வேண்டும் இன்று விழிப்புணர்வு!

இப்பத்திரிகையின் பெருநோக்கங்களில் ஒன்று திருச்சபைப் போதகர்கள் தேவமனிதர்களாக இருந்து தங்கள் ஊழியத்தைக் கொண்டு நடத்த முடிந்ததைச் செய்வது. திருச்சபையும் ஊழியமும் சம்பந்தமான பல ஆக்கங்கள் ஏற்கனவே இப்பத்திரிகையில் வந்துள்ளதை வாசகர்கள் அறிவர். இயேசு கிறிஸ்து தன்னுடைய திருச்சபை மூலமாகவே இவ்வுலகில் தனது பெரு நோக்கங்களைத் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார் என்ற வேதபோதனையில் பெருநம்பிக்கை வைத்திருக்கும் இப்பத்திரிகை, கிறிஸ்துவால் அழைக்கப்பட்டு சபைகளால் அங்கீகரிக்கப்பட்டு போதக ஊழியத்தை நடத்திவரும் போதகர்களின் வாழ்க்கை, ஊழியம் பற்றி அதிகம் அக்கறை கொண்டு எழுதுவதில் ஆச்சரியமில்லை.

போதக ஊழியம் பற்றி சீர்திருத்தவாதிகள் அநேக ஆக்கங்களை வெளியிட்டுள்ளார்கள். அவர்களைப்போல் சபை வரலாற்றில் இதுபற்றி ஆழமாகவும், ஆக்கபூர்வமாகவும் எழுதியவர்கள் மிகக்குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். போதகவியல் (Pastoral Theology) என்று எடுத்துக் கொண்டால் அதைப்பற்றி எழுதியுள்ள தொமஸ் மர்பி,  டபிள்யூ. ஜீ. டி. செட், பெட்ரிக் பெயர்பேன், ரிச்சட் பெக்ஸ்டர், சார்ள்ஸ் பிரிஜ்ஜட்ஸ், ஆர். எல். டெப்னி, அலெக்சான்டர் போன்ற பல சீர்திருத்தவாத போதகர்களின் பெயர்கள் என் நினைவலைகளில் தவழ்கின்றன. இவர்களைத் தவிர ஸ்பர்ஜனும், அவருக்குப்பின் இந்நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த மார்டின் லாயிட் ஜோன்சும் என் நினைவுக்கு வருகின்றார்கள்.

வரலாற்றில் சீர்திருத்தவாதம் போதக ஊழியத்திற்கு பெருநன்மை புரிந்ததில் முன்னிற்பதற்குக் காரணம் என்ன? அதற்கான பல காரணங்கள் இருந்தபோதும் முக்கியமான இரு காரணங்களைக் குறிப்பிட வேண்டும் (1) சீர்திருத்தவாதம் வேதம் போதிக்கும் திருச்சபை ஊழியத்தில் தீவிர நம்பிக்கை வைத்துள்ளது. (2) போதக ஊழியம் சிறப்பாக அமைந்தாலொழிய சபையும், சபைமக்களும் ஒருபோதும் வளரமுடியாதென்பதில் சீர்திருத்தவாதம் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளது.

இக்காரணங்களே சீர்திருத்தவாத போதகர்களை திருச்சபையோடு தொடர்புடைய போதக ஊழியம் குறித்து அதிகம் பேசவும் எழுதவும் வைத்தது. பெந்த‍கொஸ்தே, கெரிஸ்மேட்டிக் ஊழியங்களிலும், சபையோடு உறவில்லாத சுயாதீன நிறுவன ஊழியங்களிலும் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. அதற்குக் காரணம் அவர்களுக்கு சபைபற்றிய வேதபூர்வமான ஞானமில்லாதததும், போதக ஊழியத்தை அவர்கள் துஷ்பிரயோகம் செய்து தங்களுடைய சுயநலனுக்காகப் பயன்படுத்திக் கொள்வதுமே. இன்று போதக ஊழியம் உயிர்பெற்று சபை மக்களுக்குப் பயன்படும் விதத்தில் அமைய வேண்டிய ஒரு சூழ்நிலை தமிழ்க் கிறிஸ்தவர்கள் மத்தியில் காணப்படுவதை யாரும் மறுக்க முடியாது. இத்தகைய சீர்திருத்தம் ஏற்படவேண்டுமெனில் அதற்கு முன்னோடியாக சில காரியங்கள் நிகழ்ந்தேயாக வேண்டும்.

