ஓய்வு நாளைக் குறித்த பல சந்தேகங்களைக் கிறிஸ்தவர்கள் கொண்டிருக்கிறார்கள். இப்புதிய ஏற்பாட்டுக் காலத்தில் நமக்கும் அந்நாளுக்கும் என்ன தொடர்பு? அந்நாளை நாம் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை இக்கட்டுரை ஆராய்கிறது.
மனமகிழ்ச்சிக்குரிய ஓய்வு நாள்!
கிறிஸ்தவ ஓய்வு நாளான வாரத்தின் முதல் நாளைப் பல பெயர்களில் கிறிஸ்தவர்கள் அழைப்பார்கள். ஆண்டவருடைய நாளென்றும் (Lord’s Day), கிறிஸ்தவ சபத்து நாள் (Christian Sabbath) என்றும் அது பொதுவாக அறியப்படுகின்றது. ஆனால் பழைய ஏற்பாட்டு சபத்து நாளுக்கும் புதிய ஏற்பாட்டுக் கிறிஸ்தவர்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்ற ஒரு போலிப்போதனை இன்று நேற்றென்றிராமல் இருந்திருக்கின்றது. அத்தோடு வாரத்தின் இறுதி நாளை ஓய்வு நாளென்று, பழைய ஏற்பாட்டின்படி செவன்த் டே அன்வென்டிஸ்ட்ஸ் கூட்டம் இன்றும் பின்பற்றி வருகின்றது. ஆண்டவருடைய நாள் ஒரு வசதிக்குத்தான் ஓய்வு நாளாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது, அதை நாம் ஒன்றும் பெரிதுபடுத்தக்கூடாது என்றும் எல்லா நாளும் ஆண்டவரின் நாள்தான் என்ற தொனியில் வாரத்தின் முதல் நாளை மற்ற நாட்களைப்போலப் பயன்படுத்தி தாம் நினைத்ததை அந்நாளில் செய்பவர்களும் நம்மத்தியில் இருக்கிறார்கள்.
இத்தனைக்கும் மத்தியில் வேதம் இந்நாளைப்பற்றி என்ன சொல்கிறது என்று பார்ப்பதுதான் நமது நோக்கம். பத்துக் கட்டளைகளில் ஒன்றான நான்காம் கட்டளை இந்நாளை நாம் ஆராதனை நாளாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று போதிக்கின்றது. இவ்விதழின் கிறிஸ்தவக் கோட்பாடுகள் பகுதியில் பத்துக் கட்டளைகளின் முக்கியத்துவத்தைப்பற்றி விளக்கியுள்ளோம் (பக்கங்கள் 12-14). நமது முன்னோர்கள் 1689 விசுவாச அறிக்கையில் ஒரு அதிகாரத்தை இதற்காக ஒதுக்கி ஆண்வருடைய நாள் என்ற தலைப்பில் இதுபற்றி விளக்கமான போதனையளித்துள்ளார்கள். வரலாற்றில் எழுந்த சீர்திருத்த வினாவிடையும் விளக்கமாக இதுபற்றிப் போதிக்கின்றது.
கிறிஸ்தவ சபத்து நாளான ஓய்வு நாளைப்பற்றிப் பார்க்கும்போது முதலில் பழைய ஏற்பாட்டின் ஒரு வேதப்பகுதியை விரிவாக ஆராய்வோம். ஏசாயா புத்தகத்தின் 58:13-14 வசனங்களை விளக்கமாகப் பார்ப்போம். இங்கே ஏசாயா தீர்க்கதரிசி ஓய்வு நாளைக்குறித்து கர்த்தர் பேசிய வார்த்தைகளை இவ்வாறாக நம்முன் வைக்கிறார்.
“என் பரிசுத்த நாளாகிய ஓய்வு நாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்யாதபடி, உன் காலை விலக்கி உன் வழிகளின்படி நடவாமலும், உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும், உன் சொந்தப் பேச்சைப் பேசாமலிருந்து, ஓய்வுநாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும், கர்த்தருடைய பரிசுத்த நாளென்றும் சொல்லி அதை மகிமையாக எண்ணுவாயானால், அப்போழுது கர்த்தரில் மன மகிழ்ச்சியாயிருப்பாய்; பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்படிப் பண்ணி, உன் தகப்பனாகிய யாக்கோபுடைய சுதந்திரத்தால் உன்னைப் போஷிப்பேன்; கர்த்தருடைய வாய் இதைச் சொல்லிற்று.”
