திருச்சபை வரலாறு பற்றி எழுத வேண்டுமென்று அநேகர் பல வருடங்களாகவே கேட்டு வந்துள்ளனர். தமிழில் முறையாக எழுதப்பட்ட திருச்சபை வரலாற்று நூல்கள் இல்லை. இருப்பவையும் ரோமன் கத்தோலிக்க மதத்தின் அடிப்படையில் எழுதப்பட்டு சீர்திருத்த காலத்தை வேண்டத்தகாததாகவே படம்பிடித்துக் காட்டுகின்றன. இந்தியாவில் இருந்து ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ள சபை சரித்திர நூல்களும் இதே வகையில்தான் எழுதப்பட்டுள்ளன. சமீபத்தில் செராம்பூர் கல்லூரி நிறுவனத்தினரால் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்திய திருச்சபை சரித்திர நூல் ஒன்றை நான் பெற்று வாசிக்க முடிந்தது. இதில் ரோமன் கத்தோலிக்க சபை கிறிஸ்தவ சபையாகவே வர்ணிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, சீர்திருத்த விசுவாசத்தின் அருமை பெருமைகளையும், அதன் அவசியத்தையும் வாசகர்கள் புரிந்து கொள்ள திருச்சபை வரலாறு அவசியம் என்பதனாலும், சீர்திருத்த, சுவிசேஷ இயக்கத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட திருச்சபை வரலாற்று நூல் ஒன்று தமிழில் இல்லாத குறையைத் தீர்ப்பதற்காகவும் இப்பக்கங்களில் தொடர்ந்து திருச்சபை வரலாறு பற்றி எழுதத் தீர்மானித்துள்ளேன். சீர்திருத்தப் போதனைகள் வளர இதைக் கர்த்தர் பயன்படுத்துவராக!
– ஆசிரியர்
திருச்சபை வரலாறு பற்றி எழுதும்போது எங்கிருந்து ஆரம்பிப்பது என்ற கேள்வி தோன்றும். சிலர் பழைய ஏற்பாட்டில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பார்கள். சிலர் அதை அப்போஸ்தல நடபடிகளில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பர். பழைய ஏற்பாட்டில் சபை இல்லை என்ற வாதம் தவறானது; இது டிஸ்பென்சேஷனலிசத்தினால் உருவாக்கப்பட்ட போதனை. அப்போஸ்தலர் 13:8 வனாந்தரத்தில் ஒரு சபை இருந்ததாகப் போதிக்கிறது. பழைய ஏற்பாட்டு விசுவாசிகள் கிறிஸ்துவின் திருச்சபை அங்கத்தவர்களே. ஆகவே, பழைய ஏற்பாட்டில் சபையையே பார்க்க முடியாது என்று போதிப்பது தவறு. சபை அங்கத்தவராக இருக்க விசுவாசம் மட்டுமே தேவைப்படுமானால் அவ்விசுவாசத்தைப் பெற்றிருந்த பழைய ஏற்பாட்டு விசுவாசிகள் நிச்சயம் திருச்சபை அங்கத்தவர்களே. ஆனால், இன்னொரு விதத்தில் புதிய ஏற்பாட்டில் திருச்சபை உருவானது என்ற கூற்றும் பொருந்தும். ஏனெனில், திருச்சபை புதிய ஏற்பாட்டில் காணப்படும் விதத்தில் பழைய ஏற்பாட்டில் காணப்படவில்லை. புதிய ஏற்பாட்டில் திருச்சபை புதிய உடன்படிக்கையின் சபையாக ஒரு அமைப்பாக, யூத மதத்தில் இருந்தும், புறஜாதியார் மத்தியில் இருந்தும் வரும் மக்களைக் கொண்டு விசுவாசத்தின் அடிப்படையில் அமைந்த சபையாகக் காட்சி அளிக்கிறது. இதனால்தான், இயேசுவும் மத்தேயு 16:18 இல் “நான் என் சபையைக் கட்டுவேன்” (“I will build My Church” – future tense) என்று எதிர்காலத்தில் பேசியுள்ளார். பழைய ஏற்பாட்டில் சபை நிச்சயமாக இருந்தபோதும், புதிய ஏற்பாட்டில் அது முன்பிருந்திராத வகையில் ஒரு கட்டுக்கோப்பான அமைப்பாக மரித்து உயிர்தெழுந்த இயேசு கிறிஸ்துவைத் தலைக்கல்லாகக் கொண்டு எழுந்தது.
