குழந்தைச் செல்வம்

இன்று சிதைந்து, சீரழிந்து கொண்டிருக்கும் குடும்பத்தைப் பிடித்துள்ள சாபக்கேட்டிலிருந்து அதை விடுவிப்பதெப்படி? இதற்கான வேதபூர்வமான விளக்கத்தை இத்‍தொடர் அளிக்கிறது.

குழந்தைச் செல்வம்

குடும்பத்திற்கு தலைவன் கணவன், குடும்பத்திற்கு விளக்கு மனைவி என்று பார்த்தோம். குடும்பம் சிறக்க கணவனும் மனைவியும் எம்முறையில் கூடி வாழ வேண்டுமென்று வேதம் போதிக்கும் போதனைகளை இதுவரை ஆராய்ந்துள்ளோம். “படிப்பது வேதம் இடிப்பது சிவன் கோவில்” என்ற முறையில் கிறிஸ்தவர்கள் வாழக்கூடாது. கிறிஸ்தவத்திற்கும் குடும்ப வாழ்க்கைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று எண்ணிவிடக்கூடாது. நமது போலித்தனமான பண்பாட்டிற்குப்பின் மறைந்து நின்று நாம் செய்யும் தவறுகளை நியாயப்படுத்தக்கூடாது. கிறிஸ்தவ கணவனும் மனைவியும் கர்த்தரை மகிமைப்படுத்தும்படி வாழ அவசியமான எல்லா முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும்.

கணவனும் மனைவியும் தம் மத்தியில் நல்லுறவேற்படுத்திக்கொண்டு நல்வாழ்வு வாழ்வது இன்னுமொரு முக்கியமான காரியத்திற்கு அவசியம். கர்த்தர் குடும்பங்களுக்கு ஈவாக அளிக்கும் பிள்ளைகளை நல்ல முறையில் வளர்ப்பதற்கு கணவனும் மனைவியும் நல்லுறவோடிருப்பது அவசியம். ஆதியாகமம் குடும்பம் பிள்ளைகளைப் பெற்று வளர்ப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது (ஆதி. 1:22, 28). சில வேளைகளில் கர்த்தருக்கு மட்டுமே தெரிந்த காரணங்களால் சில குடும்பங்களுக்குப் பிள்ளைப் பாக்கியம் இல்லாமல் போகலாம். ஆனால், பொதுவாக குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்றே கர்த்தர் எதிர்பார்க்கிறார். பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளும்போது கணவனுக்கும் மனைவிக்கும் பெற்றோராகும் ஒரு புது பொறுப்பு ஏற்படுகின்றது. இப்பொறுப்போடு அவர்களுடைய குடும்ப வாழ்க்கையும் மேலும் இறுக்கமடைகின்றது. கணவன் இப்போது தந்தையாகவும், மனைவி தாயாகவும் மாறுகிறாள். பிறந்த பிள்ளையை நல்ல முறையில் வளர்க்க வேண்டிய ஒரு பெரும் பொறுப்பு அவர்களை வந்தடைகின்றது.

பிள்ளை பெறுதல்

பிள்ளைகளை எப்போது பெற்றுக்கொள்வது? எத்தனை பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வது? என்ற கேள்விக்கும் நாம் பதிலளித்தாக வேண்டும். தமிழர்கள் மத்தியில் பண்பாடு என்ற பெயரில் இதைப்பற்றிய பல தவறான எண்ணங்கள் உலவி வருவதை நாம் அறிவோம். திருமணமான முதல் வருடமே பிள்ளையில்லாத மனைவியை மலடி என்று பட்டம் கட்டிவிடுவார்கள். இல்லாவிட்டால் அவளுக்கு ஏதோ சரியில்லை என்று ஊர் பேசும். இப்படிப் பேசுவது பொதுவாக கர்த்தரை அறியாத மனிதர்களின் மனப்போக்கு. இத்தகைய எண்ணங்களுக்கு கிறிஸ்தவர்கள் தங்கள் மனத்தில் இடம் கொடுக்கக் கூடாது. பிள்ளையில்லாத மனைவியை விவாகரத்து செய்துவிட்டு வேறு யாரையும் திருமணம் செய்து கொள் என்று மனங்கூசாமல்‍ சொல்லக்கூடியவர்களும் இருக்கிறார்கள். இதெல்லாம் தேவனை அறியாத மக்கள் செய்யும் காரியங்கள். ஆனால் கிறிஸ்தவர்கள் இப்படி எண்ணமாட்டார்கள்.