கர்த்தரின் இவ்வார்த்தைகளைப் புரிந்து கொள்வதற்கு நாம் கஷ்டப்பட வேண்டியதில்லை. இஸ்ரவேலர் கர்த்தரை அவருடைய வார்த்தையைப் பின்பற்றி ஆராதிக்கும் முறையைக் கைவிட்டுவிட்டார்கள். அத்தோடு அவர்கள் ஓய்வு நாளையும் களங்கப்படுத்தினார்கள். ஓய்வுநாளைப் பரிசுத்தமாக வைத்திருப்பதைவிட்டு அந்நாளில் தாம் நினைத்ததைச் செய்தார்கள். ஓய்வுநாளை ஏனைய நாளைப் போலக் கருதி செயல்பட்டார்கள். அந்நாளில் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்யாமல் அலட்சியப்படுத்தினார்கள். ஏசாயா 52:2-6 வரையிலான வசனங்கள் இஸ்ரவேலரின் நிலமையை எடுத்துக் காட்டுகிறது. இதற்குக் காரணம் அவர்கள் ஓய்வு நாளைக் கைவிட்டுவிட்டதுதான்.
ஓய்வு நாளை மட்டும் இஸ்ரவேலர் கைவிட்டுவிடவில்லை. அவர்கள் விசுவாசமற்ற வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள். பரிசேயர்களைப்போல போலித்தனமான மதப்பற்றைக் கொண்டிருந்து ஆராதனையின் தேவனை அலட்சியப்படுத்தினார்கள். இருதயம் கல்லாய்ப்போய் கர்த்தருக்கு எதிராக வாழ்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் அவர்முன் பலிகளையும் செலுத்தி வந்தார்கள். இவ்வாறாக எங்கே மெய்யான வழிபாடு இல்லையோ அங்கெல்லாம் ஓய்வு நாளுக்கு மதிப்பு இருக்காது. மெய்யான தேவ வழிபாடும் ஓய்வுநாளைக் கடைப்பிடிப்பதும் இணைந்தே இருக்கும். அவற்றைப் பிரிக்க முடியாது.
எனவே கர்த்தர் இவ்வார்த்தைகள் மூலம் இஸ்ரவேலரைக் கண்டிக்கிறார். மெய்யான வழிபாடு எது என்று இவ்வார்த்தைகளின் மூலம் அவர்களுக்கு விளக்குகிறார். இவற்றைப் பின்பற்றி வாழ்ந்தால் மட்டுமே அவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்று விளக்குகிறார்.
இவ்வார்த்தைகளின் மூலம் கர்த்தர் தன் மக்களுக்கு வாக்குத்தத்தம் செய்து தரும் மூன்று முக்கிய ஆசீர்வாதங்களையும் அவற்றை நாம் அனுபவிப்பதற்காக அவர் விதித்துள்ள நிபந்தனையையும் இனிப்பார்ப்போம்.
1. முதலாவதாக, ஓய்வுநாளைப் பரிசுத்தமாக வைத்திருந்தால் அவருடனான உறவில் கர்த்தருடைய பிள்ளைகள் மகிழ்ந்திருப்பார்கள் என்று கர்த்தர் சொன்னார்.
கர்த்தருடைய பிள்ளைகளுக்கு அவருடன் எப்போதுமே உறவிருக்கும். அத்தகைய உறவை அவர்கள் கிறிஸ்துவுக்குள் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இங்கே கர்த்தர் அவ்வுறவில் அவர்கள் மேலதிகமாக அடையக்கூடிய ஆசீர்வாதத்தையும், மனமகிழ்ச்சியையும் பற்றிக் குறிப்பிடுகிறார். அவரிடமிருந்து இத்தகைய மேலான ஆசீர்வாதத்தையும், ஆனந்தத்தையும் ஓய்வுநாளைக் கடைப்பிடிப்பதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்று கர்த்தர் கூறுகிறார். 14 ம் வசனம், “நீ மனமகிழ்ச்சியாயிருப்பாய்” என்று கூறுகிறது. 13வது வசனம் அம்மனமகிழ்ச்சி எவ்வாறு கிடைக்கும் என்று கூறுகிறது. “என் பரிசுத்த நாளாகிய ஓய்வு நாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்யாதபடி உன் காலை விலக்கி, உன் வழிகளின்படி நடவாமலும், உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும் உன் சொந்தப் பேச்சைப் பேசாமலுமிருந்தால்” என்னோடு அதிக மனமகிழ்சியுடன் நீ ஐக்கியத்தில் இருக்க முடியும் என்று கர்த்தர் கூறுகிறார்.
