மனமகிழ்ச்சிக்குரிய ஓய்வு நாள்

ஓய்வு நாளைக் குறித்த பல சந்தேகங்களைக் கிறிஸ்தவர்கள் கொண்டிருக்கிறார்கள். இப்புதிய ஏற்பாட்டுக் காலத்தில் நமக்கும் அந்நாளுக்கும் என்ன தொடர்பு? அந்நாளை நாம் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை இக்கட்டுரை ஆராய்கிறது.

மனமகிழ்ச்சிக்குரிய ஓய்வு நாள்

ஓய்வு நாளைக் குறித்து கடந்த இதழில் பார்த்தபோது பழைய ஏற்பாட்டில் ஏசாயா மூலம் கர்த்தர் அந்நாளின் சிறப்பம்சங்களைப் பற்றியும், அந்நாளைக் கைக்கொள்வதால் கர்த்தருடைய மக்கள் அடையக்கூடிய பயன்களையும் குறித்துப் போதித்த உண்மைகளைப் பார்த்தோம். இவ்விதழில் அந்நாள் பழைய ஏற்பாட்டு மக்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்ட ஒரு நாளல்ல, கிறிஸ்தவர்கள் அனைவருமே எக்காலத்திலும் பின் பற்ற வேண்டிய ஒரு நாள் என்பதற்கான வேத ஆதாரங்களைப் பார்ப்போம். ஓய்வு நாளை இன்று நாம் கடைப்பிடிக்கத் தேவையில்லை என்று வேதத்திற்கு முரணாக சிலர் கிறிஸ்தவர்கள் மத்தியில் பேசியும், நடந்தும் வருவது கிறிஸ்தவர்கள் அறிந்த உண்மை. முக்கியமாக Dispensationalism, New Covenant Theology போன்ற போதனைகள் ஓய்வு நாளை எதிர்க்கிறன. இப்போதனைகள் சரிதானா? என்பதையும் நாம் ஆராய்வது அவசியம். வேதம் போதிக்கும் சத்தியத்தை எடுத்து விளக்கும்போது, அதற்கெதிரான போதனைகளை வெளிப்படுத்துவதும் சத்தியத்தைப் போதிப்பதன் மறுபகுதி என்று இவ்விதழின் தலைப்புக் கட்டுரையில் மொரிஸ் ரொபட்ஸ் கூறியிருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.

படைப்பில் உருவாக்கப்பட்ட நாள்

ஓய்வு நாள் படைப்பில் உருவாக்கப்பட்டதற்கான ஆதாரங்களை நான்கு வேதப் பகுதிகள் தருகின்றன. அவை: ஆதியாகமம் 2:1-3; யாத்திராகமம் 20:8-11; மாற்கு 2:27, 28; எபி‍ரேயர் 4:1-11 ஆகியவை.

1. ஆதியாகமம் 2:1-3

தம்முடைய நற்கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே தேவன் ஓய்ந்திருந்தார் என்று இப்பகுதி கூறுகிறது. மூன்றாம் வசனத்தில், தேவன் அந்நாளிலே ஓய்ந்திருந்தபடியால் அந்நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார் என்று வாசிக்கிறோம். இவ்வாறாக தேவன் படைப்பில், நீங்கள் ஓய்வு நாளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கட்டளையிடாமல் தானே ஒரு உதாரணமாக இருந்து அந்நாளில் ஓய்வெடுத்து முழு மனித குலமும் அவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று வேதத்தின் மூலம் அறிவிக்கிறார்.

படைப்பில் ஏற்படுத்தப்பட்ட (Creation Ordinances) மூன்று காரியங்களாக தொழில், திருமணம், ஓய்வு நாள் ஆகியவை அமைந்துள்ளன. இம்மூன்றும் கிறிஸ்தவர்கள், கிறிஸ்தவர் அல்லாதவர்கள் என்ற வேறுபாடின்றி முழு மனித வர்க்கமுமே கடைப்பிடிக்கும்படியாகப் படைப்பின் தேவனால் கொடுக்கப்பட்டுள்ளன.

