கல்வினிச ஐங்கோட்பாடுகளும், சீர்திருத்த விசுவாசமும் ஒன்றா?

கல்வினிச ஐங்கோட்பாடுகளும், சீர்திருத்த விசுவாசமும் ஒன்றா? இக்கேள்விக்கு பதிலளிக்கிறது இவ்வாக்கம்

கல்வினிச ஐங்கோட்பாடுகளும், சீர்திருத்த விசுவாசமும்

சீர்திருத்தவாதியான ஜோன் கல்வினைப் பற்றி இவ்விதழில் பல தடவைகள் எழுதியிருக்கிறோம். பதினாறாம் நூற்றாண்டில் எழுந்த திருச்சபை சீர்திருத்தத்தில் கர்த்தரால் பயன்படுத்தப்பட்ட ஒரு பெருந்தலைவர் ஜோன் கல்வின்.ஜெனீவாவில் சபை நிறுவி பல்லாண்டுகள் போதக ஊழியம் செய்த வேத சத்தியங்களில் மக்களை வழி நடத்தியவர் கல்வின். திருச்சபை சீர்திருத்தத்தில் பெரும் பங்கு வகித்தவர். பிரான்ஸின் அரசனுக்கு சீர்திருத்தக் கருத்துக்களை விளக்க அவர் ஒரு துண்டுப்பிரசுரமாக எழுத ஆரம்பித்து, ஒரு பெரு நூலாக முடிந்தது அவரது அழியா கிறிஸ்தவப் போதனைகள். வேதத்தின் மூன்றில் இரண்டுக்கு மேற்பட்ட நூல்களுக்கு விளக்கவுரை எழுதியவர் கல்வின். கல்வினுடைய அரும்பெரும் பணிகள் இவற்றுடன் முடிந்துவிடவில்லை. சீர்திருத்த இறையியலுக்கு வடிவம் கொடுத்த சீர்திருத்தவாதிகளில் இவரும் ஒருவர்.

கல்வினின் மறைவுக்குப்பின் அவரது சீர்திருத்தப் போதனைகளை எதிர்த்து அவற்றிற்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டான் ஜேம்ஸ் ஆர்மீனியஸ் என்ற மனிதன். 1610 இல் அவனது மறைவிற்குப்பின் அவனுடைய சீடர்கள் ஐந்து கோட்பாடுகளை வெளியிட்டு திருச்சபைகளை சீர்திருத்தப் போதனைகளுக்கு எதிராகத் திருப்ப எத்தனித்தனர். இவர்களது போதனைகள் ஆர்மீனியனிசம் என்று இன்று சுருக்கமாக அழைக்கப்படுகின்றது. மீட்பிலும், இரட்சிப்பிலும் மனிதனுக்குப் பெரும் பங்கு உண்டென்றும், மனிதனின் ஒத்துழைப்பு இல்லாமல் கர்த்தரால் மனிதனை மீட்க முடியாது என்றும் ஆர்மீனியஸ் போதித்தான். அக்காலத்தில் திருச்சபைகள் சீர்திருத்தப் போதனைகளைப் பின்பற்றி விசுவாச அறிக்கைகளையும் கொண்டு நல்லபடியாக இயங்கி வந்து கொண்டிருந்தன. இதற்கு ஆபத்து ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால் ஒல்லாந்து நாட்டில் திருச்சபைத் தலைவர்கள் இப்போதனைகளை ஆராய 1618 இல் டோர்ட் என்ற இடத்தில் ஒன்று கூடினார்கள். ஏழு மாதங்களில் 154 தடவைகள் அவர்கள் கூடி ஆர்மீனியனிசப் போதனைகளை ஆழமாக ஆராய்ந்தனர். அப்போதனைகள் வேதத்திற்கும், சீர்திருத்தப் போதனைகளுக்கும் முரணாக இருப்பதை உணர்ந்த அவர்கள் அவற்றிற்கெதிரான ஐங்கோட்பாடுகளை வெளியிட்டனர். தவறான போதனைகளை அளித்த ஆர்மீனியஸினுடைய சீடர்களும் நாடு கடத்தப்பட்டனர். திருச்சபைகள் ஆர்மீனியனிசப் போதனைகளின் ஆபத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்ளவே டோர்ட் கவுன்ஸில் இதைச் செய்தது. இவ்வைங்கோட்பாடுகள் பின்பு கல்வினிச ஐங்கோட்பாடுகள் என்ற பெயரைப் பெற்றன. இதற்குக் கல்வினின் பெயர் கொடுக்கப்பட்டதன் காரணம் சீர்திருத்தவாதப் போதனைகள் தோன்றுவதற்கு கல்வின் அளித்த சிறப்பான பங்கே காரணம். இன்று இவ்வைங் கோட்பாடுகளைக் கல்வினிசப் போதனைகள் என்றும், இவற்றை விசுவாசித்துப் பின்பற்றுபவர்களை கல்வினிஸ்டுகள் என்றும் அழைப்பார்கள்.

இவ்வைங்கோட்பாடுகளாவன: 1) மனிதனின் முழுமையான சீரழிவு. 2) நிபந்தனையற்ற தெரிந்து கொள்ளல். 3) வரையறுக்கப்பட்டவர்களுக்கான மீட்பு. 4) தவிர்க்க முடியாத அழைப்பு. 5) பரிசுத்தவான்களின் விடாமுயற்சி என்பனவாகும். இவற்றை அவற்றின் முதல் எழுத்துக்களைப் பயன்படுத்தி ஆங்கிலத்தில் “டுளிப்” (Tulip) என்றும் அழைப்பர்.

இவ்வைங்கோட்பாடுகள் மீட்பையும், இரட்சிப்பையும் குறித்த வேதபோதனைகளை சுருக்கமாக விளக்குவதாக உள்ளன. இவற்றைக் கிருபையின் போதனைகள் என்றும் சுருக்கமாக அழைப்பர். மகத்தான தேவ கிருபையின் காரணமாகவே பாவியாகிய மனிதன் இரட்சிப்பை அடைகிறான் என்பதனால் அப்போதனைகள் இப்பெயர் பெற்றன. சுருக்கமாகச் சொல்லப்போனால் கல்வினின் இவ்வைங்கோட்பாடுகள் மனிதன் இரட்சிப்பை எவ்வாறு அடைகிறான் என்பதை விளக்குவதாக உள்ளன. தனது சொந்த முயற்சியாலா? அல்லது தேவ கிருபையினாலா? என்ற கேள்விக்கே இவை பதிலளிக்கின்றன. “பாவத்தில் இருக்கும் மனிதன் தன்னைத் தானே இரட்சித்துக் கொள்ள முடியாததால் கர்த்தர் மட்டுமே அவனுக்கு இரட்சிப்பை அளிக்க முடியும். கர்த்தர் மட்டுமே இரட்சிப்பை அளிக்கக்கூடியவரானால் அவர் தன் சித்தப்படி சுதந்திரமாக எவருக்கும் அதனை அளிக்கக்கூடியவராக இருக்க வேண்டும். கர்த்தர் தன் சித்தப்படி வரையறுக்கப்பட்டவர்களுக்கு மட்டும் இரட்சிப்பை அளிப்பதாக ஆணையிட்டிருந்தால் அவர்களுக்காக மட்டுமே கிறிஸ்து கல்வாரி சிலுவையில் மீட்பின் செயல்களை நிறைவேற்றியிருக்க முடியும். கிறிஸ்து அவர்களுக்காக மட்டும் மரித்திருந்தால் அவர்கள் இரட்சிப்பை அடையும்படி பரிசுத்த ஆவி அவர்களைத் திட்ப உறுதியாக அழைப்பார். ஆகவே, ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை இரட்சிப்பு கர்த்தரிடம் இருந்து பெறப்படுவதாக இருப்பதால் பரிசுத்தவான்கள் நித்திய ஆனந்தத்தை அடையும்படி விடாமுயற்சியுடன் பரிசுத்தமாக வாழ்வார்கள்.” (Jack Seaton, Five Points of Calvinism) இதுவே, ஐங்கோட்பாடுகள்.

இன்று இக்கிருபையின் போதனைகளை கிறிஸ்தவர்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியமாக இருக்கின்றது. இரட்சிப்பை அடையாதவன் பரிசுத்த வாழ்க்கையை வாழ முடியாது; பரலோகமும் போக முடியாது; அவனால் கர்த்தரை மகிமைப்படுத்தி இவ்வுலகில் வாழ முடியாது. ஆகவே, இரட்சிப்பை எப்படி அடைவது என்ற கேள்விக்கான வேதபூர்வமான பதில் இரட்சிப்பை அடைவதற்கான சரியான வழியை சுட்டிக் காட்டும். அச்சரியான வழியே சுவிசேஷப் போதனையின் மூலம் வெளிப்படுத்தப்பட வேண்டும்; திருச்சபை மக்களால் விசுவாசிக்கப்பட வேண்டும். அச்சரியான வழியை நம்புவதால் மட்டுமே திருச்சபைக்குள் ஓநாய்கள் புகுவதைத் தடை செய்ய முடியும். ஆகவே, திருச்சபை வேதபூர்வமாக அமைவதற்கும், அது பரிசுத்தமாக இருப்பதற்கும் கல்வினின் ஐங்கோட்பாடுகள் திருச்சபைக்கு மிகவும் அவசியம். இதை அறியாத, விசுவாசிக்காத திருச்சபை ஊழியங்கள் வேதபூர்வமாக அமைய முடியாது. அங்கு மனித ஞானப்படியும், மனிதனின் வல்லமையின் அடிப்படையிலுமே ஊழியங்கள் நடந்து வரும். அங்கு மெய்யான பரிசுத்தத்திற்கு வழி இருக்க முடியாது. கர்த்தருடைய வழியில் இரட்சிக்கப்படாமல் மனிதனுடைய கிரியைகளின் அடிப்படையில் இரட்சிப்பை அ‍டைந்தவர்கள்போல் பாவனை செய்பவர்களால் எப்படி பரிசுத்தமாக வாழ முடியும்? மெய்யான இரட்சிப்பும், அதன் நிச்சயமும் இல்லாத இடத்தில் தேவ வல்லமையைக் காண முடியாது.

