தலித் கிறிஸ்தவம்

ஐயா! தலித்துக்களுக்கென்று ஒரு கிறிஸ்தவம் என்ற வகையில் பேசுகிறார்கள். இதைப்பற்றி எழுதி விளக்குங்கள் என்று வாசகர் ஒருவர் கேட்டுக் கொண்டார். தமிழ் நாட்டிற்கு வெளியில் இருப்பவர்களுக்கு இது என்ன? என்று புரியாமலிருக்கலாம். ஒடுக்கப்பட்டு, சமுதாயத்தில் தாழ்ந்த நிலையில் உள்ள சாதியினர், தொழிலாளர்கள், நாடோடி மக்கள், ஆதிவாசிகள் ஆகியோர் இந்தியாவில் தலித்துக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். யார் உண்மையான தலித்? என்பதற்கு கொடுக்கப்படும் விளக்கங்கள் எல்லாமே ஒத்துப் போவதாயில்லை. இருந்தாலும் பொதுவாக சமுதாயத்தில் கீழ்மட்டத்தில் இருக்கும் மக்களை இது குறிக்கின்றது. உயர் சாதியினரால் தலித்துக்கள் பெருந்துன்பங்கள் அடைவது மறுக்க முடியாத உண்மை. இந்திய அரசியல், பொருளாதார சூழ்நிலையும், சாதிக்கொடுமையும் அவர்களைக் காலில் போட்டு மிதித்து வருகின்றது. இந்திய சமுதாயத்தைப் பிடித்திருக்கும் சாதிக் கொடுமை அகற்றப்படாதவரை தலித்துக்களின் தலைவிதி மாறுமா என்பது கேள்விக்குறியே. அம்பேத்கார் தலித்து மக்களின் முன்னேற்றத்திற்காகப் போராடிய மனிதர். வேறு பலரும் இதைச் செய்திருக்கிறார்கள்.

கிறிஸ்தவ திருச்சபைகளில் தலித் இன உணர்வு ஏற்படுவது சரியா? அரசரடி இறையியல் கல்லூரி அதிபர் எழுதுகிறார், “தலித் இன உணர்வு ஏற்படுவதில் தவறு இல்லை” என்று (தலித் விடுதலை இயல்). “தலித்துக்கள் போராட்ட ஆற்றல் பெற அத்தகைய இன உணர்வு துணை செய்யும்” என்று அதிபர் எழுதியுள்ளார். தலித்துக்களுக்கான கிறிஸ்தவம், தலித் இறையியல், தலித் பெண்ணீயம் என்பன போன்ற கோஷங்கள் புதிதல்ல. இத்தகைய இன அடிப்படையிலான கோஷங்களை கிறிஸ்தவ வரலாறு ஏற்கனவே சந்தித்திருக்கின்றது. இலத்தீன் அமெரிக்காவை ‍அ‍டிப்படையாகக் கொண்டு கடந்த காலங்களில் எழுந்ததே விடுதலை இறையியல் (Liberation Theology). அச்சமுதாயத்தில் ஏற்பட்ட இனவர்க்கப்போராட்டத்தில் மிதிக்கப்பட்டவர்களுக்கு விடுதலை காண முற்பட்டது ரோமன் கத்தோலிக்க மதச்சார்புடைய இத்தாராளவாத (Liberal) விடுதலை இறையியல். இது கிறிஸ்துவை, நசுக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் ஒரு புரட்சிக்காரராக காட்ட முயல்கிறது. இதைப்போல நம்மக்கள் மத்தியில் உருவானதொன்றே பிராமண எதிர்ப்புணர்வு கொண்ட தெய்வநாயகத்தின் இந்திய வேதங்களில் இயேசுவைக்காணும் தாராளவாத இறையியல். இதெல்லாம் வர்க்க, இனப்போராட்டங்களுக்கு கிறிஸ்தவ வடிவம் கொடுக்கும் முயற்சிகள். இதைப்போன்றதொரு முயற்சியே தலித் இறையியலும், தலித் கிறிஸ்தவமும்.

