அறியாமல் பிசாசுகளை உபசரிப்பதா? – மொரிஸ் ‍ரொபட்ஸ்

தவறைத் தவறு என்று கண்டிக்காமல் எந்தவொரு கிறிஸ்தவனும் சத்தியத்தை எடுத்துக் கூற முயற்சிக்கக் கூடாது. ஒரு காரியத்தை சத்தியமானது என்று நாம் எடுத்துக் கூறும்போது அதற்கு எதிரானதைப் போலி என்று அறிவிக்கிறோம். ஒரு காரியத்தை உண்மையானது என்று எடுத்துக் கூறும்போது அதற்கு எதிரானதைக் கண்டிக்காமல் அது சரியானதாகவும் இருக்கலாம், தவறானதாகவும் இருக்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்த முயல்வது சத்தியத்தைத் தட்டிக் கழிக்க முயல்வதற்கு ஒப்பானதாகும். இப்படிச் செய்வது சத்தியத்தோடு விளையாடும் செயலாகும். சத்தியம் உயர்வானது. நமது மனதையும், மனச்சாட்சியையும் நாம் சத்தியத்தால் நிரப்பிக் கொள்ள வேண்டும். சத்தியம் கர்த்தருக்கு சொந்தமானதால் அது எப்போதுமே பரிசுத்தமானது.

இன்று கிறிஸ்தவ திருச்சபையின் பெரும்பகுதியை ஒரு போலித்தனமான முகத்தாட்சண்யம் காட்டும் வழக்கம் பற்றிக் கொண்டிருக்கிறது. சுவிசேஷ இயக்கப் பிரசங்கிகளும், இறையிலாளர்களும் வேதத்தின் போதனைகளை எடுத்துக் கூறத் தயாராக இ‍ருந்தபோதும் அதற்கு எதிரானவற்றைக் கண்டித்துக்கூறத் தயங்குகிறார்கள்.1 இதனால் விசுவாசிகள் மத்தியில் எது ‍உண்மை எது பொய் என்று தெரியாத ஒரு குழப்பமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இக்குழப்பத்திற்குக் காரணமென்ன என்பதை நாம் ஆராயத் தான் வேண்டும். நமது விசுவாசத்தோடும், கிறிஸ்தவ‍த்தோடும் தொடர்புடைய எந்தக் காரியத்தையும் தராசில் வைத்து ஆராய்வதற்குப் பலரும் இன்று விருப்பமற்றிருப்பது தெரிகின்றது. அதாவது சத்தியம் எது என்று போதித்தால் மட்டும் போதும் ஆனால் அதற்கு முரணான எதையும் போலி என்று கூறிவிடக் கூடாது என்ற மனப்பான்மை இருப்பதாகத் தெரிகின்றது. இப்படி நடந்து கொள்வதால் எல்லாமே சத்தியம், எதுவுமே போலி இல்லை என்ற சூழ்நிலையைத்தான் நாம் ஏற்படுத்துகிறோம். இன்னுமொருவிதத்தில் கூறினால் நாம் எதையும் போலிப்போதனை என்று கூறத்தயங்கி முகத்தாட்சண்யம் காட்டுகிறோம்.

இத்தகைய ஒரு சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு, கிறிஸ்துவும் அவரது அப்போஸ்தலர்களும் தாம் வாழ்ந்த காலத்தில் தவறைத் தவறு என்று ஆணித்தரமாக அடித்துக்கூறியிருப்பதை புதிய ஏற்பாட்டில் வாசித்துப் பார்க்கும்போது பெரும் புல்லரிப்பு ஏற்படுகின்றது.

