திரித்துவம்
அதிகாரம் 2: பாகம் 4
விளக்கம்: அலன் டன் (Alan Dunn)
3. அவரது எல்லையற்ற தெய்வீக உள்ளியல்பில் பிதா, வார்த்தை அல்லது குமாரன், ஆவியானவர் மூவரும் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறார்கள். உள்ளியல்வு (சாரம்) வல்லமை, நித்தியம், ஆகியவற்றில் அவர்கள் அனைவரும் ஒருவரே. அதேவேளை ஒவ்வொருவரும் பிரிக்கப்படாத முழுமையான தெய்வீகத்தையும் உடையவர்களாய் இருக்கிறார்கள். பிதாவானவர் வேறெந்த உயிரினத்திலும் இருந்து பெறப்படவில்லை, அவர் எந்தவொரு உயிரினத்தாலும் தோற்றுவிக்கப்படாததோடு, எந்தவொரு உயிரினத்திலும் இருந்தும் தோற்றுவிக்கப்படவில்லை. குமாரன் தந்தையிடமிருந்து நித்தியமாய் தோன்றினவராயிருக்கிறார். பரிசுத்த ஆவியானவர், தந்தையிடமிருந்தும், குமாரனிடமிருந்தும் நித்தியமாய் வெளிப்படுகிறவராய் இருக்கிறார். மூவருமே தொடக்கமற்றவர்களாகவும் அதேவேளை எல்லையற்ற ஒரே கடவுளாயும் இருப்பதால் அவர்களுடைய இயற்கைத்தன்மையையோ, உள்ளியல்பையோ பிரித்துப் பார்க்கக்கூடாது. ஆனாலும், அவர்களுக்கிடையிலான தனிப்பட்ட உறவைக் குறித்தும் (அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கும் குடும்ப உறவு), அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கும் பல்வகையான செயல்கள் குறித்தும் வேதத்தில் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளது. கடவுளோடு நமக்குள்ள எல்லா ஐக்கியத்திற்கும், அவரில் நாம் தங்கியிருப்பதால் நாம் பெறும் ஆறுதலுக்கும் திரித்துவத்தைக் குறித்த இந்தக்கோட்பாடே அடிப்படையாக அமைகின்றது.
யாத்தி. 3:14; மத். 28:19; யோவான் 1:14, 18; 15:26; 1 கொரி. 8:6; 2 கொரி. 13:14; கலா. 4:6; 1 யோவான் 5:7.
அ. திரித்துவக் கோட்பாடு.
1. மூன்று தெய்வீக நபர்களில் காணப்படும் ஒற்றுமை.
கடவுளின் உள்ளியல்பைப்பற்றி வர்ணிக்கும் இப்பகுதி கடவுளைப்பற்றிய மிகவும் ஆழமான சத்தியத்தை வெளிப்படுத்துகிறது. ஒரே கடவுளில் மூன்று நபர்கள் இருப்பதோடு அம்மூவரும் நாம் பிரித்துப் பார்க்கக்கூடிய தனித்தன்மைகளையும் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்று இப்பகுதி போதிக்கின்றது. அத்தோடு விசுவாச அறிக்கை கடவுளின் வேறுபல குணாதிசயங்களை இம்மூவரோடும் தொடர்புபடுத்திக் காட்டுகின்றது. உள்ளியல்பு, வல்லமை, நித்தியம் ஆகியவற்றைப் பொறுத்தவரையில் பிதா, குமாரன் ஆவி மூவருமே அவற்றைத் தங்களிடத்தில் முழுமையாகக் கொண்டுள்ளார்கள். இக்குணாதிசயங்களைக் கடவுளின் இறை