1689 விசுவாச அறிக்கை

திரித்துவம்

அதிகாரம் 2 . பாகம் 2

விளக்கம். அலன் டன் (Alan Dunn)

விசுவாச அறிக்கை தனது இரண்டாம் அதிகாரத்தில் திரித்துவத்தைப்பற்றி அளிக்கும் போதனைகளைத் தொடர்ந்து பார்ப்போம். இவ்வதிகாரத்திற்கான விளக்கத்தின் முதல் பகுதியைக் கடந்த இதழில் தந்தோம். கடவுளைப்பற்றிப் பல தவறான போதனைகள் உலவி வரும் இக்காலங்களில் அவற்றில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் அதேநேரம் அவரது அறிவிலும், பரிசுத்தத்திலும் வளரவும் கடவுளைப்பற்றிய வேத போதனைகளில் நமக்கு நல்லறிவு இருத்தல் அவசியம்.

உ. கடவுளின் முடிவற்ற தன்மை

விசுவாச அறிக்கை: அவர் மாறாதவர்; அளக்க முடியாதவர்; என்றுமுள்ளவர்; புரிந்துகொள்ள முடியாதவர் (மனிதனுடைய சிந்தனைகளுக்கும், அறிவிற்கும் அப்பாற்பட்டவர்); எல்லாம் வல்லவர்; எல்லாவிதத்திலும் முடிவற்றவர்; மிகப் பரிசுத்தர்; மிகுந்த ஞானமுள்ளவர்; பெருஞ் சுதந்திரம் உள்ளவர்; தனிமுதலானவர்;

இவற்றின் மூலம் மறுபடியும் கடவுளே படைப்பாளி என்ற உண்மை வலியுறுத்தப்படுகிறது. அவர் எல்லையற்றும், முடிவற்றவராகவும் இருப்பதால் அவரால் படைக்கப்பட்டவைகளால் அவரைக் கட்டுப்படுத்த முடியாது. இப்பகுதி விளக்கும் கடவுளைப்பற்றிய இவ்வுண்மைகளை சுருக்கமாகப் பார்ப்போம்.

1. அவர் மாறாதவர்: கடவுளின் தெய்வீகத்தன்மை எவ்வித மாற்றமும் அடையாமல் இருக்கும். ஏற்கனவே காணப்படும் தனது தன்மைகளில் அவர் மனிதனைப் போல் மேலும் வளர்ச்சியடைய வேண்டியதில்லை. (மல்கியா 3:6; எபி. 13:8; யாக். 1:17)

2. அவர் அளக்க முடியாதவர்: இதன் மூலம் கடவுளை நாம் இடத்தோடு தொடர்புபடுத்திப் பேசுகிறோம், கடவுள் எங்குமிருக்கிறார் என்ற உண்மையையே இது வலியுறுத்துகிறது. அதாவது, அவரை நாம் ஓரிடத்திற்குள் கட்டுப்படுத்தி வைக்க முடியாது. படைக்கப்பட்ட உலகத்தைவிடக் கடவுள் பெரியவர். படைக்கப்பட்ட எல்லா உலகத்தையும் அவர் நிரப்புகிறார். ஆகவே, அவரை நாம் ஓரிடத்திற்குள் கொண்டுவர முடியாது. இந்து மதம் போதிக்கும் கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார் என்ற தத்துவத்திற்கும் வேதம் போதிக்கும் இவ்வுண்மைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்து மதம் கடவுள் ஒரு தூணிலும், துரும்பிலும் கூட இருப்பதாக போதித்து கடவுளைக் கட்டுப்படுத்துகிறது. தேவனை அறிந்து கொண்டவர்கள் தூணையும், துரும்பையும் வழிபடுவதில்லை. கடவுள் ஆவிரூபமானவர். அவர் தூணிலும் துரும்பிலும் இருப்பதில்லை. கடவுள் இல்லாத இடமில்லை. அவர் எல்லா நேரத்திலும் எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கிறார். ஆகவே, அவரை ஒருவரும் கட்டுப்படுத்த முடியாது. (1 இராஜா. 8:27; எரே. 23:23; சங். 139:7-12).

