கடவுளின் ஆணை
அதிகாரம் 8 – பாகம் 1
விளக்கம்: லமார் மார்டின்
கடவுளின் ஆணையைப்பற்றிப் போதிக்கும் பாப்திஸ்து விசுவாச அறிக்கையின் மூன்றாம் அதிகாரத்தை இப்போது ஆராய்வோம். முதலாவதாக இவ்வதிகாரம் கடவுளின் ஆணையைப் பற்றிய பொதுவான விளக்கமொன்றை அளிக்கிறது. முதலிரு பாராக்களிலும் இதைக் காணலாம். மூன்றாம் பாராவில் இருந்து ஏழாம் பாராவரை கடவுளின் முன்குறித்தலைப்பற்றிய விளக்கங்களைப் பார்க்கலாம். ஆகவே, முதலில் இவ்வதிகாரத்தின் முதலிரு பாராக்களும் தரும் கடவுளின் ஆணை பற்றிய பொதுவான விளக்கத்தைப் பார்ப்போம்.
பாரா 1: கடவுள் தனது பேரறிவும், பரிசுத்தமும் கொண்ட சுய சித்தத்தின் ஆலோசனையினால் இனி நிகழப்போகிற அனைத்துக் காரியங்களையும் சுதந்திரமாகவும், மாறாத்தன்மையுடனும் நித்தியத்திலிருந்து தாமே தமக்குள்ளாகத் தீர்மானித்திருக்கிறார். (அதாவது எவற்றாலுமே உந்தப்படாது அவர் தன் திட்டங்களை செயற்படுத்துவது மட்டுமன்றி அணுவளவும் மாற்றமின்றி அவரது நோக்கங்கள் அனைத்துமே நிறைவேற்றப்படுகின்றன). அதேவேளை, அவர் பாவத்தின் காரணகர்த்தரோ அல்லது அதைச் செய்வதில் எவருடனும் எந்தக் கூட்டும் உள்ளவரோ (அதற்குப் பொறுப்பானவரோ) அல்ல. அவரது ஆணையின் காரணமாக படைப்புயிர்களின் சித்தத்திற்கு ஊறேற்படாமலும், துணை பொருட்கள் அல்லது இடைக் காரணங்களின் சுதந்திரமான செயற்பாடுகள் நீக்கப்படாமலும் (துணைக்காரணங்கள் இடையூறாக வராமல்), அனைத்துமே அவரால் நிலைநிறுத்தப்படுகின்றன. இவை எல்லாவற்றிலும், அனைத்தின்மீதும் ஆணை செலுத்தி அமைவுறச்செய்யும் கடவுளுடைய ஞானமும், தனது ஆணையை நிறைவேற்றும் அவரது வல்லமையும், நேர்மையும் வெளிப்படுகின்றது. (கடவுளின் நேர்மை என்பது தன் பரிசுத்த குணாதிசயங்களுக்கும் வார்த்தைக்கும் ஏற்றபடி நடக்கும் அவரது நிலை தடுமாறாத்தன்மையைக் குறிக்கும்).
(ஏசாயா 46:10; எபேசியர் 1:11; எபிரேயர் 6:17; ரோமர் 9:15, 18; யாக்கோபு 1:13-15; யோவான் 1:5; அப்போஸ். 4:27-28; யோவான் 19:11; எண்ணாகமம் 23:19; எபேசியர் 1:3-5.)
பாரா 2: நினைத்துப் பார்க்கக்கூடிய அனைத்து சந்தர்ப்பங்களிலும் நடைபெறக்கூடிய அனைத்தையும் கடவுள் அறிந்திருந்தபோதும், எதிர்காலத்தில் அவற்றை அவர் முன்னறிந்திருந்ததனாலோ அல்லது சில சூழ்நிலைகளின் கீழ் அவை எவ்வகையிலாவது நடைபெறும் என்பதாலோ அவர் எதையும் ஆணையிடவில்லை.
(அப்போஸ். 15:18, ரோமர் 9:11-18.)