இங்கே கர்த்தர் வாக்குத்தத்தம் செய்து கொடுப்பது நாம் ஏற்கனவே அவரிடம் இருந்து பெற்று அனுபவித்துக் கொண்டிருக்கும் ஆசீர்வாதங்களைவிட அதிகமானது. இவ்வாசீர்வாதம் கிறிஸ்தவனுக்கு மட்டுமே உரியது. கிறிஸ்தவன் இரட்சிப்பின் மூலம் கிறிஸ்துவுக்குள் இவ்வாசீர்வாதத்தை அடையும் பாக்கியத்தை ஏற்கனவே பெற்றுக் கொண்டுள்ளான். ஆனால் ஓய்வுநாளை முறையாக கர்த்தரின் வார்த்தையின்படிக் கடைப்பிடிப்பதன் மூலம் மட்டுமே இத்தகைய கர்த்தருக்குள்ளான மன மகிழ்ச்சியை அவன் அனுபவிக்க முடியும். எவரும் தவறாக இதைக் கெரிஸ்மெட்டிக் கூட்டம் போதிக்கும் ஒரு புதிய ஆசீர்வாதமாக எண்ணிவிடக்கூடாது. இது ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் உடமையானது. இதை அனுபவிக்கும் தகுதியை அவன் ஏற்கனவே கிறிஸ்துவுக்குள் அடைந்துவிட்டான். ஆனால், அதன் பலனை ஓய்வுநாளைப் பரிசுத்தமாக வைத்திருந்தால் மட்டுமே அனுபவிக்க முடியும்.
14ஆம் வசனம் போதிக்கும் மனமகிழ்ச்சி கர்த்தருக்குள் அனுபவிக்கக்கூடிய நெருக்கமான, ஆழமான, அழகான, ஆனந்தமான மனமகிழ்ச்சியைக் குறிக்கிறது. இதை எவ்வாறு ஒரு கிறிஸ்தவனால் அனுபவிக்க முடியும்? கர்த்தருடைய பரிசுத்தமான ஓய்வுநாளை அவருடைய வார்த்தையின்படி வைத்திருப்பதன் மூலம் மட்டுமே அனுபவிக்க முடியும். இதையே ஏசாயா மூலம் கர்த்தர் நினைவுபடுத்துகிறார். கர்த்தர் ஓய்வு நாளில் எதைச் செய்யும்படிச் சொல்லியிருக்கிறாரோ அவற்றைக் கீழ்ப்படிவுடன் நீங்கள் செய்வீர்களானால் கர்த்தருக்குள் நீங்கள் மனமகிழ்ச்சியாயிருக்கலாம். அவ்வாறு நீங்கள் கீழ்ப்படிய மறுத்தால் கர்த்தர் வாக்குத்தத்தம் செய்து தந்திருக்கும் இத்தகைய மனமகிழ்ச்சியை நீங்கள் அவரிடம் இருந்து பெற்றனுபவிக்க முடியாது. இதற்காக நீங்கள் உங்களுடைய இரட்சிப்பை இழந்துவிடமாட்டீர்கள்; தொடர்ந்தும் விசுவாசியாகவே இருப்பீர்கள். ஆனால், இவ்வுலக வாழ்வில் உங்களுடைய ஆழமான பக்திவிருத்திக்காகவும், தம்மோடு இருக்கவேண்டிய ஆழமான, நெருக்கமான உறவிற்காகவும் கர்த்தரே ஏற்படுத்தித் தந்திருக்கும் அருமையான நாளைப் பரிசுத்தமாக வைத்திராததால் அதிலிருந்து வரக்கூடிய பலனை நீங்கள் அடைய முடியாது. உதாரணத்திற்கு ஒரு தகப்பனையும் அவருடைய மகனையும் எடுத்துக் கொள்வோம். தகப்பன் மகனைப் பார்த்து, “மகனே! நீ இன்று ஸ்கூலிலிருந்து வந்தவுடன் நான் சொல்கிற வேலையை செய்தால் உனக்கு ஒரு பரிசு கொடுக்கப்போகிறேன்” என்று சொல்கிறார். அப்பரிசை அவர் தன் மகனுக்கு மட்டுமே கொடுக்க நிச்சயித்திருக்கிறார். அதை வேறு யாரும் பெற்றுக் கொள்ள முடியாது. ஆனால், மகன் தகப்பன் சொன்ன வேலையை