3. என்றுமுள்ளவர்: இதன் மூலம் கடவுளை நாம் நேரத்தோடு தொடர்புபடுத்திப் பேசுகிறோம். ஒரு குறிப்பிட்ட காலத்தில் இவ்வுலகத்தில் பிறந்து, ஒரு குறிப்பிட்ட காலத்தில் இவ்வுலகில் இருந்து மறையப்போகிற நமக்கு இவ்வுண்மையைப் புரிந்து கொள்வது சிறிது கடினமே. நாம் காலத்தால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறோம். ஆனால், காலம் கடவுளைக் கட்டுப்படுத்துவதில்லை. அவருக்கு தோற்றமோ முடிவோ இல்லை. எனது ஐந்து வயது மகனுக்கு நான் இதைப் போதித்தபோது, அதைப் புரிந்துகொள்ள முடியாமல், தனக்கு தலை வலிப்பதாக அவன் கூறினான். கடவுளின் காலத்தால் கட்டுப்படுத்த முடியாத தன்மை நமது எண்ணங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டதாக இருக்கிறது. (சங். 41:13; 90:2; 1 தீமோ. 1:7)

4. கடவுளைப் புரிந்து கொள்ள முடியாது: இதைக்குறித்து விளக்கமாக ஏற்கனவே கடந்த இதழில் விளக்கியிருக்கிறோம். கடவுள் நமது சிந்தனைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு எல்லை கடந்து இருக்கிறார் என்பதை வலியுறுத்தவே இவ்வுண்மை இங்கு மறுபடியும் விளக்கப்பட்டிருக்கிறது.

5. எல்லாம் வல்லவர்: இங்கே கடவுளுடைய எல்லையற்ற தன்மை நாம் பெரும் வல்லமையுள்ளதாக நினைப்பவற்றோடு தொடர்புபடுத்திக் காட்டப்பட்டுள்ளது. எரிமலை ஊற்றையோ அல்லது அணுகுண்டு வெடிப்பையோ எண்ணிப் பாருங்கள். இவை எல்லாவற்றையும்விட நமது தேவன் பெரும் வல்லமையுள்ளவர் (யோபு 11:7).

6. எல்லாவிதத்திலும் முடிவற்றவர்: நாம் எந்தவிதத்திலும் கடவுளைக் கட்டுப்படுத்தி விடக்கூடாதென்பதற்காகவே விசுவாச அறிக்கை மறுபடியும் இவ்வுண்மையை வலியுறுத்துகிறது. தனது குணாதிசயங்கள் அனைத்திலும் அவர் எல்லையற்றவர். அவர் அளவற்றவர்.

7. மிகப்பரிசுத்தர்: இவ்வுண்மையோடும் இனிவரப்போகும் மூன்று உண்மைகளோடும் “மிக”, “மிகுந்த”, “பெரும்” என்ற அடை மொழிகள் கொடுக்கப்பட்டிருப்பதைக் கவனிக்கவும். கடவுளைவிட மேலானவர் ஒருவரும் இல்லை என்ற உண்மையை எடுத்துக்காட்டுவதற்காகவும், அதேவேளை, அவருடைய அதிஉயர்ந்த தன்மையை வலியுறுத்துவதற்காகவுமே இவ்வடைமொழி சேர்க்கப்பட்டுள்ளது. கடவுள் தனது பரிசுத்தத்திலும், நீதியிலும் குணாதிசயத்திலும் மிகப்பரிசுத்தராக இருக்கிறார். பரலோக வழிபாட்டில் கடவுளுடைய பரிசுத்தம் மீண்டும், மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. கடவுளுடைய குணாதிசயங்களில் பரிசுத்தம் அனைத்தையும் உள்ளடக்கியதொன்றாக உள்ளது (ஆதி. 14:18-22; சங். 57:2; ஏசா. 6:3; வெளி. 4:8).

8. மிகுந்த ஞானமுள்ளவர்: கடவுளுடைய ஞானம் படைப்பின் மூலமும், மீட்பின் மூலமும் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. கடவுள் எவ்வாறு தனது ஞானத்தின் மூலம் அனைத்தையும் படைத்தார் என்பதை நீதிமொழிகள் 8 விளக்குகின்றது. அதி உயர்ந்த நன்மைகளை அடைவதை இலக்காகக்கொண்டு உண்மையை நடைமுறைக்கேற்பப் பயன்படுத்துவதே ஞானமாகும். படைப்பு தேவனுடைய ஞானத்தை வெளிப்படுத்துகிறது (சங். 19:1, 2). ஆனால் நற்செய்தியிலேயே அவரது ஞானம் அதிஉயர்ந்த முறையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதுவும் மனித சிந்தனையில் தோன்றாத இரட்சிப்பு பற்றி நற்செய்தி மூலமே விளக்கப்படுகின்றது. ஞானத்தின் அனைத்து செல்வமும் கிறிஸ்துவிலேயே அடங்கியிருக்கிறது (1 கொரி. 1:20-24; கொலோ. 2:2, 3; ரோமர் 16:27).