அம்சங்கள் என்று அழைக்கலாம். இக்குணாதிசயங்களே சிருஷ்டியின் மூலம் வெளிப்படுத்தப்பட்டவை. இதையே பவுல் ரோமர் 1:20ல் விளக்குகிறார். கடவுளில் காணப்படும் இவ்வடிப்படைக் குணாதிசயங்களை பிதா, குமாரன், ஆவி ஆகிய மூவரும் தமக்குள் கொண்டுள்ளார்கள். அம்மூவரும் இவற்றைப் பகுதி பகுதியாக தமக்குள் கொண்டுள்ளார்கள் என்று நாம் எண்ணிவிடக்கூடாது. பிதா முழுமையான தேவனாக இருக்கிறார். அதேபோல், குமாரனும், ஆவியும் தமக்குள் முழுமையான தேவனாக இருக்கிறார்கள். தெய்வீகத்தன்மையில் ஒருவர் மற்றவரைவிட எந்தவிதத்திலும் குறைவானவர்களல்ல. சகல பரிபூரணமும் கடவுளுக்குள் தங்கியிருப்பதாக பவுல் கூறுகிறார் (கொலோ. 1:20, 1:9). இதை திரித்துவ அங்கத்தவர்கள் ஒவ்வொருவரிடத்திலும் காணலாம். சிலர் கிறிஸ்தவர்கள் மூன்று கடவுள்களை வணங்குவதாக விபரம் புரியாமல் பேசுவார்கள். புதிய ஏற்பாடு இரட்சிப்பைக் கடவுள் எவ்வாறு நிறைவேற்றினார் என்று போதிக்கும்போது அதில் பிதா, குமாரன், ஆவி ஆகியோருக்கு உள்ள பங்கைப்பற்றிப் பேசுகிறது. தனது மக்களின் இரட்சிப்பை எவ்வாறு கடவுள் நிறைவேற்றினார் என்பது பற்றிய விளக்கங்களின் மத்தியிலேயே கடவுளைப்பற்றிய விபரங்களும் நமக்குப் புதிய ஏற்பாட்டில் தரப்பட்டுள்ளன. புதிய உடன்படிக்கையில் இரட்சிப்பு பிதாவினால் திட்டமிடப்பட்டு, குமாரனால் நிறைவேற்றப்பட்டு, ஆவியின் மூலமாக அளிக்கப்படுகின்றது என்று வேதம் போதிக்கின்றது. ஆகவே, இரட்சிக்கப்பட்டவர்கள் திரித்துவக் கடவுளிடமிருந்து இரட்சிப்பைப் பெற்றுக் கொள்கிறார்கள். அவர்கள் திரித்துவத்தேவனை அறிக்கையிடுகிறவர்களாக இருக்க வேண்டும். திரித்துவம் என்ற வார்த்தை வேதத்தில் எங்கும் காணப்படவில்லை. ஆனால், இவ்வார்த்தை வேதத்தில் காணப்படாவிட்டாலும் இதுபற்றிய போதனை வேதத்தில் காணப்படுவதாக நமது விசுவாச அறிக்கை (அதிகாரம் 1:6) போதிக்கின்றது. கடவுளின் இரட்சிப்பை நிறைவேற்றும் செயல்களில் இருந்து நாம் அவருள் மூன்று நபர்கள் இருப்பதை அறிந்து கொள்கிறோம். இயேசுவின் திருமுழுக்கைக் குறித்துப் பேசும் வேதப்பகுதி கடவுள் திரித்துவத்தேவன் என்பதை விளக்குகின்றது. (மத். 3:16, 17). மத்தேயு 28:16-20 இல் தரப்பட்டுள்ள சுவிசேஷக் கட்டளை கடவுள் திரித்துவத் தேவன் என்பதைத் தீர்க்கமாகப் போதிக்கின்றது. பவுல் 2 கொரி. 13:14 இல் அளிக்கும் வாழ்த்துக்களைக் திரித்துவத்தேவன் மூலமாக அளிப்பதையும் வாசிக்கலாம்.