மலைப்பிரசங்கத்தின் ஆரம்பத்திலேயே இயேசு, “வேதபாரகர், பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோக இராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்கிறேன்” (மத்தேயு 5:20) என்று எல்லோரையும் பார்த்துக் கூறினார். பரிசேயர்களை மட்டும் குறிப்பிட்டு கிறிஸ்து ஏன் இவ்வாறு கூற வேண்டும்? அவர்களைக் குத்திக்காட்டி மனவருத்தத்தை ஏற்படுத்தாமல் தான் சொல்ல வந்ததை வேறுவிதமாகக் கூறியிருக்கலாமே. ஆனால், தவறான விசுவாசமற்ற வாழ்க்கை எது என்பதை எடுத்துக் காட்ட இயேசு பரிசேயர்களை உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டார். அவர் எது சரி என்பதை மட்டும் எடுத்துக் காட்டாமல் எது போலித்தனமானது என்பதையும் வெளிப்படுத்தினார். பரிசேய வாழ்க்கை போலியானது என்று கூறி அதை உயரத்தூக்கி ஒளி விளக்கில் எல்லோரும் பார்க்குமாறு காட்டி அனைவரையும் இயேசு எச்சரித்தார்.

இதேவிதமாக மத்தேயு 15 இல் பரிசேயப் பாரம்பரியத்திற்கு எதிராக வேதத்தின் அதிகாரத்தை விளக்கும் இயேசு, போலிப்போதனையைப் பின்வருமாறு தாக்குகின்றார்: “உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கி வருகிறீர்கள். மாயக்காரரே, உங்களைக்குறித்து ஏசாயா தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறார்” என்று கூறினார். இயேசு பரிசேயர்களை ஓரளவுக்குப் பாராட்டி இருந்திருக்கலாம். அவர்கள் வேதத்தை மதித்து அதைக் கவனமாகப் படித்தார்கள். ஆனால், அவர்கள் வேதத்தோடு பராம்பரியத்தை இ‍ணைத்து வேதவாழ்க்கையைப் பாழாக்கினார்கள். நமது ஆண்டவர் அவர்களை இங்கோ அல்லது வேறு எங்குமோ பாராட்டவில்லை. பாரம்பரியத்தின் அடிப்படையில் சத்தியத்திற்கு விளக்கம் கொடுக்க முயன்ற அவர்களுடைய போதனை பேராபத்தானதாக இருந்ததால் அதையும், அவர்களையும் கடுமையாகக் கண்டித்துத் திருத்துவது அவசியம் என்று இயேசு கருதினார். இவ்வாறு செய்ய மறுப்பது தேவ மக்களைக் குழப்பத்துக்குள்ளாக்கும் என்று இயேசு சுட்டிக் காட்டுகிறார்.

பரிசேயர்கள் என்ன நினைப்பார்களோ? என்று இயேசுவின் சீடர்கள் எப்போதும் தயங்கினார்கள். வேதஞானமுள்ள பரிசேயர்களின் முகங்களை சீடர்களுக்குப் பார்க்கக்கூடியதாக இருந்தது. இயேசு பரிசேயர்களைப் பார்த்து, மாயக்காரர்களே! என்று அழைத்தது பரிசேயர்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்திவிட்டது என்பது சீடர்களுக்குத் தெரிந்தது. பேதுருவும், யோவானும் மற்றவர்களும் இயேசுவைச் சூழ்ந்து கொண்டு. “பரிசேயர் இந்த வசனத்தைக் கேட்டு இடறலடைந்தார்கள் என்று அறியீரா?” என்றார்கள் (மத்தேயு 15:12). இயேசு தாக்கியதைப் போல் சீஷர்கள் ஒருபோதும் பரிசேயர்களைத் தாக்கிப் பேசியிருக்க மாட்டார்கள். இய‍ேசு இப்படி வெளிப்படையாகத் தாக்கிப் பேசியது பரிசேயர்களின் இதயத்தைக் காயப்படுத்திவிட்ட‍தே என்று சீஷர்கள் வருத்தப்பட்டார்கள்.

