ஒரு மனிதனின் சாதனைகள் வேதனை தருவதாக இருக்கக்கூடாது. அவற்றால் மக்கள் பயனடைய வேண்டும். அவை கர்த்தரை மகிமைப்படுத்துவதாக இருக்க வேண்டும். கர்த்தரை மகிமைப்படுத்தாத எதுவும் பெரும் சாதனையாகிவிட முடியாது. இதை ஏன் கூறுகிறேன் என்றால் சாதனைகள் பலவற்றைத் தன் வாழ்க்கையில் செய்த ஒரு நல்ல மனிதர் அவற்றால் கர்த்தர் மகிமைப்பட வேண்டும் என்ற நல்லெண்ணத்தை இழந்துவிட்ட வேதனை தரும் செயலை இப்பகுதியில் எழுதப்போவதால்தான். யார் இந்த மனிதர் என்று நீங்கள் சிந்திக்கலாம். உலகமறிந்த, குறிப்பாக தமிழ்க் கிறிஸ்தவர்களுக்கு நன்கு அறிமுகமான பில்லி கிரேகம்தான். நாம் 2000 த்தைத் தாண்டி நின்றாலும் பில்லி கிரெகம் என்ற தனி மனிதனின் பாதிப்பு கிறிஸ்தவ உலகை இன்றும் சூழ்ந்திருக்கின்றது. பில்லி கிரேகமின் பெயரில் கட்டிடங்கள் இல்லாத தமிழ்க் கிறிஸ்தவ சபைகள், இறையியல் கல்லூரிகள் இன்று இருக்க முடியாது. கீழைத்தேய மேலைத்தேய நாடுகளில் இருந்து பில்லி கிரேகம் இவேஞ்ஜலிக்கல் அசோசியேசன் வருடாந்தரம் நடத்தும் சுவிசேஷ ஊழியர் பயிற்சி மகாநாட்டிற்கு எதிர்பார்ப்போடு ஆயிரக்கணக்கில் இன்றும் போய்க் கொண்டிருக்கிறார்கள். வீடறிந்த, நாடறிந்த சுவிசேஷ ஊழியர் பில்லி கிரேகம்.
இளம் வயதிலேயே ஆர்வத்துடன் கிறிஸ்தவ சுவிசேஷத்தை எடுத்துச் சொல்லி ஆரம்பித்து, கிறிஸ்துவுக்காக வாலிபர்கள் என்ற இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு அதிவிரைவிலேயே வளர்ச்சியடைந்து பில்லி கிரேகம் இவென்ஜலிக்கல் அசோசியேசன் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து உலகமுழுதும் பல நாடுகளில் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு மத்தியில் சுவிசேஷத்தை எடுத்துச் சொல்லும் பணியைச் செய்தவர் பில்லி கிரேகம். அமெரிக்காவின் சார்ள்ஸ் பினி, மூடி போன்றவர்களுக்குப் பின் அவர்களையும் மிஞ்சும் அளவுக்கு பெரும் கூட்டத்திற்கு சுவிசேஷத்தை சொன்னவர் பில்லி கிரேகம். பல நாட்டுப்பெரும் தலைவர்களுடன் தோளோடு தோள் சேர்ந்து உறவாடும் பெருமையையும் பெற்றவர். தன் நாடான அமெரிக்காவில் ஒன்றுக்கு மேற்பட்ட அதிபர்களின் நல்ல நண்பராகவும் இருக்கும் வாய்ப்பையும் அடைந்தவர்.
ரூத்தை திருமணம் செய்து அவர் மூலம் இரண்டு மகன்களுக்கும், ஒரு மகளுக்கும் தகப்பனாயிருந்தார். அவர்களும் கூட இப்போது கிறிஸ்தவ ஊழியத்திலேயே ஈடுபட்டுள்ளனர். உலகில் பல சுவிசேஷக ஊழியர்களும் தன்னைப் பின்பற்றும் அளவுக்குப் புகழ் சேர்த்துக்கொண்ட பில்லி கிரேகம் இன்றைய சுவிசேஷ ஊழியர்களைப்போல பணம் சேர்த்து தன்னை வளர்த்துக் கொள்ளவில்லை. ஜிம் பேக்கர், ஜிம்மி கூசகர்ட் போன்ற சுவிசேஷக ஊழியர்களைப் போலத் தவறான பெண் தொடர்பால் தன் மனைவிக்கு துரோகம் செய்யவில்லை. குடும்ப வாழ்க்கையில் அமைதியையும், ஆனந்தத்தையும் அவர் கண்டார்.
