“ரெட் டுளிப்”

தமிழ் நாட்டில் சென்னையில் இருந்து நான்கு பக்கங்களைக் கொண்டு வெளிவரும் ஒரு பத்திரிகை “ரெட் டுளிப்” (Red Tulip). இது பற்றி நமது பத்திரிகையில் எழுத வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் “டுளிப்” என்ற பெயரில் வெளி வந்த இப்பத்திரிகை பின்பு “ரெட் டுளிப்” என்ற பெயரில் வெளிவரத் தொடங்கியது. இப்பத்திரிகையின் சில போதனைகள் பற்றி ஆசிரியரின் கவனத்திற்கு சில வருடங்களுக்கு முன்பே கொண்டு வரப்பட்டது. ஆனால், பத்திரிகை கையில் கிடைக்காததால் அதுபற்றி அறிந்து கொள்ளவோ எழுதவோ முடியவில்லை. இப்பத்திரிகையின் பல பிரதிகள் வாசகர்கள் மூலம் இப்போது கிடைத்திருப்பதனாலும், அதில் வரும் கட்டுரைகளை வாசிக்க முடிந்ததனாலும் இது பற்றி எழுத முடிகிறது.

சத்தியத்தை சத்தியமாக விளக்கும் ஆக்கங்களைப் பாராட்டி வரவேற்பது அவசியம். ‍அதேவேளை சத்தியத்திற்கு மாறான கருத்துக்களை திருத்த வேண்டியதும் நமது கடமை. முகத்தாட்சண்யம் பார்த்து வேத விரோதக் கொள்கைகளையும், செயல்களையும் திருத்த மறுப்பது நமது மக்கள் மத்தியில் காணப்படும் தவறான வழக்கம். பண்பாடு என்ற பெயரில் இப்பாவத்தைச் செய்து வருகிறோம். ஆத்துமாக்களின் ஆத்மீக வாழ்க்கைக்கு பங்கமேற்படுத்தும் போதனைகளை நாம் எப்போதும் அடையாளம் கண்டு தவிர்த்துக் கொள்ள வேண்டும். அவற்றைப் போதிப்பவர்களைத் திருச்சபைகள் ஆதரிக்கக்கூடாது.

“டுளிப்” என்ற பத்திரிகையின் பெயர் கிருபையின் போதனைகளின் ஐங்கோட்பாடுகளின் ஆங்கிலத் தலைப்புகளின் ஆரம்ப எழுத்துக்களாகும் (Tulip). அது ஏன் “ரெட் டுளிப்” என்ற அழைக்கப்படுகிறது என்பது தெரியவில்லை. கிருபையின் போதனைகளைக் குறிக்கும் தலைப்புக் கொண்டுள்ள ஒரு பத்திரிகை அது பற்றி விளக்கும் பத்திரிகையாக இருக்கும் என்ற எண்ணத்தில் என் கையில் கிடைத்த பல பிரதிகளை திறந்தமனத்தோடும், ஆர்வத்தோடும் வாசித்துப் பார்த்தபோது பெரும் ஏமாற்றமே காத்திருந்தது. ஏமாற்றமாக மட்டும் இருந்திருந்தால் அது இன்று வெளிவரும் அநேக பத்திரிகைகளுக்கும் பொருந்தும் என்று சும்மா இருந்திருக்கலாம். ஆனால், ஏமாற்றத்தைத் தவிர, ஆபத்தான் பல போதனைகளையும் அதில் அடையாளம் காணமுடிந்ததால் ஆத்துமாக்களை எச்சரிக்க வேண்டிய ஒரு அக்கறையுடன் இதை எழுத வேண்டியுள்ளது.

