கல்வினிச ஐங்கோட்பாடுகள் இன்று அவசியமா?

இதற்கு முன்வந்த இதழில் கல்வினிச ஐங்கோட்பாடுகள் மட்டுமே சீர்திருத்த விசுவாசமாகி விடாது என்று எழுதியிருந்தோம். சீர்திருத்த விசுவாசத்தை அறிந்து கொள்ள முயலுகிறவர்கள் அதை முழுமையாகப் புரிந்து கொள்ளுவது மிக அவசியம். இப்படி நாம் எழுதியிருப்பதால் கல்வினிச ஐங்கோட்பாடுகளை நாம் எந்தவிதத்திலும் குறைத்து மதிப்பிட்டுவிடவில்லை. அதன் அவசியத்தையும் எந்தவிதத்திலும் தாழ்த்திப் பேசிவிடவில்லை. கல்வினிச ஐங்கோட்பாடு வேதம் போதிக்கும் சுவிசேஷத்தையும், கிறிஸ்து இலவசமாக அளிக்கும் இரட்சிப்பையும் பற்றியது. அது சீர்திருத்த விசுவாசத்தின் முக்கிய போதனைகளில் ஒன்று. கல்வினிச ஐங்கோட்பாடுகளை விசுவாசிக்காமல் ஒருவர் மெய்சுவிசேஷத்தையோ அல்லது சீர்திருத்த விசுவாசத்தையோ அறிந்து கொள்ள முடியாது. கல்வினிச ஐங்கோட்பாடுகளின் முக்கியத்துவத்தைப் பற்றி இங்கிலாந்தில் போதகராக இருந்த, பிரசங்கிகளின் இளவரசன் என்று வர்ணிக்கப்படும் கல்வினிச சீர்திருத்த பாப்திஸ்து போதகராக இருந்த ஸ்பர்ஜன் சொல்கிறார்.

“கல்வினும், அகஸ்தீனும், பவுலும் போதித்த அந்தப் பழமையான சத்தியங்களையே நானும் போதிக்க வேண்டும். இல்லாவிட்டால் என்னுடைய மனச்சாட்சிக்கும், கர்த்தருக்கும் விரோதமாக நான் நடந்தது போலாகிவிடும். என்னால் சத்தியத்திற்கு உருவங் கொடுக்க முடியாது; சத்தியத்தின் கரடுமுரடான விளிம்புகளை சரிப்படுத்தும் வேலையெல்லாம் எனக்குத் தெரியாது. ஜோன் நொக்ஸினுடைய சுவிசேஷமே என்னுடைய சுவிசேஷம். ஸ்கொட்லாந்து நாடு முழுவதும் இடிபோல் அதிர்ந்த அச்சத்தியம் இங்கிலாந்திலும் அதிரும்படி பிரசங்கிக்கப்பட வேண்டும்.”

இது ஸ்பர்ஜன் கல்வினிசத்தைப்பற்றிச் சொன்ன வார்த்தைகளாகும்.

கல்வினிச ஐங்கோட்பாடுகளுக்கு “கிருபையின் போதனைகள்” என்ற பெயரும் உண்டு. தேவ கிருபையின் மூலமாகவே ஆத்துமாக்கள் இரட்சிப்பை அடைகிறார்கள் என்று இது போதிப்பதால் இப்பெயரைப் பெற்றது. இதைக் “கல்வினிசப் போதனைகள்” என்றும் அழைப்பார்கள். கல்வின் தன் வாழ்நாள் முழுவதும் இதைப்போதித்து விளக்கியதால் இதற்கு “கல்வினிசம்” என்ற பெயர் ஏற்பட்டது. இவையெல்லாம் இவ்வைங்கோட்பாட்டை விளக்கும் வேறு பெயர்கள். வசதி காரணமாக இவ்வாக்கம் முழுவதும் நான் “கல்வினிசம்” என்றே இப்போதனையை வர்ணிக்கப் போகிறேன். ஸ்பர்ஜன் சொல்கிறார், “இப்போதனையைக் கல்வின் உருவாக்கவில்லை. வேதத்தில் ஏற்கனவே காணப்பட்ட இந்த சத்தியத்தை கல்வின் அறிந்து போதித்தார்” என்று. கல்வினுக்கு முன்பாக இப்போதனை ஐந்தாம் நூற்றாண்டில் அகஸ்தீனால் போதிக்கப்பட்டது.

கல்வினிச ஐங்கோட்பாடுகள் தொகுக்கப்பட்ட வரலாறு

கல்வினிசப் போதனைகள் ஐங்கோட்பாடுகளாக, கிருபையின் போதனைகள் என்ற வடிவில் தொகுக்கப்பட்டதற்குக் காரணம் என்ன என்பதை நாம் அறிந்துகொள்வது அவசியம். இதற்கு திருச்சபை வரலாற்று அறிவு மிகவும் அவசியம். கல்வினின் மறைவுக்குப்பின் அவரது சீர்திருத்தப் போதனைகளை எதிர்த்து அவற்றிற்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டான் ஜேம்ஸ் ஆர்மீனியஸ் (James Arminius) என்ற மனிதன். 1610 இல் அவனது மறைவிற்குப்பின் அவனுடைய சீடர்கள் ஐந்து கோட்பாடுகளை வெளியிட்டு, திருச்சபைகளை வேத அடிப்படையிலான சீர்திருத்தப் போதனைகளுக்கு எதிராகத் திருப்ப எத்தனித்தனர். இவர்களது போதனைகள் ஆர்மீனியனிசம் (Arminianism) என்று இன்று சுருக்கமாக அழைக்கப்படுகின்றது.

இவ்வார்மீனியனிச ஐங்கோட்பாடு அதற்கு முன்பே தோன்றியிருந்த பெலேஜியனிசம் (Pelagianism) என்ற போலிக்கோட்பாட்டைத் தழுவி எழுந்ததாகும். பெலேஜியனிசம், பெலேஜியஸ் (Pelagius) என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு துறவியால் போதிக்கப்பட்டது. இப்போதனை மனிதன் இயற்கையிலேயே பாவியல்ல என்ற, சத்தியத்‍திற்கு முரணான போதனையைக் கொண்டிருந்தது. ஐந்தாம் நூற்றாண்டில் அகஸ்தீன் (Augustine) பெலேஜியனிசக் கோட்பாட்டிற்கு எதிராகப் போராடினார். அகஸ்தீன், பிறப்பிலேயே பாவியாக உருவான மனிதன் தன் சுயவல்லமையால் தேவநீதிக்கும் சுவிசேஷத்திற்கும் கட்டுப்பட முடியாத நிலையில் இருக்கிறான் என்று போதித்தார். ஆகஸ்தீனின் போதனைக்கெதிரான பெலேஜியனிசக் கோட்பாடு பின்பு புதுப்பிக்கப்பட்டு செமி-பெலேஜியனிசம் (Semi-Pelaginanism) என்ற உருவத்தை அடைந்தது. இப்போதனையைத் தோற்றுவித்தவன் கேசியன் (Cassian) என்பவனாகும். இப்போதனை, மனிதன் பாவிதான் என்பதை ஒப்புக்கொண்டாலும் அவன் தான் இயற்கையாகக் கொண்டிருக்கும் வல்லமையின் மூலம் மனந்திரும்புதலுக்கான முதலாவது படியில் தானே சுயமாகக் காலடி எடுத்து வைக்கக்கூடியவனாக இருக்கிறான் என்று போதித்தது. ஆகஸ்தீனின் போதனைக்கும், பெலேஜியனிசப் போதனைக்கும் மத்தியில் அமையும்படி இப்போதனை உருவானது. கேசியன், மனிதன் பாவி என்பதையும், பாவம் அவனுடைய எல்லா அங்கங்களையும் பாதித்துள்ளது என்பதையும் ஏற்றுக்கொண்டான். ஆனால், தேவ கிருபை எல்லா மனிதர்களுக்கும் பொதுவாகக் கொடுக்கப்படுகின்றதென்றும், அதனால் மனந்திரும்புதலுக்கான தீர்மானத்தை எடுக்கக்கூடிய வல்லமையை தனது சுயாதீன சித்தத்தின் (Free-Well) மூலம் மனிதன் கொண்டிருக்கிறான் என்றும் போதித்தான். ஜோர்ஜ் ஸ்மீட்டன்1 என்ற இறையியல் வல்லுனர் இப்போதனைபற்றி எழுதும்போது, “விசுவாசிப்பது மனிதனுடைய விருப்பத்தைப் பொறுத்தது. அதற்குத் துணை செய்வதே கடவுளுடைய வேலை, என்பதே செமி-பெலேஜியனிசத்தின் போதனை” என்கிறார். செமி-பெலேஜியனிசம், மனந்திரும்புவதற்கான ஆரம்ப நடவடிக்கையை மனிதனே சுயமாக செய்யக்கூடிய வல்லமையைக் கொண்டிருக்கிறான் என்ற பெருந்தவறான முடிவைக் கொண்டிருந்தது. ஆர்மீனியனிசம் செமி-பெலேஜியனிசத்தைத் தழுவி ஏற்பட்ட போதனையாகும். இவை இரண்டுக்கும் இடையில் அதிக வேறுபாடும் காணப்படவில்லை. பாதி சத்தியத்தையும், பாதிப் பொய்யையும் கொண்டு இவ்விருபோலிப்போதனைகளும் அமைந்துள்ளன.

இப்படிப்பட்ட வேதத்திற்கு முரணான போலிப்போதனையை ஐந்து கோட்பாடுகளாக வெளியிட்டுப் போதித்த ஆர்மீனியனின் சீடர்களுக்கு என்ன நடந்தது என்று பார்ப்போம். முதலில் இவர்களுடைய ஐந்து கோட்பாடுகள் என்ன என்று பார்ப்பது அவசியம். 1) மனிதனுக்கு சுயாதீன சித்தம் உண்டு. 2) நிபந்தனையுள்ள தெரிந்து கொள்ளல். 3) உலகளாவிய மீட்பு. 4) பரிசுத்த ஆவியின் செயலை மனிதனால் தவிர்க்க முடியும். 5) கிருபையின் ஸ்தானத்தில் இருந்து மனிதனால் விழுந்து போக முடியும். இவையே ஆர்மீனியனுடைய சீடர்கள் போதித்த போதனைகளின் தொகுப்பு. இப்போதனைகளைத் திருச்சபைகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், ஏற்கனவே இருந்த சீர்திருத்த விசுவாச அறிக்கைகளும் வினாவிடைப் போதனைகளும் மாற்றப்பட வேண்டும் என்றும் ஆர்மீனியனுடைய சீடர்கள் ஒல்லாந்து சீர்திருத்த சபையைக் கேட்டுக்கொண்டார்கள்.