செய்தால் மட்டுமே அப்பரிசை அனுபவிக்க முடியும். தந்தையின் மனதைக் குளிர வைக்க முடியும். அவ்வேலையை மகன் செய்யாமல் விட்டால் அவனுக்கும் தகப்பனுக்கும் உள்ள உறவு அழிந்துவிடாது. தகப்பன் தொடர்ந்தும் அவனை நேசிப்பார். ஆனால், மகன் தகப்பன் சொன்னதை செய்யாமல் போவதால் தான் அடையக்கூடிய பரிசையும், தன்னுடைய கீழ்ப்படிதலைப் பார்த்து தகப்பன் அடையக்கூடிய ஆனந்தத்தையும் இழந்து போகலாம். இதேபோலத்தான் ஓய்வுநாளை நாம் பரிசுத்தமாக வைக்காமல் போவதால் கர்த்தருக்குள் நாம் மனமகிழ்ச்சியாயிருக்க முடியாது.
2. இரண்டாவதாக, ஓய்வுநாளைப் பரிசுத்தமாக வைத்திருப்பவர்களுக்கு கர்த்தர் அவர்களுடைய எதிரிகள் மீது வெற்றியைத் தருவதாக வாக்குத்தத்தம் செய்கிறார்.
ஏசாயா 58:14 வது வசனத்தில் “பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்படி பண்ணுவேன்” என்று கர்த்தர் கூறுகிறார். இது எதிரிகள் மீதான வெற்றியைக் குறிக்கும் அடையாள வார்த்தைகள். இத்தகைய வெற்றியைத் தன் மக்களுக்குத் தரப்போவதாக கர்த்தர் கூறுகிறார். இதே உண்மையைப் போதிக்கும் அடையாள மொழியை நாம் வேறு பகுதிகளிலும் வாசிக்கலாம். உதாரணத்திற்கு இரு வேதப்பகுதிகளைப் பார்ப்போம். உபாகமம் 32:12-13, “கர்த்தர் ஒருவரே அவனை வழிநடத்தினார்; அந்நிய தேவன் அவனோடே இருந்ததில்லை. பூமியிலுள்ள உயர்ந்த ஸ்தானங்களின் மேல் அவனை ஏறிவரப் பண்ணினார். வயலில் விளையும் பலனை அவனுக்குப் புசிக்கக் கொடுத்தார்; கன்மலையிலுள்ள தேனையும், கற்பாறையிலிருந்து வடியும் எண்ணெயையும் அவன் உண்ணும்படிச் செய்தார்”. இது இஸ்ரவேலருக்கு கர்த்தரளிக்கும் வெற்றியைக் குறிக்கும் அடையாள மொழி. இதேபோல் உபாகமம் 33:29 இல், “இஸ்ரவேலே, நீ பாக்கியவான்; . . . உன் சத்துருக்கள் உனக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள்; அவர்கள் மேடுகளை நீ மிதிப்பாய்” என்று வாசிக்கிறோம்.
புதிய ஏற்பாடும் கிறிஸ்தவர்கள் அடையும் வெற்றியைக் குறித்துப் பேசுகிறது. பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்தில் (8:37) “நாம் இவையெல்லாவற்றிலும் முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.” என்று கிறிஸ்தவ வாழ்க்கையில் நாமடையும் வெற்றியைக் குறித்துப் பேசுகிறார். பவுல் இதே நிருபத்தில் நாம் பிசாசுடனும், பாவத்துடனுமான போராட்டத்தில் அடையக்கூடிய வெற்றியையும் பற்றிப் பேசுகிறார். பழைய ஏற்பாடு கிறிஸ்தவர்கள் அடையக்கூடிய இத்தகைய வெற்றியை இஸ்ரவேலர் எதிரிகளை வென்று அந்நிய தேசத்திலிருந்து திரும்பி வரும் காட்சியின் மூலம் படம் பிடித்துக்காட்டுகிறது.