கிறிஸ்தவர்கள் மத்தியில் இன்று விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்

முதலில் கிறிஸ்தவர்கள் மத்தியில் விழிப்புணர்வு தோன்ற வேண்டும். வேதத்தின் அடிப்படையில் அமைந்த போதனைகளை மட்டுமே காது கொடுத்து கேட்பேன். அவை மட்டுமே என் ஆன்மீக வாழ்க்கை வளர்ச்சிக்கு அத்திவாரமிட்டு நான் வளர உதவும் என்ற வைராக்கியம் கிறிஸ்தவர்களுக்கு ஏற்பட வேண்டும். கண்ணற்ற குருடர்கள் போலவும், காதற்ற ‍செவிடர்கள் போலவும் கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வரும் நிலைமாற வேண்டும். உணர்ச்சிக்குத் தூபமிட்டு, போலியான வாக்குறுதிகளைத் தரும் பிரசங்கிகளின் பக்கமே தலைவைப்பதில்லை என்ற மனஉறுதி ஏற்பட வேண்டும். சரீர சுகத்தையும், வாழ்க்கை வசதிகளையும் பெற்றுக்கொள்ள மட்டுமே கிறிஸ்தவ சுவிசேஷம் என்ற போக்கில் செயல்பட்டுவரும் கூட்டத்தாரின் கையிலகப்பட்டு ஆவிக்குத் தீங்கு தேடிக்கொள்ள மாட்டோம் என்று தீர்மானம் எடுக்க வேண்டும். வேதம் புரியவில்லை என்று சாக்குப் போக்குச் சொல்லி, ஆட்டு மந்தை போல் எதையும் சத்தியம் என்று நம்பி போலிகளின் பின்னால் திரியும் வழக்கத்தைக் கிறிஸ்தவர்கள் கைவிட வேண்டும். கிறிஸ்தவப் பத்திரிகைகள் என்ற பெயரில் திரியும் போலிப் பத்திரிகைகளைத் திரும்பியும் பார்க்கக்கூடாது. பணம், பணம் என்று பிணமாக அலையும் ஊழியர்களின் பக்கம் காலெடுத்தும் வைக்கக்கூடாது. தீர ஆராய்ந்து படித்துப் போதிக்கும் போதகர்களைக் கொண்டமைந்து, வேதபூர்வமான போதனைகளை அளிக்கும் சபைகளுக்கு மட்டும் தம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும். சீர்திருத்தவாதம் ஏற்பட்ட பதினாறாம் நூற்றாண்டு மக்கள் சத்தியத்திற்காகத் தம் உயிரையும் பணயம் வைக்கத் தீர்மானித்தனர். வேதத்தைப் படிக்கக் கூடாது என்ற கட்டளை இருந்தபோதும் அதற்குக் கட்டுப்பட மறுத்து வேதத்தைப் படித்து அதில் இன்பம் கண்டனர். போலிகளை அடையாளம் கண்டு கொள்ளும் பக்குவத்தையும் பெற்றனர். இதனை வேதமே அவர்களுக்குத் தந்தது. இந்நிலை முதலில் நம்மக்கள் மத்தியில் ஏற்பட வேண்டும். கிறிஸ்தவர்கள் தொடர்ந்தும் சபைகளையும், சமயக் குழுக்களையும், பிரசங்கிகளையும் திட்டிக்கொண்டிருப்பதால் பயனில்லை. இது செயல்பட வேண்டிய நேரம். சிந்திக்க மறுப்பவர்களுக்கும், ஆடல்கள், பாடல்கள் என்ற‍ழைத்து உணர்வலைகளுக்குத் தீனி தேடித்திரிபவர்களுக்கும், சுகமளிக்கும் அற்புதங்களே வாழ்க்கை என்றிருப்பவர்களுக்கும் சீர்திருத்தம் தேவையில்லை. கிறிஸ்தவர்களின் சிந்தனைப் போக்கில் பெருமாறுதல் ஏற்பட்டு அவர்கள் சத்தியத்தை மட்டும் தேடி அலைவார்களானால் சீர்திருத்தம் எழப்போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

போதக ஊழியத்தைப்பற்றி திருச்சபைகள் வேதபூர்வமான சிந்தனைகளைக் கொண்டிருக்க வேண்டும்.

