கத்தோலிக்க சபை கிறிஸ்தவத்திற்குத் தந்த தொல்லைகள், கழுவிலேற்றி, உயிரோடெரித்த கிறிஸ்தவத் தலைவர்களின் எண்ணிக்கை, கிறிஸ்தவ வேதத்தை மக்கள் வாசிக்கவிடாமல் செய்ய எடுத்த நடவடிக்கைகள் தாம் எத்தனை! இவற்றை நாம் மறந்தாலும் வரலாறுதான் மறக்குமா? இன்று கத்தோலிக்க சபை எந்நிலையில் இருக்கிறது? என்று ஆராய்கிறது இக்கட்டுரை.
ரோமன் கத்தோலிக்க சபை
– புலி பதுங்குவது பாய்வதற்காக –
கத்தோலிக்க சமயம் தமிழர் வாழும் நாடுகளில் எல்லாம் தொடர்ந்தும் ஒரு முக்கிய சமயமாக இருந்து வருகின்றது. கிறிஸ்தவத்தைப் பற்றி சரியாகத் தெரியாதவர்கள் அதனை கிறிஸ்தவத்தின் ஒரு கிளையாகத் தொடர்ந்தும் கருதி வருகிறார்கள். தமிழ் சுவிசேஷக் கிறிஸ்தவர்களின் பெரும்பாலானோரும் கத்தோலிக்க சமயத்தைக் கிறிஸ்தவத்தின் ஒரு பகுதியாகத் தவறாக இன்றும் கருதி வருகிறார்கள். கத்தோலிக்க மதத்தைப் பற்றிக் கிறிஸ்தவர்கள் சரியான தெளிவற்றவர்களாகவே இருந்து வருகின்றனர். கிறிஸ்தவத்தின் எதிரிகள் இந்தியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் ஆக்ரோசமாக பணி புரிந்து வரும் இந்நாட்களில் கத்தோலிக்க மதத்தோடு இணைந்து செயல்படுவதை விட்டுவிட்டு பழையதை ஏன் பெரிதுபடுத்துகிறீர்கள்? என்று யாரும் கேட்டால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். நாம் செய்ய வேண்டிய எத்தனையோ பெரிய காரியங்கள் இருக்க ஏன் இந்தச் சாதாரண விசயத்தைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டும்? என்று கேட்டாலும் நான் வியப்படைய மாட்டேன். இவர்களுக்கு இப்படியான சிந்தனைகள் ஏற்படுவதற்கு என்னைப் பொருத்தவரையில் நான்கு காரணங்களுண்டு.
1. வரலாறு பற்றிய விளக்கம் இல்லை – முதலாவதாக தமிழ் கிறிஸ்தவர்கள் மத்தியில் கிறிஸ்தவ வரலாறு பற்றிய முறையான அறிவு இல்லை. அதுபற்றிய போதனையே சபைகளில் கொடுக்கப்படுவதில்லை. வரலாற்றிற்கும் கிறிஸ்தவத்திற்கும் தவிர்க்க முடியாத, பிரிக்க முடியாத அழுத்தமான ஒரு தொடர்பிருப்பதை கிறிஸ்தவர்களில் பலர் அறியாமலிருக்கிறார்கள். எந்தவிதமான ஆழமான வேதபோதனையும் இல்லாமல் வெறும் உணர்ச்சிகளின் அடிப்படையில் மட்டும் இயங்கி வரும் கெரிஸ்மெட்டிக் இயக்கம் வரலாற்றைக் கிறிஸ்தவத்தின் எதிரியாகக் கருதித் தள்ளி வைத்துள்ளது. இதனால் கிறிஸ்தவத்திற்கு வரலாற்றுடன் இருக்கும் இணைபிரியாத உறவு தெரியாமல் அநேக கிறிஸ்தவர்கள் இருந்து வருகிறார்கள். இவர்களுக்கு கத்தோலிக்கத்திற்கும், கிறிஸ்தவத்திற்கும் இடையில் உள்ள இணைக்க முடியாத வேறுபாடு தெரியாது. அத்தோடு, கிறிஸ்தவ வரலாறு என்ற பெயரில் தமிழில் காணப்படும் வரலாற்று நூல்களில் பெரும்பாலானவை ரோமன் கத்தோலிக்க சமயத்தின் அடிப்படையில் எழுதப்பட்டிருப்பதால் அவை கத்தோலிக்க மதத்தைப் பற்றிய உண்மைகளைத் தெரிவிப்பதில்லை. லிபரல் (Liberal-தாராளவாத) இறையியலாளர்களும் கத்தோலிக்க மதத்தை கிறிஸ்தவத்தின் ஓர் அங்கமாகக் கருதி, சீர்திருத்தவாதக் கிறிஸ்தவ சபைகளை அதிலிருந்து வந்த பிரிவுகளாகக் காட்டி உண்மையைத் திரித்து வைத்திருப்பதால் அநேகருக்கு சீர்திருத்தவாதக் கிறிஸ்தவத்தைப்பற்றிய உண்மை தெரியவில்லை. இதனால் பெரும்பாலான தமிழ் கிறிஸ்தவர்கள் கத்தோலிக்க சமயத்தைக் கிறிஸ்தவத்தின் ஒரு கிளையாகத் தொடர்ந்து தவறாக எண்ணி வருகின்றனர்.
