பத்திரிகையில் பல வருடங்களுக்கு முன்பு (1995) அப்போஸ்தலப் பணி தொடர்கிறதா? என்ற தலைப்பில் எழுதியிருந்தோம். சமீபத்தில் நான் ஒரு பத்திரிகையில் வாசிக்க நேர்ந்த கட்டுரை காரணமாக இதுபற்றி விளக்கமாக எழுதுவது அவசியம் என்று உணர்ந்தேன். அப்போஸ்தலப்பணி பற்றி இன்று மூன்றுவிதமான கருத்துக்கள் உலவுகின்றன.
1. பெந்தகொஸ்தே, கெரிஸ்மெட்டிக் இயக்கங்களை மட்டுமே இன்று அப்போஸ்தலர்கள் இருக்கிறார்கள் என்றும், அப்போஸ்தல வரங்கள் சபைக்குத் தொடர்ந்தும் கொடுக்கப்படுகின்றன என்றும் விசுவாசிக்கிறார்கள்.
2. அப்போஸ்தலர்கள் (பன்னிருவர்) இன்று இல்லை. ஆனால், அப்போஸ்தல வரங்கள் மட்டும் இன்று சபைக்குத் தொடர்ந்தும் கொடுக்கப்படுகிறது என்று விசுவாசிப்பவர்கள் வேறுசிலர். இவர்களை எல்லாக் கிறிஸ்தவ சமயப்பிரிவுகளிலும் (Denomination) பார்க்கலாம்.
3. அப்போஸ்தலர்களோ, அப்போஸ்தல வரங்களோ இன்று சபையில் இல்லை என்று விசுவாசிப்பவர்கள் மூன்றாவது பகுதியினர். இவர்கள் பெரும்பாலும் சீர்திருத்த போதனைகளைப் பின்பற்றுகிறவர்களாக இருப்பார்கள்.
இந்த மூன்றில் எது சரி என்று நாம் நமது அனுபவத்தின் அடிப்படையிலோ, விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையிலோ தீர்மானித்துவிட முடியாது. அவ்வாறு எடுக்கும் தீர்மானம் வேத அடிப்படையில் அமைந்ததாகாது. நாம் எடுக்கும் தீர்மானம் வேதத்தை முறையாக ஆராய்ந்து எடுப்பதாக இருக்க வேண்டும். ஆகவே, வேதம் அப்போஸ்தலர்களைப் பற்றியும், அப்போஸ்தல வரங்களைப் பற்றியும் என்ன சொல்கிறது என்று பார்ப்பது அவசியம்.
அப்போஸ்தலர் (Apostle) என்ற வார்த்தைக்கு அதிகாரபூர்வமாக அனுப்பப்பட்டவர் (Sent one) என்பது பொருள். இந்த வார்த்தையில் இருந்து தான் இன்று நாம் பயன்படுத்தும் மிஷனரி என்ற பதம் வந்தது. மிஷனரி என்ற பதம் அனுப்பட்டவர் என்ற பொருளைக்கொண்டு இலத்தீன் மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு வந்தது. அப்போஸ்தலர் என்ற வார்த்தை வேதத்தில் இரண்டு விதங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளதை நாம் அறியலாம். அவை என்ன என்று பார்ப்போம்.
இயேசு நேரடியாகத் தெரிந்துகொண்ட அப்போஸ்தலர்கள்
அப்போஸ்தலர் என்ற வார்த்தை வேதத்தில் இயேசு கிறிஸ்து தனக்கு நெருக்கமான சீடர்களாக, புதிய ஏற்பாட்டு சபையை எழுப்புவதற்காகத் தெரிந்து கொள்ளப்பட்ட பன்னிருவரைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பன்னிருவரும் விசேஷ தகுதிகளையும், அதிகாரத்தையும் கொண்டு, புதிய ஏற்பாட்டில் மட்டும் காணக்கூடிய பணியினைச் செய்தவர்களாக இருந்தனர். இவர்களை இயேசு கிறிஸ்துவே நேரடியாகத் தெரிந்து கொண்டார். இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றிய ஏனைய சீடர்களுக்கும் இவர்களுக்கும் வித்தியாசம் இருந்தது. அந்த வித்தியாசம் அவர்களுடைய ஆத்மீக அனுபவங்களில் இல்லாமல் அப்போஸ்தலர்களுடைய தகுதிகளிலும், பணிகளிலும் இருந்தது. கிறிஸ்துவைப் பின்பற்றிய எல்லோருமே கிறிஸ்துவின் சீடர்களாக இருந்தபோதும் அப்போஸ்தலர்கள் கிறிஸ்துவினால் பயிற்சியளிக்கப்பட்டு அவருடைய பிரதிநிதிகளாக திருச்சபையை நிறுவுவதற்காக கிறிஸ்துவால் அழைக்கப்பட்டிருந்தனர்.
