வேத வாசிப்பு கிறிஸ்தவனுக்கு அன்றாட உணவைப்போல அவசியமானது. வேதத்தைத் தொடர்ச்சியாகவும், மெதுவாகவும், முழுமையாகவும் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதவர்கள் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பிரச்சனைகளில்லாமல் வாழ்ந்துவிட முடியாது. வாழ்க்கைப் பிரச்சனைகளை தைரியத்தோடு சந்திக்க உதவுவதே வேதம்தான். வேத வாசிப்பு இல்லாமல் ஆத்மிக வளர்ச்சி அடைய முடியாது. கர்த்தரோடு நாம் ஐக்கியத்தில் வரத் துணைசெய்யும் வேத வாசிப்பிற்கு ஒரு நாளில் ஐந்து நிமிடத்தை மட்டும் ஒதுக்குவதால் எந்தப் பயனுமில்லை. அதையும் கூட செய்யப் பலருக்கு சோம்பேறித்தனமாக இருக்கிறது. ஆவியின் அபிஷேகம் வேண்டும் என்று அலைந்து கொண்டிருக்கும் அநேகர் வேதத்தை ஆராய்ந்து படிப்பதில் நேரத்தை செலவிடுவதில்லை. ஆவிக்கும், வேதத்திற்கும் தொடர்பில்லை என்று இவர்கள் நினைக்கிறார்கள் போலிருக்கிறது. இதெல்லாம் இன்றைய கிறிஸ்தவ சமுதாயத்தில் நாம் அன்றாடம் கவனிக்கும் விஷயங்கள்.
வேதவாசிப்பின் அவசியம்
கிறிஸ்துவை நேசிக்கிறவர்கள் வேதத்தை நேசிப்பார்கள். அதை ஒவ்வொரு நாளும் நீண்ட நேரம் வாசிப்பார்கள். அதை வாசிப்பதன் மூலமே அவர்கள் கர்த்தரோடு நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொள்கிறார்கள், ஆவியில் வளருகிறார்கள். வேதத்தை வாசிப்பதற்கு ஒருவனுக்கு நேரமில்லை என்றால் கிறிஸ்துமேல் அவனுக்கு இருக்கும் அன்பு குறைந்திருக்கிறது என்றுதான் அர்த்தம். தன் மனைவியோடு தனித்திருந்து பேசுவதற்கு ஒருவனுக்கு நேரமில்லாவிட்டால் அவனுக்கு தன் மனைவி மேல் இருக்கும் அன்பு குறைந்துவிட்டது என்றுதானே சொல்லுவோம். அதுபோல்தான் இதுவும். கர்த்தரோடு ஐக்கியத்தில் வர உதவும் வேத வாசிப்புக்கான நேரம் நம் வாழ்வில் குறைவதால்தான் நாம் பலவிதமான இடர்களை வாழ்க்ரகயில் சந்திக்க நேர்கிறது. பலவீனமான கிறிஸ்தவர்களாக, இருதயத்தில் பலவிதமான சந்தேகங்களுடன் நாம் வாழ்வதற்கும் அதுதான் காரணம். சபை மக்களோடு நமக்கிருக்கும் ஐக்கியம் குறைவதற்கும், சபைக் காரியங்களைச் செய்ய உற்சாகமில்லாமல் போவதற்கும், சுவிசேஷத்தைச் சொல்ல ஆர்வமில்லாமல் இருப்பதற்கும் அடிப்படைக் காரணம் கர்த்தரோடு ஐக்கியத்தில் வரும் நேரத்தை (வேத வாசிப்பை) நாம் அலட்சியப்படுத்துவதுதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
தொடர்ச்சியாக வாசிக்க வேண்டும்
ஒவ்வொரு கிறிஸ்தவனும் தன் வாழ்க்கையில் அதிகமான நேரத்தை ஒவ்வொரு நாளும் வேதவாசிப்பிற்கு கொடுக்க வேண்டும். அதில்லாமல் நீங்கள் வாழவே முடியாது. அதை எங்கிருந்து, எப்படிச் செய்கிறீர்கள் என்பதல்ல முக்கியம். நேரமெடுத்து நீங்கள் வேதத்தை வாசிக்காமலிருக்கக்கூடாது. வாசிக்க நேரமில்லை, வாசிக்கத் தடை ஏற்படுகிறதென்றால் ஆபத்து அருகில் நெருங்கி வருகிறது என்பதை ஒவ்வொரு கிறிஸ்தவனும் உணர வேண்டும். காலையில் ஒரு அத்தியாயம், மாலையில் ஒரு அத்தியாயம் என்று பழைய, புதிய எற்பாடுகளை வாசிப்பது அவசியம். அப்படி அன்றாடத் வாசிக்கின்றபோது தான் கர்த்தருடைய வேதத்தோடு நமக்குப் பரிச்சயம் ஏற்படும்; கர்த்தருடைய சத்தத்தையும் நம்மால் கேட்க முடியும், தொடர்ந்து வேதத்தை வாசிக்கின்றபோது அதன் போதனைகள் நமக்கு ஒரூநாளும் புதிராக இருக்காது.