இன்று வயது எழுபதைத் தாண்டி பார்க்கின்சன் வியாதியின் பாதிப்பால் தொடர்ந்தும் ஊழியம் செய்யமுடியாத நிலையில் முடிந்த சிறு காரியங்களை மட்டும் செய்து வாழ்ந்து வருகிறார் பில்லி கிரேகம்.
சாதனைகளைப் பொறுத்தவரையில் பில்லி கிரேகம் இனிச் செய்ய வேண்டியது ஒன்றுமேயில்லை. இத்தனை நல்லம்சங்களைத் தன் வாழ்வில் கொண்டுள்ள பில்லி கிரேகம் செய்த வேதனை தரும் காரியங்கள்தான் என்ன? இந்தக் கேள்வி பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். பில்லி கிரேகம் அப்படி என்ன தவறு செய்துவிட்டார்? என்றுகூட அங்கலாய்க்கலாம். கிறிஸ்தவத்திற்கு கிரேகமின் பங்களிப்பென்ன? என்பதை இனி ஆராய்வோம்.
அர்ப்பண அழைப்பு (Altar Call) சுவிசேஷ ஊழியம்
பெரும் கூட்டத்தைக் கூட்டி சுவிசேஷத்தை அறிவித்து கூட்ட இறுதியில் மக்களைக் கூட்டத்தின் முன் வரவழைத்து கர்த்தரை ஏற்றுக்கொள்ளும் வகையில் கரமுயர்த்தி தீர்மானம் எடுக்க வைக்கும் வழியைத் தன் முன்னோடியான சார்ள்ஸ் பினியைப் பின்பற்றித் தொடர்ந்தவர் பில்லி கிரேகம். இத்தகைய அர்ப்பண அழைப்பு (Altar Call) முறையில் பில்லி பெரு நம்பிக்கை வைத்திருந்தார். இதற்குக் காரணம் பில்லி கிரேகம் பின்பற்றிய இறையியல் கோட்பாடுதான். பாவத்தினால் மனிதனின் சித்தம் பாதிக்கப்படவில்லை என்றும் அது சுதந்திரமாக இயங்கக்கூடிய வல்லமையைக் கொண்டு மனிதன் கர்த்தரை ஏற்றுக்கொள்ளக்கூடிய சக்தியுள்ளதென்றும் பில்லி கிரேகம் உறுதியாக நம்பினார். இந்தப் போதனையை ஆர்மீனியனிசம் என்று அழைப்பார்கள். இது வேதத்திற்கு முரணான போதனை. இப்போதனையின் அடிப்படையில் ஒருவன் இரட்சிப்பை அடைவதற்கு கர்த்தரின் வல்லமையில் தங்கியிருக்க வேண்டும் என்ற வேதபோதனையை நிராகரித்து மனிதன் தனது சித்தத்தைப் பயன்படுத்தி கர்த்தரிடம் வருவதற்கு அவசியமான, தனது சரீரத்தின் மூலமாக செய்யக்கூடிய செயலில் பில்லி கிரேகம் பெரு நம்பிக்கை காட்டினார். இதைக் குறிக்கும் வகையிலேயே அவருடைய பிரசங்கங்களும் இருந்தன. “இவ்வளவு தூரம் வந்துவிட்டு நீங்கள் திரும்பிப் போகலாமா? கர்த்தருக்கும் உங்களுக்கும் இருக்கும் இடைவெளி குறைந்திருக்கிறது. உங்களை நேசித்ததாலேயே கிறிஸ்து கல்வாரிக்குப் போனார். இந்த மேடைக்கு முன் வருவதற்கு உங்களால் முடியாதா? உடனடியாக இப்போதே வாருங்கள்” என்றும், “எனக்குக் கூட்டங்களில் பொதுவான அழைப்புக் கொடுப்பதில் விருப்பமில்லை, கூட்டத்திற்கு வந்திருப்பவர்கள் மனந்திரும்புதலையும் இரட்சிப்பையும் பெற்றுக் கொள்வதற்காகவே வந்திருக்கிறார்கள் என்று அவர்கள் உணரும்படியாக உறுதியான அழைப்புக் கொடுப்பதையே நான் கடமையாகக் கொண்டுள்ளேன்.”1 என்றும் கிரேகம் கூறினார். இவ்வார்த்தைகள், தனது சித்தத்தைப் பயன்படுத்தி மனிதன் கர்த்தரைத் தன் வாழ்க்கையில் ஏற்றுக்கொள்ள முடியும் என்ற கிரேகமின் உறுதியான