2. சமய சமரசக் கோட்பாடு – இரண்டாவதாக, தமிழர் மத்தியில் காணப்படும் சுவிசேஷ கிறிஸ்தவம் (Evangelical Christianity), சமய சமரசக் கோட்பாட்டினைப் (Ecumenical) பின்பற்றி எம்மதமும் சம்மதம் என்ற போக்கில் நடந்துவருவதால் அவ்வியக்கத் தலைவர்கள் அனைவரும் கத்தோலிக்க சமயத்தோடு உறவாடித் தமது மக்களைத் தவறான பாதையில் வழிநடத்தி வருகின்றனர். கெரிஸ்மெட்டிக் மற்றும் கிறிஸ்தவ நிறுவனங்கள் (Para-church organization) நடத்தும் சுவிசேஷக் கூட்டங்களுக்கு வந்து இயேசுவுக்காகத் “தீர்மானம்” எடுப்பவர்கள் கத்தோலிக்க சபைகளுக்கே மறுபடியும் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இத்தகைய கூட்டங்களில் “தீர்மானம்” எடுப்பவர்களுக்கு ஆலோசனை கூறும் கவுன்சலர்களாக இருப்பவர்களில் கத்தோலிக்கர்களும் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். இந்தியா, ஸ்ரீலங்கா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற தமிழர் வாழும் பகுதிகளில் காணப்படும் இறையியல் கல்லூரிகளில் பெரும்பாலானவற்றில் கத்தோலிக்க குருமார்கள் பிரசங்கம் செய்தும், பாடங்கள் நடத்தியும் வருகின்றனர். சுவிசேஷக் கூட்டங்களையும் கத்தோலிக்க குருமார்கள் அலங்கரித்து வருகின்றனர். இதனால் தமிழ் கிறிஸ்தவர்களுக்கு கத்தோலிக்க சபை பற்றிய உண்மை தெரியாமலிருக்கின்றது. இப்பத்திரிகையில் கடந்த வருடம் (ஜனவரி – மார்ச் 2000) நாம் திறனாய்வு செய்த “தமிழ்க் கிறிஸ்தவ இதழ்கள் – ஓர் ஆய்வு” என்ற நூலை எழுதிய அ. மா. சாமி கிறிஸ்தவரல்லாத ஒரு பத்திரிகையாளர். அந்நூலை எழுதுவதற்கு ஊக்கமளித்து ஆசீர்வாதம் தந்தவர்கள் கத்தோலிக்க, ஆங்லிக்கன் மற்றும் சுவிசேஷ இயக்கத் தலைவர்கள். அந்நூல் முழுவதும் கத்தோலிக்க மதத்தைக் கிறிஸ்தவத்தின் ஒரு அங்கமாகவே கருதி ஆசிரியர் எழுதியிருக்கிறார். இதை எந்தவொரு தமிழ் சுவிசேஷ இயக்கத் தலைவரும் திருத்தவோ கண்டிக்கவோ இல்லை; மாறாக தென்னிந்திய திருச்சபைத் தலைவர்களிலிருந்து தலித் தளபதி எஸ்ரா சற்குணம் வரை இதற்குப் பாராட்டுரை எழுதியிருக்கின்றனர். இதிலிருந்து தமிழர் மத்தியில் கிறிஸ்தவம் என்றால் என்ன? என்று புரியாத ஒரு குழப்பமான சூழ்நிலை இருப்பதை நாம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். இக் குழப்பத்தாலேயே அநேகருக்கு கத்தோலிக்க சமயம் என்பது என்ன? என்பதும் அது கிறிஸ்தவத்தோடு தொடர்பில்லாத, கிறிஸ்தவப் போதனைகளுக்கு முரணானவற்றைப் போதிக்கும் ஒரு மதம் என்பதும் தெரியாமலிருக்கின்றது.
3. கெரிஸ்மெட்டிக் இயக்கத்திற்கு கத்தோலிக்க மதத்தோடு உள்ள உறவு – மூன்றாவதாக, கெரிஸ்மெட்டிக் இயக்கம் தோன்றிய நாள் முதல் கிறிஸ்தவ சபைகள் மத்தியில் அதற்கிருந்த செல்வாக்கைக் கவனித்த கத்தோலிக்க சபை தனது சபை மக்களை கெரிஸ்மெட்டிக் இயக்கம் சுரண்டிவிடக் கூடாதென்ற காரணத்தால் அவ்வியக்கத்திற்கு தனது சபைகளில் இடமளிக்கத் தொடங்கியது. எந்த இறையியல் கோட்பாடுகளின் அடிப்படையிலும் அமையாத கெரிஸ்மெட்டிக் இயக்கமும் இதனை வரவேற்றுத் தன்னைக் கத்தோலிக்க மதத்துடன் இணைத்துக் கொண்டது. இதனாலேயே கத்தோலிக்க சபைகளில் நாம் கெரிஸ்மெட்டிக் கூட்டத்தையும் (Catholic Charismatics), கெரிஸ்மெட்டிக் கூட்டங்களில் கத்தோலிக்க குருமார்களையும் பார்க்க முடிகின்றது. உதாரணத்திற்கு பெர்க்மன் பாதரை எடுத்துக் கொள்வோம். அவருடைய பாடல்களைக் கெசட்டுகளில் கேட்டு மகிழும் விவஸ்தை இல்லாத கிறிஸ்தவர்கள் பலர் (அவருடைய ஆட்டம் பாடல்களையெல்லாம் தூக்கியெறிந்து விடும்). ஆனால், ஒருவராவது அம் மனிதர் ஏன் தொடர்ந்தும் குரு உடையோடு இருக்கிறார் என்று எண்ணிப் பார்ப்பது இல்லை. அவரை ஏன் தொடர்ந்தும் பெர்க்மன் பாதர் என்று அழைக்க வேண்டும் என்று கேட்பதும் இல்லை (அவருடைய கெசட்டுகளில் பெர்க்மன் பாதர் என்றே எழுதி இருக்கிறது). இப்பாதிரியார் கிறிஸ்துவையும், வேதம் போதிக்கும் உண்மைகளையும் அறிந்து கொண்டிருந்தால் தனது குரு உடையையும், பழைய பழக்கங்களையும் தலையைச் சுற்றிக் காவிரி ஆற்றில் அல்லவா எறிந்திருக்க வேண்டும். தொடர்ந்தும் ஏன் அவர் கத்தோலிக்க குருவாக உலா வர வேண்டும்? இதற்குக் காரணம் கத்தோலிக்க சமயத்திற்கும் கெரிஸ்மெட்டிக் கூட்டத்திற்கும் இடையில் இருக்கும் இணைப்புத்தான். கெரிஸ்மெட்டிக் கூட்டம் கத்தோலிக்க சமயத்தைக் கிறிஸ்தவத்தின் ஒரு கிளையாக ஏற்றுக் கொண்டுள்ளது. ஆகவே, கெரிஸ்மெட்டிக் இயக்க நம்பிக்கைகளின்படி கத்தோலிக்க குருவான பெர்க்மன் கத்தோலிக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டியதில்லை. கத்தோலிக்க சமயத்திற்கும் இதனால் எந்த இழப்புமில்லை. ஏனெனில், பெர்க்மன் இன்னும் ஒரு பாதிரியாரே. அவர் கத்தோலிக்க சபையிலும் பாடலாம், ஆடலாம், கெரிஸ்மெட்டிக் கூட்டங்களிலும் பாடலாம், ஆடலாம்.
