ஏன், சுவிசேஷக் கிறிஸ்தவ சபைகளும்கூடத் தொழிலாகக் கொண்டுள்ளன. இவர்கள் எந்தளவுக்கு வேதம் புரியாமல் இக்காரியத்தை செய்து வருகிறார்கள் என்பதை இவ்வசனங்களைக் கவனமாக ஆராய்ந்து பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.

வேதத்தைப் படிக்கும்போது எப்போதும் நாம் சில முக்கியமான விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்பதை வேதம் நம்மிடம் எதிர்பார்க்கின்றது. இவ்விதிகளைப் பின்பற்றாமல் நாம் வேதத்தையும் அது விளக்கும் கர்த்தரின் சித்தத்தையும் புரிந்து கொள்ள முடியாது. இவ்விதிகள் தான் என்ன? ஒரு வேதப்பகுதியை அது காணப்படும் சந்தர்ப்பத்தின் அடிப்படையில் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு படிக்கும்போது அப்பகுதியின் வார்த்தைகளுக்கிடையில் உள்ள தொடர்பு, அவற்றின் அமைப்பு, பொருள் ஆகியவற்றையும் ஆராய வேண்டும். இவ்வாய்வுகளின் மூலம் அப்பகுதியைப்படித்து அதிலிருந்து நாம் புரிந்துகொண்டிருக்கும் போதனையைப்பற்றி வேதத்தின் ஏனைய பகுதிகள் என்ன சொல்கின்றன என்பதையும் பார்க்க வேண்டும். ஏனெனில், வேதம் தனக்கு முரணாக எதையும் போதிக்காது. இவ்விதிகள் எந்த வேதப்பகுதியை ஆராயவும் அவசியம். கெரிஸ்மெட்டிக் கூட்டம் வேதத்தை அலட்சியப்படுத்துவதால் இவ்விதிகளுக்கு முக்கியம் கொடுப்பதில்லை. வேதத்தையும் படிப்பதில்லை. ஆகவே, தம்மனம் போன போக்கில் வேதத்திற்கு அவர்கள் தங்களுடைய சொந்த விளக்கத்தைக் கொடுக்கிறார்கள். நாம் பார்த்த இவ்விதிகளைப் பயன்படுத்தி இவ்வசனங்களை ஆராய்ந்து இவை என்ன சொல்கின்றன என்று பார்ப்போம்.

இவ்வசனங்கள் மூன்று காரியங்களைப் பற்றிப் பேசுகின்றன. (1) விசுவாச ஜெபம் (2) எண்ணெய் பூசுதல். (3) பாவ மன்னிப்பு.

(1) “விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்” என்ற வசனத்தை முதலில் ஆராய்வோம். இம்மூன்று வசனங்களிலும் (14-16) ஒரே ஒரு முறை மட்டுமே “விசுவாசம்” என்ற வார்த்தை காணப்படுகின்றது. இவ்வார்த்தைக்கு இவ்வசனத்தில் என்ன பொருள் என்று அறிந்து கொள்ள வேண்டும். அவ்வார்த்தை வேதத்தில் ஒவ்வோரிடத்திலும் எப்படிப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது என்று பார்த்தே அவ்விடங்களில் அதன் பொருளை விளங்கிக்கொள்ள வேண்டும். இப்பகுதியில் அதன் பொருளைப் புரிந்து கொள்ள முயலும்போது இங்கு காணப்படும் மேலும் சில காரியங்களை மனதில் கொள்ள வேண்டும். இப்பகுதியில் தன் பாவத்தை உணர்ந்து அதற்கு மன்னிப்பு நாடி நிற்கும் ஒரு மனிதனைப்பற்றி நாம் வாசிக்கிறோம். அம்மனிதனின் பாவத்திற்கும், அவனது நோய்க்கும் இடையில் தொடர்பிருப்பதாகவும் இப்பகுதி போதிப்பதைப் பார்க்கிறோம். அத்தோடு, யாக்கோபு இப்பகுதியில் நாம் அனைவரும் நமது பாவங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு ஒருவருக்கொருவர் ஜெபம் செய்து நமது பிணிகளைத் தீர்த்துக்கொள்ள வேண்டு‍மென்று கூறுவதையும் பார்க்கிறோம். ஆகவே, ஒரு தனி மனிதனுடைய அற்புதமான வி‍சேஷ ஜெபத்தால் நம் பிணிகள் தீர்ந்துவிடும் என்று யாக்கோபு நிச்சயமாகப் போதிக்கவில்லை. நமது பாவங்களை ஒருவருக்கொருவர் இருதயசுத்தத்தோடு அறிக்கையிட்ட ஜெபம் செய்வோமானால் அச்ஜெபங்களைக் கர்த்தர் கேட்டு நமது பிணிகளைத் தீர்க்கலாம் என்றுதான் யாக்கோபு கூறுகிறார்.

