திருச்சபை வரலாறு

 இரண்டாம் நூற்றாண்டு

திருச்சபை வரலாறு பற்றி எழுத வேண்டுமென்று அநேகர் பல வருடங்களாகவே கேட்டு வந்துள்ளனர். தமிழில் முறையாக எழுதப்பட்ட திருச்சபை வரலாற்று நூல்கள் இல்லை. இருப்பவையும் ரோமன் கத்தோலிக்க மதத்தின் அடிப்படையில் எழுதப்பட்டு சீர்திருத்த காலத்தை வேண்டத்தகாததாகவே படம்பிடித்துக் காட்டுகின்றன. இந்தியாவில் இருந்து ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ள சபை சரித்திர நூல்களும் இதே வகையில்தான் எழுதப்பட்டுள்ளன. சமீபத்தில் செராம்பூர் கல்லூரி நிர்வாகத்தினரால் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்திய திருச்சபை சரித்திர நூல் ஒன்றை நான் பெற்று வாசிக்க முடிந்தது. இதில் ரோமன் கத்தோலிக்க சபை கிறிஸ்தவ சபையாகவே வர்ணிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, சீர்திருத்த விசுவாசத்தின் அருமை பெருமைகளையும், அதன் அவசியத்தையும் வாசகர்கள் புரிந்துகொள்ள திருச்சபை வரலாறு அவசியம் என்பதானலும், சீர்திருத்த, சுவிசேஷ இயக்கத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட திருச்சபை வரலாற்று நூல் ஒன்று தமிழில் இல்லாத குறையைத் தீர்ப்பதற்காகவும் இப்பக்கங்களில் தொடர்ந்து திருச்சபை வரலாறு பற்றி எழுதத் தீர்மானித்துள்ளேன். சீர்திருத்தப்‍போதனைகள் வளர இதைக் கர்த்தர் பயன்படுத்துவராக!
– ஆசிரியர்

முதலாவது நூற்றாண்டு முடிவடைவதற்குள் சுவிசேஷம் எருசலேமுக்கு வெளியில் பல நாடுகளுக்கும் பரவி இருந்தது. எந்தவித எதிர்ப்பாலும் அதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. கிழக்குப் பகுதிகளில் மெசப்பொடேமியா, பார்தியா வரையும் சுவிசேஷம் பரவியிருந்தது. மேற்கு நாடுகளில் பிரான்ஸ், ஸ்பெயின் வரை பரவியிருந்தது. திருச்சபை ரோம், கார்த்தேஜ், அலெக்சான்டிரியா போன்ற நகரங்களில் பெரும் வளர்ச்சியடைந்திருந்தது. அந்தியோகியா, எபேசு, கொரிந்து பட்டணங்களில் சபை வல்லமையுடன் விளங்கியது. கிறிஸ்தவர்கள் அரேபியா, இல்லிரியை, சிரியா போன்ற இடங்களெல்லாம் பரவியிருந்தனர். எழுபது வருடங்களில் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் சபை வளர்ந்து வந்தது.

ஆனால், இரண்டாம் நூற்றாண்டின் முதல் எழுபது வருடங்களும் திருச்சபை வரலாற்றில் தெளிவற்ற ஒரு நிலை காணப்பட்டது. இக்காலத்தின் ஆரம்பப் பகுதியில் அப்போஸ்தலனான யோவான் மரணம‍டைந்தார். டொமிஸியன் என்ற ரோம பேரரசன் காலத்தில் பெத்மோஸ் தீவில் நாடுகடத்தப்பட்டு வாழ்ந்து வந்த யோவான். ‍டொமிஸியன் 96 இல் இறந்தவின் மீண்டும் தன் நாட்டுக்குத் திரும்ப முடிந்தது. டொமீஸியன் இரண்டாம் நீரோ என்று அழைக்கப்படும் அளவுக்கு கிறிஸ்தவர்களுக்கு எதிராக அநேக கொடுமைகளைச் செய்திருந்தான். அவனுடைய இறப்புக்குப்பின் அத்துன்பங்கள் குறையத்தொடங்கின.

