திரித்துவம்
அதிகாரம் 2: பாகம் 3
விளக்கம்: அலன் டன் (Alan Dunn)
விசுவாச அறிக்கையின் இரண்டாம் அதிகாரத்தின் முதல் பாராவை கடந்த இதழில் விளக்கினோம். இவ்விதழில் அதன் ஏனைய பகுதிகளைத் தொடர்ந்து பார்ப்போம்.
பாரா 2: கடவுள், ஜீவன், மகிமை, நற்குணம், பேரின்பம் அனைத்தையும் தன்னில் கொண்டும், தன்னில் இருந்தே பெற்றும், தனக்குள்ளும், தனக்காகவும், தன்னிறைவுடையவராய் ஓர் தனித்தன்மையைக் கொண்டு, தான் படைத்த படைப்புயிர்களிடமிருந்து எவ்வித மகிமையையும் பெறாது, அவற்றின் தேவையற்றுமிருக்கிறார். இதற்கு மாறாக தன் மகிமையைக் கடவுளே அவர்களுக்குள்ளும், அவர்கள் மூலமும், அவர்களிடத்தும், அவர்கள் மேலும் வெளிப்படுத்திக் காட்டுகிறார். உயிருள்ள அனைத்தும், தங்களுடைய நிலைபேற்றிற்கு அவரையே காரணகர்த்தராகக் கொண்டு, அவர் மூலமும், அவராலும், அவருக்காகவுமே வாழ்கின்றன. எல்லாப் படைப்புயிர்கள் மூலமாகவும், அவற்றிற்காகவும், அவற்றிற்குள்ளும், தான் விரும்பியதைச் செய்யும் முழுமையான இறை ஆண்மையுள்ள அதிகாரத்தை அவர் கொண்டிருக்கிறார். அவருக்கு சகலத்தையும் பற்றிய பூரண அறிவிருக்கின்றது. அவரது அறிவு படைப்புயிர்களில் தங்கியிராது எல்லையற்றதாகவும், தவறா நிலையுடையதாகவும் உள்ளது (அதாவது அவர் அன்றாடம் நிகழும் நிகழ்ச்சிகளை அறிந்து கொள்வதற்கு, தேவதூதர்களிலோ மனிதரிலோ தங்கியிருக்கவில்லை). ஆகவே, எந்த நிகழ்ச்சியுமே அவரைப் பொறுத்தவரையில் தற்செயலானதோ, நிச்சயமற்றதோ அல்ல. அவர் தனது திட்டங்களிலும், செயல்களிலும், கட்டளைகளனைத்திலும் மகா பரிசுத்தர். தேவதூதர்களும், மனிதர்களும், தம்மைப் படைத்தவருக்கு அளிக்க வேண்டிய சகலவிதமான வழிபாட்டையும், ஊழியத்தையும், கீழ்ப்படிவையும், அவர் கேட்கச் சித்தமாயிருக்கின்ற எதையும் அவருக்குத் தரவேண்டியவர்களாயிருக்கின்றார்கள்.
யோபு 22:2, 3; சங். 119:68; 148:13; எசே. 11:5; தானி. 4:25, 34, 35;யோவான் 5:26; அப். 15:18; ரோமர் 11:34-36; எபிரே. 4:13; வெளி. 5:12-14.
கடவுளும் அவரது படைப்புயிர்களும் (பாரா 2)
அ. தனது படைப்புயிர்களோடு கடவுளுக்குள்ள தொடர்பு
1. கடவுளின் சுதந்திரம்
“கடவுள், ஜீவன், மகிமை, நற்குணம், பேரின்பம் அனைத்தையும் தன்னில் கொண்டும், தன்னில் இருந்தே பெற்றும், தனக்குள்ளும், தனக்காகவும், தன்னிறைவுடையவராய் ஓர் தனித்தன்மையைக் கொண்டு, தான் படைத்த படைப்புயிர்களிடமிருந்து எவ்வித மகிமையையும் பெறாது, அவற்றின் தேவையற்றுமிருக்கிறார். இதற்கு மாறாக தன் மகிமையைக் கடவுளே அவர்களுக்குள்ளும், அவர்கள் மூலமும், அவர்களிடத்தும், அவர்கள் மேலும் வெளிப்படுத்திக் காட்டுகிறார்.”