கிறிஸ்துவின் மீட்பின் செயல்களையும், இரட்சிப்பையும் வேதபூர்வமாக விளக்கிப் பதிலளிப்பதே கல்வினின் ஐங்கோட்பாடுகள். இதன் அவசியத்தையும், இன்றைய காலக்கட்டத்தில் இதுபற்றிய அழுத்தமான, ஆழமான போதனையின் தேவையையும் நாம் மிகைப்படுத்த முடியாது. நாம் இதுவரை கூறியதனைத்தும் சத்தியமாக இருந்தபோதும், கல்வினின் ஐங்கோட்பாடுகள் மட்டுமே சீர்திருத்த விசுவாசம் என்று நாம் தவறாக எண்ணிவிடக்கூடாது. இவ்வைங்கோட்பாடுகள் மெய்க்கிறிஸ்தவத்திற்கு அடிப்படையான இரட்சிப்பு பற்றிய போதனையை அளித்தபோதும் சீர்திருத்தப் போதனைகள் அனைத்தையும் இவை உள்ளடக்கவில்லை. இரட்சிப்பு அடைந்த மனிதன் எவ்வாறு வாழ்ந்து கர்த்தரை மகிமைப்படுத்த வேண்டும் என்று இதனால் விளக்கமாக பதில் கூற முடியாது. அதற்கான பொதுவான பதிலையே இது அளிக்கின்றது. விசுவாசி இரட்சிப்பை அடைந்தபின் செய்ய வேண்டிய அவசியமான, கட்டளைகளை இதனால் விளக்க முடியாது. விசுவாசி எப்படிப் பரிசுத்தமாக வாழ்வது என்றும் இதனால் விளக்க முடியாது. விசுவாசி இணைந்து வாழ வேண்டிய சபையைப் பற்றியும் இதனால் விளக்கமளிக்க முடியாது. விசுவாசி அறிந்து கொள்ள வேண்டிய அநேக வேத சத்தியங்களையும் இதனால் விளக்க முடியாது. கல்வினின் ஐங்கோட்பாடுகள் சீர்திருத்த விசுவாசத்திற்கு அடிப்படையாகவும், ஆரம்பமாகவும் இருந்தபோதும் அவை மட்டுமே சீர்திருத்தப் போதனைகள் அல்லது சீர்திருத்த விசுவாசத்தின் ஆரம்பமும் முடிவும் என்று நாம் தவறாகக் கருதிவிடக்கூடாது. காட்டாற்றில் விழுந்த ஒருவன் கரைசேர ஒரு கயிற்றைக் கொடுத்து விடுவதனால் அவன் மூழ்கிவிடாமல் கரை சேர்ந்துவிட்டான் என்று நாம் சாதாரணமாக நம்பிவிடுவதில்லை. கயிறு அவன் கரை சேர்வதற்கு ஒரு ஆரம்பமே. கயிற்றின் அவசியத்தை நாம் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. கயிறில்லாமல் அவன் கரைசேரவே முடியாது; கயிறு அவசியம். ஆனால், கயிறு அவன் கரை சேர்வதற்கு ஓர் ஆரம்பம் மட்டுமே. அவன் கரை சேரச் செய்ய வேண்டிய காரியங்கள் இன்னும் எத்தனையோ இருக்கின்றன. ஆகவே, ஆரம்பமே முடிவாகிவிடாது.

ஆர். சி. ஸ்பிரவுல் (R. C. Sproul) என்ற அமெரிக்க சீர்திருத்த போதகர் இதுபற்றி எழுதும்போது, “கல்வினிச ஐங்கோட்பாடுகளை மட்டுமே சீர்திருத்தவாத இறையியல் என்று அடையாளங் காணுவது இன்று பரவலாக வழக்கில் இருக்கின்றது. இந்த ஐங்கோட்பாடுகள் சீர்திருத்த இறையியலுக்கு அடிப்படையாக இருந்தபோதும் சீர்திருத்த இறையியலில் இதற்கு மேல் இன்னும் எவ்வளவோ இருக்கின்றது”. என்று குறிப்பிட்டுள்ளார் (Grace Unknown, pg.29).

இதையெல்லாம் இவ்வளவு தூரத்திற்கு நான் விளக்கிச் சொல்வதற்குக் காரண‍மென்ன? கல்வினின் ஐங்கோட்பாடுகளும், சீர்திருத்தப் போதனைகளும் பரவிவரும் இந்நாட்களில், கல்வினின் ஐங்கோட்பாடுகள் மட்டுமே சீர்திருத்த விசுவாசத்தின் ஆரம்பமும் முடிவும் என்பதுபோல் சிலர் போதித்தும் நடந்து வருவதால்தான். கிருபையின் போதனைகளில் இவர்கள் வைத்திருக்கும் மதிப்பும் ஆர்வமும் அதற்கு மேல் போக முடியாதபடி ஒரு குட்டையைப்போல் தேங்கி நிற்கின்றன. கீறல் விழுந்த இசைத்தட்டைப்போல இவர்கள் கல்வினின் ஐங்கோட்பாடுகளையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கின்றனர். கிருபையின் போதனைகள் எத்தனை அவசியமாக இருந்தபோதும் அதை வைத்து மட்டும் சீர்திருத்த சபை நடத்திவிட முடியாது என்பதை இவர்கள் அறியாதிருக்கிறார்கள். கல்வினின் போதனைகள் கிருபையின் போதனைகளோடு நின்று விடவில்லை என்பதை கல்வினின் எழுத்துக்களை வாசித்தறிந்தவர்களுக்குப் புரியும்.

தன் நாட்டு அரசனுக்கு கிறிஸ்தவத்தைப்பற்றி விளக்கமாக எழுதிய கல்வின் திருச்சபை சீர்திருத்தத்தை வலியுறுத்தி எழுதியதை அவருடைய நூல் Institute of Christian Religion விளக்குகின்றது. இந்நூலின் 1512 பக்கங்களைக் கொண்ட ஆங்கில மொழிபெயர்ப்பில் 700 பக்கங்கள் சபை சீர்திருத்தத்தைப்பற்றிப் போதிக்கின்றன. கல்வின் போதித்த, எழுதி வளர்த்த கல்வினிசம் ஐங்கோட்பாடுகளை மட்டும் கொண்டதல்ல; அதைவிடப் பெரியது. கல்வின் எழுதிய இப்பெரு நூல் தமிழில் மிகச்சுருக்கமாக “சீர்திருத்த திருச்சபையின் கொள்கை” என்ற தலைப்பில் வெளிவந்தது. (இது மூலநூலின் அனைத்துப் போதனைகளையும் தன்னில் கொண்டிருக்கவில்லை. முக்கியமாக திருச்சபை சீர்திருத்தத்தைப் பற்றி விளக்கும் மூல நூலின் நான்காவது பாகம் இதில் சேர்க்கப்படவில்லை). தமிழில் இந்நூலுக்கு இப்பெயர் கொடுக்கப்பட்ட காரணம் கல்வினுடைய நூல் முழுமையான வேதபூர்வமான சபைச் சீர்திருத்த‍த்தைக் குறித்தது என்பதால்தான். 1543 இல் பேரரசன் 5ஆம் சார்ள்ஸ்க்கு சபை சீர்திருத்தத்தின் அவசியத்தைக் குறித்துக் கல்வின் ஒரு நூலையே எழுதி அனுப்பினார் (The Necessity of Reforming the Church). திருச்சபையில் பிரிவை ஏற்படுத்துவதாக அக்காலத்தில் தம்மைக் குறைகூறியவர்களைப் பார்த்துக் கல்வின் இந்நூலில், “ஒரு சபையின் பெயரைத் தூக்கி எறிந்துவிட்டால் மட்டும் போதாது. மெய்யான சபை எது? அதில் காணப்பட வேண்டிய உண்மையான ஐக்கியம் எது? என்று வேதபூர்வமாக ஆராய்ந்து, அறிந்து அவை இருக்கும்படியாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று கூறியதோடு தொடர்ந்து. “ஆரோக்கியமான சத்தியத்திற்கு எதிரி என்று தனது பேச்சாலும், நடவடிக்கைகளாலும் காட்டிக் கொள்ளும் மனிதன் ஒரு சபையில் எத்தனை பெரிய பொறுப்பையும் பெயரையும் கொண்டிருந்தாலும் அவை அனைத்தையும் இழந்தவனாகிறான்” என்றும் எழுதினார்.

பியூரிட்டன் பெரியவர்களில் ஒருவரான ஜோன் ஓவன் 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த சீர்திருத்தவாதி. இறையியல் பற்றி பதினேழு வால்யூம்களை எழுதித் தள்ளியுள்ளார். அதில் பத்தாம் வால்யூமின் நான்கில் ஒரு பகுதி மட்டுமே தமிழில் சுருக்கமாக வெளியிடப்பட்ட “கிறிஸ்துவின் மரணத்தினால் உண்டாகும் வாழ்வு”. ஓவன் திருச்சபை சீர்திருத்தம் பற்றி நான்கு வால்யூம்களை எழுதியிருக்கிறார். இந்நான்கு வால்யூம்களும் திருச்சபை பற்றி எழுதப்பட்டுள்ள போதனைகளில் சிறப்பானவை. இவையனைத்தும் ஆங்கில மொழியில் உள்ளன. என்னுடைய போதக வாழ்வில் எத்தனையோ சீர்திருத்தப் போதகர்களைப் போல நானும் இவற்றை அடிக்கடி திறந்து பயன் படுத்திக் கொள்கிறேன். இதை எதற்காகக் கூறுகிறேன் என்றால் ஓவன், கல்வினின் ஐங்கோட்பாடுகளை மட்டும் வேதமாக எண்ணி அவற்றை மட்டும் சுற்றிவந்து கொண்டிருக்கவில்லை. பியூரிட்டன்கள் அனைவருமே திருச்சபையின் பரிசுத்தத்திற்காகப் போராடியவர்கள்.