யாக்கோபு இப்பகுதியில் ஆழமான விசுவாசத்தைப்பற்றியோ அல்லது அற்புதமான விசுவாசத்தைப் பற்றியோ போதிக்கவில்லை. நாம் நூறுவீதம் ஆழமான, அற்புதமான விசுவாசத்தோடு ஜெபிப்போமானால் நமது பிணிகள் தீரும் என்று கெரிஸ்மெட்டிக் கூட்டம் கூறிவருகிறது. இத உண்மையானால் நமது விசுவாசமே நமது நோய்களைத் தீர்க்கின்றது என்றாகிவிடும். இதனால்தான் கெரிஸ்மெட்டிக் கூட்டம் நோய்தீராதவர்களிடம் ஆழமான விசுவாசமில்லை என்று கூறுகிறது. நமக்கு கர்த்தரிடம் ஆழமான விசுவாசமிருக்க வேண்டும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. அவரிடம் பூரணமான நம்பிக்கை இருக்க வேண்டும் என்பதிலும் எந்தவிதமான சந்தேகமுமில்லை. ஆனால், ஆழமான விசுவாசமும் பூரணமான விசுவாசமுமில்லாததால்தான் பலருக்கு நோய்தீர்வதில்லை என்று கூறுவது பெருந்தவறு. அப்படியானால் யோபுவுக்கு ஆழமான விசுவாசமிருக்கவில்லையா? பவுலின் முள்ளை கர்த்தர் எடுத்துப் போடாததற்குக் காரணம் அவருக்கு பூரணமான விசுவாசமில்லாததாலா?

பக்தியுள்ள எல்லா மனிதர்களின் ஜெபங்களுக்கும் கர்த்தர் ஒரு நிபந்தனையை விதித்துள்ளதாக வேதம் போதிக்கின்றது. இதை யோவானின் முதலாவது நிருபத்தில் வாசிக்கிறோம். நாம் எதையாகிலும் அவரது சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறார் என்று யோவான் கூறுகிறார். எல்லா மனிதர்களும் கர்த்தரின் சித்தத்தை அவருடைய வார்த்தையில் இருந்து மட்டுமே அறிந்துகொள்ள முடியும் என்று வேதம் போதிக்கின்றது. ஒரு தனி மனிதனோ, நமது உணர்வுகளோ, கனவுகளோ கர்த்தரின் சித்ததை வெளிப்படுத்தாது. வேதம் மட்டுமே கர்த்தரின் ‍சித்ததை முழுமையாக வெளிப்படுத்துகிறது. நமது தேவைகளைத் தன்னிடம் ஜெபத்தில் கொண்டுவரும்படிக் கர்த்தர் கூறுகிறார். அது அவருடைய சித்தம். அவரது சித்தத்தை அறிந்து நாம் நமது தேவைகளை அவரிடம் ஜெபத்தில் கூறவேண்டும். தமது சித்தத்தின்படி ஜெபிப்பவர்களின் ஜெபத்தைக் கர்த்தர் கேட்கிறார்.