கற்பனையான வேத விளக்கங்கள்

என் கையில் கி‍டைத்த இதழ்கள் 1995 – 2000 ஆண்டுகள் வரையிலானவை. இவற்றில் சில இதழ்களை வாசித்தபோதே பத்திரிகையின் போக்கு தெளிவாகப் புலப்படத் தொடங்கியது. நான் வாசித்த இதழ்களில் அளிக்கப்பட்டிருந்த பல வேத விளக்கங்கள் கேள்விக்குரியதாகவும், சில வரம்பை மீறியதாகவும் இருந்தன. உதாரணத்திற்கு, யூதாஸ் இயேசுவைக் காட்டிக் கொடுத்ததைப்பற்றிய (ஏப்ரல் 1995) விளக்கம் – கல்வாரியில் சிலுவையில் இறப்பதற்கு முன்பு இயேசு கெத்சமனே தோட்டத்திலும், ஏனைய இடங்களிலும் அதிக இரத்தத்தைச் சிந்த நேரிட்டதால் அவரது முகம் இரத்தத்தால் தோய்ந்து அடையாளம் காண முடியாதபடி இருந்ததால்தான் சேனைகளாலும், யூதாஸாலும் அவரை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை என்ற விளக்கம் வெறும் ஊகம் மட்டுமே. இது வேதம் போதிக்கும் உண்மையல்ல. சுவிசேஷப் புத்தகங்களில் யோவான் ‍இதைக்குறித்து எழுதுகிறார் (யோவான் 18:1-9). அன்று யூதாஸோடு யூதர்கள், ரோம சேனாதிபதிகள், போர்வீரர்கள் என்று அநேகர் (a great multitude) ஒரு மனிதனைப் பிடிப்பதற்காக வந்திருந்தனர். அது இரவு நேரம். ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க முடியாத கும்மிருட்டு. கையில் வைத்திருக்கும் தீவட்டிகளின் ஒளியில் மட்டுமே அவ்விருட்டில் ஒருவரை அடையாளம் கண்டு ‍கொள்ள வேண்டியிருந்தது. போர்வீரர்களால் இயேசுவை அடையாளம் கண்டு கொள்ள முடியாமல் போனதில் எந்தவித ஆச்சரியமுமில்லை. யூதாஸுக்கு இங்கு எந்தக் குழப்பமுமில்லை. அவனுக்கு இயேசு யார் என்று நன்றாகவே தெரிந்திருந்தது. அவன் இயேசுவை முத்தமிட்டுக் காட்டிக்கொடுத்ததாக மத்தேயு, மாற்கு, லூக்கா அனைவருமே தெரிவிக்கின்றனர். யோவான் இங்கு அதைக் குறிப்பிடாவிட்டாலும் யூதாஸ் அக்கூட்டத்தில் இருந்ததை சுட்டிக்காட்டத் தவறவில்லை. ஆகவே, அத்தனை பெரிய கூட்டத்தில் இயேசு தன்னைத் தேடி வந்தவர்களைப் பார்த்து யாரைத் தேடுகிறீர்கள் என்று தானே முன்வந்து கேட்டதில் எந்தப் புதுமையும் இல்லை. இதுவே இப்பகுதிக்கான சாதாரணமான விளக்கம். இதற்கு வேறு பொருள் கொடுக்க முயல்வது அநாவசியம். வேதத்தை சரியாகப் ப‍டித்துப் புரிந்து கொள்ள நாம் முதலில் எதையும் ஊகிக்கும் வழக்கத்‍தையும் கற்பனை செய்வதையும் கைவிட வேண்டும்.