அப்போஸ்தலர்கள் ஒருவர் பின் ஒருவராக மறையத் தொடங்கியபின் திருச்சபை முன்பிருந்த அதே தைரியத்துடன் தொடர்வதில் தளர்ச்சி ஏற்பட ஆரம்பித்தது. இவற்றை எதிர்பார்த்து அப்போஸ்தலர்கள் திருச்சபைகள் தொடர்ந்து நல்லமுறையில் வளர்ந்து வரும்படி மூப்பர்களையும் உதவியாளர்களையும் நியமித்திருந்தனர். இச்சபைத்தலைவர்களில் பலர் நல்லவர்களாகவும், திறமைசாலிகளாகவும் இருந்தபோதும் இக்காலப்பகுதியில் சபைத் தலைமைத்துவத்தின் தரம் குறைந்து காணப்பட்டது. இக்காலப்பகுதியில் சபைத்தலைவர்கள் எழுதிய நூல்கள் உலகத்து எழுத்தாளர்களின் நூல்களைவிட மேன்மையானதாக இருந்தபோதும், ஆத்மீக உணவளிப்பதில் அப்போஸ்தலர்களின் எழுத்துக்களுக்கு சமமான வல்லமையைப் பெற்றிருக்கவில்லை. அத்தோடு அப்போஸ்தலர்களின் எழுத்துக்களின் தரமும் இவற்றில் இருக்கவில்லை. இந்நூல்களை புதிய ஏற்பாட்டு நூல்களுக்கு சமமானதாகக் கருதமுடியாது. இவற்றில் சிலவற்றைப் பார்ப்பது நல்லது.

கிளெமன்டின் நிருபம் – அப்போஸ்தலர்களுடைய நிருபங்கள் எழுதப்பட்ட காலத்திற்கு பிறகு எழுதப்பட்ட நிருபங்களில் காலத்தில் முதலிடம் பெறுவது கிளெ‍மென்டின் நிருபமே. இது 96 இல் கொரிந்து சபைக்கு எழுதப்பட்ட நிருபம். கொரிந்து சபையில் இடம் பெற்றிருந்த சில பிரச்சனைகள் சம்பந்தமாக இக்கடிதம் எழுதப்பட்டது. இக்கடிதம் கொரிந்தியர்கள் வேத போதனையைப் பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியது. பழைய ஏற்பாட்டு வசனங்களையும் முக்கியமாக பவுலின் நிருபங்களை உதாரணங்காட்டியும் இந்நிருபம் எழுதப்பட்டிருக்கிறது. ரோமன் கத்தோலிக்கர் கிளெ‍மென்ட் ரோமில் பிசப்பாக இருந்ததாக ஒரு கதையைக் கட்டி விட்டுள்ளனர். தனது சபையில் மூப்பராக இருந்ததைவிட வேறு சபைகள் மீது கிளெ‍மென்ட் அதிகாரம் செலுத்தியதாக வரலாறு இல்லை.

இந்நிருபத்தை அடுத்து எழுதப்பட்ட இரண்டு முக்கிய நிருபங்களாக 132 இல் எழுதப்பட்ட பார்னபஸ்சின் நிருபமும், மேய்ப்பன் என்ற பெயரில் ஹேர்மஸ் 140க்கும் 150 இடைப்பட்ட காலத்தில் எழுதிய நூலையும் குறிப்பிடலாம். இவை இரண்டும் வேதத்தைப் போதிப்பவையாக இல்லாமல் எல்லைமீறிய வெறும் கற்பனைகளாக உள்ளன. அப்போஸ்தலப் போதனைகளைக் கைவிட்டுவிட்டு இவை இரண்டும் மனித சிந்தனையின் எண்ணங்களை வெளிப்படுத்தும் நூல்களாக மட்டும் இருக்கின்றன.

