இன்று பிரசங்கத்திற்கு சபைகளில் அதிக இடம் கொடுக்கப்படுவதில்லை. அதாவது, வேதபூர்வமான பிரசங்கத்திற்கு இடம் கொடுக்கப்படுவதில்லை என்றே சொல்ல வருகிறேன். போதகர்கள் பாடுவதற்கு எடுக்கும் பயிற்சியையும் முயற்சியையும் பிரசங்கம் தயாரிப்பதற்கு கொடுப்பதில்லை. இது இன்றைய தமிழ் சபைகளைப் பிடித்துள்ள ஒரு பெருவியாதி. கெரிஸ்மெட்டிக் சபைகளிலோ பேய் விரட்டுவதும், நோய் தீர்ப்பதுமே பலருக்கு வேலையாய்ப் போய்விட்டது. நமது மக்களுக்கு வேதம் என்றால் என்ன என்று புரியாமல் இருப்பதற்கும், கர்த்தருடைய வழிகளைவிட பிசாசின் தந்திரங்கள் அவர்களையும் சபைகளையும் ஆட்டிப்படைப்பதற்கும் இதுவே காரணம்.
வேதபூர்வமான பிரசங்கம் இல்லாத சபையிலும் நாட்டிலும் இருப்பது இடுகாட்டில் இருப்பது போன்றது. ஏனெனில், பிரசங்கத்தால் வளராத வாழ்க்கை உயிரற்ற ஜடத்தைப் போன்றது. கர்த்தருடைய ஆராதனையில் அதிமுக்கிய இடத்தைப் பெற்று ஆத்துமாக்களுக்கு ஆவிக்குரிய உணவளிக்கும் பிரசங்கத்தை தள்ளிவைத்துவிட்டு ஆத்மவிரோத காரியங்களை சபைகளில் செய்துவரும் போதகர்களுக்கு என்ன தண்டனை தந்தாலும் தகும். இடி போன்ற பிரசங்கத்தால் அடி கொடுத்து விரட்டப்பட வேண்டிய பாவத்திற்கு, காதுக்கினிய பாடல்களால் கீதமிசைத்துக் கொண்டிருக்கும் சபைகளுக்கு கர்த்தரின் தண்டனை நிச்சயம் காத்திருக்கிறது.
இவ்விதழின் தலைப்புக் கட்டுரை பிரசங்கம் தயாரிப்பதில் பிரசங்கிகள் செலுத்த வேண்டிய கவனத்தைப் பற்றியது. போதிப்பவர்களுக்கும், பிரசங்கம் கேட்பவர்களுக்கும் அது பெருந்துணை புரிய கர்த்தர் அருள்புரியட்டும்.
பிரசங்கத்தோடு நெருங்கிய தொடர்புடைய பிரிக்கமுடியாத ஊழியம் போதக ஊழியம், போதக ஊழியத்தை அறியாத பிரசங்கம் ஆத்துமாக்களுக்கு எந்த ஆசீர்வாதத்தையும் அளிக்க முடியாது. அதேவேளை, ஆத்துமாக்களுக்கு பிரசங்கத்தால் உணவிடுவதைத் தவிர்க்கும் போதக ஊழியத்தை வேதத்தில் பார்க்க முடியாது. போதகர் எட்வர்ட் டொனலி அருமையாக இதை தனது ஆக்கத்தில் விளக்குகிறார். இவ்விரு ஆக்கங்களையும் நாம் படிப்பது மட்டுமல்லாமல் இத்தகைய ஊழியத்தைக் கர்த்தர் நம்மத்தியில் ஏற்படுத்த ஜெபிக்க வேண்டியதும் நமது கடமையாகிறது. வேதபூர்வமான பிரசங்கமும் அதோடு இணைபிரியாமல் நிற்கும் போதக ஊழியமும் நம் சபைகளை அலங்கரிக்க கர்த்தர் கருணைகூருவாராக. இவ்விதழின் ஆக்கங்கள் போதகர்களுக்காக மட்டும் எழுதப்பட்டவையல்ல. ஒவ்வொரு விசுவாசிக்காகவும் எழுதப்பட்டவை. சத்தியத்தால் விசுவாசிகளின் கண்கள் திறந்து அவர்கள் வேதபூர்வமான பிரசங்கத்தையும், போதக ஊழியத்தையும் நாடி ஓடும்போதுதான் நம் மக்கள் மத்தியில் நல்ல சபைகள் உருவாக வாய்ப்புண்டு. இது நான் காணும் கனவாக மட்டும் இருந்துவிடாமல் நனவாகும் நாளும் வருமா?
– ஆசிரியர்