இன்னுமொரு உதாரணம் – இயேசு, “என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்” என்று கெத்சமனே தோட்டத்தில் பிதாவை நோக்கிச் சொன்ன வார்த்தைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள விளக்கம் புதுமையானது (என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்? – ஏப்ரல் 1995). இது பற்றி விளக்கும் ஆசிரியர், திருச்சபையைத் தேவன் பாவம் செய்ததால் கைவிட்டதாகவும், குமாரனான இயேசு திருச்சபையின் தலையாக இருந்ததால் தனது சரீரமாகிய சபை கைவிடப்பட்டதைத் தனக்கே நேர்ந்ததாகக்கொள்ள நேர்ந்தது என்றும் எழுதியுள்ளார். இயேசு “தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்” என்று ‍கேட்டதன் மூலம் மரித்துப்போன தனது சரீரமாகிய சபையை உயிர்ப்பிக்கும்படி பிதாவை நோக்கிக் கதறுவதாக விளக்கமளித்துள்ளார் ஆசிரியர். இத்தகைய விளக்கங்கள் உண்மையில் மிகவும் கவர்ச்சிகரமாக அமைந்திருந்தாலும் வேதம் போதிக்கும் கிறிஸ்து பற்றிய இறையியலுடன் எந்தவிதத் தொடர்புமில்லாமல் காணப்படுகின்றது. இயேசு “தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்” என்று கேட்டதற்குக் காரணம் தான் சுமக்கப்போகும் தேவகோபத்தின் வன்மையையும், தனது மக்களின் பாவங்களையும் பூரணமாக உணர்ந்ததால்தான். பாவமேயில்லாத நம் ஆண்டவர் தமது மக்களுக்காக ஏற்கப்போகும் தண்டனையின் கோரம் அவரை அப்படிப் பேசச் செய்தது. நடக்கப்போகும் அச்சம்பவத்தால் தம் பிதாவிடமிருந்து தாம் பிரிக்கப்படப்போவதை இயேசு உணர்ந்து கதறினார். இதுவே உண்மை. பாவம் இவ்விதத்தில்தான் இன்று மனிதனைக் கர்த்தரிடமிருந்து பிரித்து வைத்திருக்கிறது. இப்பகுதிக்கு இப்பத்திரிகை ஆசிரியர் அளித்துள்ள விளக்கம் வெறும் கற்பனையே.

இவற்றைவிடவும் மோசமானது பரிசுத்த ஆவி பற்றி ஆசிரியர் அளித்துள்ள விளக்கம் (ஜனவரி 2000). இவ்விதழில் பரிசுத்த ஆவி, பரிசுத்த ஆவியானவர் என்ற பதங்கள் ஒருவரைக்குறிக்கும் வார்த்தைகளல்ல; “பரிசுத்த ஆவி” என்ற பதம் ஒரு ஆத்துமாவின் பரிசுத்தமான ஆவியையும், “பரிசுத்த ஆவியானவர்” என்பது திரித்துவக் கடவுளின் மூன்றாம் நபரைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று தவறான ஒரு விளக்கத்தைத் தந்துள்ளார். புதிய ஏற்பாட்டின் மூலமொழியான கிரேக்கத்தில் இவ்விதமாக பிரித்துக் காட்டப்படவில்லை. ஆங்கில மொழி பெயர்ப்பிலும் இவ்வாறு பிரிக்கப்படவில்லை. தமிழ் வேதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள இவ்விரு வார்த்தைப் பிரயோகங்களும் ஒருவரையே (பரிசுத்த ஆவியானவர்) குறிப்பதாகக் கொள்ள வேண்டும். (“பரிசுத்த ஆவியானவர்” என்ற எச். ஜே. ஆப்பில்பீயின் சிறு நூலை வாங்கி வாசிக்கவும்). அதைவிட நமக்கு “பரிசுத்தமான ஆவி” இருப்பதாக வேதம் எங்குமே போதிக்கவில்லை. தமிழில் பரிசுத்த ஆவியானவர் என்று மரியாதைக்காக நாம் எழுதுவது போல் எல்லா மொழிகளிலும் காணப்படுவதில்லை. ஆங்கிலத்தில் “அவன்” என்று சொல்லவும், “அவர்” என்று சொல்லவும் ஒரே வார்த்தையே பயன்படுத்தப்படுகின்றது. அதை அறியாமல் நாம் புதிது புதிதாக விளக்கங்களைக் கொடுக்க ஆரம்பிக்கக்கூடாது. இப்படிச் செய்தால் வேதத்திற்கு எதிரான தவறான விளக்கத்தையே நாம் கொடுக்க நேரிடும்.