இயேசு இந்நேரத்தில் எப்படி நடந்து கொண்டார் என்பதை நாம் ஊன்றிக்கவனிக்க வேண்டியது அவசியம். முதலில் அவர் சீடர்கள் நடந்து கொண்ட விதத்தைப் பின்வருமாறு கண்டித்தார்: “என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடே பிடுங்கப்படும். அவர்களை விட்டுவிடுங்கள், அவர்கள் குருடருக்கு வழி காட்டுகிற குருடராக இருக்கிறார்கள்; குருடனுக்கு குருடன் வழி காட்டினால் இருவரும் குழியில் விழுவார்களே” என்றார். இதன் மூலம் இயேசு, போலிப்போதனை அளிப்பவர்கள் தேவனுடைய தோட்டத்தில் காணப்படும் களைகள் என்று வர்ணித்தார். அவர்களைப் பரமபிதா நடாததால் அவர்கள் தோட்டத்தில் இருந்து பிடுங்கி எறியப்பட வேண்டியவர்கள். அத்தோடு, இயேசு அவர்களை குருடர்களுக்கு வழி காட்டும் குருடர்களோடு ஒப்பிடுகிறார். ஏனெனில், அவர்களால் தங்களுக்கோ அல்லது அவர்கள் வழி காட்ட முனையும் குருடர்களுக்கோ எந்த நன்மையுமில்லை.

போலிப்போதனையளிப்பவர்கள் யாராக இருந்தாலும், எவ்வளவு தூரம் படித்தவர்களாக இருந்தாலும் மனிதர்களுடைய ஆத்துமாவுக்கு அவர்களால் ஆபத்தே ஏற்படும். அவர்களுக்கு சபையில் இடமளிக்கக்கூடாது. அவர்களை விட்டுவிடுங்கள் என்று இயேசு எச்சரிக்கிறார் (வசனம் 14). அவர்களுக்கும் தேவனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர்கள் கிறிஸ்துவின் மக்களின் போதகர்களாக இருக்க முடியாது. அவர்கள் மனித பாரம்பரியங்களைத் தேவனுடைய வார்த்தையோடு இணைக்க முயல்வதால் கர்த்தருடைய பெயரில் போதிப்பதற்கு அவர்களுக்கு உரிமை இல்லை.

மேலே நாம் பார்த்த வேதப்பகுதி ஆத்துமாக்களுக்கு அநேக போதனைகளை அளிக்கின்றது. சத்தியத்தை மட்டும் போதிக்கும் போதகர்களை நாம் வரவேற்று அதிக மரியாதை அளிப்போம். அதிக வரங்களைக் கொண்டிராதவர்களுக்கு நாம் மரியாதை அளிப்போம்.வேதத்திற்கு மதிப்புக்கொடுத்து சத்தியத்தை மட்டும் போதிப்பவர்களாக இருந்தால் நாம் அவர்களுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும். ஆனால், அவர்கள் தவறானதைப் போதித்து, மனித பாரம்பரியத்தை வேதத்தோடு இ‍ணைத்தோ அல்லது வேதம் போதிப்பவற்றிற்கு எதிரானவற்றைப் போதித்தாலோ அவர்களை நமது வீட்டுக்குள்ளும், சபைக்குள்ளும் நாம் அனுமதிக்கக் கூடாது. அவர்கள் தேவனால் அனுப்பப்படவில்லை. ஆத்துமாக்கள் பரலோகம் போகும்படி அவர்களால் வழி நடத்த முடியாது. அவர்களும், அவர்களால் வழி நடத்தப்படுபவர்களும் நரகத்திற்கே போவார்கள்.

நான் சொல்வதெல்லாம் இன்று கடுமையான போதனைகளாகத் தெரியும். எல்லோரையும் நேசிக்க வேண்டும் என்று பேசியும், முகத்தாட்சண்யம் பார்த்தும் பழகிப்போன நமக்கு எதையும் ஆணித்தரமாக எதிர்த்துப் பேசுவது கஷ்டமாக இருக்கின்றது. “அந்த ஐயா, கிறிஸ்துவின் கன்னிப் பிறப்பையும், உயிர்த்தெழுதலையும் நம்புவதில்லை ஆனால், ரொம்ப நல்ல மனிதர்” என்று கூறுவது நமக்கு வழக்கமாகிவிட்டது. “அந்தப் போதகர் கொஞ்சம் தாராளவாதக் கோட்பாட்டைப் பின்பற்றுபவர் ஆனால், அவர் பேச்சு கேட்பதற்கு நன்றாயிருக்கும்” என்று நாக்கூசாமல் சொல்கிறோம். “அவர் இப்போது கத்தோலிக்க மதத்தில் ‍சேர்ந்து விட்டார் ஆனால், அவர் எழுதும் நூல்களால் நல்ல பயனுண்டு” என்று பேசிப் பேசி நமக்குப் பழகிவிட்டது.

