பதினெட்டாம் நூற்றாண்டில் உலகின் தலை சிறந்த பிரசங்கிகளில் ஒருவராக இருந்தவர் ஜோர்ஜ் விட் பீல்ட். 1735 ஆம் ஆண்டில் இருபது வயதாயிருக்கும்போது விட்பீல்ட் தனது பாவத்தை உணர்ந்து கர்த்தரின் கிருபையின் மூலமாக விசுவாசத்தை அடைந்தார். ஆனால், இயேசுவை அறிந்து கொள்வதற்கு முன்பே இங்கிலாந்தில் ஆங்கிலிக்கன் சபை அங்கத்தவராக இருந்தார். விட்பீல்ட், வெஸ்லி சகோதரர்களோடு இணைந்து வேதத்தைப் படித்ததோடு பிரசங்கமும் செய்து வந்தார். ஆனால், கிறிஸ்துவுக்குள்ளான மறுபிறப்பு அவருக்கு பின்பே ஏற்பட்டது. 1736 இல் அவர் பிரசங்கிக்கும்படியாக ஊழியத்திற்கு நியமிக்கப்பட்டார். அவரது ஆரம்பப் பிரசங்கம் பதினைந்து பேரை அசைத்திருந்தது.
தன் வாழ்நாளில் பிரித்தானியா மற்றும் பதின்மூன்று அமெரிக்க கொலனிகளில் விட்பீல்ட் பிரசங்கம் செய்திருந்தார். இவ்வூழியத்தில் அவர் முப்பத்தைந்து வருடங்கள் ஈடுபட்டிருந்தார். ஆரம்பத்தில் வெஸ்லி சகோதரர்களோடு இணைந்து செயல்பட்டபோதும் பின்பு அவர் பிரிந்து தனியாக ஊழியம் செய்து வந்தார். விட்பீல்ட் ஆரம்பத்திலிருந்தே கல்வினித்துவ போதனைகளை வேதபூர்வமான போதனைகளாக அறிந்து அதன்படி பிரசங்கம் செய்துவந்தார். அவருடைய இறையியல் பழுத்த கல்வினித்துவமாயிருந்தது. ஆனால், வெஸ்லி சகோதரர்கள் ஆர்மீனியப் போதனைகளைப் பின்பற்றத் தொடங்கினர். ஜோன் வெஸ்லி வேதம் போதிக்கும் கர்த்தருடைய அநாதித் தீர்மானத்தின் மூலமான தெரிந்து கொள்ளுதலாகிய போதனையை ஏற்றுக் கொள்ளவில்லை. அது சம்பந்தமாக விட்பீல்ட் எவ்வளவோ பேசிப்பார்த்தும் வெஸ்லி மனம்மாற மறுத்தார். அத்தோடு வெஸ்லி ஒரு கிறிஸ்தவன் இவ்வுலகில் பாவமற்ற பூரணமான வாழ்க்கையை வாழ முடியும் என்றும் தவறாக நம்பி வந்தார். இக்காரணங்களால் விட்பீல்ட் தனது வழியில் போய் கர்த்தரின் ஊழியத்தை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. வெஸ்லி சகோதரர்கள் பின்பு மெதடிஸ்ட் சபைகளை ஏற்படுத்தினர்.