அக்காலத்தில் திருச்சபைகள் சீர்திருத்தப்‍ போதனைகளைப் பின்பற்றி விசுவாச அறிக்கைகளையும் கொண்டு நல்லபடியாக இயங்கி வந்து கொண்டிருந்தன. இதற்கு ஆபத்து ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால் ஒல்லாந்து நாட்டில் திருச்சபைத் தலைவர்கள் இப்போதனைகளை ஆராய 1618 இல் டோர்ட் (Dort) என்ற இடத்தில் ஒன்று கூடினார்கள். ஏழு மாதங்களில் 154 தடவைகள் அவர்கள் கூடி ஆர்மீனியனிசப் போதனைகளை ஆழமாக ஆராய்ந்தனர். அப்போதனைகள் வேதத்திற்கும், சீர்திருத்தப் போதனைகளுக்கும் முரணாக இருப்பதை உணர்ந்த அவர்கள் அவற்றிற்கெதிரான ஐந்து கோட்பாடுகளை வெளியிட்டனர். தவறான போதனைகளை அளித்த ஆர்மீனியனின் சீடர்களும் நாடு கடத்தப்பட்டனர். திருச்சபைகள் ஆர்மீனியனிசப் போதனைகளின் ஆபத்திலிருந்து தம்மைக் காத்துக்‍கொள்ளவே டோர்ட் கவுன்சில் (Counsil of Dort) இதைச் செய்தது. டோர்ட் கவுன்சில் வெளியிட்ட ஐங்கோட்பாடுகள் பின்பு கல்வினிச ஐங்கோட்பாடுகள் என்ற பெயரைப் பெற்றன. இவற்றை “கிருபையின் போதனைகள்” என்றும் அழைப்பார்கள். இதற்குக் கல்வினின் பெயர் கொடுக்கப்பட்டதற்கு, சீர்திருத்தவாதப் போதனைகள் தோன்றுவதற்கு கல்வின் அளித்த சிறப்பான பங்கே காரணம். இன்று இவ்வைங்கோட்பாடுகளைக் கல்வினிசப் போதனைகள் என்றும், இவற்றை விசுவாசித்துப் பின்பற்றுபவர்களை கல்வினிஸ்டுகள் என்றும் அழைப்பார்கள்.

ஐங்கோட்பாடுகளும், ஆர்மீனியனிசமும்

கல்வினிச ஐங்கோட்பாடுகளாவன:

  1. மனிதனின் முழுமையான சீரழிவு.
  2. நிபந்தனையற்ற தெரிந்துகொள்ளல்.
  3. குறிப்பிட்டவர்களுக்கான மீட்பு அல்லது வரையறுக்கப்பட்ட மீட்பு.
  4. தவிர்க்க முடியாத அழைப்பு.
  5. பரிசுத்தவான்களின் விடாமுயற்சி

என்பனவாகும். இவற்றை அவற்றின் முதல் எழுத்துக்களைப் பயன்படுத்தி ஆங்கிலத்தில் “டுளிப்” (TULIP) என்றும் அழைப்பர்.

வரலாற்றில் தோன்றிய இரட்சிப்பைக் குறித்த இந்த இறையியல் சம்பந்தமான போராட்டம் மிகவும் பாரதூரமானது. கர்த்தரைப் பற்றியும், பாவத்தைப் பற்றியும், இரட்சிப்பைப் பற்றியும் வேதம் போதிக்கும் போதனைகளை இப்போராட்டம் பாதித்தது. இவ்விரண்டு கோட்பாடுகளில் ஒன்றே வேதபூர்வமானது. மற்றது போலிப்போதனையாகும். இதை இன்று அநேகர் புரிந்து கொள்வதில்லை. ஆர்மீனியனிசமும் வேதத்தில் காணப்படுகின்றது என்று சிலர் புரியாமல் தவறாக எண்ணிக் கொண்டிருக்கின்றனர். இதற்குக் காரணம் இவர்கள் வேதம் போதிக்கும் கல்வினிசப் போதனைகளையும், வேதத்திற்கு முரணான ஆர்மீனியப் போதனைகளையும் சரிவரப் புரிந்து கொள்ளவில்லை. அதுமட்டுமல்லாமல் கல்வினிசத்தைப் பற்றி பல கட்டுக்கதைகளையும் சிலர் அவிழ்த்துவிட்டிருக்கின்றனர். கல்வினிசத்தை விசுவாசிப்பவர்கள் – மனிதன் ஒன்றுமே செய்ய லாயக்கில்லாதவன்- என்று நம்புபவர்கள் என்பது பலரது தவறான எண்ணம். இது கல்வினிசம் என்றால் என்னவென்று தெரியாத பத்தாம் பசலிகள் அவிழ்த்துவிட்ட வதந்தி.

கல்வினிசத்திற்கும் ஆர்மீனியனிசத்திற்கும் இடையில் உள்ள அடிப்படை வேறுபாடுகளை நாம் புரிந்து கொள்வது அவசியம். ஜே. ஐ. பெக்கர் (J. I. Packer) இதுபற்றிப் பின்வருமாறு எழுதுகிறார்,

“கல்வினிசம் நம்மை இரட்சிக்கும் கடவுளைப் பற்றி விளக்குகிறது. ஆனால் ஆர்மீனியனிசமோ நாமே நம்மை இரட்சித்துக் கொள்ளத் துணை செய்யும் கடவுளைப் பற்றிப் போதிக்கின்றது. கல்வினிசம், வீழ்ந்து போனவர்களுக்கு நிச்சயமான இரட்சிப்பை அளிக்கக்கூடிய திரித்துவக் கடவுளின் மூன்று பெரும் அருஞ் செயல்களான பிதாவின் தெரிந்து கொள்ளுதல், குமாரனின் மீட்பு, பரிசுத்த ஆவியின் அழைப்பு ஆகியவற்றை ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக விளக்குகிறது. ஆனால், ஆர்மீனியனிசமோ, இம்மூன்றையும் வெவ்வேறாகப் பிரித்து விளக்கி இவற்றில் எவற்றாலுமே எவரும் இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ள முடியாது என்று போதிக்கின்றது. ஆர்மீனியனிசம், கிறிஸ்துவின் மீட்பின் பலன் தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லோருக்கும் சொந்தமானது என்கிறது. அத்தோடு, பரிசுத்த ஆவியின் அழைப்பு சுவிசேஷத்தைக் கேட்கும் அனைவருக்கும் கிடைப்பதாகவும். ஆனால், சுவிசேஷத்தைக் கேட்டு அதை ஏற்றுக்கொள்ளவோ, நிராகரிக்கவோ கூடிய வல்லமை மனிதனுக்கு உண்டு என்றும் போதிக்கின்றது. திரித்துவக் கடவுளின் ஒன்றோடொன்று தொடர்புடைய இம்முப்பெரும் செயல்களும் ஆர்மீனியனிசத்தைப் பொறுத்தவரையில் ஒருங்கிணைந்தவை அல்ல. அவற்றால் ஒருவன் நிச்சயமான இரட்சிப்பை அடைவதில்லை என்பதும் அதன் கருத்து. எனவே, கல்வினிசமும், ஆர்மீனியனிசமும் கடவுளின் இரட்சிப்புக்கான திட்டத்தை வெவ்வேறுவிதமாகப் போதிக்கின்றன. கல்வினிசம், மனிதனின் இரட்சிப்பு கர்த்தரின் செயல்களில் தங்கியிருப்பதாகப் போதிக்கின்றது. ஆர்மீனியனிசமோ இரட்சிப்பு மனிதன் எடுக்கும் தீர்மானத்தில் தங்கியிருப்பதாகப் போதிக்கின்றது. கல்வினிசம், கர்த்தர் மனிதனுக்கு அளிக்கும் இரட்சிப்பின் ஒரு பகுதியே விசுவாசம் என்று போதிக்கின்றது. ஆனால், ஆர்மீனியனிசமோ தனது சொந்த இரட்சிப்புக்கான மனிதனுடைய பங்களிப்பே விசுவாசம் என்று கருதுகின்றது. கல்வினிசம், விசுவாசிகளின் இரட்சிப்புக்கான அனைத்து மகிமைகளையும் கடவுளுக்கே அளிக்கின்றது. ஆனால், ஆர்மீனியனிசமோ, அதை மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையில் பங்கிடுகின்றது.” (Introduction to the “Death of Death in the Death of Christ” by J. I. Packer)

பெக்கரின் இவ்விளக்கங்கள் கல்வினிசத்திற்கும் ஆர்மீனியனிசத்திற்கும் இடையில் உள்ள வேறுபாடுகளை மிகத்தெளிவாக விளக்குகின்றன. ஒன்றுக்கொன்று முரண்பட்ட இவ்விரு வேறு கோட்பாடுகளும் எப்படி ஒரே‍ வேதத்தில் காணப்பட முடியும்? அதை நாம் வேதத்தில் திணித்தால் தவிர வேறுவிதத்தில் பார்க்க முடியாது. ஆகவே, கர்த்தருக்கு மகிமை தராத, மனித சிந்தனையில் உருவான, மனிதனுடைய மகிமையையே இலட்சியமாகக் கொண்டெழுந்த ஆர்மீனியனிசம் ஒரு போலிப் போதனை என்பதை வாசகர்கள் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஒல்லாந்து சபைகள் இப்போதனையை நிராகரித்து அதைப் போதித்தவர்களை நாடுகடத்தியதற்கு இதுவே காரணம்.

ஆர்மீனியனிசம் திரித்துவக் கடவுளின் பெருஞ்செயல்களான தெரிந்து கொள்ளுதலையும், கிறிஸ்துவின் மீட்பையும், பரிசுத்த ஆவியின் அழைப்பையும் அவற்றை இரட்சிப்பை அடையும் ஆத்துமாவுக்காக கடவுள் செய்த அருஞ்செயல்களாகப் பார்க்காமல், மனித ஞானத்தைப் பயன்படுத்தித் தனித்தனியாகப் பிரித்து தனி மனிதனுடைய சொந்த விருப்பத்திற்கெதிராக எவரையுமே இர‍ட்சிக்க இவ்வருஞ் செயல்களால் முடியாது என்று காட்டுகின்றது. ஆனால், வேதஞ் சார்ந்த கல்வினிசப் போதனைகளின் ஒருங்கிணைந்த போதனைகளின் பிரிக்க முடியாத தன்மையை ஜெக் சீட்டன் பின்வருமாறு விளக்குகிறார்:

“பாவியாகிய மனிதன் தன்னைத் தானே இரட்சித்துக் கொள்ள முடியாததாலால் கர்த்தர் மட்டுமே அவனுக்கு இரட்சிப்பை அளிக்க முடியும். கர்த்தர் மட்டுமே இரட்சிப்பை அளிக்கக் கூடியவராக இருந்தால் அவர் தன் சித்தப்படி சுதந்திரமாக எவருக்கும் அதனை அளிக்கக்கூடியவராக இருக்க வேண்டும். கர்த்தர் தன் சித்தப்படி வரையறுக்கப்பட்டவர்களுக்கு மட்டும் இரட்சிப்பை அளிப்பதாக ஆணையிட்டிருந்தால் அவர்களுக்காக மட்டுமே கிறிஸ்து கல்வாரி சிலுவையில் மீட்பின் செயல்களை நிறைவேற்றியிருக்க முடியும். கிறிஸ்து அவர்களுக்காக மட்டும் மரித்திருந்தால் அவர்கள் இரட்சிப்பை அடையும்படி பரிசுத்த ஆவி அவர்களைத் திட்ப உறுதியாக அழைப்பார். ஆகவே, ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை இரட்சிப்பு கர்த்தரிடம் இருந்து பெறப்படுவதாக இருப்பதால் பரிசுத்தவான்கள் நித்திய ஆனந்தத்தை அடையும்படி விடாமுயற்சியுடன் பரிசுத்தமாக வாழ்வார்கள்.” (Jack Seaton, Five Points of Calvinism).