9. பெருஞ்சுதந்திரம் உள்ளவர்: கடவுளின் இறைஆண்மையுள்ள சுதந்திரத்தைப்பற்றி இவ்வுண்மை விளக்குகிறது. பரலோகத்திலுள்ள நமது தேவன் தமது விருப்பத்தின்படி‍யே அனைத்தையும் செய்கிறார் (சங். 115:3). எவருடைய தலையீடோ, வற்புறுத்தலோ இன்றி தனது முழுச்சுதந்திரத்துடனும் கடவுள் செயல்படுகின்றார். தனது மகாகருணையின் மூலம் தனது மக்களை இரட்சிப்பதே அவரது சுதந்திரத்தின் உள்ளார்ந்த நோக்கமாக உள்ளது. பவுல் எபேசியர் முதலாம் அதிகாரத்தில், கடவுள் கிறிஸ்துவுக்குள்ளாக நமக்கு கரு‍ணை காட்டுவதற்கு, அவரது மகா கருணை மட்டுமே காரணமாக உள்ளது என்று விளக்குகிறார் (எபே. 1:5, 6). எவருக்கும் கருணை காட்டுவதற்கு அவருக்கு முழு சுதந்திரமும் உண்டு.

10. தனிமுதலானவர்: இதனை இன்னுமொருவிதமாகக் கூறினால் வரம்பற்றவர் (Absolute) என்றும் கூறலாம். இவ்வார்த்தை வேதத்தில் காணப்படாவிட்டாலும், கடவுளின் மெய்த் தன்மையை விளக்குவதற்காக விசுவாச அறிக்கையை எழுதியவர்கள் இதனைப் பயன்படுத்தியுள்ளார்கள். அது மட்டுமல்லாமல் உலகத்தார் மேலான ஒன்றின் வரம்பற்ற தன்மையைப் பற்றிப் பேசுவதற்காக இவ்வார்த்தையைப் பயன்படுத்துவது வழக்கம். ஆனால், விசுவாச அறிக்கை, கடவுள் உலகத்து மக்களின் எண்ணங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர் என்பதை எடுத்துக்காட்டுகிறது. அவர் தனிமுதலானவர் (வரம்பற்றவர்) மட்டுமல்ல தனிமுதலானதனைத்திற்கும் மேலானவர். மனித சிந்தனைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட தனிமுதலானவர்.

ஊ. கடவுளின் இறை ஆண்மை (Sovereignty)

“எல்லாக் காரியங்களையும் தனது மாறாத பெருநீதியுள்ள சித்தத்தின் திட்டப்படி, தன் சுயமகிமைக்காகவே செய்பவர்;”

கடவுளின் இறை ஆண்மை என்ற பதம், கடவுள் கொண்டுள்ள சகல அதிகாரத்தையும் விளக்குகிறது. எந்த மனிதப்பிறவிக்கும் பதிலளிக்கத் தேவையற்ற, தன்னால் படைக்கப்பட்ட எதற்கும் கட்டுப்பட வேண்டிய அவசியமற்று சர்வ அதிகாரத்தையும் கடவுள் தன்னில் கொண்டுள்ளார். பவுல் ரோமர் 9:20ல், அப்படியானால் மனிதனே, தேவனோடு எதிர்த்துத் தர்க்கிக்கிற நீ யார்? உருவாக்கினவரை நோக்கி, நீ என்னை ஏன் இப்படி உண்டாக்கினாயென்று சொல்லலாமா? என்று கேட்கிறார். பாவத்தின் காரணமாக மனிதனில் காணப்படும் ஆணவமே இக்காலத்தில் அவனைக் கடவுளின் இறைஆண்மைக்கு எதிராகப் பேசத்தூண்டுகிறது. பாவத்தினால் கறைபடிந்துள்ள நமது சிந்தனையை வீணடித்து தேவன் பாரபட்சமாக நடந்து கொள்வதாக மனிதன் நினைக்கிறான். கடவுளைப்பற்றி அறிந்துகொள்ள முற்படும்போது நாம் தாழ்மையுடன் அவரது வார்த்தைக்கு நம்மை அடிமைப்படுத்திக்கொள்ள வேண்டுமே தவிர, நமது சிந்தனைக்கு எட்டவில்லை என்ற எண்ணத்தால் வேதம் போதிக்கும் இறை ஆண்மைபற்றிய போதனைகளை ‍எதிர்க்க முனையக்கூடாது (யாக்கோபு 4:5-8).

முதல் பாராவில் கடவுளின் இறை ஆண்மைபற்றி போதிக்கும் விசுவாச அறிக்கையின் வார்த்தைகள் மூன்று உண்மைகளைச் சுட்டிக் காட்டுகின்றன.