முதலாவது பாராவின் ஆரம்ப வசனத்தில் கடவுளின் ஆணைபற்றிய பொதுவான விளக்கம் காணப்படுகின்றது. இதுபற்றி நாம் மூன்று கேள்விகளைக் கேட்க வேண்டும். கடவுள் எதை ஆணையிட்டுள்ளார்? எப்போது ஆணையிட்டார்? எவ்வாறு ஆணையிட்டார் என்பதே அக்கேள்விகள்.
முதலாவதாக, கடவுள் எதை ஆணையிட்டார்? நமது விசுவாச அறிக்கை இதற்குப் பதிலாக கடவுள் தமக்குள்ளாக இனி நிகழப்போகின்ற அனைத்துக் காரியங்களையும் தீர்மானித்துள்ளார் என்று கூறுகின்றது. அதாவது, இதற்கு முன்போ அல்லது இனியோ எக்காலத்திலும் கடவுளால் தீர்மானிக்கப்படாமல் எதுவும் எவ்வேளையிலும் நிகழ்ந்ததுமில்லை, இனி நிகழப்போவதுமில்லை. கடவுள் தீர்மானித்திருப்பதாலேயே எதுவுமே நிகழ்கின்றது.
எபேசியர் முதலாம் அதிகாரத்தைப் பார்ப்போம். இவ்வதிகாரம் இரட்சிப்போடு தொடர்புடைய காரியங்களைப்பற்றிப் பேசுகின்றது. இருந்தபோதும் இவற்றிற்கு மத்தியில் கடவுளின் ஆணைபற்றிய பொதுவான விளக்கமொன்றை பவுல் அளிப்பதைப் பார்க்கிறோம். 1:12 இல் – “தமது சித்தத்தின் ஆலோசனைக்குத் தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படியே, நாங்கள் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரமாகும்படி தெரிந்து கொள்ளப்பட்டோம்” என்று பவுல் கூறுகிறார். இவ்வசனம் போதிக்கும் கடவுள் தனது சித்தத்தின்படி நடப்பிக்கும் “எல்லாவற்றின்” ஒரு பகுதியாக கிறிஸ்துவின் மக்களின் இரட்சிப்பு காணப்படுகின்றது. இந்தப் பகுதியின்படி தனது மக்களின் மீட்பை மட்டும் கடவுள் நடப்பிக்கவில்லை. அவர் “எல்லாவற்றையும்” தனது சித்தப்படி நடப்பிக்கிறார். உலகை அதிர வைக்கும் காரியங்களில் இருந்து மிகச் சாதாரணமான காரியங்கள் வரை அனைத்தையும் கடவுள் நடப்பிக்கிறார், ஆணையிட்டுள்ளார். ஆகவேதான் இயேசுவும் மத்தேயு 10:29 இல் “உங்கள் பிதாவின் சித்தமில்லாமல் அடைக்கலான் குருவிகளில் ஒன்றும் தரையில் விழாது” என்றார். மிகச் சாதாரண பறவைகளின் வாழ்க்கை நிகழ்ச்சிகள்கூட கர்த்தரின் திட்டப்படி அவர் நடப்பிக்கும் எல்லாவற்றிலும் உள்ளடங்கியுள்ளன. ஒரு பறவை கூட அவருடைய ஆணைக்குள் அடங்கியிராமல் தரையில் விழ முடியாது.
அடுத்ததாக எப்போது கடவுள் ஆணையிட்டார்? என்ற கேள்விக்கான பதிலைப் பார்ப்போம். நித்தியத்திலிருந்து கடவுள் அனைத்தையும் தமக்குள் தீர்மானித்திருக்கிறார் என்று விசுவாச அறிக்கை கூறுகிறது. இதுவரை நடந்தவை, இனி நடக்கப் போகின்றவை எல்லாவற்றையும் உள்ளடக்கிய கடவுளின் திட்டங்கள், ஆணைகள், நோக்கங்கள் எல்லாவற்றையும் கடவுள் ஒவ்வொரு நாளும் திட்டமிட்டு நடத்தவில்லை. கடவுள் நித்தியமானவராக இருப்பதால் அவருடைய ஆணைகளும் நித்தியமானவையாயிருக்கின்றன.
