இவ்வருடத்தில் இந்திய வேதங்களில் இயேசுவா? என்ற தலைப்பில் நாம் வெளியிட்டுள்ள ஒரு புதிய நூலின் அத்தியாயத்தை இங்கே வழங்குகிறோம். இந்திய வேதங்களின் மூலமும், தமிழ்ச் சமயங்கள் மூலமும் இயேசுவைக் கண்டு கொள்ளலாம் என்ற போதனையை இந்நூல் ஆராய்கிறது.
இந்திய வேதங்களில் இயேசுவா?
இந்திய இந்து மத வேதங்களான இருக்க, யசுர், சாமம், அதர்வனம் ஆகிய வேதங்கள் இயேசு கிறிஸ்துவையே கடவுளாகப் போதிக்கின்றன என்ற போதனையை அளித்து வருபவர் சாது செல்லப்பா. இவர் தமிழ்நாட்டில் ஆசிரமம் அமைத்து, இந்து மத சாதுக்களைப் போல உடை தரித்து, கிறிஸ்தவத்தின் பெயரில் இந்துக்களைக் கவரும் விதத்தில் ஊழியம் செய்து வருகிறார். தான் அணியும் காவி உடைக்கும்கூட இவர் கிறிஸ்தவ விளக்கம் கொடுக்கத் தவறவில்லை. இயேசு கிறிஸ்துவின் இரத்தப் பலியை காவி உடை விளக்குவதாக இவர் கொடுக்கும் விளக்கம் எந்த அளவுக்கு இந்து மத வழக்கங்களுக்கும், சடங்குகளுக்கும் கிறிஸ்தவ விளக்கமளித்து இந்துக்களைக் கவர இவர் பயன்படுத்திக் கொள்கிறார் என்று தெரிந்து கெள்ளலாம். “இந்திய வேதங்களில் இயேசு” என்ற பெயரில் இவரது போதனைகள் கெசட்டுகளில் விற்பனையாகின்றன. இது தவிர “சுத்திகரிக்கும் அக்னி” என்ற பெயரில் ஒரு மாதாந்தர பத்திரிகையையும் இவர் நடத்துவதோடு, இப்போதனைகளின் அடிப்படையில் ஒரு சில நூல்களையும் வெளியிட்டுள்ளார். கெரிஸ்மெட்டிக் கோட்பாடுகளைப் பின்பற்றும் சாது செல்லப்பா வெளிநாடுகளுக்கும் தனது போதனைகளை ஏற்றுமதி செய்து அங்கு வாழும் அப்பாவித் தமிழ்க் கிறிஸ்தவர்கள் மத்தியிலும் அவற்றை விற்பனை செய்து வருகிறார்.
இப்போதனை சரிதானா? வேதபூர்வமானதா? என்று எப்படி முடிவு செய்வது? இந்திய வேதங்களையும், வரலாற்று சான்றுகளையும் ஆராய்ந்து அவை உண்மையில் இப்போதனையை அளிக்கின்றனவா? என்று பார்ப்பது ஒரு முறை. அல்லது வேதத்தை ஆராய்ந்து அவ்வேதத்தின் அடிப்படையில் இத்தகைய போதனைகளுக்கு கர்த்தர் இடம் கொடுத்துள்ளாரா? என்று பார்ப்பது இன்னுமொரு முறை. நாம் எதை விசுவாசிக்கிறோம் என்பதைப் பொறுத்தே இவ்விரண்டு முறைகளில் ஒன்றைத் தீர்மானிக்க முடியும்.