(1) போதக ஊழியம் சிறப்பாக அமைய இன்று ஆவிக்குரிய வாழ்க்கையில் முதிர்ச்சியுள்ள, பண ஆசையில்லாத, தகுதிக்கு ஏற்றவிதத்தில் வாழத்தெரிந்த போதகர்கள் தேவை. அத்தகையவர்களை மட்டுமே போதக ஊழியத்திற்கு தெரிவு செய்ய வேண்டும். தெரிவு செய்யப்பட்டவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பதில் சபை எப்போதும் முன்னிற்க வேண்டும். சபை மக்களின் தரத்தைமீறி வாழ முயற்சிக்கும் மனிதர்களை சபை நிராகரிக்க வேண்டும். முழு நேர ஊழியவசதி இல்லாத சபையின் போதகர்கள் பகுதிநேர வேலை செய்வது பாவம் அல்ல. அதுவே வேதபூர்வமானதும், நியாயமானதும்கூட. ஊரெல்லாம் ஊழியத்திற்காகப் பிச்சை எடுப்பதைவிட இது மேலானது.

(2) புதுக்கிறிஸ்தவர்களையும், அனுபவ முதிர்ச்சி இல்லாதவர்களையும், வேதஞானமில்லாதவர்களையும் போதக ஊழியத்திற்குத் தெரிவு செய்யக்கூடாது. இதைவிடப்பெரிய ஆபத்து சபைகளுக்கு ஏற்பட முடியாது. போதகர்கள் இல்லையே என்ற ஆதங்கத்தாலும், புது ஊழியங்களை ஆரம்பிக்க வேண்டும் என்ற அவசரத்தாலும் பலசபைகள் இத்தவறைச் செய்துவிடுகின்றன. தகுதி இல்லாதவர்களைக்கொண்டு சபை ஆரம்பிப்பது தகாது.

(3) படித்த (அனுபவமுள்ள, முதிர்ந்த) கிறிஸ்தவ இளைஞர்களைப் போதக ஊழியத்தைக் குறித்து சிந்திக்குமாறு சபைகள் வழிநடத்த வேண்டும். பல்கலைக்கழகப் படிப்பை முடித்த கிறிஸ்தவர்களை இன்று போதகர்களாகப் பார்ப்பது அரிதாக இருக்கிறது. மருத்துவம், கணிப்பொறி என்று போய்க் கட்டுக்கட்டாய்க் காசு சேர்ப்பதே பல இளைஞர்களின் போக்காகிவிடுகிறது. படித்த, திறமைசாலிகளான, நல்ல கிறிஸ்தவ இளைஞர்கள் ஏன் இன்று கிறிஸ்தவ ஊழியத்தை எண்ணிப் பார்க்கக்கூடாது? பட்டங்கள் பெற்ற லூதரையும், ஜோன் கல்வினையும், ஜோன் ஓவனையும் நமது கிறிஸ்தவ இளைஞர்களுக்கு நினைவுறுத்தி போதக ஊழியத்தைக் குறித்து சிந்திக்கும்படிச் செய்ய வேண்டும். இங்கிலாந்து அரசியின் வைத்தியராக இருக்கக்கூடிய அருமையான சந்தர்ப்பத்தை உதறித் தள்ளிவிட்டு உலகாளும் நம்மரசராகிய இயேசுவுக்கு ஊழியம் செய்ய வந்த நம்காலத்து மார்டின் லொயிட் ஜோன்சை எண்ணிப் பார்க்க வேண்டும். அம்மனிதரின் படிப்பும், சிந்தனை வளர்ச்சியும் சீர்திருத்தக் கிறிஸ்தவத்தை உரமிட்டு வளர்த்தது.