இந்தமாதிரியான அசட்டுத்தனமான பேச்சையெல்லாம் புதிய ஏற்பாட்டில் நாம் பார்க்கும் கிறிஸ்துவின் நடத்தை, பேச்சு என்பவற்றின் அடிப்படையில் ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஒரு மனிதன் எத்தனை பெரும் படிப்புப் படித்தவனாக இருந்தபோதும் அவனது போதனைகள் வேதத்திற்கு முரணானதாக இருந்தபோது நமது இரட்சகர் அம்மனிதனை எப்போதாவது பாராட்டிப் பேசி இருக்கிறாரா? ஒரு போதகனோ அல்லது இறையியல் கல்லூரி விரிவுரையாளனோ கிறிஸ்துவின் பிறப்பைக் குறித்து சந்தேகமெழுப்பினாலோ, அவருடைய உயிர்த்தெழுதலை மறுத்துப் பேசினாலோ, அல்லது வேதத்தின் எந்தவொரு முக்கிய போதனைக்கு எதிரான போதனையை அளித்தாலோ அம்மனிதனுடைய ஊழியத்தை நாம் எப்படி ஆதரிக்க முடியும்? அத்தகைய மனிதர்களை குருடர்களுக்கு வழிகாட்டும் குருட்டு வழிகாட்டிகளாக அல்லவா நாம் கருத வேண்டும்.

சத்தியத்தின் மேல் கிறிஸ்துவுக்கு இருந்த வைராக்கியத்தையும், போலிப்போதனைகளை அவர் வெளிப்படுத்திய விதத்தையும் ஏனைய எல்லா நற்செய்திப் பகுதிகளையும் விட மத்தேயு 23 அருமையாக எடுத்துக் காட்டுகின்றது. குழப்பமான இன்றைய ஆத்மீக சூழ்நிலையில் போதகர்களும், போதக ஊழியத்திற்கு தம்மைத் தயார் செய்து கொள்ளுகிறவர்களும், இறையியல் கல்லூரியில் போதிப்பவர்களும் இப்பகுதியை ஆழமாகப்படித்து, மனப்பாடம் செய்து அதன்படி நடந்து கொள்ளுவது அவசியம். கிறிஸ்துவுக்கு நம் மெல்லோரையும்விட மனிதர்களின் இருதயத்தில் உள்ள இரகசியங்களை ஆராய்ந்து அறியும் வல்லமை இருந்தது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இருந்தபோதும், போலித்தனமான அனைத்தையும் ஒதுக்குவதோடு, அவற்றை மற்றவர்களும் அறிந்து தம்மைக் காத்துக் கொள்ளும்படி வெளிப்படுத்த வேண்டியது அவசியம் என்பதை இப்பகுதி உதாரணமாக இருந்து போதிக்கிறது.

