கடவுளின் ஆணை
அதிகாரம் 8 – பாகம் 2
விளக்கம்: லமார் மார்டீன்
நாம் இப்போது கடவுளின் ஆணையைப் பற்றி விசுவாச அறிக்கை தரும் போதனைகளின் இரண்டாம் பாராவைக் கவனிப்போம். சிலர் கடவுள், நடக்கப்போகிற எல்லாவற்றையும் முன்கூட்டியே அறிந்திருப்பதால்தான் அவரால் எல்லாவற்றையும் ஆணையிட முடிகிறது என்று கூறுவர். கடவுள், எதிர்காலத்தில் மனிதன் எதைச் செய்யப் போகிறான் என்று உற்று நோக்கிப் பார்த்து, அவ்வறிவின் அடிப்படையிலேயே தனது ஆணைகளையிட்டார் என்று இவர்கள் கூறுவர். இந்தவிதத்திலேயே கடவுளின் ஆணைகளுக்கு இவர்கள் விளக்கம் கொடுக்கிறார்கள். பெலேஜியன், ஆர்மீனியன் கோட்பாடுகளைப் பின்பற்றுபவர்கள் இவ்வாறே சிந்திக்கிறார்கள். பதினேழாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த பாப்திஸ்துகளில் சிலரும் இவ்வாறே சிந்தித்தனர் (General Baptist). இன்று கிறிஸ்தவ உலகில் இதைத் தவறாகத் தொடர்ந்து நம்பிக் கொண்டிருக்கிறவர்கள் அநேகர். இரண்டாவது பாரா என்ன செல்கிறது என்று முதலில் பார்ப்போம்.
பாரா 2: நினைத்துப் பார்க்கக்கூடிய அனைத்து சந்தர்ப்பங்களிலும் நடைபெறக்கூடிய அனைத்தையும் கடவுள் அறிந்திருந்தபோதும், எதிர்காலத்தில் அவற்றை அவர் முன்னறிந்திருந்ததனாலோ அல்லது சில சூழ்நிலைகளின் கீழ் அவை எவ்வகையிலாவது நடைபெறும் என்பதாலோ அவர் எதையும் ஆணையிடவில்லை.
(அப்போஸ். 15:18, ரோமர் 9:11-18).
விளக்கக்குறிப்பு: அனைத்தைப்பற்றிய அறிவையும் தன்னுள் கொண்டிருக்கிற கடவுள், எது? எங்கே? எப்படி? நடக்கப்போகிறது என்று நிச்சயமாகவே தெரிந்து வைத்திருக்கிறார். அவர் அறியாத சூழ்நிலைகளோ, சந்தர்ப்பமோ இல்லை. மத்தேயு 11:21 இல், “கோரோசினே! உனக்கு ஐயோ, பெத்சாயிதாவே! உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும், சீதோனிலும் செய்யப்பட்டிருந்ததானால், அப்பொழுதே இரட்டுடுத்திச் சாம்பலில் உட்கார்ந்து மனந்திரும்பியிருப்பார்கள்” என்று இயேசு சொன்னதை வாசிக்கிறோம். இயேசு இங்கே ஒன்று நடந்திருந்தால் மற்றதும் நிச்சயமாக நடந்திருக்கும் என்று கூறுகிறார். ஆனால், அப்படி நடக்கவில்லை. “நடந்திருந்தால்” என்று அவர் கூறுவதைக் கவனிக்கவும். இதேவிதமாக 23 ஆம் வசனத்திலும், “கப்பர்நகூமே, நீ பாதாளப்பரியந்தம் தாழ்த்தப்படுவாய்; உன்னில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் சோதோமிலே செய்யப்பட்டிருந்ததானால், அது இந்நாள்வரைக்கும் நிலைத்திருக்கும்” என்று இயேசு கூறியிருப்பதை வாசிக்கிறோம். இது நடந்திருக்குமானால் மற்றதும் அதைத்தொடர்ந்து நடந்திருக்கும் என்று கர்த்தருக்குத் தெரிந்திருந்தது. ஆகவேதான், விசுவாச அறிக்கை, “அனைத்து சந்தர்ப்பங்களிலும் நடை பெறக்கூடிய அனைத்தையும் கடவுள் அறிந்திருக்கிறார்” என்று கூறுகிறது.