இவ்வதிகாரத்தின் முதலாவது பாராவில் கடவுளின் சுயாதீனத்தைப்பற்றி சொல்லப்பட்ட உண்மையை மறுபடியும் இப்பாரா வலியுறுத்துகிறது. ஆனால், இப்பகுதியில் “பேரின்பம்” என்ற வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வார்த்தை அடிப்படையில் மகிழ்ச்சி என்று பொருள்படும். அதாவது கடவுள் தன்னில் மகிழ்வுடையவராக இருக்கின்றார். தான் கடவுளாய் இருப்பதில் அவர் பேரின்பம் கொள்கிறார். தனது சித்தத்தை நிறைவேற்றுவதில் பேரானந்தம் கொள்கிறவராக இருக்கின்றார். அத்தோடு நற்செய்தியின் மூலம் தனது கிருபையை வெளிப்படுத்துவது கடவுளுக்குப் பேரானந்தம் அளிக்கிறது (1 தீமோ. 1:11). இப்பகுதி கடவுள் தன்னில் முழுச் சுதந்திரம் கொண்டவராகவும், பூரணமான தன்னிறைவுடையவராகவும், எவருடைய துணையும் தேவையற்றவருமாயும் இருக்கிறார் என்பதை விளக்குகிறது.
2. தனது படைப்புயிர்கள் மேல் கடவுளுக்குள்ள இறை ஆண்மை
“உயிருள்ள அனைத்தும், தங்களுடைய நிலைபேற்றிற்கு அவரையே காரணகர்த்தராகக்கொண்டு, அவர் மூலமும், அவராலும், அவருக்காகவுமே வாழ்கின்றன. எல்லாப் படைப்புயிர்கள் மூலமாகவும், அவற்றிற்காகவும், அவற்றிற்குள்ளும், தான் விரும்பியதைச் செய்யும் முழுமையான இறை ஆண்மையுள்ள அதிகாரத்தை அவர் கொண்டிருக்கிறார்.”
எல்லாப் படைப்புயிர்களினதும் தோற்றத்தின் ஊற்றாகவும், காரணகர்த்தாவாகவும் கடவுளே இருக்கிறார் (யோவான் 1:3). இப்பகுதி படைக்கப்பட்டவை மீது கடவுளுக்கு இருக்கும் இறை ஆண்மையை மறுபடியும் வலியுறுத்துகிறது. கடவுளின் சித்தத்தின் காரணமாகவே அவரால் படைக்கப்பட்டவைகள் நிலைபேறுடையவையாயிருக்கின்றன (வெளி. 4:11). சுயாதீனமுடையவராய்த் தனது சித்தத்தின்படி எதையும் செய்யும் கடவுளுடைய இறை ஆண்மையைப் புரிந்து கொள்வது சிலருக்குக் கடினமாயிருக்கின்றது. அரசனான நேபுக்காத்நேச்சார் அவ்வாறான மனிதன். தேவசித்தத்தை தானியேல் மூலம் அறிந்து கொள்ளும் ஆசீர்வாதம் கிடைத்திருந்தும், அவன் மனத்தாழ்மை இல்லாதவனாக கடவுளுக்கு சமமாக தன்னை உயர்த்திக்கொள்ள முயன்றான். தேவனுடைய பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்பது போல் நேபுக்காத்நேச்சார் தனது செயலுக்கான தண்டனையைக் கடவுளிடம் இருந்து அனுபவிக்க நேர்ந்தது. அவன் மிருகத்தைப்போல் புல்லைத் தின்னும் நிலைக்குத் தள்ளப்பட்டான். அந்நிலையில் இருக்கும்போது அவனுக்குப் புத்தி உண்டாயிற்று, ஏழு வருட முடிவில் அவன் கடவுளை மகிமைப்படுத்தி சாட்சி சொன்னான் என்று வேதத்தில் வாசிக்கிறோம். (தானியேல் 4:34, 35).