அப்போஸ்தலர்களின் தகுதிகள்
அப்போஸ்தலர்களாக கிறிஸ்து பன்னிரெண்டு பேரைத் தெரிந்து கொண்டார். அதற்கு மேல் அவர் பவுலைத்தவிர வேறு எவரையும் அப்போஸ்தலராகத் தெரிந்து கொள்ளவில்லை என்பதை புதிய ஏற்பாட்டில் இருந்து அறிந்து கொள்கிறோம். முதல் இந்தப் பன்னிருவரை வேதம் அடிக்கடி பன்னிருவர் என்றும், அப்போஸ்தலர் என்றும் குறிப்பிடுகின்றது. இந்தப்பன்னிருவர் குழுவில் சேருவதற்கான தகுதிகளை நாம் அப்போஸ்தலர் நடபடிகள் 1-ம் அதிகாரத்தில் இருந்து அறிந்து கொள்கிறோம் (அப்போஸ். 1:16-22). இந்தப்பகுதி இந்தப் பன்னிருவர் குழுவில் இருந்தவர்கள் யார் என்றும் விளக்கமளிக்கிறது (அப்போஸ். 1:13).
யூதாஸ் இறந்தபிறகு இன்னொருவரை அப்போஸ்தலராகத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் நேர்ந்தது. பன்னிரு அப்போஸ்தலர்களை அடிப்படையாகக் கொண்டே இந்த உலகில் புதிய ஏற்பாட்டு சபை அரம்பமாக வேண்டும். ஆகவே, ஏனைய அப்போஸ்தலர்கள் கிறிஸ்துவின் கட்டளையின்படி எருசலேமில் மேல்வீட்டில் தங்கியிருந்தபோது தங்கள் குழுவில் இன்னொருவரைச் சேர்த்துக் கொள்வதற்கான ஆயத்தங்களைச் செய்தார்கள். அப்போஸ்தலராக இருக்க வேண்டிய தகுதிகளைக் கொண்டிருந்த இரண்டு பேரின் பெயரைத் தெரிவு செய்து கிறிஸ்துவின் வழிப்படி சீட்டுப் போட்டுப் பார்த்து அவர்களில் ஒருவரைப் பன்னிரெண்டாம் நபராகத் தெரிந்து கொண்டார்கள். இது ஏனோதானோ என்று செய்யப்பட்ட காரியமல்ல. அப்போஸ்தலர் கிறிஸ்துவின் ஆலோசனைப்படி இந்தக் காரியங்களைச் செய்தார்கள். பழைய ஏற்பாட்டிலும் இப்படி நடக்க வேண்டியதாக எழுதி வைக்கப்பட்டிருந்தது (சங்கீதம் 69:25). அத்தோடு, கிறிஸ்துவே அப்போஸ்தலர்களை ஒவ்வொரு காரியத்திலும் வழிநடத்தி வந்திருந்தார் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.
அப்போஸ்தலர் நடபடிகள் 1:21-22 ஆகிய வசனங்கள் அப்போஸ்தலர்களுக்கு இருக்க வேண்டிய தகுதிகளைப் பின்வருமாறு விளக்குகிறது:
1. யோவான் ஸ்நானன் ஞானஸ்நானம் கொடுத்த நாள் முதல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உயரெடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரையும் இயேசு கிறிஸ்துவோடும், அவருடைய அப்போஸ்தலர்களுடனும் சஞ்சரித்த மனிதனாக இருக்க வேண்டும்.
2. இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததற்கு அவருடைய சீடர்களோடு இருந்து சாட்சி கொடுத்தவனாக இருக்க வேண்டும் (அப்போஸ். 1:22-23; 1 கொதி. 9:1).
3. அதுமட்டுமல்லாமல் மூன்றாவது தகுதியொன்றையும் வேதம் நமக்குப் புலப்படுத்துகிறது. பன்னிருவரை கிறிஸ்து நேரடியாகத் தானே தெரிவு செய்து அவர்களுக்கு “அப்போஸ்தலர்” என்ற பெயரையும் சூட்டினார் என்பதை மத்தேயு 10:2-4; மாற்கு 3:14-19; லூக்கா 6:13-16 ஆகிய வேதவசனங்கள் நமக்கு விளக்குகின்றன. எத்தனையோ பேர் கிறிஸ்துவை விசுவாசித்துப் பின்பற்றிய போதும் கிறிஸ்து தமது ஞானத்தால் பன்னிருவரையும் பவுலையும் மட்டும் தெரிவு செய்து அப்போஸ்தலர்களாக அதிகாரபூர்வமாக நியமித்தார். அவரால் நேரடியாக இவ்வாறு நியமிக்கப்படாதவர்கள் அப்போஸ்தலர்களாக இருக்க முடியாது.
4. அத்தோடு, அப்போஸ்தலர்கள் வேறு மனிதர்கள் மூலமாகவல்லாமல் கிறிஸ்துவிடம் இருந்து நேரடியாக சுவிசேஷத்தைக் கேட்டுப் பெற்றுக்கொண்டவர்களாக இருக்க வேண்டும். (கலாத்தியர் 1:11-20).