அதிகம் கவனம் செலுத்திப் படிக்கப்படாத இந்த வேதப்பகுதியில் கிறிஸ்து அவ்வளவு தூரம் ஆக்ரோஷமாகப் பேசுவதற்குக் காரணமாக அமைந்தது என்ன? என்று பார்ப்போம். நேர்மையின்மை, நடிப்பு, ஆத்மீகக் காரியங்களில் அலட்சியம், ஆத்மீகக் காரியங்களில் கோமாளித்தனமாக நடந்துகொள்ளுதல், மனிதர்களின் பாராட்டை நாடி அலைதல், சுயநல நோக்கு, ஒரே சத்தியத்தில் தரித்து நிற்காதிருத்தல், சத்தியத்தின் அடிப்படையில் அமைந்த கிறிஸ்தவத்திற்கு எதிராக நடந்து, கர்த்தரின் குழந்தைகளை துன்புறுத்துதல் போன்ற பெரும் அவலங்களை இப்பகுதி வெளிப்படுத்துகிறது. இப்பகுதியில் கிறிஸ்து வெளிப்படுத்தும் பரிசேயர்களையும், சதுசேயர்களையும்போல நடந்து கொள்ளும் போதகர்களையும், பிரசங்கிகளையும் கொண்ட நாடுகள் சபிக்கப்படட்டும்! பெரும் படிப்பையும் சபைப் பதவியையும் கொண்டிருந்தபோதும் தங்களுடைய சொந்த நலன்களில் மட்டும் நாட்டம் செலுத்தி ஆத்துமாக்களின் நலனில் அக்கறை கொள்ளாத போதகர்களையும், பிரசங்கிகளையும் கொண்டிருக்கும் சந்ததி சபிக்கப்படட்டும்! பரிசேயர்களும், சதுசேயர்களும் பேசுவதைப் போல பேசி நடிக்கும் போதகர்களும், பிரசங்கிகளும் இருக்கும் சபைகளை மட்டும் நாடிப்போகும் ஆத்துமாக்கள் சபிக்கப்படட்டும்! காரணமில்லாமலா கிறிஸ்து, “உங்கள் வீடு உங்களுக்குப் பாழக்கி விடப்படும்” என்று கூறினார் (23:38). போலித்தனமாக நடந்துகொள்ளும் பிரசங்கிகளுக்கு இடம் கொடுக்கும் நாடுகளில் மெய்யான கிறிஸ்தவம் இருக்க முடியாது. அத்தயை செயல் கர்த்தரின் கோபத்தைச் சம்பாதித்துக் கொள்ளவே வழிவகுக்கும். இதையே யூதர்கள் 70ம் ஆண்டில் அனுபவித்தனர். அன்றுமுதல் பல நாடுகளும் அத்தகைய சாபத்தை அனுபவித்துள்ளன.

போலிப்போதனைகளையும், போலித்தனமாக நடந்துகொள்பவர்களையும் கிறிஸ்து ‍வெறுத்தொதுக்கியதைப் போலவே அப்போஸ்தலர்களும் நடந்துகொண்டனர். அப்போஸ்தலனான பவுல் அத்தகையோரை, கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள், கிறிஸ்துவினுடைய அப்போஸ்தல‍ரின் வேஷத்‍தைத் தரித்துக் கொண்டவர்கள் என்று வர்ணித்துள்ளார் (2 கொரிந்தியர் 11:13). மேலும், பவுல் அவர்களை சாத்தானின் ஊழியக்காரர்கள் என்றும், அவர்கள் முடிவு அவர்களுடைய கிரியைகளுக்குத் தக்கதாயிருக்கும் என்றும் கூறுகிறார் (23:15). அதாவது, அவர்கள் நரகத்தில் தள்ளப்படுவார்கள் என்று இதற்குப் பொருள். பவுல் போலிப் போதகர்களிடம் கொரிந்தியர்கள் அசமந்தமாக நடந்து கொள்வதைப் பார்த்து, “நீங்கள் புத்தியுள்ளவர்களாயிருந்து புத்தியில்லாதவர்களைச் சந்தோசமாய்ச் சகிக்கிறீர்களே” என்று கண்டிக்கிறார். மோசமான போதகர்களும், பிரசங்கிகளும் புத்தியில்லாதவர்கள். அத்தகையோரின்‍ பேச்சைக் கேட்டு சகித்துக் கொண்டிருப்பவர்கள் புத்தியில்லாதவர்களாயிருப்பதோடு சிந்திக்கும் பக்குவத்தையும் இழந்து நிற்கிறார்கள். போலிப் போதகர்களை எவ்வளவு தூரம் மரத்துப் போய்க் கிறிஸ்தவர்கள் சகித்துக் கொள்ளப் பழகி இருக்கிறார்கள் என்பதைப் பவுல் பின்வருமாறு வர்ணிக்கிறார்: “ஒருவன் உங்களைச் சிறையாக்கினாலும், ஒருவன் உங்களைப் பட்சித்தாலும், ஒருவன் உங்களைக் கைவசப்படுத்தினாலும், ஒருவன் தன்னை உயர்த்தினாலும், ஒருவன் உங்களை முகத்தில் அறைந்தாலும் சகித்திருக்கிறீர்களே” என்கிறார்.

