இரண்டாம் நூற்றாண்டில் அநேக கள்ளப்போதனைகள் தலைதூக்கி வளர்ந்தன. அவற்றில் முக்கியமானவற்றைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
நாசரீயர்கள் (Nazareans)
ஆரம்பத்தில் கிறிஸ்தவ திருச்சபை இப்பெயரால் அழைக்கப்பட்டது. பின்பு பவுலுக்குத் தொல்லைதந்த, ஆரம்பகால யூதர்களைப் பின்பற்றிய ஒரு கூட்டம் இப்பெயரில் அழைக்கப்பட்டது. கி.பி. 70களில் எருசலேம் அழிக்கப்படுவதற்கு முன்பு யூத கிறிஸ்தவர்கள் யோர்தானைத்தாண்டி பீலா என்ற இடத்தில் பாதுகாப்பு கருதி அடைக்கலம் புகுந்தனர். இவர்கள் வழி வந்தவர்கள் ஆரம்பகால யூத கிறிஸ்தவர்கள் கைவிட்டுவிட்ட யூத கலாச்சாரத்தையும், வழிமுறைகளையும் விடாப்பிடியாகப் பின்பற்றி வந்தனர். இவர்கள் மோசேயினுடைய நியாப்பிரமாணத்தை எழுத்து பூர்வமாகப் பின்பற்றியதோடு, விருத்தசேதனத்தையும், யூத சபத்து சம்பந்தமான ரபாய்களுடைய விதிமுறைகளையும் பின்பற்றி வந்தனர். இவர்களுடைய தாக்கம் பெருமளவில் இல்லாதபோதும் நான்காம் நூற்றாண்டு முடிவுவரை இவர்களைப் பின்பற்றியோர் இருந்து வந்துள்ளனர். இவர்களுடைய வழிமுறைகள் கிறிஸ்தவ வேத போதனைகளுக்கு முரணாயிருந்தன. கிறிஸ்தவம் யூத சமய சம்பந்தமான கட்டளைகளைத் தொடர்ந்து பின்பற்றும்படிப் போதிக்கவில்லை.
எபியனைட்ஸ் (Ebionites)
இவர்கள் நாசரீயர்களைப் பெருமளவிற்கு ஒத்துக்காணப்பட்டபோதும் பலவிதங்களில் அவர்களைவிடக் கடுமையாக யூதப்பாரம்பரியங்களைக் கடைப்பிடித்து வந்தனர். கிறிஸ்தவர்கள் அவற்றை நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினர். இவர்கள் பவுலினுடைய நிருபங்கள் அனைத்தையும் நிராகரித்ததோடு சுவிசேஷ நூல்களில் மத்தேயுவை மட்டுமே ஏற்றுக்கொண்டனர். மத்தேயு சுவிசேஷத்தில் கிறிஸ்துவின் கன்னிப் பிறப்பு பற்றிய போதனைகளையும், கிறிஸ்துவின் நித்திய குமாரத்துவம், கிறிஸ்து பிதாவுடன் எப்போதும் இருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்த பகுதிகள் அனைத்தையும் அகற்றிவிட்டனர். அடுத்து நாம் பார்க்கப்போகிற நொஸ்டிஸிசத்தைப் பின்பற்றியவர்களைப்போலவே இவர்களும் கிறிஸ்து ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டபோதே ஆவி அவர்மேல் இறங்கி தெய்வீக அம்சத்தை அடைந்தாக நம்பினர். அத்தோடு கிறிஸ்து சிலுவையில் மரிப்பதற்கு முன்பு ஆவி அவரைவிட்டு அகன்றதாகவும், வெறும் சாதாரண மனிதனே சிலுவைத்துன்பங்களை அனுபவித்து மரித்தாகவும் இவர்கள் போதித்தனர்.