1. அவர் எல்லாக் காரியங்களையும் செய்கிறவர்: இவ்வார்த்தைகள் கடவுளின் இறை ஆண்மை எத்தகையது என்பதைத் தெரிவிக்கின்றது. அதாவது எல்லாவற்றின் மீதும் அவரது அதிகாரம் செலுத்தப்படுகின்றது. பறவைகளில் இருந்து உலக நாடுகளின் படைகள்வரை அவருடைய அதிகாரம் செலுத்தப்படாத உயிரினங்களோ, பொருட்களோ இல்லை. கடலலைகளின் அசைவையும் அவரே கட்டுப்படுத்துகிறார். கடல் மண்ணின் அமைப்பையும் அவ‍ரே நிர்ணயிக்கிறார். நன்மை, தீமை, இன்பம், துன்பம் அனைத்தையும் கொண்டு நடத்தி தனது மகிமையின் நோக்கங்களுக்காக அவர் பயன்படுத்திக் கொள்கிறார். (ஏசா. 46:10, 11; மத். 10:29, 30; புலம். 3:37-40).

2. தனது மாறாத பெருநீதியுள்ள சித்தத்தின் திட்டப்படி: இவ்வார்த்தைகள் கடவுளின் இறை ஆண்மை அவரது ஆலோசனையின்படியே நடப்பதாக நமக்குப் போதிக்கின்றன. விசுவாச அறிக்கையின் மூன்றாவது அதிகாரம் இதுபற்றி நமக்கு மேலும் விளக்குகின்றது. இப்பகுதியில் கடவுள் தனது திட்டங்களை எத்தகைய உறுதியோடும், தீர்மானத்தோடும் செயல்படுத்துகிறார் என்பதை விசுவாச அறிக்கை வலியுறுத்துகிறது. அவரது திட்டங்கள் ஒருபோதும் மாற்றமடையாது. கடவுள் தனது மனதை மாற்றிக்கொண்டதாக சிலவேளைகளில் நாம் வேதத்தில் வாசிக்கிறோம். ஆனால், இது கடவுள் மனிதன் தன்னைப்புரிந்து கொள்வதற்காக அவனுடைய மொழியில் சொல்லும் உண்மைகளே. உண்மையில் அவர் தனது திட்டங்களை ஒருபோதும் மாற்றிக்கொள்வதில்லை. மனிதன் மனம் மாறுகிறபோது கடவுள் அவனைத் தண்டிப்பதில்லை. இதை வேதம் அவர் தனது மனதை மாற்றிக்கொள்வதாகத் தெரிவிக்கிறது. இவ்வாறாக மனிதன் தேவனின் குரலைக் கேட்டுப் பயந்து மனம் மாறுவதும் கூட அவரது திட்டங்களுக்குள் உள்ளடங்கியிருப்பதாக வேதம் போதிக்கிறது. இதையே விசுவாச அறிக்கை அவரது மாறாத பெருநீதியுள்ள சித்தத்தின் ஆலோசனை என்று தெரிவிக்கிறது (சங். 33:11; நீதி. 19:21).

3. அவர் தனது மகிமைக்காகவே அனைத்தையும் செய்கிறார்: கடவுளின் செயல்கள் அனைத்தும் இறுதியில் அவரது சொந்த மகிமைக்காகவே செய்யப்படுகின்றன, நமது மகிமைக்காக ‍அல்ல என்ற போதனை நிச்சயம் நமக்கு அதிக ஊக்கத்தை அளிக்கின்ற உண்மையாகும் (சங். 115:1). இங்கே மகிமை என்ற வார்த்தை கடவுளின் மதிப்பையும், பிரபல்யத்தையும் பற்றிப் பேசுகின்றது. அவரது மகிமையை அவரது செயல்களிலும், முக்கியமாக அவரது அதிமுக்கிய செயலான மனிதர்களை பாவத்திலிருந்து மீட்கும் செயலிலும் காண்கிறோம். பவுல் ரோமர் 8:18ல் நம்மில் வெளிப்படுத்தப்படவிருக்கின்ற மகிமையோடு ஒப்பிடும்போது இவ்வுலகில் நாம் படும் துன்பங்கள் அனைத்தும் எந்தவிதத்திலும் பெரிதானவையல்ல என்று கூறுவதைப் பார்க்கிறோம். விசுவாச அறிக்கையின் இப்பகுதி எபேசியர் 1:8-12 வரையிலான வசனங்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதைப் பார்க்கின்றபோது இதை எழுதிய நமது முன்னோர் கடவுளின் இரட்சிக்கும் கிருபையின் மகிமையையே கருத்தில் கொண்டு இதை எழுதியிருப்பதை உணர முடிகின்றது.