வேதபூர்வமான கிறிஸ்தவத்தைப் புரிந்து கொள்ளாதவர்களே இத்தகைய கோஷங்களை சமுதாயத்தில் தொடர்ந்து எழுப்பி வந்துள்ளனர். ஆணாதிக்கம், பெண் அடிமைத்துவம், இனவேறுபாடு, வர்க்கப்பிரிவு, பொருளாதாரப் பிரிவு என்பதையெல்லாம் கடந்தது வேதபூர்வமான கிறிஸ்தவம். இயேசுவின் மக்கள் மத்தியில் பார்ப்பனன், தலித் என்ற வேறுபாட்டிற்கே இடமில்லை. உயர்சாதிக்காரனும், தலித்தும் ஒரே இலையில் உணவருந்த எங்கு இடமில்லையோ அங்கு ‍மெய்கிறிஸ்தவம் இருக்க முடியாது. ஏனெனில், வேத பூர்வமான கிறிஸ்தவம் இருக்குமிடத்தில் கிறிஸ்துவின் பிள்ளைகளாகப் பார்க்கும் சமுதாயமே கிறிஸ்துவின் சமுதாயம். திருச்சபைகளில் சாதிப்பாகுபாடு இல்லாமலிருப்பதே நல்லது. உயர்சாதிக்கொரு திருச்சபை, கீழ்ச்சாதிக்கொரு திருச்சபை என்று சபை அமைக்கும் பெரும் வேதவிரோத செயல்களுக்கு மெய்க்கிறிஸ்தவர்கள் என்றுமே இடம் கொடுக்கக் கூடாது.

தலித்துக்கள் கிறிஸ்துவை அறிந்து கொண்டால் மட்டுமே அவர்களுக்கு தன்மான உணர்ச்சியும், மெய்யான விடுதலையும் ஏற்படும். கிறிஸ்து கொடுக்கும் விடுதலை வெறும் சமுதாய, பொருளாதார, அரசியல் விடுதலை அல்ல. அதையெல்லாம்விடப் பெரிய ஆன்மீக விடுதலை. தலித்துக்களுக்குத் தேவை அவர்களைத் தன்மானத்துடன் வாழ உதவும், கிறிஸ்து மட்டுமே தரக்கூடிய இரட்சிப்பு. கிறிஸ்தவர்கள் இன்று தலித்துக்களுக்காக இறையியல் ஏற்படுத்த முயலாமலும், தலித் பெண்களுக்காக வக்காலத்து வாங்காமலும் வேதம் போதிக்கும் மெய்க்கிறிஸ்தவ விடுதலையை அவர்களுக்கு சுவிசேஷத்தின் மூலம் அறிவிக்க வேண்டும். கிறிஸ்துவை அறிந்து கொண்ட தலித்தை கிறிஸ்துவின் பிள்ளையாக வரவேற்று திருச்சபையில் சரிசமமான இடமளிக்க வேண்டும். கிறிஸ்துவை அறியாத சமுதாயம் காட்டும் வேறுபாடுகளனைத்தையும் கிறிஸ்தவ சமுதாயம் அவர்களுக்கு காட்ட மறுத்து எல்லோருக்கும் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். கிறிஸ்துவை அறிந்து கொண்ட தலித்துப் பெண்கள் கிறிஸ்தவ சமுதாயத்தில் ஆண்களுக்கு அடிமைகளாவதில்லை; அவர்கள் ஆண்களால் மதிக்கப்படுவார்கள். பெண்ணீயம் (Feminism) என்பதே ஒரு வர்க்கப் போராட்டம்தானே! அதற்கு கிறிஸ்தவத்தில் இடமில்லை. வேதபூர்வமான கிறிஸ்தவம் பெண்களுக்கு உரியமரியாதை கொடுப்பதால் அங்கு பெண்ணீயம் தேவை இல்லை. கிறிஸ்துவிடம் வந்தபிறகு தலித், தலித்தாக இருக்க முடியாது. அவன் கிறிஸ்துவின் குழந்தையாகிவிடுகிறான். இனி அவன் கிறிஸ்தவனைப்போல் சிந்திக்கப் பழக வேண்டும். இதுவே கிறிஸ்து காட்டும் தலித் விடுதலை! தலித் இறையியல்!

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s