அப்போஸ்தலனான பவுல்
இந்தப் பன்னிருவரைத் தவிர்த்து அப்போஸ்தலப்பட்டம் பெற்றவராக பவுலை மட்டுமே வேதத்தில் பார்க்கிறோம். மேலே நாம் பார்த்த தகுதிகள் பவுலுக்கு இருந்ததா? பவுல் எப்படி அப்போஸ்தலப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்?, என்ற கேள்விகளுக்கு நாம் பதிலளிப்பது அவசியம். இயேசு கிறிஸ்து வாழ்ந்த காலத்தில் அவரோடும், அவருடைய சீடர்களோடும் பவுல் சஞ்சரித்திருக்கவில்லை. அந்தக் காலத்தில் பவுல், சவுல் என்ற பெயருடன் இயேசுடிவ விசுவாசிக்காமல் யூதனாகவே இருந்திருக்கிறார். இவ்வாக்கத்தின் ஆரம்பத்தில் குறிப்பிட்டபடி நான் வாசித்த ஒரு கட்டுரையில் கலாத்தியர் 1:15-18ஐ உதாரணம் காட்டி பவுல், “மூன்று வருட காலம் இயேசு கிறிஸ்துவோடு இருந்துள்ளார்” என்று அந்தக் கட்டுரையை எழுதியவர் குறிப்பிட்டிருந்தார். இது கலாத்தியர் பகுதியைத் தவறாகப் புரிந்து கொண்டதால் வந்ததன் விளைவு. பவுல் இயேசுவோடு மூன்று வருட காலத்தைக் கழித்ததாக வேதம் எங்குமே போதிக்கவில்லை. கிறிஸ்துவை விசுவாசித்த பிறகு தான் அரேபியாவுக்குப் போய் மூன்றுவருட காலம் அங்கே இருந்ததாக மட்டுமே பவுல் கலாத்தியர் 1:17-18-ல் தெரிவிக்கிறார்.
கிறிஸ்து வாழ்ந்த காலத்தில் பவுல் அவரோடு சஞ்சரித்திருக்காவிட்டாலும் ஏனைய அப்போஸ்தலர்களைப்போல உயிர்தெழுந்த இயேசுவை நேரடியாகப் பார்க்கும் அனுபவம் அவருக்கு கிடைத்திரந்தது (அப்போஸ்தலர் 9:3-8; 22:6-11; 26:12-18; 1 கொரிந்தியர் 9:1; 15:8). அப்போஸ்தலராக தெரிவு செய்யப்படுவதற்கு அந்த அனுபவம் அவசியமாதலால் கிறிஸ்து தமாஸ்குவுக்குப் போகும் வழியில் பவுலைச் சந்தித்து தரிசனம் தந்தார். அந்த அனுபவத்தைப் பற்றி பவுலே அப்போஸ்தலர் நடபடிகளிலும் (26:15,16), கலாத்தியக்கெழுதிய நிருபத்திலும் (1:1-12) விளக்குகிறார். இந்த அனுபவத்தின் மூலம் பவுல், கிறிஸ்துவை விசுவாசித்ததோடு மட்டுமல்லாமல் கிற்ஸதுவிடம் இருந்து நேரடியாக அப்போஸ்தலப் பட்டத்தையும் பெற்றக்கொண்டார் என்று அறிந்து கொள்கிறேம். இதன் காரணமாகவே தான் ஓர் “அகாலப்பிறவி” (as of one born out of due time) என்று பவுல் (1 கொரி. 15:8) கூறுவதைப் பார்க்கிறோம் 1 கொரிந்தியர் 15:9-ல் “நான் அப்போஸ்தலரெல்லொரிலும் சிறியவனாயிரக்கிறேன்” என்று பவுல் கூறுகிறார். இது பன்னிருவரைக் குறித்துச் சொல்லப்பட்டது. அத்தோடு கலாத்தியர் 1:17ல் “எனக்கு முன்னே அப்போஸ்தலரானவர்களிடத்தில்” என்று கூறும் பவுல், தான் பன்னிருவருக்குப்பின் அப்போஸ்தலப் பட்டத்தைப் பெற்றுக் கொள்வதற்காகத் தெரிவு செய்யப்பட்டதை விளக்குவதைப் பார்க்கிறோம் (கலா. 1:1-12). இதைத் தான் அப்போஸ்தலர் நடபடிகள் 26:15, 16 ஆகிய வசனங்களிலும் பவுல் விளக்குகிறார். இதற்கு பக்தியுள்ள அனனியாவும் சாட்சியமளிப்பதை அப்போஸ். 22:12-15 ஆகிய வசனங்களில் வாசிக்கலாம். ஆகவே, இதுவரை நாம் பார்த்த வேத வசனங்களின்படி, கிறிஸ்துவைத் தரிசித்து, அவரால் நேரடியாக அழைக்கப்பட்டு, விசுவாசத்தைப் பெற்று, சிறப்பாக யூதரல்லாத புறஜாதியாருக்கு சுவிசேஷத்தை அறிவிப்பதற்காகவே பவுலுக்கு அப்போஸ்தலப் பட்டத்தை இயேசு கொடுத்தார் என்பதை பவுலினுடைய சாட்சியங்களில் இருந்து அறிந்து கொள்ளுகிறோம். எனவே, பன்னிருவரைத் தவிர்ந்த அப்போஸ்தலனாக பவுல் இயேசு கிறிஸ்துவால் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது இதன் மூலம் புலப்படுகிறது.