ஜெக் சீட்டனின் இவ்விளக்கம் கல்வினிச ஐங்கோட்பாடுகளின் நிலைநாட்டப்படக்கூடிய தர்க்கரீதியான வாதத்தை விளக்குகின்றது. இதைத் தகர்த்தால் வேதத்தை சிதைத்ததாகிவிடும். வேதம் இணைத்து வைத்திருக்கும் எதையும் நாம் பிரிக்கக்கூடாது.

கல்வினிச ஐங்கோட்பாடுகள்

கல்வினிச ஐங்கோட்பாடுகள் ஒவ்வொன்றையும் இனி சுருக்கமாக விளக்க வேண்டியது அவசியம்.

1. மனிதனி முழுமையான சீரழிவு

பாவத்தில் பிறந்த மனிதன் அப்பாவத்தினால் முழுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறான் என்று கல்வினிசப் போதனைகள் போதிக்கும்போது, பாவம் மனிதனில் சீரழிக்காத பகுதிகள் எதுவும் இல்லை என்பதையே சுட்டிக்காட்டுகின்றன. “முழுமையான” என்ற வார்த்தை பாவம் மொத்தமாக மனிதனுடைய சித்தம் உட்பட எல்லா அங்கங்களையும் பாதித்துள்ளது என்பதை சுட்டிக் காட்டுகின்றது. இத்தகைய பாதிப்பின் காரணமாக மனிதன் கர்த்தரோடு இருந்த ஆத்மீகத் தொடர்பை இழந்து அதை மீண்டும் ஏற்படுத்திக் கொள்ளும் எந்த வல்லமையும் இல்லாதவனாக இருக்கிறான். மனிதனுடைய சித்தம் சுதந்திரமாக இயங்குகிறதா? என்று கேட்டால் கல்வினிசம் ஆம்! என்றே பதில் தருகின்றது. பாவத்தால் பாதிக்கப்பட்டுள்ள அவனது சித்தம் மிகச்சுதந்திரமாக எவருடைய தடையுமில்லாமல் பாவத்தைச் செய்து வருகின்றது. ஆனால், அவனால் ஆத்மீகக் காரியங்களைத்தான் செய்ய முடியாதிருக்கின்றது. அதைச் செய்வதற்கான சகல சுதந்திரத்தையும் அவன் தன் பாவத்தால் இழந்து நிற்கிறான். ஆகவே, மனிதன் சுயமாக ஆவிக்குரிய எந்தக் காரியத்தையும் செய்ய இயலாதவனாக இருக்கிறான். இரட்சிப்பை அடைவதற்கு அவனால் செய்யக்கூடியது எதுவுமேயில்லை. இதனாலேயே தாவீது, நான் துர்க்குணத்தில் உருவானேன். என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள் என்கிறான் (சங்கீதம் 51:5). அதனால்தான் நம்மாண்டவர் நிக்கொதேமுவைப் பார்த்து, நீ மறுபடியும் பிறக்க வேண்டும் என்று கூறினார். அதாவது, பாவத்தில் இருக்கும் நீ உன்னை மாற்றிக் கொள்ள முடியாது. நீ மறுபடியும் ஆத்மீகப் பிறப்படைய வேண்டும் என்று இயேசு சொன்னார்.

2. நிபந்தனையற்ற தெரிந்து கொள்ளல்

இக்கோட்பாடு கடவுள் உலகத்தோற்றத்திற்கு முன்பாக மனித குலத்திலிருந்து ஒருகுறிப்பிட்ட மக்களை இரட்சிப்பிற்காகத் தெரிந்துகொண்டுள்ளார் என்ற உண்மையை வெளிப்படுத்துகிறது. இவர்கள் மட்டுமே இரட்சிப்பை அடைவார்கள் என்பது இதன் போதனை. இத்தகைய தெரிந்து கொள்ளுதல் மனிதனில் காணப்பட்ட எந்த ஒரு தன்மையின் அடிப்படையிலும் நிகழவில்லை. தேவனுடைய கிருபையின் அடிப்படையில் மட்டுமே இவர்கள் ‍தெரிந்து கொள்ளப்பட்டள்ளனர். ஆர்மீனியனிசம், கடவுள் குறிப்பிட்ட மக்கள் தம்மை விசுவாசிப்பார்கள் என்பதை ஏற்கனவே அறிந்து ‍அவர்களைத் தெரிந்து கொண்டுள்ளார் என்று போதிக்கின்றது. அது வேதத்தில் காணப்படாத தவறான போதனை. சர்வ வல்லமையும் இறை ஆண்மையும் உள்ள நமது தேவன் தனது சித்தத்தின் ஆலோசனைக்குத் தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற தனது தீர்மானத்தின்படியே சிலரை முன்குறித்து கிறிஸ்துவுக்குள் அவருக்கு சொந்தமாகும்படித் தெரிந்து‍கொண்டார் என்று வேதம் போதிக்கிறது (எபேசியர் 1:12). கடவுளின் தெரிந்து கொள்ளல் எவரையும் இரட்சிக்கவில்லை; இரட்சிப்பிற்காக அவர்களை நியமித்திருக்கிறது. இப்போதனையை நாம் வேதத்தின் ஏனைய போதனைகளான கடவுளின் உடன்படிக்கை, மனிதனின் பாவம், கிறிஸ்துவின் மீட்பு ஆகியவற்றோடு தொடர்புப்படுத்திப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும். எபேசியர் முதலாவது அதிகாரம் இப்போதனையை விளக்கும் ஒரு வேதபகுதியாகும்.

3. குறிப்பிட்டவர்களுக்கான மீட்பு அல்லது வரையறுக்கப்பட்ட மீட்பு

இரட்சிப்பிற்காக நியமிக்கப்பட்டவர்கள் இரட்சிப்பை அடைவதற்காக கிறிஸ்துவினால் தங்களுடைய பாவத்திலிருந்து மீட்கப்பட வேண்டும். இவர்களுக்கு நித்திய ஜீவனை அளிப்பதற்காகவே கிறிஸ்து இவ்வுலகத்திற்கு வந்தார். அவர் பிதாவின் கட்ட‍ளைப்படி நீதிப்பிரமாணத்தை முழுமையாகக் கைக்கொண்டு தன்னுடைய மக்களுக்கு கல்வாரி சிலுவையில் தன்னைப் பலியாகக் கொடுத்தார். தன்னுடைய மக்களுடைய பிரதிநிதியாக சிலுவையில் தேவ கோபத்தை சந்தித்து அவர்களுடைய பாவங்களைத் தன்மேல் சுமந்து, மரித்து, பூரணமான நீதியை அவர்களுடைய கணக்கில் வைத்தார். தங்களுடைய பாவத்தில் இருந்து மனந்திரும்பி கிறிஸ்துவை இரட்சகராகவும், ஆண்டவராகவும் விசுவாசிக்கிறவர்கள் நீதிமான்களாக தேவனால் அறியப்படுகிறார்கள். கிறிஸ்துவின் மீட்பின் செயல்களாலேயே அவர்கள் நீதிமான்களாக அறியப்படுகிறார்கள். அத்தோடு அவர்கள் தங்களுடைய பாவத்திலிருந்தும், குற்ற உணர்விலிருந்தும் முழுமையாக விடுவிக்கப்படுகிறார்கள். கிறிஸ்துவின் சிலுவைப்பலி இவர்களுடைய பாவத்தை முழுமையாக நீக்கி, விடுதலை தந்து, நித்திய ஜீவனையும், நீதியையும் பெற்றுக் கொடுத்துள்ளது.

கிறிஸ்துவின் சிலுவை மரணம், கடவுள் பாவிகளை மன்னிக்கக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்கித் தரவில்லை அல்லது மனிதன் தன்னைத் தானே இரட்சித்துக் கொள்ளும்வகையில் ஒரு வழியை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. மனிதன் சுயமாக, தன்னுடைய சொந்த வல்லமையால் பாவத்திலிருந்து மனந்திரும்பும்போது அவனுக்குப் பலனளிக்கும் வகையில் கிறிஸ்து சிலுவையில் மரிக்கவில்லை. யார் யாருக்காக கிறிஸ்து சிலுவையில் மரித்தாரோ அத்தனைபேரும் நிச்சயத்தோடும், உறுதியோடும் நித்திய ஜீவனை அடையும்படியாகவே கிறிஸ்துவின் சிலுவை மரணம் நிகழ்ந்தது. இம்மாபெரும் இரட்சிப்பின் திட்ட நிறைவேற்றுதலில் மனிதன் நிறைவேற்றும்படியான எந்தப் பங்கையும் கடவுள் மனிதனிடம் விட்டுவிடவில்லை. அத்தனையையும் கிறிஸ்துவே நிறைவேற்றினார்.

தேவனுடைய தெரிந்துகொள்ளுதல் நிறைவேறும்படியாகவே கிறிஸ்துவின் சிலுவை மரணம் நிகழ்ந்தது. ஆகவே, கிறிஸ்து தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்காக மட்டுமே இவ்வுலகத்திற்கு வந்தார். எனவே, அவருடைய சிலுவை மரண பலன்கள் அவர்களுக்கு மட்டுமே உரிதானது. இப்படிச் சொல்வதால் கிறிஸ்துவின் சிலுவை மரண பலன்களை நாம் குறைத்து மதிப்பிடவில்லை. அதை வேதம் போதிக்கும் விதத்தில் மிகவும் உயர்த்தி உள்ளது உள்ளபடியே விளக்குகிறோம். சிலுவையின் பலன்கள், அவர் எவருக்காக மரித்தாரோ அவர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்றுதான் சொல்கிறோம். கிறிஸ்துவின் சிலுவை மரண பலன்களை அவற்றிற்கு சொந்தமான அவருடைய மக்கள் நிச்சயமாக அனுபவித்தே தீருவார்கள் என்றுதான் சொல்கிறோம். அதில் வேறு எவருக்கும் பங்கிருக்க முடியாது.