4. இறையியல் கல்லூரிகள் – நான்காவதாக தமிழ் கிறிஸ்தவ உலகில் காணப்படும் இறையியல் கல்லூரிகளில் பெரும்பாலானவை கத்தோலிக்க மதத்துடன் உறவாடிக் கொண்டிருக்கின்றன. சில கல்லூரிகளில் கத்தோலிக்க குருமார்களும் போதிக்கிறார்கள். சுவிசேஷ இயக்கத்தைச் சேர்ந்த கல்லூரிகள் (Evangelical Bible Colleges) என்று தம்மை அழைத்துக் கொள்ளும் இறையியல் கல்லூரிகளும்கூட கிறிஸ்துவுக்கு எதிரியான கத்தோலிக்க மதத்துடன் உறவாடி அநேக இறையியல் மாணவர்களைக் குழப்பத்திற்குள்ளாக்கி போதக ஊழியத்திற்கு அனுப்பி வைக்கின்றன. தமிழ் நாட்டிலும், இலங்கையிலும், மலேசியாவிலும் உள்ள பல இறையியல் கல்லூரிகளைப் பற்றி அறிந்தவர்களுக்கு நான் சொல்வது புரியும்.
மேல்வரும் காரணங்களால் தமிழ்க் கிறிஸ்தவ உலகம் குழம்பிப் போய் உண்மை புரியாமல் இருந்து வருகிறது. கத்தோலிக்க சமயம் என்றால் என்ன? அது பின்பற்றி வரும் கோட்பாடுகள் என்ன? அதனால் கிறிஸ்தவத்திற்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் யாவை? என்பதைப்பற்றி நாம் இனி ஆராய்வோம். முதலில் கத்தோலிக்க சபையின் ஆரம்ப வரலாற்றைக் குறித்து நாம் சுருக்கமாக அறிந்து கொள்வது அவசியம்.
கத்தோலிக்க சபையின் தோற்றமும் வளர்ச்சியும்
கத்தோலிக்க மதத்தின் ஆரம்ப வரலாற்றை ஆராயும்போது, அதன் தொடக்கமாக நான்காம் நூற்றாண்டையே வரலாற்றறிஞர்கள் குறிப்பிடுவர். அக்காலத்தில் ரோமன் ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாக இருந்த கொன்ஸ்டன்டைன் வேறு நாடுகளுடன் போரில் ஈடுபட்டிருந்தான். கொன்ஸ்டன்டைன் தேவனை அறியாத ஒரு மனிதன். ஒரு நாள் அவன் தூங்கும்போது சிலுவைக் குறிகொண்ட கவசத் தொப்பியை அணிந்து போரிட்டால் வெற்றி பெறலாம் என்று ஒரு கனவு கண்டான். காலையில் எழுந்த கொன்ஸ்டன்டைன் அக்கனவின்படி சிலுவைக் குறியிட்ட கவசத்தொப்பியை அணிந்து போரிட்டு அதில் வெற்றியும் கண்டான். சிலுவைக்குறி கிறிஸ்தவத்தோடு சம்பந்தப்பட்டது என்பதை அறிந்திருந்த கொன்ஸ்டன்டைன் கிறிஸ்தவர்கள் வழிபடும் கடவுளால்தான் தனக்கு வெற்றி கிடைத்தது என்று நம்பி அதற்கு வெகுமதியாக கிறிஸ்தவம் தனது சாம்ராஜ்யத்தின் மதமாகக் கருதப்பட வேண்டும் என்று கட்டளையிட்டான். அந்நாள் முதல் கிறிஸ்தவம் அதிகாரபூர்வமான மதம் என்ற நிலையைப் பெற்றது. ஆனால், அது மெய்க் கிறிஸ்தவத்திற்கு பேராபத்தாகவும் அமைந்தது. ஏனெனில், கிறிஸ்துவை விசுவாசிக்காத பேரரசன், நாட்டு மக்கள் எல்லோரும் கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்ததால் ஒரு போலிக்கிறிஸ்தவம் உருவாயிற்று. அத்தோடு அரசனுக்கு மரியாதை செலுத்தி துதி பாடியவர்களெல்லாம் உயரிடங்களிலும், சபைத் தலைவர்களாகவும் நியமிக்கப்பட்டனர். இதனால் கர்த்தருக்கும், வேதத்திற்கும் மட்டும் அடிபணிந்து நடந்து வந்தவர்களெல்லாம் அரசனுக்கெதிரானவர்கள் என்று கருதப்பட்டு தண்டனைக்குள்ளாயினர். மேலும் கிறிஸ்தவ வேத போதனைகளுக்கு முரணான சிலை வணக்கம் போன்றவையெல்லாம் துரிதமாக சபைகளில் நுழைந்து கிறிஸ்தவ ஆராதனையின் அங்கங்கள் என்ற பெயரை அடைந்தன. இதுவே கிறிஸ்தவத்திற்கு ஏற்பட்ட ஆரம்பத் தீங்கு.
இக்கால முதல் நாடும், சபையும் இணைந்து இயங்கும் வழக்கமும், நாட்டரசன் சபைத் தலைவனாகக் கருதப்படும் வழக்கமும் ஏற்பட்டது. அதேநேரம் சபைத் தலைவரும் பெரும் செல்வாக்கும், அதிகாரமும் உள்ள ஒரு மனிதராகவும் கருதப்பட்டார். அரசு சபையை அங்கீகரித்திருப்பதால் சபைத் தலைவர் மக்களால் மதிக்கப்பட வேண்டியவராக இருந்தார். மெய்க்கிறிஸ்தவம் போதிக்கும் தாழ்மையும், எளிமையும் படிப்படியாக சபைத் தலைவர்களிடமிருந்தும், அரச அங்கீகாரம் பெற்றிருந்த போலிக் கிறிஸ்தவத்திடமிருந்தும் அகலத் தொடங்கின. இதுவே ரோமன் கத்தோலிக்க மதத்தின் தோற்றத்திற்கு வித்திட்டது.