இதே ஆக்கத்தில் “மனிதன் ஆவி, ஆன்மா, சரீரம் ஆகிய கூறுகளையும் நான்காம் நிலையாக உயிரையும் கொண்டிருக்கிறான்” என்று ஆசிரியர் எழுதியுள்ளார். இதற்கு என்னென்னவோ புதுமையான விளக்கங்களையெல்லாம் கொடுத்துள்ளார். வேதம் ஆவி (Spirit), ஆன்மா (Soul), சரீரம் (Body) ஆகிய வார்த்தைகளைப் பயன்படுத்தினாலும் ஆவி, ஆன்மா என்ற பதங்களை ஒரே பொருளைக் குறிக்க‍வே பயன்படுகிறது. மனிதனில் ஆவியும், ஆன்மாவும் ஒன்றே. உயிர் என்ற தமிழ் வார்த்தையையும் ஆவி, ஆன்மாவைக் குறிக்கவே பயன்படுத்த வேண்டும். மனிதன் மூன்று கூறுகள் கொண்டவனோ அல்லது நான்கு கூறுகளை கொண்டவனோ அல்ல; இரு கூறுகளை அதாவது ஆவியையும் (ஆன்மா), சரீரத்தையும் மட்டுமே ‍கொண்டிருக்கிறான். சீர்திருத்த இறையியலாளர்கள் எப்போதுமே இவ்விதமாகத்தான் விளக்கமளித்து வந்துள்ளார்கள் (Dichotomy). விசுவாச அறிக்கையும் இதையே போதிக்கின்றது. இப்போதனைக்கு முரணாக மனிதனின் மூன்று கூறுகள் காணப்படுகின்றன என்று‍ போதிப்பவர்களை Trichotomist என்று அழைப்பர். இவர்கள் எபிரேயர் 4:12ஐத் தமது போதனைக்கு ஆதரவாகப் பயன்படுத்துவர். ஆனால், அவ்வசனம், வேதவசனங்கள் மனிதனை மிக ஆழமாக ஊடுருவி அவனது இருதயத்தில் காணப்படும் அனைத்தையும் ஒன்றுவிடாமல் சோதித்தறிகின்றது என்பதை வலியுறுத்திப் போதிக்கவே ஆவி, ஆன்மா என்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளனவே தவிர ஆவி, ஆன்மா என்று இரண்டு பிரிவுகள் மனிதனில் காணப்படவில்லை. தமிழில் எழுதும்போதுகூட நாம் ஒரே பொருளைக் குறிக்கும் இரு வார்த்தைகளை சொல்ல வந்த விசயத்தை வலியுறுத்திச் சொல்வதற்காகப் பயன்படுத்துவதில்லையா? இதே வகையில்தான் எபிரேயர் 4:12 அமைந்திருக்கின்றது. மனிதனில் மூன்று கூறுகள் காணப்படுகின்றன என்ற வேதவிரோதமான போதனையே பின்பு கிறிஸ்துவைக் குறித்தும் விசுவாசிகளின் பரிசுத்த வாழ்க்கையைக் குறித்ததுமான தவறான போதனைகளுக்கு வழி வகுத்தது.

இத்தகைய முரண்பாடான வேதவிளக்கங்களைத்தவிர இப்பத்திரிகையின் போக்கில் நாம் மிகவும் ஆபத்தானதாகக் கருதும் இரண்டு அம்சங்களை விளக்க வேண்டியது அவசியமாகிறது. முதலாவது, இந்திய வேதங்கள், சாஸ்திரங்கள் மூலம் சுவிசேஷ விளக்கமளிக்க முயலும் இதன் முயற்சி. கிருபையின் போதனைகளையும் இப்பத்திரிகை ஆசிரியர் இந்திய சாஸ்திரங்களில் காண முயல்கிறார். இரண்டாவதாக, கிருபையின் போதனைகளை தேவைக்கு மேல் பெரிது படுத்தி அதைப் போதிப்பதற்காக மட்டுமே வேதம் இருப்பதுபோல் காட்டும் முயற்சி, இவை இரண்டையும் வாசகர்கள் நன்மை கருதி நாம் சிறிது விளக்கத்தான் வேண்டும்.

இந்திய வேதங்களில் இயேசு!