(4) இறையியல் கல்லூரிக்குப் போனால்தான் போதகனாக முடியும் என்ற மனநிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும். இறையியல் கல்லூரி ஒருவனைப் போதகனாக்கும் என்று வேதம் போதிக்கவில்லை. போதகர்களை சபையில்தான் அடையாளம் கண்டு கொள்ள முடியும். சபை அங்கீகரித்தவர்களுக்கு வேதபூர்வமான இறையியல் கல்லூரிகள் துணை செய்யலாம். இறையியல் கல்லூரிக்கு அவசியம் போகத்தான் வேண்டும் என்பது வேதத்தில் இல்லை. இன்று பல சபைகள் போதக ஊழியத்திற்கு வரவேண்டியவர்களை சபையில் தேடிப்பார்க்காமல், சபைக்கு வெளியில் யார் யார் இறையியல் கல்லூரிக்குப் போய்வந்திருக்கிறார்கள் என்று தேடிக்கொண்டிருக்கிறார்கள். அதுவும் ஒருவர் இறையியல் கல்லூரியில் வேதத்தைத்தான் படித்துவிட்டு வந்திருக்கிறாரா என்றுகூட ஆராய்வதில்லை. இதைப்பற்றிக் கேட்டால் இதுதான் “டிரெடிசன்”, இதை மாற்ற முடியாது என்பார்கள். இத்தகைய எண்ணங்கள் இருக்கும்வரை சீர்திருத்தம் சுட்டுப் போட்டாலும் வராது.

பக்தியும், பண்புமுள்ள போதகர்கள் இன்று சபைகளுக்குத் தேவை.

“உன்னைக்குறித்தும், உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாயிரு” என்று பவுல் தீமோத்தேயுவுக்கு கூறினார் (1 தீமோ. 4:16). உபதேசத்தைக்குறித்து பின்பு பார்ப்போம். இப்போது “உன்னைக்குறித்து” என்ற வார்த்தையைக் கவனிப்போம். உன்னைக்குறித்து என்று பவுல் கூறுவது போதகனின் சொந்த பக்தியையே குறிக்கிறது. போதக ஊழியத்திற்கு வருபவர்கள் Professionals ஐப்போல் நடந்து கொள்ளக்கூடாது. இன்று அநேக போதகர்கள் இவ்விதமாகவே நடந்துகொள்கிறார்கள். அவர்களுடைய பக்தி, சினிமா நடிகன் கவர்ச்சிக்காகப் போட்டுக் கொள்ளும் அலங்காரத்தைப்போலவே இருக்கின்றது. அவர்களுடைய பேச்சு உள்ளத்திலிருந்து வருவதாயில்லை. பெனி ஹின் பேசுவதை டெலிவிசனில் பார்த்திருப்பவர்களுக்கு நான் கூறுவது புரியும். பேச்சில் சுவை இருந்தாலும் அதில் சத்தியமில்லை. சொல்லில் அலங்காரம் இருந்தாலும் அதில் சுத்தமிருக்காது, அறிவிருக்காது, உண்மையுமிருக்காது. இத்தகைய மனிதர்கள் போதக ஊழியத்தை ஒரு தொழிலாக மட்டுமே கருதுகிறார்கள். இது போதக ஊழியத்தையும், திருச்சபையையும் இன்று பிடித்திருக்கும் ஒரு சாபக்கேடு.