திறந்தவெளிப் பிரசங்கத்தை முதன் முதலாக ஆரம்பித்து வைத்தவர் ஜோர்ஜ் விட்பீல்டே. ஜோன் வெஸ்லிக்கு இது ஆரம்பத்தில் பிடிக்கவில்லை. அக்காலத்தில் ஆங்கிலிக்கன் திருச்சபை உறுதியுடன் இம்முறையை எதிர்த்ததுடன் அவர்கள் இதைப் பின்பற்றத் தவறியதற்கு இரு காரணங்கள் இருந்தன. ஒன்று, பிரசங்கம் கேட்பதற்கு பல்லாயிரக்கணக்கானவர்கள் கூடியதால் எந்த ஒரு கட்டடமும் போதாததாக இருந்தது. இரண்டாவதாக, அநேக ஆங்கிலிக்கன் சபை குருமார்கள் பிரசங்கம் கேட்க வந்த மக்களின் ஆர்வத்தை தவறானதாகக் கருதி தம் சபைகளுக்கு அத்தகைய ஆர்வத்துடன் வருபவர்களை விட மறுத்தனர். அவர்கள், சபைக் கட்டிடத்திற்கு வெளியில் இருந்து எதன் மூலமும் அல்லது எவர் மூலமும் ஒரு ஆத்துமாவும் இரட்சிப்பை அடைய முடியாது என்று நம்பினர். ஆனால், அத்தனை எதிர்ப்புக்கு மத்தியிலும் ஜோர்ஜ் விட்பீல்டின் கூட்டங்கள் மூலம் அநேகர் அதிரடிப் பிரசங்கத்தைக் கேட்டு கர்த்தரை அறிந்து கொண்டனர். தான் போகுமிடங்களுக்கெல்லாம் விட்பீல்ட் சுமந்து செல்லக்கூடிய ஒரு பிரசங்க மேடையைக் கொண்டு சென்றார். பல்லாயிரக்கணக்கான மக்கள் மிகத்தூரத்தில் இருந்து எந்தவித ஒலி பெருக்கி சாதனமும் இல்லாமல் தெளிவாகக் கேட்கக் கூடியதாக இருந்த அற்புதமான குரலை ஆசீர்வாதமாகப் பெற்றிருந்தார் விட்பீல்ட். கர்த்தரின் நியாயப்பிரமாணத்தையும், சுவிசேஷத்தையும் தெளிவாகப் பிரசங்கித்து அதில் பெரும் வெற்றி கண்டார் விட்பீல்ட்.
இங்கிலாந்தில் பிரிஸ்டல், இலண்டன் ஆகிய இடங்களில் அவர் முக்கியமாக ஊழியம் செய்து வந்தார். 1742 ஆம் ஆண்டில் ஸ்கொட்லாந்தில் கிளாஸ்கோவிற்கு அருகில் இருந்த கம்பஸ்லோங்க் என்ற இடத்தை மையமாக வைத்து எழுந்த எழுப்புதலோடும் விட்பீல்டுக்குத் தொடர்பிருந்தது. ஸ்கொட்லாந்து மக்கள் விட்பீல்டின் பிரசங்கத்தைக் கேட்பதிலும் அவருடைய கல்வினித்துவ போதனைகளைக் கேட்பதிலும் அதிக ஆர்வம் காட்டினர்.
வேல்ஸ் தேசத்தில் விட்பீல்ட் ஹொவல் ஹெரிஸ் என்ற வேல்ஸ் தேசப் பிரசங்கியோடு அதிக தொடர்பு வைத்திருந்தார். ஹெரிஸ் சிறந்த பிரசங்கியாக இருந்ததோடு அவரது பிரசங்கத்தின் மூலம் வேல்ஸ் தேசத்தில் எழுப்புதல் ஏற்பட்டிருந்தது. விட்பீல்ட் ஹெரிஸுக்கு வேல்ஸிலும், ஹெரிஸ் விட்பீல்டிற்கு இங்கிலாந்திலும் பிரசங்கம் செய்யத்துணை புரிந்தனர். இக்காலத்தில் டேனியல் ரோலன்ட்ஸ் என்ற அற்புதமான ஒரு பிரசங்கியையும் வேல்ஸ் தேசம் பெற்றிருந்தது. இவர் கார்டிகன்சையரைச் சேர்ந்த லங்கித்தோ என்ற இடத்தைச் சேர்ந்தவர். பொன்டிகிளின் என்ற இடத்தைச் சேர்ந்த வில்லியம் வில்லியம்ஸ் என்ற புகழ்பெற்ற பாடலாசிரியர் கிறிஸ்தவ கீர்த்தனைகளை எழுத அவை ரோலன்ட்ஸின் கூட்டங்களில் மக்களால் கர்த்தரைத் துதித்துப் பாடப்பட்டன. இதே காலத்தில் வட வேல்ஸ் தேசத்தில் பாலா என்ற இடத்தைச் சேர்ந்த தோமஸ் சார்ள்ஸ் என்ற இன்னுமொரு சிறந்த பிரசங்கியும் இருந்தார். இன்று மெத்தடிஸ்ட் சபைகள் ஆர்மீனிய, லிபரல் கோட்பாடுகளைப் பின்பற்றிப் போவதைப்போல வேல்ஸில் அக்காலத்தில் மெத்தடிஸ்ட் சபைகள் இருக்கவில்லை. அவை தீவிரமாக கல்வினித்துவக் கோட்பாடுகளை மட்டுமே பின்பற்றி எழுந்தவை.