ஒரு கிறிஸ்தவன் என்ற முறையில் என்னைப் பொறுத்தவரையில் முதலாவது முறை மிகவும் ஆபத்தானதாகும். ஏனெனில், கர்த்தருடைய வேதம் மட்டுமே அதிகாரம் கொண்டது என்று விசுவாசிக்கும் கிறிஸ்தவர்கள் எப்போதனையையும் அதன் அடிப்படையில் ஆராயாமல் வேறு நூல்களின் அடிப்படையில் ஆராய்வது வேதத்தை நிராகரிப்பதற்கே வழி வகுக்கும். இத்தகைய வழிமுறையையே வலியுறுத்துகிறது Neo-orthodoxy. வரலாற்றுக் கிறிஸ்தவ பாரம்பரியங்களுக்கு முரணாக திருமறையை சந்தேகக் கண்ணோடு அணுகுதலையே நியோ ஓதர்டொக்ஸி என்று அழைப்பர். இன்று கிறிஸ்தவர்களில் பலர் இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டு நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்குக் காரணம் லிபரலிஸமேயாகும். திருமறையை சத்தியவேதமாக ஏற்றுக் கொள்ளாது, அதை மனித ஞானத்தையும், வரலாற்று சான்றுகளையும் கொண்டு நிரூபிக்கும் பணியில் ஈடுபட்டு, திருமறையின் போதனைகளுக்கு உலக ஞானத்தின் அடிப்படையில் விளக்கம் கொடுக்கும் இறையியல் ஆராய்ச்சி முறையே இத்தகைய நிலைமைக்கு வித்திட்டுள்ளது. மனித சிந்தனையின் அடிப்படையில், மனிதனால் உருவாக்கப்பட்ட, தேவ அதிகாரமற்ற இந்திய வேதங்களை ஆராய்ந்து அது கிறிஸ்துவைப் போதிக்கின்றது என்று காட்ட முயல்வது கிறிஸ்துவை நிரூபித்ததாகாது. திருமறை போதிக்கும் கிறிஸ்துவை நாம் நிரூபிக்க வேண்டும் என்று திருமறை போதிக்கவில்லை. மாறாக அதை நாம் நம்ப வேண்டும் என்று மட்டுமே கூறுகின்றது. இது புரியாமல் அநேகர் இத்தகைய சிந்தனைப்போக்கிற்குத் தங்கள் வாழ்வில் இடம் கொடுத்துள்ளனர். ஆனால், இவ்வாராய்ச்சி முறை திருமறைக்குப் புறம்பானது. ஆகவே, நாம் முன்கூறிய இரண்டாவது முறையைக் கவனிப்போம்.
இரண்டாம் முறை, திருமறையைக் கர்த்தருடைய சித்தத்தை வெளிப்படுத்தும் தெளிவான, அழிவற்ற, அதிகாரம் கொண்ட ஒரே நூலாக ஏற்றுக் கொண்டு, அதன் அடிப்படையில் எதையும் ஆராய முற்படுகின்றது. ஆகவே, திருமறையோடு ஒத்துப் போகாத எதுவும், திருமறை நிராகரிக்கும் எதுவும், கர்த்தருடைய வழிகள் அல்ல என்ற தீர்மானத்திற்கு வருகின்றது. இம்முறையைப் பொறுத்தவரையில் வரலாறு, கல்வெட்டுகள், மனிதர்களால் எழுதப்பட்ட ஆதி நூல்கள், பரம்பரையாக வாய்வழி வந்த போதனைகள், நம்பிக்கைகள் அனைத்துமே திருமறைக்கு ஒப்பான அதிகாரம் கொண்டவையல்ல. இவற்றைவிட திருமறையே மேலான, உறுதியான அதிகாரம் கொண்ட கர்த்தருடைய வார்த்தை. இதன் அடிப்படையில் இந்திய வேதங்களும், வரலாற்று அம்சங்களும் திருமறைக்கு நிகரான எந்த அதிகாரத்தையும் கொண்டிருக்கவில்லை. அவை கறைபடிந்தவை; அவற்றின் அடிப்படையில் சத்தியத்தை நிரூபிக்க முயல்வது சத்தியத்திற்கு எதிரான முறையாகும். இதனால் நாம் புதை பொருள் ஆய்வுகள், விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை அலட்சியம் செய்வதாக எண்ணிவிடக்கூடாது. சில வேளைகளில் அவை வேத வரலாற்றை நிரூபிக்கும் சாட்சியங்களை அளிக்கலாம். அத்தகைய சந்தர்ப்பங்களில் அவை வேதம் எத்தனை உண்மை என்பதையே பறைசாற்றுவனவாக இருக்கின்றன. ஆனால், அக்கண்டுபிடிப்புகள் வேத சத்தியங்களுக்கு மாறாக அமையும்போது நாம் வேதத்தைத்தான் நம்ப வேண்டுமே தவிர மனிதர்களின் கண்டுபிடிப்புகளையல்ல.