ஏசாயா 46 ஆம் அதிகாரத்தைப் பாருங்கள். பாபிலோனிய கட்டுப்பாட்டுக்குள் இருந்து இஸ்ரவேலர் விடுதலை செய்யப்படப் போவதையும் பாபிலோனிய ராஜ்ய வீழ்ச்சியையும் குறித்து இப்பகுதி தீர்க்கதரிசனம் கூறுகிறது. பாபிலோனிய விக்கிரகங்களான பேலும், நோபோவும் முதலாம் வசனத்தில் கண்டிக்கப்படுகின்றனர். யெகோவாவும், கள்ளக் கடவுளர்களும் அப்பகுதியில் ஒப்பிடப்படுகின்றனர். இப்பகுதியின் 9-10 வசனங்களில் பின்வருமாறு வாசிக்கிறோம்: “முந்திப் பூர்வ காலத்தில் நடந்தவைகளை நினையுங்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை; நானே தேவன், எனக்குச் சமானம் இல்லை. அந்தத்திலுள்ளவைகளை ஆதி முதற்கொண்டும் இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகால முதற்கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலை நிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன். . .” என்று கர்த்தர் சொல்கிறார். 10ஆம் வசனம் இவ்வாறு ஆரம்பிக்கிறது – அந்தத்திலுள்ளவைகளை ஆதி முதற் கொண்டும் – என்று. எப்போது கடவுள் ஆணையிட்டார்?, எப்போது தன் திட்டங்களை உருவாக்கினார்?, எப்போது தன் ஆலோசனைகளை நியமித்தார்? கடவுள் இப்பகுதியில் சொல்கிறார், தான் ஆதியில் இருந்தே இவற்றை செய்திருப்பதாக. இதைத்தான் விசுவாச அறிக்கை, நித்தியத்திலிருந்து அவர் அனைத்தையும் செய்திருப்பதாகப் போதிக்கிறது. இதேபோல் எபேசியர் 3:11 இல் பவுல் கர்த்தருடைய நித்திய திட்டங்களைப் பற்றி பேசுகிறார். ஆகவே வேதம் கர்த்தர் நித்தியத்திலிருந்து இருப்பதுபோல அவரது ஆணைகளும் நித்தியத்திலிருந்தே இருக்கின்றன என்று போதிக்கின்றது.
அடுத்ததாக கர்த்தர் எவ்வாறு ஆணையிட்டுள்ளார்? என்ற கேள்விக்கான பதிலைப் பார்க்க வேண்டும். விசுவாச அறிக்கை, கடவுள் “தனது சுயசித்தத்தின் பேரறிவும், பரிசுத்தமுமான திட்டத்தினால். . . அனைத்துக் காரியங்களையும் சுதந்திரமாகவும், மாறாத்தன்மையுடனும் தீர்மானித்திருக்கிறார்” என்று கூறுகின்றது. முதலாவதாக, கர்த்தரின் திட்டங்கள் அனைத்தும் அவருடைய சுயசித்தத்தின் பேரறிவாலும், பரிசுத்தமுமான திட்டங்களினாலும் ஏற்படுத்தப்பட்டன என்று கூறுகின்றது. எவற்றைக் கர்த்தர் ஆணையிட விரும்பினாரோ அவற்றை அவர் ஆணையிட்டார். அதைச் செய்வதற்கு அவருக்கு யாருடைய துணையோ, உந்துதலோ தேவைப்படவில்லை. எல்லாவற்றையும் அவர் தமக்குள்ளும் தனது சித்தப்படியும் ஆணையிட்டார். பவுல் ரோமர் 9:15 இலும் 9:18 இலும், அவர் எவன் மேல் இரக்கமாயிருக்க சித்தமாயிருக்கிறாரோ அவன் மேல் இரக்கமாயிருக்கிறார் என்றும் எவன் மேல் உருக்கமாயிருக்க