நொஸ்டிஸிசம் (Gnosticism)
இதுவரை காணப்பட்ட எந்த போலிப்போதனைகளையும்விட இது மிகவும் ஆபத்தானதாகவும், கபடமுள்ளதாகவும் இருந்தது. இது அதிகமாகப் பரவத்தோடங்கி, மூன்றாம் நூற்றாண்டில் ரோம ராஜ்யத்தில் இருந்த அதிகம் படிப்பறிவு கொண்டிருந்த கிறிஸ்தவ சபைகளை ஏதோ ஒருவிதத்தில் பாதித்திருந்தது. இனிபலவிதமான போதனைகளைப் பின்பற்றி பல உருவங்களில் காணப்பட்ட இக்கள்ளப்போதனையின் சில குறிப்பிட்ட அம்சங்களைப் பார்ப்போம். இப்போதனை கிரேக்கம், எகிப்து, பேர்சியா, இந்தியா போன்ற தேசங்களில் காணப்பட்ட சமய தத்துவங்களைப் பின்பற்றி கிறிஸ்தவ வேதத்தோடு எந்தவித சம்பந்தமுமில்லாத முறையில் கிறிஸ்துவின் செயல்களைப் பற்றிய விளக்கங்களைத் தந்தனர். நொஸ்டிக் என்ற பதம் கிரேக்க வார்த்தையான கிநோஸிஸ் (ஞானம்) என்ற பதத்தில் இருந்து உருவானது. நொஸ்டிஸிசத்தைப் பின்பற்றியோர் தமக்குக் கிடைத்துள்ள ஞானத்தை எல்லாரும் பெற்றுக்கொள்ள முடியாததென்றும், ஆவியை அடைந்துள்ள சில விசேஷ மனிதர்கள் மட்டுமே அதை அடைய முடியும் என்றும் விளக்கினர். இவர்களுக்குக் கீழ் விசுவாசத்தை மட்டுமே கொண்டிருந்தவர்கள் இருந்தார்கள். இவர்களால் ஞானத்தைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இக்குழுவில் ஏனைய நல்ல யூதர்களும், தீர்க்கதரிசிகளும் இருந்தனர். இவர்களைத்தவிர ஏனைய மனிதர்கள் அனைவரும் சாத்தானின் பிடியிலும், தங்களுடைய சொந்த ஆசாபாசங்களாலும் கட்டுப்படுத்தப்பட்டு வாழ்ந்து வருகின்றனர் என்று இப்போதனை விளக்குகிறது. இது பொருமளவுக்கு இந்து மத தத்துவங்களைக் கொண்டிருப்பதைக் காணலாம்.
நொஸ்டிஸிசம், பொருளானது (Matter) முழுமையாக தீமையானது என்றும் இதை வெற்றி கொள்வதிலும், இல்லாமல் செய்வதிலுமே மனிதனின் இரட்சிப்பு தங்கியுள்ளது என்றும் போதிக்கின்றது. விசேஷ ஞானத்தைப் பெற்ற ஆவிக்குரியவர்களாலும், தமது ஆசாபாசங்களை அடக்கும் வல்லமை பெற்றவர்களாலும் மட்டுமே இது முடியும் என்று நொஸ்டிஸிசம் போதிக்கிறது. பொருளை அடக்கி வெற்றி கொள்ள வேண்டுமென்பதற்காக அவர்கள் எந்தவிதமான லௌகீக சுகங்களுக்கும் தம்மை ஒப்புக்கொடுக்கவில்லை. அவர்கள் கடுமையான கட்டுப்பாடுள்ள வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்தனர். இயற்கைக்கு மாறான வாழ்க்கையை இவர்கள் வாழ முயன்றதால் தமது ஆசாபாசங்களை அடக்க முடியாமல் இழிவான ஒழுக்கக்கேடான காரியங்களிலும் இவர்கள் ஈடுபட நேர்ந்தது.