வேதத்திற்கு எதிரான பாரம்பரியங்களுக்கு நம்மை அடிமைப்படுத்தியும், வேதத்தை நாம் வாசித்துப் புரிந்துகொண்டு கர்த்தருக்கு மட்டுமே அடிபணியும் நமது சுதந்திரத்தைப் பறித்தும் நம்மை முகத்தில் அறையும் மனிதர்களுக்கு நாம் முகத்தாட்சண்யம் காட்டுவது எந்தவிதத்தில் அன்பு காட்டுவதாகும்? இத்தகைய கொடுமைகளுக்கு எதிராக எழுந்து நிற்பதை விட்டுவிட்டு அநேகர் வாளாவிருந்து விடுகிறார்கள். ஒருவித எதிர்ப்பும் காட்டாமல் இரகசியமாக இத்துன்புறுத்தல்களுக்கு தம்மை ஒப்புக் கொடுக்கிறார்கள்.

கேடான மனிதர்களை அவர்களுக்குப் பொருத்தமான பெயரில் அழைக்கும் அப்போஸ்தலரின் தைரியத்தை நாம் புதிய ஏற்பாடெங்கும் பார்க்கலாம். சுவிசேஷத்திற்கு விரோதமானதொரு சுவிசேஷத்தைப் போதிப்பவர்களை சபிக்கப்பட்டவர்களாயிருப்பார்கள் என்று பவுல் கூறுகிறார் (கலாத்தியர் 1:8, 9). அவர்களுடைய போலித்தனத்தை மட்டும் நாம் சபிக்க வேண்டும் என்று பவுல் கூறவில்லை. அவர்களையே நாம் சபிக்க வேண்டும் (அவன் சபிக்கப்பட்டவனாயிருப்பான்) என்று பவுல் கூறுகிறார். போலிப்போதனைகள் நம் மத்தியில் டெலிபோன் வயர்கள் மூலம் வருவதில்லை. அதை போதிக்கும் மனிதர்களின் இருதயத்தில் இருந்தும் வாயிலிருந்தும் வருகின்றன. அவற்றைப் போதிப்பவர்கள் பிசப், பெருமதிப்புக்குரியவர், போதகர், பேராசிரியர் என்ற எத்தனை பெயர்களைச் சூட்டிக் கொண்டிருந்தாலும் சுவிசேஷத்திற்கு எதிரான போதனையை அளித்தால் அவர்களைப் பாராட்டும் சுதந்திரம் நமக்கில்லை. அவர்களை சபிக்கப்பட்டவர்கள் என்று கூறுவதே நமது கடமை. அப்படிச் செய்யாவிட்டால் அப்போஸ்தலன் பவுலுக்கு எதிராக நாம் நடந்துகொள்கிறோம்.

கிறிஸ்துவும் நமக்கு உதாரணமாக இருந்து, தவறு செய்த பேதுருவை நோக்கி, பின்னால் போ சாத்தானே என்று கூறினார் (மத்தேயு 16:23). கிறிஸ்து தாம் செய்ய வந்த பணியில் இருந்து அவரைத் திருப்பப் பேதுரு செய்த காரியம் சுவிசேஷத்தை அழித்து மனித வர்க்கத்தையே தொலைக்கும் செயலாகும். ஆத்துமாக்களின் மேல் இருந்த அன்பே உண்மையும், நேர்மையும் கொண்ட கிறிஸ்துவைத் தன்னுடைய சீடனான பேதுருவையே பரிசுத்தமான கோபத்தோடு கண்டிக்க வைத்தது.