சித்தமாயிருக்கிறாரோ அவன் மேல் உருக்கமாயிருக்கிறார் என்றும் கர்த்தரைப்பற்றிப் பேசுகிறார். நாம் ஏற்கனவே பார்த்த ஏசாயா பகுதி 46:10இல் கர்த்தர் என் ஆலோசனைகள் நிலைத்து நிற்கும், எனக்கு சித்தமானவைகளைச் செய்வேன் என்று கூறுகிறார். சங்கீதம் 33:11 – “கர்த்தருடைய ஆலோசனைகள் நித்திய காலமாக நிற்கும்” என்று கூறுகின்றது. எபிரேயர் 6:17 – “அந்தப்படி, தேவனும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவைகளைச் சுதந்தரித்துக் கொள்கிறவர்களுக்குத் தமது ஆலோசனையின் மாறாத நிச்சயத்தைப் பரிபூரணமாய்க் காண்பிக்கும்படி சித்தமுள்ளவராய், ஒரு ஆணையினாலே அதை ஸ்திரப்படுத்தினார்” என்று கூறுகின்றது. வேதம் கர்த்தருடைய மாறாத்தன்மையையும், அவருடைய ஆணைகளின் மாறாத்தன்மையையும் சரிசமமாக அமைத்துப் பேசுகின்றது. கர்த்தர் மாறாதவராக இருப்பதால் அவரது ஆணைகளும் ஒருபோதும் மாறாதவை. இதுவரை முதலாம் பாராவின் முதல் வசனம் கர்த்தரின் ஆணையைப்பற்றிய பொதுவான போதனையைத் தந்ததைப் பார்த்தோம். கர்த்தர் எதை ஆணையிட்டார் – நிகழப்போகிற அனைத்துக் காரியங்களையும். எவ்வாறு கர்த்தர் இவற்றை ஆணையிட்டார்? – பேரறிவும், பரிசுத்தமும் கொண்ட தனது சுயசித்தத்தின் ஆலோசனையினால்.
இதுவரை நாம் பார்த்த உண்மைகள் சில முக்கியமான கேள்விகளை எழுப்புகின்றன. நாம் இதுவரை சொன்னவை உண்மையானால் அவை கர்த்தரைப் பாவத்தின் காரணகர்த்தாவாக அல்லவா சுட்டிக் காட்டும்? அவருடைய சிருஷ்டியான மனிதன் சுயசித்தத்தைக் கொண்டிருந்து பாவம் செய்பவனாக இருந்தால், இதுவரை நாம் பார்த்த உண்மைகள் அதோடு எப்படிப் பொருந்தும்?
இக்கேள்விக்கு விடையளிப்பதற்காகவே விசுவாச அறிக்கை மேலும் சில விளக்கங்களைத் தருகிறது. இப்பகுதியை நாம் மிகவும் கவனமாக ஊன்றிப்படிக்க வேண்டும். “அதேவேளை, அவர் பாவத்தின் காரணகர்த்தரோ அல்லது அதைச் செய்வதில் எவருடனும் எந்தக்கூட்டும் உள்ளவரோ (அதற்குப் பொறுப்பானவரோ) அல்ல. அவரது ஆணையின் காரணமாக படைப்புயிர்களின் சித்தத்திற்கு ஊறேற்படாமலும், துணை பொருட்கள் அல்லது இடைக் காரணங்களின் சுதந்திரமான செயற்பாடுகள் நீக்கப்படாமலும் (துணைக்காரணங்கள் இடையூறாக வராமல்), அவரால் நிலைநாட்டப்படுகின்றன. இவை எல்லாவற்றிலும், அனைத்தின் மீதும் ஆணை செலுத்தி அமைவுறச் செய்யும் கடவுளுடைய ஞானமும், தனது ஆணையை நிறைவேற்றும் அவரது வல்லமையும், நேர்மையும் வெளிப்படுகின்றது. (கடவுளின் நேர்மை என்பது தன் பரிசுத்த குணாதிசயங்களுக்கும் வார்த்தைக்கும் ஏற்றபடி நடக்கும் அவரது நிலை தடுமாறாத் தன்மையைக் குறிக்கும்).”