நாம் இரண்டு முக்கியமான காரியங்களுக்காக ஜெபிக்க வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார். முதலாவதாக, நமது ஆத்மீகத் தேவைகளுக்காக நாம் கர்த்தரிடம் ஜெபிக்க வேண்டும். கர்த்தர் அவற்றை ஆசீர்வதிக்கிறார். ஏனெனில் கிறிஸ்துவை நாம் பின்பற்றி பக்தியுள்ள வாழ்க்கை வாழவேண்டுமென்பது கர்த்தரின் சித்தமாக இருக்கின்றது. இரண்டாவதாக, நமது இவ்வுலகத் தேவைகளுக்காக நாம் கர்த்தரிடம் ஜெபிக்க வேண்டும். இவை நமது தொழில், நோய் நொடிகள், குடும்பத் தேவைகள், பரீட்சை, திருமணம், குழந்தைகள் என்று பலவற்றையும் உள்ளடக்கும். இவற்றையும் தம்மிடம் ஜெபத்தில் கேட்கும்படியாக கர்த்தர் நம்மைப் பணித்திருக்கிறார். ஆனால், நாம் ஜெபித்து முடித்த பின்போ இவற்றைக் கர்த்தர் நிறைவேற்றி வைப்பாரா என்று நமக்கு உடனடியாகத் தெரியாது. நாம் ஜெபிக்கும் இக்காரியங்கள் நமக்கு நன்மையைக் கொண்டு வருமா? அல்லது தீமையைக் கொண்டு வருமா? என்றும் நமக்குத் தெரியாது. கர்த்தர் ஒருவரே அவை நன்மையில் முடியுமா? அல்லது தீமையில் முடியுமா? என்று அறிந்திருக்கிறார். ஆகவே, கிறிஸ்தவர்கள் இவற்றிற்காக ஜெபிக்கும்போது கர்த்தர் தமக்குச் சித்தமானதை செய்யும்படியாகக் கேட்டு ஜெபிக்க வேண்டும். எங்களுடைய சித்தமல்ல உமது சித்தம் நிறைவேற வேண்டும் என்றே ஜெபிக்க வேண்டும். வேதத்தில் நாம் வாசிக்கும் ஜெபங்கள் அனைத்தும் இவ்விதமாகவே இருக்கின்றன. நாம் ‍கேட்பதை, நாம் கேட்கும் விதத்திலேயே நிச்சயம் கொடுக்க வேண்டும் என்று கர்த்தரிடம் கேட்பது தவறு. தேவ சித்தம் நம்மில் நிறைவேற வேண்டுமானால் அவரது சித்தப்படி நமது தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும். இவ்வாறு கர்த்தருடைய சித்தத்திற்குக் கட்டுப்பட்டு நாம் ஜெபிக்கும்போது எல்லாமே இறுதியில் (அவரது சித்தப்படி) நன்மையாகவே முடியும் என்ற நம்பிக்கையுடனேயே ஜெபிக்கிறோம்.

அடுத்ததாக இவ்வேதப்பகுதியில் நாம் வாசிக்கும் பிணியாளனின் பிணியைத் தீர்க்கும் விசுவாச ஜெபம், நாம் ஜெபித்த உடனேயே அம்மனிதனின் பிணிதீர்ந்துவிடக்கூடிய ஆழமான விசுவாசத்தைப் பற்றியதாக இருக்க முடியாது. யாக்கோபு இங்கே கர்த்தரை நாம் விசுவாசிப்பதில் உறுதியாக இருக்க வேண்டுமென்றுதான் போதிக்கிறாரே தவிர நமது ஜெபம் நிச்சயம் காரியங்களை சாதிக்கும் என்ற நம்பிக்கையையும், அத்தகைய உணர்வுகளையும் கொண்டிருக்க வேண்டும் என்று போதிக்கவில்லை. சில வேளைகளில் நாம் ஜெபிக்கும்போது கர்த்தர் நமது ஜெபத்தைக் கேட்கிறார், அதன்படி காரியங்கள் நடக்கும் என்ற உணர்வுகள் நமக்கு ஏற்படலாம். ஆனால் நாம் கர்த்தர் நிச்சயம் நமது ஜெபத்தைக் கேட்டு ஆசீர்வதிப்பார் என்பதற்கு நாம் இத்தகைய உணர்வுகளில் தங்கியிருக்காமல் கர்த்தருடைய சர்வவல்லமையுடைய சித்தத்திலேயே தங்கியிருக்க வேண்டும். இதை வேதத்தில் நாம் பார்க்கும் மூன்று காரியங்கள் நமக்குத் தெளிவாக உணர்த்துகின்றன.