இவ்வனுபத்தால் நல்லதொரு பாடத்தைப் படித்த பேதுரு பின்பு போலிப்போதனைகளுக்கும், நேர்மையற்ற செயல்களுக்கும் எதிராகப் பேசத் தவறவில்லை. போலிப்போதனைகளுக்கு இடம் கொடுத்து போலிப் போதகர்களுக்கு பாராட்டு வழங்குபவர்கள் பேதுரு எழுதிய இரண்டாம் நிருபத்தின் இரண்டாம் அதிகாரத்தை ஒரு முறை வாசித்துப் பார்க்க வேண்டும். இவ்வதிகாரம் கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கும், கள்ளப் போதகர்களுக்கும் எதிராக எழுதப்பட்டது (2:1). அவர்கள் வேதத்திற்கு முறையான விளக்கத்தைக் கொடுக்க முனையாமல் கேட்டுக்கேதுவான வேதப் புரட்டுக்களைத் தந்திரமாய் நுழைக்கப் பார்ப்பார்கள் (2:1). அவர்கள் கெட்ட நடத்தையுடையவர்களாயிருப்பார்கள் (2:2). அவர்கள் தந்திரமான வார்த்தைகளைப் பேசி (2:3), ஆத்துமாக்களைத் தங்களுக்கு ஆதாயப்படுத்திக் கொள்ளுவார்கள். பூர்வ காலமுதல் அவர்களுக்காக விதிக்கப்பட்ட ஆக்கினை அயர்ந்திராது, அவர்களுடைய அழிவு உறங்காது (2:3). கறைகளும், இச்சைகளுமாய் இருந்து அவர்கள் தங்கள் வஞ்சனைகளில் உல்லாசமாய் வாழ்பவர்கள் (2:13). உறுதியில்லாத ஆத்துமாக்களை அவர்கள் தந்திரமாகப் பிடித்துக்கொள்வார்கள் (2:14). அவர்கள் சாபத்தின் பிள்ளைகளும், பிலேயாமைப் போன்றவர்களுமாவர் (2:14).

அவர்களுடைய கேடான செயல்களை வர்ணிக்க வார்த்தைகள் போதாது. இவர்கள் தண்ணீரில்லாத கிணறுகளும், சுழல் காற்றினால் அடியுண்டோடுகிற மேகங்களுமாயுமிருக்கிறார்கள்; என்றென்றைக்குமுள்ள காரிருளே இவர்களுக்கு வைக்கப்பட்டிருக்கிறது (2:17). இக்கள்ளத்தீர்க்கதரிசிகளும், போதகர்களும் நாக்கில் இனிப்போடு பேசக்கூடியவர்கள், ஆனால் அவர்களுடைய வார்த்தைகள் விஷத்தையே கக்கும். அவர்கள் “அகந்தையோடு” பேசுவார்கள் ஆனால் அவர்களுடைய பிரசங்கம் ‍வெறும் “வீண் வார்த்தைகளே” (2:18).