ஒரு குடும்பத்திற்குப் பிள்ளைப் பாக்கியம் இல்லாமல்போனால் அதைப் பெண்ணின் தவறாகக் கருதிவிடக்கூடாது. இதற்கு ஆணும் காரணமாக இருக்கலாம். கணவனோ, மனைவியோ யார் இதற்குக் காரணமாக இருந்தாலும் இது கர்த்தர்விட்ட வழி என்று எண்ணி அவர்கள் தொடர்ந்து இணைந்து மகிழ்ச்சியாக குடும்பத்தை நடத்த வேண்டும். பிள்ளை வேண்டும் என்றால் ஒரு பிள்ளையை தத்தெடுத்துக் கொள்ளலாம். கணவன் மனைவியை விவாகரத்து செய்வதோ அல்லது இதற்காக மனைவியைத் துன்புறுத்துவதோ கர்த்தருக்கு அடுக்காத செயல். இவை கிறிஸ்தவர்கள் செய்யும் காரியங்களல்ல. கிறிஸ்தவர்கள் அல்லாத பெற்றோர்களைக் கொண்டுள்ள கிறிஸ்தவ தம்பதிகளுக்கு அப்பெற்றோர்கள் இத்தகைய தவறான ஆலோசனைகளை வழங்குவது நாம் அறிந்ததொன்றே. இதனால்தான் கிறிஸ்தவ தம்பதிகள் தம் குடும்ப வாழ்க்கையில் வேறு யாரும் தலையிடுவதற்கு இடம் கொடுக்கக் கூடாது. பெற்றோரையும் நம்மைவிடப் பெரியவர்களையும் நாம் மதிக்கத்தான் வேண்டும். ஆனால், நம் குடும்பத்தைக் கெடுத்துவிடக்கூடிய, கிறிஸ்துவுக்கு எதிரான எந்த ஆலோசனையை யார் சொன்னாலும் அதற்கு நாம் இடமளிக்கக்கூடாது.

எப்போது பிள்ளை பெற்றுக் கொள்வது? திருமணத்திற்குப் பிறகு பிள்ளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வேதம் போதிக்கின்றது. ஆகவே, திருமணமானதும் உடனடியாகப் பிள்ளை பெற்றுக்‍கொள்வதில் தவறில்லை. வேதபூர்வமாக நியாயப்படுத்தக்கூடிய காரணங்கள் இருந்தால் தவிர அதனைத் தள்ளிப் போடக்கூடாது. எத்தனை பிள்ளைகளைப் பெற்றுக் கொள்வது? ஒவ்வொருவரும் தங்களுடைய வசதிக்கும், மனைவியின் சரீர சுகத்திற்கும் ஏற்றவிதத்தில் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளலாம். உடல் நலமில்லாத ஒரு குடும்பத் தலைவியால் அதிக பிள்ளைகளைப் பெற்றுக் ‍கொள்ள முடியாமல் போகலாம். சரீர நலம் கருதி பிள்ளை பெறுவதை அவர் நிறுத்திக் கொள்ள நேரிடலாம். ஆகவே, எத்தனை பிள்ளைகளைப் பெற்றுக் கொள்வது என்பதை கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் வேதபூர்வமாக சிந்தித்து தங்கள் வசதிக்கேற்றவாறு தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