இதன்பின் படிப்படியாக வேதத்திற்கெதிரான அனைத்தும் அரச அங்கீகாரம் பெற்று கிறிஸ்தவ சபை என்ற போலிப்போர்வையில் மறைந்திருந்த சபையை அலங்கரிக்கத் தொடங்கின. போப்பரசர் (Pope) என்ற பெயர் சபையின் பிரதம தலைவருக்கு சூட்டப்பட்டது. வேதம் போதிக்கும் போதகர், மூப்பர் என்ற தாழ்மையையும், வேத இலக்கணங்களையும் அணிகலன்களாகக் கொண்ட சபைத் தலைமை அலட்சியப்படுத்தப்பட்டது. கி.பி. 402 இல் இனொசன்ட் (Innocent) என்ற ரோம சபை பிசப் ஐரேப்பாவிலுள்ள எந்த சபையும் ரோம சபையின் அங்கீகாரமில்லாமல் எந்தவித முக்கிய சபைத் தீர்மானங்களும் நிறைவேற்ற முடியாது என்று கட்டளையிட்டார். இதற்குப் பின் வந்த போப்பரசர் ரோம சபை எடுக்கும் எந்தத் தீர்மானத்தையும் எவரும் எதிர்க்கக் கூடாது என்று கட்டளை பிறப்பித்தார். இவ்வாறே சபைத்தலைவராக இருந்த போப்பரசர் பேரதிகாரமுள்ள ஒரு மனிதராக படிப்படியாக மாறினார். அத்தோடு இவர் தலைமை வகித்த போலிச் சபையும் ரோமன் கத்தோலிக்க சபை அல்லது ரோம சபை என்ற பெயரைப் பெற்றது.
காலம் போகப்போக போப்பரசருக்கும் அரசுக்கும் இடையில் உறவு கெட்டு சில வேளைகளில் போப்பரசர் நாட்டின் மீது அதிகாரம் செலுத்துவதும், சில வேளைகளில் அரசன் ரோம சபை மீது அதிகாரம் செலுத்துவதும் வழக்கமாகியது. போப்பரசர்கள் நாட்டின் மீது அதிகாரம் செலுத்திய காலங்களில் தங்களுக்கெதிரானவர்களை அவர்கள் கொலை செய்யவும் தயங்கவில்லை. போப்பரசர்கள் மனிதர்களைவிட மேலான தெய்வீக அம்சம் பொருந்தியவர்களாகவும், மக்களின் பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் உடையவர்களாகவும் கருதப்பட்டனர். ஆனால், கர்த்தருடைய செயலால் பதினாறாம் நூற்றாண்டில் கத்தோலிக்க மதத்தின் கொட்டம் சீர்திருத்தவாதத்தால் ஒடுக்கப்பட்டது. கத்தோலிக்க மதம் கொண்டிருந்த அரசியல் அதிகாரம் அழிக்கப்பட்டது. மக்களுக்கு மத சுதந்திரம் கிட்டியது. சாதாரண மக்கள் வேதத்தை வாசித்து கர்த்தரை அறிந்து கொள்ளவும், அவர் வழிப்படி சுதந்திரமாக ஆராதிக்கவும் முடிந்தது.
கத்தோலிக்க சபை பின்பற்றும் கோட்பாடுகள்
கீழே நாம் தரவிருக்கும் ரோமன் கத்தோலிக்க சபைப் போதனைகளை அச்சபை அங்கீகரித்து வெளியிட்டுள்ள அதிகாரபூர்வமான வெளியீடுகளான டிரென்ட் கவுன்சில் போதனைகள், இரண்டாம் வத்திக்கான் வெளியீடுகள், கத்தோலிக்க கெட்டகிசம் ஆகியவற்றிலிருந்து தந்துள்ளோம். இப்போதனைகளில் இருந்து கத்தோலிக்க மதம் இன்று வரை எந்தவிதத்திலும் தனது போதனைகளை மாற்றிக் கொள்ளவில்லை என்பதையும் அது கிறிஸ்தவ வேத போதனைகளுக்கு முற்றிலும் முரணான போதனைகளைப் பின்பற்றுகிறது என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
1. பரிசுத்த வேதமும், பாரம்பரியமும்
கத்தோலிக்க மதம் பரிசுத்த வேதமும் சபைப் பாரம்பரியங்களும் சமமான அதிகாரத்தைக் கொண்டுள்ளதாகப் போதிக்கின்றது. வேதம் மட்டுமே கர்த்தருடைய வார்த்தை என்று சுவிசேஷக் கிறிஸ்தவம் ஆணித்தரமாக அறிக்கையிட, ரோமன் கத்தோலிக்க மதம் தனது பாரம்பரிய சபைப் போதனைகளை அதிகாரபூர்வமானதாக இணைத்துக் கொண்டு தனது சபை மக்கள் அவற்றைக் கர்த்தருடைய போதனைகளாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறது. தன்னுடைய வார்த்தையான திருமறையோடு (பழைய, புதிய ஏற்பாடுகளிலே உள்ள அறுபத்தி ஆறு நூல்கள் மட்டும்) வேறு எந்த மனித போதனைகளையும் இணைக்கக்கூடாது என்று இயேசு ஆணித்தரமாகக் கூறியுள்ளார் (மத்தேயு 5:18).
2. ஆசாரியர்கள் (Priests)
அப்போஸ்தலர்களுக்குப்பின் அவர்கள் வழியில் தெய்வாம்சமும் அதிகாரமும் கொண்ட ஒரு ஆசாரியர் கூட்டத்தை கிறிஸ்து ஏற்படுத்தியுள்ளதாக கத்தோலிக்க மத டிரென்ட் கவுன்சிலும், கெட்டகிசமும் போதிக்கின்றன. இவ்வாசாரியர் கூட்டத்திற்கு பேதுரு வழியில் வரும் தலைவரே போப்பரசரான திருத்தந்தை என்பது அவர்களுடைய போதனை. மத்தேயு 16:18 இல் கிறிஸ்துவின் வார்த்தைகளுக்குத் தவறான விளக்கங் கொடுத்து பேதுருவை மூலைக்கல்லாகக் கொண்டு சபை நிறுவப்பட்டதாக போதிக்கின்றனர்.
