தவிர்க்க முடியாத காரணங்களால் இவ்வருடத்தில் ஜுலை-செப்டம்பர் இதழைத் தனியாக வெளியிட முடியவில்லை. அநேகர் ஏன் இன்னும் பத்திரிகை வரவில்லை? என்று கேட்டு எழுதியிருந்தார்கள். ஆர்வத்தோடு பத்திரிகைக்காக காத்திருக்கும் உங்களைக் காக்க வைத்ததற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம். போதக ஊழியத்தோடு எழுத்து வேலையும் செய்வதென்பது இலகுவான ஒரு காரியமல்ல என்றாலும் இந்நாள்வரைத் தேவன் எம்மைக் கைவிடாமல் ஒவ்வொரு இதழையும் வெளியிட அனுமதித்தார். ஆனால் வருடம் முடியுமுன் ஓரிதழாவது உங்களை வந்தடையட்டும் என்பதற்காக இம்முறை இரு இதழ்களையும் ஒன்றினைத்து மேலதிக பக்கங்களோடு வெளியிட்டுள்ளோம். அடுத்த வருடத்தில் எல்லா இதழ்களையும் தவறாது வெளியிட தேவன் எம்மை அனுமதிக்க எம்மோடு சேர்ந்து ஜெபியுங்கள்.
பத்திரிகை அடுத்த வருடத்தில் தனது ஆறாவது வயதை எட்டுகிறது. கடந்த ஐந்து வருடத்தில் வெளிவந்துள்ள இதழ்களை (1995-1999) நல்ல முறையில் அழகாகத் தொகுத்து குறைந்தளவு பதிப்பாக (Limited Edition) ஹார்ட்கவரில் வெளியிட்டுள்ளோம். இவற்றை இறையியல் கல்லூரிகளுக்கு மட்டும் இலவசமாக அனுப்பி வைக்கத் தீர்மானித்துள்ளோம்.
திருமறையா? திராவிட சமயமா? என்ற தலைப்பில் 1995 இல் ஒரு நூலை வெளியிட்டோம். அது கைவசமில்லாத போதும் அநேகர் தொடர்ந்து கேட்டு எழுதி வந்தார்கள். அதை மேலும் விரிவுபடுத்தி 76 பக்கங்களில் இந்திய வேதங்களில் இயேசுவா? என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளோம். இந்நூல் தேவையானவர்கள் எமக்கு எழுதிப் பெற்றுக் கொள்ளலாம். சுவிசேஷக் கிறிஸ்தவர்கள் (Evangelical Christians) என்று தம்மை அழைத்துக் கொள்ளும் பலர் சந்தர்ப்பவாதிகளாக இத்தகைய போதனைகளுக்கு இரையாகி தமிழகத்தில் கிறிஸ்துவின் பெயருக்குத் தொடர்ந்து களங்கம் விளைவித்து வருகிறார்கள். இவர்களின் முகத்திரை கிழிய கிறிஸ்துதாமே இந்நூலைப் பயன்படுத்த ஜெபியுங்கள். அத்தோடு எல்லோரோடும் இணைந்து போக வேண்டுமென்பதற்காக சத்தியத்தைக் காற்றில் பறக்க விட்டுவிட்டு சுயநலத்திற்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் மனநிலையில் இருந்து கிறிஸ்தவப் போதகர்களும், கிறிஸ்தவர்களும் விடுபடவும் இந்நூல் துணை செய்ய வேண்டுமென்பது எமது விருப்பம். இந்நூலின் ஒரு அதிகாரத்தை இவ்விதழில் வெளியிட்டுள்ளோம்.
ஆண்டவருடைய நாளான ஓய்வு நாளைப்பற்றி அதிகமானோர் அக்கறை கொள்ளுவதில்லை. அதுபற்றி வேதம் என்ன போதிக்கின்றது என்று விளக்கும் ஆக்கங்களையும் சுமந்து இவ்விதழ் வெளிவருகின்றது. எப்போதும் போல் தொடர்ந்து ஜெபத்துடன் வாசியுங்கள். இவ்விதழ் உங்கள் கரத்தில் கிடைக்கும்போது புத்தாண்டு மலர்ந்திருக்கும் என்று நினைக்கிறேன். உங்களுக்கு எமது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
– ஆசிரியர்