இவர்களில் மிகவும் திறமைவாய்ந்த நொஸ்டிக் போதனையாளர்களாக வெலன்டைனசும் (Valentinus), பெசிலிடசும் (Basilides) இருந்தனர். இவர்கள் இருவரும் இரண்டாம் நூற்றாண்டில் அலெக்சாந்திரியாவுடன் தொடர்பு கொண்டவர்களாக இருந்தனர். கி.பி. 170 இல் ரோமில் இறந்த மார்கியன் இன்னுமொரு முக்கிய போதனையாளராக இருந்தார். மார்கியன் வேதபூர்வமான கிறிஸ்தவத்தை அதிகம் பின்பற்றியபோதும் பழைய ஏற்பாட்டை நிராகரித்து, பழைய ஏற்பாட்டுக் கடவுள் இயேசு கிறிஸ்துவின் பிதா அல்ல என்று போதித்தார். மார்கியன் சபையில் இருந்து ஒழுங்கு நடவடிக்கை மூலம் அகற்றப்பட்டார். இருந்தபோதும் இம்மனிதனுடைய வாழ்க்கை காரணமாக பலர் இவரைப் பின்பற்றினார்கள்.
நொஸ்டிஸிசம் கடவுள் தன்னிறைவுடையவரென்றும், அறிந்து கொள்ளப்பட முடியாதவரென்றும் போதித்தது. காலம், மாற்றங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்ட கடவுள் எந்தவித குணாதிசயங்களும் அற்றவர் என்றும் இது போதித்தது. பைதொஸ் என்ற பெயரால் தாம் அழைத்த கடவுள், தீமையானது என்று கருதி தாம் தள்ளி வைத்த பொருளை எப்படி உருவாக்கி அதனைத் தள்ளிவைத்திருக்க முடியும் என்பது இவர்களுக்கு பிரச்சனையாயிருந்தது.
நொஸ்டிக் போதனைகள் மிகவும் குழப்பமானதும், மனித சிந்தனைக் குதிரையோட்டத்தின் வேகத்தாலும் உருவானவை. கிறிஸ்தவ போதனைபோல் தோற்றமளிக்க முயலும் இப்போதனைகள் வேதத்தை தலைகீழாகத் திருப்பி பழைய ஏற்பாட்டுக் கடவுள் மிகவும் மோசமானவர் என்று போதிக்கின்றது. ஆதி சபையை இப்போதனைகள் பாதித்ததாலேயே அப்போஸ்தலன் யோவான் போன்றோர் தங்களுடைய நிருபங்களில் இதைத் தாக்கி எழுதியுள்ளனர். இதற்கும் வேதத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
மொன்டமனிசம் (Montanism)
மொன்டனிசப் போதனைகள் தலைதூக்கியபோது திருச்சபையின் நிலமை அத்தனை சரியாக இருக்கவில்லை. நொஸ்டிஸிசம் கிறிஸ்தவத்தின் அடித்தளத்தை இக்காலத்தில் தாக்கிக் கொண்டிருந்தது. அப்போஸ்தலர்கள் எல்லோரும் மரித்துப் போய் திருச்சபையை அலங்கரித்துக் கொண்டிருந்த பரிசுத்த ஆவியின் அற்புத வரங்கள் படிப்படியாக நின்று போயிருந்தன. அநேக போலித் தீர்க்கதரிசிகள் தலை தூக்கியிருந்தனர். தீர்க்கதரிசனங்களை பலரும் சந்தேகக் கண்களோடு பார்க்கத் தொடங்கியிருந்தனர். திருச்சபை வல்லமையற்று வெறும் உலகப்பிரகாரமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தது. முதல் நூற்றாண்டில் சபையை அலங்கரித்த ஆவியின் வல்லமைகொண்ட ஆத்மீக உணர்வுகள் மடிந்துபோய் சபை வலிமையற்று வெறும் சடங்குகளைப்பின்பற்றி வாழ்ந்து கொண்டிருந்தது. இக்காலத்தில் மொன்டனிசம் இத்தகைய சபை வாழ்க்கை முறைக்கு எதிராக குரல் கொடுத்து எழுந்தது. முக்கியமாக நொஸ்டிசிஸப் போதனைகளைத் தாக்கியது. பரிசுத்த ஆவியின் வல்லமையை இழந்து நின்ற சபைக்கு அதை நினைவுபடுத்த மொன்டனிசத்தைப் போன்ற ஒரு இயக்கம் அக்காலத்தில் தேவைப்பட்டபோதும், மொன்டனிசமும் நொஸ்டிஸிசத்தைப் போலவே மனித சிந்தனைகளில் உருவான எண்ணங்களுக்கு இடம் கொடுத்து கர்த்தருடைய வேதத்திற்கு சமாதி கட்டத் தொடங்கியது.
