செப்டெம்பர் 11, 2001ல் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் விண்ணுயர்ந்து நின்ற இரட்டைக் கட்டடங்களை முற்றாகவும், பாதுகாப்பு அமைப்பான பென்டகனின் ஒரு பகுதியையும் பயணிகள் விமானத்தை வைத்துத் தாக்கி அழித்த அல் கையிடா இயக்கத்தின் தலைவன் பின் லாடன் மனித வர்க்கத்தில் பிறந்துள்ள ஒரு சமூகத்துரோகி. மூவாயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களை ஒரே நாளில் ஈவு இரக்கமின்றி அழித்துள்ள பின் லாடன் உலக நாடுகளை தீவிரவாதத்திற்கு எதிராக இன்று ஒன்று திரட்டியிருக்கிறான். அமெரிக்காவுக்கு இழைக்கப்பட்ட தீங்கு அனைத்து உலக நாடுகளுக்கு எதிராகவும் இழைக்கப்பட்டதாகும். உலகம் இன்று இன்னுமொரு கொடூரத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவும், பிரிட்டனும், ஏனைய நாடுகளும் தொடுத்துள்ள போரினால் பின்லாடனுக்கு புகலிடமளித்த ஆப்கானிஸ்தானின் டெலிபான் ஆட்சியாளர்கள் இன்று இருந்த இடம் தெரியாமல் போயிருக்கின்றனர். பின்லாடனை உயிரோடோ அல்லது பிணமாகவோ கொண்டு வர அமெரிக்கா கங்கனம் கட்டி அல் கையிடா இயக்கத்தில் மிஞ்சி இருப்பவர்கள் மீது சக்திமிக்க குண்டு மழை பொழிந்து ஆப்கானிஸ்தான் மலைப்பிரதேசங்களில் போரிட்டு வருகின்றது. கத்தியெடுத்தவன் கத்தியாலேயே மடிவான் என்ற பழமொழி அல் கையிடாவைப் பொறுத்தவரையில் சரியாகவே இருக்கின்றது.
இங்கிலாந்திலிருந்து போன பியூரிட்டன் பிதாக்கள் குடியேறி உருவாக்கிய அமெரிக்கா முன்னாள் தலைவர் கிளின்டன் காலத்தில் ஒழுக்கத்தில் கீழான நிலைக்குப் போய்க்கொண்டிருந்தபோது ஆட்சி மாறி ஜோர்ஜ் புஷ் தலைவராக்கப்பட்டிருக்கிறார். அமெரிக்கா சரியான நேரத்தில் தகுதியான ஒரு தலைவரை அடைந்திருக்கின்றது. அவரது செயல்களும், தலைமையும் இன்று அமெரிக்க மக்களால் பெரிதும் பாராட்டப்படுகின்றன. அமெரிக்கா தீவிரவாதத்திற்கு எதிராக உலக நாடுகளை முன்னின்று வழி நடத்தி வருவதுபோல் ஆத்மீகத்துறையிலும் உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக இருக்குமா என்று காலம் மட்டுமே பதில் சொல்ல முடியும்.
பின் லாடனின் செயல் அமெரிக்காவை இன்று என்றுமில்லாதவகையில் உலுக்கி இருக்கிறது. இத்தகைய செயல் அமெரிக்காவில் நடந்தது இதுவே முதல் தடவை. அமெரிக்க மக்களை இது மிகவும் அசைத்திருக்கிறது. தங்கள் நாட்டில் இப்படியொரு சம்பவம் ஒருபோதும் நடக்க முடியாது என்று அமெரிக்கர்கள் நம்பிவந்துள்ளனர். அவர்களுடைய நம்பிக்கையைத் தவிடுபொடியாக்குவதுபோல் யாரும் நெருங்கமுடியாது என்று அவர்கள் எண்ணிக்கொண்டிருந்த பென்சில்வேனியாவின் பென்டகன்மீதும், அமெரிக்காவின் இதயம் என்று கருதப்படும் நியூயோர்க் நகரின் வர்த்தகக் கோட்டையான மென்ஹேட்டன் மீதும் தாக்குதல் நடந்துள்ளது. நியூயோர்க்கின் விண்ணை பெருமிதத்துடன் அலங்கரித்துக் கொண்டிருந்த பல கட்டடங்கள் இன்று இல்லை. மூவாயிரத்துக்கும் மேற்பட்ட எண்பது நாடுகளைச் சேர்ந்தவர்களும் இன்று உயிரோடில்லை. தங்கள் நாட்டில் நடந்துவிட்ட இக்கொடூர சம்பவம் அமெரிக்க மக்களின் நினைவைவிட்டு ஒருபோதும் அகலாது. அதுமட்டுமல்லாமல் இச்சம்பவம் அந்நாட்டு மக்களனைவரையும் என்றுமில்லாத வகையில் இன்று ஒன்று சேர்த்திருக்கிறது.
