தொடர்ந்து பத்திரிகை எங்களுக்கு ஆத்ம விருந்தளித்து ஆவிக்குரிய வாழ்க்கையில் ஆசீர்வாதங்களைத் தந்து வருகின்றது என்று வரும் கடிதங்களும், இன்றைய காலகட்டத்திற்கு பொருந்திவரும் ஆக்கங்களைத் தாங்கி வருகின்றது என்று வரும் கடிதங்களும் எங்கள் பணியைப் பெரிதும் சுலபமாக்குகின்றன. கிறிஸ்தவ பத்திரிகை என்ற பெயரில் வெளிவந்து கிறிஸ்தவத்திற்கு எந்த மகிமையையும் அளிக்க மறுக்கும் நூற்றுக்கணக்கான வார இதழ்களும், மாத இதழ்களும் மலிந்து கிடக்கும் இந்நாட்களில் வித்தியாசமான இதழாக வேத அடிப்படையில், வேதபோதனைகளை மட்டும் அளித்துவருவதை நோக்கமாகக் கொண்டு ஏழு வருடங்களைத் தாண்டி வந்துவிட்டோம். இந்நாள்வரைக்கும் எம்மோடிருந்து எமக்குத் துணை புரிந்து வரும் தேவன் இப்பணியில் இனியும் துணைசெய்வார் என்ற நம்பிக்கை எமக்கிருக்கின்றது.
ஏழு வருடங்களில் எதைச் சாதித்திருக்கிறோம்? எமது நோக்கங்களில் ஏதாவது நிறவேறியிருக்கின்றதா? என்ற கேள்விகள் உள்ளத்தில் எழாமலில்லை. நினைத்தற்கும் மேலாக, நினைத்தே பார்த்திராதவகையில் நம்தேவன் திருமறைத்தீபத்தை அநேக ஆத்துமாக்களின் உற்ற நண்பனாக அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். ஓரிதழ் வரத்தவறிவிட்டாலும், ஏன் அனுப்பவில்லை? எங்கள் முகவரியை நீக்கிவிட்டீர்களோ? என்று பதற்றத்தோடு கேட்டு வரும் கடிதங்கள் விழியோரங்களைப் பல தடவைகள் ஈரப்படுத்தியுள்ளன. (சில வேளைகளில் வெளியூர் போஸ்ட் ஆபீசுகளின் தவறாலும், இடம் மாறுகிறவர்கள் நேரத்தோடு புதிய முகவரியை அனுப்பத் தவறுவதாலும் பத்திரிகையை வாசகர்களுக்கு நாம் அனுப்பியும் கிடைக்காமல் போய்விடுகின்றது. பத்திரிகை திரும்பி வந்தால் மட்டுமே முகவரியை நாம் நீக்கிவிடுகிறோம். வரவில்லை என்று எழுதிக் கேட்பவர்களுக்கு மறுபடியும் இதழை அனுப்பி வைக்கிறோம்.)
கெரிஸ்மெட்டிக், பெந்தகொஸ்தே மாயைகளின் வசப்பட்டும், சமய சமரசக் குழப்பத்திற்குள்ளாகியும் தனது தனித்தன்மையை இழந்து துவண்டு நிற்கும் தமிழ்க்கிறிஸ்தவ உலகிற்கு சீர்திருத்த விசுவாசத்தை அறிமுகப்படுத்தி. சீர்திருத்த சபைகள் உருவாகவும், வளரவும் பாடுபடும் நோக்கத்துடன்தான் இப்பத்திரிகை ஆரம்பத்தில் தலைதூக்கியது. அந்நோக்கம் இந்த ஏழு ஆண்டுகளில் தவழும் குழந்தையாகவாவது மாறியிருப்பதில் எமக்கு மகிழ்ச்சியே. கர்த்தரின் துணையோடு வரப்போகும் வருடத்திலும் அந்நோக்கத்திற்காக இவ்விதழ் பாடுபாட, இதை எழுதுபவர்களும், வெளியிடுபவர்களும் தளராது பணிசெய்ய உங்கள் ஜெபத்தை நாடி நிற்கிறோம். தமிழகம், ஸ்ரீலங்கா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் பல்வேறு மேலைநாடுகளிலும் வாழும் அன்பர்களின் இதயபூர்வமான ஜெபங்களின் தயவாலேயே நாம் எமது பணியைத் தொடர முடிந்திருக்கின்றது. இவ்வேழாவது வருடம் அதை எமக்குப் பெரிதும் காட்டியுள்ளது. 2002 இல் பத்திரிகை புதிய தோற்றத்தோடு மலரவிருக்கிறது. பலரது வசதி கருதி அதைச் செய்துள்ளோம். தோற்றத்தில் மாற்றமிருந்தாலும் பக்கங்கள் குறையாது. சத்தியமும் மாறாது. இவ்விதழ் உங்களுடைய ஆத்ம விருத்திக்குப் பயனுள்ளதாக இருக்க கர்த்தர் ஆசீர்வதிக்கட்டும். புதிய ஆண்டில் தனது பெரும் கிருபையால் சமாதானத்தைக் கர்த்தர் உங்களுக்கு அருளட்டும்.
– ஆசிரியர்