ஆர்மீனியனிசக் கோட்பாட்டாளர்கள், கிறிஸ்து உலகில் உள்ள சகல மக்களும் இரட்சிப்பை அடைவற்காகவே சிலுவையில் மரித்தார் என்றும், ஆனால், அவரை விசுவாசிப்பவர்கள் மட்டுமே இரட்சிப்பை அடைகிறார்கள் என்று போதிக்கின்றார்கள். இது தவறு. ஏனெனில் கிறிஸ்து எல்லோருக்குமாக மரித்திருந்தால் எல்லோருமே இரட்சிப்பை நிச்சயமாக அடைய வேண்டும். ஆனால், எல்லோருமே இரட்சிப்பை அடைவதில்லை என்பது ஆர்மீனியனிசக் கோட்பாட்டாளருக்கே நன்றாகத் தெரியும். ஏனெனில், சிலர் மனந்திரும்ப மறுத்துவிடுகிறார்கள். அவர்களுக்காகவும் கிறிஸ்து மரித்தார் என்று சொல்வோமானால், கிறிஸ்துவின் சிலுவை மரண பலன்களின் தரத்தை நாம் குறைத்துவிடுகிறோம். பாவத்திலிருந்து மனந்திரும்ப மாட்டேன் என்று விடாப்பிடியாக இருந்து மரிப்பவர்களுக்காகவெல்லாம் கிறிஸ்து நிச்சயமாக சிலுவையில் மரித்திருக்க முடியாது. ஆகவே, ஆர்மீனியனிசப் போதனை முழுத்தவறானது. அது கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் பலன்களை அடையவோ அல்லது நிராகரிக்கவோ கூடிய அதிகாரத்தை மனிதனின் கரத்தில் கொடுத்துவிடுகிறது. இது வேதம் போதிக்கும் உண்மையல்ல.

4. பரிசுத்த ஆவியின் திட்ப உறுதியான அல்லது தவிர்க்க முடியாத அழைப்பு

திரித்துவத்தின் ஒவ்வொரு அங்கத்தவர்களும் இரட்சிப்பின் திட்டத்தை நிறைவேற்றுவதில் பங்கேற்றுள்ளார்கள். பிதா உலகத்தோற்றத்திற்கு முன்பே தனது மக்களைத் தெரிந்து கொண்டு தனது குமாரனிடத்தில் அவர்ளை ஒப்படைத்தார். குமாரனாகிய இயேசு அவர்களை இரட்சிக்க கல்வாரி சிலுவையில் மரித்து மீட்பின் செயல்களைப் பூரணமாக நிறைவேற்றினார். ஆனால் தெரிந்து கொள்ளுதலும், மீட்பின் செயல்களுமான இவ்விரு பெருஞ்செயல்கள் மட்டும் இரட்சிப்பின் தேவனின் திட்டத்தை நிறைவேற்றிவிடவில்லை. இத்திட்டத்தில் உள்ளடங்கிய இன்னொரு அம்சமும் உண்டு. அதாவது, கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் பலன்களை அவருடைய மக்கள் பெற்றுக்கொள்ளும்படியாக பரிசுத்த ஆவியானவர் அவர்களில் செயல்பட்டு அப்பலன்களை அவர்கள் அடையச் செய்ய வேண்டும். பரிசுத்த ஆவியானவரின் இச்செயலையே திட்ப உறுதியான அழைப்பு என்று கல்வினிச ஐங்கோட்பாடுப்போதனை விளக்குகிறது.

சுவிசேஷத்‍தின் மூலம் தரப்படுகின்ற ‍அழைப்பை இரண்டுவிதமாக வேதத்தில் பார்க்கிறோம். முதலாவதாக, சுவிசேஷத்தைக் கேட்கும் அனைவருக்குமான பொதுவான அழைப்பு சுவிசேஷத்தின் மூலம் கொடுக்கப்படுகின்றது. மத்தேயு 28:18-20 எல்லோருக்கும் சுவிசேஷம் போதிக்கப்பட வேண்டும் என்று சொல்கிறது. அந்த அழைப்பு தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கும், தெரிந்து ‍கொள்ளப்படாதவர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும். ஜாதி, மத, குல, இன பேதங்கள் பார்க்காமல் சகல மக்களக்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட வேண்டும். ஆனால், இந்த பொதுவான அழைப்பின் மூலம் பாவிகள் கர்த்த‍ரை விசுவாசிக்கும் வல்லமையற்றவர்களாக இருக்கிறார்கள். அதற்குக் காரணம் அவர்களின் கண்களைக் குருடாக்கி, சித்தத்தைப் பாழாக்கி, இருதயத்தைக் கடினப்படுத்தி வைத்திருக்கும் பாவமே. பாவத்தின் கொடுமையால் மனிதன் சுயமாக கர்த்தரிடம் வர முடியாத திக்கற்ற நிலையில் இருக்கிறான். எத்தனை அருமையாகப் பிரசங்கித்தாலும், எச்சரிக்கை செய்தாலும், வாக்குத்தத்தங்களைக் கொடுத்தாலும் இவ்வழைப்பின் மூலம் பாவி பரலோகம் போகும் சக்தியற்றிருக்கிறான். பாவத்தினால் சுவிசேஷத்திற்குக் கட்டுப்படவும், கிறிஸ்துவை விசுவாசிக்கவும் வல்லமையற்றிருக்கிறான். இப்பொதுவான அழைப்பு என்று நான் சொல்வது சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதையே குறிப்பிடும்.

ஆகவேதான், பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்துவின் மக்கள் அவரிடம் வரும்படியாக, சுவிசேஷ அழைப்போடு கூடிய விசேடமான திட்ப உறுதியான அழைப்பையும் கிறிஸ்துவின் மக்களுக்குக் கொடுக்கிறார். சுவிசேஷகன் கொடுக்கும் அழைப்பல்ல. இது பரிசுத்த ஆவியானவர் மட்டுமே ஆத்துமாக்களின் இதயத்தைத்தொட்டுப் பேசும் அழைப்பாகும். பரிசுத்த ஆவியானவர் இந்த அழைப்பைக் கொடுக்கும்போது பாவத்தினால் இருண்டு போயிருந்த ஆத்துமாவின் அகக்கண்களைத் திறந்து, சுவிசேஷ உண்மைகளை அவ்வாத்துமா புரிந்து கொள்ளும்படிச்செய்து, மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசிப்பதற்கான அனைத்துக் காரியங்களையும் அவ்வாத்துமாவில் செய்கிறார். இதன் மூலம் ஆத்துமாவின் சித்தம் புதுப்பிக்கப்பட்டு சுதந்திரமாக அவ்வாத்துமாவால் கர்த்த‍ரை விசுவாசிக்க முடிகிறது. பரிசுத்த ஆவியின் செயலால் புதுப்பிக்கப்பட்ட ஆத்துமாவின் மனம் தேவ நீதியை அரவணைத்து அதற்குக் கட்டுப்பட்டு வாழ விரும்புகிறது.

ஆகவே, சுவிசேஷப் ‍பிரசங்கத்தைக் கேட்டு மனிதன் மனம் மாற மறுத்தாலும், பரிசுத்த ஆவியின் திட்ப உறுதியான அழைப்பைத் தவிர்க்கவோ, நிராகரிக்கவோ இயலாதவனாக இருக்கிறான். இதனாலேயே இதற்கு திட்ப உறுதியான அழைப்பு அல்லது தவிர்க்க முடியாத அழைப்பு என்று பெயரிடப்பட்டிருக்கின்றது. இந்த அழைப்பு தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கு மட்டுமே கிடைக்கின்றது. இவ்வழைப்பின் மூலமே ஆத்துமா சுதந்திரமாகவும், முழு இருதயத்தோடு கிறிஸ்துவை ‍நேசித்தும் கர்த்தரை நாடி ஓடிவருகிறது.

5. பரிசுத்தவான்களின் விடாமுயற்சி

ஐந்தாவது கல்வினிசக் கோட்பாட்டை பரிசுத்தவான்களின் விடாமுயற்சி என்று அழைக்கிறோம். இதை பரிசுத்தவான்களின் பாதுகாப்பு என்று அழைப்பார்கள். தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் பாவத்திலிருந்து கிறிஸ்துவால் மீட்கப்பட்டு, பரிசுத்த ஆவியால் திட்ப உறுதியாக அழைக்கப்படுவதோடு இரட்சிப்பின் திட்டம் முடிந்துவிடவில்லை. அவர்கள் கிறிஸ்துவுக்குள் விசுவாசத்தில் நிலைத்திருக்கும் வகையில் தேவ வல்லமையால் பாதுகாக்கப்படுகிறார்கள். மெய்யாகவே மறுபிறப்படைந்து கிறிஸ்துவை விசுவாசித்து நித்திய ஜீவனைப் பெற்றுக்கொண்ட அனைவரும் நித்தியத்துக்கும் கிறிஸ்துவுக்குள் நிலைத்திருக்கும்படிப் பாதுகாக்கப்படுகிறார்கள். இதையே பரிசுத்தவான்களின் விடாமுயற்சி என்ற இப்போதனை விளக்குகின்றது.

இப்போதனை கிறிஸ்தவன் என்று தன்னை அழைத்துக் கொள்கிற ஒவ்வொருவரும் நிச்சயம் பரலோகம் சேர்வார்கள் என்று போதிக்கவில்லை. பரிசுத்தவான்கள், அதாவது பரிசுத்த ஆவியால் மறுபிறப்படைந்தவர்கள் மட்டுமே பரலோகம் சேர்வார்கள் என்று போதிக்கின்றது. விசுவாசி என்று தம்மை அழைத்துக் கொள்கிற அநேகர் விழுந்து போகிறார்கள். ஆனால், இவர்கள் ‍எப்போதுமே தேவ கிருபையைப் பெற்றிருக்காததாலேயே சில காலம் விசுவாசிகள் போல் தோற்றமளித்து பின்பு விழுந்து போகிறார்கள். ஆனால், மெய்யான விசுவாசி சிலவேளைகளில் சோதனைகளுக்குள் அகப்பட்டுத் துன்புற்றாலும், ஒருவேளை பெரிய பாவத்தைக்கூடச் செய்துவிட்டாலும் இச்சோதனைகளும், பாவமும் அவர்கள் இரட்சிப்பை இழந்து போகும்படிச் செய்துவிடாது. ஏனெனில், கர்த்தரின் ஆவியின் கிரியைகளால் அவர்கள் மனந்திரும்பி தேவனிடத்தில் ஓடிவருவார்கள். இவ்வாறே தாவீதும் கர்த்தரிடம் ஓடிவந்தான்.

அதேவேளை, இப்போதனை மெய் விசுவாசிகள் இரட்சிப்பின் கனிகளைத் தொடர்ந்து பெற்றிருப்பார்கள் என்றும், அவர்கள் விசுவாசத்தில் விடாமுயற்சியுடன் வளர்வார்கள் என்றும் போதிக்கின்றது. அவர்களுடைய வாழ்க்கை ஏனோதானோவென்றிருக்காது. கர்த்தர் தன் வல்லமையால் பாதுகாத்துவரும் விசுவாசிகள் பரிசுத்தத்தில் விடாமுயற்சியுடன் வளர்வார்கள்.