இவ்வியக்கம் மிசியாவின் ஆர்டபா என்ற இடத்தைச் சேர்ந்த மொன்டனஸ் என்ற மனிதனால் ஆரம்பிக்கப்பட்டது. இம்மனிதன் பரிசுத்த ஆவியிடம் இருந்து வெளிப்படுத்தலைப் பெற்றிருப்பதாகக் கூறி, கட்டற்ற காட்டாறு போன்ற உணர்ச்சிகளுக்கு உணவிட்ட ஒரு எழுப்புதல் கூட்டத்தை நடத்தினான். தம் கணவர்களைக் கைவிட்ட செல்வந்தர்களாக இருந்த இரு பெண்களும் இம்மனிதனுடன் சேர்ந்து கொண்டனர். மொன்டனஸ் ஏற்படுத்திய இவ்வியக்கம் கடந்த நூற்றாண்டுகளில் பிரிட்டனில் வாழ்ந்த எர்வர்ட் இர்விங்கின் கூட்டத்தைப் போலவும், நாசரீயர்களைப் போலவும், அமெரிக்காவில் தோன்றி எழுந்து இன்று எங்கும் பரவி இருக்கும் பெந்தகோஸ்தே, கெரிஸ்மெட்டிக் இயக்கத்தைப் போலவும் பெருமளவு தோற்றமளித்தது. மொன்டனிசம் பல கடுமையான சபை ஒழுக்கக் கட்டுப்பாடுகளையும் கொண்டிருந்தது. எவரும் இரண்டாம் தடவை திருமணம் செய்வதை இவர்கள் தடை செய்ததோடு, திருமண வாழ்க்கையைவிட திருமணம் செய்யாமல் வாழ்வதே மேன்மையானது என்றும் போதித்தனர். ஆணவம் அதிகம் தலைக்கேரி தங்களுடைய போதனைகள் கிறிஸ்துவின் போதனைகளைவிட மேன்மையானது என்றும் கூறத் தொடங்கினர். கார்த்தேஜைச் சேர்ந்த டேர்டூலியன் இவர்கள் கூட்டத்தைச் சேர்ந்தது இவர்களுடைய பெரும் வெற்றியாக இருந்தது. இருந்தபோதும் இக்கூட்டம் ஆபிரிக்காவைவிட்டு கி.பி. 370 களிலும், ஏனைய இடங்களில் இருந்து ஆறாம் நூற்றாண்டுகளின் ஆரம்பத்திலும் அடியோடு மறையத்தொடங்கியது.
இவர்கள் கடுமையான சபை ஒழுங்குக் கட்டுப்பாட்டைப் பின்பற்றி பாவங்களை மன்னிக்கப்படக்கூடிய பாவங்கள், மன்னிக்கப்பட முடியாத பாவங்கள் என்று இருகூறுகளாகப் பிரித்தனர். இது ரோமன் கத்தோலிக்க சபை பாவங்களைப்பட்டியல் போட்டுப் பிரித்ததற்கு ஒப்பாயிருந்தது. கர்த்தருடைய இரண்டாம் வருகைக்கு இவர்கள் முக்கியத்துவம் கொடுக்காமல் சபைத்தலைவர்கள் கிறிஸ்துவின் செயல்களைத் திருநியமங்களின் மூலம் இவ்வுலகில் தொடர்ந்து செய்து வருவதாகப் போதித்தனர். இதனால் சபைப் போதகர்கள் அசாதாரண மனிதர்களாக கருதப்பட்டனர். சிப்பிரியனின் காலத்திற்கு பின்பு சபைப் போதகர்கள் கிறிஸ்துவின் பலிகளைத் தொடர்ந்து இவ்வுலகில் செய்து வருகின்றனர் என்ற போதனை நிலைபெறத்தொடங்கியது.