எ. கடவுளின் அன்பு

“அவர் பேரன்பும், பேரருளும், பெருங்கருணையும், சகிப்புத்தன்மையும், அளவற்ற நற்குணமும், உண்மையும் உள்ளவர். அநீதியையும், ஒழுங்கு மீறுதலையும், பாவத்தையும் மன்னிக்கிறவர்.”

விசுவாச அறிக்கையின் கடவுளின் அன்பைக் குறித்துப் பேசும் இவ்வார்த்தைகள் வேதத்தில் இருந்து எடுக்கப்பட்டவை, மோசே கடவுள் தனது மகிமையைக் காட்ட வேண்டும் என்று அவரிடத்தில் வேண்டிக் கொண்டபோது, இஸ்ரவேலர்கள் தங்களுக்கு கன்றுக்குட்டியைச் செய்து நடத்திய வழிபாட்டிற்குப் பிறகும் அவர்களைத் தான் தொடர்ந்து வழிகாட்டுவதாக மோசேக்கு உறுதியளித்த தேவன் தனது நற்குணங்களை அவருக்கு காட்டத் தீர்மானித்தார் (யாத்தி. 33:18, 19). அடுத்த நாளில் நடந்த நிகழ்ச்சிகளைப்பற்றி நாம் தொடர்ந்து வாசிக்கும்போது கடவுள் மோசேக்கு தனது மகிமையை வெளிப்படுத்தியதைப் பார்க்கிறோம். அவ்வேளையிலேயே மேலே நாம் விசுவாச அறிக்கையில் கவனித்த வார்த்தைகளை கர்த்தர் மோசே கேட்கும்படிப் பேசியதை யாத்தி. 34:6, 7 ஆகிய வசனங்களில் வாசிக்கிறோம்.

விசுவாச அறிக்கை கடவுள் பேரன்பு நிறைந்தவர் என்று குறிப்பிடும்போது. அவரது அன்பைவிட மேலான அன்பு இருக்க முடியாது என்ற உண்‍மையை சுட்டிக் காட்டுகிறது. கடவுளின் அன்பைக்குறித்த வேத போதனைகளைப் புரிந்துகொள்ள முடியாமல் இன்று அநேகர் தவிக்கிறார்கள். அவருடைய தன்மையிலும், செயல்களிலும் அன்பைத்தவிர வேறு எதையும் நாம் பார்ப்பதில்லை. இஸ்ரவலேர் மீது தனது கோபத்தை அவர் காட்டி, அவர்களைத் தண்டிக்கப் போவதாக அவர் பயமுறுத்தும் போதும் அவரது நீதியுள்ள அன்பைத்தான் நாம் பார்க்கிறோம். தேவனுடைய அன்பைக் குறித்து ஓசியா 11 இல் வாசியுங்கள். ஆகவே, கடவுளின் அன்பை நாம் மனிதனின் பாவத்தால் கறைபடிந்த அரைகுறை அன்பைப்போல் எண்ணிவிடக்கூடாது. திரித்துவ அங்கத்தவர்கள் மூவரும் ஒருவரில் ஒருவர் அன்பு செலுத்துகிறார்கள். பரிசுத்த ஆவியானவர் அவ்வ‍ன்பை நமக்கு வெளிப்படுத்துகிறார். கிறிஸ்துவை அறிந்து இரட்சிப்பைப் பெற்றுக் கொண்டவர்களால் மட்டுமே கடவுளின் அன்பை அறிந்து ‍அனுபவிக்க முடியும். (யோவான் 1:18; 14:20, 21; ரோமர் 8:39; 1 யோவான் 4:10).

விசுவாச அறிக்கை, மேலும் கடவுள் பேரருளும் (எண். 6:25; சங். 27:7), பெருங்கருணையும் (லூக்கா 18:13; 6:36; சங். 86:15), சகிப்புத்தன்மையும் (2 பேதுரு 3:9). அளவற்ற நற்குணமும், உண்மையும் உள்ளவர் என்று கூறுகிறது. இவையெல்லாவற்றையும் நாம் கடவுளில் பார்க்கிறோம். அவர் மனிதனோடு தொடர்பு கொண்டு செய்துள்ள அனைத்துக் காரியங்களின் மூலமும் இக்குணாதிசயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதை நாம் பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் வாசிக்கிறோம்.

