அன்புக்குரிய வாசகர்களே! ஏழு வருடங்களுக்குப் பிறகு பத்திரிகையின் அமைப்பை நாம் மாற்றி அமைத்திருக்கிறோம். பத்திரிகையை சுலபமாகக் கையில் கொண்டு போவதற்கு வசதியாக இருக்கும் என்பதற்காகவும், பத்திரிகை போகும் வழியில் உருமாற்றமடையாமல் எல்லா நாடுகளையும் போய்ச்சேர வேண்டுமென்பதற்காகவும் இந்தமாற்றத்தைச் செய்திருக்கிறோம். இப்புதிய வடிவம் பலவிதங்களில் உங்களுக்கு வசதியாக இருக்கும் என்று நம்புகிறோம். பத்திரிகையின் உருவத்தில்தான் மாற்றம் ஏற்பட்டுள்ளதே தவிர அதன் உள்ளடக்கங்களிலும், சத்தியத்திலும் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. தொடர்ந்து சீர்திருத்த போதனைகளை கர்த்தரின் மகிமைக்காக திருமறைத்தீபம் பலரும் அறிய வெளிப்படுத்தி வரும்.
கிறிஸ்தவ ஒற்றுமையைப்பற்றி அநேகர் பேசுகிறார்கள். இதைப்பற்றி வேதமும் போதிப்பதால் அதுபற்றி நாம் சிந்திக்காமல் இருக்க முடியாது. சத்தியத்தை மனச்சாட்சியின்றி விற்பவர்களோடும், மதில்மேல் பூனைபோல் இருந்து எதற்கும் ஆமா சாமி போடுபவர்களோடும், சமய சமரசக்கோட்பாட்டைப் பின்பற்றி யாரோடு சேர்வது, சேரக்கூடாது என்ற சிந்தனையே இல்லாமல் செயல்படுபவர்களோடும் நாம் இணைந்து உழைக்க முடியுமா? உழைப்பதுதான் நியாயமா? இவ்விதழில் அதை ஆழமாக, வேதபூர்வமாக ஆராய்ந்திருக்கிறோம். அத்தோடு யாரோடு இணைந்து உழைக்க வேண்டும் என்று வேதம் காட்டும் வழியையும் விளக்கியிருக்கிறோம். அது உங்களை சிந்திக்க வைக்கட்டும்.
வேத வசனத்தை இன்று பலர் புதிர் போலப் பயன்படுத்துகிறார்கள். அதன் மெய்யான வல்லமை பற்றியும், அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்றும் இவ்விதழில் விளக்கியிருக்கிறோம். புதிய-சுவிசேஷக் கோட்பாடு இன்று சத்தியம் இருக்க வேண்டிய இடத்தை அநேக சபைகளிலும், இறையியல் கல்லூரிகளிலும் பிடித்திருக்கிறது. அதை அடையாளங்கண்டு கொள்ளாவிட்டால் “வைரஸைப்” போல நம்மையும் தின்று தீர்த்துவிடும். அதுபற்றியும் எழுதியிருக்கிறோம். படைப்பைப்பற்றி பலருக்கு டார்வின் சொன்னதுதான் தெரிகிறது. வேதம் சொல்வதை இவ்விதழில் வாசிக்கலாம். வழமையான ஆக்கங்களும் தொடர்கின்றன. பத்திரிகையின் புதிய தோற்றமும், ஆக்கங்களும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். புத்தாண்டு வாழ்த்துக்கள்!
-ஆசிரியர்.