செலீனா என்ற ஹன்டிங்டன் கவுன்டஸ் விட்பீல்டின் ஊழியங்களுக்கு அநேக உதவிகள் புரிந்தார். விட்பீல்டின் கல்வினித்துவப் போதனைகளில் அதிக ஆர்வம் காட்டிய இவர் பல ஆராதனைக் கூட்டங்களையும், இறையியல் கல்லூரிகளையும் கட்டி உதவினார். இங்கிலாந்தின் அரசராக அப்போதிருந்த மூன்றாம் ஜோர்ஜ், தனது நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஹன்டிங்டன் கவுன்டஸைப் போல ஒரு பெண்ணிருந்தால் தன் நாட்டிற்குப் பெரும் ஆசீர்வாதமாக இருக்கும் என்று கூறியிருந்தார்.
விட்பீல்ட் தன் ஊழியத்தில் அடைந்த ஆசீர்வாதங்களுக்கு அவருடைய பிரசங்க வல்லமை பெருங் காரணமாக இருந்தது. அவரது குரல் வளத்தை அன்று வேறொருவர் பெற்றிருக்கவில்லை. விட்பீல்ட் பிரசங்கிக்கும்போது ஓ என்ற வார்த்தையை உச்சரிப்பது போன்ற தாலந்தைப் பெற்றுக் கொள்ள நூறு பவுண்டுகள் கொடுக்கத் தயாராக இருப்பதாக ஒரு புகழ் பெற்ற நடிகர் அக்காலத்தில் கூறியிருந்தார். கேட்பவர்களைக் கண்ணீர் சிந்த வைக்கும் அளவுக்கு விட்பீல்டால் வார்த்தைகளை உச்சரித்துப் பேச முடிந்தது. ஆனால் பேச்சு வல்லமையால் மட்டும் எவரும் மனிதர்களை மனம் கரைய வைத்து பாவத்திலிருந்து மனந்திருந்த வைக்க முடியாது. விட்பீல்ட் எப்போதும் பரிசுத்த ஆவியின் அனுக்கிரகத்தையும், துணையையும் தன் ஊழியத்தில் நாடி நின்றார். அத்தோடு அவருடைய இணையற்ற தாலந்துகளுக்கு இணையாக அவருடைய தாழ்மை எப்போதுமே மேலோங்கி நின்றது.
திடமான வேதபூர்வமான கல்வினித்துவ இறையியலும், அதன் அடிப்டையிலான ஆழமானதும், தெளிவானதுமான அதிரடி வேதப்பிரசங்கமும், ஆவியின் அனுக்கிரகத்தையும் கொண்டிருந்த விட்பீல்ட் காலத்து ஊழியத்தால் எழுப்புதல் ஏற்பட்டதில் எந்த ஆச்சரியமும் இருக்க முடியாது. ஆனால், ஆடியும், பாடியும், பிரசங்கமென்ற பெயரில் வெறும் உணர்ச்சிகளை மட்டும் குற்றால அருவியாகக் கொட்டி, காசுக்காக கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் இன்றைய பிரசங்கிகளின் ஊழியத்தால் மனிதன் பாவ உணர்வு பெற்று கர்த்தரிடம் கதறியோடிவரும் மெய்யான எழுப்புதலின் அடிச்சுவடுகூட தெரியாமலிருப்பதிலும் எந்தவிதமான ஆச்சரியமுமில்லை. விட்பீல்ட் எங்கே? இன்று நாம் கேட்டுச் சகித்துக் கொண்டிருக்க வேண்டிய போலிப் பிரசங்கிகள் எங்கே?
விட்பீல்ட் தனது 55 ஆவது வயதில் 1770 ஆம் ஆண்டில் கர்த்தரடி சேர்ந்தார். இவ்வுலகம் கண்ட மாபெரும் சுவிசேஷப் பிரசங்கியாக வாழ்ந்து கர்த்தரை மகிமைப்படுத்தியவர் ஜோர்ஜ் விட்பீல்ட்.