அப்போஸ்தலர்களின் சிறப்புத் தன்மைகள்
அப்போஸ்தலர்களுக்கு சில சிறப்புத் தன்மைகள் இருந்தன. புதிய ஏற்பாட்டு சபையை நிறுவுவதற்கு அப்போஸ்தலர்களுக்கு இத்தன்மைகள் அவசியமாயிருந்தன. இன்று அப்போஸ்தலர்களால் நிறுவப்பட்டுள்ள அந்த சபையின் அடிப்படையில் தொடர்ந்து சபைகளை எங்கும் தோற்றுவிப்பதற்கு இந்த சிறப்பம்சங்கள் எவருக்கும் அவசியமில்லை. அப்போஸ்தல ஊழியத்திற்கு மட்டுமே உரித்தானவை இந்த சிறப்பம்சங்கள்.
சபைக்கு அஸ்திவாரம் – பன்னிருவரும், அப்போஸ்தலனான பவுலும் திருச்சபை அமைப்பில் சிறப்பான பங்கை வகித்துள்ளனர். இவர்கள் சபையை ஸ்தாபிப்பதற்காக கிறிஸ்துவால் நியமிக்கப்பட்டவர்கள். “தேவனானவர் முதலாவது சபையில் அப்போஸ்தலரை . . . ஏற்படுத்தினார்” என்று 1 கொரிந்தியர் 12:28-ல் வாசிக்கிறோம். ஆகவே, சபையின் முதல் அதிகாரிகளாக, சபை நிறுவப்பட்டபோது அப்போஸ்தலர்கள் மட்டுமே இருந்திருக்கிறார்கள். அத்தோடு, அப்போஸ்தலர்கள் திருச்சபையின் அத்திவாரமாக இருக்கிறார்கள் என்று எபேசியர் 2:20 தெரிவிக்கிறது. அதாவது, புதிய ஏற்பாட்டுக் காலத்தில் திருச்சபை நிறுவப்பட்டபோது அப்போஸ்தலர்களால் அது ஆரம்பிக்கப்பட்டு கிறிஸ்துவிடமிருந்து அவர்கள் பெற்றுக்கொண்டிருந்த போதனைகளின் அடிப்படையில் நிறுவப்பட்டது. அவர்களே சபைக்கு அத்திவாரமாக இருந்தனர். வேறு எவரைப் பற்றியும் இந்தவிதமாக வேதத்தில் குறிப்பிடப்படவில்லை. இது அப்போஸ்தலர்களுக்கு மட்டும் அளிக்கப்பட்டிருந்த சிறப்புப்பணி.
திருச்சபைப் பணிக்காக அளிக்கப்பட்ட அற்புதங்கள் செய்யும் வரம் – அப்போஸ்தலர்கள் சுவிசேஷத்தைச் சொல்லி திருச்சபை கட்டும்பணிக்கா அவர்களுக்கு அற்புதங்கள் செய்யக்கூடிய அதிகாரத்தைக் கிறிஸ்து தந்திருந்தார். இதைப்பற்றியே பவுல் 2 கொரிந்தியர் 12:12-வ் “அப்போஸ்தலனுக்குரிய அடையாளங்கள் . . . உங்களுக்குள்ளே நடப்பிக்கப்பட்டதே” என்று கூறியிருப்பதை வாசிக்கலாம். அப்போஸ்தலர்கள் பிரசங்கம் செய்த இடங்களிலெல்லாம் அற்புதங்களும், அடையாளங்களும் நிகழ்ந்ததாக வேதம் விபரிக்கிறது (அப்போ. 2:43; 4:30; 5:12). இத்தகைய அற்புதங்களையும், அடையாளங்களையும் அப்போஸ்தலரைத் தவிர்ந்த வேறு சிலரும் பெற்றக்கொண்டிருந்ததை அப்போஸ்தலர் நடபடிகளில் வாசிக்கிறோம். ஆனால், வேதப்பகுதிகள் ஒப்பிட்டு ஆராய்ந்து பார்க்கின்றபோது அவர்கள் அத்தகைய வரங்களை அப்போஸ்தலர்களிடமிருந்து பெற்றுக்கொண்டதற்கான ஆதாரங்களைப் பார்க்க முடிகின்றது. அதாவது அப்போஸ்தலர்கள் கரங்களை வைத்து ஜெபித்தே அத்தகைய வரங்களை அவர்களுக்கு அளித்திருக்கிறார்கள். அப்போஸ்தலரால் மட்டுமே இப்படியாக கரங்களை வைத்து ஜெபித்து மற்றவர்களுக்கு இத்தகைய வரங்களைக் கொடுக்க முடிந்திருக்கிறது. இது கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டிருந்த விசேஷமான பணி (அப்போஸ். 8:14-17; 1 தீமோ. 4:14; 2 தீமோ. 1:6).