ஆகவே, திருமறைக்கும், கர்த்தருக்கும் மகிமையளிக்கும் இவ்விரண்டாம் முறையின் அடிப்படையில் சாது செல்லப்பாவின் போதனைகளை நாம் ஆராய்வோம். சுருக்கமாகச் சொல்லப்போனால், இம்மனிதரைப் பொறுத்தவரையில் இந்துமதம் கிறிஸ்துவை வெளிப்படுத்தும் இன்னுமொரு வெளிப்பாடு (Revelation). இந்திய வேதங்களைக் கிறிஸ்தவ வேதத்திற்கு சமமானதாகவே இம்மனிதர் கருதுகிறார். சிலை வணக்கத்தை மட்டும் இவர் நிராகரித்தாலும், இந்துமத வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் அனைத்தும் இயேசு கிறிஸ்துவையே குருவாகவும், ஒரே தேவனாகவும் காட்டுகின்றன என்று வாதிடுகிறார். அது மட்டுமல்லாமல் வேதபோதனை என்ற பெயரில் நாயன்மார்களின் தேவார, திருவாசகங்களை ஓதி அவற்றிற்கு கிறிஸ்தவ விளக்கம் கொடுத்துவருகிறார். பிராமணர்களே ஆதி இந்திய வேதங்களை மறைத்து தந்திரமாக புராணங்களைக் கட்டிவிட்டு சத்தியத்தை மறைத்தார்கள் என்று போதிக்கிறார். ஆகவே, இந்துக்களைப் பார்த்து, நீங்கள் பகவத் கீதையையும், இந்திய வேதங்களையும் படியுங்கள். தேவார திருவாசகங்களைப் படியுங்கள். இவைகளில் நீங்கள் இயேசுவைக் கண்டு கொள்ளலாம் என்று கூறுகிறார். இவ்வாறு இவர் போதித்ததை நான் என் காதாலேயே கேட்டிருக்கிறேன்.
உதாரணத்திற்கு, “குரு யார்?” என்ற வினாவை எழுப்பி இவரால் எழுதப்பட்ட ஒரு சிறு நூலை இவரது ஆராய்ச்சி முறையை விளக்க எடுத்துக் கொள்வோம். இயேசு கிறிஸ்துவே மெய்யான குரு என்பது இந்நூலின் போதனை. இதனை விளக்க இந்து மதம் போதிக்கும் குருத்துவத்தை சிவஞானபேதம், குருகீதை, சித்தர் பாடல்கள், அருணகிரியார் பாடல்கள் எல்லாவற்றையும் பயன்படுத்தி இவை போதிக்கும் “குரு” உண்மையில் வேதம் போதிக்கும் கிறிஸ்துவே என்று விளக்கம் கொடுக்கிறார். இந்நூல்களும் பாடல்களும் போதிக்கும் குருத்துவ இலக்கணங்கள் கொண்டவர் இயேசுவாக மட்டுமே இருக்க முடியும் என்பது இவரது போதனை. வெறும் வாதத்திற்காக எடுத்துக் கொண்டாலும் இத்தகைய ஆராய்ச்சி துறை எத்தனை மோசமானது என்பதைக் கவனித்துப் பார்ப்போம். இந்து மதத்தைச் சேர்ந்த இப்பாடலாசிரியர்கள் எங்கும் தாம் இயேசுவைக் குறித்துப் பாடியதாகவோ, பேசியதாகவோ தெரிவிக்கவில்லை. இவற்றிக்கு செல்லப்பாதான் இப்படி விளக்கம் கொடுக்கிறாரே தவிர பாடலாசிரியர்கள் இக்கருத்துடன்தான் பாடினார்கள் என்பதற்கோ அவர்கள் கிறிஸ்தவர்களாக வாழ்ந்தார்கள் என்பதற்கோ எந்தவித சான்றுகளுமே இல்லை.