ஆராய்ந்து வாசிக்க வேண்டும்
ஒவ்வொரு நாளும் வாசிக்கும் பகுதிகளை நீங்கள் சிந்தித்து ஆராய்ந்து பார்க்க வேண்டும். மாடு, நுனிப்புல் மேய்வதுபோல வாசிக்கக்கூடாது. வாசித்த பகதிகளின் மூலம் கர்த்தர் நமக்கு எதைப்போதிக்கிறார் என்பதை சிந்தித்து ஆராய வேண்டும். ஒரு நோட்டுப் புத்தகத்தையும், பென்சிலையும் வைத்துக் குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும். வாசிக்கும் பகுதிக்கும் அது காணப்படும் நூலுக்கும் உள்ள தொடர்பையும், அதை யார் என்ன நோக்கத்தில் எழுதியிருக்கிறார்கள் என்பதையும் ஆராய வேண்டும். அதன் மூலம் கர்த்தர் நமக்கு சொல்லுவதென்ன என்பதை ஜெபத்தோடு சிந்திக்க வேண்டும். இதற்கெல்லாம் நேரம் கொடுப்பது அவசியம் பெந்தகொஸ்தேகாரர்கள் போல வெறும் வாக்குத்தத்த வசனங்களுக்காக அலையக்கூடாது. வசனம் கொடுக்கப்பட்டிருக்கிற பகுதியை ஆராயாமல், அதை சிந்தித்துப் படிக்காமல் கண்கட்டி வித்தைபோல் வேலை செய்யும் வசனங்களைத் தேடி அலையக்கூடாது. வேதத்தின் தன்மையும், அதன் அருமையும் தெரியாதவர்கள்தான் வாக்குத்தத்த வசனங்களை நாடி அலைவார்கள். வேதவசனங்களின் மூலம் கர்த்தர் மெஜிக் செய்வதில்லை.
ஜெபத்தோடு வாசிக்க வேண்டும்
வேதத்தை ஏனைய நூல்களைப்போல வாசிக்க முடியாது. அது கர்த்தர் நம்மோடு பேசப் பயன்படுத்தும் சாதனமாக இருப்பதால் அதைப்படிக்கும்போது தேவபயம் அவசியம். அத்தோடு படிப்பை ஜெபத்தோடு ஆரம்பிக்க வேண்டும்; ஜெபத்தோடு ஆராய வேண்டும். படித்தவற்றில் இருந்து தெரிந்து கொண்ட சத்தியங்களின்படி நடக்க உதவுமாறு கர்த்தரிடத் ஜெபத்தில் வர வேண்டும். ஜெபிக்காமல் வேதத்தைப் படித்து விளங்கிக் கொள்ள முடியாது. வேதத்தைப் படிக்காமல் ஒருநாளும் மெய்யாக ஜெபிக்க முடியாது. இவை இரண்டையும் நாம் எப்போதும் பிரிக்கவே முடியாது.
வேதபோதனையின்படி நடக்க வேண்டும்
நாம் படித்த பகுதிகள் தரும் போதனைகளின்படி அன்றாடம் தேவபயத்தோடு வாழ வேண்டும். கர்த்தர் நாம் எதைச் செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறார் என்பதை வேதத்தை வாசித்தறிந்து அதன்படி வாழ முயல்வதுதான் கிறிஸ்தவ வாழ்க்கை. நம் வாழ்க்கையில் பரிசுத்தம் ஏற்பட வேத போதனைகளின்படி வாழ்வதைத் தவிர வேறு வழியில்லை; வேறு வழிகளில் நம்மில் பரிசுத்தம் ஒருபோதும் ஏற்படாது. வேதத்தின் தன்மை புரியாமல் இருப்பதால்தான் பரிசுத்தத்திற்காக அபிஷேகத்தைத் தேடி அலைகிறது ஒரு கூட்டம். அபிஷேகத்தால் வாழ்க்கையில் பரிசுத்தம் கிடைக்கும் என்று வேதத்தில் நாம் எங்குமே வாசிப்பதில்லை. ஆழமாக, சிந்தித்து, ஆராய்ந்து ஜெபத்தோடு வேதத்தைப் படித்து அதன் போதனைகளின்படி நடக்கும்போதுதான் ஆத்மீக வாழ்க்கையில் நாம் பரிசுத்தத்தோடு வளருகிறோம்.
ஜோன் பனியனின் உடலில் குத்துகிற இடத்திலெல்லாம் வேதம் இரத்தமாக வழியும் என்று கூறுவார்கள். அந்தளவுக்கு பனியன் வேதத்தில் ஊறியிருந்தார். அவருடைய வாழ்க்கையின் வளத்துக்கும், ஊழியத்தின் சிறப்புக்கும் அதுதான் காரணம். வேதத்தை வாசிக்காமல் வேதநாயகனுக்கு நாம் எப்படி விசுவாசமாக இருக்க முடியும்? சோம்பல்தனத்தையும், வரட்டுத்தனமான சாக்குப்போக்குகளையும் தள்ளி வைத்துவிட்டு தவறாமல் வேதத்தை வாசிக்க முன்வாருங்கள்.