இன்று தமிழ்கூறும் நல்லுலகில் தோன்றி பல சிரமங்களுக்கும் மத்தியில் தலைதூக்கி வரும் சீர்திருத்த திருச்சபைகள் கிருபையின் போதனைகளில் அவசியம் கவனம் செலுத்தி ஆத்துமாக்களுக்கு அவற்றை விளக்கமாகப் போதித்தபோதும், அவற்றோடு மட்டும் நின்றுவிடக்கூடாது. கல்வினிசத்தையும், சீர்திருத்த விசுவாசத்தையும் அவர்கள் முழுமையாக அறிந்து கொள்ள முயல வேண்டும். (1689 விசுவாச அறிக்கையும், வினாவிடைப் போதனைகளும் சீர்திருத்தப் போதனைகளைத் தொகுத்து அளிக்கும் சாதனங்களாக இருக்கின்றன). அவர்கள் சபை சீர்திருத்தத்தில் ஈடுபட வேண்டும். கல்வினிசப் போதனைகளைப் பின்பற்றுகிறேன் என்று கூறி இயேசுவை ஏற்றுக் கொள்ள உங்கள் கரத்தைத் தூக்குங்கள் என்று சுவிசேஷக்கூட்டத்தில் அறிவிக்கும் மனிதர்களுக்கு கல்வினிசம் என்றாலே‍ என்னவென்று தெரியாது. கிருபையின் போதனைகளைப் போதிக்கிறேன் என்று கூறி இந்திய சாஸ்திரங்களுக்கும், சித்தாந்தங்களுக்கும் விளக்கங் கொடுத்து வருகிறவர்களை கல்வின் உயிரோடிருந்தால் தன் பார்வையாலேயே சுட்டுப்பொசுக்கி இருப்பார்.

சபை என்ற பெயரில் தாம் நினைத்ததைச் செய்து வேதபூர்வமாக சபை அமைப்பதிலும், வேதபூர்வமாக போதக ஊழியம் அமைவதிலும் கவனம் செலுத்தாதவர்கள் சீர்திருத்தப் போதனைகளை அறியாதவர்கள். ஒரு கல்வினிச விசுவாசி பெந்தகோஸ்தே இறையியல் கல்லூரியிலும், லிபரல் இறையியல் கல்லூரியிலும் பட்டம் பெறப் பாடுபடுவானா? சீர்திருத்தவாதிகள் தான் இதை அனுமதித்திருப்பார்களா? சபைக்குக் கட்டுப்படாமல், சபை கூடிவரும்போது ஆராதனையில் ஈடுபடாமல், சபை அனுமதியுடன் சபையால் அனுப்பப்பட்டு ஊழியங்களைச் செய்யாமல் கூடில்லாக் குருவிகளாக சொந்த ஊழியத்தில் ஈடுபடுபட்ட சீர்திருத்தவாதிகள் எவரையாவதும் சீர்திருத்த வரலாறு சந்தித்திருக்கிறதா? ஆராதனைக் கூட்டங்களில் பெண்களைப் பேசவைத்தும், காதைத் துளைக்கும் விதத்தில் டிரம் அடித்தும், கரங்களைத் தட்டி ஆடிப்பாடும் கூட்டத்திற்கும் சீர்திருத்தப் போதனைகளும் எந்தத் தொடர்பும் இருக்க முடியுமா? லூதரும், நொக்சும் இன்று உயிரோடிருந்தால் இவற்றைப் பார்த்துச் சகித்துக் கொண்டிருந்திருப்பார்களா? ஆராதனைக்கு வரும்போது அங்கு கர்த்தரின் ஆட்சியே நடக்க வேண்டும் என்ற தேவபயத்துடன், கட்டுப்பாடின்றி தறிகெட்டு ஓடப்பார்க்கும் சுய உணர்ச்சிகளுக்கு தடை‍போட்டு, ஆராதனையை கர்த்தரின் வார்த்தைபடி நடத்த முயலும் சீர்திருத்தவாதிகள் நம்மில் எத்தனை பேர்? கர்த்தருக்குப் பயந்து ஆண்டவருடைய நாளை (ஓய்வு நாள்) அசிங்கப்படுத்தாமல் அவருடைய மகிமைக்காக மட்டும் பயன்படுத்தும் கல்வினிச விசுவாசிகள் எத்தனைபேர்‍? ஆத்துமாக்களுக்கு ஆத்ம உயிரளிக்கும் வேதப்பிரசங்கத்தை அக்கறையோடு தயாரித்து பிரசங்கம் செய்யும் கல்வினிசப் போதகர்கள் எத்தனைபேர்? அடித்தாலும் ‍அசைய மாட்டேன் என்ற வைராக்கியத்தோடு சபையில் இருந்து சபை மக்களை மேய்க்கும், ஊர் சுற்றத் தெரியாத கல்வினிச ச‍பைப் போதகர்கள் எத்தனைபேர்? தன்னை வளர்த்துக் கொள்ளவும், தனக்குப் பெருமை தேடிக்கொள்ளவும் சபை நடத்தாமல் கர்த்தருடைய மகிமைக்காக உழைக்கும் சீர்திருத்தவாதிகளை நாம் இன்று காண முடிகிறதா?

இதிலிருந்து கல்வினிச ஐங்கோட்பாடுக‍ளே சீர்திருத்த விசுவாசமாகிவிடாது என்பது தெளிவாகப் புரிகிறதல்லவா? திருச்சபை சீர்திருத்தத்திற்காக தம் இரத்தத்தைச் சிந்தி, உயிரையே கொடுத்துழைத்தவர்கள் கல்வினிச சீர்திருத்தவாதிகள். அவர்களுடைய போதனைகளை அரைகுறையாகப் படித்துவிட்டு, அரைவேக்காட்டு சபைகளை அமைத்து, ஊழியங்களை நடத்தி நாம் சீர்திருத்தப் போதனைகளைப் பின்பற்றுகிறோம் என்று சொல்வது எப்படிச் சரியாகும்? சபை என்பது என்னவென்று தெரியாத சபைப் போதகர்கள் இன்று நம்மத்தியில் அதிகமானோர். சபை ஊழியம் என்று தொடங்கி, கேட்டவர்களுக்கெல்லாம் இனிப்பு வழங்குவதுபோல் ‍‍ஹோல் சேலாக ஞானஸ்நானம் கொடுத்து, திருவிருந்து வைத்து, சபை அங்கத்துவத்தையோ, சபை ஒழுங்கையோ, சபைக் கூட்டத்தையோ ஆத்துமாக்கள் அறியாதபடி செய்து சபை என்ற பெயரில் எதையோ செய்து கொண்டிருக்கும் கோமாளிகள்தான் எத்தனைபேர்? கல்வினிச சீர்திருத்தவாதிகள் இப்படியா சபை நடத்தினார்கள்? கல்வினின் போதனைகள் அடங்கிய Institute of Christian Religionல் அரைவாசிக்குமேல் சபை அமைப்பையும், சபை வாழ்க்கையையும் பற்றியல்லவா போதிக்கிறது. பியூரிட்டன்கள் தங்கள் காலப்பகுதியில் சபை சீர்திருத்தத்திற்காகவும், சபை ஆராதனை ஒழுங்கிற்காகவும் போராடாத போராட்டமா? ஸ்பர்ஜன் பெயரையும், கேரியின் பெயரையும் அடிக்கடிச் சொல்லி அவர்கள் வழியில் வந்ததாகக் காட்டிக் கொள்ளுபவர்கள் ஸ்பர்ஜனும், ‍கேரியும் ‍செய்த சபை ஊழியத்தைக் குறித்து சிறிது சிந்தித்துப் பார்க்க வேண்டும். கல்வினின் ஐங்கோட்பாட்டிற்கு மட்டும் இவர்களில் எவரும் முக்கியத்துவம் கொடுக்கவில்லையே!

சிலருக்கு பெந்தகொஸ்‍தேகாரர்களைத் திட்டிக் கொண்டிருப்பது மட்டுமே ஊழியமாக இருக்கின்றது. பெந்தகொஸ்தே குழுக்கள் நமக்கு ஒரு தலைவலிதான்; பெந்தகொஸ்தே போதனைகளும் தவறானவைதான்; அவற்றிற்கும் வேதத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இருந்தாலும், ஒருவர் பெந்தகொஸ்தே போதனைகளைக் கைவிட்டுவிடுவதனால் மட்டும் சீர்திருத்தவாதியாகிவிட முடியுமா என்ன? பெந்தகொஸ்தே போதனைகளை விட்டுவிட்டாலும் உங்கள் வாழ்க்கை மாறி, அரிச்சுவடியில் இருந்து கல்வினிச சீர்திருத்தப் போதனைகளைத் தாழ்மையோடு கற்று சபை வாழ்க்கையில் வளராவிட்டால் உங்களுக்கும் சீர்திருத்தவாதத்திற்கும் எந்தத் தொடர்பும் இருக்க முடியாது.

கல்வினிச ஐங்கோட்பாடுகளை விசுவாசிப்பதால் மட்டும் ஒருவர் சீர்திருத்த விசுவாசத்தை அறிந்தவரென்றோ, அவற்றைப் பின்பற்றுபவர் என்றோ கருத முடியாது என்பதை இதுவரைத் தெளிவாகக் கண்டுள்ளோம். கல்வினிச ஐங்கோட்பாடுகளைவிட சீர்திருத்த விசுவாசம் பெரியது; விரிவானது; முழுமையானது. சீர்திருத்த விசுவாசத்தின் முக்கிய அம்சங்களை நாம் இனி சுருக்கமாகப் பார்போம். இது சீர்திருத்த விசுவாசத்தில் ஆர்வம் கொண்டு வளர உங்களுக்குத் துணைபுரியுமானால் அதுவே இவ்வாக்கத்திற்குக் கிடைத்த பலனாகும்.

1) சீர்திருத்த விசுவாசம், வேதமே அனைத்தின் மீதும் சகல அதிகாரத்தைக் கொண்டுள்ளது என்றும், அதுவே நமது வாழ்க்கைக்கும், சபைக்கும் தேவையான அனைத்துப் போதனைகளையும் அளிக்கின்றது என்றும் விசுவாசிக்கின்றது.