தான் மிகுந்த மனத்தாழ்மையுடன் கர்த்தருக்கு சேவை செய்ததாக பவுல் எபேசிய மூப்பர்களைப் பார்த்துக் கூறினார். (அப்போஸ். 20:18-35). இந்த மனத்தாழ்மை இன்று போதக ஊழியத்திலிருக்கும் அநேகருக்கு இல்லாமலிருப்பது வேதனை தருகிறது. போதிப்பவனுக்கு இருக்கும் அதிகாரமும், பதவி மேன்மையும், பாராட்டுதல்களும் சுலபமாகவே அவன் தலையில் ஏறிவிடும் என்ற ஆபத்தின் காரணமாகத்தான் வேதம் புதிய கிறிஸ்தவர்களும், முதிர்ச்சி இல்லாதவர்களும் அவ்வூழியத்திற்குத் தகுதி இல்லாதவர்கள் என்று வற்புறுத்துகிறது (1 தீமோ. 3). தீமோத்தேயு இளைஞனாக இருந்தாலும் அவனுக்கு மனத்தாழ்மை இருந்தது. ஆனால், வயது போயிருந்தும், போதக ஊழியத்தில் பலஆண்டுகள் இருந்தும் மனத்தாழ்மை இல்லாமல் நடந்து சபை மக்களை உதாசீனப்படுத்தி போதக ஊழியத்திற்கும், கிறிஸ்துவிற்கும் இழுக்குத் தேடித்தந்து கொண்டிருக்கிறார்கள் அநேகர் இன்று. வேதம் போதிக்கும் மனத்தாழ்மை இன்று போதகர்களுக்கு அவசியம்.

போதகன் தன் சொந்த வாழ்க்கையைக் குறித்து எப்போதும் திருந்துகிறவனாக இருக்க வேண்டும். “குணப்படாத பிரசங்கி” என்ற வார்த்தைகள் ஒன்றுக்‍கொன்று முரணானவை என்று ஸ்பர்ஜன் கூறுகிறார். ஏனெனில், போதகன் குணமடைவதிலேயே (திருந்துவதிலேயே) எப்போதும் குறியாயிருப்பான். திருந்தாத போதகனால் மக்களுக்கு ஆபத்து. அவர்களுடைய ஆன்மீக வாழ்க்கைக்கு அவனால் எந்த நன்மையுமில்லை. அத்தகையோரைப்பற்றி ஸ்பர்ஜன். “அவன் உதவாத வேலையாள்; தான் நடந்திராத பாதையில் பிரயாணிகளை நடத்தும் வழிகாட்டி; திசை தெரியாத மாலுமி; மூடனாயிருந்தும் பாடம் போதிப்பவன்; மழையில்லாத மேகம்; இலையிருந்தும், கனியற்ற பாழ்மரம்” என்று வர்ணித்திருக்கிறார்.

போதகனுக்கு ‍மெய்யான பக்தி மட்டுமல்ல அவனுக்கு பலமான பக்தியும் தேவை என்று ஸ்பர்ஜன் கூறினார். “தேவபக்தியாகிய அவனுடைய ஜீவ நாடி ஒழுங்காக அடித்தல் வேண்டும். அவனது விசுவாசக்கண் தெளிவாக இருத்தல் வேண்டும். தீர்மானம் என்ற அவன் பாதம் உறுதியாய் நிற்றல் வேண்டும். அவனது முழு உள்ளமும் தூய அறிவுடையதாயிருக்க வேண்டும்” என்று ஸ்பர்ஜன் தொடர்ந்து கூறுகிறார். அநேகர் திருச்சபையில் சாதாரண அங்கத்தவர்களாக இருக்கத் தகுதியுள்ளவர்களாயிருந்தபோதும் திருச்சபை அதிகாரிகளாக இருக்கத் தகுதியுள்ளவர்களல்ல. அவர்களுடைய வாழ்க்கை அதற்குப் பொருந்திவராது. இதனாலேயே போதகன் மிகவும் குணசீலனாக இருக்க வேண்டும் என்று வேதம் எதிர்பார்க்கிறது.