3. தனது படைப்புயிர்களைப்பற்றி கடவுளுக்கு இருக்கும் முழுமையான அறிவு
“அவருக்கு சகலத்தையும் பற்றிய பூரண அறிவிருக்கின்றது. அவரது அறிவு படைப்புயிர்களில் தங்கியிராது எல்லையற்றதாகவும், தவறாநிலையுடையதாகவும் உள்ளது (அதாவது அவர் அன்றாடம் நிகழும் நிகழ்ச்சிகளை அறிந்து கொள்வதற்கு, தேவதூதர்களிலோ மனிதரிலோ தங்கியிருக்கவில்லை). ஆகவே, எந்த நிகழ்ச்சியுமே அவரைப் பொறுத்தவரையில் தற்செயலானதோ, நிச்சயமற்றதோ அல்ல.”
அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை. சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது (எபிரே. 4:13). நமது இரகசியமான எண்ணங்கள், ஆசைகள், எதிர்பார்ப்புகள் அனைத்தும் கடவுளுக்குத் தெரிந்திருக்கின்றன (எரே. 17:10; சங். 139:1-6; நீதி. 20:27). அத்தோடு, நாம் நினைப்பதுபோல் கடவுள் நினைப்பதில்லை என்று விசுவாச அறிக்கை கூறுகிறது. நாம் ஒரு காரியத்தை செய்யத் தொடங்கியபின், சந்தர்ப்ப மாற்றத்தால், செய்யத் தொடங்கியதை விட்டுவிட்டு வேறு எதையோ செய்ய முயல்கிறோம். கடவுள் இப்படிச் செயல்படுவதில்லை. அவர் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தி நடத்தும் இறை ஆண்மை உடையவராக இருப்பதால் அவர் தான் செய்ய வந்ததை விட்டுவிட்டு வேறு எதையும் செய்ய வேண்டிய அவசியமில்லை (ஏசா. 46:9, 10). எதிர்பாராமல் நடந்தது – தற்செயலாக நிகழ்ந்தது – போன்ற வார்த்தைகளுக்கே கடவுளின் அகராதியில் இடமில்லை. சந்தர்ப்பம், சூழ்நிலை அனைத்தும் அவரது கட்டுக்குள் அடங்கி இருக்கின்றன. அவரை எதுவும் கட்டுப்படுத்த முடியாது.
ஆ. கடவுளோடு படைப்புயிர்களுக்குள்ள தொடர்பு
1. படைப்புயிர்களும் பரிசுத்தமான கடவுளும்
“அவர் தனது திட்டங்களிலும், செயல்களிலும், கட்டளைகளனைத்திலும் மகா பரிசுத்தர்.”
கடவுள் எப்போதும் பரிசுத்தமுள்ளவராக இருக்கிறார். அவருடைய செயல்கள் அனைத்தும் எப்போதும் பரிசுத்தமானவையாகவே இருக்கும். அவரில் மனிதர்கள் ஒருபோதும் குறைகாண முடியாது. அவர் நம்மிடம் எப்போதும் பரிசுத்தத்தையே எதிர்பார்க்கிறார். ஆகவே, அவருடைய நியாயப்பிரமாணம் பரிசுத்தமானது, அவருடைய கட்டளைகள் என்றும் பரிசுத்தமானவையாகவும் நல்லவையாகவும் உள்ளன (1 யோவான் 1:5; சங். 145:17; ரோமர் 7:12).
2. படைப்புயிர்கள் தம்மைப் படைத்தவரை பரிசுத்தத்தோடு ஆராதனை செய்ய வேண்டியவர்களாயிருக்கிறார்கள்.
“தேவதூதர்களும், மனிதர்களும், தம்மைப் படைத்தவர்க்கு அளிக்க வேண்டிய சகலவிதமான வழிபாட்டையும், ஊழியத்தையும், கீழ்ப்படிவையும், அவர் கேட்கச் சித்தமாயிருக்கிற எதையும் அவருக்குத் தர வேண்டியவர்களாயிருக்கின்றார்கள்.”