மேல் நாடுகளில் இதைக் குறித்த புதிய போதனை ஒன்று சில கிறிஸ்தவர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. கர்த்தர் பல்கிப் பெருகு என்று கூறியிருக்கிறார், ஆகவே அதற்கு எதுவும் தடையாக இருக்கக்கூடாது என்றும், கர்த்தரை நம்பி ஒவ்வொரு கிறிஸ்தவக் குடும்பமும் பிள்ளைகளைப் பெற்றுத் தள்ள வேண்டும் என்று இவர்கள் போதித்து வருகிறார்கள். தங்கள் சபை மக்களில் குறைந்தளவு பிள்ளைகளை உடையவர்களுக்கு விசுவாசம் போதாது என்று இவர்கள் கூறுகிறார்கள். இத்தகைய எண்ணங்கள் முரட்டுத்தனமானவை. யாருக்கு எத்தனை ‍பிள்ளைகள் இருக்க வேண்டும் என்பதை சபையோ, தனி ஒரு மனிதனோ தீர்மானிக்க முடியாது. ஒவ்வொரு குடும்பமும் கர்த்தரை விசுவாசித்து தங்கள் நிலமைக்கேற்பவும், வசதிக்கேற்பவும் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். பிள்ளை பெற்றுக்கொள்ள முடியாதவர்களும், உடல் நலம் குறைந்தவர்களும் நம்மத்தியில் இருக்கிறார்கள் என்பதைக் கிறிஸ்தவர்கள் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. அதுவும் மக்கள் தொகைப் பெருக்கத்தாலும், வருமானப்பற்றாக் குறைவாலும் நடக்கும் அட்டூழியங்களான பெண் குழந்தைகளைப் ‍பிறக்குமுன் கருச்சிதைவு செய்வது, பிறந்த குழந்தைகளை வீதியில் எறிந்துவிடுவது போன்ற செயல்கள் நிகழும் இந்திய நாட்டில் கிறிஸ்தவர்கள் மற்றவர்களுக்கு குடும்ப வாழ்க்கையில் முன்மாதிரியாக இருக்க வேண்டிய பெரும் பொறுப்பு இருக்கிறது.

குடும்பக் கட்டுப்பாடு

குடும்பக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பது சரியா? இதற்காகக் கருத்தடைச் சாதனைங்களைப் பயன்படுத்தலாமா? என்ற கேள்விக்கும் நாம் பதிலளிக்க வேண்டும். சிலர் எக்காரணத்தையும் கொண்டும் குடும்பக் கட்டுப்பாடு இருக்கக்கூடாது, அதற்கான சாதனங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று வாதிடுவர். இவர்கள் தங்கள் வாதத்திற்கு வேதத்தையும் ஆதாரமாகக் காட்டுவர். நல்ல பல கிறிஸ்தவர்கள் இத்தகைய எண்ணங்களைக் கொண்டுள்ளார்கள். இப்படி இலகுவாக பதில் கூறிவிடுவதால் இப்பிரச்சனையை சுலபமாக தீர்த்துவிட முடியாது. ஏனெனில், வேதம் இதைக் குறித்து அதிகாரத்தோடு நேரடியாகப் போதிக்காமல் பொதுவான போதனைகளை மட்டுமே தருகின்றது.

குடும்பக் கட்டுப்பாடு கூடாது என்று வாதிடுபவர்கள் ஆதியாகமம் 38:8-10 ஐ உதாரணமாகக் காட்டுவர். ஆனால் இந்த வேதப்பகுதியில் ஓனான் தன் தமையனுடைய மனைவியைச் சேரும்போது தன் தமையனுக்கு சந்ததி உண்டாவதில் விருப்பமின்றித் தன் வித்தைத் தரையிலே விழவிட்டுக் கெடுத்தான் என்று வாசிக்கிறோம். கர்த்தர் இதன் காரணமாக அவனைத் தண்டித்தார். ஓனான் தன் தமையனுக்கு சந்ததி வராதபடி செய்ததனாலேயே கர்த்தர் அவனைத் தண்டித்ததாக இப்பகுதி போதிக்கிறதே தவிர ஓனான் கடைப்பிடித்த குடும்பக் கட்டுப்பாட்டு முறைக்காக அல்ல. லேவியராகமம் 15:16-18 இன் அடிப்படையில் இந்த விளக்கமே பொருந்துவதாக அமைகிறது. லேவியராகமப் பகுதியில் தீட்டுப்பட்டவர்கள் செய்ய வேண்டிய காரியங்களைப் பற்றி வாசிக்கிறோம். அங்கே இந்திரியம் கழிந்தவன் தண்ணீரில் முழுக வேண்டும் என்றுதான் எழுதியிருக்கிறதே தவிர அவன் பலிகள் கொடுக்க வேண்டும் என்று சொல்லப்படவில்லை. இந்திரியம் கழித்ததனால் ஒருவன் தீட்டுப்பட்டவனாக இருக்கிறானே தவிர பாவம் செய்தவனாகிறான் என்று இப்பகுதி போதிக்கவில்லை. உண்மையில் பாவம் செய்பவர்கள் பலிகள் கொடுக்க வேண்டும் என்று லேவியராகம விதிகள் கூறுகின்றன. இவ்வாறு தீட்டுப்பட்டவன் அத்தகைய பலிகள் செய்ய வேண்டுமென்று இப்பகுதி எதிர்பார்க்கவில்லை.