ரோமன் கத்தோலிக்க ஆசாரியர்கள் (குருமார்கள்) இவ்வுலகில் இரண்டு முக்கிய காரியங்களைச் செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அம்மதக் கெட்டகிசம் போதிக்கின்றது. அதாவது மாஸைக் கொடுப்பதற்கும், மக்களுடைய பாவங்களைக் கேட்டு அப்பாவங்களுக்கு நிவாரணம் கொடுப்பதற்குமாக அவர்கள் கிறிஸ்துவால் நியமிக்கப்பட்டிருப்பதாக அவர்கள் போதிக்கிறார்கள்.
ஆனால், வேதத்தில் போப்பரசர் என்ற திருத்தந்தையையே பார்க்க முடியாது. அதுமட்டுமல்லாமல் புதிய ஏற்பாட்டில் பழைய ஏற்பாட்டு வழிப்படியான பலிகள் கொடுத்து பாவநிவாரணம் செய்வதற்காக ஆசாரியர்கள் ஏற்படுத்தப்படவில்லை. தனது மக்களின் எல்லாப் பலிகளையும் கிறிஸ்துவே செலுத்தி அவர்களது பாவங்களுக்கு நிவாரணம் தந்துள்ளார் என்றே புதிய ஏற்பாடு போதிக்கின்றது. பலி கொடுக்கும் முறை முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக எபிரேயர் 10 போதிக்கின்றது. இப்படியிருக்க ரோமன் கத்தோலிக்க குருமார் எப்படி இப்பலிகளைத் தொடர்ந்து மக்கள் கொடுக்கும்படிச் செய்ய முடியும். ரோமன் கத்தோலிக்க குருமார் மாஸ் நடக்கும்போது கிறிஸ்துவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக அம்மதக் கோட்பாடு (டிரென்ட் கவுன்சில்) போதிக்கிறது. அத்தோடு ஒவ்வொரு முறை மாஸ் நடக்கும்போதும் கிறிஸ்து கல்வாரியில் கொடுத்த பலி மறுபடியும் குருமார்களின் மூலம் நிகழ்த்தப்படுவதாகவும் அது போதிக்கின்றது. ஆனால், வேதமோ, கிறிஸ்து “பாவங்களுக்காக என்றென்றைக்குமாக ஒரே பலியைச் செலுத்தினார்” என்று போதிக்கின்றது (எபிரேயர் 10:12). கிறிஸ்துவின் பலி மறுபடியும் நிகழ்த்தப்படவோ, எந்தச் சபைத்தலைவரும் அதைப் பிரதிநிதித்துவப் படுத்த வேண்டிய அவசியமோ இல்லை. (எபிரேயர் 7 முதல் பத்துவரை உள்ள வேதப் பகுதிகளைக் கவனமாக வாசித்துப் பார்த்தால் இதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்).
பழைய ஏற்பாட்டில் ஆசாரியர்கள் கர்த்தருக்கும், மக்களுக்கும் இடையில் மத்தியஸ்தராக இருந்தார்கள். ஆனால், எபிரேயர் 7:11-24 வரையுள்ள வசனங்கள் அத்தகைய மத்தியத்துவம் வகிக்கும் ஆசாரியத்துவ முறை இல்லாமலொழிக்கப்பட்டுள்ளதாகத் தெளிவாகப் போதிக்கின்றது. இதற்குக் காரணம் என்னவென்றால் அத்தகைய மத்தியத்துவத்தைக் கிறிஸ்துவே தனது கல்வாரி மரணத்தின் மூலம் செய்து கர்த்தருடைய கட்டளைகளை என்றைக்குமாக நிறைவேற்றியிருப்பதால்தான் (எபிரேயர் 7:12, 7:18-19, 7:24). கிறிஸ்துவின் மத்தியத்துவப் பணியை வேறு எவரும் செய்யவோ பிரதிநிதித்துவப்படுத்தவோ முடியாது. அப்படிச் செய்ய முயற்சிப்பது கர்த்தருடைய வார்த்தைக்கு எதிரான செயல்.
3. மாஸ் (Mass)
கத்தோலிக்க மதம், கிறிஸ்துவின் கல்வாரி மரணம் இவ்வுலகில் தங்கள் சபை கடைப்பிடிக்கும் மாஸின் மூலம் தொடர்ந்தும் நடைபெறுவதாகப் போதிக்கிறது. மாஸ் நடக்கும்போது இரத்தம் சிந்தப்படாவிட்டாலும் அது நடக்கும் ஒவ்வொருமுறையும் குருவானவர் கிறிஸ்துவை இவ்வுலகுக்கு வரச்செய்து மறுபடியும் மரிக்கச் செய்வதாகவும், அதில் பங்கு பெறுபவர்கள் கிறிஸ்துவின் மரணத்தின் பலாபலன்களைப் பெற்றுக் கொள்வதாகவும் கத்தோலிக்க மதம் போதிக்கிறது. அதாவது, மாஸில் கலந்து கொள்பவர்கள் கிறிஸ்துவின் மரணத்தின் பலன்களை அடைந்து தங்கள் பாவத்திலிருந்து விடுதலை பெறலாம் என்பது கத்தோலிக்க மதப்போதனை.