ஏசாயா 58:14, ஓய்வுநாளைப் பரிசுத்தமாக வைத்திருப்பவர்களுக்கு கிறிஸ்தவ வாழ்க்கையில் கர்த்தர் இத்தகைய வெற்றிகளைத் தருவார் என்று கூறுகின்றது. ஆண்டவருடைய நாளான ஓய்வு நாளைப் பரிசுத்தமாக வைத்திருப்பதன் மூலம் நாம் பாவத்தில் மரித்து பரிசுத்த வாழ்க்கையில் வளர்கிறோம் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? ஓய்வு நாளைக் கர்த்தரின் வார்த்தையின்படிக் கிறிஸ்தவர்கள் பின்பற்றுவதன் மூலம் பாவத்திற்கு மரண அடி கிடைக்கின்றது. கிறிஸ்தவன் தன் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர்கிறான்; பெலமடைகிறான்; எதிரிகள் பயங்கொள்ளும்படி உயர்கிறான்.
3. மூன்றாவதாக, ஓய்வுநாளைப் பரிசுத்தமாக வைத்திருப்பவர்களுக்கு கர்த்தர் இரட்சிப்பின் பலாபலன்களை ஆழமாக அனுபவிக்கும் ஆசீர்வாதத்தை அளிக்கிறார்.
ஏசாயா 58:14 இல் கர்த்தர், “உன் தகப்பனாகிய யாக்கோபுடைய சுதந்தரத்தால் உன்னைப் போஷிப்பேன்” என்று கூறுகிறார். அதாவது யாக்கோபு அடைந்த சொத்துக்களின் மூலம் உன்னை ஆசீர்வதிப்பேன் என்று கர்த்தர் கூறுகிறார். இத்தகைய மொழிநடை இஸ்ரவேலர், கர்த்தர் அவர்களுடைய பிதாக்களுக்குக் கொடுத்த வாக்குத்தத்தங்களை அனுபவிப்பார்கள் என்பதை விளக்குகின்றது. கர்த்தர், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியவர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கையின் பலன்களை இஸ்ரவேலர் அனுபவிப்பார்கள் என்று கூறுகிறார்.
சங்கீதம் 144:12-15 ஆகிய பழைய ஏற்பாட்டு வசனங்கள் கர்த்தரின் ஜனங்கள் அடையக்கூடிய பாக்கியங்களை விளக்குகிறது. “அப்போழுது எங்கள் குமாரர் இளமையில் ஓங்கி வளருகிற விருட்சக் கன்றுகளைப் போலவும், எங்கள் குமாரத்திகள் சித்திரம் தீர்ந்த அரண்மனை மூலைக்கற்களையும் போலவும் இருப்பார்கள். எங்கள் களஞ்சியங்கள் சகலவித வஸ்துக்களையும் கொடுக்கத் தக்கதாய் நிரம்பியிருக்கும்; எங்கள் கிராமங்களில் எங்கள் ஆடுகள் ஆயிரம் பதினாயிரமாய்ப் பலுகும். எங்கள் எருதுகள் பலத்தவைகளாய் இருக்கும்; சத்துரு உட்புகுதலும் குடியோடிப் போகுதலும் இராது; எங்கள் வீதிகளில் கூக்குரலும் உண்டாகாது.”
இத்தகைய பழைய ஏற்பாட்டு வாக்குத்தத்தங்களுக்கும் நமக்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் கேட்கலாம். நிச்சயமாக நமக்கும் அவற்றிற்கும் தொடர்புண்டு. இவை பழைய ஏற்பாட்டு மக்களுக்காகக் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தங்கள் அல்ல. இவை நமக்காகவும் தரப்பட்டவை. கர்த்தருடைய பிள்ளைகளுக்காகக் கொடுக்கப்பட்டவை. பழைய ஏற்பாட்டில் கர்த்தரை மகிமைப்படுத்திய மக்கள் இவற்றை அனுபவித்தது போல் புதிய ஏற்பாட்டுக் காலத்தில் அவரை மகிமைப்படுத்துபவர்கள் இவற்றை அனுபவிப்பார்கள்.