சீர்திருத்தவாதிகள் இதைப் பெரிதும் வலியுறுத்தினர். வேதத்திலிருந்து தங்களுக்குத் தேவையானதை மட்டும் தெரிந்து கொள்ளும் பழக்கமும், தங்களுக்குப் பிடித்தமான முறையில் வேதத்திற்கு விளக்கம் கொடுக்கும் வழக்கமும் அவர்களிடம் இருக்கவில்லை. வேதம் கர்த்தருடைய சித்தத்தின் வெளிப்பாடு என்பதை அவர்கள் நம்பியதால் வேதத்தோடு விளையாடுவதை அவர்கள் விரும்பவில்லை. வேதத்தைத் தெளிவாகப் படித்துப் புரிந்து கொள்வது அவர்களுடைய இலட்சியமாக இருந்தது. வேதத்திற்கு தாம் நினைத்த விதத்தில் விளக்கம் கொடுக்க அவர்கள் ‍எப்போதுமே முற்படவில்லை. வேதம் தெளிவாகப் போதிக்கும் அனைத்தையும் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கடைப்பிடிக்க ‍அவர்கள் தவறவில்லை. ஆகவேதான், சீர்திருத்தவாதத்தின் முக்கிய போதனைகளில் ஒன்றாக “வேதம் மட்டுமே” (Sola Scripture) என்ற கோட்பாடு அமைந்திருக்கின்றது. இதையே 17ம் நூற்றாண்டுப் பியூரிட்டன் பெரியோரும் பின்பற்றினர். வேத போதனைகளை காலத்திற்குதவாததாகவும், நடைமுறைக்குப் பொருந்தாததாகவும் அவர்கள் கனவில்கூட சிந்தித்துப் பார்க்கத் தயங்கினர். இத்தகைய ஆழமான நம்பிக்கை ஏற்பட நாம் வேதத்தை முறையாக, தெளிவாகப் படிக்க வேண்டும். சீர்திருத்தவாதிகளின் வாழ்க்கையின் சகல பகுதிகளையும், அவர்களுடைய சபைகளையும் வேதமே ஆண்டது. வேதம் மட்டுமே நம்மையும், நமது சபைகளையும் ஆளவேண்டுமென்பதற்காகவே அவர்கள் விசுவாச அறிக்கைகளையும், வினாவிடைப் போதனைகளையும் விளக்கமாக எழுதி வைத்தனர்.

கல்வினிச ஐங்கோட்பாட்டிற்கு மட்டும் இடம் கொடுத்து வேதத்தின் ஏனைய போதனைகளுக்கு இடம் கொடுக்க மறுப்பவர்களை எப்படி சீர்திருத்தவாதத்துடன் சம்பந்தப்படுத்த முடியும்? சபையில் கூடிவருபவர்கள் ஆசைப்பட்டபடியும், தாம் நினைத்தவிதத்திலும் செயல்படுபவர்களுக்கும் சீர்திருத்தப் போதனைகளுக்கும் எப்படித் தொடர்பிருக்க முடியும்? கர்த்தரின் திட்டப்படியும், வார்த்தைபடியும் சபையையும், சபை ஆராதனையையும், சபையோடு சம்பந்தமான அனைத்துக் காரியங்களையும் கொண்டு நடத்த மறுத்து தன்னிச்சையாக நடந்து வருபவர்களுக்கும் சீர்திருத்தக் கோட்பாடுகளுக்கும் எந்தவிதத்தில் தொடர்பிருக்க முடியும்? கல்வினிச ஐங்கோட்பாட்டிற்கு அப்பால் போக நமது கால்கள் மறுக்கின்றனவா? வேதம் தெளிவாகப் போதிக்கும் ஞானஸ்நானத்தில் நமக்கு நம்பிக்கை இருக்கிறதா? வேதம் தெளிவாகப் போதிக்கும் ஓய்வு நாளை நாம் பயத்துடன் கடைப்பிடிக்கிறோமா? வேதம் நாம் கடைப்பிடிக்கும்படியாக கட்டளையிட்டுக்கூறும் பத்துக் கட்டளைகளை நாம் பின்பற்றுகிறோமா? நமது, தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம், போதக ஊழியம், சபை அனைத்துமே வேதத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கின்றதா? ஊழியம் செய்ய வேண்டும் என்ற சுயநல நோக்கத்தாலும், யாரோ பணம் கொடுக்கிறார்கள் என்பதற்காகவும் சத்தியத்தை விற்று சபை நடத்திக் கொண்டிருக்கிறோமா? ரோமன் கத்தோலிக்க சபையோடும், தவறான போதனைகளைப் பின்பற்றும் சபைகளுடனும், ஆர்மினியனிச, டிஸ்பென்சேஷனல் கோட்பாடுகளைப் பின்பற்றும் கிறிஸ்தவ நிறுவனங்களுடனும் கூட்டுவைத்து சத்தியத்தை அடமானம் வைத்திருக்கிறோமா? தவறு என்று தெரிந்தபோதும் அதைக் கண்டித்துத் திருத்தப் பயந்து, திருந்த மறுத்து யூதாஸைப் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? இக்கேள்விகளுக்கு இருதய சுத்தத்துடன் நம்மால் பதிலளிக்க முடிகின்றதா? வேதத்தின் கட்டுப்பாட்டுக்குள் வராத எதுவும் கர்த்தரின் ஆளுகைக்குள் அடங்கவில்லை. சீர்திருத்தவாதிகள் வேதத்திற்குக் கொடுத்த அதி உயர்ந்த இடத்தை சீர்திருத்தக் கோட்பாடுகளில் தங்களுக்கு ஆர்வமிருப்பதாகக் காட்டிக்கொள்ளும் பலர் இன்று கொடுக்கத் தயங்குகிறார்கள். இந்நிலை தொடரும்வரை அவர்கள் வாழ்க்கையிலும் சபையிலும் சீர்திருத்தம் நிச்சயமாக ஏற்பட ‍முடியாது.

2) சீர்திருத்த விசுவாசம் திருச்சபை சீர்திருத்தத்தை வலியுறுத்திப் போதிக்கின்றது.

சீர்திருத்த விசுவாசத்தை விளக்கும் விசுவாச அறிக்கைகள் வேதபூர்வமாக வரையறுக்கப்பட்ட ஆராதனைக்குரிய தத்துவத்தை (The Regulative Principle of Worship) விளக்குகின்றன. சீர்திருத்த பாப்திஸ்து போதகர்களில் ஒருவரான சாம் வோல்‍டிரன் (Sam Waldron) The Regulative Principle of the Church என்ற ஒரு சிறு நூலை வெளியிட்டார். இதில் நமது பியூரிட்டன் பெரியோர்களால் விளக்கப்பட்ட Regulative Principleஐ விரிவாக்கி அவை சபைக்கும் பொருந்தும் என்று வோல்டிரன் வலியுறுத்துகிறார். வோல்டிரனுடைய வாதத்தில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. பியூரிட்டன் பெரியோர்கள் காலத்தில் இத்தத்துவம் ஆராதனை சம்பந்தமாக ஏற்பட்ட ஒரு பிரச்சனை காரணமாக ஆரம்பித்தபோதும் அத்தத்துவம் ஆராதனைக்கு மட்டுமே பொருத்தமானது என்று கூறிவிட முடியாது. இத்தத்துவம், கர்த்தரின் ஆராதனை கர்த்தரின் வார்த்தைபடி அமைய வேண்டும் என்று கூறுகிறது. அதாவது மனித ஞானத்தின்படியும், உலகப்பிரகாரமாகவும் ஆராதனை அமையக்கூடாது என்பதே இத்தத்துவமாகும். இப்பொதுவான தத்துவம் நிச்சயம் சபை அமைப்புக்கும், சபை சம்பந்தமான காரியங்களுக்கும் உரியது. கர்த்தருடைய திருச்சபை கர்த்தருடைய வார்த்தைபடி அமைய வேண்டும் என்பதே இத்தத்துவத்தின் போதனையாகும்.