உலகளாவிய சுவிசேஷப்பணிக்கான பொறுப்பும் கிறிஸ்துவின் பிரதிநிதியாக இருப்பதற்கான சகல அதிகாரமும் – இன்று நாம் திருச்சபைகளில் பார்ப்பது போல் இல்லாமல் அன்று அப்போஸ்தலர்கள் உலகம் முழுதும் சபைகளை நிறுவவும், நிறுவப்பட்ட சபைகளை சீரமைக்கவும், ஒழுங்குப்படுத்தவும் அவசியமான சகல அதிகாரங்களையும் பெற்றிருந்தார்கள். இத்தகைய அதிகாரத்தைக் கிறிஸ்துவே அவர்களுக்கு அளித்திருந்தார். புதிய ஏற்பாட்டின் பெரும்பாலான பகுதிகள் அப்போஸ்தலர்களாலேயே எழுதப்பட்டது. அப்போஸ்தலர்களே எருசலேதிமில் கூடி அந்தியோகியாவில் ஏற்பட்டிருந்த சபைப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு வழிகாட்டியுள்ளனர் (அப்போஸ். 15). அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்து சபையின் பல பிரச்சனைகளையும் அதிகாரத்துடன் தீர்த்துவைத்தை 1 கொரிந்தியரில் வாசிக்கிறோம். அப்போஸ்தலனுக்குரிய சகல அதிகாரமும் இருந்ததாலேயே பவுலால் அதைச் செய்ய முடிந்தது. இயேசுவிடத்தில் இருந்து பெற்றுக்கொண்டதை நான் உங்களுக்கு சொல்லுகிறேன் என்று அப்போஸ்தலனால்தான் சொல்ல முடிந்தது (1 கொரி. 11:23). தீத்துவை அனுப்பி சபைகள் தோறும் மூப்பர்களை நியமிக்க வைக்க அப்போஸ்தலனால்தான் முடிந்தது (தீத்து). இது புதிய ஏற்பாட்டில் நாம் வாசிக்கும் அப்போஸ்தலருக்கு மட்டும் கொடுக்கப்பட்டிருந்த அதிகாரம்.
அப்போஸ்தலளோ, அப்போஸ்தல வரங்களோ இன்று இல்லை
இதுவரை நாம் பார்த்த அனைத்தின் மூலமும் அப்போஸ்தலர்கள் யார் என்று அறிந்து கொண்டோம். இன்று சிலர் அப்போஸ்தலர்களும், அப்போஸ்தல வரங்களம் தொடர்கிறது என்று வாதிடுகிறார்கள். அது தவறு என்பதை அப்போஸ்தலர்கள் யார், அவர்களுடைய சிறப்பம்சங்கள் யாவை என்று இதுவரை நாம் பார்த்தலிருந்து விளங்கியிருக்கும். அப்போஸ்தலனாக ஒருவன் இருக்க வேண்டுமானால் அவன் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கு சாட்சியாக இருந்திருக்க வேண்டுமென்ற உண்மை வேதம் போதிக்கும் உண்மை. அதுவும், அப்படி சாட்சியாக இருந்தவர்களில் இருந்துதான் இயேசு நேரடியாக தனது அப்போஸ்தலர்களைத் தெரிவு செய்திருக்கிறார். அவர் பவுலுக்குத் தோற்றமளித்து, பவுலை அப்போஸ்தலனாகத் தெரிவு செய்ததுபோல் யாரையும் இன்று தெரிவு செய்வதில்லை. 1 கொரி. 15:5-7 வரையுள்ள வசனங்களை ஆதாரமாகக் காட்டி பன்னிருவரல்லாத ஏனைய அப்போஸ்தலரும் இருந்திருக்கிறார்கள், அவர்களுக்கும் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. அதைத்தான் 1 கொரி. 15:7 குறிக்கின்றது என்று சிலர் விளக்கமளிக்கிறார்கள். ஆனால், இந்தப்பகுதி அதைத்தான் குறிக்கிறது என்று ஆணித்தரமாக கூற முடியாது. பன்னிருவரான அப்போஸ்தலர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் உயிர்தெழுந்த கிறிஸ்துவை சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறதை இந்த வசனங்கள் குறிக்கின்றன என்பது பல இறையியல் அறிஞர்களின் (Charles Hodge, Simon J. Kistemaker, Geoffrey B. Wilson) கருத்து. இந்தப் பகுதியில் பன்னிருவரே (5) மீண்டும் அப்போஸ்தலர்கள் (7) என்று அழைக்கப்படுகிறார்கள். அப்போஸ்தலர்களை அத்திவாரமாக வைத்து திருச்சபை கட்டிமுடிக்கப்பட்ட பிறகு மீண்டும் சபைக்கு எந்த அத்திவாரமும் தேவையில்லை. அப்போஸ்தலர்களினுடைய சிறப்பான, அதிமுக்கியத்துவம் வாய்ந்த பணிகளைப் புரிந்து கொள்ள முடியாதவர்களே இன்று அப்போஸ்தலர்களையும், அப்போஸ்தலப் பணிகளையும், அப்போஸ்தல அதிகாரத்தையும் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். இன்று சபை நிறுவுவதற்காக அனுப்பப்படுகிறவர்களை பன்னிருவரோடும், பவுலோடும் நாம் ஒப்பிட முடியாது.