விசுவாச அறிக்கை தொடர்ந்து அவர் ஒழுங்கு மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர் என்று கூறுகிறது. அவரது மன்னிக்கும் தன்மை அவரில் இருந்தே உருவாகிறதே தவிர மனிதனில் இருந்தல்ல. இவர் மன்னிப்பதில் அதிக ஆனந்தமடைகிறார். மன்னிப்பது அவரது குணாதிசயங்களில் ஒன்று (சங் 130:3, 4; மீகா 7:18, 19). பாவத்தைக் குறித்துப் பேசும் வேதம் அதன் தன்மையை விளக்க மூன்று வார்த்தைகளைப் பயன்படுத்துகிறது. அநீதி, ஒழுங்கு மீறுதல், பாவம் (யாத்தி. 34:7). பாவிகளாகிய மனிதர்கள் எந்தளவுக்கு கடவுளை விட்டு விலகிபோய் பாவிகளாய் இருக்கிறார்கள் என்பதை இப்பதங்கள் விளக்குகின்றன. ஒழுங்கு மீறுதல் பாவத்தின் மோசமான தன்மையை சுட்டிக் காட்டுகின்றது. கடவுளின் நியாயப்பிரமாணத்தை மனிதர்கள் மீறும்போது அவர்கள் ஒழுங்குமீறி நடக்கிறார்கள் என்று வேதம் கூறுகிறது. அநீதி என்ற வார்த்தை இருதயத்தின் கேடான தன்மையை விளக்குகிறது. நேரானதாக இல்லாமல், வளைந்து நெறி தவறி கேடுள்ளதாக இருப்பதை விளக்க இவ்வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. பாவம் என்ற வார்த்தை நாம் ‍‍செய்யும் பாவங்களைப்பற்றி மட்டும் பேசாமல் நமது மெய்த்தன்மையை சுட்டிக் காட்டுகின்றது. நாம் பாவிகளாய் இருப்பதால் பாவத்தை செய்கிறோம். பாவம் என்ற வார்த்தைக்கு இலக்கைவிட்டு விலகிப்போகுதல் என்று பொருள். நாம் இலக்குத் தவறி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மேலானதும், அதி உயர்ந்ததும், மனிதர்கள் பாராட்டக்கூடியதுமான நமது செய்கைகள்கூட கடவுளுக்கு முன்னால் பாவத்தில் கறைபடிந்தே காணப்படுகின்றன. இலக்குத்தவறி, நெறி தவறி வாழும் மனிதனால் கடவுள் ஏற்றுக்கொள்ளக்கூடிய நீதியான காரியங்களைச் சுயமாகச் செய்ய முடியாது.

ஏ. கடவுளின் நீதி

“ஊக்கத்தோடு தம்மை நாடுகிறவர்களுக்கு பலனளிக்கிறவர்; அ‍தேநேரம், அவர் குற்றப்பழிகளையும், குற்றவாளிகளையும் எவ்விதத்திலும் விட்டுவைக்காது, ‍எல்லாப் பாவங்களையும் வெறுத்தொதுக்கி, பெருநீதியோடும், பயங்கரத்தோடும் நியாயந்தீர்ப்பவர்.”

இன்று கடவுளின் நீதியை அலட்சியப்படுத்தும் வழக்கத்தை அநேகரிடத்தில் பார்க்க முடிகின்றது. இதுவரை நாம் பார்த்த கடவுளின் அன்பைப்பற்றிய வேத போதனைகளை சரிவர புரிந்துகொள்ள முடியாதவர்கள் அவரது நீதியைப்பற்றிய போதனைகளைத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளார்கள். இதனால் கடவுளுடைய நீதிக்கு வேதத்திற்குப் புறம்பான மறுவிளக்கமும் கொடுக்க முற்படுகிறார்கள். திருமறைத்தீபம் ஒரு இறையியல் களஞ்சியமாக இருப்பதால் கடவுளைப்பற்றிய இறையியலுக்கு மறுவிளக்கம் கொடுக்க முற்படுபவர்களைப்பற்றியும் அது பேசி வெளிப்படுத்த வேண்டியது அவசியம். விசுவாச அறிக்கையை எழுதியவர்கள் இத்தகைய போலிப்போதனைகளை நாம் அடையாளம் கண்டு கொள்ளவேண்டும் என்ற நோக்கத்திற்காகவும் அதனை எழுதி வைத்தனர்.

