இன்று ஆராதனையில் இசைக்கும், இசைக்கருவிகளுக்கும் அளவுக்கு அதிகமாக இடம் கொடுக்கப்படுகிறது. இசையும் ஆராதனையின் ஒரு அம்சம் என்று தவறாகக் கருதப்படுகிறது. கர்த்தர் ஒருபோதும் இசையையும், இசைக்கருவிகளையும் ஆராதனையின் அம்சங்களாக வேதத்தில் வெளிப்படுத்தவில்லை. ஜெபம், பிரசங்கம், பாடல்கள், வேதவாசிப்பு, திருவிருந்து, திருமுழுக்கு, காணிக்கை எடுத்தல் ஆகியனவையே ஆராதனையின் முக்கிய அம்சங்கள். இசைக்கு இதில் இடம் கொடுக்கப்படவில்லை. அதனால் ஆராதனையில் இசை இருக்கக்கூடாது என்று நான் சொல்ல வரவில்லை. இசை ஆராதனையின் ஒரு முக்கிய அம்சம் அல்ல; முக்கிய அம்சமாகக் கருதப்படக்கூடாது. அது நாம் கர்த்தரின் மகிமையைப் பாடுவதற்கு உதவும் வெறும் கருவியாக மட்டுமே இருக்க வேண்டும். உதாரணத்திற்கு, பிரசங்கம் ஆராதனையின் முக்கிய அம்சம். ஆனால், பிரசங்க மேடை ஆராதனையின் முக்கிய அம்சமல்ல. அதற்காக பிரசங்க மேடை இருக்கக்கூடாது என்று சொல்வோமா? பிரசங்க மேடை பிரசங்கம் செய்ய நமக்கு உதவும் வெறும் கருவியே. பிரசங்கத்தில்தான் நாம் கவனம் செலுத்த வேண்டுமே தவிர பிரசங்க மேடை எத்தனை அழகாக இருக்க வேண்டும் என்பதில் அல்ல. இதைப்போலத்தான் ஆராதனையில் நாம் ஆவியோடும், உண்மையோடும் கர்த்தரைப் பாடித் துதிப்பதில்தான் அதிக கவனம் செலுத்த வேண்டுமே தவிர இசைக்கருவிகளில் அல்ல.
இன்று அநேகர் தங்களுக்கு வாத்தியக் கருவிகள் வாசிக்கும் திறமை இருப்பதாகவும் அதற்கு ஆராதனையில் இடம் கொடுக்க வேண்டும் என்றும் வாதாடுகிறார்கள். வயலின், வில்லுப் பாட்டு, கிட்டார் அடிக்கும் இளசுகள் எல்லாம் (பெரிசுகளும்) இந்த நோக்கத்திலேயே சபைக்கு வருகிறார்கள். எங்கள் திறமையைக் காட்ட ஆரதைனையில் இடம் கொடுக்காவிட்டால் எங்களுடைய வரங்கள் என்னாவது? என்று கேட்கிறார்கள். ஆராதனை என்பது நமது வரங்களைக் காட்டும் சந்தர்ப்பம் அல்ல; நமது இருதயத்தையும், மனத்தையும் கர்த்தருக்கு முன் திறந்து துதிக்கும் வேளை என்பது இதுகளுக்குப் புரிவதில்லை. எந்தவிதத்திலும் நம்முடைய திறமைகளை ஆராதனையில் காட்டும் முயற்சியில் ஈடுபடக்கூடாது என்பதே இவர்கள் சிந்தையில் படுவதில்லை. மனத்தாழ்மையுடனும், இருதய சுத்தத்துடனும் கர்த்தருக்கு முன் அவர் கேட்கும் ஆராதனையை அவர் வார்த்தைப்படி ஆவியின் வழிநடத்தலோடு வழங்க வேண்டும். நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள ஈவுகளைப் பயன்படுத்தும் இடமல்ல ஆராதனை வேளை.
பாப்திஸ்துகள் பல்லவிபாடி பெரிசுபடுத்தும் பெரும் பிரசங்கியாராகிய ஸ்பர்ஜன் தன் சபையில் இசைக்கருவிகளுக்கு இடம் கொடுக்கவில்லை. ஏன் தெரியுமா? இன்றுபோல் அன்றும் இசைக்கருவிக்கு அநாவசியமான இடத்தைக் கொடுக்கும் கூட்டம் சபைகளில் பெருகத் தொடங்கியதால்தான். “இசைக்கருவிகள் தன்னைப் படைத்தவனைப் பாடட்டும், நாம் நம்மைப் படைத்தவரைப் பாடுவோம்” என்று இசைக்கருவிகளுக்காக அலைந்த ஒருவரைப் பார்த்து ஸ்பர்ஜன் அந்தக்காலத்தில் சொன்னார். இசையும், இசைக்கருவியும் நமக்கு நிச்சயம் உதவும். அவற்றைப் பயன்படுத்த வேண்டிய விதத்தில் ஆராதனையில் அளவோடு அடக்கி வாசிக்க நமக்கு தேவ பயம் இருக்க வேண்டும். காயினைப் பின்பற்றி கர்த்தருடைய சாபத்தை சம்பாதித்துக் கொள்ளாதே!