கிறிஸ்துவுக்குள்ளான இரட்சிப்பின் பலன்களான நமது ஐசுவரியங்களையும் ஆசீர்வாதங்களையும் எபேசியர் முதலாவது நிருபத்தில் பவுல் பட்டியல் போட்டுத் தருவதைக் கவனித்துப் பாருங்கள். அவை கிறிஸ்துவுக்குள்ளாக நாம் பெற்றுக்கொண்டுள்ள ஐசுவரியங்கள். தெரிந்து கொள்ளல் (1:4). சுவீகாரப்புத்திரத்துவம் (1:6), பாவமன்னிப்பாகிய மீட்பு (1:7), அவருடைய சித்தத்தின் இரகசியத்தின் வெளிப்பாடு (1:10), முன்குறிக்கப்பட்டோம் (1:12), கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரர் (1:12), பரிசுத்த ஆவி (1:13). இத்தகைய ஆசீர்வாதங்கள் நமக்குத் தரப்பட்டுள்ளன. நாம் இவற்றை அன்றாடம் வாசித்துப் பார்க்க வேண்டும் என்பதற்காக வேதத்தில் கொடுக்கப்படவில்லை. நாம் ஆவிக்குள் அனுபவிப்பதற்காக இவை கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் நாம் ஒவ்வொரு நாளும் பங்கெடுக்க வேண்டும். இவற்றின் நிச்சயம் நம்மில் தொடர்ந்திருக்க வேண்டும். அந்நிச்சயத்தின் ஆனந்தத்தில் நாம் அன்றாடம் திளைக்க வேண்டும். இது எவ்வாறு ஒரு கிறிஸ்தவனின் வாழ்க்கையில் நிகழ்கிறது? கிறிஸ்தவர்கள் தங்களுடைய ஆவிக்குரிய நன்மைக்காக கர்த்தர் தந்துள்ள ஓய்வு நாளைப் பரிசுத்தமாக வைத்திருந்து அந்நாளில் கர்த்தர் செய்யும்படியாகக் கூறியுள்ள காரியங்களை செய்யும் போது இவ்வாவிக்குரிய ஐசுவரியங்களில் அவர்கள் பங்கு கொள்கிறார்கள். அவற்றில் நிச்சயத்துவத்தைப் பெறுகிறார்கள். இவற்றில் நாம் ஒவ்வொரு நாளும் பங்குகொண்டு மனமகிழ்ச்சியடைய வேண்டும். ஆனால் ஓய்வுநாளில் இவற்றில் அளப்பரிய மனமகிழ்ச்சியடைகிறோம். ஏசாயா 58:14, “கர்த்தருடைய வாய் இதைச் சொல்லிற்று” என்று கூறுகிறது. அதாவது கர்த்தர் இவற்றை நாம் அனுபவிப்போம் என்று உறுதி கூறியிருக்கிறார். ஆகவே, ஓய்வுநாளை நாம் பரிசுத்தமாக வைப்போமானால் நமது ஆவிக்குரிய ஐசுவரியங்களில் நாம் விசேடமான முறையில் பங்கு கொண்டு மனமகிழ்ச்சியடைவது நிச்சயம். கர்த்தரின் வாய் இப்படிச் சொல்கிறது.
4. நான்காவதாக, இவ்வாசீர்வாதங்களைத் தமது பிள்ளைகள் அனுபவிப்பதற்காக கர்த்தர் விதித்துள்ள நிபந்தனைகளை ஆராய்வோம்.
கர்த்தர் தந்துள்ள வாக்குத்தத்தங்களை நாமனுபவிக்க வேண்டுமானால் நமக்கு ஓய்வுநாளைப் பற்றிய நல்லறிவு இருத்தல் வேண்டும். அநேக கிறிஸ்தவர்கள் ஓய்வு நாளென்று ஒன்றிருக்கும் உணர்வில்லாமலேயே வாழ்ந்து வருகிறார்கள். ஓய்வு நாளைப்பற்றி அறிந்திருப்பவர்களும் அந்நாளை ஒரு நேர ஆராதனைக்காக சபைக்குச் செல்லும் ஒரு நாளாக மட்டுமே அறிந்திருக்கிறார்கள். இது ஓய்வு நாளைப்பற்றிய தவறான எண்ணத்தைக் கொண்டிருப்பதற்கான அறிகுறியாகும். இன்று ஓய்வு நாளைக் குறித்த சீர்திருத்தம் தமிழ்க் கிறிஸ்தவர்களிடத்திலும், தமிழ்க் கிறிஸ்தவ சபைகளிடத்திலும் ஏற்பட வேண்டிய அவசியமேற்பட்டுள்ளது.