நேரம் தவறாமை, சொன்ன சொல்லைக் காப்பாற்றல், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாமல் உண்மையே பேசுதல், ஒளிவு மறைவின்றி நடத்தல் (transparent) ஆகிய குணங்கள் போதகனுக்கிருக்க வேண்டிய அவசியமான அடையாளங்கள். இவையெல்லாம் இல்லாமல் ஒருவன் போதக ஊழியத்தை நினைத்தும் பார்க்கக்கூடாது. மெய்யான போதகனிடம் துணிகரமான பாவத்திற்கு இடமிருக்காது. “துணிகரமான பாவம் ஒருவனில் காணப்பட்டால் பின்னால் அவன் எவ்வளவு தூரம் அதற்காக மன வருத்தப்பட்டாலும் போதகராக இருக்க வேண்டிய குணங்கள் அவனிடம் ஆரம்பத்திலிருந்தே இல்லை என்பது வெளிப்படை” என்று ஸ்பர்ஜன் கூறியிருப்பதை நினைவில் கொள்ள வேண்டும். இன்று துணிகரமாக பெண்களுடன் உறவாடிவிட்டு கர்த்தரிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டேன் என்று மறுபடியும் பிரசங்கிக்கப்போகும் மனிதர்கள் மெய்ப்போதகர்கள் அல்ல. இதைக் கண்டித்து அத்தகையோரைப் பிரசங்க மேடை பக்கம் வரவிடாமல் செய்யும் நாத்தானுக்கிருந்த தைரியமோ (2 சாமு. 12) மனோபாவமோ இன்று திருச்சபைகளிடமும் இல்லை. ஒழுக்கத்திற்கு இடம் கொடுக்காத கிறிஸ்தவம் கிறிஸ்தவமாக இருக்க முடியாது. நமது கலாச்சாரமும், பண்பாடும் அப்படி – கொஞ்சம் பொறுத்துத்தான் போகவேண்டும் – என்ற பேச்சுக்கும், சிந்தனைக்கும் திருமறைபூர்வமான சீர்திருத்தக் கிறிஸ்தவத்தில் இடமில்லை. கர்த்தர் நமது கலாச்சாரத்திற்கேற்ப வேதத்தை மாற்றச்சொல்லவில்லை. வேதத்திற்கேற்ப கலாச்சாரம் மாறி அமைய வேண்டும்.

போதகர்களின் வாழ்க்கைக்கு இன்று பெரும் எதிரி பணமே. பணம், பணமென்று பதறி வீண்போய்க் கொண்டிருக்கும் அநேக ஊழியர்களை தமிழ்க் கிறிஸ்தவ உலகம் இன்று சகிக்க வேண்டிய நிலையிலிருக்கின்றது. கிறிஸ்தவ பத்திரிகைகளைத் திறந்தாலோ, ஜெப இதழ்களைத் திறந்தாலோ, பிரசங்கத்தைக் ‍கேட்டாலோ, தனிப்பட்டவிதத்தில் அனுப்பப்படும் கடிதங்களைப் பார்த்தாலோ அங்கே பணத்தேவையைப் பற்றித்தான் பார்க்க முடிகின்றது. இந்நிலை மாற வேண்டும். கர்த்தரை நம்பி, கைகளைப் பயன்படுத்தி உழைத்துச் சேர்த்த பணத்தில் சபை நடத்திய கேரி போன்ற மிஷனரிகள் இன்று எங்கே! கொல்லிமலையில் கொல்லும் மலேரியாக் கொசுக்களுக்குத் தன் உயிரைத் தந்து ஊழியம் செய்த பிராண்ட் போன்ற மனிதர்கள் இன்று ஏன் குறைவு? திருச்சபை ஊழியம் பணமில்லாமல் நடப்பது கஷ்டம்தான். ஆனால், பணத்தைப் பற்றிப் பேசுமளவுக்கு வேதபூர்வமான சீர்திருத்தத்தைப் பற்றி அநேகர் சிந்திக்க மறுப்பது ஏன்? சிந்தித்துப்பாருங்கள்!