95, 96 ஆகிய ஆண்டுகளில் ரெட் டுளிப், அறியப்படாத தேவன் என்ற தலைப்பில் சில ஆக்கங்களை வெளியிட்டது. இக்கட்டுரைகளின் மூலம் சுவிசேஷத்தை இந்திய வேதங்களிலும், சமயங்களிலும் காண முயன்றுள்ளார் ஆசிரியர். இப்பணியை ஆரம்பித்து வைத்த பெருமை மு. தெய்வநாயகத்திற்கு உரியது என்று கூறும் ஆசிரியர் தனது சிறு வயது முதல் அநேக சபைப் பெரியவர்கள் சுவிசேஷ ஊழியங்களிலும், சபையில் பிரசங்கிக்கும் போதும் சித்தர் பாடல்கள், திருக்குறள் ஆகியவற்றில் இருந்து பவுலடியார் பாணியில் பிரசங்கிப்பதைக் கேட்டுள்ளதாகக் கூறுகிறார். மு. தெய்வநாயகத்தோடு அதிக நெருக்கமுள்ளதாகக் கூறும் ஆசிரியர், “அவரது இலக்கிய ஆய்வுகளில் இருந்து அடியேன் பெற்றவற்றைக் கொண்டு பவுலடியின் பாணியில் இந்திய மக்களைச் சந்தித்து வருகிறேன்” என்று கூறுகிறார். “இதுவரை இதை எதிர்த்துப் பேசியவர்கள் எவரும் இல்லையென்றும், இந்திய இதிகாசத்தில் விஞ்சி நிற்பது கிறிஸ்துவின் நற்செய்தியே என்று ஒப்புக் கொள்பவர்களே அதிகம்” என்றும் கூறுகிறார். இதன்படி திருக்குறள் மற்றும் இந்திய வேதங்கள், சித்தர் பாடல்களைப் பயன்படுத்தி வில்லுப்பாட்டின் மூலம் சுவிசேஷம் சொல்லி வருகிறார் ஆசிரியர்.

மு. தெய்வநாயகம் மற்றும் சாது செல்லப்பா போன்றோரின் போதனைகள் குறித்து இந்திய வேதங்களில் இயேசுவா? என்ற நூலின் மூலம் நாம் விளக்கமளித்துள்ளோம். (இந்நூல் தேவையானவர்கள் எமக்கு எழுதிப் பெற்றுக் கொள்ளலாம்). இதுபற்றி மேலும் விளக்கமாக எழுத வேண்டிய அவசியம் இல்லை. கிறிஸ்தவ வேதம் போதிக்கும் சுவிசேஷத்தை உலகின் வேறு எந்த நூலிலிருந்தும் பெற முடியாது, கிறிஸ்தவ வேதத்தின் மூலம் மட்டுமே கிறிஸ்து வெளிப்படுத்தப்படுகிறார். இதற்கு மாறான எந்தப் போதனையும் கிறிஸ்தவ வேதத்தோடு சம்பந்தமில்லாத போதனையாகும். இந்திய வேத சாஸ்திரங்கள், திருக்குறள், சித்தர் பாடல்களில் நேரத்தைப் போக்கி இயேசுவைத் தேட முயல்வது மணல் சோற்றில் கல் ஆய்வது போன்றதாகும். வேதம் மட்டுமே என்ற வேத போதனையை ஏற்க மறுப்பவர்களுக்கு கிறிஸ்துவோடு எந்தத் தொடர்புமிருக்க முடியாது.