கர்த்தர் ஓய்வெடுக்க வேண்டிய அவசியம் எதுவுமே இல்லை. ஆனால் அவ்வாறு நாம் ஓய்வெடுக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துமுகமாக தானே ஓய்வெடுத்து நமக்கு முன்னுதாரணமாக இருந்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் கர்த்தர் அந்நாளை ஆசீர்வதித்து, பரிசுத்தமாக்கினார் என்று வாசிக்கிறோம். கர்த்தர் இப்படிச் செய்ததன் மூலமாக அந்நாளின் அவசியத்தையும் பெருமையையும் நமக்கு சுட்டிக்காட்டுகிறார். அந்நாளை ஏனைய நாட்களில் இருந்து பிரித்துப் பரிசுத்தப்படுத்தியது எதற்காக? எல்லா நாட்களுமே நல்ல நாட்களாகவும், அவசியமானவையாகவும் இருந்தபோதும் ஏழாம் நாள் இன்னொரு விதத்தில் முக்கிய நாளாக இருக்கிறது ஏனெனில், அதை மக்களுடைய ஓய்வு நாளாக மாற்றியிருக்கிறேன் என்பதை உணர்த்துவதற்காக கர்த்தர் இப்படிச் செய்தார். தானே அந்நாளில் ஓய்வெடுத்துக் காட்டியதன் மூலம் கர்த்தர் அந்நாளை எந்தவிதத்தில் மதிக்கிறார், நாம் அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் என்பதை தெளிவாக உணர்த்துகிறார்.

2. யாத்திராகமம் 20:8-11

இப்பகுதி ஆதியாகமம் 2 ஆவது அதிகாரம் அறிவித்த, கர்த்தர் ஓய்வு நாளை ஏற்படுத்திய காரியத்தை அப்படியே கூறுகிறது. 11 ஆம் வசனம் ஆதியாகமப் பகுதியை விளக்குகிறது. இலக்கணத்தின்படி இவ்வசனம் ஏற்கனவே நடந்ததை அறிவிக்கும் முறையில் எழுதப்பட்டிருப்பதை அறிந்து கொள்கிறோம் (Hebrew perfect is used here to indicate that it is a reference to creation ordinance). ஓய்ந்திருந்தார், ஆசீர்வதித்தார், பரிசுத்தமாக்கினார் ஆகிய வார்த்தைகள் ஆதியாகமப் பகுதியில் பயன்படுத்தப்பட்ட அதே வார்த்தைகள். ஆதியாகமப் பகுதியைத்தவிர வேறு எதையும் இப்பகுதி கருத்தில் கொள்ளவில்லை என்பதை இப்பகுதியின் இலக்கண அமைப்பு தெளிவாக்குகின்றது. இவ்வேதப்பகுதி படைப்பில் ஓய்வு நாள் உருவாக்கப்பட்டதை உறுதிப்படுத்துவதோடு கர்த்தர் ஏற்படுத்தித் தந்துள்ள ஓய்வு நாள் எல்லோராலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. அதுமட்டுமல்லாமல் இப்பகுதி ஏழாம் நாள் (Seventh Day) என்றால் என்ன என்றும் தெளிவாக விளக்குகின்றது. படைப்பில் கர்த்தர் ஏற்படுத்திய ஏழாம் நாளைப் பற்றித்தான் இங்கு பேசப்படுகிறது என்பதை விளக்குவதற்காக ஆதியாகமம் 2-ல் பயன்படுத்தப்பட்ட வார்த்தையையே இங்கும் பயன்படுத்தி, வாரத்தில் ஒருநாள் ஓய்வு நாளாக கருதப்பட வேண்டும் என்பதை உணர்த்துகிறது. அது மட்டுமல்லாமல் இப்பகுதியின் ஆரம்பத்தில் இவ்வேழாம் நாள் “ஓய்வு நாள்” என்றும் குறிப்பிடப்படுகின்றது. அதாவது இது தொடர்ந்தும் எக்காலத்திலும் கடைப்பிடிக்கப்பட வேண்டிய நாள் என்பதை இவ்விரண்டு வார்த்தைகளும் இப்பகுதியில் பயன்படுத்தப்பட்டுள்ள விதம் தெரிவிக்கின்றது. ஆகவே, வாரத்தில் ஒரு நாளை ஓய்வு நாளாகக் கடைப் பி‍டிக்க வேண்டும் என்று கர்த்தரால் படைப்பில் ஏற்படுத்தப்பட்ட நியதியை இப்பகுதி மேலும் உறுதிப்படுத்துகிறது.

