மூன்றாம் மிலேனியத்தில் காலடி எடுத்து வைத்திருக்கிறோம். இரண்டாயிரம் வருடங்கள் உருண்டோடிவிட்டன. கிறிஸ்து இவ்வுலகுக்கு வந்து தனது சபையைக் கட்டி எழுப்பி இரண்டு மிலேனியங்கள் கடந்துவிட்டன. இத்தனைக் காலங்களிலும் கிறிஸ்துவின் சபை கத்தோலிக்க மதத்தின் கடுந்தாக்குதலையும் பல்வேறு போலிப்போதனைகளையும் சந்தித்து வெற்றிகரமாக அவற்றை முறியடித்து தொடர்ந்தும் தலை நிமிர்ந்து வருகின்றது. கர்த்தரின் அருளால் பல எழுப்புதல்களையும் கிறிஸ்துவின் சபை வரலாற்றில் சந்தித்துள்ளது. மார்டின் லூதர், ஜோண் கல்வின் போன்றோர் மட்டுமன்றி ஜோர்ஜ் விட்பீல்ட், ஜொனத்தன் எட்வர்ட்ஸ், ஸ்பர்ஜன் போன்றோரையும் கொண்டு தன்னை அலங்கரித்துக் கொண்டது கிறிஸ்துவின் சபை. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சபை சந்தித்த இடர்பாடுகளில் இரண்டாக சார்ள்ஸ் பினியின் அர்ப்பண அழைப்பு முறையையும், கெரிஸ்மெட்டிக் இயக்கத்தையும் கருதலாம். இரண்டுமே போலித்தனமான ஆத்மீக உணர்வலைகளைக் கொண்ட ஒரு கூட்டத்தை திருச்சபைக்கு அறிமுகப்படுத்தின. இவற்றின் பாதிப்பு இன்றும் சபையை விட்டபாடில்லை.
மூன்றாம் மிலேனியத்தில் காலடி எடுத்து வைத்திருக்கும் நாம் இன்று ஒரு பழைய எதிரியை அடையாளம் கண்டு விழிப்போடு இருக்க வேண்டிய நிலையில் உள்ளோம். பன்னிரண்டு நூற்றாண்டுகளாக கிறிஸ்தவத்தைத் தொலைப்பதையே தனது இலட்சியமாகக் கொண்டிருந்த ரோமன் கத்தோலிக்க சபையே அவ்வெதிரி. போப்பரசர் ஜோண் போல் பலவிதங்களில் கிறிஸ்தவ சபையின் மீது தமது ஆதிக்கத்தைச் செலுத்த அமைதியான பல நடவடிக்கைகளைக் கடந்த காலங்களில் எடுத்து வந்துள்ளார். இங்கிலாந்தின் ஆங்கிலேய திருச்சபை (Church of England) பல காலங்களாகவே கத்தோலிக்க மதத்தோடு நெருக்கமாக உறவாடி வந்துள்ளதோடு, அதோடு இணையத் துடியாய்த் துடித்துக் கொண்டிருப்பதையும் அதன் செயல்கள் படம்பிடித்துக் காட்டுகின்றன. கத்தோலிக்க மதத்தின் ஆதிக்கத்தால் கிறிஸ்துவின் திருச்சபை பட்டபாடுகளையும், கொடுமைகளையும் இன்று பலரும் மறந்துவிட்டிருப்பது மட்டுமன்றி வரும் ஆபத்தையும் உணராமல் கத்தோலிக்கத்தோடு உறவாட ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக தமிழ்க் கிறிஸ்தவ உலகில் கத்தோலிக்க மதத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும், தமிழ் சுவிசேஷ கிறிஸ்தவம் ஆபத்தறியாது அதோடு கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடிக் கொண்டிருப்பதாலும் இவ்விதழில் கத்தோலிக்க மதத்தின் போதனைகளை பலருக்கும் உதவுமுகமாக ஆராய்ந்தளித்துள்ளோம்.
முகத்தாட்சண்யம் பார்த்து எல்லோருக்கும் ஆமாம் சாமி போடும் கூட்டம் தமிழ் கிறிஸ்தவர்களின் மத்தியில் இன்று அதிகம். மொரிஸ் ரொபட்ஸ் அவர்களின் தலைப்புக் கட்டுரை மரத்துப்போன இதயங்களை வெட்டிப் பிளந்து சத்தியத்திற்காக சுத்தமாகப் பேசும் வைராக்கியத்தை ஏற்படுத்தட்டும். கள்ளப் போதகர்களுக்கு விருந்து வைப்பவர்களின் கழுத்துக்கு இக்கட்டுரை ஒரு நல்ல பட்டாக்கத்தி.
– ஆசிரியர்