மொன்டனிஸத்தைப் பின்பற்றியவர்கள் பிரசங்கத்தையும் அடியோடு சபைகளில் இருந்து அகற்றினர். உணர்வலைகளுக்குத் தூபமிடும் சகலவிதமான செயல்களையும் சபைகளில் அனுமதித்தனர். பல நூற்றாண்டுகளுக்கு பிரசங்கம் செய்வது சபைகளில் இல்லாமல் போயிருந்தது. இதன் காரணமாக சபைத் தலைவர்கள் தெய்வீக அம்சமுடையவர்களாகக் கருதப்பட்டு அவர்கள் செய்யும் பலிகளின் மூலமே கடவுளோடு மனிதன் தொடர்பு கொள்ள முடியும் என்ற எண்ணம் வளர்ந்து வந்தது. சபைக்கு வெளியில் இரட்சிப்புக்கு வழியில்லை என்ற கொள்கை இவர்களல் உருவானது. அப்போஸ்தலர் காலத்தில் காணப்பட்ட எளிமையான, வேதபூர்வமான, ஆவியின் வல்லமை கொண்ட கிறிஸ்தவம் இக்காலத்தில் பரவலாகக் காணப்படவில்லை. இத்தனை விரைவாக இரண்டாம் நூற்றாண்டிலேயே வேதபூர்வமான கிறிஸ்தவம் போலிப்போதனைகளின் அதி பயங்கரத்தாக்குதல்களுக்கு உள்ளானது.
மொன்டனிசப் போதனைகளைப் பார்க்கும்போது, நம்மால் இன்று நம்மத்தியில் இருக்கும் பரவசக்குழுக்களை எண்ணிப்பார்க்காமல் இருக்க முடியாது. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய மொன்டனிசமே கெரிஸ்மெட்டிக் இயக்கத்தின் ஆரம்பப் பள்ளி என்று கூறுவது வரலாற்று பூர்வமான உண்மை. இன்று பெந்தகொஸ்தே, கெரிஸ்மெட்டிக் கூட்டத்தில் காணப்படும் பலவிதமான தவறான போதனைகளை அன்று மொன்டனிசத்தில் காணமுடிந்தது. சபைத் தலைவர்களும், தீர்க்கதரிசிகளும் அசாதாரண மனிதர்களாகக் கருதப்படும் வழக்கத்தையும் இன்று பரவசக்குழுக்களில் காணலாம். ரோமன் கத்தோலிக்கத்தோடு பரவசக்குழுக்கள் உவறாடுவதற்கு மொன்டனிசம் அன்றே வித்திட்டிருந்தது. பிரசங்கத்தை அலட்சியம் செய்து அதைக் கேலிக்கூத்தாக பரவசக்குழுக்கள் இன்று மாற்றியிருப்பதற்கும் மொன்டனிசம்தான் காரணம். வேதத்தைவிட சபைத்தலைவருக்கு அதிக அதிகாரம் கொடுக்கும் இழிவான முறையையும் மொன்டனிசம் மறுபடியும் ஏற்படுத்தியது. இன்று பரவசக்குழுக்கள் அதைப்பின்பற்றி ஆத்துமாக்களை சீரழித்து வருகின்றனர். ஆத்துமாக்களின் உணர்ச்சிகளுக்குத் தூபம் போட்டு நவீன மொன்டனிஸ்டுகளாக பவனி வருகின்றனர். வரலாறு ஒப்போதும் பொய் சொல்லாது. வரலாறு படித்தவர்கள் இன்றைய பரவசக்குழுக்களின் தோற்றத்திற்கான காரணத்தை மிக இலகுவாக அடையாளம் கண்டு கொள்வார்கள்.