அ. இயேசு கெத்செமனே தோட்டத்தில் தன் பிதாவிடத்தில் ஜெபித்தபோது, பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும் என்று ஜெபித்தார். அவ்வாறு கிறிஸ்து ஜெபித்தபோது அவருடைய விசுவாசம் குறைவாயிருக்கவில்லை. தன் பிதாவுடன் உறுதியான ஐக்கியத்தில் இருந்தும், அவரில் அதிக விசுவாசத்துடனுமே இயேசு அன்று ஜெபித்தார். அவருடைய ஜெபத்தில் ஊக்கத்திற்கும், உணர்ச்சிக்கும் குறைவிருக்கவில்லை. அவர் அதிக வியாகூலத்துடன் ஜெபித்ததாக (லூக்கா 22:44) வாசிக்கிறோம். அத்தோடு தமது பிதா தனது ஜெபங்களை நூறுவீதம் கேட்டு ஆசீர்வதிப்பார் என்ற நம்பிக்கையும் அவருக்கு இருந்தது. இருந்தபோதும் மிகவும் இக்கட்டான ஒரு சூழ்நிலையில் இருந்த இயேசுவின் ஜெபம் நிறைவேறவில்லை. இயேசு சிலுவைத் துன்பத்தை தேவ சித்தப்படி அனுபவிக்க நேர்ந்தது. ஆகவே, நாம் அதிக விசுவாசத்துடன் ஊக்கத்தோடு கேட்பதையெல்லாம் கர்த்தர் நிச்சயம் நிறைவேற்றுவார் என்று யாக்கோபு போதிக்கவில்லை. அதிக விசுவாசம் இருந்தால் நமது நோய்கள் தீர்ந்துவிடும் என்று யாக்கோபு போதிக்கவில்லை. கர்த்தரிடம் இருந்து காரியங்கள் சாதித்துக் கொள்வதற்கு அதிக விசுவாசத்தை நாம் ஒரு கருவியாகப் பயன்படுத்த ‍வேண்டும் என்று யாக்கோபு நிச்சயமாகப் போதிக்கவில்லை.

ஆ. தாவீது தனது குழந்தையின் வாழ்விற்காக அதிக வியாகூலத்தோடும், ஊக்கத்தோடும் ஜெபித்தபோதும் அவனுடைய குழந்தை வாழவில்லை (2 சாமுவேல் 12:16-19). இங்கே தாவீதின் விசுவாசத்திற்கோ, ஊக்கத்திற்கோ குறைவிருக்கவில்லை.

இ. பவுல் தன்னுடைய வாழ்வில் ஏற்பட்ட ஓர் இடர் அகற்றப்படவேண்டு‍மென்று ஜெபித்தும் அது அகற்றப்படவில்லை. பவுலின் விசுவாசத்தில் எந்தக்குறையும் இருக்கவில்லை. இவ்விடர் தன் வாழ்க்கையில் இருந்து அகற்றப்படாதது பவுலுக்குப் பெரும் மனச்சங்கடத்தைத் தந்தது. பவுல் மூன்று தடவைகள் ஊக்கத்தோடும், விசுவாசத்தோடும் ஜெபித்தும் அது அகற்றப்படவில்லை. என்னுடைய கிருபை உனக்குப் போதுமானது என்று மட்டுமே கர்த்தர் பவுலுக்குக் கூறினார். இதனால் பவுல் சரியாக ஜெபிக்காததால்தான் அவரது ஜெபம் கேட்கப்படவில்லை என்று யாராவது கூற முடியுமா?