இவற்றை அடுத்து வரலாற்றில் வரும் முக்கிய மனிதனாக அந்தியோகியாவின் பிசப்பாக இருந்த இக்னேஸியஸைக் குறிப்பிடலாம். 110க்கும் 117க்கும் இடைப்பட்ட காலத்தில் ரோமில் இக்னேஸியஸ் கொல்லப்பட்டார். மரணத்தைத் தழுவ ரோம் நகரை நோக்கிப் போய்க்கொண்டிருந்தவேளை இக்னேஸியஸ் ஏழு நிருபங்களை வெவ்வேறு சபைகளுக்கு எழுதினார். கிறிஸ்துவின் பிறப்பையும், பரிகாரப்பலியையும் பற்றி எழுதிய இக்னேஸியஸ் அக்காலத்தில் எழுந்த போலிப்போதனையான டொஸட்டிஸத்தை (Docetism) அதிகம் தாக்கி எழுதினார். இப்போதனை கிறிஸ்து இவ்வுலகில் வாழ்ந்தபோது உண்மையான சரீரத்தைக் கொண்டிருக்கவில்லை என்றும், அவர் தன் வாழ்வில் அனுபவித்த துன்பங்கள் வெறும் மாயை என்றும் போதித்தது. இப்போலிப்போதனையை எதிர்ப்பதற்கு சபைத்தலைமையின் அதிகாரத்தை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் சபைத்தலைமையின் அதிகாரத்தைக் கடவுளுடைய அதிகாரமாக கருத வேண்டும் என்றும் இக்னேஸியஸ் போதித்தார். இதன் மூலம் வேதபோதனைகளை மீறிய ஒரு நிலைக்கு சபைத்தலைமையை இக்னேஸியஸ் உயர்த்தியதைப் பார்க்கிறோம்.

சபை வரலாற்றின் ஆரம்பத்தில் இருந்தே பிரஸ்பிட்டர் (Presbyter) பிசப் (Bishop) ஆகிய வார்த்தைகள் சபையின் மூப்பர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளாகவே இருந்துள்ளன. இதில் பிசப் என்ற வார்த்தைக்கு மூப்பர் என்றே பொருள். உண்மையில் King James Version மொழி பெயர்ப்பில் 1 தீமோத்தேயு 3:1 இல் பயன்படுத்தப்பட்டுள்ள இந்த ஆங்கில வார்த்தைக்கு மேற்பார்வையாளன் (Overseer) என்பதே பொருள். இதை ஆங்கிலத்தில் “பிசப்” என்று மொழி பெயர்த்திருக்கிறார். ஆனால், இன்று “பிசப்” என்ற வார்த்தை மிகவும் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றது. பிசப், மூப்பரைவிடப் பெரிய சபைத்தலைவராகக் கருதப்படுகிறார். இது வேதத்தில் காணப்படும் போதனையல்ல. வேதத்தைப் பொறுத்தளவில் பிசப்பும், மூப்பரும் ஒரே பதவிகள்.

இக்னேஸியஸின் காலத்தில் அந்தியோகியாவிலும் கிழக்கில் வேறு சில இடங்களிலும் ஒரு மூப்பர் மற்ற மூப்பர்களுக்கெல்லாம் தலைமை தாங்கி அவர்கள் மேல் அதிகாரம் செலுத்தும் முறை ஏற்பட்டுவிட்டது. வேதம் மூப்பர்களில் சிலர் முழு நேர ஊழியத்திற்கு அழைக்கப்படுகிறார்கள் என்றும், அவர்கள் மற்ற மூப்பர்களைவிட அதிக நேரத்தைப் பிரசங்கிப்பதிலும் போதிப்பதிலும் செலவிடுவார்கள் என்றும் போதிக்கிறதே தவிர ஏனைய மூப்பர்களைவிட இவர்கள் கூடுதல் அதிகாரம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று போதிக்கவில்லை. வேதபோதனைகளுக்கு முரணாக ஒரு மூப்பர் “பிசப்பாக” சகல அதிகாரம் கொண்டவராக இருக்கும் முறை இக்னேஸியஸ் காலத்திலேயே தோன்றிவிட்டது.