கடவுள் நம்மைப் படைத்தவராயிருப்பதால் அதன் அடிப்படையில் நாம் அவரை சகல மரியாதைகளுடனும், பரிசுத்தத்துடனும் ஆராதிக்கக் கடமைப்பட்டவர்களாயிருக்கிறோம். பவுல் ரோமருக்கு எழுதிய முதலாம் அதிகாரத்தில் மனிதனின் மிக மோசமான செயலான விக்கிரக ஆராதனை செய்யும் கொடுமையை வெளிப்படுத்துகிறார். எல்லாவற்றையும் படைத்த கடவுள் தன்னை மட்டுமே மனிதன் ஆராதனை செய்ய வேண்டுமென்று தெளிவாக அவனுக்கு வெளிப்படுத்தியுள்ளார். கடவுளைப்பற்றிய அறிவை சிருஷ்டி வெளிப்படுத்துகிறது. கடவுளே சிருஷ்டியின் மூலம் வெளிப்படுத்துகிறார். ஆகவே, மனிதன் கடவுளை அறிந்து கொள்ள முடியாது என்றோ, அவரைத் தனக்குத் தெரியவில்லை என்றோ எந்தவிதமாகவும் சாக்குப் போக்குச் சொல்ல முடியாது (ரோமர் 1:19-20). முழு உலகமுமே கிறிஸ்துவை வழிபட வேண்டுமென்பதற்காகவே அனைத்தும் கடவுளால் படைக்கப்பட்டுள்ளது (பிலிப். 22:9-11). உலகத்தில் இருக்கும் தேவனின் சபையும், பரலோகத்திலே இருக்கும் தேவமக்களும் தேவ குமாரனாகிய கிறிஸ்துவையே இன்று ஆராதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
திரித்துவக் கடவுள்
பாரா 3: அவரது எல்லையற்ற தெய்வீக உள்ளியல்பில் பிதா, வார்த்தை அல்லது குமாரன், ஆவியானவர் மூவரும் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறார்கள். சாரத்திலும், வல்லமையிலும், நித்தியத்திலும் அவர்கள் அனைவரும் ஒருவரே. அதேவேளை ஒவ்வொருவரும் பிரிக்கப்படாத முழுமையான தெய்வீகத்தையும் உடையவர்களாய் இருக்கிறார்கள். பிதாவானவர் வேறெந்த உயிரினத்தில் இருந்தும் பெறப்படவில்லை. அவர் எந்த ஒரு உயிரினத்தாலும் தோற்றுவிக்கப்படாததோடு எந்தவொரு உயிரினத்திலிருந்தும் தோற்றுவிக்கப்படவுமில்லை. குமாரன் தந்தையிடமிருந்து நித்தியமாய்த் தோன்றினவராய் இருக்கிறார். பரிசுத்த ஆவியானவர் தந்தையிடமிருந்தும், குமாரனிடமிருந்தும், நித்தியமாய் வெளிப்படுகிறவராயும் இருக்கிறார். தொடக்கமற்ற மூவருமே எல்லையற்ற ஒரே கடவுளாய் இருப்பதால் அவர்களுடைய இயற்கைத் தன்மையையோ உள்ளியல்பையோ பிரித்துப் பார்க்கக்கூடாது. ஆனாலும், அவர்களுக்கிடையிலான தனிப்பட்ட உறவைக் குறித்தும் (அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கும் குடும்ப உறவு), அவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கும் பல்வகையான செயல்கள் குறித்தும் வேதத்தில் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளது. கடவுளோடு எமக்குள்ள எல்லா ஐக்கியத்திற்கும் அவரிலேயே நாம் தங்கியிருப்பதால் நாம் பெறும் ஆறுதலுக்கும் திரித்துவத்தைக் குறித்த இந்தக் கோட்பாடே அடிப்படையாக அமைகின்றது.
யாத்தி. 3:14; மத். 28:19; யோவான் 1:14-18; 14:11; 15:26; 1 கொரி. 8:6;2 கொரி. 13:14; கலா. 4:6; 1 யோவான் 5:7.