தொடர்ந்து விசுவாச அறிக்கை, “எதிர்காலத்தில் அவற்றை (அவை இப்படித்தான் நடக்கும் என்று) முன்னறிந்திருந்ததனாலோ அல்லது சில சூழ்நிலைகளின் கீழ் (அடிப்படையில்) அவை எவ்வகையிலாவது நடைபெறும் என்பதாலோ அவர் எதையும் ஆணையிடவில்லை” என்று விளக்குகின்றது. அதாவது, சில சந்தர்ப்பங்களின் அடிப்படையில் எதிர் காலத்தில் இப்படித்தான் காரியங்கள் நடக்கப் போகின்றன என்பதை ஏற்கனவே அறிந்து வைத்திருந்து கடவுள் தனது ஆணைகளையிடவில்லை என்று விசுவாச அறிக்கை விளக்குகின்றது.
உதாரணத்திற்கு ரோமர் 9 ஆம் அதிகாரத்தை எடுத்துக்கொள்வோம். இவ்வதிகாரம் தேவனுடைய தெரிந்து கொள்ளுதலைப்பற்றிப் பேசுகிறது. இவ்வதிகாரத்தின் 11 ஆம் வசனத்தில் பவுல் என்ன சொல்கிறார் என்று பாருங்கள். ஈசாக்கின் இரு பிள்ளைகளான யாக்கோபுவையும் ஏசாவையும் பற்றி எழுதும் பவுல், “பிள்ளைகள் இன்னும் பிறவாமலும், நல்வினை தீவினை ஒன்றும் செய்யாமலுமிருக்கையில், தேவனுடைய தெரிந்துகொள்ளுதலின்படியிருக்கிற அவருடைய தீர்மானம் கிரியைகளினாலே நிலை நிற்காமல் அழைக்கிறவராலே நிலை நிற்கும்படிக்கு . . . சொல்லப்பட்டது” என்று கூறுகிறார். ஆகவே, இப்பகுதியின்படி தேவனின் ஆணைகள் யாக்கோபோ, ஏசாவோ செய்த எந்த நல்வினை, தீவினைகளின் அடிப்படையிலும் அமையவில்லை. தேவனுடைய தெரிந்துகொள்ளுதல் அவர்கள் இருவரிலும் காணப்பட்ட எதன் அடிப்படையிலும் அமையவில்லை என்பதை இவ்வார்த்தைகள் தெளிவாக விளக்குகின்றன. கடவுள் ஏன் யாக்கோபு மீது அன்பு வைத்து ஏசாவை நிராகரித்தார் என்பதல்ல இங்கு பிரச்சனை. அவர் யாக்கோபைத் தெரிந்து கொண்டதும், ஏசாவை நிராகரித்ததும் அவர்களில் காணப்பட்ட எந்த நல்லது கெட்டதின் அடிப்படையிலோ அல்லது அவர்கள் பிற்காலத்தில் என்ன செய்யப்போகிறார்கள், எப்படி வாழப்போகிறார்கள் என்பதை அறிந்து கொண்டதாலோ அல்ல என்பதைத்தான் இப்பகுதி ஆணித்தரமாக நம்முன் எடுத்து வைக்கிறது.