நம்பிக்கையை விளக்குகின்றன. கிறிஸ்தவன் யார்? என்று விளக்கும் வேதத்தின் அடிப்படைக் கோட்பாட்டிலேயே கிரேகமிற்கு சரியான விளக்கம் இருக்கவில்லை. ஆனால், காலம் செல்லச் செல்ல அர்ப்பண அழைப்பு அநேகருக்கு இரட்சிப்பை அளிக்கவில்லை என்பது கிரேகமிற்குப் புரிந்தது. இருந்தபோதும் அவரால் அவ்வாறு அழைப்புக் கொடுப்பதை நிறுத்த முடியவில்லை. கிரேகம் இதனைத் தொடர்ந்து பின்பற்றியதற்கு ஒரு காரணமிருந்தது. அதை விளக்கும் கிரேகம், “சாதாரண அமெரிக்கர்கள் ஆயிரக்கணக்கான மக்கள் அழைப்பை ஏற்றுக் கூட்டத்தில் முன்னோக்கி வருவதைப் பார்க்கும் போது சுவிசேஷத்தைக் குறித்து சிந்திக்கத் தொடங்குவார்கள்”2 என்றார். ஆகவே, பில்லி கிரேகமைப் பொறுத்தவரையில் ஏதோ ஒருவிதத்தில் அர்ப்பண அழைப்பு உதவுவதாக இருந்தது. வேதம் அதைச் செய்யும்படிப் போதிக்கிறதோ இல்லையோ தனது நோக்கங்களுக்கு அது துணை செய்வதாக இருந்ததால் பில்லி கிரேகம் அதைப் பின்பற்றினார்.
கிரேகம் ஒரு சமய சமரசவாதி (Ecumenist)
பில்லி கிரேகம் கத்தோலிக்க மதத்துடனும் வேதத்தை நிராகரிக்கும் லிபரல் இறையியலாளருடனும் இணைந்து ஊழியம் செய்யத் தொடங்கினார். கத்தோலிக்க மத குருக்கள் அவருடைய கூட்டங்களை ஜெபத்துடன் ஆரம்பித்து வைத்தார்கள். கூட்டங்களில் கரமுயர்த்தி கர்த்தரை ஏற்றுக்கொண்டவர்கள் கத்தோலிக்க சபைகளுக்கு சீடத்துவத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டார்கள். தனது சுவிசேஷக் கூட்டங்களில் கத்தோலிக்க மத குருக்களை கவுன்சலர்களாகவும் பில்லி கிரேகம் நியமிக்கத் தயங்கவில்லை. அதேபோல் லிபரல் இறையியலாளருடன் கிரேகம் பெருந் தொடர்பு வைத்திருந்தார். அவரது கூட்ட மேடைகளை அவர்கள் அதிகளவில் அலங்கரித்தனர். லண்டனில் பெரும் பிரசங்கியாக இருந்த மார்டின் லொயிட் ஜோன்ஸ் 1954 இல் கிரேகமின் பெரும் லண்டனில் சுவிசேஷக் கூட்டத்திற்கு ஆதரவு தரமறுத்ததுடன், கிரேகம் கத்தோலிக்க, லிபரல் தொடர்புகளை அறுத்துக் கொண்டு அர்ப்பண அழைப்புக் கொடுப்பதைக் கைவிட்டால்தான் அக்கூட்டங்களுக்கு ஆதரவு அளிப்பதாகக் கிரேகமிடம் நேரடியாகக் கூறினார். ஆனால், அதற்குப் பின்பு பதிலெழுதிய பில்லி கிரேகம், இவற்றைக் கைவிட்டால் தனது நோக்கங்கள் ஒருபோதும் நிறைவேறாது என்று மட்டும் எழுதினார்.3
லிபரல், கத்தோலிக்கத் தொடர்பு கிரேகமை அதிகளவு பாதித்தது. போப்பரசர் லூயியை ஒரு அருமையான மனிதரென்று கூறிய கிரேகம், கத்தோலிக்க மதமும் கிறிஸ்தவமும் ஒரே சுவிசேஷத்தையே நம்புவதாகக் கூறினார். வேத போதனைகளில் அவருக்கு இருந்த நம்பிக்கையும் குறையத் தொடங்கியது. கர்த்தரின் சிருஷ்டி ஆறு நாட்களில் நிகழ்ந்ததாக தன்னால் நம்ப முடியாதென்று கிரேகம் ஒரு முறை கூறியுள்ளார். இதையும் விட மோசமானது இந்துக்களும், புத்தமதத்தைச் சேர்ந்தவர்களும் கிறிஸ்தவ சுவிசேஷத்தைக் கேட்காமலேயே கர்த்தரை அறிந்து கொள்ள முடியும் என்று கிரேகம் விசுவாசிப்பதுதான். ரொபட் சுளர் என்ற லிபரல் போதகர் கிரேகமைப் பார்த்து, “கிறிஸ்தவ சுவிசேஷத்தையோ, வேதத்தையோ அறியாத மனிதர்களின் இதயத்தில் இயேசு குடிபுக முடியுமென்றா கூறுகிறீர்கள்?” என்று கேட்டபோது கிரேகம் அதற்குப் பதிலாக “ஆம், அதை நான் நிச்சயமாக நம்புகிறேன்” என்று பதிலளித்தார்.4