நாம் ஏற்கனவே கூறியவாறு, வேத அடிப்படையில் இந்நூலை ஆராய்ந்தால், சாது செல்லப்பா விடும் முதலாவது தவறு, அவர் வேதத்திற்குச் சமமாக இந்து மதப் பெரியவர்களின் பாடல்களையும் போதனைகளையும் ஒப்பிட்டு கிறிஸ்துவைத் தேவனாகக்காட்ட முயல்வதுதான். இம்முறையை வேதம் முற்றாக நிராகரிக்கிறது. கிறிஸ்துவைத் தேவனாகக்காட்ட வேதத்தைத்தான் பயன்படுத்த வேண்டுமே தவிர வேறு மதப் போதனைகளை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளக் கூடாது. அம்மதங்கள் கிறிஸ்துவைத்தான் போதிக்கின்றன என்று சொல்லத் துணியும் போதே கிறிஸ்தவத்திற்கு அழிவு ஏற்பட்டு விடுகிறது. ஏனெனில், அந்நிய மதங்கள் ஒன்றின் மூலமாவது கிறிஸ்து வெளிப்படுத்தப்படவில்லை, பழைய, புதிய ஏற்பாட்டு நூல்களின் மூலம் மட்டுமே அவர் வெளிப்படுத்தப்பட்டுள்ளார் என்று வேதம் போதிக்கின்றது.
புறமத எழுத்துக்கள் கிறிஸ்தவப் போதனையைத் தழுவி எழுதப்பட்டிருக்கலாம். அத்தகைய வழக்கம் ஆதியில் இருந்தே வந்திருக்கின்றது. இன்றும் இந்து மதப்போதனைகளில் கிறிஸ்தவ விளக்கங்களைப் பயன்படுத்திக் கொள்பவர்கள் இருக்கிறார்கள். இந்தியத் தலைவரான காந்தி கூட கிறிஸ்தவ வேதத்தைப் பயன்படுத்தி உரைகள் அளித்துள்ளார். இன்னும் பலரை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இஸ்லாமியரின் குரானும் பழைய ஏற்பாட்டைத் தழுவி எழுதப்பட்டது என்பது அதை வாசிப்பவர்களுக்குப் புரியும். அதற்காக, குரானைக் கர்த்தருடைய வெளிப்படுத்தல் என்று ஏற்றுக் கொள்ள முடியாது. ஜொஸீபஸ் என்ற வரலாற்று அறிஞன் கிறிஸ்தவத்தின் தோற்றத்தைப்பற்றி தனது நூலில் பல விளக்கங்களை அளித்துள்ளார். கிறிஸ்தவரல்லாத ஜொஸீபஸ் கிறிஸ்தவ வரலாற்றை பற்றிய விளக்கத்தைத் தந்துள்ளதால் அவருடைய நூலைப்படித்து கிறிஸ்துவை அறிந்துகொள்ளலாம் என்று கூறுவது சிறுபிள்ளைத்தனமான வாதம். ஜொஸீபஸின் எத்தனையோ வரலாற்று அவதானங்கள் சரியானதுமல்ல. ஆகவே புறமதப் போதனைகளும், எழுத்துக்களும், கிறிஸ்தவத்தைத் தழுவிய போதனைகளைக் கொண்டிருக்கின்றன என்பதற்காக அவற்றை வாசிப்பதன் மூலம் கிறிஸ்துவை அறிந்து கொள்ளலாம் என்று கூறுவது ஆபத்து. புற மதப் போதனைகளுக்கும், வேதத்திற்கும் இடையில் பெரும் இடைவெளி இருக்கின்றது. அவ்விடைவெளி என்ன? வேதம் கர்த்தருடைய சித்தத்தின் வெளிப்பாடு (The revealed will of God) என்பதுதான். ஏனைய மதப் போதனைகளும், எழுத்துக்களும் இத்தன்மையைக் கொண்டிருக்கவில்லை. கர்த்தருடைய சித்தத்தின் வெளிப்பாடு