ஆதியாகமத்தின் முதல் அதிகாரத்தின் இரண்டாம் வசனம் தேவன் திரித்துவத்தேவன் என்பதை சுட்டிக் காட்டுகின்றது. அத்தோடு அதே பகுதியில் கடவுள் எவ்வாறு ஆதாமையும் ஏவாளையும் உருவாக்கினார் என்று போதிக்கும்போது அங்கே திரித்துவத் தேவனைப்பற்றி வாசிக்கிறோம் (ஆதி. 1:27). இவற்றோடு ஆதி. 11:5-7; யாத்தி. 23:20; சங். 51:11; யோவான் 17 ஆகிய வேதப்பகுதிகளும் இப்போதனையை அளிப்பதை உதாரணத்திற்குச் சுட்டிக்காட்டலாம். ஆகவே, தேவன் ஒருவரே, ஆனால் அவருள் மூன்று நபர்கள் இருக்கிறார்கள் என்ற உண்மையை வேதம் தெளிவாகப் போதிப்பதை நாம் உணர வேண்டும்.
2. திரித்துவத்தேவனின் மூன்று நபர்களின் தனித்தன்மைகள்.
பிதாவானவர் வேறெந்த உயிரினத்திலும் இருந்தும் பெறப்படவில்லை; அவர் எந்தவொரு உயிரினத்தாலும் தோற்றுவிக்கப்படாததோடு, எந்தவொரு உயிரினத்திலும் இருந்தும் தோற்றுவிக்கப்படவுமில்லை. குமாரன் தந்தையிடமிருந்து நித்தியமாய் தோன்றினவராயிருக்கிறார். பரிசுத்த ஆவியானவர், தந்தையிடமிருந்தும், குமாரனிடமிருந்தும் நித்தியமாய் வெளிப்படுகிறவராய் இருக்கிறார்.
இப்பகுதி திரித்துவத்தைப் பற்றிய மிக ஆழமான சத்தியங்களை விளக்குவதாக இருக்கின்றது. சீர்திருத்தவாதிகளின் காலத்துக்கு முன்னால் 325 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் திரித்துவத்தைப் பற்றிய போதனையில் கருத்துச் செலுத்திய சில இறையியலறிஞர்கள் தேவைக்கு மீறிய சில ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்கள். கடவுளின் தோற்றத்தைக் குறித்தும், கிறிஸ்துவின் தோற்றத்தைக் குறித்தும் விளக்கும் முயற்சிகளில் அவர்கள் வேத போதனையை மீறிப்போகக்கூடிய நிலை ஏற்பட்டது. இத்தகைய போக்கு தமக்குள் பின்பு ஏற்படக் கூடாது என்பதற்காகவே நமது மூதாதையர்கள் விசுவாச அறிக்கையில் கடவுளின் தன்மையைக் குறித்த இவ்வார்த்தைகளைக் கவனத்தோடு எழுதி வைத்தார்கள். இதனாலேயே இப்பகுதியில் பிதா வேறெந்த உயிரினத்தாலும் தோற்றுவிக்கப்படவில்லை என்றும், குமாரன் நித்தியமாக தந்தையிடமிருந்து தோன்றியவராக இருக்கிறார் என்றும் விளக்கப்பட்டிருக்கின்றது. இத்தகைய விளக்கங்களினால் ஏற்படும் ஒரு ஆபத்து என்னவெனில் தவறாக சிலர் குமாரனைப் பிதாவிற்கு குறைந்த நிலையிலும், ஆவியைக் குமாரனைவிடக் குறைந்த நிலையிலும் எண்ணப்பார்க்கும் நிலை ஏற்படுகின்றது. ஆனால் நாம் அத்தகைய தவறான எண்ணங்களுக்கு இடமளிக்கக்கூடாது. இப்பகுதியில் பயன்படுத்தப்பட்டிருக்கும் “பெறப்படவில்லை”, “தோற்றுவிக்கப்படவில்லை” ஆகிய வார்த்தைகள் திரித்துவத் தேவர்களுக்கிடையில் காணப்படும் உறவை விளக்கிக் காட்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகள் மட்டுமே. திரித்துவத்தின் மூன்று நபர்களும் எப்போதும் இருந்தவர்கள், இருப்பவர்கள். அவர்கள் தோற்றுவிக்கப்படவில்லை. ஆனால் தன் மக்களுக்கு இரட்சிப்பு அளிப்பதைத் தேவன் எவ்வாறு திட்டமிட்டு செயல்படுத்தினார் என்பதை விளக்கும்போது திரித்துவ அங்கத்தவர்களுக்கு அதில் எத்தகைய பங்கிருந்தது, அதை அவர்கள் எவ்வாறு நிறைவேற்றினார்கள் என்பதைப் போதிக்கும்போதே இத்தகைய விளக்கங்களுக்கு அவசியமேற்பட்டது.