காலம் செல்லச் செல்ல கிரேகம் படிப்படியாகத் தனது ஆரம்பகால வேத நம்பிக்கைகளைக் கைவிட்டார். வேதக்கோட்பாடுகளைப் பின்பற்றி சத்தியத்திற்காகப் போராடுவது என்ற சுவிசேஷக் கோட்பாட்டின் நிலையை மாற்றி எம்மதமும் சம்மதம், எக்கோட்பாடும் நற்கோட்பாடு என்ற சமய சமரசக் கோட்பாட்டைக் (Ecumenism) கிரேகம் உறுதியாகப் பின்பற்றத் தொடங்கினார்.
பில்லி கிரேகமைப் பொறுத்தவரையில் எந்த சமயக் குழுவும், சபையும் எதைப் பின்பற்றினாலும் கவலை இல்லை. அவர்களுடைய கோட்பாட்டிற்கு எதிராகத் தான் நிற்பதில்லை என்ற முடிவுடன் தனது ஊழியங்களை கிரேகம் நடத்தினார். இவ்வாறு நடந்து கொண்டால் மட்டுமே தனது சுவிசேஷக் கூட்டங்களுக்கு அனைவரும் ஒத்துழைப்புக் கொடுப்பார்கள், வருவார்கள் என்பது கிரேகமுக்குத் தெரிந்திருந்தது. ஆகவே, விசுவாசம் என்ற பெயரில் எந்தளவுக்குக் குறைவான சத்தியத்தைப் பின்பற்ற வேண்டுமோ அதை மட்டுமே கிரேகம் செய்தார். இதையே ஒவ்வொரு சமய சமரசவாதியும் செய்வான். கிரேகமிற்கு பெண்கள் ஊழியத்தைக் குறித்தும் எந்தவித வேத பூர்வமான விசுவாசமும் இருக்கவில்லை. தனது நிறுவனம் நடத்தும் சுவிசேஷ ஊழியர்கள் பயிற்சி மகா நாடுகளில் தனது மகளைப் பிரசங்கம் செய்ய கிரேகம் அனுமதித்தார். சமீபத்தில் நிகழ்ந்த அத்தகைய மகாநாட்டில் கிரேகமின் மகளே பேசினார்.
பில்லி கிரேகமின் வருகையால் சுவிசேஷ ஊழியத்திற்கு மறுமலர்ச்சி ஏற்பட்டிருக்கிறது என்று அறுபது, எழுபதுகளில் நம்பியவர்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்புகள் எல்லாவற்றையும் தவிடுபொடியாக்கி கிரேகம் தனது சந்தர்ப்பவாத செயல்முறைகளாலும், குறைந்தளவிலான இறையியல் கோட்பாட்டு விசுவாசத்தாலும் சுவிசேஷ இயக்கத்திற்கே மாசேற்படுத்தினார். தனது வாழ்வின் இறுதி நாட்களை நோய்வாய்ப்பட்டு அமைதியாகக் கழித்துக் கொண்டிருக்கும் கிரேகம் தனது செயல்களை எண்ணிப் பார்த்து தான் சுவிசேஷ உலகத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை ஆவியின் வழி நடத்தலால் உணரும் வாய்ப்பு ஏற்படுமா? வேதத்தை ஆராய்ந்து பார்த்து அதன் போதனைகளைப் பின்பற்றாமல், எத்தனை நல்ல மனிதனாக இருந்தாலும், தனி மனிதனொருவரின் செல்வாக்கிற்கு நம்மை ஒப்புக்கொடுப்பது எத்தனை ஆபத்து என்பதை பில்லி கிரேகமின் ஊழியம் எடுத்துக் காட்டுகின்றது.
Foot notes:
1. Evangelicalism Divided by Iain Murray, BTP. Page 52
2. ibid. page 76
3. ibid. page 75
4. ibid. page 74