பத்திரிகையை எழுதுவதிலும் அச்சேற்றுவதிலும் தடைகள் எதுவும் ஏற்படாமல் தம்முடைய கிருபையால் எம்மைத் தாங்கி தீபம் அச்சேறக் கர்த்தர் தொடர்ந்து துணை புரிகின்றார். உங்களுடைய ஜெபங்களுக்கும், உற்சாகமூட்டும் கடிதங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றி. அவசியமான கடிதங்களுக்கு பதிலெழுதவும் நாம் தொடர்ந்து முயற்சி செய்கிறோம்.
இன்று சீர்திருத்த விசுவாசத்தைப் (Reformed Faith) பற்றியதொரு தப்பான எண்ணம் வளர்ந்திருக்கிறது. கல்வினிச ஐங்கோட்பாடுகள் (Five Points of Calvinism) மட்டும்தான் சீர்திருத்த விசுவாசம் என்ற எண்ணத்தை சிலர் தங்களுக்குள் வளர்த்துக் கொண்டிருக்கின்றனர். இது ஆபத்தானது! கல்வினிச ஐங்கோட்பாடு இரட்சிப்பைப் பற்றிய வேதத்தின் அடிப்படைப் போதனை. ஆனால், அதைத் தாண்டிப்போக சிலருக்கு மனஉறுதி இல்லை. வேதம் போதிக்கும் அனைத்திற்கும் கட்டுப்பட இவர்கள் தயங்குகிறார்கள். சீர்திருத்தவாதிகளும், பியூரிட்டன் பெரியோரும் முழுமையான திருச்சபைச் சீர்திருத்தத்திற்காகப் போராடியவர்கள். அரைகுறையாக அது நிற்பதை அவர்கள் விரும்பவில்லை. வேதபோதனைகளுக்கெதிரான அனைத்தையும் களைந்தெறியும் வரை அவர்கள் அமைதி காணவில்லை. சீர்திருத்தத்தை அவர்கள் முடிந்து போனதொன்றாகக் கருதவில்லை. அதனால்தான் சீர்திருத்தவாதிகள் திருச்சபை “எப்போதுமே சீர்திருந்திக் கொண்டிருக்கின்றது” (Semper reformanda – always reforming) என்றனர். கல்வினிச ஐங்கோட்பாட்டையும், சீர்திருத்த விசுவாசத்தையும் இவ்விதழின் ஆரம்ப ஆக்கத்தில் விளக்கியுள்ளோம். சீர்திருத்தப் போதனைகளைக் கற்று வளர்ந்து கொண்டிருப்பவர்கள் சீர்திருத்த விசுவாசத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள இவ்வாக்கம் துணைபுரியும் என்று நம்புகிறோம்.
திருச்சபை வரலாறுபற்றி எழுதும்படி பலரும் கேட்டுக் கொண்டதற்கிணங்கி இவ்விதழில் ஆதித்திருச்சபையைப் பற்றி எழுதி அத்தொடரை ஆரம்பித்திருக்கிறோம். நமது கிறிஸ்தவம் வரலாற்றுக் கிறிஸ்தவம். நமது சத்தியங்கள் வரலாற்றில் உருப்பெற்று வளர்ந்தவை. சீர்திருத்தப் போதனைகளிலும், விசுவாசத்திலும் வளர்ந்து கொண்டிருப்பவர்கள் திருச்சபை வரலாற்றை அறிந்திருப்பது மிகவும் அவசியம்.
“தலித்” கிறிஸ்தவம் என்ற வார்த்தைப் பிரயோகத்திற்கு வேதத்தில் இடமுண்டா? தலித் மக்களுக்கு மெய்யான விடுதலை தரக்கூடியவர் யார்? என்றும் இவ்விதழ் விளக்குகிறது. சென்னையில் இருந்து வெளிவரும் சிற்றேடான “ரெட் டுளிப்” பையும் இவ்விதழில் விமர்சித்திருக்கிறோம். “சத்தியத்தை விளக்குவது மட்டும் நமது கடமையல்ல; அதற்கு முரணானவற்றை அடையாளங்கண்டு சுட்டிக் காட்டவும் வேண்டும்” என்கிறார் சீர்திருத்தப் போதகரான மொரிஸ் ரொபட்ஸ் (ஜனவரி-மார்ச் 2000). அது சத்தியமான வார்த்தை. வழமையான ஆக்கங்களும் தொடர்ந்து இவ்விதழில் இடம் பெற்றுள்ளன. வாசித்துப் பயனடையுங்கள்.
– ஆசிரியர்.