இயேசு பிதாவின் ஒரே பேறானவர் “Only begotten” (யோவான் 1:14, 18; 3:16, 18; 1 யோவான் 4:9) என்று வேதத்தில் வாசிக்கிறோம். இது இயேசுவின் கன்னிப் பிறப்பைப் பற்றிப் போதிக்கவில்லை. இது பிதாவுடன் அவருக்கு இருந்த உறவை மட்டுமே விளக்குகின்றது. நித்திய தேவனில் குமாரன் மட்டுமே கடவுளின் ஒரே பேறானவர். இத்தகைய உறவே பிதாவிற்கும் குமாரனுக்குமிடையில் இருந்தது. இத்தகைய உறவை அவர்கள் தம் மக்களுக்கு இரட்சிப்பை நிறைவேற்றித்தரும் செயலுக்காக ஏற்றுக்கொண்டார்கள். அவர் இவ்வுலகிற்கு வருவதற்கு முன்பும் ஒரே பேறானவராக இருந்தார். ஆகவே, நாம் தவறாக இப்பதம் இயேசுவின் பிறப்பைப்பற்றிப் பேசுவதாக எண்ணிவிடக்கூடாது. இப்பதத்தை இயேசுவின் பிறப்பைக் குறித்துப் போதிக்கும் பதமாக எண்ணி விளக்கமளிக்கவும் கூடாது. இது வேதத்தின் திரித்துவப் போதனையையே சீர்குலைத்துவிடும்.
இதேபோல் ஆவி, தந்தையிடமிருந்தும், குமாரனிடமிருந்தும் வெளிப்படுகிறவராய் இருக்கிறார் என்று வாசிக்கிறோம் (யோவான் 15:26). இது கிறிஸ்து தன் மக்களுக்குப் பெற்றுத் தந்துள்ள இரட்சிப்பை அவர்களுக்கு அளிக்க புதிய ஏற்பாட்டில் இவ்வுலகில் தோன்றும் ஆவியின் வருகையைக் குறிக்கிறது. கிறிஸ்துவைக் குறித்து சாட்சியமளிக்க ஆவி வந்தார். ஆவியானவரும் ஏனைய திரித்துவ அங்கத்தவர்களைப் போல எப்போதும் இருந்தவராக இருந்தபோதும் கிறிஸ்துவை நமக்கு வெளிப்படுத்த இவ்வுலகிற்கு வந்தவராக வேதம் விளக்குகிறது. இயேசு, ஆவியானவரை அனுப்புவேன் என்று தன் சீடர்களிடத்தில் சொன்னார். அதன்படி ஆவியானவர் பெந்தகொஸ்தே நாளில் வந்ததை அப்போஸ்தலர் நடபடிகள் அதிகாரம் 2 எடுத்துக் கூறுகிறது.
பிதாவைப்பற்றிப் பேசும் விசுவாச அறிக்கை அவர் பெறப்படாதவர் என்றும், தோற்றமில்லாதவர் என்றும் விளக்குகிறது. இது திரித்துவ நபர்களில் ஒருவரான பிதாவின் தனித்தன்மையை விளக்குவதற்காகவும் மற்ற அங்கத்தவர்களில் இருந்து பிரித்துக் காட்டுவதற்காகவும் மட்டுமே கூறப்பட்டுள்ளதே தவிர பிதாவை மற்றவர்களைவிட உயர்த்திக்காட்டுவதற்காகவோ அல்லது பெருமைப்படுத்துவதற்காகவோ அல்ல. பிதாவும், குமாரன், ஆவியைப்போலத் தனித்தன்மைகளைக் கொண்டிருந்தார் என்பதை மட்டுமே இது விளக்குகிறது. அதேவேளை மூவரும் ஒருவரே. ஆகவே, இம்மூன்று திரித்துவ அங்கத்தவர்களுக்கிடையில் காணப்படும் அன்பின் உறவை வேதம் போதிக்கும்விதமாக மட்டுமே நாம் புரிந்து கொள்ள முயல வேண்டும். எந்தவிதத்திலும் அவர்களை நாம் மூன்று கடவுள்களாக எண்ணிவிடக்கூடாது. ஒருவரை மற்றவரைவிடத் தரத்திலும் தன்மையிலும் குறைத்துப் பார்க்கக்கூடாது. அதேநேரம், மூவரும் ஒரே தேவன் என்ற ஆழமான சத்தியத்தையும் உணர்ந்து ஒரே தேவனை நாம் விசுவாசித்து ஆராதிக்க வேண்டும்.