என்றால் என்ன? கர்த்தர் தன்னைப்பற்றியும் கிறிஸ்துவின் மூலம் பாவிகளை இரட்சிக்க, தான் ஏற்படுத்தியிருக்கும் வழிகளைப்பற்றியும் வேதத்தின் மூலம் மட்டுமே வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதுதான். வேதத்தின் போதனைகளை முழுமையாகக் கொண்டு வேதத்தை நூறுவீதம் தழுவி ஒரு நூல் எழுதப்பட்டிருந்து, அந்நூலால் அநேகர் பயன்பட முடிந்தாலும் அந்நூல் வேதத்திற்கு சமமான அதிகாரத்தைக் கொண்டிருக்க முடியாது. வேதம் மட்டுமே இரட்சிக்கும் கர்த்தரை கிறிஸ்துவுக்குள்ளாக வெளிப்படுத்தி பாவியான மனிதனை இரட்சிக்கும் வல்லமையைக் கொண்டுள்ளது. இந்த வல்லமையும் அதிகாரமும் வேறு எந்த எழுத்துக்களுக்கும் நூல்களுக்கும் இல்லை. ஜோண் பனியனுடைய மோட்ச பயணம் வேதபோதனைகளை மட்டும் கொண்டு அமைந்தது. அதனை வாசித்து அநேகர் பயன்பட முடியும். அதற்காக, அதுவே வேதமாகிவிட முடியாது.
சாது செல்லப்பாவைப் பொறுத்தவரையில் கிறிஸ்தவ வேதத்திற்கும், இந்துமத வேதங்களுக்கும் இடையில் எந்தவித வித்தியாசமுமில்லை. இவரைப் பொறுத்தவரையில் ஒரு இந்து கிறிஸ்துவை அறிந்து கொள்ள அதிகமாக செய்யவேண்டியது ஒன்றுமேயில்லை. ஓர் இந்து தான் இதுவரை வணங்கியது கிறிஸ்துவைத்தான் என்று நம்பி சிலை வணக்கத்தை மட்டும் விட்டுவிட்டால் போதும். ஆனால், கிறிஸ்தவமோ, எவரும் வேதசத்தியத்தினாலும், ஆவியானவரின் கிரியையினாலும் மட்டுமே கிறிஸ்துவுக்குள் மறுபிறப்பை அடைய முடியும் என்று போதிக்கின்றது.
சாது செல்லப்பா 1996 ம் ஆண்டு நியூசிலாந்தில் ஒரு கிறிஸ்தவ வானொலிக்குக் கொடுத்த பேட்டியின் மூலத்தை அப்படியே இங்கே தருகிறேன். இவரது போதனை எவ்வளவு தூரம் கிறிஸ்தவத்திற்கு முரணானது, பவுல் அப்போஸ்தலன் கூறுவதுபோல் சுவிசேஷத்திற்கே எதிரானது என்றும் அறிந்து கொள்ள முடியும்.
“இந்திய வேதங்கள் பிரஜாபதி என்ற ஒரே கடவுளைப் பற்றிப் பேசுகின்றன. அத்தோடு இருக்க வேதம் கடவுள் மனிதனாக அவதரித்து பாவ நிவாரணியாகத் தன்னைப் பலி கொடுப்பார் என்றும் போதிக்கின்றது. அது மட்டுமல்லாமல் அவர் பாவமற்றவராக இருப்பார் என்றும் இருக்க வேதத்தில் ஒரு வசனம் சொல்கிறது. சமஸ்கிருத மொழியைப் படிப்பவர்களால் இதைப் புரிந்து கொள்ள முடியும். இந்தியாவுக்கு வந்த அநேக மிஷனரிகள் வீணாக எபிரேய, கிரேக்க மொழிகளைப் படித்து காலத்தை வீணாக்கிக் கொண்டார்கள். அவர்கள் சமஸ்கிருத பாஷையைக் கற்றுக் கொண்டிருந்தார்களெனில் இந்திய வேதங்கள் இயேசுவைப் போதிப்பதை அவர்களால் அறிந்து கொண்டிருக்க முடியும்.”
