அன்புக்குரிய வாசகர்களே! ஆத்துமாக்கள் கர்த்தரை ஆராதித்து வாழ்வதற்காகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று வேதம் போதிப்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். ஆத்துமாவுக்கு கர்த்தர் கொடுத்திருக்கும் அத்தனை முக்கியமான பணியை சபைகளும், ஆத்துமாக்களும் கர்த்தருக்குப் பிடித்தமில்லாத வழிகளில் அவர் முன் செய்து வருகின்றார்கள். நீதியின் தேவனும், பாவத்தை சகிக்காத நம் பரமனும் ஆத்துமாக்களின் அறிவற்ற செயல்களைப் பார்த்து சிரித்துக்கொண்டுதான் இருக்கிறார். நியாயத்தீர்ப்பு நாளில் கர்த்தருக்கு முன் நாம் செலுத்திய ஆராதனை அத்தனைக்கும் கணக்குக் கொடுக்காமல் தப்ப முடியாது. அத்தனை முக்கியமான ஆராதனையை கர்த்தர் நடத்தும் வழியில் செலுத்துவது அவசியமல்லவா? அதனால் இவ்விதழில் பல ஆக்கங்கள் ஆராதனையைப் பற்றி ஆராய்கின்றன. இதன் மூலம் கர்த்தர் உங்களோடு பேசி உங்கள் ஆராதனையை சிறப்புறச் செய்யட்டும்.
இரகசியக் கிறிஸ்தவர்கள் என்ற ஒரு கூட்டத்தை சிலர் இன்று உருவாக்கி ஆத்துமாவுக்கு பொருந்துகிற விதத்தில் கிறிஸ்தவத்தை மாற்றி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இது வேதத்தில் காண முடியாத ஒரு கூட்டம் என்பது பலருக்குத் தெரிவதில்லை. துணிந்து இயேசுவுக்கு சாட்சியா இருக்க மறுப்பவர்கள் விசுவாசிகளாக இருக்க முடியாது. கிறிஸ்துவை இரகசியமாக அனுபவிக்க முடியாது; அவருடைய பெயரைச் சொல்லிக்கொண்டு இரகசியமாக வாழவும் கூடாது. அது பற்றி இவ்விதழில் எழுதியிருக்கிறோம்.
தொடர்ந்து வரும் திருச்சபை வரலாறு பற்றிய ஆக்கம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்று நம்புகிறோம். சீர்திருத்தவாதிகளையும் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறோம். இவ்விதழ் ஜோன் விக்ளிப்பின் சரிதத்தோடு வருகிறது. பல வருடங்கள் வந்து கொண்டிருந்த கேரியின் வாழ்க்கை சரிதம் இவ்விதழோடு முடிவுக்கு வருகிறது. அம்மகாமனிதரின் வாழ்க்கை அநேகரைச் சிந்திக்க வைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இடையில் வராமலிந்த 1 கொரிந்தியர் 12-14 வேதப்பகுதியின் விளக்கம் மறுபடியும் இவ்விதழில் தொடர்கிறது. இவற்றோடு வழமையாக வரும் சீர்திருத்த போதனைகளை அளிக்கும் 1689 விசுவாச அறிக்கைக்கான விளக்கங்களும், கிறிஸ்தவ கோட்பாடுகளும் தொடர்கின்றன. உங்களுடைய ஆத்மீக வாழ்கை இவற்றால் பலமடையட்டும். அதுவே எங்களுடைய எதிர்பார்ப்பும், ஜெபமுமாகும்.
– ஆசிரியர்