ஸ்மிர்னா சபையைச் சேர்ந்த பொலிகார்ப் (Polycarp) – இரண்டாம் நூற்றாண்டில் பிரசித்தம் பெற்ற கிறிஸ்தவராகவும், கிறிஸ்துவுக்காக மரணத்தைத் தழுவியவர்களில் ஒருவருமாக இருந்தார். அப்போஸ்தலனான யோவானின் சீடனான பொலிகார்ப் கி. பி. 156 இல் உயிரோடு எரிக்கப்பட்டபோது அவருக்கு 86 வயதாக இருந்தது. யோவான் இறந்தபோது பொலிகார்ப்பிற்கு 30 வயதாக இருந்திருக்கலாம். பொலிகார்ப்பின் சீடரான ஐரேனியஸ் (Irenaeus), பொலிகார்ப் அடிக்கடி யோவானைப் பற்றி பேசுவார் என்று கூறுகிறார். பொலிகார்ப் கிறிஸ்துவில் உறுதியான விசுவாசமுள்ளவராகவும், நல்ல இருதயத்தைக் கொண்டவராகவும் இருந்தார். கி. பி. 155 இல் ஈஸ்டர் தினத்தைப் பற்றிக் கலந்தாலோசிக்க பொலிகார்ப் ரோமிற்குப் போனார். ரோமில் பிசப்பாக இருந்த அனிசேட்ஸோடு இதில் பொலிகார்ப்பிற்கு ஒத்துப் போகமுடியாவிட்டாலும் அவருடைய நண்பராக இருந்தார். இக்காலத்தில் ரோமில் இருந்த பிசப் ஏனைய இடங்களில் இருந்த சபைகள் மீது அதிகாரம் கொண்டிருந்ததாகத் தெரியவில்லை.

அன்டோனியஸ் பயஸ் என்ற ரோம அதிபதியின் காலத்தில் பொலிகார்ப் உயிரோடு எரிக்கப்பட்டார். தனது எதிரிகள் மீது பொலிகார்ப் அன்பு செலுத்தியதை அவர் ஸ்மிர்னா சபையில் இருந்து எழுதிய கடிதம் தெரிவிக்கிறது. பொலிகார்ப்பை எரிப்பதற்கு முன்பாக ரோமப்படைத் தளபதி அவரைப் பார்த்து, கிறிஸ்துவை நீ விசுவாசிக்கவில்லை என்று சொன்னால் உன்னை விட்டுவிடுகிறோம் என்று கூறியபோது பொலிகார்ப் அவரைப் பார்த்து, எண்பத்தியாறு வருடங்கள் அவருக்காக நான் உழைத்திருக்கிறேன். அவர் எனக்கு எந்தத் துன்பமும் செய்ததில்லை. என்னை இரட்சித்த என் தேவனை நான் எப்படி மறுதலிக்க முடியும்? என்று கேட்டார். பொலிகார்ப் மெய் விசுவாசமுள்ள ஒரு சீடனாக மரித்தார்.

பிளினிக்கும் ரோம அதிபதி டிராஜானுக்கும் இடையில் நடந்த கடிதத் தொடர்பு – இரண்டாம் நூற்றாண்டு சபை பற்றிய விபரங்களை அறிந்து கொள்ள பிளினிக்கும் டிராஜானுக்கும் இடையில் நடந்த கடிதத் தொடர்பு உதவுகிறது. கி. பி. 111 இல் பித்தினியாவின் கவர்னராக பிளினி பொறுப்பேற்றபோது அங்கே கிறிஸ்தவர்கள் பெரும் வளர்ச்சி அடைந்து வேற்று மதக்கோவில்களே இல்லாமல் போயிருப்பதைக் கண்டார். கிறிஸ்தவத்தைப் பற்றி அதிகம் தெரிந்திராத பிளினிக்கு கிறிஸ்தவத்தின் வளர்ச்சி அதிக சங்கடத்தை அளித்தது. கிறிஸ்தவர்கள் மூட நம்பிக்கையுள்ளவர்கள் என்று பிளினி எண்ணினார். கிறிஸ்தவத்தின் வளர்ச்சியைக் குறைக்கவும் நடவடிக்கைகள் எடுத்தார். இருந்தபோதும் கிறிஸ்தவர்களின் நடவடிக்கைகள் அவரை வியப்படையச் செய்தது. கிறிஸ்தவர்கள் அதிகாலையில் எழுந்து கீர்த்தனைகளைப் பாடி, கிறிஸ்துவுக்கு முன் தாம் திருடமாட்டோம், விசுவாசத்திற்கு எதிராக நடக்க மாட்டோம், விபச்சாரத்தில் ஈடுபடமாட்டோம் என்றெல்லாம் உடன்படிக்கை செய்வதைக் கண்டார் பிளினி. ஒழுக்கம் மிகவும் சீரழிந்து காணப்பட்ட ரோம ராஜ்யத்தில் இத்தகைய உயர்ந்த ஒழுக்க நடவடிக்கைகள் பிளினிக்கு பிரமிப்பேற்படுத்தியதில் வியப்பில்லை. இந்தக் கிறிஸ்தவர்களை என்ன செய்வது? என்று பிளினி டிராஜானுடன் கலந்தாலோசித்தார். இதுபற்றி டிராஜானுக்கு பிளினி எழுதிய கடிதத்தில் தமது நடவடிக்கைகளைப் பற்றி விபரித்திருந்தார். முதலில் தான் அவர்களைப் பார்த்து நீங்கள் கிறிஸ்தவர்களா? என்று கேட்பது வழக்கம் என்றும், அதற்கு அவர்கள் ஆம்! என்று பதிலளித்தால் இரண்டு மூன்று முறை மீண்டும் அதே கேள்வியை வற்புறுத்திக் கேட்பதோடு அவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டிவரும் என்றும் பயமுறுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன் என்றும் பிளினி எழுதினார்.