மாற்கு 2:27

இப்பகுதி பலர் அளிக்கும் தவறான விளக்கங்களுக்கு மாறாக படைப்பில் கர்த்தரால் ஏற்படுத்தப்பட்ட ஓய்வு நாளை மேலும் உறுதிப்படுத்துகிறது. இப்பகுதி குறித்த ஐந்து உண்மைகளைக் கவனிப்போம்.

1.இப்பகுதி கர்த்தர் ஓய்வுநாளை உருவாக்கினார் என்பதை உறுதிப்படுத்துகின்றது. ஓய்வு நாள் “உண்டாக்கப்பட்டது” என்ற வார்த்தை படைப்பில் அந்நாள் உருவாக்கப்பட்டது என்பதைத் தெள்ளத் தெளிவாக விளக்குகின்றது. இவ்வார்த்தையை நாம் யோவான் 1:1-3 வரையிலுள்ள வசனங்களில் சந்திக்கிறோம். இது அங்கே படைப்பைக் குறித்து பயன்படுத்தப்பட்டள்ளது. கிரேக்கத்தில் மொழி பெயர்க்கப்பட்ட எபிரேய ‍வேதமான LXX ல் இதே வார்த்தை மனிதனின் படைப்பைக் குறித்துப் பய்னபடுத்தப்பட்டுள்ளது. ஆகவே இப்பகுதி ஆதியாகமம் 2 ஆம் அதிகாரத்தை மனத்தில் வைத்து எழுதப்பட்டது என்பது தவிர்க்க முடியாத உண்மை.

2. இப்பகுதி ஓய்வு நாளின் பயனை எடுத்துக் காட்டுவதற்காக எழுதப்பட்டது. மனுஷனுக்காக அந்நாள் உண்டாக்கப்பட்டதாக இயேசு கூறுகிறார். அவர் இப்படிக் கூறுவதற்குக் காரணமென்ன? ஆதியாகமம் 2ஆம் அதிகாரத்தில் அந்நாள் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டது என்ற வாசிக்கிறோம். அதற்குக் காரணம் அந்நாள் மனிதனுக்கு நன்மையளிக்க வேண்டுமென்பதற்காத்தான். இதை மனதில் வைத்தே இயேசு இங்கு பேசினார்.

3. இப்பகுதி ஓய்வு நாள் மனிதனுக்காக உண்டாக்கப்பட்டது என்று கூறகிறது. “மனுஷன்” என்ற இவ்வார்த்தை முழு மனித குலத்தையும் குறிக்கும் கிரேக்க வார்த்தை. இதே வார்த்தையையே ஆதியாகமத்தில் ஆதாமைக் கர்த்தர் ப‍டைத்தபோது அவனைக் குறித்துப் பயன்படுத்தினார் (ஆதி. 1:27; 2:7, 8, 15, 18 & LXX). ஆகவே இயேசு இப்பகுதியில் ஓய்வுநாள் ஆதாமுக்காக, அதாவது மனித குலத்திற்காக ஏற்படுத்தப்பட்டது என்பதைத் தெளிவாக்குகிறார்.

4. இப்பகுதியில் கிறிஸ்து “ஓய்வு நாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது. மனுஷன் ஓய்வு நாளுக்காக உண்டாக்கப்படவில்லை” என்று கூறுகிறார். இதற்குக் காரணமென்ன? இதேவகையில் பவுல் மனிதனைக் குறித்துப் பேசியிருப்பதை நாம் 1 தீமோத்தேயு 2:12, 13; 1 கொரிந்தியர் 11:8, 9 ஆகிய வேதப்பகுதிகளில் காணலாம். இப்பகுதிகளில் பவுல் பெண்ணின் மேல் ஆணுக்கு அதிகாரம் உள்ளதாகக் கூறுகிறார். ஏனெனில், படைப்பில் ஆணுக்கே எல்லா அதிகாரத்தையும் கர்த்தர் கொடுத்து ஆணுக்கு தலைமைப் பொறுப்பை வழங்கியுள்ளார். இதேவிதமாகவே இயேசு இங்கு ஓய்வு நாளுக்காக மனிதன் உண்டாக்கப்பட வில்லை, ஆனால் மனிதனுக்காக (மனிதனே படைப்பில் சிறப்பானவன்), அவனது நன்மைக்காகவே ஓய்வு நாள் உண்டாக்கப்பட்டது என்று கூறுகிறார்.