அப்போஸ்தலர்கள் என்று அழைக்கப்பட்டுள்ள வேறு சிலர்
அப்போஸ்தலர்கள் கிறிஸ்துவால் சபைக்கு அளிக்கப்பட்ட அசாதாரணமான ஒரு பதவி என்பதற்கான வேத ஆதாரங்களை இதுவரை பார்த்தோம். இனி புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலர்கள் என்ற பெயரில் வேறு சிலரும் அழைக்கப்பட்டிருப்பதற்கான காரணம் என்ன என்பதைப் பார்ப்போம். பர்னபாவும் (அப். 14:14), அன்றோனிக், யூனியா (ரோமர் 16:7) என்போரும், அப்பொல்லோவும் (1 கொரி. 4:9), தீத்துவும் (2 கொரி. 8:23) எப்பாபிரோதீத்துவும் (பிலி. 2:25), தீமோத்தேயுவும், சில்வானேயும் (1 தெச. 2:6) அப்போஸ்தலர் என்று அழைக்கப்பட்டுள்ளனர். இவற்றைத்தவிர பொருவான விதத்தில் இந்தப் பதம் யோவானால் (யோவான் 13:16) பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆக, புதிய ஏற்பாட்டில் இந்தப் பகுதிகளில் மட்டுமே அப்போஸ்தலர் என்ற பதம் பன்னிரு அப்போஸ்தலரையும், பவுலையும் தவிர்த்து ஏனையோருக்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இதற்கு மூன்று காரணங்களைக் கூற விரும்புகிறேன். முதலில், அப்போஸ்தலர் என்ற பதத்தின் பொதுவான அர்த்தம் அனுப்பப்பட்டவர் (Sent one) அல்லது ஸ்தானாதிபதி (Messenger- செய்தியாளன்) என்பதைப் புரிந்து கொண்டால் இந்தப் பிரச்சனையை சுலபமாகத் தீர்த்துக் கொள்ளலாம். அதாவது, இன்று இதற்கு சமமானதாக நாம் பயன்படுத்தும் வார்த்தை மிஷனரி என்பதாகும். ஆகவே, அப்போஸ்தலர் என்ற பதம் உத்தியோகபூர்வமான விதத்தில் (Official or technical sense) பன்னிருவருக்கும், பவுலுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவர்களைத் தவிர்ந்த வேறு மனிதர்களுக்கு பொதுவான விதத்தில் (general meaning), மிஷனரி என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரே வார்த்தை இரண்டுவிதமாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இது உலக மொழிகள் எல்லாவற்றிலும் நாம் பார்க்கக்கூடிய மொழி வரம்பிற்குட்பட்ட ஒரு விதி. உதாரணமாக மூப்பர் (Elder-Presbyter), உதவியாளன் (Deacon-Diakonos) எனும் சபைத்தலைவர்களுக்கு புதிய ஏற்பாட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகள் அவற்றின் மூல அர்த்தத்தில் வயது போனவர் (Older person), சேவகன் (Servant) என்ற பொருளில் பல தடவைகள் பயன்படுத்தப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். இதே முறையிலேயே சாத்தானைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ள Diabolos என்ற வார்த்தை பொதுவான அர்த்தத்தில் Adversary என்றும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆகவே, அப்போஸ்தலர் என்ற பதம் அப்போஸ்தலர்களும், தவிர்த்து மற்றவர்களுக்கும் பயன்படுத்தப்பட்டிருப்பதால் அப்போஸ்தலர்களும், அப்போஸ்தல வரங்களும் இன்று திருச்சபையில் தொடர்கின்றன என்ற வாதம் வேதவிளக்க விதிமுறைகளுக்கு ஒத்துவராது.
இரண்டாவதாக, பன்னிருவரைத் தவிர்த்த ஏனைய சிலரும் அப்போஸ்தலர் என்று அழைக்கப்பட்டுள்ள இந்த பகுதிகளை ஆராயும்போது இப்பகுதிகளில் அப்போஸ்தலர் என்ற வார்த்தை “அனுப்பப்பட்டவர்” என்ற அர்த்தத்தில் முக்கியமான ஒரு காரியத்தைச் செய்வதற்காக சபையிலிருந்து அதிகாரபூர்வமாக அனுப்பப்பட்டவர்களுக்குப் பயன்படுத்தப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். முதலாவதில், பர்னபா பவுலோடு திருச்சபையால் முக்கியமான ஊழியத்திற்காக அனுப்பப்பட்டிருக்கிறார். அடுத்த பகுதியில் தீத்து பவுலோடு ஒரு சபையால் இன்னொரு சபைக்கு முக்கியமான ஒரு காரியத்தின் பொருட்டு அனுப்பப்பட்டிருக்கிறார். மூன்றாவது பகுதியில் எப்பாபிரோதீத்து பிலிப்பு சபையால் ரோமில் இருந்த சபைக்கு பிரதிநிதியாக அனுப்பப்பட்டிருக்கிறார். அடுத்த பகுதியான யோவானில் இயேசு, “அனுப்பப்பட்டவன்” என்ற பதத்தை இதே அர்த்தத்தில் கர்த்தரால் அனுப்பப்பட்டவர்களைக் குறித்துப் பேசியிருப்பதைப் பார்க்கலாம். ஆகவே, இந்தப் பகுதிகள் அனைத்திலும் அப்போஸ்தலர் என்ற பதம் அனுப்பப்பட்டவர், செய்தியாளன், பிரதிநிதி என்ற அர்த்தங்களில் சபை அங்கீகரித்து அனுப்பப்பட்டவர்களைக் குறித்து பொதுவான கருத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது (James Bannerman). மிஷனரி என்ற பதம் இன்று இம்முறையிலேயே கிறிஸ்தவர்களால் பயன்படுத்தப்படுகிறது.