4. யூகரிஸ்ட் (Eucharist)
கத்தோலிக்கர்கள் திருவிருந்தை யூகரிஸ்ட் என்று அழைக்கிறார்கள். கத்தோலிக்க மதத்தின் அதிகாரபூர்வமான கெட்டகிசம், யூகரிஸ்ட் சபை ஆராதனைகளில் முக்கியமானது. ஏனெனில், ஆகவே கிறிஸ்து என்று போதிக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஒருவருடைய இரட்சிப்புக்கு அது அவசியமானது என்று கத்தோலிக்க மதம் போதிக்கிறது. இத்திருவிருந்தைப் பற்றிய கத்தோலிக்க மதப் போதனையை ஆங்கிலத்தில் Transubstantiation என்று அழைப்பர். கத்தோலிக்கப் போதனையின்படி தெய்வீக அம்சமுள்ள பாதிரியார் திருவிருந்து கொடுக்கும்போது திருவிருந்தின் ரொட்டியும், திராட்சை இரசமும் கிறிஸ்துவின் சரீரமாகவும், திருஇரத்தமாகவும் மாற்றமடைகின்றன. இதனையே Transubstantiation என்ற பதம் விளக்குகிறது. ஆகவே, கத்தோலிக்கப் போதனைப்படி பாதிரியார் திருவிருந்து கொடுக்கும் ஒவ்வொருமுறையும் திருவிருந்தெடுப்பவர்கள் கிறிஸ்துவின் சரீரத்தையும் இரத்தத்தையும் அவர்கள் சுவைக்கும்படி கிறிஸ்துவையே அவர்களுக்கு வழங்குகிறார். இப்போதனை கிறிஸ்தவ வேதம் போதிக்கும் ஒரு போதனையல்ல. கிறிஸ்தவ வேதம் திருவிருந்தில் பயன் படுத்தப்படும் ரொட்டியும், திராட்சை இரசமும் எந்தவிதமான மாற்றத்தையும் அடைவதில்லை என்றும், திருவிருந்தெடுக்கும்போது கிறிஸ்துவின் கல்வாரி மரணத்தை நினைவு கூர்ந்து கிறிஸ்தவர்கள் தங்கள் விசுவாசத்தினால் ஆத்மீக பெலத்தை மட்டுமே பெறுகிறார்கள் என்றும் போதிக்கின்றது.
5. பாவ அறிக்கையும், பாவ மன்னிப்பும்
கத்தோலிக்க மதம், கிறிஸ்து இவ்வுலகில் அப்போஸ்தலருக்குப் பின்பு அவர்கள் வழியில் ஆசாரியர்களை நியமித்து மக்களின் பாவங்களைத் தீர்ப்பதற்கு வழியேற்படுத்தியிருப்பதாகப் போதிக்கிறது. இவ்வாசாரியர்கள் மனிதர்களாக இருந்தபோதும் தெய்வீகத் தன்மையுள்ளவர்களாக மக்களின் பாவங்களை மன்னித்து அவர்கள் கடவுளோடு உறவை ஏற்படுத்திக் கொள்ள வழியேற்படுத்திக் கொடுக்கிறவர்களாக இருப்பதாகப் போதிக்கிறது. மக்கள் தங்கள் பாவங்களை இவ்வாசாரியர்களிடம் அறிக்கையிட்டு அப்பாவங்களுக்கான பலிகளைச் செலுத்துவதன் மூலம் மட்டுமே பாவமன்னிப்பையும், இரட்சிப்பையும் பெற்றுக் கொள்ள முடியும் என்பது கத்தோலிக்க மதப் போதனை. நற்கிரியைகள், ஜெபங்கள், உபவாசம், மாஸ் மற்றும் ஆராதனைகளில் கலந்து கொள்ளல், கருணைக்கேதுவான காரியங்கள் செய்தல், பலிகள் செலுத்துதல் என்பவற்றின் மூலம் ஒரு தனி மனிதன் தனது பாவங்களில் இருந்து விடுதலை தேடிக் கொள்ள முடியும் என்று கத்தோலிக்க மதம் போதிக்கிறது. அவ்வாசாரியர்கள் கர்த்தரின் இடத்திலிருந்து தங்கள் பணிகளைச் செய்வதாக இம்மதம் போதிக்கிறது. கிறிஸ்தவமோ எந்தவொரு தனிமனிதனும் சுயமாக தன் பாவத்திலிருந்து விடுதலை அடைய முடியாதென்றும், எந்தக் கிரியைகளின் மூலமும் இரட்சிப்பை அடைய முடியாதென்றும், கிறிஸ்துவை விசுவாசிப்பதனால் மட்டுமே அவரிடமிருந்து பாவநிவாரணத்தைப் பெற்றுக்கொள்ள முடியுமென்றும் போதிக்கின்றது (எபேசியர் 2:8-10).
6. திருமுழுக்கு
ரோமன் கத்தோலிக்க மதம், திருமுழுக்குப் பெற்றுக் கொள்வதன் மூலம் ஒரு மனிதன் மறுபிறப்பை அடையலாம் என்று போதிக்கின்றது. அதாவது திருமுழுக்கின் மூலம் ஒரு மனிதன் கர்த்தருடைய இராஜ்யத்திற்குள் நுழைகிறான் என்கிறது இம்மதம். இப்போதனையை ஆங்கிலத்தில் Baptismal Regeneration என்பார்கள். இப்போதனை பரிசுத்த வேதத்திற்கு முரணான போதனை. திருமுழுக்கு ஒருபோதும் ஒரு மனிதனுக்கு இரட்சிப்பை அளிக்க முடியாது. கிறிஸ்து இலவசமாக அளிக்கும் இரட்சிப்பை பரிசுத்த ஆவியின் கிரியையின் மூலம் பாவத்திலிருந்து மனம் திரும்பும் ஒருவன் பெற்றுக்கொள்கிறானே தவிர, திருமுழுக்கின் மூலம் பெற்றுக் கொள்வதில்லை. இரட்சிப்பைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு மட்டுமே திருமுழுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று பரிசுத்த வேதம் போதிக்கின்றது (மத்தேயு 28:18-20).