கிறிஸ்துவின் திருச்சபை அப்போஸ்தலர் காலத்தில் எவ்வாறு அமைக்கப்பட்டு வளர்ந்தது என்ற வரலாற்றை விவரித்துக் கூறுகிறது அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகம். திருச்சபை அமைக்கப்பட்டு எவ்வாறு வளர்ந்தது என்பதிலிருந்து பவுல் ரோமில் சிறைவைக்கப்பட்டு ரோமப் பேரரசனின் முன் கொண்டுவரப்படுவதற்காகக் காத்திருந்த காலம்வரை, கி.பி. 30-64 வரையுள்ள காலப்பகுதியின் நிகழ்வுகளைப் படம்பிடித்துக் காட்டுகிறது இப்புத்தகம்.
பரிசுத்த ஆவி வந்திறங்கியபின் பேதுருவின் பிரசங்கத்தை பெந்தகோஸ்தே நாளில் கேட்டு 3000 பேர் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டனர். அவர்கள் ஏற்கனவே இருந்த 120 பேருடன் இணைக்கப்பட்டு புதிய ஏற்பாட்டு சபை உருவானது. அதன்பிறகு அது வெகு வேகமாக வளர்ந்தது. கிறிஸ்தவர்களை அழிக்கப் புறப்பட்ட சவுல் தமஸ்கு வீதியில் கிறிஸ்துவின் அழைப்பைப் பெற்று புறஜாதியார்களுக்கான அப்போஸ்தலனாக எருசலேம் சபையோடு சேர்ந்து பணிபுரியத் தொடங்கினார். பின்பு அந்தியோகியா சபையால் பர்னபாவுடன் சபை அமைக்கும் ஊழியத்திற்காக ஜெபத்துடன் அனுப்பி வைக்கப்பட்டார். பவுலோடு சீலாவும், தீமோத்தேயுவும், லூக்காவும் இத்தகைய சபை அமைப்புப் பணிக்காக பல இடங்களுக்கும் ஆசியா, ஐரோப்பாவுக்கும் சென்றனர். பல இடங்களிலும் திருச்சபைகள் அமைக்கப்பட்டன. ஆரம்பத்தில் அவை நேரடியாக அப்போஸ்தலரின் மேற்பார்வையில் இருந்தன.
இக்காலப்பகுதியில் ரோமர்களின் ஆட்சியில் உலகின் பெரும்பகுதி இருந்தது. அவர்களுடைய ஆட்சியில் கிரேக்க மொழி எல்லா இடங்களிலும் பரவி மக்களால் பேசப்பட்டு வந்ததும், துரிதப் பிரயாணத்திற்கு வசதியாக நல்ல பாதைகள் எல்லா இடங்களிலும் அமைக்கப்பட்டிருந்ததும் சுவிசேஷம் எல்லாப் பகுதிகளிலும் பிரசங்கிக்கப்பட வசதியாக அமைந்தது. பொதுவாக ரோமர் சுவிசேஷ ஊழியத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. அவர்களைவிட யூதர்களே கிறிஸ்தவத்திற்குப் பேரெதிரிகளாக இருந்தனர். அப்போஸ்தல நிருபங்கள் எழுதப்பட்ட காலங்களில் யூதர்களே கிறிஸ்தவ சுவிசேஷத்தைத் தடைசெய்யவும் அப்போஸ்தலர்களைத் தாக்கவும் பெருமுயற்சி எடுத்ததை அப்போஸ்தல நடபடிகள் விளக்குகின்றது. இக்காலங்களில் ரோமர் கிறிஸ்தவர்களுக்குப் பெருந்துன்பம் அளிக்கவில்லை. பவுலின் ஊழியத்தின் காரணமாக ரோமப்படை வீரர்களில் சிலரும் கிறிஸ்துவை அறிந்து விசுவாசிகளாக இருந்திருப்பதை வேதம் எடுத்துக் காட்டுகின்றது.
ஆனால், ரோமப் பேரரசனான நீரோவின் (கி.பி. 54-68) காலத்தில் நிலைமை முற்றாக மாறியது. நீரோ மிகவும் மோசமானதொரு கொடுமைக்காரனாக இருந்தான். ரோம் எரிந்து கொண்டிருந்தபோது அவன் பிடில் (Fiddle) வாசித்து தன்னை மகிழ்வித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படும் கதையே அவன் எத்தகைய மனிதன் என்பதை விளக்குகிறது. கி.பி. 64 இல் ரோமில் பெருந்தீ ஏற்பட்டது. இதனை நீரோவே ஆரம்பித்ததாகவும் கூறப்படுகின்றது. ஆனால், இப்பழியை நீரோ கிறிஸ்தவர்கள் மேல் போட்டான். கிறிஸ்தவர்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இருக்கவில்லை. கிறிஸ்தவர்களை நீரோ இக்காலத்தில் மிகக் கொடூரமாக நடத்தியதை வரலாற்றாசிரியர்கள் எழுதி வைத்துள்ளனர். கிறிஸ்தவர்ளை மிருகத் தோலினால் சுற்றிக் கொடிய வனவிலங்குகள் அவர்களைக் கொன்று தின்னும்படி அவைகள் முன்னால் தூக்கி எறியும்படிச் செய்தான். தன்னுடைய தோட்டத்தில் இரவு நேர விருந்து உபச்சாரங்களின் போது கிறிஸ்தவர்களைக் கம்பத்தில் உயிரோடு கட்டி எண்ணை ஊற்றி எரித்து விளக்குக் கம்பங்களாகப் பயன்படுத்தினான் நீரோ. மிகக் கொடூரமாக கிறிஸ்தவர்களை நடத்தியவன் நீரோ.
இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ரோம எழுத்தாளரான சூடோனிஸ், கிறிஸ்தவர்கள் விஷமத்தனமான மூட நம்பிக்கைகளைப் பின்பற்றும் ஒரு கூட்டம் என்று எழுதி வைத்தார். ஆனால், அம்மூட நம்பிக்கைகள் என்ன என்பதை அவர் எங்கும் விளக்கவில்லை. பிளினி என்பவர் டிராஜான் என்ற ரோமப் பேரரசனுக்கு 112 ம் ஆண்டில் எழுதிய கடிதங்கள் அக்காலத்துக் கிறிஸ்தவர்களைப்பற்றி நாம் மேலும் அறிந்து கொள்ள உதவுகிறது. பித்தினியாவில் கவர்னராக இருந்த பிளினி கிறிஸ்தவர்களை எப்படி நடத்துவது என்று தெரியாமல் விழித்தார். டிராஜானுக்கு அவர் எழுதிய கடிதமொன்றில், “நான் கிறிஸ்தவர்களைப் பார்த்து மூன்று முறை நீங்கள் கிறிஸ்தவர்கள்தானா? என்று கேட்பேன். அவர்கள் மூன்று முறையும் ஆம் என்று பதில் சொன்னால் அவர்களுக்கு உடனடியாக மரண தண்டனை விதிப்பேன். விடாப்பிடியாக அசைய மறுப்பவர்களைத் தண்டிப்பது அவசியம், கிறிஸ்தவர்களில் ரோமப் பிரஜாவுரிமை கொண்டவர்களை ரோமுக்கு அனுப்பிவிடுகிறேன். கிறிஸ்துவை மறுதலிப்பவர்களை உடனடியாக விடுதலை செய்துவிடுகிறேன். ஆனால், உண்மையான கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவை ஒருபோதும் மறுதலிக்க மாட்டார்கள் என்று சொல்லப்படுகிறது” என்று பிளினி எழுதியிருக்கிறார்.
இரண்டாம் நூற்றாண்டுகளில் கிறிஸ்தவர்களுடைய தொகை அதிகம் வளர்ந்தது என்று நம்பக்கூடியதாக இருக்கின்றது. 150 ல் ஒரு கிறிஸ்தவர் ரோமப் பேரரசனுக்கு பின்வருமாறு எழுதக்கூடியதாக இருந்தது: உங்களுடைய ஆலயங்களைத்தவிர மற்ற எல்லா இடங்களையுமே நாம் நிரப்பி விட்டோம். நகரங்கள், கோட்டைகள், அரண்மனைகள், செனட் மண்டபம் எல்லா இடங்களிலும் நம்மவர்கள் இருக்கிறார்கள். கிறிஸ்தவம் இவ்விதமாக வளர்ந்தது.
அப்போஸ்தலர்களில் பலர் கிறிஸ்தவத்திற்காக தம் உயிரைப் பணயம் செய்ய வேண்டி வந்தது. ஏற்கனவே பவுலும், சீலாவும், பேதுருவும் எதிரிகளால் தாக்கப்பட்டும், சிறை அனுபவங்களையும் அடைந்திருந்தார்கள். ஸ்தேவான் யூதர்களால் கொலை செய்யப்பட்டான். அப்போஸ்தலனான யாக்கோபு சிரச்சேதம் செய்யப்பட்டான் (கி.பி. 63). பேதுருவும், அதன்பின் பவுலும் கொல்லப்பட்டனர். இவர்களுடைய உயிர்த்தியாகத்தின் மத்தியில் கிறிஸ்துவின் சுவிசேஷமும், கிறிஸ்தவ சபையும் எல்லா எதிர்ப்புகளையும், தடைகளையும் தாண்டித் தொடர்ந்து வளர்ந்தது.