கல்வினிசத்தின் இவ்வைந்து கோட்பாடுகளையும் தனித்தனியாகப் பிரித்து நமக்கு விருப்பமானதை மட்டும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஐந்து கோட்பாடுகளும் இணைபிரியாதவை. ஒன்றை ஏனையவற்றிலிருந்து பிரிக்க முடியாது. இவற்றில் ஒன்றை மாற்றினாலோ அல்லது அகற்றிவிட்டாலோ ஐந்து கோட்பாடுகளுமே சிதறி‍ப்போய்விடும். இவை ஐந்துமே கிருபையின் போதனைகளை படிப்படியாக விளக்கும் ஐந்து கோட்பாடுகள். சிலர் இவ்வைந்தில் முதலாவது மட்டும் (மனிதனின் முழுமையான சீரழிவு) எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் மற்றதையெல்லாம் ஏற்றுக்கொள்கிறேன் என்பார்கள். இவர்களால் பெலேஜியனிச, செமி-பெலேஜியனிசப் போதனைகளை இன்னும் விடமுடியவில்லை. இவர்கள் மனிதனின் சித்தம் பாவத்தால் கறைபடியவில்லை என்றும், அவனால் சுயமாக கர்த்தருக்காகத் தீர்மானம் எடுக்கமுடியும் என்றும் நம்புகிறார்கள். இதனால்தான் இவர்களால் அர்ப்பண அழைப்புக் கொடுத்த (Altar Call) ஆத்துமாக்களை விசுவாசிக்க வைக்க செய்வதையும், பில்லி கிரெகாமுக்கு துதிபாடுவதையும் இன்னும் விடமுடியாமல் இருக்கிறது.

வேறு சிலர் எங்களுக்கு ஐந்தில் மூன்றாவது மட்டும் (குறிப்பிட்டவர்களுக்கான கிறிஸ்துவின் மீட்பு) பிடிக்கவில்லை. மற்றதையெல்லாம் ஏற்றுக்கொள்கிறோம் என்பார்கள். இவர்களாலும் செமி-பெலேஜியனிச, ஆர்மீனியனிசப் போதனையான “கிறிஸ்து எல்லோருக்குமாக மரித்தார்” என்ற போலிப்போதனையை இன்னும் கைவிட முடியாமல் இருக்கிறது. இதனால், இவர்களும் தொடர்ந்து அர்ப்பண அழைப்பு கொடுத்து வருகிறார்கள். கிறிஸ்து எல்லோருக்குமாக மரித்திருப்பதாலும், எல்லோரும் கிறிஸ்துவை விசுவாசிக்கக்கூடிய வல்லமையைத் தமகக்குள் கொண்டிருப்பதாலும் அவர்களால் கிறிஸ்துவை சுயமாக விசுவாசிக்க முடியும் என்று இவர்கள் தவறாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறாக, ஐந்து கோட்பாடுகளில் சிலவற்றை மட்டும் ஏற்றுக்கொண்டு ஏனையவற்றை நிராகரிக்கிறவர்கள் கல்வினிச விசுவாசிகள் அல்ல. இவர்கள் கல்வினிசப் போதனைகளை முழுமையாகப் புரிந்து கொள்ளாத சந்தர்ப்பவாதிகள். இன்று அநேக பாப்திஸ்துகளும், சகோதர சபைகளைச் சேர்ந்தவர்களும் இவ்வாறு அரைகுறை கல்வினிஸ்டுகளாக காட்சி அளிக்கிறார்கள். இவர்கள் மறுபடியும் கல்வினிசப் போதனைகளை முறையாக ஆராய்ந்து படித்துப் புரிந்து கொள்ள வேண்டும்.

இதுவரை நாம் விளக்கிய கல்வினிசப் போதனைகளை விசுவாசிப்பது இன்று மிக அவசியமாகிறது. சுவிசேஷம் என்ற பெயரில் பெலேஜிய, ஆர்மீனியனிசப் போதனைகளும், தாராளவாத இறையியலும் மலிந்து தடுமாறிக் கொண்டிருக்கும் தமிழ் கிறிஸ்தவ உலகிற்கு கல்வினிசப் போதனைகளே இன்று வழிகாட்டி வாழ்வளிக்க முடியும். பத்தாம் பசலிகள் கட்டிவிட்ட கட்டுக்கதைகளும், வதந்திகளும் கல்வினிசப் போதனைகளைத் தமிழ்க் கிறிஸ்தவர்களில் பெரும்பாலானவர்கள் அறிந்து கொள்ள முடியாதபடி செய்துவைத்திருக்கின்றன. கல்வினிசப் போதனைகளை அறிந்து போதிக்கும் திருச்சபைகளும், போதகர்களும் தமிழ்ச் சமுதாயத்தில் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே. பாரம்பரிய சபைகள் தாராளவாத இறையியலுக்கு மோசம் போய் தறிகெட்டுப் போய்க்கொண்டிருக்க, பெந்தகொஸ்தே, கெரிஸ்மெட்டிக் கூட்டத்தின் உணர்ச்சித் தூபத்திற்கும் போலிப் பிரசங்கத்திற்கும் அடிபணிந்து வேதம் போதிக்காத கிறிஸ்தவம் என்ற‍ பெயரில் ஒரு மாயவாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிற தமிழ் கிறிஸ்தவர்கள் விழிப்புணர்வு பெற கல்வினிசப் போத‍னைகள் இன்று அவசியம். பரிசுத்த ஆவியானவர் மட்டுமே இருண்ட காலத்திலிருக்கும் தமிழ்க் கிறிஸ்தவத்தை இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு கல்வினிசப் போதனைகள் மூலம் கொண்டுவரக் கூடியவர்.

கல்வினிசப் போதனைகளை அறிந்து கொள்வது ஏன் அவசியம் என்பதற்கான நான்கு காரணங்களை இனி பார்ப்போம்.

1. மெய்யான சுவிசேஷத்தைக் கல்வினிசப் போதனைகள் மூலமே அறிந்து கொள்ள முடிகிறது.

பென்ஜமின் வார்பீல்ட் (Benjamin Warfield) என்ற சீர்திருத்த இறையியல் அறிஞர், “உலகத்தில் இரண்டு விதமான கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட மதங்கஙள உள்ளன. ஒன்று விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டது. இன்னொன்று, மனிதனுடைய கிரியைகளை அடிப்படையாகக் கொண்டது. கல்வினிசம் முதலாவதின் மொத்த உருவம். பெலேஜியனிசம் இரண்டாவதின் மொத்த உருவம். இவை இரண்டைத் தவிர கிறிஸ்தவ உலகில் காணப்படும் ஏனைய எல்லா விசுவாசங்களும் இவை இரண்டிற்கும் இடையிலான ஒரு மத்தியநிலையைக் காணும் வீணான முயற்சியிலேயே ஈடுபட்டுள்ளன என்கிறார்.”

கிரியைகளை அடிப்படையாகக் கொண்ட எந்தப் போதனையும் கிறிஸ்தவ சுவிசேஷமாகாது. இன்று சுவிசேஷம் என்ற பெயரில் கூட்டங்களிலும், சபைகளிலும் அளிக்கப்பட்டு வருவது மெய்யான சுவிசேஷமல்ல என்பதைப் புரிந்து கொள்ளக்கூட முடியாத நிலையில் பலர் இருக்கின்றனர். எப்படியாவது, எதைச் செய்தாவது கிறிஸ்துவுக்கு ஆத்துமாக்களைத் தீர்மானம் எடுக்க வைத்துவிட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் கொடுக்கப்படும் செய்திக்கு இன்று சுவிசேஷம் என்ற பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது‍ யோவான் ஸ்நானனும், இயேசுவும், பவுலும், பேதுருவும் போதித்த சுவிசேஷத்திற்கு முரணானது. சிலர் இயேசு வரப்போகிறார் என்று சொல்லிச் சொல்லிப் பயமுறுத்தி ஆத்துமாக்களைக் கிறிஸ்துவுக்காகத் தீர்மானம் எடுக்க வைக்க முயற்சிக்கின்றனர். “தீர்மானம் எடுத்தலையே” முழு நோக்கமாகக் கொண்ட இந்தப் போலிச்சுவிசேஷத்திற்கும் வேதம் போதிக்கும் சுவிசேஷத்திற்கும் அடிப்படையிலேயே வேறுபாடு உண்டு.

பெலேஜியனிசத்தின் அடிப்படையி‍ல் வளர்ந்து ஆர்மீனியனிசமாக இன்று காட்சி தரும் இந்தப்‍ போலிப் பிரசங்கத்தால் கர்த்தர் மகிமைப்படுத்தப்படுவதில்லை. கிறிஸ்துவின் மீட்பின் செயல்களின் உன்னதத்தை ஆத்துமாக்கள் அறிந்து கொள்ள முடிவதில்லை. ஆத்துமாக்களை கிறிஸ்துவிடம் கொண்டுவரக்கூடிய பரிசுத்த ஆவியை நம்பி இந்த சுவிசேஷம் கொடுக்கப்படுவதில்லை. இது மனிதனை மகிமைப்படுத்தி, மனிதனுடைய தேவைகளை மட்டுமே மனதில் வைத்து வேதபோதனைகளுக்கெல்லாம் முரணான சுவிசேஷம் என்ற பெயரில் அளிக்கப்படும் போலிப் பிரசங்கம்.

இன்று இப்போலிச்சுவிசேஷம் காட்டாறு போல் தறிகெட்டுப்பாய்ந்து எத்தனையோ அவலங்களைச் செய்து கொண்டிருக்கின்றது. கத்தோலிக்கப் போதனைகளை இது வேதமாக ஏற்றுக்கொள்கிறது. கிறிஸ்துவின் மீட்பின் இரகசியங்களை அறிவிக்காமல் சுகமளிப்புக் கூட்டங்களையும், எழுப்புதல் கூட்டங்களையும் நடத்தி பரலோக வாழ்வளிக்கும் வியாபாரம் நடத்தி வருகின்றது. ஆத்துமாக்களை ஏமாற்றி தவறான வழியில் போகச் செய்கிறது. சத்தியத்திற்கு மதிப்புக் கொடுக்காமல் பொய்யை சுவிசேஷம் என்ற பெயரில் பிரசங்கித்து வருகின்றது.