“நான் ஆரம்பத்தில் கிறிஸ்தவத்தைப் பற்றி எதுவுமே தெரியாமலிருந்தேன். அக்காலத்தில் பிராமணனாக இருந்த போதும் அதில் என்னால் கடவுளைப் பார்க்க முடியவில்லை. கடவுளே இல்லை என்ற முடிவுக்கும் நான் வந்தேன். எல்லோரும் என்னை வெறுக்கும் நிலை ஏற்பட்டது. அக்காலத்தில் என் வாழ்வை முடித்துக்கொள்ள எண்ணியிருந்தபோது ஒரு கிறிஸ்தவ பிரசங்கி எமது பாவங்களுக்காக மரித்த ஒருவரைப்பற்றிப் பேசுவதைக் கேட்டேன். இவர் நான் இருக்கு வேதத்தில் வாசித்த பிரஜாபதியைத்தான் குறிப்பிடுகிறார் என்று அறிந்து ஆனந்தப்பட்டேன். இவ்வாறே நான் தேவனை அறிந்து கொண்டேன்.”
“இந்திய வேதங்களைப் படித்தே நான் கிறிஸ்துவை அறிந்து கொண்டேன். கிறிஸ்தவ வேதத்தைப் படித்து அல்ல, பிராமணனாக இருந்த நான் சமஸ்கிருத மொழியில் இருக்கும் இந்திய வேதத்தைப் படித்தே கடவுளை அறிந்து கொண்டேன். ஏனெனில், இவ்வேதங்கள் ஒரே கடவுளைப்பற்றிப் போதிக்கின்றன. வேதம் கடவுள் யூதர்களுக்கு மட்டும் சொந்தமானவரல்ல, அந்நியருக்கும் சொந்தமானவர் என்று தெரிவிக்கின்றது.”
“பிரஜாபதியான கடவுளை நான் அறிந்து கொண்டபோது இந்து மதத்தை விட்டு விலகுகிறேன் என்ற எண்ணமே எனக்கு ஏற்படவில்லை. இருக்கு வேதத்தின் பிரஜாபதியின் மூலமாகவே கடவுள் தன்னை எனக்கு வெளிப்படுத்தினார். கடவுள் யூதர்களுக்கு மட்டும் சொந்தமானவரல்ல, அந்நியர்களுக்கும் சொந்தமானவர் என்று வேதம் தெரிவிக்கின்றது. ஆகவே, கடவுளை மனிதர்கள் தங்களுடைய சொந்த மதத்திலேயே கண்டு கொள்ளலாம். பின்பு, நான் முதன் முதலில் கிறிஸ்தவ வேதத்தில் பழைய ஏற்பாட்டைப் படித்தபோது இதையேதான் இந்து மதமும் போதிக்கின்றது என்று அறிந்து கொண்டேன். இந்து மதத்தின் பலிகொடுக்கும் முறைகளையும் உருவ வணக்கத்தையும் மத்திய கிழக்கில் இருந்து வந்த ஆரியர்களே ஏற்படுத்தினார்கள். இந்து மதம் ஆரம்பத்தில் இப்படி இருக்கவில்லை.”