அப்போஸ்தலர்கள் அமைத்த ஆதி சபை பற்றி நாம் இங்கு அவசியம் குறிப்பிட்டாக வேண்டும். அச்சபைகளை அமைத்த அப்போஸ்தலர்கள் சில முக்கியமான கோட்பாடுகளைக் கடைப்பிடித்தனர்.
1)தெளிவான சுவிசேஷத்தை அவர்கள் ஆவியின் வல்லமையோடு பிரசங்கித்தனர் (அப்போஸ். 2, 3). மனந்திரும்புதலும், கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசமும் மட்டுமே விசுவாசிகளிடம் எதிர்பார்க்கப்பட்டது. அதை ஆவியானவர் மட்டுமே பாவிகளில் செய்யக் கூடியவராக இருக்கிறார் என்று அவர்கள் நம்பினர். அர்ப்பண அழைப்பு போன்ற, கிறிஸ்துவிடம் ஆத்துமாக்களை வரவழைக்கும் போலிச்சடங்குகள் அங்கு காணப்படவில்லை. ஆத்துமாக்களைத் தீர்மானம் எடுக்க வைக்கும் கேடான வழியை அப்போஸ்தலர்கள் ஏற்படுத்தவில்லை.
2) விசுவாசிகள் மட்டுமே ஞானஸ்நானம் பெற்றுத் திருச்சபையில் அங்கத்தவர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டனர் (அப்போஸ். 2:40-42). குழந்தை ஞானஸ்நானத்தை சபை அன்று அறிந்திருக்கவில்லை. விசுவாசிகள் தங்கள் அப்போஸ்தலரின் போதனைகளுக்கும், ஜெபத்திற்கும், அப்பம் பிட்குதலுக்கும், ஐக்கியத்திற்கும் ஒப்புக் கொடுத்தனர். இவற்றைச் செய்ய எந்தக் கிறிஸ்தவர்களும் மறுக்கவில்லை. விசுவாசமில்லாதவர்களும், இவற்றிற்குத் தம்மை ஒப்புக்கொடுக்க மறுப்பவர்களும் திருச்சபையில் இணைத்துக் கொள்ளப்படவில்லை.
3) திருச்சபைகள் அனைத்தும் மூப்பர்களையும், உதவியாளர்களையும் கொண்டிருந்தன (1 தீமோத். 3:1-15; தீத்து 1:5-9; எபிரே. 13:7, 17). மூப்பர்களே சபையை ஆண்டனர். உதவியாளர்கள் மூப்பர்களுடன் சேர்ந்து அவர்களின் கீழ் இருந்து சபை நிர்வாகங்களைக் கவனித்துக் கொண்டனர். இவர்களைத் தவிர வேறு எந்த சபை அதிகாரிகளையும் புதிய ஏற்பாட்டு சபை கொண்டிருக்கவில்லை. இன்று காணப்படும் ஆர்ச்பிசப், பிசப், விக்கார் போன்ற பட்டங்களும், பதவிகளும் அப்போஸ்தலர்கள் காலத்தில் இருக்கவில்லை. இவை கிறிஸ்துவால் ஏற்படுத்தப்பட்ட பதவிகளுமல்ல. அப்போஸ்தலர்கள் எதிர்காலத்தில் உலகில் இருக்கும் அனைத்து சபைகளும் பின்பற்றும்படி இருவிதமான சபைப் பொறுப்புகளை மட்டுமே, அதாவது மூப்பர்களும், உதவியாளர்களையும் மட்டுமே ஏற்படுத்தினர்.
4) திருச்சபை ஆராதனை யூத Synagogue ஐப்பின் பற்றி அமைந்திருந்தது. அங்கு வேதவாசிப்பும், சங்கீதம், கீர்த்தனைகள், ஞானப்பாடல்கள் பாடுதலும், பிரசங்கமும், திருவிருந்தெடுத்தலும், திருமுழுக்குக் கொடுத்தலும், காணிக்கை எடுத்தலும் மட்டுமே காணப்பட்டது. ஆராதனை மிக எளிமையானதாக, கர்த்தர் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக அமைந்திருந்தது. இன்று ஆராதனை என்ற பெயரில் திருச்சபைகளில் நடக்கும் கூத்துக்களுக்கு அப்போஸ்தல சபைகளில் இடமிருக்கவில்லை. ஆத்துமாக்களுக்குப் பிடித்த அம்சங்கள் ஆராதனையை அலங்கரிக்கவில்லை. கர்த்தருடைய வழி முறைகளுக்கும் போதனைகளுக்கும் மட்டுமே அங்கு இடமளிக்கப்பட்டது.
(வளரும்)