கல்வினும், திருக்குறளும்

இந்திய தத்துவ ஞானங்களோடு கிருபையின் போதனைகளையும், கல்வினுடைய கோட்பாடுகளையும் ஒப்பிட்டுப் பேசலாமா? (பிப்ரவரி 96) இதைச் செய்யுமுன் ஓர் உண்மையைப் பு‍ரிந்து கொள்ள வேண்டும். இந்திய தத்துவ ஞானங்கள் சத்தியமல்ல. அவை மனிதனுடைய கற்பனையில் உருவான மாயப் போதனைகள். அவற்றில் சத்தியத்திற்கு இடமிருந்தால் இன்று நமக்கு வேதம் தேவைப்பட்டிருக்காது. பிரம்ம சூத்திரம் என்பது பிரமன் எத்தனை ‍பொய்யான மனிதனோ அத்தனை பொய்யானது. ஆகவே, இச்சூத்திரங்களுக்கும் சத்தியமான வேதத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. வடக்கு தெற்கைவிட எத்தனை தொலைவில் இருக்கிறதோ அத்தனை இடைவெளி இவ்விரண்டிற்கும் இடையில் காணப்படுகின்றது. இவற்றிற்கு முடிச்சுப் போட்டுப் பார்க்க முயல்வது வீண் செயல். சத்தியத்திற்கும் பொய்க்கும் எப்படி உறவிருக்க முடியும்? வேதத்தில் நமக்கு அறவே நம்பிக்கை இல்லாமல் போனாலொழிய இப்படிப் புறமதங்களிலிருந்தும், புறமத இலக்கியங்களிலிருந்தும் வேத சத்தியங்களுக்கும், கல்வினின் ஐங்கோட்பாடுகளுக்கும் விளக்கங் கொடுக்க முயலமாட்டோம்.

ஜுன் 96 இதழில் திருக்குறளில் கல்வினிசத்தைக் காண முயன்றிருக்கிறார் ஆசிரியர். இங்கு அவர் ஒரு குறளுக்கு தரும் விளக்கத்தில் இரமாயணத்தையும் நுழைத்து ஆன்ம ஈடேற்றத்திற்கு விளக்கமளிக்க முனைந்துள்ளார். இவ்வாறாக கல்வினிசத்திற்கு விளக்கமளிக்க முனைவது அதை மேலும் குழப்பி இல்லாத ஒரு தத்துவஞானமாக மாற்றிவிடும். திருக்குறளிலும், இராமாயணத்திலும் இருந்து கிறிஸ்தவ வேத போதனைகளுக்கு விளக்கமளிக்க முயலும் முயற்சிகளை நாம் ஏற்கனவே திருமறைத்தீபம் மூலமாகக் கண்டித்துள்ளோம். இன்று ஆத்துமாக்களுக்குத் தேவையானது வேதத்தில் இருந்து வேதத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு கொடுக்கப்படும் தெளிவான பிரசங்கம்; இதிகாசமோ, கதையோ, கற்பனையோ அல்ல.

அடுத்ததாக, இப்பத்திரிகை போதிக்க முயலும் கிருபையின் போதனைகளைப் பார்ப்போம். கல்வினுக்கும், ஓவனுக்கும் மதிப்பளித்து அவர்கள் போதனைகளை விளக்க முயல்வது பாராட்ட வேண்டிய ஒரு செயல். ஆனால், இப்போதனைகளை விளக்கமுயலுமுன் அவற்றை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அவை, வேதம் போதிக்கும் போதனைகள். இரட்சிப்பு மனிதனுடைய கிரியைகளினால் ஏற்படுவதல்ல; இறை ஆண்மையுள்ள கர்த்தர் தனது மகா இரக்கத்தின் காரணமாக மனிதனுக்குப் போடும் பிச்சை என்பதே கிருபையின் போதனைகளின் அடிப்படை வாதம் (எபேசியர் 2:8-10). இன்று சுவிசேஷ ஊழியங்கள் அனைத்தும் இப்போதனைகளுக்கு முரணாக நடந்து வருவது நாமறிந்த உண்மையே. இப்போதனை மிக சத்தியமானதும் அவசியமானதுமாக இருந்தபோதும் வேதம் இதை மட்டுமே போதிப்பதாக எண்ணிவிடக்கூடாது. கிறிஸ்தவத்தின் அடிப்படையான இப்போதனைகள் மகா சமுத்திரம் போல் விரிந்தும் ஆழமாகவும் காணப்படும் வேதத்தின் ஒரு பகுதி மட்டுமே. இப்போதனைகளை மட்டுமே வைத்துக் காலம் தள்ளி விட முடியாது. இப்போதனைகளை மட்டும் விசுவாசிப்பதால் ஒருவர் சீர்திருத்தக் கோட்பாடுகளை முழுமையாக அறிந்து கொண்டவராகவோ அவற்றை விசுவாசிப்பவராகவோ கருத முடியாது. ஆகவே, கல்வின் கிருபையின் போதனைகளை மட்டுமே போதித்தார் என்பது போன்ற ஒரு தோற்றத்தை நாம் ஏற்படுத்தக்கூடாது. அது கல்வினுக்கு நாம் செய்யும் மரியாதையாக இருக்காது. கல்வின் எழுதிய கிறிஸ்தவ வேதபோதனைகள் (The Institute of Christian Religion) என்ற நூலை ஆங்கிலத்தில் வாசித்துப் பார்ப்பவர்களுக்கு இது புரியும். (இது பற்றிமேலும் விளக்கமாக இவ்விதழில் “கல்வினின் ஐங்கோட்பாடுகளும், சீர்திருத்தவாதமும்” என்ற ஆக்கத்தில் விளக்கியுள்ளோம்).