இதற்குப் பதிலாக டிராஜான், பிளினியின் முறைகளை ஆதரித்து எழுதியதோடு, கிறிஸ்தவர்கள் மீது கொண்டுவரப்படும் அநாவசியமான குற்றச்சாட்டுகளைக் கண்டு கொள்ள வேண்டாம் என்றும் பதில் எழுதினார். அத்தோடு வேண்டுமென்றே கிறிஸ்தவர்களைத் தண்டிக்க முயற்சிக்க வேண்டாம் என்றும், அவர்கள் குற்றஞ்சாட்டப்பட்டு குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டாலொழிய அவர்களைத் தண்டிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். அவர்கள் கிறிஸ்துவை மறுதலித்து வேற்றுக் கடவுளரை ஆராதிக்க முன்வந்தால் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் எழுதினார்.

டிராஜான் பிளினிக்கு எழுதிய இந்தப் பதிலால் கிறிஸ்தவர்களுக்கு பெரும் நன்மையொன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், கிறிஸ்தவர்களை இது ஓரளவுக்கு உயர்த்தி அவர்கள்மேல் தேவையற்ற குற்றஞ்சாட்டும் வழக்கத்தைப் பெருமளவில் குறைத்தது.

இக்காலத்தில் கிறிஸ்தவ விசுவாசத்தை ஆதரித்து எழுதப்பட்ட ஆக்கங்களைக் குறிப்பிட்டாக வேண்டும். கிறிஸ்தவத்தையும், கிறிஸ்தவர்களையும் எதிர்த்தும், பழித்தும் அநேகர் பேசியும், குற்றஞ்சாட்டியும், எழுதியும் வந்ததால் கிறிஸ்தவம் என்றால் என்ன? என்று விளக்கி எழுதப்பட்ட நூல்கள் இக்காலத்தில் தோன்றின. இவற்றை அப்போலஜிஸ்ட் (Apologists) என்று அழைப்பர். இக்காலத்தில் வாழ்ந்த குறிப்பிட்டுக் கூறக்கூடிய அப்போலஜிஸ்டாக ஜஸ்டின் மார்டர் (Justin Martyr) இருந்தார். இவர் சிறந்த கிறிஸ்தவராகவும், படிப்பதில் அதிக ஆர்வமுள்ளவராகவும் இருந்தார். இவர் பாலஸ்தீனத்தில் சிக்கம் என்ற இடத்தில் கி. பி. 100 இல் பிறந்து பின்பு ரோமப் பேரரசனான மார்கஸ் அவுரேலியஸின் ஆட்சிக் காலத்தில் ரோமில் கி. பி. 163 இல் கொல்லப்பட்டார். கிறிஸ்தவ விசுவாசத்தை விளக்கியும் ஆதரித்தும் இவர் தனது முதலாவது ஆக்கத்தை ரோம பேரரசனான அன்டோனியஸ் பயஸீக்கும், செனட்டுக்கும் ரோமாபுரி மக்களுக்கும் அனுப்பினார். இரண்டாவதாக இவர் எழுதிய ஆக்கம் முதலாவதைவிட சுருக்கமானதாகவும் செனட்டுக்கு மட்டும் எழுதப்பட்டதாக இருந்தது. இவருடைய நீண்ட ஆக்கமாக, டீரைப்போ என்ற யூதனுடனான கலந்துரையாடல் (Dialogue with Trypho the Jew) என்ற நூல் இருந்தது. இது கிறிஸ்தவ விசுவாசத்தை யூதர்களுக்கு விளக்கி ஆதரித்து எழுதப்பட்டதாக இருந்தது. ஜஸ்‍டின் மார்டர் வேற்று தெய்வங்களை வணங்கிய மனிதனாகப் பிறந்து கடவுளை நாடி அலைந்தவராக இருந்தார். தத்துவத்தில் ஆர்வம் கொண்டு அதையும் படித்தார். ரோம், எதென்ஸ், அலெக்சாந்திரியா போன்ற இடங்களுக்கெல்லாம் பிரயாணம் செய்தார் எபேசுவில் கடற்கரையோரம் ஒருநாள் நடந்து போய்க் கொண்டிருக்தபோது ஒரு வயதான மனிதன் கிறிஸ்துவைப் பற்றியும் விசுவாசத்தைப்பற்றியும் ஜஸ்டினுக்கு விளக்கி கர்த்தரிடம் வழி நடத்தினார். அன்றே ஜஸ்டின் கிறிஸ்துவை அறிந்து கொண்டார்.