ஆகவே, துன்பங்களே இல்லாமல் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் அவற்றின் விடுதலைக்காக மட்டும் அலைந்து கொண்டிராமல், சில வேளைகளில் அவை நமது நன்மைக்காகவும் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று உணர்ந்து நமது வாழ்க்கையை சீர்செய்து பவுலைப்போல் நமது துன்பங்களின் மத்தியிலும் கர்த்தரை மகிமைப்படுத்த வேண்டும். விசுவாச ஜெபம் என்பது கர்த்தர் தன் சித்தத்திற்கேற்றபடி எப்போதும் நன்மையானதையே செய்வார் என்ற நம்பிக்கையில், அவரது சித்தத்திற்கு மனமகிழ்வோடு நம்மை முழுமையாக ஒப்புக்கொடுத்து ஜெபிப்பதாகும். யாக்கோபு 15இல் காணப்படும் விசுவாச ஜெபம் என்ற வார்த்தைப் பிரயோகத்திற்கு நாம் விசேஷமான ஒரு உட்பொரு‍ளைக் கொடுக்காமல் இருந்தால் யாக்கோபுவின் வார்த்தைகளைப் புரிந்து கொள்வது கடினமாக இருக்காது. இலக்கணத்தின்படி பார்த்தாலும் நாம் இவ்வார்த்தைகளுக்கு வேதத்தின் ஏனைய பகுதிகளின் போதனைகளுக்கு முரணான எந்தவொரு தனிப் பொருளையும் கொடுக்க முடியாது. யாக்கோபு நிச்சயமாக விசுவாச ஜெபம் செய்தால் நமக்கு வாழ்வில் இனி நோயே ஏற்படாது என்று போதிக்கவில்லை. கெரிஸ்மெட்டிக் கூட்டம் இதனை மறந்து இவ்வார்த்தைக்கு வேதத்தில் இல்லாத ஒரு உட்கருத்தைக் கொடுக்க முயல்கிறது.

இவ்வேதப்பகுதி போதிக்கும் உண்மைதான் என்ன?

நமது பாவங்களுக்கும் சிலவகையான நோய்களுக்கும் இருக்கும் தொடர்பைப்பற்றி இப்பகுதி (யாக்கோபு 5:14-16) விளக்குகிறது. சில வேளைகளில் இவை இரண்டிற்கும் இடையில் வேறு ஒரு தொடர்பும் இருப்பதை நாம் அறிவோம். அதாவது, எயிட்ஸ் வியாதி முக்கியமாக தவறான உடலுறவின் காரணமாக ஏற்படுகின்றது. மனிதனின் வயிற்றில் ஏற்படும் ஒரு குறிப்பிட்ட குடல்வியாதி நேரடியாக குடியினால் ஏற்படுகின்றது. ஆனால், இயற்கையாக நமது பாவச் செய்கைகளால் ஏற்படும் இத்தகைய தொடர்பைப்பற்றி இவ்வேதப்பகுதி விளக்கவில்லை. இப்பகுதி நமது பாவங்களுக்குத் தண்டனையாக சில வேளைகளில் கர்த்தர் அனுமதிக்கும் வியாதிகளைப்பற்றிப் பேசுகிறது. உதாரணமாக, ப‍ழைய ஏற்பாட்டு இஸ்ரவேலரை எடுத்துக் கொண்டால், அவர்களுடைய கீழ்ப்படியாத் தன்மை‍க்காகவும் பாவங்களுக்காகவும் அவர்களைத் தண்டித்த தேவன் அவர்கள் மத்தியில் பல வியாதிகளைக் கொண்டு வந்தார் (சங். 106:15, 29). கொரிந்தியர்கள் தமது பாவச் செய்கைகளால் திருவிருந்தை அலட்சியப்படுத்தி நடந்துவந்ததால் அவர்களில் சிலர் வியாதிகளினால் தொல்லையடைந்தார்கள். சிலர் இறந்தும் போனார்கள் என்று வாசிக்கிறோம் (1 கொரி. 11:30). கொரிந்தியர்கள், இவ்வியாதிகள் தங்கள் பாவச் செய்கைகளினால் ஏற்பட்டதென்பதை உணர்ந்து, சுயபரிசோதனையில் ஈடுபட்டு மனந்திருந்தி கர்த்தரிடம் மன்னிப்புப் பெற வேண்டும் என்று பவுல் அந்நிருபத்தில் போதிக்கிறார்.