ரோமன் கத்தோலிக்க சபை கர்த்தருடைய வேதத்தை நிராகரித்து திருச்சபையையும், ஆராதனையையும் மனித ஞானப்படி நடத்தி வந்தததால்தான் சீர்திருத்தவாதமே வரலாற்றில் எழுந்தது. சீர்திருத்தவாதிகள் வேதபூர்வமாக எல்லாம் அமைய வேண்டும் என்றும், திருச்சபை வேத போதனையின்படியே அனைத்தையும் செய்ய வேண்டும் என்றும் போதித்தனர். ஆகவே, இன்று சபை சீர்திருத்தம் அவசியமாகிறது. பாரம்பரியத்தையும், தனி மனித துதிபாடுதல்களையும் மூட்டைகட்டி வைத்துவிட்டு வேதபோதனைகளைப் பின்பற்றி சபை அமைத்தலில் ஈடுபட வேண்டும். போதக ஊழியத்தில் இருந்து சபையின் அனைத்துப் பகுதிகளிலும் இன்று சீர்திருத்தம் தேவையாயிருக்கிறது. சபை, சபையாக இருக்க, அதற்கு அமைப்புவிதியும், அங்கத்துவமும் தேவை. அங்கத்தவர்களே இல்லாமல் சபைகள் இன்று ஓடிக் கொண்டிருக்கின்றன. சபையைச் சேர்ந்தவர்கள் யார்? என்பது சபைக்கு வருபவர்களுக்கே தெரிவதில்லை. சபை எதை விசுவாசிக்கின்றதென்பதை எந்தவித வெட்கமோ, பயமோ, தயக்கமோ இல்லாமல் அறிவிக்கும் 1689 விசுவாச அறிக்கையும், வினாவிடைப் போதனைகளும் இன்று சபைக்குத் தேவை. ஆர்ச் பிசப், பிசப், அருள்திரு, அறிவர் என்ற பட்டங்களுக்கெல்லாம் துதி பாடும் பழக்கத்தை விட்டுவிட்டு வேதம் போதிக்கும் அடையாளங்களை மட்டும் கொண்ட போதகர்கள் சபை நடத்த வேண்டிய அவசியமும் இன்று ஏற்பட்டுள்ளது. போதகர்களும் சபையாலேயே தெரிவு செய்யப்பட வேண்டும். லிபரல் மற்றும் சமயசமரசக் குளறுபடியுள்ள வேதாகமக் கல்லூரிகளுக்குப்போய் போதகர்களாக வரப்பார்க்கும் பொய்யான ஊழியமுறையும் அடியோடு தவிர்க்கப்பட வேண்டும். வேதபூர்வமான இலக்கணங்களக் கொண்டு வேத அடிப்படையில் சபையால் தெரிவு செய்யப்பட்ட மூப்பர்கள் சபையை ஆளுவது இன்று அவசியமாகிறது. ‍சேவை மனப்பான்மையை மட்டும் கொண்ட உதவியாளர்கள் சபை நிர்வாகத்தைக் கவனிக்கும்படி நியமிக்கப்பட வேண்டும். சீர்திருத்தக் கோட்பாடுகளை வைராக்கியத்தோடு பின்பற்றி உழைக்கும் சபைப் போதகர்கள் இன்று மிகக்கவனத்துடன் தங்கள் பிரசங்க மேடைகளைப் பாதுகாக்க வேண்டும். அங்கே போலிகளுக்கும், சீர்திருத்தவாதிகள் போல் பாவனை செய்து கொண்டிருப்பவர்களுக்கும் இடமளிக்கக் கூடாது. அரைவேக்காட்டுப் பிரசங்கிகளுக்கும், ஐங்கோட்பாடுகளுக்கு இடங்கொடுக்க மறுக்கும் மாயமான்களுக்கும் இடமளிக்கக்கூடாது. சீர்திருத்தவாதத்திலும், வேதபூர்வமான சீர்திருத்த சபை அமைப்பிலும் ஆர்வம் கொண்டவர்கள் இத்தகைய முற்போக்கான சபை அமைப்பு முறைக்குத் தம்மைத் தயார் செய்து கொள்ள வேண்டும். சமுதாயமும், உலகமும் என்ன நினைக்குமோ என்று பயந்தும், பாரம்பரியத்துக்கு மதிப்புக் கொடுத்தும் சீர்திருத்தவாதிகள் பின்வாங்கியிருந்தால் இன்று நாம் சபை சீர்திருத்தத்தைப் பற்றிப் பேசும் நிலையே ஏற்பட்டிருக்காது. மனிதனுக்கு பயப்படுவது என்பது சீர்திருத்தவாதிகளின் அகராதியில் எப்போதுமே இருக்கவில்லை.

3. சீர்திருத்த விசுவாசம் கர்த்தர் ஏற்றுக்கொள்ளத்தக்க ஆராதனையை மட்டுமே கர்த்தருக்கு வழங்க வேண்டுமென்பதில் அக்கறை கொண்டுள்ளது.

சமீபத்தில் ஒரு பெண் விசுவாசி என்னைப் பார்த்து, ஐயா! சபையில் பெண்கள் வேதம் வாசிப்பதிலும், பேசுவதிலும் என்ன தவறு என்று கேட்டார்? அதற்கு நான் அம்மா! இதில் எனக்கென்று ஒரு தனிக் கொள்கை இல்லை. கர்த்தர் தன் வேதத்தில் இதற்கு அனுமதி கொடுக்காததால் இதை நாம் செய்யக்கூடாது என்று சொன்னேன். புதிய ஏற்பாடு தெளிவான விளக்கங்களைக் கொடுத்து இதைத்தடை செய்கிறது. அந்தப் பெண் விசுவாசியும் அதை ஏற்றுக்கொண்டார். சபை ஆராதனையைப் பொறுத்தவரையில் வேதம் கர்த்தரின் கட்டளைகள் மட்டுமே பின்பற்றப்பட வேண்டு‍மென்று போதிக்கின்றது. இன்று மனித ஞானத்திற்கும், உணர்ச்சிகளுக்குமே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால் இவ்வுண்மை அநேகருக்குப் புலப்படாமலிருக்கிறது. ஆராதனை என்றால் நாம் நினைப்பதையும், விரும்புவதையும் கர்த்தரிடம் கொண்டு வரலாம் என்று பலரும் நம்புகிறார்கள். காயீனின் ஆராதனையைக் கர்த்தர் ஏற்றுக் கொள்ளாததற்குக் காரணமே அவனது ஆராதனை கர்த்தரின் வார்த்தையின்படி அமையாததுதான் என்பது அவர்களுக்குப் புரிவதில்லை. சிலருக்கு ஆராதனை வேளையில் எதையும் செய்ய வேண்டும் என்ற ஒரு “கிக்” ஏற்படுகிறது. கை தட்டாவிட்டாலோ அல்லது உடல் அசைந்தாடாவிட்டாலோ அவர்களுக்கு ஆராதித்ததுபோல் தோன்றுவதில்லை. இதெல்லாம் வெறும் மாம்சத்திற்குரிய சொந்த உணர்ச்சியே தவிர வேறில்லை என்பதை அவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை. நாம் ஏற்கனவே கூறியது போல் கர்த்தர் ஆராதனை குறித்த ஒருவிதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். அதாவது, அவரது ஆராதனை அவர் வார்த்தைப்படி இருக்க வேண்டு‍மென்பதுதான் அவ்விதி. இதையே ஆங்கிலத்தில் The Regulative Principle of Worship என்று அழைப்பார். வேதம் போதிக்கும் இவ்விதிக்கு உருவம் கொடுத்து இதைப் பெரிதும் விளக்கிப் போதித்தார்கள் நமது சீர்திருத்தப் பெரியோர்கள். எனவே, கர்த்தரின் ஆராதனை சபையில் வேதபூர்வமாக அமைய வேண்டும். இவ்வாராதனைத் தத்துவம் திருச்சபை ஆராதனை வேளைகளில் வேதம் கட்டளையிட்டுப் போதிக்கும் – பிரசங்கம், போதகரின் ஜெபம், வேத வாசிப்பு, சங்கீதம், கீர்த்தனைகள், பாடல்கள் என்பவற்றின் மூலம் துதித்தல், திருவிருந்து, காணிக்கை எடுத்தல், திருமுழுக்கு ஆகியனவற்றை மட்டுமே ஆராதனையின் பகுதிகளாக இருக்க வேண்டும் என்று போதிக்கின்றது. இவற்றைத் தவிர ஆராதனையில் வேறு எவற்றையும் சேர்க்கக்கூடாது என்பது கர்த்தரின் கட்டளை. 1689 விசுவாச அறிக்கையும் இதையே விளக்குகிறது. தனிநபர் பாடலுக்கோ, கச்சேரிக்கோ, தேவைக்கதிகமான இசைக்கருவிகளுக்கோ, கைதட்டலுக்கோ, ஸ்தோத்திரம் என்ற பெயரில் அனைவரும் சேர்ந்து பேசுவதோ (இதை தமிழ் நாட்டில் மட்டும் தான் நான் பார்த்திருக்கிறேன்) ஆராதனையில் இடம் பெறக்கூடாது. ஆராதனை கர்த்தரின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு நடக்கும் போதே அது கர்த்தரால் ஏற்றுக்கொள்ளப்படும் ஆராதனையாக இருக்கிறது என்பது வேதம் போதிக்கும் உண்மை.

“ஆராதனையில் நம் விருப்பப்படி எதையும் செய்யக் கூடாதா?” என்று எவராவது ‍கேட்கலாம். நண்பனே! ஆராதனை என்பதே கர்த்தரால் ஏற்படுத்தப்பட்டதுதான். அதை நாம் கண்டுபிடிக்கவில்லை. அதை ஏற்படுத்திய கர்த்தர் இப்படித்தான் ஆராதிக்க வேண்டுமென்று சொல்லியிருப்பதால் அவர் விருப்பப்படி ஆராதிக்கும் போதுதான் அவருக்கு அது திருப்திகரமாக இருக்கிறது. தனக்குத் திருப்தி இல்லாதவற்றை அவர் எப்போதுமே நிராகரிக்கத் தவறவில்லை (லேவியராகமம் 10:1-3).

சிலர், “நீங்கள் சொல்வது தவறு. நாம் எதையும் ஆராதனையில் செய்யலாம். ஆனால், அவற்றை முழு இருதயத்தோடும், விசுவாசத்தோடும் செய்தால் கர்த்தர் ஏற்றுக் கொள்வார்” என்று சொல்வார்கள். இது தவறான வாதம். ஏனெனில் தாவீதின் நண்பன் ஊசா உடன்படிக்கைப் பெட்டியை இருதயசுத்தத்தோடு தான் தொட்டு அது ஆடுவதை நிறுத்தி சரிப்படுத்தப் பார்த்தான் (2 சாமுவேல் 6). ஆனால் கர்த்தர் அவனைத் தண்டித்தார். கர்த்தர் தாவீதிடம் பேசியபோது ஊசாவின் இருதயம் பாழாயிருந்தது என்று சொல்லவில்லை. தான் ஏற்கனவே கட்டளையிட்டபடி அவன் செய்யவில்லை என்று தான் சொன்னார். இதேபோல் பல உதாரணங்களை நாம் வேதத்தில் இருந்து காட்ட முடியும். எனவே, நாம் நினைத்ததை, அவற்றை எத்தனை இருதய சுத்தத்தோடு கர்த்தருக்கு முன் வைத்தாலும் அவை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

வேறு சிலர், “கர்த்தருடைய வார்த்தை கட்டளையிட்டு, செய்யாதே! என்று சொல்லாத காரியங்களை ஆராதனையில் சேர்த்துக்கொள்ளலாம்” என்பார்கள். 17ம் நூற்றாண்டில் ஆங்கிலேய திருச்சபை (Church of England) இவ்விதமாகவே வாதம் செய்தது. ஆங்கிலேய சபையின் விசுவாச அறிக்கையான 39 விதிகளில் (39 Articles) 12 ம் விதி – “விசுவாசத்தைக் குறித்த காரியங்களில் எதையும் தீர்மானிக்கும் அதிகாரத்தையும் ஆராதனைக்குரிய எந்தவிதமான சடங்குகளைச் செய்யும் அதிகாரத்தையும் சபை கொண்டிருக்கிறது” என்று கூறுகிறது. இவ்விதமான போதனையை Normative Principles of Worship என்று அழைப்பார்கள். இவ்வாதத்திற்கு எதிராக பியூரிட்டன் பெரியோர்கள் போராடி வேதம் போதிக்கும் ஆராதனை விதிகளை நிலை நாட்டினர். இவற்றை மட்டும்தான் ஆராதனையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கர்த்தர் வலியுறுத்திக் கூறும்போது அக்கட்டளை மற்ற எல்லாவற்றையுமே தடைசெய்கின்றது என்றும், ஆகவே, அவர் கட்டளையிட்டு செய்யாதே என்று சொல்லாதவற்றை ஆராதனையில் சேர்க்கலாம் என்று கூறுவது பெருந்தவறு என்று பியூரிட்டன் பெரியோர்கள் போதித்தனர். பாரம்பரிய சபைகள் (Traditional Churches) அனைத்திலும் இன்று பியூரிட்டன் பெரியோர்கள் போதித்த ஆராதனைத் தத்துவங்களுக்கு எதிரான முறையிலேயே ஆராதனை நடைபெற்று வருகின்றது. உதாரணத்திற்கு சி. எஸ். ஐ சபைகளை எடுத்துக் கொள்ளலாம்.