ஆ. திரித்துவக்கோட்பாடுபற்றிய விளக்கம்
மூவருமே தொடக்கமற்றவர்களாகவும் அதேவேளை எல்லையற்ற ஒரே கடவுளாயும் இருப்பதால் அவர்களுடைய இயற்கைத்தன்மையையோ, உள்ளியல்பையோ பிரித்துப் பார்க்கக்கூடாது. ஆனாலும், அவர்களுக்கிடையிலான தனிப்பட்ட உறவைக் குறித்தும் (அவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கும் குடும்ப உறவு), அவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கும் பல்வகையான உறவுகள் குறித்தும் வேதத்தில் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளது.
இந்தப்பகுதியை வாசிக்கும்போது இது ஏற்கனவே போதிக்கப்பட்ட உண்மைகளைப்பற்றி மறுபடியும் விளக்குவதுபோல் தோன்றும். ஆனால், உண்மையில் இவ்வாக்கியங்கள் திரித்துவத்தைப்பற்றிய மேலும் ஒரு உண்மையைப் போதிக்கின்றன. இதை எழுதியவர்கள் அக்காலத்தில் அத்தனேசியஸ், அகஸ்தீன், ஜோண் கல்வின் ஆகியோரின் போதனைகளை மனதில் கொண்டு கவனத்தோடு இவற்றை எழுதி வைத்துள்ளார்கள். அத்தோடு திரித்துவக் கடவுளின் தெய்வீகத்தன்மைக்கு எந்த ஊறும் நேர்ந்துவிடாதபடி தமது விளக்கங்களைத் தருவதிலும் கவனமெடுத்துள்ளார்கள். இப்பகுதி முக்கியமாக திரித்துவப்போதனை சம்பந்தமான பணிவடக்கக் கோட்பாடு Subordinationism என்ற இறையியல் போதனையை விளக்க முயல்கிறது. அதாவது, திரித்துவ அங்கத்தவர்களிடம் முதலாமவருக்கும் இரண்டாம், மூன்றாம் அங்கத்தவர்களுக்கும் இடையில் உயர்வு தாழ்வு உண்டா என்பதைப் பற்றி இப்போதனை ஆராய்கிறது. மூன்றுவிதமான பணிவடக்கக் கோட்பாடுகளை நாம் இங்கு ஆராய்வோம்.
1. முதலாவதாக, திரித்துவ அங்கத்தவர்கள் படைப்பின்போதும், மீட்பின் செயல்களை நிறைவேற்றுதலிலும் தங்களுக்கிடையில் வெவ்வேறான பணிகளை மேற்கொண்டார்கள் என்று பார்க்கிறோம். படைப்பின்போது பிதா தனது குமாரனாகிய வார்த்தையின் மூலம் ஆவியின் வல்லமையால் அனைத்தையும் படைத்தார் என்று பார்க்கிறோம். அங்கே அம்மூவரிடத்திலும் அவர்களுடைய செயல்களைப் பொருத்தவரையில் பணிவடக்கம் காணப்பட்டது. அத்தகைய பிரிவை அவர்கள் தமக்குள் ஏற்றுக்கொண்டிருந்தார்கள். இதையே மீட்பிலும் பார்க்கிறோம். பிதா திட்டமிட குமாரன் அதை நிறைவேற்ற, ஆவி அதனை மக்களுக்கு அளிக்கிறார். இத்தகைய பணிவடக்கத்தை திரித்துவ அங்கத்தவர்கள் தமக்குள் ஏற்றுக்கொண்டிருந்ததை வேதம் வெளிப்படுத்துகிறது. ஆங்கிலத்தில் இதனை Economic subordination என்பர்.