தேவ நீதியைத் தவறாகப் புரிந்து கொண்டவர்கள் இன்று தேவ கோபம் மனிதன்மேல் இல்லை என்று போதிக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் அன்புள்ள கடவுள் மனிதன் மேல் கோபம் கொள்ளக்கூடாது. இவ்வாறாக தேவநீதிக்கெதிராகப் பேசி, கடவுளுடைய கோபத்தை நிராகரிப்பது பாவத்தைப்பற்றிய வேத போதனையையும் நிராகரிப்பதற்கு ஒப்பானதாகும். பாவத்தை நிராகரித்தால் பாவிகள் போக வேண்டிய இடமான நரகத்தையும் நிராகரிக்கும் நிலைக்கு அது நம்மைத் தள்ளிவிடும். வேத போதனைகளில் ஒன்றை நாம் நிராகரித்தால் எல்லாவற்றையுமே நிராகரித்துவிடும் நிலைக்கு நம்மைக் கொண்டு வந்துவிடும்.

விசுவாச அறிக்கை தேவ நீதியைப்பற்றிப் பேசும்போது, நமக்கு ஊக்கந்தரும் வகையிலேயே அதனை விளக்குகிறது. கடவுள் ஊக்கத்தோடு தம்மை நாடுகிறவர்களுக்கு பலனளிப்பதாக அது அறிவிக்கிறது. இவ்வார்த்தைகள் எபிரேயர் 11:6 இல் இருந்து எடுக்கப்பட்டவைகளாகும். தம்மை நாடி வருபவர்களை கடவுள் எப்போதுமே அசட்டை செய்வதில்லை. மனிதர் தம்மை நாடிவரும்படி அவரே அறைகூவலிடுகிறார். அதுவும் அவரை நாம் ஊக்கத்தோடு நாடி வரவேண்டுமென்று வேதம் தெரிவிக்கிறது. இன்று அவ்வாறு ஊக்கத்தோடும், முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் அவரை நாடி வருபவர்கள் அரிது. இலகுவாக, சுலபமாக, எந்தவித ஆர்வமும் இல்லாமல் அவரிடம் எல்லோரும் ஓடிவந்துவிடமுடியும் என்றவிதத்தில் பிரசங்கிக்கப்படும் பிரசங்கங்களும், மனிதர் கடவுளை ஊக்கத்தோடு நாடி வர ‍வேண்டிய அவசியத்தைப்பற்றித் தெளிவாக விளக்குவதில்லை (ஏசா. 65:1; எண். 4:29; நீதி. 8:17).

அடுத்ததாக, விசுவாச அறிக்கை கடவுள் பெருநீதியுள்ளவர் என்று அறிவிக்கின்றது. கருணையுள்ளவராகவும், அன்புடையவராகவும், சகிப்புத்தன்மை கொண்டவராகவும், உண்மையுள்ளவராகவும் இருக்கும் கடவுள் நீதியுள்ளவராகவும் இருக்கிறார். அதுவும் பெருநீதியுள்ளவராக இருக்கிறார். இதன் மூலம் அவரது தீர்மானங்களையும், தீர்ப்புகளையும் மறுத்துக் குறைகூறக்கூடிய ஒருவரும் இல்லை என்பதை நாம் உணர வேண்டும். அவருக்கு மேலாக இருந்து அவரை நியாயந்தீர்க்கக் கூடிய ஒருவர் எங்கும் இல்லை. தாவீது தனது பாவத்திற்காக தேவனு‍டைய தயவை நாடிய போதும், தேவன் அவனை நியாயந்தீர்ப்பதைத் தவிர வேறு எதையும் செய்யத் தேவையற்ற நிலையிலேயே இருந்தார் (சங். 51:4). நான் குற்றவாளியாகக் காணப்பட்டாலும் தேவன் நீதியுள்ளவர் என்றே தாவீது கூறினான்.

விசுவாச அறிக்கை தேவன் நீதியுள்ளவர் என்று மட்டும் கூறாமல் அவர் பயங்கரத்‍தோடு நியாயந்தீர்ப்பவர் என்றும் கூறுகிறது. அவரது நியாயத்தீர்ப்பை பயங்கரம் என்று விசுவாச அறிக்கை வர்ணிக்கிறது. இவ்வார்த்தை வரம்பற்ற பயத்தையும், பயங்கரத்தையும் சுட்டிக் காட்டுகிறது. அவ்விதத்திலேயே தேவனுடைய நியாயத்தீர்ப்பு அமையும். அவருடைய நியாயத்தீர்ப்பை சந்திக்க நேரிட்ட மக்கள் அடைந்த பயத்தையும், பயங்கரத் தண்டனையையும் பற்றி பழைய ஏற்பாட்டில் நாம் வாசிக்கிறோம். கடைசிக்காலத்தில் நடக்கப்போகும் நியாயத்தீர்ப்பு பயங்கரமானதாகவே அமையும் என்பதை வேதம் நமக்கு சுட்டிக்காட்டத் தவறவில்லை.