“நான் அப்போஸ்தலர் நடபடிகளைப் படித்தபோது பவுலின் வாழ்க்கையை வாசித்து அதிசயித்தேன். பவுல், தான் யூதர்களுக்கு யூதனாகவும், கிரேக்கர்களுக்கு கிரேக்கனாகவும் எல்லாருக்கும் எல்லாமானேன் என்று கூறுவதைப் பார்த்தேன். ஆகவே, இந்தியர்களுக்கு பிரசங்கம் செய்ய காவி உடை அணிந்து பிரசங்கிக்க ஆரம்பித்தேன். இதன் மூலம் அநேகர் பிரசங்கம் கேட்க வருகிறார்கள். அத்தோடு இந்திய வேதங்களோடு கிறிஸ்தவ வேதத்தை ஒப்பிட்டு இந்தியர்கள் மத்தியில் பிரசங்கிக்க ஆரம்பித்தபோது அநேகர் சபைக்கு வரத்தொடங்கினார்கள்.”
“என்னுடைய போதனையின் முக்கிய அம்சம், இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய சொந்த வேதத்தைப் படித்து அது போதிக்கும் பிரஜாபதியான கடவுளை அறிந்து கொள்ள முடியும் என்பதுதான். அப்படிச் செய்பவர்கள் கடவுளை நிச்சயம் அறிந்து கொள்ள முடியும். அவர்கள் இந்து மதத்தைவிட்டு விலகாமலே இந்திய வேதங்களின் மூலம் கடவுளை அறிந்து கொள்ள முடியும். இவ்வாறே நானும் கடவுளை அறிந்து கொண்டேன்.”
சாது செல்லப்பாவின் இப்பேட்டியை வாசிக்கும் போது இந்திய வேதங்கள் இப்படியெல்லாம் போதிக்கின்றனவா என்ற எண்ணம் பலருக்கு ஏற்படலாம். அவ்வாறான ஆராய்ச்சியில் ஈடுபட்டு உண்மையை அறிந்து கொள்ளவும் துடிக்கலாம். ஆனால், அப்படி செய்வதன் மூலம் நாம் விடும் பெரும் தவறு கிறிஸ்தவ வேதத்தில் நமக்கிருக்க வேண்டிய நம்பிக்கையை இழப்பதுதான். இந்திய வேதங்கள் மற்றும் தேவாரத் திருவாசகங்களுக்கு இவ்வாறாகப் பொருள் கொடுப்பது ஒன்றும் இயலாத காரியம் அல்ல. வேதத்தில் நம்பிக்கையிழந்தவர்களே செல்லப்பாவின் வழிமுறைகளை இன்று கடைப்பிடித்து வருகிறார்கள். இப்பேட்டியில் காணப்படும் வேதத்திற்கு முரணான அம்சங்களை இப்போது பார்ப்போம்.
1. சாது செல்லப்பா வேத போதனைகளுக்கு முரணாக அந்நிய மதங்களின் மூலம் இறைவனைக் கண்டு கொள்ளலாம் என்று போதிக்கிறார். இது லிபரலிஸம், புளூரலிசக் (Pluralism) கோட்பாடுமாகும். எல்லா மதங்களிலும் சத்தியத்தைக் காணும் கோட்பாட்டையே புளூரலிசம் என்று அழைப்பார்கள். வேதம் வேறு சமயங்களின் மூலம் கிறிஸ்துவைக் கண்டு கொள்ளலாம் என்று எங்கேயும் போதிக்கவில்லை; மாறாக அந்நிய மதங்களுடன் உள்ள எத்தொடர்பையும் முற்றாக வெறுக்கிறது (யாத்திராகமம் 20).
2. செல்லப்பா வேதம் மட்டுமே அதிகாரம் கொண்டது, அதன் மூலம் மட்டுமே கடவுளைக் காணலாம் என்ற தெளிவான வேத போதனையில் நம்பிக்கையற்றவராகக் காணப்படுகிறார்.
3. அந்நிய மதத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் மதத்தை விட்டு விலகத் தேவையில்லை என்ற செல்லப்பாவின் போதனை முழு வேதத்திற்கும் எதிரானது.
4. அந்நிய மதங்களையும் அதன் போதனைகளையும் படித்து அவற்றைப் பயன்படுத்தி கிறிஸ்துவைப் போதிக்க வேண்டும் என்பது கிறிஸ்தவத்தை அழிக்க முனையும் பணியாகும். இது அநேகரைக் கவரக்கூடிய ஒரு வழியாக இருக்கலாம். ஆனால் கர்த்தரைப் பொறுத்தவரையில் இது பாவத்தின் வாசல் கதவைத் தட்டுவதாகும்.