இதனால் குடும்பக் கட்டுப்பாடு செய்வது எச்சூழ்நிலையிலும் தவறானது என்ற வாதத்தை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ரோமன் கத்தோலிக்க மதம் குடும்பக் கட்டுப்பாட்டை எதிர்க்கிறது. அதற்கு அவர்கள் வேதபூர்வமான எந்த விளக்கத்தையும் கொடுப்பதில்லை. இயற்கை விதிகளின் அடிப்படையில் மட்டுமே அவர்கள் இதை எதிர்க்கிறார்களே தவிர வேதபூர்வமாக அல்ல.

குடும்பக் கட்டுப்பாட்டுச் சாதனங்கள்

இதைக் குறித்தும் வேதம் வெளிப்படையாக நேரடியான போதனைகளை அளிப்பதில்லை. இதற்காக கிறிஸ்தவர்கள் சமுதாயத்தில் வழக்கில் காணப்படும் எல்லாவகையான குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளையும் ஆராய்ந்து பார்க்காமல் ஏற்றுக்கொள்ளக் கூடாது. வேதத்திற்கு முரணான முறைகளும், சரீரத்திற்கு பாதகம் விளைவிக்கும் முறைகளும்கூட பின்பற்றப்படுவதால் எதையும் தீர ஆராய்ந்து பொதுவான வேதபோதனைகளோடு ஒத்துப்போவதாக இருக்கின்றதா? என்று சிந்தித்துப் பார்த்துப் பின்பற்ற வேண்டும்.

கருச்சிதைவு செய்வதைக் குடும்பக் கட்டுப்பாட்டு முறையாக சில நாடுகளில் ஏற்றுக் கொள்கிறார்கள. ஆனால் வேதம் அதைக் கொலைக்கு ஒப்பிடுகின்றது. சிசுக் கொலை மலிந்த நம் நாடுகளில் கிறிஸ்தவர்கள் இதற்கு ஒருபோதும் இடம் கொடுக்கக்கூடாது. கருப்பையில் இருக்கும் சில வாரக் குழந்தை உயிருடன் இருக்கும் முழு ஜீவன் என்பதை அறிவீனத்தால் பலர் உணர்வதில்லை. அதனைக் கருச்சிதைவு செய்வது உயிரை அழிப்பதாகும். ஜோண் கல்வின், யாத்திராகமம் 21:21-25 ற்கு விளக்கம் கொடுக்கும்போது, கருத்தரித்திருக்கும் தாயை ஒருவன் தாக்கி அவளுள் இருக்கும் குழந்தை ‍உயிரிழந்தால் அத்தாயைத் தாக்கியவன் உயிரிழக்க வேண்டும் என்று கூறுகிறார். ஏனெனில் கருவில் இருக்கும் குழந்தை ஜீவனுடன் இருப்பதால் அதை அழிப்பது கொடூரமான கொலையாகும். இது ஒருவனை வயல் வெளியில் கொல்லாமல் அவனுடைய வீட்டிலேயே வைத்துக் கொல்வதற்கு ஒப்பானதாகும். ஆகவே பத்துக் கட்டளையின் ஆறாம் கட்டளையான உயிர்க்கொலை செய்யாதே, என்ற கட்டளையோடு இப்பகுதி தொடர்புடையதென்று கல்வின் விளக்குகிறார்.

கருச்சிதைவு செய்வதை வேதம் உயிர்கொலையாகக் கருதுவதால் எக்காரணத்தாலும் கிறிஸ்தவர்கள் அதற்கு உடன்படக் கூடாது. இது பற்றிப் போதகர்கள் தம் சபை மக்களுக்குத் தெளிவாகப் போதிக்க வேண்டும். இதைக் குடும்பக் கட்டுப்பாட்டு முறையாகப் பின்பற்றுவது பெரிய அறிவீனமும், அநியாயமும் ஆகும்.