வேதம் போதிக்கும் வரையறுக்கப்பட்ட ஆராதனைத் தத்துவத்திற்கு எதிராக வாதம் செய்பவர்கள், “அவர் பெண்களைப் பேசக்கூடாது என்றுதானே சொன்னார், வாசிக்கக்கூடாது என்று சொல்லவில்லையே. அதனால் அவர்கள் சபையில் உரத்த சத்தமிட்டு வேதம் வாசிக்கலாம்” என்று சொல்வார்கள். இவ்வாதம் சரியா? என்று பார்ப்போம். முதலில் ஆராதனை ஆண்களான போதகர்களால் நடத்தப்பட வேண்டும். அவர்களோ மூப்பர்களோ அல்லது அவர்கள் அனுமதிக்கும் ஆத்மவிருத்தியில் முதிர்ச்சியுள்ள வேறு ஆண்களோ தான் வாசிக்க வேண்டும். சபையில் வேதம் வாசிப்பது என்பது அதிகாரபூர்வமான செயல். போதகர்கள், மூப்பர்களாகிய ஆண்களுக்கே உரிய அதிகாரபூர்வமான செயல்கள் எதையும் சபை கூடி வரும்போது பெண்கள் செய்யக்கூடாது. இதனால் தான் 1 கொரிந்தியர் 14 ஆவது அதிகாரத்தில் பவுல் கர்த்தரிடம் இருந்து வெளிப்படுத்தலைப் பெற்று “சபைகளில் உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக்கடவர்கள்; பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை; அவர்கள் அமர்ந்திருக்க (அமைதியாக இருக்க) வேண்டும்; வேதமும் அப்படியே சொல்லுகிறது” என்று கூறியுள்ளார். வேதமும் அப்படியே சொல்கிறது என்று பவுல் கூறுவது முழு வேதத்தையும் குறித்ததாகும். இங்கே “பேசாமலிருக்கக்கடவர்கள்” என்ற வார்த்தைக்கு வாயைத் திறந்து சத்தமிட்டுப் பேசாதீர்கள் என்று பொருள். (“பேசாதே” என்றால் “பாடாதே” என்றும் அர்த்தம் என்பதைப் புரிந்து கொள்ள முடியாத சம்மட்டிகள் இல்லை நாம்.” பெண்கள் எல்லோரும் பாடும்போது சேர்ந்து பாடலாம். தனியாக சபைகூடிவரும்போது, போதிக்கவோ, பாடவோ, வேதத்தை எழுந்து நின்றோ, அமர்ந்த நிலையிலோ எல்லோரும் கேட்கும்படியாக வாசிக்க அனுமதியில்லை. இது முழு வேதமும் போதிக்கும் உண்மை என்று பவுல் கூறும்போது நம்புத்தி மட்டும் வேறுவிதமாகப் போகப் பார்ப்பது தவறு. சீர்திருத்தவாதிகள் அன்றும் இன்றும் தங்கள் சபைகளில் பெண்கள் இந்தவிதமாக நடந்து கொள்ள அனுமதித்ததில்லை. வேதத்திற்கு அடிபணிந்து கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் மாற்றிக் கொள்ளமுடியாதவர்களுக்கும் சீர்திருத்தவாதத்திற்கும் சம்பந்தமிருக்க முடியாது.

கர்த்தர் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆராதனையில் வேதபிரசங்கத்திற்கு அதிகமுக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதன் மூலம் கர்த்தர் தன் ஆத்துமாக்களோடு பேசுகிறார். அப்பிரசங்கங்களைப் படித்துத் தயாரித்து வேதபூர்வமாக பிரசங்கிக்காத மனிதர்கள் சீர்திருத்தவாதிகளாக இருக்க ‍முடியாது. படித்துத் தயாரித்துக் கொடுக்கப்படும் பிரசங்கங்களை ஆவியானவர் பயன்படுத்தமாட்டார் என்று நம்பிக் கொண்டிருக்கும் மழுங்கிப்போன ஒரு போலிக் கிறிஸ்தவம் தமிழ் மக்களை இன்று ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. சபை, சபையாக பிரசங்கம் என்ற பெயரில் ஆத்துமாக்களைத் திட்டிக் கொண்டும், கதை சொல்லியும், சொந்த வாழ்க்கை அனுபவங்களைச் சொல்லித் தம்பட்டம் அடிப்பதுமே பல போதகர்களுக்கு இன்று வழக்கமாக இருக்கின்றது. அத்தோடு தங்கள் திறமையைக் காட்டிக் கொள்ள இசையிலும், பாட்டிலும் நேரத்தை செலவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆராதனையை மியூசிக் கன்டெஸ்டாகவும், தனி மனிதத் துதிபாடலுக்காகவும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள். இந்நிலமை மாற வேண்டும். பிரசங்கம் என்ற பெயரில் செய்யப்படும் அட்டூழியங்களும், அதைச் செய்பவர்களும் திருச்சபையிலிருந்து அகற்றப்பட வேண்டும். ஆராதனையில் தனி மனித துதிபாடுதல் நிர்தாட்சண்யமின்றி விலக்கப்பட வேண்டும்; வேதப்பிரசங்கங்களால் அது அலங்க‍ரிக்கப்பட வேண்டும்.

இவையே சீர்திருத்த விசுவாசம் போதிக்கும் ஆராதனைத் தத்துவம். சீர்திருத்தவாதியாக இருந்து நீ வாழும் காலத்தில் கர்த்தருக்குப் பிரியமான முறையில் சபை நடத்த ஆசைப்படுகிறாயா நண்பனே! இவ்வாராதனைத் தத்துவத்தை நீ சபையில் நடைமுறைக்குக் கொண்டுவ‍ரும்போது இதுவரை தன் உணர்ச்சிகளுக்கும், தனிமனித வழிபாட்டுக்கும் தூபம் போட்டுக் கொண்டிருந்த அறிவில்லாத மந்தைகள் அதைத் தடுக்கப் பார்க்கும். வேதத்தை விரித்து வசனங்களை எடுத்துக் காட்டி விளக்கி அவர்களுக்கு கர்த்தரின் வழிமுறைகளைக் காட்டு. சிலர் உன்னைக் குறைகூறுவார்கள், சிலர் உன்னைத் தொலைக்கப் பார்ப்பார்கள், வேறுசிலர் ஓடியும் விடுவார்கள். ஆனால், சத்தியத்திற்காக தம்மைப் பணயம் வைத்துழைத்த நமது பெரியோர்களை அப்போது நினைத்துக்கொள். அன்போடு, அதேநேரம் உறுதியுடன் போதி. எதிர்க்கும் கூட்டம் சிந்திக்கும் நாள் வரும்; சீரடையும். ஓடுகிற கூட்டம் எப்போது‍மே நிலைக்காது. அது ஓடட்டும்; அதனால் நமக்கு எந்தப் பயனும் இல்லை. அது பரலோகம் போகிற கூட்டமாக இருக்காது.

4. சீர்திருத்த விசுவாசம், விசுவாசிகள் பத்துக்கட்டளைகளைப் பின்பற்றிப் பரலோகம் போகும்வரை பரிசுத்தமான வாழ்க்கையை இவ்வுலகில் வாழ வேண்டுமென்று போதிக்கின்றது.

பழைய ஏற்பாட்டிற்கும், புதிய ஏற்பாட்டிற்கும் இருக்கும் தொடர்பையும் ஒற்றுமையையும் புரிந்து கொள்ளாதவர்கள் செய்யும் பெரும் தவறு பழைய ஏற்பாடு இஸ்ரவேலருக்கும் புதிய ஏற்பாடு கடவுளின் மக்களுக்கு உரியது என்ற செயற்கையான போதனையைப் போதிப்பதுதான். டிஸ்பென்சேஷனலிசத்தின் இப்பெருந்தவற்றால் வேதம் இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. தேவனுடைய மக்களும் இரண்டாகப் பி‍ரிக்கப்படுகிறார்கள். அத்தோடு வேதபோதனைகள் அனைத்துமே இரண்டாகப் பிரிக்கப்பட்டு இரு வேறு மக்களுக்கு வெவ்வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டதாகப் போதிக்கப்படுகிறது. இத்தவறான போதனையின் விளைவாகத்தான் பழைய ஏற்பாடு புதிய ஏற்பாட்டு மக்களுக்கு சொந்தமானதல்ல என்ற போதனை உருவாகி பழைய ஏற்பாட்டுக் கட்டளைகளைப் புதிய ஏற்பாட்டு மக்கள் இன்று கடைப் பிடிக்கத் தேவையில்லை என்ற விளக்கம் கொடுக்கப்படுகிறது. இது வேதம் போதிக்காத, மிகவும் செயற்கையான, மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு போதனை. இதனை ஆரம்பித்து வைத்த பெருமை ஜோன் நெல்சன் டார்பியைச் (John Nelson Darby) சாரும். இதை உலகம் பூராவும் பரப்பிய பெருமை ஸ்கோபீல்டைச் (Scofield) சாரும்.