அ. திரித்துவம் பற்றிய விளக்கம்
1. திரித்துவ அங்கத்தவர்களிடம் இருக்கும் ஐக்கியம்
“அவரது எல்லையற்ற தெய்வீக உள்ளியல்பில், பிதா, வார்த்தை அல்லது குமாரன், ஆவியானவர் மூவரும் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறார்கள். சாரத்திலும், வல்லமையிலும், நித்தியத்திலும் அவர்கள் அனைவரும் ஒருவரே. அதேவேளை ஒவ்வொருவரும் பிரிக்கப்படாத முழுமையான தெய்வீகத்தையும் உடையவர்களாய் இருக்கிறார்கள்.”
விசுவாச அறிக்கை இப்பகுதியின் மூலம் தெய்வீகக் கடவுளில் மூன்று நபர்கள் (ஆட்கள்) இருப்பதை விளக்குகிறது. அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தன்மை கொண்டவர்களாக இருக்கிறார்கள். அத்தோடு விசுவாச அறிக்கை இவர்கள் ஒவ்வொருவரும் சாரத்திலும், வல்லமையிலும், நித்தியத்திலும் முழுமையான தெய்வீக இயல்பைக் கொண்டுள்ளார்கள் என்று கூறுகிறது. தெய்வீகத்தின் அடிப்படைத் தன்மைகளனைத்தையும் மூவருமே கொண்டுள்ளார்கள். இத்தெய்வீகத்தன்மைகள் பிதாவுக்குள் பாதியும், குமாரனுக்குள் பாதியும், ஆவிக்குள் பாதியுமாக இருப்பதாக எண்ணிவிடக்கூடாது. ஒருவர் மற்றவரைவிட இத்தெய்வீகத்தன்மைகளை அதிகமாகக் கொண்டிருப்பதாகவும் எண்ணக்கூடாது. ஒவ்வொருவரும் அத்தெய்வீகத் தன்மைகளை முழுமையாகக் கொண்டுள்ளனர். பிதா முழுமையாக கடவுளாக இருக்கிறார். அதேபோல் குமாரனும் முழுமையாக கடவுளாக இருக்கிறார். ஆவியும் முழுமையாக கடவுளாக இருக்கிறார். இவர்களைக் கடவுளின் பாதிகளாக எண்ணி விடக்கூடாது. இவர்களை ஒன்று சேர்ப்பதால் கடவுள் தோன்றுவதாகவும் எண்ணிவிடக்கூடாது. கடவுளில் மூன்று நபர்கள் இருந்தாலும் கடவுள் ஒருவரே.
திரித்துவம் என்ற வார்த்தை வேதத்தில் காணப்படாவிட்டாலும் அதுபற்றிய போதனை வேதத்தில் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது (விசுவாச அறிக்கை – முதலாம் அதிகாரம், பாரா 6). அதாவது இப்போதனை வேதத்தின் பல பகுதிகளிலும் தெளிவாகக் காணப்படுகின்றது. அப்போதனைகளை ஒன்று சேர்த்துப் படித்து திரித்துவம் பற்றிய முழு உண்மைகளையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று வேதம் எதிர்பார்க்கிறது. பின்வரும் வேத வசனங்கள் திரித்துவத்தை விளக்குகின்றன (மத். 3:16, 17; 28:19; 2 கொரி. 13:14). திரித்துவப் போதனை வேதத்தின் அடிப்படைப் போதனைகளில் ஒன்று. இதை மறுப்பவர்களுக்கும், இதில் தெளிவற்றவர்களுக்கும் கிறிஸ்தவத்தோடு தொடர்பிருக்க முடியாது. வரலாற்றில் கிறிஸ்தவத்திற்கு எதிராக முளைத்த பல போதனைகள் திரித்துவக் கோட்பாட்டை எதிர்ப்பதாகவே இருந்தன. இன்று யெகோவாவின் சாட்சிகளும், செவன்த் டே அட்வென்டிஸ்ட் போன்றோரும் திரித்துவத்தைப் பற்றிய தவறான கருத்துக்களைக் கொண்டிருக்கிறார்கள்.