போதக ஊழியத்தில் அக்கறையுள்ளவர்கள் இன்று சபைகளுக்குத் தேவை

பவுல் எபேசியாவின் மூப்பர்களைப்பார்த்து உங்களைக் குறித்தும், ஊழியத்தைக் குறித்தம் எச்சரிக்கையாயிருங்கள் என்று அறிவுரை செய்தார். உங்களுக்குள்ளேயே ஓநாய்கள் தோன்றிவிடலாம் என்றும் எச்சரிக்கை செய்தார் (அப். 20). பவுல் தீமோத்தேயுவைப் பார்த்து, உன் உபதேசத்தைக் குறித்து எச்ச‍ரிக்கையாயிரு என்று கூறியுள்ளார். வேதத்தைப் படிப்பதிலும், அதைப் போதிப்பதிலும் போதகர்கள் அதிக நாட்டம் கொள்ள வேண்டும். சுயகட்டுப்பாடுடையவர்களே கஷ்டப்பட்டுப் படிப்பார்கள். சபையார் வளர வேண்டுமானால் படிக்க வேண்டும். படித்தால்தான் போதிக்க முடியும் என்ற வாஞ்சையை மனத்தாழ்மை மட்டுமே ஒருவரில் ஏற்படுத்த முடியும். எத்தனையோ வேலை இருக்கும்போது படிப்பதாவது, என்ற எண்ணம் இறுமாப்பிற்கு அடையாளம். நமது பாவங்களில் மோசமானது இறுமாப்பு என்று ரிச்சட் பெக்ஸ்டர் கூறியுள்ளார். பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த அமெரிக்க சீர்திருத்தப் போதகரான ஜொனத்தன் எட்வர்ட்ஸ் ஒவ்வொரு நாளும் பதின்மூன்று மணித்தியாங்களை செலவிட்டு வேதத்தைப் படித்தார். கஷ்டப்பட்டு படித்துப் போதிப்பது அவசியமில்லை என்று எண்ணுபவர்கள் ஸ்பர்ஜனின் அறிவுரைகளை வாசிக்க வேண்டும் (ஸ்பர்ஜனின் அறிவுரைகள், சுவிசேஷ ஊழியம் நூல் நிலையம். சென்னை, பக்கங்கள் 64-133)முழுநேர ஊழியம் என்று வந்துவிட்டு போதனைகளைத் தயார் செய்வதில் நேரத்தைச் செலவிடாமல் ஊரைச் சுற்றுபவர்களால் சபைக்கு நன்மை இல்லை. உடலை வருத்திப் பாடுபட்டு பிரசங்கத்தைத் தயாரிக்காமல் இனிப் பிரசங்க மேடைக்கே போவதில்லை என்று கர்த்தருக்கு முன் நாம் வாக்குறுதி எடுக்க வேண்டும். எத்தனை பேரை இயேசுவுக்குள் கொண்டு வந்திருக்கிறோம், எத்தனை ஊரில் ஊழியங்கள் ஏற்படுத்தியிருக்கிறோம் என்று பட்டியல் போட்டுக் காட்டும் பத்தாம் பசலிக்கூட்டத்தோடு சேர்ந்து விடாமல் கர்த்தர் கொடுத்திருக்கும் ஆத்துமாக்களின் வளர்ச்சிக்கு வேத உரமிட்டு வளர்க்கும் மேலான ஊழியத்தில் ஈடுபடவேண்டும். சீர்திருத்தவாதகாலப் போதகர்கள் தம் மக்களுக்கு வினா விடை முறையிலமைந்த கிறிஸ்தவக் கோட்பாடுகளைப் போதித்து, அவர்களை வளர்த்தெடுத்தனர். இன்று அக்கோட்பாடுகள் பற்றி எந்தவித அறிவோ, அவற்றை அறிந்து கொள்ள வேண்டும் என்பதில் சிரத்தையோ இல்லாமல் பிரசங்கம் என்ற பெயரில் எதை எதையோ பேசிப் போதகர்கள் காலத்தைக் கழிப்பது எத்தனை பெரிய அக்கிரமம். வேதபோதனைகளைத் தயார் செய்வதற்கு நேரத்தைக் கொடுக்க மறுப்பது மருத்துவன் நோயாளிக்குக் கொடுக்க வேண்டிய மருந்தில் அக்கறை காட்டாமல் இருப்பதற்கு ஒப்பானதாகும்.

மேற்குறிப்பிட்டவற்றில் தமிழ்க் கிறிஸ்தவ உலகில் இன்று விழிப்புணர்வு தோன்றுமானால் நிச்சயம் நாம் சீர்திருத்தப் பாதையில் அடியெடுத்து வைத்திருக்கிறோம் என்றுதான் ‍அர்த்தம். அக்காலமும் விடியுமா?

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s