கடவுள் 13 ஆம் வசனத்தில் சொல்கிறார், “யாக்கோபுவை சிநேகித்து ஏசாவை வெறுத்தேன்” என்று. அவர்களில் காணப்பட்ட எதன் அடிப்படையிலும் இல்லாமல் தனது சொந்த இரக்கத்தின் அடிப்படையிலேயே கடவுள் இப்படிச் செய்தார் என்பதை 16 ஆம் வசனம் தெளிவாக விளக்குகிறது. “ஆகையால் விரும்புகிறவனாலும் அல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம்.” அத்தோடு 18 ஆம் வசனத்தில், “தேவன் எவன் மேல் இரக்கமாயிருக்க சித்தமாயிருக்கிறாரோ அவன் மேல் இரக்கமாயிருக்கிறார், எவனைக் கடினப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனைக் கடினப்படுத்துகிறார்” என்று வாசிக்கிறோம். இவ்வசனங்கள் கடவுள் தனக்குப் பிரியமானபடி யாராலும் எவற்றாலும் உந்தப்படாமல் தனது ஆணைகளையிட்டுள்ளார் என்று போதிக்கின்றன.
ஜீ,ஐ. வில்லியம்சன் (G. I. Williamson) என்பவர் வெஸ்ட்மின்ஸ்டர் விசுவாச அறிக்கைக்கான விளக்கத்தில் எழுதியிருப்பதில் ஒரு பகுதியைப் பார்ப்போம்:
எதுவுமே நடப்பதற்குமுன் அவை நிச்சயமாக நடக்கும் என்று கடவுள் அறிந்து வைத்திருக்கிறாரா? என்ற கேள்விக்கு எல்லாக் கிறிஸ்தவர்களும் ஆமாம் என்றுதான் பதில் கூறுவார்கள். ஒரு காரியம் நடப்பதற்கு முன் அது நிச்சயமாக நடக்கும் என்பதைக் கடவுள் அறிந்து வைத்திருப்பாரானால், அக்காரியம் நிச்சயமாக நடக்கும் என்பதைத் தீர்மானிப்பது யார்? என்று நாம் கேட்கலாம். இதற்கு ஒரே பதில்தான் இருக்க முடியும் – அதாவது, கடவுளே அதை நடக்கும்படிச் செய்கிறார் என்பதே அப்பதில். ஆகவே, கடவுளுக்கு நிச்சயமாக எதுவும் நடக்கும் என்று தெரிந்திருப்பதற்குக் காரணம் அவற்றின் நிகழ்வுக்கு அவரே காரணமாக இருப்பதுதான். இந்த உண்மை தவிர்க்க முடியாதது. தம்மால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் குற்றஞ் சாட்டப்படாதவர்களாக பரிசுத்தமாக இருப்பார்கள் என்பதைக் கடவுள் அறிந்திருக்கிறார். இவ்வாறாக அவர் அறிந்திருப்பதற்குக் காரணம் அவரே உலகத் தோற்றத்திற்கு முன்பாக கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்து கொண்டிருப்பதால்தான். தனது முன்குறித்தலே தன்னுடைய மக்களுடைய பரிசுத்தத்திற்குக் காரணமாயிருக்கிறது என்பதை அவர் அறிந்து வைத்திருக்கிறார். அவரை நாம் விசுவாசிக்கப் போகிறோம் என்பதை அறிந்து வைத்திருப்பதால் அவர் நம்மைத் தெரிந்து கொள்ளவில்லை. அவர் நம்மைத் தெரிந்து கொண்டிருப்பதால்தான் நாம் அவரை நிச்சயமாக விசுவாசிப்போம் என்பதைத்தான் அவர் அறிந்து வைத்திருக்கிறார். இங்கே மனிதனின் எந்தவிதமான கிரியைகளுக்கும் இடமில்லை. ஆகவே, கர்த்தரே எல்லா மகிமையையும் அடையட்டும்.”
(இக்கட்டுரை ஆசிரியர் லமார் மார்டின் அமெரிக்காவில் நியூ ஜேர்சியில் உள்ள திரித்துவ பாப்திஸ்து சபையில் போதகராக இருக்கிறார்).