5. “மனுஷகுமாரன் ஓய்வு நா‍ளுக்கு ஆண்டவராயிருக்கிறார்” என்ற வசனம் ஓய்வு நாளைக் கர்த்தர் அழிக்க வந்தார் என்று கூறுவதாக பலர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளார்கள். ஆனால், அந்தப்பொருளில் இயேசு இங்கே பேசவில்லை. ஓய்வு நா‍ள் உட்பட அனைத்தின் தேவனாகவும், தலைவனாகவும் இயேசு இருக்கிறார் என்ற பொருளிலேயே அவர் இங்கு பேசுகிறார். இங்கே இயேசு பரிசேயர்களையும், சதுசேயர்களையும் மனதில் கொண்டு ‍அவர்களுடைய போதனைக்கு எதிராகப் பேசுவதை நாம் உணர வேண்டும். இவர்கள் ஓய்வு நாளை வேதத்திற்கு புறம்பான விதத்தில் பயன்படுத்தி வந்ததையே இயேசு இப்பகுதி மூலம் கண்டிக்கிறார். மிகச் சிறந்த வேத அறிஞரான ஜோண் மரே இவ்வசனத்தைக் குறித்து விளக்கும்போது, “ஓய்வு நாள் கிறிஸ்துவின் ஆட்சிக்குக் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. ஏனெனில் அது மனிதனுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இயேசு ஓய்வு நாளின் ஆண்டவராக இருப்பதால் அவ்வோய்வு நாளை பரிசேயர்களின் தவறான போதனைகளில் இருந்து பாதுகாத்து மனிதனுக்கு முழுமையாகப் பயன்படும்படியாகச் செய்வதே கிறிஸ்துவின் நோக்கம். கிறிஸ்து ஓய்வு நாளின் ஆண்டவராதலால் மனிதன் அதன் பயனை அடையாமல் செய்வது அவரது நோக்கமாக இருந்திருக்க முடியாது. மாறாக அந்நாளில் அத்தனைப் பயன்க‍ளையும் அவன் அடையும்படிச் செய்ய கிறிஸ்து அந்நாளின் ஆண்டவராக இருக்கிறார்.” (Collected Writings Vol.1, page 208) என்று கூறி ஜோண் மரே மிக அருமையாக இவ்வுண்மையை விளக்குகிறார்.

எபிரேயர் 4:1-11

இப்பகுதியின் நான்காம் வசனத்தில் ஆதியாகமம் 2:2 தரப்பட்டிருக்கிறது. இப்பகுதி கர்த்தர் படைப்பில் ஏற்படுத்திய ஓய்வு நாளை இனி வரப்போகும் நித்திய ஓய்வோடு ஒப்பிடுகிறது. கானான் தேச ஓய்வு வாராந்தர ஓய்வோடும், இனி வரப்போகும் நித்திய ஓய்வோடும் இப்பகுதியில் ஒப்பிடப்படுகிறது (3-5, 9, 10).

வாராந்தர ஓய்வு நாள் வரப்போகும் நித்திய ஓய்வைக் குறிப்பிட்டுக் காட்டும் அடையாளமாக இருக்கிறது (9). வரப்போகும் நித்திய ஓய்வு இங்கே இளைப்பாறுதலாக (Sabbath-rest) வர்ணிக்கப்படுகின்றது. ஆகவே, வாராந்தர இளைப்பாறுதல் வரப்போகும் நித்திய இளைப்பாறுதலுக்கு அடையாளமாக இருக்கின்றது. வாராந்தர ஓய்வு நாள் (இளைப்பாறுதல் – Rest) நித்திய ஓய்வுக்கு அடையாளமாக இருக்கிறது என்பதை எவரும் மறுக்க வேண்டிய அவசியமில்லை. வாராந்தர ஓய்வு நாளைக் கடைப்பிடிப்பதை வற்புறுத்தினால் வரப்போகும் நித்திய ஓய்வை அது சுட்டிக்காட்டுவதை மறுத்ததாகிவிடும் என்ற விளக்கம் தவறானது. படைப்பில் உண்டாக்கப்பட்ட வாராந்தர ஓய்வுநாள் வரப்போவதின் அடையாளமாகவும் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அது வரலாறு முடிவடைந்து ஆதாம் உயர்ந்த ஒரு நிலையை அடைந்து நித்திய ஓய்வை அடைவதைச் சுட்டிக் காட்டுகிறது. இப்பகுதி நித்திய ஓய்வைக் குறித்து மட்டுமே பேசுகிறது. இப்பகுதிக்கும் வாராந்தர ஓய்வு நாளைக் கடைப்பிடிக்கும் முறைக்கும் சம்பந்தமேயில்லை என்று கூறுபவர்கள் தவறிழைக்கிறார்கள். அவர்களுக்கு பழைய ஏற்பாட்டையும் புதிய ஏற்பாட்டையும் எப்படி ஒப்பிட்டுப் படிப்பது என்பது புரிவதில்லை.