விசுவாச அறிக்கை கடவுள் எந்தவிதத்திலும் பாவத்திற்குக் காரணகர்த்தாவோ அல்லது அதைச் செய்வதற்கு எவருக்கும் அவர் துணைபோவதோ இல்லை என்று போதிக்கிறது. ஆனால் மனித ஞானமோ வேறுவிதமாக வாதிடும்.
கடவுள் எல்லாவற்றையும் ஆணையிட்டு நிறைவேற்றுபவராக இருந்தால் அவர் நிச்சயம் பாவத்திற்குக் காரணமானவராகத்தான் இருக்க வேண்டும் என்று அது வாதிடும். ஆனால், விசுவாச அறிக்கையை எழுதிய நமது முன்னோர்கள் அது முழுத்தவறு என்று கூறுகின்றனர். கடவுள் நடக்கப்போகும் எல்லாவற்றையும் முன்கூட்டியே ஆணையிட்டிருந்தாலும் அவர் பாவத்திற்குக் காரணமானவரல்ல என்பது அவர்களது வாதம். விசுவாச அறிக்கை இங்கே வேதம் போதிப்பதையே வலியுறுத்திக் கூறுகிறது. சங்கீதம் 5:4 – நீர் துன்மார்க்கத்தில் பிரியப்படுகிற தேவன் அல்ல; தீமை உம்மிடத்தில் சேர்வதில்லை என்று கர்த்தரைப்பற்றிக் கூறுகிறது. அத்தோடு ஆபகூக் 1:13; யோவான் 1:5 ஆகிய வசனங்களையும் வாசிக்கவும். கர்த்தர் பாவத்திற்குக் காரணமானவரா? என்ற கேள்விக்கு யாக்கோபு அளிக்கும் பதிலைப் பாருங்கள். யாக்கோபு 1:13 – “சோதிக்கப்படுகிற எவனும் தான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவரையும் அவர் சோதிக்கிறவருமல்ல” என்கிறார் யாக்கோபு.
யாக்கோபு தெளிவாகவே கர்த்தர் பாவத்துக்குக் காரணகர்த்தா அல்ல என்று போதிக்கின்றார். ஆனால், மனித ஞானம் இதை ஏற்றுக்கொள்ளாது இதற்கு எதிராகவே பேசும். இருந்தாலும் எல்லாம் தெரிந்த வேதம் கூறுவதே உண்மை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கர்த்தரின் ஆணைபற்றிய உண்மையையும், கர்த்தர் பாவத்திற்குக் காரணகர்த்தா அல்ல என்ற உண்மையையும் நாம் புரிந்து கொள்ள சிறிது கஷ்டப்படலாம். நமது அறிவு கர்த்தருடைய ஞானத்தைவிடக் குறைவானது. அதற்காக நாம் கர்த்தருடைய வார்த்தையைக் குறை காணமுயலக் கூடாது. மனித ஞானத்தைவிட பரிசுத்த வேதமே சத்தியமானதும், நம்மேல் அதிகாரம் செலுத்துவதாகவும் உள்ளது. ஆகவே, இந்த இரு உண்மைகளையும் வேதம் போதிக்கும் சத்தியமாக நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
கர்த்தருடைய ஆணைபற்றிய போதனை இன்னுமொரு கேள்வியையும் எழுப்புகிறது. அதாவது, கர்த்தருடைய ஆணை மனிதனுடைய சித்தத்திற்கு மாறாக நடப்பதாக அல்லவா தெரிகிறது? என்பதே அக்கேள்வி. கர்த்தர் எல்லாவற்றையும் முன்கூட்டியே ஆணையிட்டிருந்தால் மனிதன் சாவி கொடுக்கப்பட்ட ஒரு பொம்மை போல அல்லவா நடந்து கொள்வான் என்று கேட்கலாம். விசுவாச அறிக்கை படைப்புயிர்களின் சித்தத்திற்கு கர்த்தருடைய ஆணை எந்தவிதத்திலும் ஊறேற்படுத்துவதில்லை என்று போதிக்கின்றது. துணைப் பொருட்கள் அல்லது இடைக்காரணங்கள் எதுவும் அவரது ஆணையால் தடைசெய்யப்படாமல் சுதந்திரமாகவே இயங்குகின்றன. மனிதன் பாவத்தைச் செய்யும்போது, அது கர்த்தருடைய ஆணைக்குட்பட்டிருந்த போதும், மனிதன் தனது பாவத்திற்குத் தானே காரணமானவனாக இருந்து தான் விரும்பியதையே செய்கிறான்.