இனிக் கர்த்தர் இப்பகுதியில் விதித்துள்ள நிபந்தனைகளைப் பார்ப்போம். ஏசாயா 58:13 ஆவது வசனம் இந்நிபந்தனைகளை விளக்குகிறது.
1. உனக்கு இஷ்டமானதைச் செய்யாமல் உனது காலை விலக்கிக் கொள்.
இதை இன்னுமொருவிதமாகக் கூறப்போனால் ஓய்வு நாள் கர்த்தருடைய பரிசுத்த நாளாக இருப்பதால் அந்நாளில் நீ நினைத்ததைச் செய்யாமல் இருப்பாயாக. இம்முதலாவது நிபந்தனை நாம் நினைத்ததை அந்நாளில் செய்யக்கூடாதென்ற தடையை ஏற்படுத்துகிறது. அதற்குக் காரணம் அந்நாள் கர்த்தருடைய பரிசுத்தமான நாள். ஆதியாகமம் 2:2, கர்த்தர் அனைத்தையும் படைத்தபின் ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார் என்று கூறுகிறது. 3 ஆம் வசனம் அவர் அந்நாளில் தனது கிரியைகளையெல்லாம் முடித்தபின் ஓய்ந்திருந்தபடியால் அந்நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார் என்று கூறுகின்றது. அதேபோல் யாத்திராகமம் 20:8 இல் கர்த்தரின் பத்துக் கட்டளைகளில் ஒன்றான நான்காம் கட்டளை, ஓய்வு நாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைத்திருப்பாயாக என்று கூறுகிறது. இங்கே 10, 11 ஆம் வசனங்கள் அந்நாளில் செய்யக்கூடாத காரியங்கள் என்ன என்று பட்டியலிட்டுத் தருகின்றன. அத்தோடு அந்நாளைக் கர்த்தர் பரிசுத்தமான நாளாக்கியிருப்பதாலேயே அந்நாளில் பல காரியங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் காரணமளிக்கப்பட்டுள்ளது.
ஓய்வு நாள் ஆராதனையின் நாளாக இருப்பதால் அந்நாளில் நாம் பணம் சம்பாதிப்பதற்கான எந்த வேலையும் செய்வதைக் கர்த்தர் தடை செய்துள்ளார். வழமையாக மற்ற நாட்களில் நாம் வெளியில் செய்யும் வேலை, வீட்டில் செய்யும் வேலை எதையும் இந்நாளில் செய்யக்கூடாது. அந்நாளில் வியாபாரம் செய்வது, மற்றவர்களை வீட்டில் வேலைக்கு வைப்பது, விளையாட்டிலும், விளையாட்டுப் போட்டிகளிலும் ஈடுபடுவது போன்ற காரியங்களைச் செய்வதைக் கர்த்தர் தடைசெய்துள்ளார். இந்நாளில் நாம் களியாட்டங்களிலும், கொண்டாட்டங்களிலும் ஈடுபடக்கூடாது. டெலிவிசனில் நேரத்தைக் கழிப்பது, செய்திப்பத்திரிகையில் தலையைக் கவிழ்த்துக்கொள்வது போன்ற பரிசுத்தமான ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை அளிக்கமுடியாத காரியங்கள் செய்வதை இந்நாளில் தவர்த்துக் கொள்ள வேண்டும். ஆகவே நம் வழிகளில் நடவாமலும், நமக்கு விருப்பமானதைச் செய்யாமலும் இந்நாளில் கர்ததர் தன் வார்த்தையில் கூறும் விதமாக மட்டும் நடக்க முயல வேண்டும்.
3. உன் சொந்தப் பேச்சைப் பேசாதே.