படைப்பில் உண்டாக்கப்பட்ட வாராந்தர ஓய்வு நாள் அளிக்கும் போதனை என்ன?

நாம் இதுவரை பார்த்தவற்றில் இருந்து மூன்று முக்கிய காரியங்களை படிக்கிறோம்.

1. படைப்பில் உண்டாக்கப்பட்ட ஓய்வு நாள், உலகில் வாராந்தர ஓய்வு நாள் கடைப்பிடிக்கப்பட வேண்டு‍மென்பதை வலியுறுத்துகிறது.

படைப்பின் ஆரம்பத்தில் ஏற்படுத்தப்பட்ட அனைத்தும் புதிய ஏற்பாட்டு மக்கள் பொதுவாகவே கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க விதியாக இருக்கின்றன. மத்தேயு 19:4-8 வரையுள்ள வசனங்கள் இதைக் குறித்துப் போதிப்பதைக் கவனியுங்கள்.

இங்கே இயேசு விவாகரத்தைக் குறித்துப் போதிக்கும் போது, “ஆதி முதலாய் அப்படியிருக்கவில்லை என்று கூறுகிறார்”. ஆகவே, ஆதியில் அவர் ஏற்படுத்தியவை எக்காலத்துக்கும் தொடர்ந்து இவ்வுலகில் கடைப்பிடிக்கப்பட வேண்டு‍மென்பது ‍இயேசுவின் போதனை. ஆகவே,வாராந்தர ஓய்வு நாளைப் பின்பற்றக்கூடாது என்று கூறுபவர்களை நாம் இயேசு சொல்வதுபோலவே, ஆதி முதலாய் அப்படியே இருந்தது. ஆகவே, எப்போதும் அப்படிய இருக்க வேண்டும் என்று திருத்த வேண்டும். இதேபோல் தான் பவுலும், பெண்களைப்பற்றிய போதனைகளை அளிக்கும்போது படைப்பை உதாரணம் காட்டி வாதிடுகிறார் (1 கொரி. 11:7-12; 1 தீமோ. 2:13). அப்படியே இன்று நாமும் செய்ய வேண்டும். படைப்பில் உண்டாக்கப்பட்டவைகள் இன்று நாம் தொடர்ந்து கடைப்பிடிக்கத் தேவையற்றவையாக இருந்தால் இயேசுவும், பவுலும் இவ்விதமாக வாதா‍டியிருக்கமாட்டார்கள்.

2. படைப்பில் ஏற்படுத்தப்பட்டு தெய்வீக உதாரணத்துடன் அமைந்த வாராந்தர ஓய்வு நாளைக் கடைப்பிடிக்கும் முறை அதை எதிர்ப்பவர்களின் ஒரு முக்கிய வாதத்தைத் தவிடு பொடியாக்குகின்றது.

ஓய்வு நாள் இன்று இல்லை என்று வாதாடுபவர்கள், புதிய ஏற்பாட்டில் நாம் ஓய்வு நாளைப் பரிசுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற வெளிப்படையான போதனை இல்லாததால் அதைப் பின்பற்றத் தேவையில்லை என்பார்கள். இவர்களுக்கு நாம் எத்தகைய பதிலை அளிப்பது?