அதுமட்டுமல்லாமல், விசுவாச அறிக்கை கடவுள் பாவத்தை வெறுத்தொதுக்குகிறார் என்று போதிக்கின்றது. பரிசுத்தமாக இருக்கும் தேவனால் பாவத்தை வெறுத்தொதுக்குவதைத்தவிர வேறு எதையும் செய்ய முடியாது. கடவுளின் இத்தகைய வெறுப்பு மனிதனின் சிலை வணக்கத்துக்கெதிராக இருப்பதாக வேதம் போதிக்கின்றது. மனிதர் தன்னைத்தவிர வேறு எதையும் ஆராதிப்பதைத் தேவன் அடியோடு வெறுக்கிறார் (உபா. 12:31; 16:22). தேவன் மனிதன் மனிதனுக்கு இழைக்கும் கொடுமைகளையும், பெண்களுடன் தவறான உறவில் ஈடுபடுவதையும் வெறுத்தொதுக்குகிறார். தனது பரிசுத்தத்திற்கு எதிரான எதையும் அவரால் வெறுத்தொதுக்காமல் இருக்க முடியாது (நீதி. 6:16-19).

அத்தோடு குற்றப்பழிகளையும், குற்றவாளிகளையும் அவர் எவ்விதத்திலும் விட்டுவைப்பதில்லை என்று விசுவாச அறிக்கை தெரிவிக்கிறது. இவ்வுலகத்து நியாயம் எப்போதும் கறைபடிந்து காணப்படுகின்றது. ஆனால் நியாயத்தீர்ப்பு நாளில் கர்த்தரின் தீர்ப்பு பூரண நியாயத்துடன் கொடுக்கப்படும். குற்றவாளிகள் எந்தவிதத்திலும் அவரிடம் இருந்து தப்பமுடியாத அதேவேளை, நல்லவர்கள் அவரது கருணையையும், அன்பையும் அனுபவிப்பார்கள்.

நம்மால் இவ்வாறெல்லாம் சொல்லமுடிவதற்கு கர்த்தரின் கிருபையுள்ள நற்செய்தியே காரணமாக உள்ளது. நாம் அடைய வேண்டிய நீதியான தண்டனையை கிறிஸ்து தன்மேல் சுமந்து பிதாவின் நீதியைச் சந்தித்திருப்பதாலேயே நாம் நியாயத்தீர்ப்பு நாளின் பயங்கரத்தைப் பற்றிய பயமில்லாமல் இருக்க முடிகின்றது (2 கொரி. 5:21). பாவிகள் நிச்சயமாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள். ஆனால், பாவிகளின் தண்டனையை கிறிஸ்து தன்மேல் சுமந்தார். இறுதியில் மரித்து உயிர்த்தெழுந்தார். கிறிஸ்துவை விசுவாசிப்பவர்கள் அவரது மரணத்தின் பலன்களையும், உயிர்‍த்‍தெழுதலின் பலன்களையும் அனுபவிக்க முடியும்.

பாவத்திற்கு எதிரான தேவ கோபத்தைச் சந்திக்கும் இரண்டு இடங்கள் உள்ளன. ஒன்று கல்வாரிச் சிலுவை, மற்றது நரகம். இவ்விரண்டு இடங்களில் ஒன்றிற்கு நாம் போக வேண்டியவர்களாக இருக்கிறோம். கிறிஸ்துவில் நாம் கொள்ளும் விசுவாசம் நம்மை நரகத்தின் துன்பத்தில் இருந்து விடுவிக்கின்றது. இந்நாளே கிருபையின் நாள். தேவ கருணையும், அன்பும் இந்நாட்களில் நற்செய்தியின் மூலமாக எந்தவித பாகுபாடுமில்லாமல் அனைவரும் அறியுமுகமாக வெளிப்படுத்தப்படுகின்றது.

“எல்லாப் பாவங்களுமே கொடூரமானவையாகவும் மோசமானவையாகவும் உள்ளன. பாவத்தின் கொடூரத்தன்மை அது எவருடைய மகிமைக்கெதிராக செய்யப்பட்டதோ அதைப் பொறுத்தே அமைந்திருக்கிறது. கடவுள் அளவற்ற பரிசுத்தமுள்ளவராக இருப்பதால் பாவமும் அளவற்ற மகா கேடுள்ளதாக இருக்கின்றது”.

– ஜொனத்தான் எட்வர்ட்ஸ் –

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s