அத்தோடு ஏசாயா இப்பகுதியில் உன் சொந்தப் பேச்சையும் பேசாதே என்று கூறுகிறார். தேவையற்ற, ஆவிக்குரிய வாழ்க்கைக்கு உதவாத பேச்சை இந்நாளில் பேசக்கூடாது. அரசியல், சினிமா, நாட்டு நடப்பு, போன்ற காரியங்களைப் பற்றிப் பேசி அரட்டை அடிப்பது கர்த்தருக்கு விரோதமான செயல். நம் சொந்தப் பேச்சைப் பேசாமல் வேத பூர்வமான பேச்சைப் பேச வேண்டும். கர்த்தரைப் பற்றி அவரது வார்த்தைகளைப்பற்றி, ஓய்வுநாளில் நாம் படித்த பாடங்களைப் பற்றி, கேட்ட வசனங்களைப் பற்றிப் பேச வேண்டும்.
இத்தகைய காரியங்களிலிருந்து விலகி கர்த்தரின் ஆராதனையில் ஈடுபட்டு அவருக்குள் மனமகிழ்ச்சியாயிருப்பதையே அவர் விரும்புகிறார். கர்த்தருக்குள் மனமகிழ்ச்சியாயிருக்க முடியாத காரியங்களை இந்நாளில் நாம் செய்ய முனைவது நமக்கு இஷ்டமான காரியங்களைச் செய்வதாகும். அதிலிருந்து விலகு என்று கர்த்தர் கூறுகிறார். இன்று பல கிறிஸ்தவர்களுடைய விசுவாசம் குறைவாக இருக்கின்றது. ஓய்வு நாளில் அவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று பார்த்தால் அவர்களுடைய விசுவாசத்தின் தன்மையைப் புரிந்து கொள்ளலாம். சிலர் இப்படியெல்லாம் வாழ்ந்தால் குடி முழுகிப்போய்விடும் என்று எந்த வேலையையும் செய்யத் துணிவார்கள். சிலர் இது நடைமுறைக்கு ஒத்துவராது என்று ஓய்வு நாளை உதாசீனப்படுத்துவார்கள். கர்த்தரின் பிள்ளைகளுக்கு தேவ பயம் முதலில் இருக்க வேண்டும். உங்களுக்கு தேவ பயம் இருக்கிறதா? தேவ பயமிருந்தாலொழிய நீங்கள் கர்த்தரின் இவ்வார்த்தைகளைக் கேட்டு நடக்கமாட்டீர்கள். தேவ பயமிருக்கும் இடத்தில்தான் ஞானம் இருக்கும். ஞானமிருப்பவர்களே கர்த்தர் சொன்னதை மட்டும் செய்யும் மனப்பக்குவத்தைக் கொண்டு அதன்படி வாழ முற்படுவார்கள். இஸ்ரவேலருக்கு தேவ பயமிருக்கவில்லை. ஞானமும் இருக்கவில்லை. அதனால்தான் தங்கள் வழியில் நடந்து கர்த்தரின் வழிகளை அலட்சியப்படுத்தினார்கள்.
ஓய்வு நாளின் முழுப்பகுதியையும் நாம் சபை ஆராதனைகளில் கலந்து கொள்வதில் செலவிட வேண்டும். அதன்பின் இருக்கும் நேரத்தை நாம் வீட்டில் குடும்பத்தோடு செலவிட்டு குடும்ப ஆராதனை, மற்றும் தனி வழிபாட்டில் ஈடுபட வேண்டும். இதற்கும் மீறி இருக்கும் நேரத்தை கிறிஸ்தவ நண்பர்களுடன் வேதக் காரியங்களைப் பேசுவதில் செலவிடலாம். நமக்குத் தெரிந்தவர்கள் யாரும் வைத்திய சாலைகளில் இருந்தால் அவர்களைப் போய்ப் பார்த்து ஆறுதல் சொல்லலாம். இந்நாளில் கருணைக்குரிய காரியங்களையும் செய்ய கர்த்தர் அனுமதி அளித்திருக்கிறார். ஆனால் இவற்றை மீறி உலப்பிரகாரமான காரியங்களில் ஆண்டவருடைய நாளில் ஈடுபடுவது அவரது கட்டளையை மீறி நடப்பதாகும். ஓய்வு நாளை நாம் ஒழுங்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
(வளரும்)