2. இரண்டாவதாக, சிலர் திரித்துவ அங்கத்தவர்கள் மத்தியில் ஒருவித செயலளவிலான உயர்வு தாழ்வு இருந்ததாகக் கருதுவர். நாம் ஏற்கனவே அவர்களுடைய தன்மை, உள்ளியல்பு ஆகியவற்றைப் பொறுத்தவரையில் அவர்களிடத்தில் எந்தவித உயர்வு தாழ்வும் இல்லை என்று கூறியுள்ளோம். இங்கே நாம் பார்க்கும் உயர்வு தாழ்வு அவர்களுடைய உள்ளியல்பிலோ, தன்மையிலோ இல்லாமல் அவர்களுடைய செயல்களைப் பொறுத்ததாக இருக்கிறது. உதாரணமாக பிதா என்ற வார்த்தையையும் குமாரன் என்பதையும் எடுத்துக்கொள்வோம். இவ்வார்த்தைகளுக்கிடையில் உள்ள வேறுபாடு புரியாதவர்கள் இருக்க முடியாது. பிதா என்ற வார்த்தை குமாரனைவிடத் தகுதியில் உயர்ந்தது. ஆகவே, இவ்வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துக்கொண்டிருப்பதன் மூலம் திரித்துவ அங்கத்தவர்கள் தமக்குள் இத்தகைய பணிவடக்கத்தை ஏற்றுக்கொண்டிருப்பதாக இவர்கள் கூறுகிறார்கள். ஆனால், இப்போதனையை நாம் எந்தவிதத்திலும் திரித்துவ அங்கத்தவர்களின் தெய்வீக அம்சத்தில் காணப்படும் பிரிவாகவோ, உயர்வு தாழ்வாகவோ கருதிவிடக்கூடாது. இப்போதனையை ஆங்கிலத்தில் Hypostatic subordination என்பார்கள். ஆள் அல்லது நபர் என்ற வார்த்தையைக் குறிக்கும் கிரேக்க வார்த்தையில் இருந்து இந்த ஆங்கில வார்த்தை பிறந்தது.
3. மூன்றாவதாக சிலர் திரித்துவத்தில் ஓர் கட்டாயப் பணிவடக்கம் காணப்படுவதாகப் போதிப்பர். அதாவது குமாரனும், ஆவியும் பிதாவைவிடத் தாழ்ந்தவர்கள் என்பது இதற்குப் பொருள். இப்போதனையை நாம் முற்றாக நிராகரிக்க வேண்டும். இதனை Essential subordination என்பர்.
இ. திரித்துவப்போதனை கற்றுத் தரும் பாடம்.
திரித்துவப் போதனை கிறிஸ்தவத்தின் அடிப்படைப் போதனையாகும். இப்போதனை கடவுளோடு நமக்கிருக்கும் ஐக்கியத்திற்கும் அடிப்படையானதாகும். திரித்துவத் தேவனே நம்மை இரட்சிக்கிறார். ஆவியின் வல்லமையால் கிறிஸ்துவிடம் இருந்து இரட்சிப்பை அடையும் நாம் ஆவியினால் பிதாவோடும், குமாரனோடும் ஐக்கியத்தில் வருகிறோம். ஆகவே, கர்த்தரோடுள்ள நமது ஐக்கியம் திரித்துவ ஐக்கியம். நமது ஆராதனையும் திரித்துவ ஆராதனையாக இருக்கிறது. திரித்துவ அங்கத்தவர்களுக்கிடையில் இருக்கும் உறவு தெரியாமல் நாம் கர்த்தரை ஒருபோதும் ஆராதிக்க முடியாது. கிறிஸ்தவர்கள் திரித்துவத்தைப்பற்றிய தெளிவான போதனைகளைப் பெற்றுக்கொண்டு திரித்துவத்தேவனை எப்போதும் மகிமைப்படுத்த வேண்டும்.