நாக்கில் நரம்பில்லாமல் சிலர் இன்று அமெரிக்காவுக்கு இது தேவைதான் என்ற முறையில் பேசி வருகின்றனர். அமெரிக்காவின் வெளிநாட்டு அரசியல்கொள்கையே இதற்குக் காரணம் என்றும் இவர்கள் கூறுவர். அமெரிக்கா ஒருபோதும் தவறே செய்துவிடவில்லை என்று எவருமே கூறமாட்டார்கள். அதற்காக அமெரிக்கா உலக நாடுகளுக்கு செய்திருக்கும் நன்மைகளை எவரும் மறந்துவிடவோ, உலக நாடுகளின் சமாதானத்திற்கும் பாதுகாப்பிற்கும் அமெரிக்கா அளிக்கக்கூடிய பங்கையும் நாம் நிராகரித்துவிட முடியாது. உலகின் பல நாடுகளின் வறுமையைப்போக்க அமெரிக்க தன்னால் முடிந்ததை எப்போதும் செய்யத் தவறவில்லை.
உலக நாடுகள் மத்தியில் கிறிஸ்தவத்தின் வளர்ச்சிக்கு அமெரிக்க கிறிஸ்தவர்களும், சபைகளும் பெரும்பங்ளித்துள்ளனர். அமெரிக்க கிறிஸ்தவ மிஷனரிகள் இன்று உலகெங்கும் இயேசுவின் அன்பைப் பிரசங்கித்துக் கொண்டிருக்கிறார்கள். பியூரிட்டன் பிதாக்களினால் உருவான அமெரிக்காவின் இறையியல் கல்லூரிகளில் பயின்று பயன்பெற்றவர்கள் அநேகர். அமெரிக்க கிறிஸ்தவ சபைகளின் ஐக்கியத்தினால் நன்மைகள் அடைந்த நாடுகள் அநேகம்.
இத்தனை நன்மைகளைச் செய்திருக்கும் அமெரிக்காவில் கிறிஸ்தவம் இன்று தனது செல்வாக்கை இழந்து கொண்டிருக்கும் நேரத்திலேயே இச்சம்பவமும் நிகழ்ந்துள்ளது. அமெரிக்க மக்களின் கவனத்தைத் தன் பக்கம் இழுக்க இது கர்த்தரால் அனுமதிக்கப்பட்டிருக்குமோ? என்று சிந்திக்காத அமெரிக்க கிறிஸ்தவர்கள் இல்லை. எது எப்படி இருந்தபோதும் நடந்த சம்பவம் இறை ஆண்மையுள்ள கர்த்தருக்குத் தெரிந்தே நடந்திருக்கிறது. அமெரிக்க மக்களையும். ஏன் உலக மக்களனைவரையும் அவர் தன்னைப் பற்றி இச்சம்பவத்தின் மூலம் நிச்சயம் சிந்திக்க வைத்திருக்கிறார். வாழ்க்கையைப் பற்றியும், மரணத்தைப் பற்றியும் பல கேள்விகளைக் கேட்க வைத்திருக்கிறார். இச்சம்பவத்தின் மூலம் அமெரிக்க மக்கள் மத்தியில் ஆத்மீக மனமாற்றம் ஏற்படுமானால் அது அமெரிக்காவிற்கு மட்டுமல்ல உலக நாடுகளுக்கும் பெரு நன்மையளிக்கும். இக்கொடுஞ்செயல் அப்பெரு நாட்டு மக்களைக் கர்த்தரின் மேன்மையையும், அவர் மட்டுமே அளிக்கக்கூடிய இரட்சிப்பையும் பற்றிச் சிந்திக்க வைக்குமானால் அது மேலானதே. அமெரிக்க மக்கள் இன்று அதிகமாக கடவுளின் பெயர்ச் சொல்லுகிறார்கள். அதிகமாக வேதப்புத்தகத்தை வாங்கி வாசிக்கிறார்கள். இதெல்லாம் உதட்டளவில் இருந்துவிடாமல் இதயபூர்வமானதாக இருக்குமானால் அமெரிக்க மக்களுக்கு பெரு விமோசனமுண்டு. கர்த்தர் அமெரிக்காவையும், அதன் தலைவர்களையும் இச்சோதனை மிகுந்த நேரத்தில் ஆசீர்வதித்து வழிநடத்தட்டும்.