அப்போஸ்தல நடபடிகள் 2:22 இல் பேதுரு இஸ்ரவேலரைப் பார்த்து, “கிறிஸ்து மனிதர்களால் சிலுவையில் அறையும்படிக்கு கடவுள் தனது சித்தத்தின்படி முன்கூட்டியே தீர்மானித்துள்ளார்” என்று கூறுகிறார். கிறிஸ்துவை சிலுவையில் அறைந்தவர்கள் தாம் விரும்பியதை, தமது பாவத்தின் காரணமாகச் செய்தபோதும், கிறிஸ்துவின் சிலுவை மரணம் கர்த்தருடைய ஆணைக்குள் அடங்கியிருக்கிறது என்ற வேத உண்மையை நாம் இங்கே பார்க்கிறோம். இதே உண்மையைப் போதிக்கும் அப்போஸ். 4:27, 28; மத்தேயு 18:7 ஆகிய வசனங்களையும் பார்க்கவும்.
கர்த்தரின் ஆணையின் காரணமாக மனிதர்கள் தங்களுடைய சித்தத்திற்கு விரோதமாக நடந்து கொள்வதாக நாம் எண்ணிவிடக்கூடாது. மனிதர்கள் எப்போதும் தாம் விரும்பியதை விரும்பியபடி தொடர்ந்து செய்துவருகிறார்கள். இதுவே வேதம் போதிக்கும் உண்மை. அதுமட்டுமல்லாமல் மனிதன் தன்னுடைய விருப்பப்படி செய்யும் காரியங்களையும் கர்த்தர் தனது நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்கிறார் என்று விசுவாச அறிக்கை கூறுகிறது. இது கர்த்தருடைய மகா ஞானத்தை விளக்குவதாக அமைகிறது. இது கர்த்தரால் மட்டுமே ஆகும் காரியம். உலகில் எதுவுமே தற்செயலாக நடப்பதில்லை. அனைத்திற்குப் பின்னாலும் தேவன் இருக்கிறார்.
கர்த்தருடைய ஆணையைத் தவறாகப் புரிந்து கொண்டவர்கள், அவர் எல்லாவற்றையும் முன்கூட்டியே அறிந்திருப்பதால்தான் அவரால் அனைத்தையும் ஆணையிட முடிகிறது என்று கூறுவர். மனிதன் என்ன செய்யப்போகிறான் என்பதை முன்கூட்டியே பார்த்து அவை நடக்கப்போகின்றன என்று தெரிந்திருந்ததால்தான் கர்த்தரால் அவற்றை பின்பு நடக்கும்படியாக ஆணையிட முடிந்தது என்று இவர்கள் கூறுவர். இந்தச் சிந்தனைப்போக்கு தப்பானது. இவ்வகையில் சிந்திப்பவர்களே பெலேஜியன், ஆர்மீனியன் கோட்பாடுகளை பின்பற்றுபவர்கள். பதினேழாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த பாப்திஸ்துகளின் (General Baptist) பலரும் இதை நம்பினர். இதனை நம்புபவர்கள் கிறிஸ்தவர்கள் மத்தியில் இன்று அதிகமாகவே இருக்கிறார்கள். இரண்டாம் பாரா இப்போதனையை மறுத்து அதற்குத் தகுந்த பதிலை அளிக்கிறது. அதை அடுத்த இதழில் விபரமாகப் பார்ப்போம்.