ஆனால், கல்வினிச சுவிசேஷம் இதற்கு முற்றிலும் மாறானது. அது கர்த்தரின் இறை ஆண்மையை வலியுறுத்துகிறது. தேவ கிருபையை அள்ளி வழங்குகிறது. கிறிஸ்துவின் மீட்பின் செயல்களை மகிமைப்படுத்துகிறது. ஆத்துமாக்களின் இரட்சிப்‍புக்கு பரிசுத்த ஆவியின் கிரியைகளிலேயே ஆரம்பம் முதல் முடிவு வரை தங்கியிருக்கின்றது. மனித ஞானத்திற்கு கல்வினிச சுவிசேஷத்தில் இடமில்லை. கிரியைகளுக்கு அதில் துளிக்கூடப் பங்கில்லை. பாடல்களைப்பாடி, இசைக்கச்சேரி வைத்து மனித உணர்வலைகளைத் தூண்டிவிட்டு ஆத்துமாக்களைக் கூட்டத்தின் முடிவில் “தீர்மானம்” எடுக்க வைக்க கல்வினிச சுவிசேஷம் முயலாது. கல்வினிச சுவிசேஷம் வேதத்தையே முழுமையாக சார்ந்து நிற்கிறது. ‍மொத்தத்தில் கல்வினிச சுவிசேஷமே மெய்ச்சுவிசேஷம். கல்வினிச ஐங்கோட்பாட்டைக் கவனத்தோடும், முறையோடும் படித்துப் பார்ப்பவர்களுக்கு இது எவ்வளவும் சந்தேகமில்லாமல் புரியும். இப்பத்திரிகையில் இதற்கு முன் வெளிவந்த கிறிஸ்தவன் யார்? என்ற ஆக்கத்தைப் படித்துப் பார்ப்பவர்கள் கல்வினிச சுவிசேஷம் எப்படி இருக்க வேண்டும் என்று புரிந்து கொள்ளலாம். (நூல் வடிவில் உள்ள அல்பர்‍ட் என். மார்டின் எழுதிய அவ்வாக்கத்தை வாசகர்கள் எம்மிடம் பெற்றுக் கொள்ளலாம்).

2. நமது விசுவாசத்தில் நாம் உறுதி பெற கல்வினிச ஐங்கோட்பாட்டை அறிந்திருத்தல் அவசியம்.

கல்வினிச சுவிசேஷம் இரட்சிப்பிற்கு ஆரம்பம் முதல் முடிவுவ‍ரை கர்த்தரிலேயே தங்கியிருப்பதால் விசுவாசிகள் அதன் மூலம் அந்த நிச்சயத்தை அடைய முடிகின்றது. தாங்கள் பெற்றுக்கொண்ட கிருபையை இழந்து போகமாட்டோம் என்ற உறுதியும், நிச்சயமும் அவர்களுக்கு இருக்கும். கிறிஸ்துவின் மீட்பின் அற்புதங்களைக் கல்வினிச சுவிசேஷம் அறிவிப்பதால் விசுவாசிகள் கிறிஸ்தவ வாழ்க்கையில் வளர்ச்சியடைய தங்கள் சொந்த வல்லமையில் தங்கியிராமல் கிறிஸ்துவில் தங்கியிருக்கிறார்கள். கிறிஸ்துவின் மீட்பின் செயல்களின் அருமை பெருமைகளை கல்வினிச சுவிசேஷம் அறிவிப்பதுபோல் வேறு எந்த சுவிசேஷமும் அறிவிக்காது. கல்வினிச ஐங்கோட்பாடுகள் விசுவாசிக்கு தேவ காரியங்களை முழுமையாக அறிவித்து அவனுக்கு அதிகமான ஆத்மீக மனத்தெம்பை அளிக்கின்றன.

3. வேதபூர்வமான இறையியல் அறிவைப் பெற்றுக்கொள்ள கல்வினிசப்‍ போதனைகள் அவசியம்.

கல்வினிசப் போதனைகள் விசுவாசிக்கு வேதபூர்வமான இறையியல் போதனையை அளிக்கின்றன. தமிழ் சமுதாயத்தில் இன்று காணப்படும் கிறிஸ்தவத்தில் சத்தியமான இறையியலைப் பார்க்க முடியாதிருக்கின்றது. கல்வினிசப் போதனைகள், விசுவாசி தொடர்ந்து வேத சத்தியத்தில் வளரத் தேவையான அனைத்து உபதேசங்களையும் அளிக்கின்றது. கர்த்தரின் பெரிதான கிருபையையும், அவரது சர்வ வல்லமையையும், கிறிஸ்துவைப்பற்றிய போதனைகளையும் விசுவாசி பெற்று தனது கிறிஸ்தவ வாழ்க்கையில் வளர மு‍டிகின்றது. வேதபோதனை எதுவுமே இல்லாமல் உடல் சுகத்தையும், உணர்ச்சியூட்டும் கீதங்களையும், அற்புத, அடையாளங்களையும் நாடி அலைந்து அவற்றின் மூலம் கிறிஸ்தவ வாழ்க்கையில் வளர முடியும் என்று போய்க்கொண்டிருக்கின்ற போலிக் கிறிஸ்தவத்தைவிட முற்றிலும் மாறுபாடானது வேதபூர்வமான கல்வினிசக் கிறிஸ்தவம். வேதத்திற்கு மிக உயர்ந்த இடத்தை அளித்து, வேத போதனைகளைத் தெளிவாக அளித்து அவற்றால் மட்டுமே கிறிஸ்தவ வாழ்க்கையில் எவரும் உயர முடியும் என்ற அசையா நம்பிக்கை கொண்டது கல்வினிச கிறிஸ்தவம். கல்வினிசப் போதகன் மட்டுமே வேதத்தில் ‍அதிக கவனம் செலுத்திப் படித்து அநேக முத்துக்களை வாராவாரம் விசுவாசிக்கு சபையில் வழங்கக்கூடியவனாக இருக்கிறான். இதனால் விசுவாசிகள் வாராவாரம் சத்தான போதனைகளைப் பெற்று இறையியல் அறிவைப் பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்படுகின்றது. கல்வினிசப் போதனைகள் மட்டுமே ஒரு விசுவாசிக்கு உயர்ந்த வேத ஞானத்தை அளிக்க முடியும். சத்தியத்தை சத்தியமாகப் போதிக்க முடியும். சத்தியத்தில் வளரத் துணை செய்ய முடியும். வேதபூர்வமான திருச்சபைகளை அமைக்க முடியும்.

4. ‍‍மெய்யான சுவிசேஷ ஊழியத்தை வேதபூர்வமாக கர்த்தரின் மகிமைக்காகச் செய்ய கல்வினிசப் போதனைகளை அறிந்தவர்களாலேயே முடியும்.

சுவிசேஷத்தைப் பற்றி இன்று பரவலாகக் காணப்படும் எண்ணங்கள் வேதபூர்வமானவையா? என்ற சந்தேகம் பலருக்கும் இன்று ஏற்பட்டிருப்பதைப் பார்த்து நாம் வியப்படைய முடியாது. சுவிசேஷம் சொல்கிறோம் என்ற பெயரில் பெரும் வியாபாரம் தமிழ் உலகில் நடந்து கொண்டிருக்கிறது. சுயாதீன கிறிஸ்தவ நிறுவனங்கள் வளரவும், சுயாதீன சுவிசேஷப் பிரசங்கிகள் பணம் பண்ணவும் அதிக ஆத்துமாக்களைக் குறுகிய காலத்தில் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ள வைக்கும் ஒரு வேதமறியாத உத்தியையே சுவிசேஷ ஊழியம் என்ற பெயரில் இன்று சமூகம் சகித்துக் கொண்டிருக்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டிருக்கிறது. உள்ளத்தைத் துடிக்க வைக்கும் கண்ணீர்ப் பிரசங்கத்தாலோ அல்லது சுகமளிக்கும் வித்தைகள் செய்தோ, பாட்டுக் கச்சேரிகள் வைத்தோ எப்படியாவது ஆத்துமாக்களை அடிபணியச் செய்து அவர்களுக்கு கிறிஸ்தவர்கள் என்று பெயர் கொடுக்கும் போலித்தனமான ஊழியத்தையே இன்று நாம் சகித்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இத்தகைய ஊழியங்களில் பல மோசடி ஊழியங்களாகும். ஆனால், வேதமறியாத அறிவீனத்தால் உள்ளத்தில் பாவ சிந்தனைகள் இல்லாது இதுதான் சுவிசேஷ ஊழியம் என்ற தவறான எண்ணத்தால், மாம்ச முயற்சிகளின் மூலம் ஆத்துமாக்களை வற்புறுத்திக் கிறிஸ்துவிடம் அழைத்துவரும் ஊழியத்தைச் செய்து வருபவர்கள் பலர். இவர்களெல்லோருமே மோசடிக்காரர்களாக இல்லாவிட்டாலும் தாம் ஞானஸ்நானம் கொடுத்த ஆத்துமாக்களுடன் சேர்ந்து இவர்களும் மோசம் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.

ஐந்தாம் நூற்றாண்டில் பெலேஜியனிசமும் அதனைத் தொடர்ந்து செமி-பெலேஜியனிசமும் ஆர்மீனியனிசமும் இத்தகைய போலிச்சுவிசேஷ ஊழியங்களுக்கு வழிவகுத்தன என்பதை இவ்வாக்கத்தின் ஆரம்பத்தில் பார்த்தோம். இப்போதனைகளைப் பின்பற்றியே அமெரிக்காவின் சார்ள்ஸ் பினியின் (1792-1875) அர்ப்பண அழைப்பு கொடுக்கும் முறை (Altar Call) உருவெடுத்தது. அர்ப்பண அழைப்பு என்பது சுவிசேஷப் பிரசங்கத்தின் முடிவில் அதைக் கேட்டவர்களைக் கிறிஸ்துவுக்காக தீர்மானம் எடுக்க வைக்கும்படியாகக் கொடுக்கப்படும் அழைப்பாகும். இவ்வழைப்புக் கொடுப்பவர்கள், தீர்மானம் எடுக்கிறவர்கள் பரலோக வாழ்வை அடைகிறார்கள் என்று நம்புகிறார்கள். இதைப் பெற்றெடுத்த பெருமை சார்ள்ஸ் பினியைச் சாரும். அர்ப்பண அழைப்பாகிய குழந்தையை வளர்‍த்தெடுத்து அதை உலகெங்கும் பிரபலப்படுத்திய பெருமை பில்லி கிரேக‍மைச் சாரும். பெந்த‍கொஸ்தே, கெரிஸ்மெட்டிக் கூட்டம் இக்குழந்தையை சீராட்டிப் புத்தாடை உடுத்தி வளர்க்கும் பொறுப்பை ஏற்றது. இக்கைங்கரியத்தை மேற்கத்திய நாடுகளில் ஓரல் ரொபட்சில் இருந்து இன்று பெனி ஹின் வரையும், நம்மக்கள் மத்தியில் தினகரனில் இருந்து எசேக்கியா ஜோன்ஸ் வரையும் ‍திறமையாக நெஞ்சில் ஈரமில்லாமல் செய்து வருகிறார்கள். எந்தவித வேறுபாடுமில்லாமல் பாரம்பரிய சபை, சுயாதீன சபைகள், பாப்திஸ்து, சகோதர சபைகள் என்று இவ்வர்ப்பண அழைப்பு முறை எங்கும் தமிழ்க் கிறிஸ்தவ சமுதாயத்தில் பரவிப் பல்லாண்டுகளாக போலிக் கிறிஸ்தவர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