உங்களில் ஒருவர் நெடுங்காலமாக கர்த்தருக்கு விரோதமாக பாவத்தில் வாழ்ந்து, அதன் காரணமாக கர்த்தரின் தண்டனையாகக் கடும் நோயை அனுபவித்துக் கொண்டிருந்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? யாக்கோபு சொல்கிறார், உடனடியாக சபை மூப்பர்களை வரவழைத்து உங்களுக்காக எண்ணெய் பூசி ஜெபிக்கச் சொல்ல வேண்டும். சபை மூப்பர்களை ஏன் வரவழைக்க வேண்டும்? ஏனெனில், சபையைச் சேர்ந்த இம்மனிதன் இத்தனை காலமாக பாவத்தில் வாழ்ந்து அதற்காக கர்த்தரிடம் இருந்து தண்டனையாக இந்நோயை அனுபவித்து வந்திருக்கிறான். இப்போது அதிலிருந்து அவனுக்கு விடுதலை வந்திருக்கிறதென்பதை சபைத்தலைவர்கள் சபை மக்களுக்கு அறிவிக்க வேண்டிய கடமைப் பொறுப்புடையவர்களாக இருக்கிறார்கள். ஆனால், எண்ணெய் எதற்கு? எண்ணெய் இங்கே மருத்துவரீதியாக பாவிக்கப்பட்டது என்று நான் நினைக்கவில்லை. அது மருத்துவரீதியாகவும் பாவிக்கப்பட்டுள்ளதை வேதத்தில் வாசிக்கிறோம். ஆனால், இங்கே கர்த்தர் தன் வல்லமையால் இம்மனிதனுக்கு விடுதலைதர முன்வந்திருக்கிறார் என்பதை அடையாளமாக உணர்த்துவதற்காக எண்ணெய் பாவிக்கப்பட்டிருக்கிறது. இம்மனிதன் பரிசுத்த ஆவியை பல காலமாக துக்கப்படுத்தி வந்திருக்கிறான். அவ்வாவியானவர் மறுபடியும் இம்மனிதனில் செயல்பட ஆரம்பித்திருக்கிறார். இம்மனிதனுக்குக் கிடைக்கப்போகும் விடுதலை சாதாரணமாக கிறிஸ்தவர்களின் அன்றாட வாழ்க்கையில் நாம் பார்க்கும் ஒரு காரியமல்ல. அசாதாரணமாக நடக்கப்போகும் ஒரு காரியத்தின் அடையாளமாகவே எண்ணெய் பூசுதல் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இம்மனிதன் பெற்றுக்கொண்ட விடுதலையை சாதாரண மனிதர்களால் கொடுக்க முடியாது. வெறும் மருந்துகளாலும் அளிக்க முடியாது. கர்த்தர் மட்டுமே இம்மனிதனின் பாவவிடுதலைக்காக அம்மனிதனைச்சுற்றி நின்று, (தன் பாவத்தை உணர்ந்து வருந்தி அதற்குப் பரிகாரம் தேடும் எம்மனிதனுக்கும் விடுதலை தர கர்த்தர் ஆயத்தமாயிருக்கிறார் என்ற) அசையாத விசுவாசத்துடன் ஜெபம் செய்யும் சபை மூப்பர்களின் மூலமாக அவ்விடுதலையை அளிக்க முடியும். இப்பகுதியில் யாக்கோபு, “ஜெபம் பிணியாளனை இரட்சிக்கும்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருப்பதைப் பார்க்கிறோம். தன் பாவத்தை இம்மனிதன் உணர்ந்து வருந்தி அதற்கு கர்த்தரிடம் பரிகாரம் நாடி வந்திருப்பதால் கர்த்தர் அவனை இரட்சித்தார். அவன் பாவத்தை மன்னித்தார். இவ்வார்த்தை (இரட்சிப்பு) அம்மனிதன் பெற்றுக் கொண்ட ஆத்மீக விடுதலையைக் குறிக்கிறது. அம்மனிதன் தொடர்ந்து தன் பாவத்தில் நிலைத்திருந்தால் அவன் வீணாய்ப்போயிருப்பான். ஆனால், கர்த்தருடைய சிட்சை (திருத்துதல்) அவன் தன்னுடைய பாவத்தை உணரச் செய்துள்ளது. அம்மனிதன் கர்த்தருடைய செயலை ஏற்று மனந்திருந்தி, தனக்காக ஜெபிக்கும்படியாக சபை மூப்பர்களைக் கேட்டுக் கொண்டான். கர்த்தர் அவனுக்கு சமாதானத்தை அளித்தார்.