கிறிஸ்தவ ஓய்வு நாளை நாம் பின்பற்ற புதிய ஏற்பாட்டில் வெளிப்படையான போதனை இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதுதான் இவர்களுக்கு நாமளிக்க வேண்டிய சரியான பதில். கர்த்த‍ரே படைப்பில் ஓய்வு நாளை, வெளிப்படையான விளக்கம் எதுவும் அளிக்காமல், தானே உதாரணமாக இருந்து ஏற்படுத்தியிருக்கும்போது, அவர் கிறிஸ்தவ ஓய்வு நாளை வெளிப்படையான போதனைகள் எதையும் தராமல் தனது உதாரணத்தின் மூலம் மட்டும் ஏற்படுத்த ஏன் முடியாது? நாம் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க விதிகளை எப்படி ஏற்படுத்த வேண்டும் என்று கர்த்தரைக் கேள்வி கேட்க நாம் யார்? அதற்கு நமக்கென்ன அதிகாரம் இருக்கிறது? நாம் பின்பற்ற வேண்டிய கடமைகள், ஒழுக்க விதிகள் எல்லாம் வெளிப்படையான போதனைகள் மூலம் அளிக்கப்பட வேண்டும் என்று கூறுவது முழுத்தவறு. ஆதியாகமத்தில் ஒருவன் ஒரே மனைவியை மட்டும் கொண்டிருக்க வேண்டும் என்று ‍வெளிப்படையான போதனையா கொடுக்கப்பட்டிருக்கிறது? அப்போதனையை இயேசு பழைய ஏற்பாட்டில் உதாரணத்தின் மூலம் மட்டுமே கொடுக்கப்பட்டிருப்பதாக எடுத்துக் கொள்கிறார். பெண்கள், ஆண்களுக்கு அடங்கி நடந்து கொள்ள வேண்டும் என்று ஆதியாகமம் 2ல் எங்கே வெளிப்படையான கட்டளை மூலம் போதிக்கப்பட்டிருக்கிறது? ஆனால், பவுல் அதை நாம் என்றும் பின்பற்ற வேண்டிய கடமையாகத்தான் கருதி விளக்குகிறார்.

3. படைப்பில் ஏற்படுத்தப்பட்ட வாராந்தர ஓய்வு நாள் அடையாளமாகப் போதிக்கும் உண்மைகள் கிறிஸ்துவின் வருகையோடு அந்நாள் புதிய ஏற்பாட்டில் வாரத்தின் முதல் நாளாக மாறுவதை அனுமதிக்கின்றது. வரலாற்றின் முடிவில் மனித குலம் இறுதியாக நித்திய ஓய்வை அடைவதற்காகவே உருவாக்கப்பட்டது. படைப்பின் இந்த இலக்கு ஆதாமின் பாவத்தால் தடைப்பட்டது. கிறிஸ்து தனது மீட்பின் செயலினால் படைப்பைப் புதுப்பித்து மீட்கிறார். அவர் படைப்பை அதன் ஆரம்ப நிலைக்குக் கொண்டு வருகிறார். அவரது மீட்புப்பணி கல்வாரியில் நிறைவேற்றப்பட்டாலும் அது உலக முடிவை எதிர் நோக்கிக் காத்திருக்கிறது (ரோமர் 8). ஆகவே, வாராந்தர (ஏழாம் நாள்) ஓய்வு நாள் புதிய ஏற்பாட்டில் கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளை அடிப்படையாகக் கொண்டு வாரத்தின் முதல் நாளாக மாறியது பொருத்தமானது. பழைய ஏற்பாட்டில் கர்த்தர் வாக்குத்தத்தம் மூலம் நமக்குத் தந்த நித்திய ஓய்வு கிறிஸ்துவின் மூலம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டள்ளது. ஆகவே, வாராந்தர ஓய்வு நாளும் முறையாகவே மாற்றம் பெற்றது. அது இன்று நமது வாரத்தை முடித்து வைக்காமல் ஆரம்பித்து வைப்பதாக இருக்கின்றது. ஓய்வை அடைவதற்காக நாம் இன்று உழைப்பதில்லை. கிறிஸ்துவால் பெற்றுத் தரப்பட்டுள்ள ஓய்வின் அ‍டிப்படையில் இப்போது நாம் உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

(வளரும்)

“ஓய்வு நாளைப் பரிசுத்தமாக ஆசரிக்க நினைப்பாயாக” (யாத்திராகமம் 20:8)

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s