கல்வினிச சுவிசேஷம் இவ்வர்ப்பண அழைப்பு முறையை முற்றாக நிராகரிக்கிறது. கர்த்தரின் இறை ஆண்மையில் முழு நம்பிக்கை வைத்துள்ள கல்வினிச சுவிசேஷம் தேவ கிருபையால் மட்டுமே ஆத்துமா கிறிஸ்துவிடம் வர முடியும் என்று நம்புகிறது. விசுவாசத்தைக் கடவுள் மனந்திரும்புகிறவர்களுக்கு ஈவாகத் தருகிறார் என்று போதிக்கின்றது. ஆரம்பம்முதல் இறுதிவரை ஆத்துமாவின் இரட்சிப்பு கர்த்தரைச் சார்ந்ததாக, கர்த்தரே இலவசமாக அளிப்பதாக இருப்பதால் சுவிசேஷத்தைச் சொல்லும் கடமையைத் தவிர ஆத்துமாவைக் கர்த்தரிடம் வரும்ப‍டிச் செய்யும் எந்தப் பணியும் சுவிசேஷம் சொல்கிறவருக்கில்லை என்பதை கல்வினிச சுவிசேஷம் ஆணித்தரமாக விசுவாசிக்கிறது. “இயேசுவை ஏற்றுக்கொள்”, “அவர் கரத்தைப் பி‍டித்துக்கொள்”, “உன் இதயத்தை இயேசுவுக்கு கொடு” என்றெல்லாம் ஆத்துமாக்களிடம் பிச்சை கேட்க கல்வினிச சுவிசேஷகனுக்குத் தெரியாது. இயேசுவை ஆத்துமாவிற்கு சுவிசேஷத்தின் மூலம் காட்டி இயேசுவிடம் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள ஓடு! என்றுதான் கல்வினிச சுவிசேஷகன் பிரசங்கிப்பான். இயேசுவிடம் போக ஆத்துமாவிற்கு சுவிசேஷத்தின் மூலம் வழியைக் காட்டுவது மட்டுமே தனது வேலை என்பதை கல்வினிச சுவிசேஷகன் நன்றாக அறிந்திருக்கிறான். எனவே, கல்வினிச சுவிசேஷப் பணிக்கும் ஆர்மீனியனி சுவிசேஷப்பணிக்கும் பெரும் வேறுபாடுண்டு. கல்வினிச சுவிசேஷப் பணி ஆத்துமாவின் இரட்சிப்புக்காக கர்த்தரில் தங்கியிருக்கிறது. ஆர்மீனிய சுவிசேஷப் பணி ஆத்துமாவின் இரட்சிப்புக்கு ஆத்துமா எடுக்கக்கூடிய தீர்மானத்தில் தங்கியிருக்கிறது. அடிப்படையிலேயே இவ்விரண்டு கோட்பாடுகளுக்குமிடையில் பெரும் வேறுபாடுண்டு. இதில் கல்வினிச சுவிசேஷம் வேதபூர்வமானது ஆர்மீனிய சுவிசேஷம் போலியானது.

அர்ப்பண அழைப்புக் கொடுத்து தீர்மானம் எடுக்க வைத்தால் மட்டுமே ஆத்துமா இரட்சிப்பை அடைய முடியும் என்று நம்புவது மடமை. இம்முறையை வேதத்தில் எங்குமே காணமுடியாது. இயேசு இப்படிப்பட்ட காரியத்தை செய்ததில்லை. பவுலும் இதைச் செய்யவில்லை. இது மனித ஞானத்தின் விளைவு. இது, மனித சித்தம் பாவத்தால் பாதிக்கப்படாது சுதந்திரமாக இயங்கி கர்த்தரை அறிந்து கொள்ளக்கூடிய வல்லமை கொண்டிருக்கிறது என்ற பொய்யை நம்பியதால் ஏற்பட்ட விளைவு. இந்நம்பிக்கையால் ஆத்துமாவை மனதை அசைத்து எப்படியாவது கூட்ட முடிவில் தீர்மானம் எடுக்க வைக்க பெரும்பாலான சுவிசேஷகர்கள் முயன்று கொண்டிருக்கிறார்கள். இம்முறையைக் கடைப்பி‍டிப்பதால் போலிக் கிறிஸ்தவர்கள் உருவாவதே அதிகமாகும். ஏனெனில், மெய்யாக கிறிஸ்துவை விசுவாசிக்காதவர்களை எதையோ பேசியும், பாடியும், சுகமளிப்பதாக சொல்லியும் தீர்மானம் எடுக்க வைப்பதால் மெய்க்கிறிஸ்தவர்கள் உருவாவதில்லை. இப்படித் தீர்மானம் எடுத்தவர்கள் பரலோகம் போவதில்லை. அவர்களால் கிறிஸ்தவ வாழ்க்கை வாழ முடியாது.

கல்வினிசப் போதனைகளை அறிந்திருப்பதால் சுவிசேஷப்பணியை திருச்சபைகள் வேதபூர்வமாக செய்யமுடியும். கல்வினிசப் போதனைகள் சுவிசேஷம் சொல்வதற்கு உதவாது என்ற வதந்தி பற்றி நமக்குத் தெரியும். இது கல்வினிசப் போதனைகளைப் புரிந்து கொள்ளாதவர்கள் உண்டாக்கிய கட்டுக்கதை, உண்மையில் கல்வினிசப் போதனைகளை அறிந்தவர்களால் மட்டுமே கர்த்தரை மகிமைப்படுத்தும் விதமாக வேதபூர்வமாக சுவிசேஷம் சொல்ல முடியும். கல்வினிசப் போதனைகளை அறிந்தவர்கள் மட்டுமே கர்த்தர் நிச்சயம் தனது மக்களை இரட்சிப்பார் என்ற விசுவாசத்துடன் சுவிசேஷப்பணி செய்ய முடியும். ஆர்மீனிய சுவிசேஷகனால் இத்தகைய விசுவாசத்துடன் ஊழியம் செய்ய முடியாது. அவன் ஆத்துமாவின் இரட்சிப்புக்கு கர்த்தரில் தங்கியிருக்காமல் மனிதனிலேயே தங்கியிருக்கிறான். அது மட்டுமல்லாமல், இரட்சிப்பு அடைந்த ஒருவன் அதை இழக்கவும் முடியும் என்று அவன் நம்புவதால் அவனுடைய சுவிசேஷப்பணி உறுதியானதோ, நிச்சயமானதோ அல்ல. அதனால் ஆர்மீனிய சுவிசேஷத்தால் எவரும் நிச்சயமான இரட்சிப்பை அடையவும் முடியாது. இரட்சிப்பின் நிச்சயத்துடன் வாழவும் முடியாது.

கல்வினிசப் போதனைகளை நம்புகிறவர்கள் சுவிசேஷம் சொல்வதில்லை, என்று சிலர் தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். இது ஒரு வீணான கட்டுக்கதை. கல்வினிச விசுவாசிகள் சுவிசேஷம் சொல்கிறோம் என்ற பெயரில் சுகமளிப்புக் கூட்டங்களையும், அர்ப்பண அழைப்புக் கூட்டங்களையும் நடத்துவதில்லைதான். ஆனால், கல்வினிசப் போதனைகள் சுவிசேஷம் சொல்வதையும், சபைகள் அமைப்பதையும் பெரிதும் வலியுறுத்துகின்றன. கல்வினிசப் போதனையை விசுவாசித்தவர்களே உலகின் பெரும் சுவிசேஷக ஊழியர்களாகவும், திருச்சபைகளை ஏற்படுத்தியவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். இந்தியாவுக்கு வந்து சுவிசேஷப்பணி செய்த வில்லியம் கேரி கல்வினிசப் போதனையை விசுவாசித்தவர். அன்று இந்தியாவின் ஒருபகுதியாக இருந்த இன்றைய பங்களாதேசத்திற்கு வந்து ஊழியம் செய்த ஹென்றி மார்டின் கல்வினிசப் போதனைகளை விசுவாசித்தவர். வேல்ஸ் தேசத்தின் ஜோர்ஜ் விட்பீல்ட் உலகின் தலைசிறந்த ‍கல்வினிச சுவிசேஷப் பிரசங்கி. அமெரிக்காவின் ஜொனத்தன் எட்வர்ட்ஸ் இன்னுமொரு பெரும் சுவிசேஷப் பிரசங்கி. அமெரிக்க இந்தியர்கள் மத்தியில் ஊழியம் செய்த டேவிட் பிரெய்னாட், பர்மாவுக்குப்போன அதோனிராம் ஜட்சன், இங்கிலாந்தை, ஏன்! முழு உலகத்தையே தனது பிரசங்கத்தால் அதிரச் செய்த சார்ள்ஸ் ஸ்பர்ஜன், வேல்ஸின் ஹொவல் ‍‍‍ஹெரிஸ், டேனியல் ரோலன்ட்ஸ் என்று இப்பட்டியலை நீட்டிக்கொண்டே போகலாம். இவர்கள் எல்லாம் கல்வினிசப் போதனைகளைக் கற்றறிந்து சுவிசேஷப் பணியில் ஈடுபட்டவர்கள். இவர்கள் சுவிசேஷம் சொல்லுவதை நம்பியிராவிட்டால் இப்பணியில் எப்படி ஈடுபட்டிருக்க முடியும்? எனவே கல்வினிசப் போதனைகளை அறிந்தவர்களே வேதபூர்வமாக கர்த்தரின் மகிமைக்காக சுவிசேஷத்தைச் சொல்லி சபை அமைக்க முடியும்.

கல்வினிச ஐங்கோட்பாடுகளை சந்தேகமில்லாமல் ஒவ்வொரு கிறிஸ்தவனும் இன்று கற்றறிந்திருக்க வேண்டும். கல்வினிச ஐங்கோட்பாடுகள் போலித்தனமான சுவிசேஷத்‍தைத் தோலுரித்துக் காட்டி, வேதம் போதிக்கும் மெய்ச்சுவிசேஷத்தைத் தெளிவாக விளக்குகிறது. போலிச்சுவிசேஷத்தின் மாயையில் சிக்கி போலிக் கிறிஸ்தவர்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் தமிழ் கிறிஸ்தவ சபைகள் அழிந்து போய்விடாமல் தம்மைக் காத்துக்கொள்ள இன்று விசுவாசிக்க வேண்டிய சத்தியங்கள் கல்வினின் ஐங்கோட்பாடுகள். இன்றைய கெரிஸ்மெட்டிக், பெந்த‍கொஸ்தே மாயையிலிருந்து விடுபட்டு, தாராளவாத சமயசமரசப் போக்கில் இருந்து தப்பி வேதபூர்வமான சபைகளாக தமிழ் கிறிஸ்தவ சபைகள் பணிசெய்ய கல்வினிச ஐங்கோட்பாடுகளை அறிந்திருப்பது இன்று அவசியம்.