யாக்கோபு (15 ஆம் வசனத்தில்) கர்த்தர் அவனை எழுப்புவார் என்று கூறுவதைப் பார்க்கிறோம். அவனை எழுப்பியது மூப்பர்களோ அல்லது விசுவாசமோ அல்ல. கர்த்தரே அவனை எழுப்பினார். யாக்கோபு, அவன் பாவஞ்செய்திருந்தால் அது அவனுக்கு மன்னிக்கப்படும் என்று கூறுகின்றார். ஆகவே, யாக்கோபுவின் வார்த்தைகளில் இருந்து (பாவஞ்செய்திருந்தால்) அம்மனிதனுக்குக் கிடைக்கப்போகும் விடுதலை பற்றிய ‍முன்னறிவு அவர்களுக்கு இருக்கவில்லை என்பது தெரிகிறது. நோயில் துன்பப்பட்டுக் கொண்டிருந்த அம்மனிதன் தான் செய்துள்ள பாவங்களை ஆராய்ந்து பார்த்து, தன் நோய்க்கு அப்பாவங்கள் தான் காரணமாக இருந்து அதன் காரணமாகக் கர்த்தர்தான் தன்னைத் தண்டிக்கிறார் என்று எண்ணி மூப்பர்களுக்கு செய்தி அனுப்புகிறான். மூப்பர்கள் அவனோடு பேசி விபரங்களை அறிந்துகொண்டபின் அவனுக்கு எண்ணெய் பூசி‍ஜெபித்தபோது அம்மனிதனுக்கு தன் பாவங்களைக் கர்த்தர் மன்னித்துவிட்டார் என்ற நிச்சயம் ஏற்பட்டது. அத்தோடு அவனைப் பிடித்திருந்த ‍நோயிலிருந்தும் விடுதலை கிடைத்தது. ஆகவே, இப்பகுதி முழுவதும் கிறிஸ்தவர்கள் சதாரணமாக தங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் துன்பங்களைப்பற்றியும் அதற்கான பரிகாரத்தையும்பற்றிப் பேசவில்லை. பாவத்தில் வீழ்ந்து அதற்குப் பரிகாரம் ‍தேடாமல் கர்த்தரின் மனத்தையும், சபையையும் வருத்தி நோயில் வாடிக் கெண்டிருந்த ஒரு மனிதனின் அசாதாரண வாழ்க்கையைப் பற்றியும் அவன் மனந்திரும்பிய விதத்தையும் பற்றியே போதிக்கின்றது.

யாக்கோபு (16 ஆம் வசனத்தில்) நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணுங்கள் என்று சொல்வதை ஊன்றிக் கவனிக்க வேண்டும். யாக்கோபு இவ்வாறு கூறுவதற்குக் காரணம் என்ன? இப்பகுதியில் நாம் வாசிக்கும் மனிதனுடைய வாழ்க்கை பாழானதற்குக் காரணம் அவன் தன் பாவங்களை அறிக்கையிட்டு மன்னிப்புக் கேட்டு மனந்திருந்தாததே. அவன் ஜெபத்திலும் கர்த்தரிடம் மன்னிப்புக் கேட்கவில்லை. தங்களுடைய குற்றங்களை, அவை எவருக்கெதிராக செய்யப்பட்டதோ, அவர்களிடம் கூறி ஒருவருக் கொருவர் மன்னிப்புக்கேட்டும், கர்த்தரிடம் அன்றாடம் ‍ஜெபத்தில் மன்னிப்பும் கேட்டும் வருபவர்கள் வாழ்வில் சமாதானம் குடியிருப்பதோடு, இப்பகுதியில் நாம் பார்க்கும் மனிதன் அனுபவித்த துன்பங்களையும் அனுபவிக்கத் தேவையில்லை என்று யாக்கோபு கூறுகிறார். இதுவே இப்பகுதி தரும் போதனை.

வேதம் பு‍ரியாதவர்கள் விசுவாச ஜெபம் என்ற பெயரில் மாயாஜால வித்தை போன்று நம் வாழ்வில் காரியங்கள் சாதித்துக்கொள்ளவும், நோய்களைத் தீர்த்துக்கொள்ளவும் ஒருவகை ஜெபம் இருப்பதாகக் கதை புனைந்து கிறிஸ்தவர்களை ஏமாற்றி வருகிறார்கள்.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s