கிறிஸ்தவத்தை ஆதரித்து எழுதிய தன்னுடைய முதலாவது நூலில் ஜஸ்டின், கிறிஸ்தவத்திற்கு எதிரான தவறான குற்றச்சாட்டுகளை நிராகரித்து எழுதினார். கிறிஸ்தவர்களுடைய ஞாயிறு ஆராதனை முறையையும் இதில் விளக்கியிருந்தார் ஜஸ்டின். ஞாயிறு தினத்தில் கூடிக் கீர்த்தனைகள் பாடுவதும், ஜெபிப்பதும், பிரசங்கம் செய்வதும், அதைக் கேட்பதும், அப்பம் பிட்குதலுமே அன்று கிறிஸ்தவ ஆராதனை முறையாக இருந்ததை ஜஸ்டினின் நூலின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. இன்று ஆராதனை என்ற பெயரில் அநேகர் செய்து வரும் அட்டகாசங்களுக்கு இரண்டாம் நூற்றாண்டு சபைகளில் இடமிருக்கவில்லை.

கி. பி. 163 இல் ஜஸ்டினும் அவரோடு சேர்ந்த வேறு சிலரும் கொல்லப்படுவதற்கு முன், “இறந்தபின் நீங்கள் எல்லோரும் உயிர்தெழப் போகிறோம் என்று நினைக்கிறீர்களா?” என்று அவர்களைப் பார்த்து அவர்களுக்கு கொலைத் தண்டனை விதித்தவர்கள் கேட்டார்கள். அதற்கு ஜஸ்டின் அமைதியாக, “அதை நான் நிச்சயமாக அறிந்திருக்கிறேன்” என்று பதிலளித்தார்.

ரோமப் பேரரசனான மார்க்கஸ் அவுரேலியஸின் காலத்தில் பல வருடங்களுக்கு கிறிஸ்தவர்கள் பெரிதும் கொடுமைப்படுத்தப்பட்டார்கள். யுசீபியஸ் (Eusebius) என்ற வரலாற்றாசிரியர் தனது நூலில் கிறிஸ்தவர்களுக்கு அக்காலத்தில் இழைக்கப்பட்ட கொடுமைகள் பலவற்றை வர்ணித்து எழுதியுள்ளார். கி. பி. 177 இல் தற்போதைய ஐரோப்பாவில் கோல் (Gaul) என்ற பிரதேசத்தில் பல கொடுமைகள் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடந்தன. ரோன் பள்ளத்தாக்கில் இருந்த கிறிஸ்தவ சபையொன்று அநேக கொடுமைகளைச் சந்தித்தது. அச்சபையில் தலைவராக இருந்த 90 வயதான பொன்தியஸ் கொல்லப்பட்டார். கிறிஸ்தவர்கள் வார்த்தைகளால் விபரிக்க முடியாத அநேக துன்பங்களை இக்காலங்களில் சந்தித்தனர்.