பழைய, புதிய ஏற்பாடுகளுக்கிடையில் உள்ள தொடர்பைப்பற்றிப் பேசும் அகஸ்தீன், பழைய ஏற்பாட்டில் புதிய ஏற்பாடு மறைந்து காணப்படுகின்றது என்றும், புதிய ஏற்பாடு பழைய ஏற்பாட்டை விளக்குகிறது என்றும் கூறினார். இது இவ்விரு ஆகமங்களுக்கிடையில் உள்ள சிறப்பான உறவாகும். ஆதியாகமத்தின் முதல் அதிகாரத்தில், ஜலத்தின் மேல் ஆவியானவர் அசைவாடிக் கொண்டிருந்தார் என்று வாசிக்கிறோம். ஆதி. 1:1-2 திரித்துவத்தைப் பற்றிப் பேசுகிறது. திரித்துவத்தைப்பற்றிய முழுவிளக்கமும் இங்கில்லாவிட்டாலும் திரித்துவத் தேவனின் அங்கத்தவர்களை இங்கு நாம் பார்க்க முடிகின்றது. அவர்களே அனைத்தையும் காத்துக் கொண்டிருந்தனர். மேலும் தொடர்ந்து வாசிக்கும்போது கடவுள் மனிதனைப் படைத்ததைப் பற்றிய வேதப்பகுதி கடவுளைப் பற்றிப் பேசும்போது அவர் தம்மைப் பன்மையில் (நமது, Us) அழைப்பதைச் சுட்டிக் காட்டுகிறது. (ஆதி. 1:26, 27). ஆதி 11:5-7 இல் கடவுள் பாபேலை அடித்துத் தள்ளத் தீர்மானித்தபோது தம்மைப் பற்றிப் பன்மையில் (நாம் இறங்கிப் போய்) குறிப்பிடுவதைக் காணலாம் (Let us). இவற்றோடு பழைய ஏற்பாட்டில் தேவ தூதனைப் பற்றியும் (Angel of the Lord) பல இடங்களில் வாசிக்கிறோம். இத் தேவதூதன் கடவுளின் தூதர்களைவிட வேறுபட்டவர். திரித்துவத்தின் இரண்டாம் அங்கத்தவரே இவ்வாறாக பழைய ஏற்பாட்டில் செயற்பட்டதைப் பார்க்கிறோம் (யாத். 23:20). இவரை Pre-Incarnated Son of God என்று கூறுவார்கள். இவ்விதமாக மனித தோற்றத்தில் (Theophony) திரித்துவத்தின் இரண்டாம் அங்கத்தவர் பழைய ஏற்பாட்டில் தோற்றமளித்துள்ளார். பழைய ஏற்பாடு ஆவியானவரைப் பற்றியும் பேசுகிறது. தாவீது சங்கீதம் 51:11 இல், பரிசுத்த ஆவியை என்னில் இருந்து எடுத்துப் போடாதேயும் என்று கர்த்தரை நோக்கிப் பேசுவதைப் பார்க்கிறோம். பழைய ஏற்பாட்டில் சங். 2; ஏசாயா 49:1 ஆகிய பகுதிகளிலும் வேறு இடங்களிலும் திரித்துவ அங்கத்தவர்கள் தமக்குள் கலந்துரையாடுவதைப் பார்க்க முடிகின்றது. புதிய ஏற்பாட்டில் இயேசு தனது பிதாவோடு ஜெபத்தில் பேசுவதைப் பார்க்கிறோம். யோவான் 17 இல் காணப்படும் இயேசுவின் ஜெபம், மோசே எரியும் புதருக்கு முன் நடுங்கியதைப் போல நம்மை நடுங்க வைக்கும் ஜெபமாகும். தேவன் தேவனோடு பேசுகிற அற்புதத்தை வாசிக்கும் அருமையான வாய்ப்பை புதிய உடன்படிக்கையின் காலத்தில் நாமடைந்திருக்கிறோம்.