மூன்றாவதாக, அப்போஸ்தலர் என்ற வார்த்தையைவிட அப்போஸ்தலராக இருப்பதற்கு ஒருவருக்கு இருக்கவேண்டிய தகுதிகளும், சிறப்புத் தன்மைகளுமே அவரை உத்தியோகபூர்வமாக அப்போஸ்தலராக்கியுள்ளது. நாம் ஏற்கனவே பார்த்துள்ள அந்தத் தகுதிகள் இந்த வேதப்பகுதியில் குறிப்பிடப்பட்டிருப்பவர்களிடம் இருக்கவில்லை. அவர்களை இயேசு நேரடியாக அப்போஸ்தல ஊழியத்துக்கு அழைத்ததாகவும் வரலாறில்லை.
அப்போஸ்தலப் பணிபற்றிய சீர்திருத்தவாதிகள் சிலரின் கருத்துக்கள்:
ஜோன் கல்வின் (John Calvin) – கல்வின் தன்னுடைய Institute II லும், எபேசியர், கொரிந்தியர் ஆகிய வேத விளக்கவுரை நூல்களிலும் அப்போஸ்தலர்களைப்பற்றி விளக்கமளிக்கும்போது அப்போஸ்தலர்களும், சுவிசேஷகர்களும், தீர்க்கதரிசிகளும் குறிப்பிட்ட காலப்பகுதிக்கே சபைக்குக் கொடுக்கப்பட்டதாகவும், நிலையாக சபைகளில் இருப்பதற்காக அப்பதவிகளை கர்த்தர் ஏற்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளார். முறையாக அமைக்கப்பட்டுள்ள எந்த சபைகளிலும் இன்று அப்போஸ்தலருக்கு இடமில்லை என்றும் கல்வின் தெளிவாக விளக்கியுள்ளார். அதேநேரம் அசாதாரண காலப்பகுதிகளில் எங்கே சபைகள் இல்லையோ அல்லது இருண்ட காலத்தில் ரோமன் கத்தோலிக்க மதத்தின் ஆட்சியில் திருச்சபை தலைநிமிர முடியாதிருந்தது போன்ற காலங்களில் மார்டின் லூதர் போன்றவர்களை கர்த்தர் எழுப்பலாம் என்று கல்வின் கருத்துத் தெரிவித்துள்ளார். மார்டின் லூதரை அதிகாரத்துடன் அனுப்பப்பட்ட சுவிசேஷகர் போன்ற ஒரு தலைவராக கல்வின் கருதி அந்தக்கருத்திலேயே அப்போஸ்தலர் என்று அழைத்தார். இதற்காக கல்வின் புதிய ஏற்பாட்டு சபைக்கு அத்திவாரமாக இருந்த அப்போஸ்தலர்கள் இன்றும் இருக்கிறார்கள் என்ற கருத்தினைக் கொண்டிருந்ததாக தப்புக் கணக்குப் போட்டுவிடக்கூடாது. சபை சீர்திருத்தத்திற்காகக் கர்த்தரால் எழுப்பப்பட்ட மனிதர் என்ற அர்த்தத்தில் மட்டுமே லூதரை அப்போஸ்தலர் என்று கல்வின் அழைத்தார்.
ஜோன் ஓவன் (John Owen) – திருச்சபைக்குக் கிறிஸ்து அளிக்கும் தலைவர்களை அசாதாரண தலைவர்கள் என்றும் சாதாரணத் தலைவர்கள் என்றும் இரண்டு பிரிவுகளாக பியூரிட்டன் மேதையும், இறையியல் அறிஞருமான ஜோன் ஓவன் பிரிக்கிறார். அப்போஸ்தலர்களை கிறிஸ்து சபைக்களித்த அசாதாரணத் தலைவர்களாகக் கணித்த ஓவன், ஒருவர் அசாதாரண சபைத் தலைவராக இருப்பதற்கு நான்கு அடையாளங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்றார். 1. அசாதாரண அழைப்பைக் கர்த்தரிடமிருந்து பெற்றிருக்க வேண்டும். 2. கொடுக்கப்பட்ட பணியைச் செய்வதற்காக அசாதாரண வல்லமையைக் கிறிஸ்துவிடமிருந்து பெற்றிருக்க வேண்டும். 3. அந்த அசாதாரணமான வல்லமையைப் பயன்படுத்தத்தேவையான அசாதாரணமான வரங்கறைக் கிறிஸ்துவிடமிருந்து பெற்றிருக்க வேண்டும். 4. அசாதாரணமான ஊழியத்தையும், உழைப்பையும், வாஞ்சையையும், சுயவெறுப்பையும், பாட்டையும் அனுபவித்தவராக இருக்க வேண்டும். இந்த நான்கு அடையாளங்களையும் கொண்ட திருச்சபையின் அசாதாரண பணிகளாக ஓவன் அப்போஸ்தலர்களையும், சுவிசேஷகர்களையும், தீர்க்கதரிசிகளையும் குறிப்பிடுகிறார். ஆகவே, ஓவனைப் பொறுத்தவரையில் இந்த மூன்றும் ஆதி சபையோடு முடிந்து போய்விட்ட பதவிகள். (Work of John Owen, Volume 4)
ஜோன் கில் (John Gill) – “அப்போஸ்தலர்கள் ஆதி சபையின் அசாதாரண தலைவர்களாக இருந்தனர். கிறிஸ்துவால் அழைக்கப்பட்டு, ஆவியால் வழிநடத்தப்பட்டு, தங்களுடைய பிரசங்கத்தை வலியுறுத்துமாறு அற்புதங்களைச் செய்யும் வல்லமையுடையவர்களாயிருந்து, ஓரிடத்தாலும் கட்டுப்படுத்தப்படாதவர்களாய் சகல இடங்களுக்கும் போய் பிரசங்கம் செய்யும் அதிகாரமுடையவர்களாக இருந்தனர். அத்தகைய அப்போஸ்தலர் பதவி ஆதி சபையோடு முடிந்துவிட்டது.” (இது எபேசியர் 4:11க்கு கில் கொடுக்கும் விளக்கம்.)