அடுத்ததாக செயற்கை மலடாக்குதலும் (Sterelization) குடும்பக் கட்டுப்பாட்டு முறையாகப் பயன்படுத்தப்படுகிறது. இது நிரந்தரமாக ஒருவருக்கு பிள்ளை பெறும் வாய்ப்பை அழித்துவிடும். ஆண், பெண் இருவரும் இதனை செய்து கொள்கின்றனர். பிறக்கப்போகும் பிள்ளை குறையுள்ளதாகப் பிறந்துவிடும் என்ற காரணத்திற்காகவும், சமுதாய, பொருளாதாரக் காரணங்களுக்காகவும், பிள்ளை பெறுவது பெண்ணுக்கு உயிராபத்தானது என்ற காரணத்திற்காகவும் இம்முறை பயன்படுத்தப்படுகிறது. முக்கியமாக இந்தியாவில் சமுதாய, பொருளாதார காரணங்களுக்காக தவறியும் பிள்ளை பிறந்துவிடக்கூடாது என்பதற்காக இம்முறை நிச்சயமானது என்று கருதிப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இக்காரணங்கள் எதுவும் மலடாக்குதல் வேதபூர்வமானதா என்ற கேள்விக்குப் பதிலளிப்பதாக இல்லை. கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரையில் அதுவே முக்கியமான கேள்வியாகும். சமூக, பொருளாதாரக் காரணங்களுக்காகவும், வசதிக்காகவும், நாம் எதையும் செய்ய முனையக்கூடாது. முதலில் வேதத்தோடு அவை பொருந்திப் போகின்றனவா என்று ஆராய்ந்து பார்த்து செயல்பட வேண்டும்.

வேதத்தில் மலடுகளைக் குறித்து வாசிக்கிறோம். யூதர்கள் மலட்டுத்தன்மை பெறுவதற்கு அனுமதியில்லை. அது மட்டுமல்லாமல் உபாகமம் 23:1 இன்படி மலடுகள் ஆராதனைகளில் கலந்து கொள்ளவும் அனுமதியில்லை. இதற்குக் காரணம் கர்த்தர் படைத்ததற்கு மாறாக அவர்கள் தங்களை மாற்றிக்கொண்டிருப்பதே. பிள்ளை பெறாமையை கர்த்தர் முகச்சுளிப்போடு பார்த்ததோடு (சாபக் கேடாகவும் கருதினார்), மலடாக்குதல் மூலம் கருத்தரியாமல் இருப்பதையும் அவர் ஏற்றுக்‍ கொள்ளவில்லை.

வேறு பல குடும்பக்கட்டுப்பாட்டு முறைகள் வழக்கில் இருப்பதால் மலடாக்குதல் முறையை கிறிஸ்தவர்கள் நாடாமல் இருப்பது நல்லது என்பதே என்னுடைய கருத்து. மேலும் சிலரின் தன்நம்பிக்கையை இது பாதிக்கக் கூடியது. வேறு சிலருக்கு சரீரக்கோளாறுகளும் இதனால் ஏற்படலாம். ஆகவே பிள்ளை பெறுவதால் ஒருவருக்கு உயிராபத்து ஏற்படும் என்ற நிலையும், வேறு குடும்பக்கட்டுப்பாட்டு முறைகள் உடல் நலத்திற்கு ஏற்றதல்ல என்றிருந்தாலொழிய செயற்கை மலடாக்கும் முறையை எவரும் நாடுவதை நான் தனிப்பட்ட முறையில் ஏற்றுக் கொள்ளவில்லை. பொதுவாக கிறிஸ்தவர்கள் வேறு குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளைப் பயன்படுத்துவது நல்லது.

நாம் இங்கே குடும்பக் கட்டுப்பாட்டைப் பற்றித்தான் ஆராய்கிறோமே தவிர குறிப்பாக கருத்தடைச் சாதனங்களைப் பற்றி மட்டுமல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் வேதம் நீங்கள் பல்கிப் பெருகுங்கள் என்றுதான் போதிக்கின்றது. ஆதியாகமம் 1:28, “நீங்கள் பல்கிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின் மேல் நடமாடுகிற சகல ஜீவ ஜந்துக்களையும் ஆண்டு கொள்ளுங்கள், என்று சொல்லி தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்” என்று சொல்கிறது. இங்கே பல்கிப் பெருகுவதை வேதம் நம் வாழ்வில் ஓர் ஆசீர்வாதமாகக் குறிப்பிடுகிறது. ஆகவே கர்த்தர் நாமடையும் ஆசீர்வாதமாகக் கருதும் பல்கிப் பெருகுதலை குடும்பக் கட்டுப்பாட்டின் மூலம் வாழ்நாள் முழுதும் தடை செய்து பிள்ளைகள் இல்லாமலிருப்பது வேதத்திற்கு முரணானதாகும்.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s