ஆனால், சீர்திருத்த விசுவாசம் பழைய புதிய ஏற்பாடு இரண்டையும் கொண்ட ஒரே நூலாக வேதம் இருப்பதாகவும், கர்த்தருக்கு சொந்தமான ஒரே மக்கள் கூட்டம் மட்டுமே இருப்பதாகவும் போதிக்கின்றது. பழைய ஏற்பாட்டு விசுவாசிகளும், புதிய ஏற்பாட்டு விசுவாசிகளும் இரட்சிப்பை ஒரேவிதமாக அடைந்து இவ்வுலகில் கண்களை மூடியதும் பரலோகத்திற்கே போகிறார்கள் என்றும் போதிக்கின்றது. அவர்கள் இவ்வுலகில் விசுவாசிகளாக வாழும்போது கர்த்தரின் பத்துக்க‍ட்டளைகளைத் தம்வாழ்வில் தவறாது கடைப்பிடித்து வாழ வேண்டும் என்றும் போதிக்கின்றது. பத்துக்கட்டளைக‍ள் எக்காலத்திற்கும் தேவையானது என்பது சீர்திருத்த விசுவாசத்தின் அசைக்க முடியாத போதனை. அது போதிக்கும் ஓய்வு நாளையும் விசுவாசிகள் இன்று பின்பற்ற வேண்டும் (மன மகிழ்ச்சியூட்டும் ஓய்வு நாள் என்ற ஆக்கத்தை வாசிக்கவும்). பத்துக்கட்டளையே விசுவாசி இவ்வுலகில் கண்மூடும்வரை கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கை நியதியாக இருக்கின்றது.

5. சீர்திருத்த விசுவாசம், வேதபூர்வமான நற்செய்தி ஊழியத்தில் ஈடுபட்டு சபைகளை எல்லா இடங்களிலும் ஏற்படுத்த வேண்டும் என்ற வாஞ்சை கொண்டது.

இந்திய மண்ணில் இன்று மதமாற்றத்திற்கெதிராக ஏற்பட்டிருக்கும் பேரெதிர்ப்புக்கு கிறிஸ்தவர்கள் என்று தம்மை அழைத்துக் கொண்டு கிறிஸ்தவ ஊழியத்தில் ஈடுபட்டிருப்பவர்களும் ஒரு முக்கிய காரணம் என்பதை சொல்லிப் புரிய வைக்கத் தேவையில்லை. இயேசுவுக்கு கிராமம் கிராமமாகப் போய் சிலுவைக் கொடியேற்றுகிறோம் என்று சொல்லி கிராமங்களுக்குப் போய் அங்கே கொடியேற்றி அக்கிரமங்களை இயேசுவுக்காக வென்று விட்டோம் என்று அறிக்கையிடும் இயேசுவுக்குத் தெரிந்திராத, வேதம் அறியாத சுவிசேஷ ஊழியங்களை இந்திய மண்ணில்தான் பார்க்க முடியும். பிராமணர்கள் வாழும் அக்கிரஹாரத்துக்குப்போய் பேய்விரட்டுகிறோம் என்று கூறி இயேசுவின் நாமத்தால் அக்கிரகாரத்தை சுற்றிச் சுற்றி வந்து ஜெபம் செய்த ஒரு பெந்த‍கோஸ்தே ஊழியரை நான் டெலிவிஷனில் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு வாரமும் பத்துபேரை இயேசுவிடம் கொண்டுவந்துவிட வேண்டுமென்று தன் ஊழியர்களுக்குக் கட்டளையிட்டு கிறிஸ்தவ ஊழியம் செய்யும் ஒரு பெரிய கிறிஸ்தவ நிறுவனத்தைப்பற்றி நான் ‍கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு வருடத்தில் பட்டிதொட்டி எல்லாம் ஆயிரம் சபைகளை அமைப்பது என் இலட்சியம் என்று என்னிடம் சொன்ன ஒரு போதகரையும் நான் அறிவேன். இத்தகைய ஞானசூன்யமான செயல்களால் ஆத்திரமடையாத மக்கள் இருக்க முடியுமா? இதை வேதம் எங்கே சுவிசேஷ ஊழியம் என்று போதிக்கிறது? கிறிஸ்துவின் பெயரில் செய்யப்படும் இத்தகைய வரட்டுத்தனமான செயல்கள் இந்து முன்னணி போன்ற இயக்கங்களுக்கு நொறுக்குத்தீனி போடாமல் வேறென்ன செய்யும். சுவிசேஷ ஊழியம் என்ற பெயரில் பெரும் அட்டூழியங்கள் தமிழ் பேசும் மக்கள் வாழும் எல்லா நாடுகளிலும் இருந்து வரும் இக்காலத்தில் சுவிசேஷ ஊழியத்தை வேதபூர்வமாக கொண்டு நடத்த வேண்டிய பெரும் பொறுப்பு சீர்திருத்த விசுவாசத்தைப் பின்பற்றத் துடிக்கும் சபைகளுக்கு இருக்கிறது.

வேதபூர்வமாக சுவிசேஷ ஊழியம் செய்ய வேண்டுமா? அதற்கான வேதம் போதிக்கும் வழிகளைப் பார்ப்போம்.

1) சுவிசேஷத்தை வேதபூர்வமாக பிரசங்கிக்கவும், அறிவிக்கவும் வேண்டும்.

இன்று சுவிசேஷப் பிரசங்கம் என்றுமில்லாத வகையில் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. சுவிசேஷ ஊழியம் என்ற பெயரில் பாதர் பெர்க்மன்ஸ் போன்றோர் நடத்தும் கூத்துக்களும், பெந்தகொஸ்தே, கெரிஸ்மெட்டிக் கூட்டத்தாரின் சுகமளிக்கும் விழாக்களும் வேதம் போதிக்கும் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை இன்று முழுதாக ஆத்துமாக்கள் அறியாதபடி மறைத்து வைத்துள்ளன. கிறிஸ்துவின் மீட்பின் செயல்களையும் அதனால் ஏற்படும் பலன்களையும் இன்றைய சுவிசேஷப் பிரசங்கங்கள் விளக்குவதாக இல்லை. சுகமளிப்பதற்காகவும், பசி தீர்ப்பதற்காகவும் மட்டுமே கிறிஸ்து இவ்வுலகுக்கு அனுப்பப்பட்டதுபோல் பிரசங்கங்கள் அமைந்துள்ளன. இவற்றை நம்பாதவர்களும் கூட சுவிசேஷத்தை சரியாகப் பிரசங்கிப்பதில்லை. இயேசு உன்னை நேசிக்கிறார் என்ற வாசகத்தைக் கேள்விப்படாதவர்கள் இருக்க முடியாது. அதை மட்டும் சொல்பவர்கள் பாவிகளை அவர்களுடைய பாவத்திலிருந்து விடுவிப்பதற்காக கிறிஸ்து கல்வாரி சிலுவையில் என்ன செய்தார் என்பதை விளக்குவதில்லை. சுவிசேஷப் பிரசங்கத்தின் தரம் மிகவும் குறைந்துள்ளது. இதன் காரணமாக கிறிஸ்துவைப் பற்றிச் சரியாகத் தெரிந்து கொள்ளாத, விசுவாசத்தையே அறியாதவர்களுக்கெல்லாம் ஞானஸ்நானம் கொடுக்கப்படுகின்றது.

இந்நிலை மாற வேண்டும். சுவிசேஷப் பிரசங்கத்தில் சீர்திருத்தம் ஏற்பட வேண்டும். வேதபூர்வமாக சுவிசேஷம் மறுபடியும் பிரசங்கிக்கப்பட வேண்டும். போதகர்கள் சுவிசேஷப் பிரசங்கத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வேதத்தைப் படித்து, ஆராய்ந்து, ஜெபத்துடன் வேதவசனங்களைத் தெரிவு செய்து சுவிசேஷப்பிரசங்கம் தயாரிக்கப்பட வேண்டும். இன்று தமிழர் மத்தியில் பிரபலங்கள்போல் தெரியும் சுவிசேஷகர்கள் பாகவதர்களாகவும், திறமையாகக் கதை சொல்லி ஆத்துமாக்களின் மனதைக் குளிர வைப்பவர்களாகவும் தான் இருக்கிறார்கள். ஆனால், சுவிசேஷம் கிறிஸ்துவை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும். அவருடைய பரிகாரப்பலியை விளக்குவதாக இருக்க‍ வேண்டும். மனந்திரும்புதலையும், இரட்சிப்பையும்பற்றிப் போதிப்பதாக இருக்க வேண்டும். கிறிஸ்துவின் இலவசமாகக் கொடுக்கும் நித்திய ஜீவனை ஆத்துமாக்கள் கேட்கவும், பெற்றுக்கொள்ளவும் பரிசுத்த ஆவி பயன்படுத்தும் சாதனமாக இருக்க வேண்டும். சீர்திருத்தத்தில் ஆர்வமுள்ளவர்கள் தங்கள் சுவிசேஷப் பிரசங்கத்தை ஆர்வத்துடன், கவனத்துடன் தயாரிக்காமல் இருக்க முடியாது.