இன்று ஆத்துமாக்கள் அறியத் துடிப்பது கர்த்த‍ராகிய இயேசு கிறிஸ்துவையே. வேதம் போதிக்கும் கிறிஸ்து யார்? என்பதை அறியாத மக்களாக இன்று நம் மக்கள் இருக்கிறார்கள். மத்தேயு 28:18-20 வரையுள்ள பகுதிகளில் கிறிஸ்து போதிக்கும்படி கட்டளையிட்ட எல்லா உபதேசங்களையும் நமது மக்கள் அறிய வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு வேதம் போதிக்கும் சபையோ, சபை வாழ்க்கையோ தெரியாத புதிராக இருக்கின்றது. “கூடில்லாக் குருவிகளாக” அறியாமையால் சுயாதீன ஊழியங்களை ஏற்படுத்தி எதை எதையோ செய்து கொண்டிருக்கும் அவர்களுக்கு கல்வின் போதித்த கட்டுப்பாடுடன் அமைந்த சபைத் தத்துவம் தேவையாக இருக்கிறது. கல்வின் தன்னைக் கட்டுப்பாட்டுடன் உட்படுத்திக் கொண்ட சபைக்கு அவர்களும் தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது. மொத்தத்தில் புரியாத புதிர்போல் அவர்களுக்குக் காட்சியளிக்கும் வேதம் முழுவதும் உள்ளது உள்ளபடி போதிக்கப்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. அதில் ஒரு பகுதி மட்டுமே கல்வினிசம். வேதம் மட்டுமே சர்வ அதிகாரம் கொண்டது, வேதம் மட்டுமே போதுமானது என்று நாம் நம்புவோமானால் கல்வினுடைய ஐங்கோட்பாடுகளை மட்டும் போதிப்பதில் நாம் சாம்பியன்களாக இருக்க முயல மாட்டோம். அதுவும் ஐங்கோட்பாடுகளை இந்திய சித்தாந்தங்களின் மூலம் விளக்க முனைவது கல்வினை அவமதித்து வேதத்தை நிராகரிப்பதற்கு ஒப்பானதாகும்.

தவறான போதனைகள் அவை எங்கிருந்து வந்தாலும் ஆத்துமாக்கள் அவற்றிற்கு இடம் கொடுக்கலாகாது. ஆத்துமாக்கள் சத்தியத்தில் மட்டுமே வளர வேண்டும். சத்தியத்தை எவரும் அரைகுறையாக போதிக்கக்கூடாது. அது நிலைதளும்பாமல் வேதத்தில் உள்ளபடி போதிக்கப்பட வேண்டும். சத்தியத்தை விளக்க நமக்கு கற்பனா சக்தியோ, வார்த்தை ஜாலமோ இதிகாசங்களோ, சித்தர் பாடல்களோ தேவையில்லை. வேத சத்தியத்தை வேதத்தோடு ஒப்பிட்டுப்பார்த்துப் புரிந்துகொண்டு விளக்க வேண்டும். சத்தியம் போல் தோற்றமளிக்க முயலும் அசத்தியத்தை உணர்ந்து புரிந்து கொள்ளும் வைராக்கியம் இல்லாத ஆத்துமாக்களாக நம்மவர்கள் இருப்பதே இன்று நம்மைப் பிடித்திருக்கும் சாபக்கேடு.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s