இரண்டாம் நூற்றாண்டில் முதல் நூற்றாண்டைப் போலவே அநேக துன்பங்களைக் கிறிஸ்தவ சபை அனுபவித்தபோதும் கிறிஸ்தவம் தொடர்ந்து வளர்ந்தது. ரோமப் பேரரசு வியக்கும் வகையில் கிறிஸ்வர்களின் விசுவாசம் உறுதியானதாக இருந்தது. கிறிஸ்தவர்களை அவர்களால் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும் கிறிஸ்தவர்களுடைய உறுதியான விசுவாசம் அவர்களைத் திகைக்க வைத்தத்தோடு, ஆத்திரத்தையும் கிளப்பியது. கிறிஸ்தவர்களைக் கர்த்தரை அறியாதவர்கள் துன்புறுத்துவது சகஜமே. சத்தியத்தை சத்தியத்திற்கு எதிரானவர்கள் எப்போதுமே விரும்பமாட்டார்கள்.

இந்நூற்றாண்டில் கிறிஸ்தவம் அதிக வளர்ச்சி அடைந்தபோதும், போலிப்போதனைகளும் கண்மூடித்தனமாக வளரத்தொடங்கின. பிற்காலத்தில் ரோமன் கத்தோலிக்க சபையின் “போப்” உருவாவதற்கு இக்காலத்திலேயே வித்திடப்பட்டுவிட்டதையும் நாம் ஏற்கனவே பார்த்தோம். அப்போஸ்தலர்களால் ஏற்படுத்தப்பட்ட சபைத்தலைமை முறையில் மாறுதல் ஏற்பட்டு மனித சிந்தனைக்கு இடமளிக்கப்பட்டது. முக்கியமாக இக்காலத்தில் அப்போஸ்தலர்களுடைய மறைவுக்குப்பின் அவர்களுக்கு இணையாகக் கூறக்கூடிய தலைவர்கள் திருச்சபையை வழி நடத்த இல்லாமல் போனதைக் குறிப்பிடாமல் இருக்க ‍முடியாது. சபைத் தலைமை விசுவாசத்திலும், பக்தியிலும் சிறந்ததாக இல்லாமல் போனால் திருச்சபையில் சீரழிவு ஏற்படுவதைத் தடுக்க முடியாது என்பதை இரண்டாம் நூற்றாண்டு விளக்குகிறது.

இக்காலத்தில் எழுந்த அநேக போலிப்போதனைகளை அடுத்த இதழில் விளக்கமாகப் பார்ப்போம். அவற்றில் குறிப்பிடத் தகுந்தவைகள், நாசரீன்ஸ் (Nazarenes), எபியனைட்ஸ் (Ebionites), நொஸ்டிஸிசம் (Gnosticism), மொன்டனிசம் (Montanism) ஆகியவைகளாகும். இவற்றின் பாதிப்பால் இரண்டாம் நூற்றாண்டில் திருச்சபை மிகவும் தளர்ந்து காணப்பட்டது. வேதத்தைப் படிப்பதையும், ஆராய்வதையும் விட்டுவிட்டு, கண்மூடித்தனமான விளக்கங்களைக் கொடுப்பதையும், புதிய புதிய போதனைகளை நாடுவதையும் வாழ்க்கையாகக் கொண்டால் இக்கதியே எச்சபைக்கும் ஏற்படும் என்பதை இக்காலம் எச்சரித்து உணர்த்துகிறது.

3 thoughts on “திருச்சபை வரலாறு

 1. மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. தேவன் தாமே உங்களை ஆசீர் வதிப்பாராக. ஆமென்

  Like

  • உங்களுடைய கருத்துக்கு நன்றி. திருச்சபை வரலாறு இப்போது 2 பாகங்கள் முழுமையாக வெளிவந்திருக்கின்றன. அமெசோனிலோ, சென்னை ELSலோ பெற்றுக்கொள்ளலாம்.

   R Bala, ஆசிரியர்
   NZ

   Liked by 1 person

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s