சார்ள்ஸ் ஸ்பர்ஜன் (Charles Spurgeon) – “கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலால் திருச்சபைக்கு அப்போஸ்தலர்கள் கிடைத்தார்கள். அவர்கள் இயேசு கிறிஸ்துவை நேரடியாகப் பார்த்திருப்பதால் கிறிஸ்துவுக்கு சாட்சியாக இருக்கும்படி அழைக்கப்பட்டார்கள். அப்போஸ்தலப் பதவி சபையில் தொடர்ந்திருக்கவில்லை. முக்கியமாக அற்புதங்கள் நடப்பதும் நின்றுபோனதால் அப்போஸ்தலப்பதவி சபைக்கு இனி அவசியமாயிருக்கவில்லை. அப்போஸ்தலர்கள் கிறிஸ்துவால் தெரிவுசெய்யப்பட்டு திருச்சபைக்குக் கொடுக்கப்பட்ட தற்காலிகமான பதவி.” (பிரங்கம் எண்: 982)
அப்போஸ்தலர்களுடைய காலத்துக்குப்பின்பு திருச்சபை வரலாற்றில் சபைப்பிதாக்கள், அப்போஸ்தலப் பதவி தொடர்வதாக நம்பவோ, எங்கும் எழுதிவைக்கவோ இல்லை. அதற்குப்பின்பு சீர்திருத்தவாத காலத்திலும், பியூரிட்டன்களின் காலத்திலும் இந்த நம்பிக்கை இருக்கவில்லை. சபைப்பிதாக்களின் காலத்தில் தோன்றிய, தவறான போதனைகளைக் கொண்டிருந்த மொன்டனிசம் (Montanism) என்ற, இன்றைய பெந்தகொஸ்தே போதனைகளை நினைவுபடுத்தும் ஒரு இயக்கம் மட்டுமே முதன் முதலில் இத்தகைய நம்பிக்கையைக் கொண்டிருந்தது. ஆதிசபைக்குப் பிறகு வரலாறு கண்ட மெய்க்கிறிஸ்தவ திருச்சபைகளின் காலங்கள் எதிலும் அப்போஸ்தலப்பணிகள் இருந்ததற்கோ, அப்போஸ்தல வரங்கள் இருந்ததற்கோ சாட்சியங்களைப் பார்க்க முடியாது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தோன்றிய பெந்தகொஸ்தே, கொரிஸ்மெட்டிக் இயக்கங்கள் மட்டுமே இந்த நம்பிக்கையைக் கொண்டிருக்கின்றன என்பதை எவரும் மறுக்க முடியாது. பெந்தகொஸ்தே போதனைகளில் மயங்கி தன்னையும், தன் சபையையும் அழித்துக் கொண்ட எட்வர்ட் ஏர்விங் (Edward Erving) என்ற பிரபலமான ஸ்கொட்லாந்துப் பிரசங்கி அப்போஸ்தலப் பதவியும், வரங்களும் திருச்சபையில் தொடர்வதாக நம்பி வீண் போனார். அவருடைய ஊழியமும், வாழ்க்கையும் துக்ககரமான முறையில் முடிவடைந்தன. இத்தனையையும் வைத்துப் பார்க்கும்போது ஆதிசபை அமைப்பிற்காகக் கிறிஸ்துவால் கொடுக்கப்பட்டிருந்த அப்போஸ்தலப் பதவியையோ, அப்போஸ்தல வரங்களையோ இனித் திருச்சபையில் தொடர்ந்தும் பார்க்க முடியாது என்ற வேதபூர்வமான தீர்மானத்துக்கு நம்மால் உறுதியாக வரமுடிகிறது. சுவிசேஷத்தை வல்லமையோடு பிரசங்கித்து ஆவியின் அனுக்கிரகத்தால் விசுவாசிளைக் கொண்டு சபைகளை எங்கும் நிறுவுவது மட்டுமே திருச்சபைகள் இன்று செய்ய வேண்டிய பணி.