இத்தகைய ஆணித்தரமான கண்டித்துப் பேசும் பேச்சு முதலாம் நூற்றாண்டுக்கு மட்டும் சொந்தமானதல்ல. போலிப்போதனைகளையும், கள்ளப் போதகர்களையும் வெளிப்படுத்தும் கடமையில் நமக்குத் துணை புரிவதற்காக இத்தகைய பேச்சை பரிசுத்த ஆவியானவரே வேதத்தில் எழுத்தில் தந்திருக்கிறார். இத்தகைய வெளிப்படையான பேச்சு இன்று நம் மத்தியில் இல்லாமல் இருப்பதற்குக் காரணம், ஒன்று போலிப்போதனைகளும், போலிப்போதகர்களும் நம்மத்தியில் இல்லாமல் இருக்க வேண்டும் (!) அல்லது சத்தியத்தில் நமக்கிருக்கும் அன்பு குறைந்து போயிருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்கும், அப்போஸ்தலர்களுக்கும் சத்தியத்தில் இருந்த ஆர்வத்தையும், வைராக்கியத்தையும் சீர்திருத்தவாத எழுப்புதலினால் சபை மறுபடியும் சந்தித்தது. 1520 இல் மார்டின் லூதர் ரோமன் கத்தோலிக்க சபையால், சபையில் இருந்து நீக்கி வைக்கப்பட்டார். அப்படி லூதர் செய்த தவறுதான் என்ன? இராஸ்மஸ் சொன்னார் – “லூதர் போப்பரசரின் தரையில் உள்ள மணிமு‍டியைத் தாக்கி, குருமார்களின் வயிற்றில் அடித்தார்” என்று. “ஒரு மதகுரு (லூதர்) போப்பரசரின் கட்டளையை தீயில் எரித்தார் என்ற ‍செய்தி கேட்டதும் ஜெர்மனி முழுவதுமே மனங்குளிர்ந்தது” என்று மார்டின் லூதரைப் பற்றி எழுதிய ஒரு நூலாசிரியர் குறிப்பிட்டார். இதே நூலாசிரியர், “இன்று சீர்திருத்தம் தோன்றிவிட்டது — 10 டிசம்பர் 1520, காலை 9 மணிக்கு” என்று எழுதினார்.

லூதரின் வெளிப்படையான பேச்சை சீர்திருத்தவாதிகள் அனைவரிலும் காணலாம். கல்வின் இவர்களுக்குகெல்லாம் உதாரணமாக இருந்தார். “சத்தியத்தை எடுத்துரைப்பது நமது போதிக்கும் பணியின் ஒருபாதி மட்டுமே; அதன் மறுபாதி பிசாசின் எல்லா தீய காரியங்களையும் ஒழிப்பதாகும்” (எரேமியா நூல் !!!, 423) என்கிறார் கல்வின். அவர் மேலும், கள்ளப் போதகர்களைக் கட்டுப்பாடில்லாமல் ஆளவிட்டால் கள்ளபோதனைகள் தானாகவே வளரும் (சகரியா-மல்கியா, பக்கம் 380), ஒரு வேத வல்லுனன் தவறிப்போனால் மற்றவர்கள் கூண்டோடு அவன் பின்னால் போவார்கள் (தெசலோனிக்கேயர் பக்கம் 390) என்றும் எழுதினார்.

நாம் வெறும் பேச்சுக்காக ஆணித்தரமாகவும் வெளிப்படையாகவும் பேச வேண்டும் என்று வேதம் எதிர்பார்க்கவில்லை. அது மட்டுமல்லாமல் நாம் ஏடாகூடமாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் வேதம் எதிர்பார்க்கவில்லை. ஆனால், தவறைத் தூக்கி எறிந்து சத்தியத்தை மட்டும் பாராட்ட வேண்டும் என்று வேதம் நம்மைக் கட்டாயப்படுத்துகிறது. சத்தியத்தை பாராட்டினால் மட்டும் போதாது. அதற்கு எதிரானவற்றை நாம் எதிர்க்க வேண்டும். ஜோண் பிளேவல் என்ற பியூரிட்டன் பெரியவர்: தவறான போதனைகளை வரவேற்பதன் மூலம், பலர் அறியாமல் பிசாசுகளை உபசரித்திருக்கிறார்கள் என்று சரியாகவே சொன்னார். அறியாமல் பிசாசுகளை உபசரிக்கும் வேலை இன்று அதிகமாகவே நடந்து வருகின்றது.

1. வேத சத்தியத்தை மட்டும் எடுத்துப் போதிக்கும் சுவிசேஷ இயக்கப் பிரசங்கிகளும், இறையியல் கல்லூரிப் பேராசிரியர்களும் தமிழ்க் கிறிஸ்தவர்கள் மத்தியில் குறைவு. திரு. ரொபட்ஸ் மேலைத்தேய (Western) கிறிஸ்தவ உலகை மனதில் வைத்தே இவ்வசனத்தை எழுதியுள்ளார்.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s