தனது பாவத்திலிருந்து மனந்திரும்பாமல் ஒருவன் இரட்சிப்பை அடைய முடியாது. திருமுழுக்கு ஒரு மனிதனுடைய பாவத்தைப் போக்காது. 1 யோவான் 3:9 – “தேவனால் பிறந்த எவனும் பாவஞ் செய்யான் . . . அவன் தேவனால் பிறந்தபடியால் பாவஞ் செய்யமாட்டான்” என்று போதிக்கின்றது. அதாவது பாவத்தைத் தொடர்ந்து செய்ய மாட்டான் என்பது இதற்கு கிரேக்க மொழியில் பொருள். ஒருவன் பாவத்தைத் தொடர்ந்து செய்யாமலிருக்க அவன் முதலில் தேவனால் பிறந்திருக்க வேண்டும். இதனையே மறுபிறப்பு என்று கூறுகிறோம். திருமுழுக்கு ஒருவனுக்கு மறுபிறப்பைக் கொடுக்க முடியாது. தேவனால் பிறக்காமல் திருமுழுக்கை மட்டும் பெற்றுக்கொண்ட மனிதன் பாவத்தில் தொடர்ந்திருந்து, பாவத்தை மட்டுமே செய்து கொண்டிருப்பான். திருமுழுக்கு பற்றிய ரோமன் கத்தோலிக்க மதப்போதனை வேதத்திற்கு எதிரானதாகும்.
7. ஆன்மா திருத்தமடையும் இடம் (Purgetory)
ரோமன் கத்தோலிக்க மதம் பாவத்தை இரண்டு விதமாகப் பிரித்துப் பார்க்கிறது. மனிதன் அடிக்கடி திருந்தக்கூடிய சாதாரண பாவங்கள், எளிதாக திருந்த முடியாத பெரும் பாவங்கள் என்று பாவத்தை அவர்கள் பிரிக்கிறார்கள். சபையில் திருமுழுக்குப் பெற்ற ஒருவன் தன் பாவத்திலிருந்து விடுதலை அடைகிறான் என்றும், அவன் மறுபடியும் சாதாரண, சிறிய பாவங்களைச் செய்யும்போது குருமாரிடம் தன் பாவத்தை அறிக்கையிட்டு பாவமன்னிப்புப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் இம்மதம் போதிக்கின்றது. அதே வேளை அவன் பெரும் பாவங்களைச் செய்து விடுவானானால் தான் திருமுழுக்கின் மூலம் பெற்றுக்கொண்ட கிருபையை இழந்துவிடுகிறான் என்றும் இம்மதம் போதிக்கின்றது. இழந்துபோன கிருபையை அவன் மீண்டும் அடைய ஏற்படுத்தப்பட்டதே Penance. அதாவது, பாவம் செய்தவன் அதிலிருந்து விடுதலை அடைய மதகுருவிடம் அறிக்கையிட்டு தன் ஆத்ம சாந்தியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். மதகுரு அத்தகைய மன்னிப்பு வழங்கும் வல்லமையைக் கொண்டுள்ளதாக ரோமன் கத்தோலிக்க மதம் போதிக்கின்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
ஆனால், இம்மதப்போதனையின்படி திருமுழுக்குப் பெற்று பாவமன்னிப்பைப் பெற்றவர்கள் இறந்தவுடன் உடனடியாகக் கர்த்தரை அடைவதில்லை. அவர்கள் தங்களுடைய பூரண பாவநிவாரணத்திற்காக ஆத்மா சாந்தியடையும் இடத்தை (Purgotary) தற்காலிகமாக அடைவார்கள். இவ்வுலகில் இருக்கும் அவனுடைய உறவினர்கள் செய்யும் நற்கிரியைகள், ஜெபங்களின் மூலம் அவன் ஆத்மா சாந்தி பெற்று பின்பு கர்த்தரை அடையும் என்பது இம்மதப் போதனை. ரோமன் கத்தோலிக்க மதம் போதிக்கும் இப்போதனையை நாம் வேதத்தில் எங்குமே பார்க்க முடியாது.
கத்தோலிக்க மதத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா?
இதுவரை ரோமன் கத்தோலிக்க மதத்தின் முக்கிய போதனைகளை ஆராய்ந்தோம். அவை கிறிஸ்தவ வேதம் போதிக்கும் போதனைகளுக்கு முற்றிலும் வேறுபாடானவை என்று அறிந்து கொண்டோம். டிரெண்ட் கவுன்சில் போதனைகளையும், சபைப் பாரம்பரியங்களையும், தனது கெட்டகிசத்தின் மூலம் வெளிப்படையாக போதிக்கப்படும் பரிசுத்த வேதத்திற்கு முரணான போதனைகளையும் தொடர்ந்து போதித்துவரும் ரோமன் கத்தோலிக்க மதம் இன்று மாற்றமடைந்துள்ளது, அல்லது மாறுகிறது போல் தோன்றுகிறது என்றும், சுவிசேஷக் கிறிஸ்தவத்திற்கும் அதற்கும் இன்று அப்படியொரு பெரிய வித்தியாசமுமில்லை என்றும் பல கிறிஸ்தவர்கள் இன்று பேசி வருகிறார்கள். சில முக்கிய சுவிசேஷ இயக்கத் தலைவர்கள்கூட இதை நம்பி, ரோமன் கத்தோலிக்க மதத்துடன் பல காரியங்களில் நாம் இணைந்தியங்க முடியும் என்று நம்பிக்கையில் ரோமன் கத்தோலிக்க மதத்திற்கும், சுவிசேஷக் கிறிஸ்தவத்திற்கும் இடையில் உள்ள கோட்பாட்டொற்றுமை என்று அறிவிக்கும் ஒரு பத்திரத்தில் கையெழுத்திட்டுள்ளனர். 1998 இல் வட அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுவிசேஷ இயக்கத் தலைவர்கள் ஒன்றுகூடி இந்தக் கைங்கரியத்தைச் செய்தனர். இக்கூட்டறிக்கைக்கு ஆதரவளித்து கையொப்பமிட்டவர்களில் தேவ சபைத் தலைவர்கள் (Assemblies of God), அமெரிக்காவின் சதர்ன் பாப்திஸ்து (Southeren Baptist) தலைவர்கள், அமெரிக்காவில் இயங்கும் புளர், விட்டன் இறையியல் கல்லூரிகள் Fuller and Whitton Theological Colleges), கெம்பஸ் குருசேட் (Campus Crusade), பிரிசின் மினிஸ்ட்ரியின் சக் கோல்சன் Prison Ministry – Chuck Colson) ஆகியோர் குறிப்பிடத் தகுந்தவர்கள்.