5. எல்லோருக்கும் எல்லாமானேன் என்று பவுல் 1 கொரிந்தியர் 9:7இல் கூறியுள்ளதை சாது செல்லப்பா தவறாகப் புரிந்து கொண்டுள்ளார். கிறிஸ்துவை அறியாதவர்கள் மத்தியில் ஊழியம் செய்யும்போது அவர்கள் மனம் புண்படும்படி எதையும் செய்துவிடாமல், அதே வேளை வேதப்போதனைகளுக்கு எந்தவித ஊறும் ஏற்படாமலும் நற்செய்தியைச் சொல்வேன் என்பதே பவுலின் போதனை. அவர்களுக்காக வேதப் போதனைகளை அவர்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றிப் பிரசங்கிப்பேன் என்று சாது செல்லப்பா செய்வதைப் பவுல் கனவிலும் எண்ணிப் பார்த்ததில்லை.
6. வேத வசனங்களைத் தவறாகப் புரிந்து கொண்டு வேதத்தின் பெயரைச் சொல்லி, இந்து மத சாதுக்களைப் போல உடையணிவது, திருவாசகம் பாடுவது கர்த்தருக்கே அடுக்காத காரியம். இம்முறையை இந்தியாவிற்கு வந்து ஊழியம் செய்துள்ள கத்தோலிக்க மதகுருக்கள் ஏற்கனவே பயன்படுத்தியுள்ளனர். ஆங்கிலேய மத குருவான டொம் பீட் கிரிபித்ஸ் (Dom Bede Griffiths) தமிழகத்து திருச்சிராப்பள்ளியில் ஒரு ஆசிரமத்தை அமைத்தார். இவரைப் பின்பற்றி வேறு மத குருக்கள் காவேரி நதிக்கரையில் இன்னுமொரு ஆசிரமத்தை 1950ல் நிறுவியதோடு, இந்துக்கள் கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொள்ள வசதியாக சந்நியாசிகளைப் போல மஞ்சள் நிற காவி உடையையும் அணிந்தனர். கிரிபித்ஸ் இந்து மதக்கோட்பாடுகளையும், கிறிஸ்தவத்தையும் கலந்து, கிறிஸ்தவத்தின் பெயரில் ஒரு ஆராதனை முறையை ஏற்படுத்தினார்.” ஆகவே, இம்முறைக்கு சாது செல்லப்பா வேதத்தில் நியாயம் தேட முடியாது. சமய சமரசப் போக்கைப் பின்பற்றியோரே (Ecumenism) இதற்கு முன்னால் இவ்வழியைப் பயன்படுத்தியுள்ளனர். வேதமோ, இம்முறைகளை வன்மையாகக் கண்டித்து நிராகரிக்கிறது.
* The Inter-Faith Movement, The New Age enters the Church by Hernert J. Pollitt, Banner of Truth Trust, Pg. 42-43.
கிறிஸ்தவ ஒற்றுமை
கிறிஸ்தவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டியது அவசியந்தான். ஆனால், சத்தியத்தை விற்பவர்களுடனும், வேதத்திற்கு முரணான கொள்கைகளைப் பின்பற்றுபவர்களுடனும் கூட்டுச் சேருவதால் கிறிஸ்தவ ஒற்றுமைக்கு அழிவுதான் ஏற்படும். உண்மையான ஒற்றுமையை சத்தியத்திற்கு மதிப்புக் கொடுப்பவர்கள் மத்தியில்தான் பார்க்க முடியும். ஒற்றுமை, ஒற்றுமை என்று கரடியாய்க் கத்துவதைவிட சத்தியத்தை வளர்ப்பதற்காகப் பாடுபட்டால் ஒற்றுமை தானே வளரும்.
Please send
LikeLike
இன்று அது அச்சில் இல்லை.
LikeLike