சுவிசேஷத்தை பிரசங்கத்தின் மூலம் அளிப்பது மட்டுமே நமது கடமையே தவிர அதற்கு மேலாக எதையும் செய்ய முயலக்கூடாது. ஆத்துமாக்களைக் கர்த்தரிடம் கொண்டு வரும் பணி ஆவியானவருக்கே உரித்தானது. அதை நாம் எந்தவிதத்திலும் செய்ய முயலக்கூடாது. அதை நாம் செய்ய வேண்டும் என்று வேதம் போதிக்கவில்லை. அமெரிக்காவின் சார்ள்ஸ் பினி ஆரம்பித்துவைத்து, பில்லி கிரகேம் பெரிதும் பயன்படுத்திய அர்ப்பண அழைப்பு முறை வேதத்திலேயே காணமுடியாததொன்றாகும். இதை இயேசுவோ, அப்போஸ்தலர்களோ அறிந்திருக்கவோ,  பயன்படுத்தியதோ இல்லை. இம்முறை தவறானது மட்டுமல்ல கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கே எதிரானதுமாகும். இது பற்றி நாம் பலமுறை இப்பத்திரிகையில் எழுதியுள்ளோம். இதுபற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் ஜிம் அடம்ஸ் என்ற போதகர் எழுதிய தீர்மானத்தின் மூலம் மறுபிறப்பு என்ற நூலை எமக்கு எழுதிப் பெற்றுக் கொள்ளலாம். ஆத்துமாக்களின் உணர்ச்சிகளைத் தூண்டியும், அவர்களை வற்புறுத்தியும் கிறிஸ்துவிற்காக தீர்மானம் எடுக்க வைப்பது வேதம் அறியாத ஒரு செயல். இத்தகைய செயல் பரிசுத்த வாழ்க்கை வாழ்வதற்காக வல்லமையற்ற போலிக்கிறிஸ்தவர்களையே எங்கும் தோற்றுவித்திருக்கிறது.

சீர்திருத்த கிறிஸ்தவர்கள் இவற்றில் நம்பிக்கை வைப்பதில்லை. அவர்கள் கிறிஸ்துவின் ஆவி மட்டுமே ஆத்துமாவுக்கு இரட்சிப்பை அளிக்கக்கூடியது என்று நம்புகிறார்கள். ஆகவே, அவர்கள் ஜெபத்துடன் பிரசங்கத்தைத் தயாரித்து, ஆத்மபாரத்துடன் பிரசங்கிப்பதை மட்டுமே தங்களுடைய தொழிலாகக் கொண்டுள்ளார்கள். ஆத்துமாக்களுடன் பேசுவதையும், அவர்களைத் தம்மிடம் அழைத்துக் கொள்வதையும் இயேசுவிடமே விட்டுவிடுகிறார்கள். சுவிசேஷத்தைக் கேட்ட ஒருவர் தான் கர்த்தரை அறிந்து கொண்டேன் என்று கூறினால் அவர்கள் சாட்சியத்தைக் கேட்டு அறிந்தபின்பே ஞானஸ்நானம் கொடுக்க முற்படுவார்கள். ஊருக்‍கொரு கடை வைப்பதுபோல் சுவிசேஷ ஊழியத்தை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் சீர்திருத்த விசுவாசிகளுக்கில்லை. மற்றவர்கள் தம்மை மதிக்க வேண்டுமென்பதற்காகவும், சமுதாயத்தில் பேரெடுக்கவும், தாம் பணம் பெறும் வெளி நாட்டாரைத் திருப்திப்படுத்தவும் ஊழியம் செய்யும் நிர்ப்பந்தம் அவர்களுக்கில்லை. சுவிசேஷத்தை, சுவிசேஷமாக தேவபயத்துடன் மட்டும் சொல்லி கர்த்தருக்கே எல்லா மகிமையும் சேரட்டும் என்ற வைராக்கியத்துடன் வாழ்பவர்களே சீர்திருத்த விசுவாசிகள்.

2) சுவிசேஷ ஊழியம் சபையாக, சபையால் அனுப்பப்பட்டு செய்ய வேண்டும்.

சுவிசேஷ ஊழியம் இன்று இட்லி, தோசை விற்கும் பிளாட்பாரத்துக் கடைகள் போல் கேட்பாரில்லாமல் எங்கும் முளைத்துவிடுகிறது. இதை யார் செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும்? என்ற விவஸ்தை இல்லாமல் யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் செய்யலாம் என்ற விதத்தில் நடந்து வருகின்றது. இது வேத போதனைக்கு முரணானதாகும். சீர்திருத்த கிறிஸ்தவன் கிறிஸ்துவுக்கும் அவருடைய வேதத்திற்கும் கட்டுப்பட்டவனானபடியால் கிறிஸ்து போதிக்கும் விதமாக அவருடைய சபைக்குக் கட்டுப்பட்டே இந்த ஊழியத்தில் ஈடுபடுவான். இயேசுவால் பயிற்சி கொடுக்கப்பட்ட அப்போஸ்தலர்கள் திருச்சபையை ஏற்படுத்தி சுவிசேஷ ஊழியத்தை திருச்சபை மூலமாகவே செய்தார்கள் என்பதை அப்போஸ்தல நடபடிகள் விளக்குகின்றது. தனி ஊழியத்தையும், சொந்த ஊழியத்தையும் கிறிஸ்துவோ அவருடைய அப்போஸ்தலர்களோ அறிந்திருக்கவில்லை.

இன்று சுவிசேஷ ஊழியம் பலருக்கு Private business ஆக இருக்கின்றது. ஊழியமே செய்ய அருகதை இல்லாத பலர் தங்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ளப் பயன்படுத்திக் கொள்ளும் ஏணியாக இருக்கின்றது. இவர்களை யாரும் கட்டுப்படுத்துவது இல்லை; இவர்களும் எவருக்கும் கட்டுப்படாதவர்கள். சீர்திருத்தக் கிறிஸ்தவர்களும், போதகர்களும் இத்தகைய சந்தர்ப்பவாதிகளை தங்களுடைய சபைக்குள் நுழையவிடக்கூடாது. சபையில் தோன்றி வளராத எந்த ஊழியத்தையும், சபை அறியாத எந்த மனிதனையும் (அம்மனிதன் எத்தனை பிரபல்யமானவராக இருந்தபோதும்; ஆத்துமாக்களைக் கவரக்கூடிய சினிமாக்கவர்ச்சி கொண்டவராக இருந்தபோதும்) சீர்திருத்தக் கிறிஸ்தவர்கள் ஆதரிக்கக் கூடாது. அதுவும் சீர்திருத்தப் போதனைகளுடன் சம்பந்தமில்லாதவர்களோடு நமக்குத் தொடர்பிருக்கக்கூடாது. சீர்திருத்த விசுவாசத்தை நம்புபவர்கள் சபையால் தெரிவு செய்யப்பட்ட நம்பத்தகுந்த, விசுவாசத்திலும், வேதத்திலும் தேர்ந்த ஆத்துமாக்களையே சுவிசேஷ ஊழியம் செய்யப் பயன்படுத்துவார்கள். ஆத்துமாக்கள் அனைவருமே கிறிஸ்துவைப்பற்றி அவரை அறியாதவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டுமென்றாலும், ஒவ்வொரு ஆத்துமாவும் வேதப்பாடம் நடத்த வேண்டும் என்றும் திருச்சபை அமைக்க வேண்டும் என்றும் வேதம் போதிக்கவில்லை. ஆத்துமாக்கள் சபையோடு தம்மை இணைத்துக் கொண்டு சபையாக எல்லா ஊழியங்களையும் செய்ய வேண்டுமென்றுதான் வேதம் போதிக்கின்றது. அதுவும் பெண்கள் போதகர்களாகவும், சுவிசேஷ ஊழியர்களாகவும் பணி செய்வது வேதம் போதிக்கும் முறையல்ல. கிறிஸ்துவின் வார்த்தைபடி ஊழியங்கள் அமையும்போது அவை கிறிஸ்துவுக்கு மகிமை சேர்க்கின்றன. மனித ஞானத்தின்படி செய்யப்படும் அனைத்தும் மனிதனுக்கே மகிமை சேர்க்கின்றன.

3) சுவிசேஷ ஊழியம் சபை அமைப்பதில் போய் முடிய வேண்டும்.

சுவிசேஷ ஊழியங்களின் இறுதி நோக்கம் சபை அமைப்பதே. ஆத்துமாக்களுக்கு கிறிஸ்துவைப்பற்றி சொல்வது மட்டுமல்ல சுவிசேஷ ஊழியத்தின் பணி. சுவிசேஷத்தை வேதபூர்வமாக அறிவித்து, அதனைக் கேட்டு மனந்திருந்தி கிறிஸ்துவை விசுவாசித்தவர்கள் சபைக்குள் இணைக்கப்பட வேண்டும். சபையே இல்லாத இடங்களில் அவர்களைக் கொண்டு சபைகள் அமைக்கப்பட வேண்டும். இன்று திருச்சபையையே பார்க்காத, திருச்சபை என்றால் என்னவென்றே அறியாத அநேகர் விசுவாசிகள் என்று தம்மை அறிவித்துக் கொண்டு ஊரெங்கும் காணப்படுவது நாமறிந்த ஒன்றே. இவர்களது வாழ்க்கையே அநேக சுவிசேஷ ஊழியப் பச்சோந்திகளுக்கு பணம் கொடுப்பதிலும், பணிபுரிவதிலும் போய் முடிகின்றது. சீர்திருத்த விசுவாசத்தைப் பின்பற்றுபவர்கள் தங்களுடைய சுவிசேஷப்பணி சபைக்கு ஆத்துமாக்களைக் கொண்டு வருவதிலும், சபை அமைப்பதிலும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். சீர்திருத்த விசுவாசத்தைப் பின்பற்றும் சபைகளே வேதபூர்வமாக சுவிசேஷப்பணி புரியக்கூடியவையாக இருக்கின்றன. இதுபற்றி மேலும் அறிந்துகொள்ள நாம் வெளியிட்டுள்ள திருச்சபை சீர்திருத்தம் என்ற நூலை வாசிக்கவும்.

இவையே சீர்திருத்த விசுவாசம் போதிக்கும் முக்கிய போதனைகள். இனியாவது கல்வினின் பெயரையும், சீர்திருத்த விசுவாசத்தையும் பற்றிப் பேசுபவர்கள் அவை எதைப் போதிக்கின்றன என்று முதலில் அறிந்து கொண்டு அதன்பின் அவற்றைப் பற்றிப் பேசினால் நல்லது. அக்கோட்பாடுகளை நம்பும் நாமும் அக்கோட்பாடுகளுக்காக உயிர் கொடுத்து உழைத்தவர்கள் பெயருக்கும், கர்த்தருடைய பெயருக்கும் களங்கம் ஏற்படாமல் பணி செய்யப் பாடுபடுவோம்.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s