ரோமன் கத்தோலிக்க மதம் மாறி வருகின்றதா? என்ற கேள்விக்கு நாம் ஆணித்தரமாக இல்லை என்ற பதிலளிக்க வேண்டியுள்ளது. தான் எப்போதும் பின்பற்றி வந்துள்ள போதனைகளில் இருந்து சிறிதும் மாறாது, போப்பரசர் தெய்வீகப் பிறவி என்றும், சபை மூலமும், கிரியைகளின் மூலமுமே இரட்சிப்பு என்ற போதனையையும், சிலை வணக்கத்தையும் வற்புறுத்திவரும் இம்மதத்தைக் கிறிஸ்தவத்துடன் ஒப்பிடுவது எப்படித் தகும்?
கத்தோலிக்க மதத்தால் கிறிஸ்தவத்திற்கு இன்று ஏற்பட்டுள்ள ஆபத்து?
கிறிஸ்தவத்திற்கு ரோமன் கத்தோலிக்க மதத்தால் என்ன ஆபத்து ஏற்பட்டுள்ளது என்ற கேள்விக்கு சபை வரலாறு தெரிந்தவர்களுக்கு பதில் தெரியும். வேதத்தைத் தூக்கி எறிந்துவிட்டு மனித சிந்தனைப்படி உருவான ஒரு மதமே ரோமன் கத்தோலிக்க மதம். வெறுமனே கிறிஸ்துவின் பெயரை அது தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டாலும் கிறிஸ்துவுக்கும் அம்மதத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தன் பாவத்திற்குப் பரிகாரம் தேட வேண்டிய தனியொரு மனிதனான போப்பரசரைத் தலைவனாகக் கொண்டு வேதத்திற்கு விரோதமாக இயங்கிவரும் மதமே ரோமன் கத்தோலிக்க மதம். இம்மதத்தோடு இணைந்து கிறிஸ்தவர்கள் செயல்படுவது என்ற பேச்சு மறுபடியும் கிறிஸ்தவர்களை இருண்ட காலத்திற்கு அழைத்துச் செல்லும் முயற்சியே. இதனால் கிறிஸ்தவத்திற்கு பேராபத்தும், ரோமன் கத்தோலிக்க மதத்திற்கு நல்ல காலமுமே ஏற்படும்.
தங்களுடைய இரத்தத்தையும், உயிரையும் பலியாகக் கொடுத்து மாண்ட ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள், லூதர், கல்வின், நொக்ஸ் போன்ற சீர்திருத்தவாதத் தலைவர்கள், பியூரிட்டன் பெரியோர்கள் அனைவரும் உயிர் கொடுத்துப்போராடிப் பெற்ற சுதந்திரத்தை ஒரே நொடியில் இழப்பதற்கு பலர் இன்று தயாராய் இருப்பது ஆச்சரியமே! இதற்கெல்லாம் என்ன காரணம் என்று நாம் ஆராயத்தான் வேண்டும். முதற் காரணம், இன்று நம்மத்தியில் மெய்யான வேத அடிப்படையில் உள்ள கிறிஸ்தவம் அரிதாகக் காணப்படுவதே. வெறும் உதட்டுச் சாயம் பூசிய, கண்ணுக்கு அழகாகத் தெரியும் கிறிஸ்தவம் என்ற பெயரில் ஒரு போலிக் கூட்டம் உலவுகிறதே தவிர, கர்த்தருக்கும், அவருடைய வேதத்திற்கும் பயந்து, இருதய சுத்தத்தோடு கிறிஸ்துவைப்பின் பற்றும் மக்களை இக்கூட்டத்தில் பார்க்க முடியாதிருக்கிறது. மெய்க் கிறிஸ்தவர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகவே தமிழர் மத்தியில் இருக்கிறார்கள். இரண்டாவதாக, நான் ஏற்கனவே கூறியதுபோல் அநேகருக்கு வரலாறு என்பதே தெரியவில்லை. ரோமன் கத்தோலிக்க மதத்தைத் தவறாக கிறிஸ்தவமாகப் பலர் புரிந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலைமை மாற கிறிஸ்தவர்கள் சபை வரலாற்றைப் படிக்க வேண்டும். ஒவ்வொரு மெய்ச்சபையும் தன் மக்களுக்கு சபை வரலாற்றைப் போதிக்க வேண்டும். மூன்றாவதாக, அநேக கிறிஸ்தவர்களுக்கு வேதம் போதிக்கும் இறையியல் தெரிந்திருக்கவில்லை. சுவிசேஷக் கிறிஸ்தவர்களில் பலர் கூட ஆன்மா சாந்தியடையும் இடமென்றொன்றிருப்பதாக தவறாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள். மெய்க்கிறிஸ்தவர்கள் வேதம் போதிக்கும் சத்தியங்களை இன்று ஆழமாகப் படிக்க வேண்டும். தர்க்கம் செய்வதற்காகப் படிக்காமல் கிறிஸ்துவில் வளர்வதற்காகப் படிக்க வேண்டும். வேத அறிவில் தேர்ந்து ஆத்மவிருத்தி பெறுவதற்காகப் படிக்க வேண்டும்.
இதெல்லாம் நடந்தாலொழிய நாம் போலிப் போதனைகளில் இருந்து தப்புவது இலேசல்ல. இனியாவது ரோமன் கத்தோலிக்க மதம் கிறிஸ்தவம் அல்ல என்ற உண்மையைப் புரிந்து கொண்டு அதோடு கண்ணாமூச்சி விளையாடும் வேலையைக் கிறிஸ்தவர்கள் விட்டுவிடுவது நல்லது.
வரலாற்றை மறுத்து உண்மைக்கு மாறான இந்தக் கட்டுரை வீண் வாதமே!
LikeLike
அப்படி என்றால் கத்தோலிகதிர்கும் கிறிஸ்தவத்திற்கும் சம்பந்தம் இல்லையா.
LikeLike
ரோமன் கத்தோலிக்க மதம் பற்றிய இந்த ஆக்கமே உங்கள் கேள்விக்கு பதிலவளித்து விட்டதே. கத்தோலிக்க மதத்திற்கும் கிறிஸ்தவத்திற்கும் உண்மையில் எந்தத் தொடர்பும் கிடையாது.
LikeLike