‍‍பெலேஜிய, ஆர்மீனிய போலிச்சுவிசேஷத்தை அத்திபாரமாக வைத்து எழுப்பப்படுகின்ற சபைகளும், ஊழியங்களும் அக்கினியினாலே பரிசோதிக்கப்படப்போகும் நாள் வருகிறது என்று வேதம் சொல்கிறது. அத்தகைய ஊழியங்களை செய்கிறவர்கள் அக்கினியினாலே வெளிப்படுத்தப்படுகிற நாள் சமீபிக்கிறது. இத்தகைய ஊழியங்கள் வெந்து போகப் போகிற அவலத்தையும் வேதம் முன்கூட்டியே எச்சரிக்கிறது (1 கொரிந்தியர் 3:11-14). போலிச்சுவிசேஷத்தை அடியோடு புறக்கணித்து வேதம் போதிக்கும் சுவிசேஷத்தை பிரசங்கித்து கர்த்தரின் சபையைக் கட்ட நாம் முற்படுவோம். தமிழ் கிறிஸ்தவர்கள் அத்தகைய சபைகளோடு தம்மை இணைத்துக் கொண்டு மெய்ச்சுவிசேஷ ஊழியங்கள் தொடர இன்று ஊக்கத்துடன் உழைக்க வேண்டியது அவசியமாகிறது.

குறிப்புகள்:

1. George Smeaton, The Doctrine of the Holy Spirit, pp. 300, 301. செமி-பெலேஜியனிசம் ஆரஞ்சு (Orange) குழுவினரால் 529 ல் நிராகரிக்கப்பட்டது. ஆர்மீனியனிசம் அதற்குப்பின் ஆயிரத்தி நூறு வருடங்களுக்குப் பிறகு டோர்ட் குழுவினரால் நிராகரிக்கப்பட்டது.

சுருக்கமாக

பெலேஜியனிசம்

ஐந்தாம் நூற்றாண்டில் பெலேஜியனிசம் (Pelegius) என்ற இங்கிலாந்துத் துறவியின் போதனையில் உருவான கோட்பாடு. இது மனிதன் பாவியல்ல என்று நிர்தாட்சண்யமின்றிப் போதிக்கிறது. ஆதாம் தான் செய்த பாவத்தால் மனிதனுக்கு தவறான வழிகாட்டியாக இருந்தானே தவிர அவனுடைய பாவத்தால் வேறெந்தவிதமான பாதிப்பும் மனிதனுக்கு ஏற்படவில்லை என்பது பெலேஜியனிசத்தின் (Pelegianism) போதனை. பெலேஜியஸ் உலகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஆதாம் பாவம் செய்வதற்கு முன்பிருந்த நிலையிலேயே பிறப்பதாகப் போதித்தான். ஆகவே, மனிதனுடைய சித்தம் பாவத்தினால் எந்தவித பாதிப்பும் அடையாமல் முழுச்சுதந்திரத்தோடு இயங்குகிறது என்றும், சுவிசேஷத்தை ஏற்று கடவுளை நம்புகிற வல்லமையை, புறத்தூண்டுதல்களின் அவசியமின்றி, மனிதன் தனக்குள்ளேயே கொண்டிருக்கிறான் என்றும் பெலேஜியனிசம் போதிக்கின்றது. ஆகஸ்தீன் (Augustine) இப்போதனையை எதிர்த்து வேதம் போதிக்கும் கிருபையின் போதனைகளை நிலைநாட்டினார்.

செமி-பெலேஜியனிசம்

இக்கோட்பாட்டை உருவாக்கியவன் கேசியன் (Cassian) என்பவனாகும். ஆகஸ்தீனின் ஆணித்தரமான வாதங்களால் பெலேஜியனிசம் மூச்சுத்திணறி மடிந்தது. ஆனால், ஓர் புதிய போதனை உடனேயே உருவானது. இப்போதனை பெலேஜியனிசத்திற்கும் வேதம் போதிக்கும் கிருபையின் போதனைகளுக்கும் இடைப்பட்ட மத்தியநிலையில் இருந்தது. கேசியன், மனிதன் தனது மனந்திரும்புதலுக்கான ஆரம்ப நடவடிக்கையை எடுக்கும் வல்லமையைத் தனக்குள் கொண்டிருக்கிறான் என்று போதித்தான். மனிதனின் இவ்வாரம்ப நடவடிக்கைக்கு பரிசுத்த ஆவி உதவும்போது மனிதனால் கிறிஸ்துவை விசுவாசிக்க முடிகிறது என்பது கேசியனின் போதனை. இப்போதனை பெலேஜியனிசப் போதனையை மாற்றி அமைத்து உருவானதால் செமி-பெலேஜியனிசம் (Semi-Pelegianism) என்ற பெயரைப் பெற்றது. இப்போதனை ஆகஸ்தீனின் போதனையையும், பெலேஜியனின் போதனையையும் பயன்படுத்திக் கொண்டது. பாவம் மனிதனின் எல்லாப் பகுதிகளையும் பாதித்துள்ளது என்பதை இக்கோட்பாடு ஏற்றுக் கொண்டாலும், கடவுள் கிருபையை எல்லா மனிதர்களுக்கும் எந்தவித பாரபட்சமுமில்லாமல் கொடுக்கிறார் என்றும், ஒவ்வொரு ஆத்துமாவும் இரட்சிப்பை அடைவதற்கான சுயாதீன சித்தத்தைக் (Free-Will) கொண்டிருந்து கிறிஸ்துவை விசுவாசிக்கும் தீர்மானத்தை எடுக்கக்கூடியதாக இருக்கின்றது என்றும் இக்கோட்பாடு போதிக்கின்றது.

ஆர்மீனியனிசம்

‍ஜேம்ஸ் ஆர்மீனியஸ் (James Arminius) இப்போதனைக்கு வடிவம் தந்தான். செமி-பெலேஜியனிசத்தைத் தழுவி இப்போதனை அமைந்தது. இப்போதனையும் தனிமனிதன் சுயாதீன சித்தத்தைக் கொண்டிருந்து கிறிஸ்துவை விசுவாசிக்கக்கூடிய வல்லமையைக் கொண்டிருக்கிறான் என்று போதிக்கின்றது. மனிதனுடைய இரட்சிப்பு கர்த்தரில் அல்லாமல் மனிதனிலேயே இறுதியில் தங்கியுள்ளது என்பதே இப்போதனை. இதன் அடிப்படையில் ஆர்மீனியனிசம் (Arminianism) வேதத்தின் போதனைகளுக்கு விளக்கங்கொடுக்கிறது. கிறிஸ்து எல்லோருக்குமாக மரித்தார் என்பது இதன் போதனை. அவருடைய சிலுவைப்பலன்களை அனுபவிப்பதும், அனுபவிக்காததும் மனிதனுடைய கையிலேயே தங்கியுள்ளது என்கிறது இக்கோட்பாடு. மொத்தத்தில் மனிதனை மகிமைப்படுத்தி கர்த்தரை அவனுடைய சித்தத்தின் வழி நடத்துதல்களுக்கு துணைபோகும் தேவனாகக் காட்டுகிறது ஆர்மீனியனிசம். சீர்திருத்த சபைகளைவிட தமிழ் சமுதாயத்தில் காணப்படும் ஏனைய திருச்சபைகள், கிறிஸ்தவ நிறுவனங்கள், சுயாதீன ஊழியங்கள் ‍அனைத்தும் இன்று செமி-பெலேஜியனிச, ஆர்மீனியக் கோட்பாடுகளைப் பின்பற்றியே நடந்து வருகின்றன.

கல்வினிசம்

புரட்டஸ்தாந்து சீர்திருத்தவாத தலைவர்கள் பதினாறாம் நூற்றாண்டில் பெலேஜிய, செமி-பெலேஜியனிசக் கோட்பாடுகளை முற்றாக நிராகரித்தனர். ஆகஸ்தீனைப் போல சீர்திருத்தவாத தலைவர்கள் கர்த்தருடைய இறை ஆண்மையையும், மனிதனுடைய முழுச்சீரழிவையும், நிபந்தனையற்ற தெரிந்து கொள்ளுதலையும் விசுவாசித்தனர். ஆர்மீனியனிசம் மனிதனை மகிமைப்படுத்த கல்வினிசம் (Calvinism) கர்த்தரை மகிமைப்படுத்துகிறது. டோர்ட் கவுன்சில் ஆர்மீனியனிசத்திற்கு எதிராக வெளியிட்ட கல்வினிச ஐங்கோட்பாடுகள் தனித்தனியாக ஐந்து கோட்பாடுகளாக இருந்தாலும், அவை ஒன்றோடொன்று இணைந்து பிரிக்க முடியாதபடி ‍அமைந்துள்ளன. அவற்றில் ஒன்றைத் திருத்தவோ, மாற்றவோ முயற்சித்தாலும் ஏனைய கோட்பாடுகள் அனைத்தும் பாதிக்கப்படும். அவை கர்த்தர் மட்டுமே இரட்சிப்பின் தேவன் என்றும், அவரால் மட்டுமே ஆத்துமாவை இரட்சிக்க முடியும் என்றும் போதிக்கின்றன.

கல்வினிசப் போதனைகளை (கிருபையின் போதனைகள்) அறிந்துகொள்ள துணை செய்யக்கூடிய தமிழ் நூல்கள்:

  1. சர்வ வல்லவரின் ஏகாதிபத்தியம் – ஆர்தர் பிங்க் (தமிழ் பாப்திஸ்து வெளியீடுகள்)
  2. கிருபையின் மாட்சி – ஆபிரகாம் பூத் (தமிழ் பாப்திஸ்து வெளியீடுகள்)
  3. கிருபையின் அருட் செல்வம் (தமிழ் பாப்திஸ்து வெளியீடுகள்)
  4. கிறிஸ்துவின் மரணத்தினால் உண்டாகும் வாழ்வு – ஜோன் ஓவன் (தமிழ் பாப்திஸ்து வெளியீடுகள்)
  5. பிறவி அடிமைகள் – மார்டின் லூதர் (தமிழ் பாப்திஸ்து வெளியீடுகள்)
  6. ஸ்பர்ஜன் பிரசங்கங்கள் (தமிழ் பாப்திஸ்து வெளியீடுகள்)
  7. தீர்மானத்தின் மூலம் மறுபிறப்பு – ‍ஜேம்ஸ் அடம்ஸ் (சவரின் கிறேஸ் வெளியீடுகள், நியூசிலாந்து)
  8. கிறிஸ்தவன் யார் – அல்பர்ட் என். மார்டின் (சவரின் கிறேஸ் வெளியீடுகள், நியூசிலாந்து)

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s