ஆன்மீகக் குழப்பம்

முடியாத தொடர்கதை . . .

இந்த தலைப்பு ஒரு சிலருக்கு வித்தியாசமானதாக இருக்கலாம். ஆகவே, இந்தத் தலைப்பைக் குறித்து நான் விளக்கமளிக்க வேண்டியது அவசியம். இன்று கிறிஸ்தவர்கள் மத்தியில் எல்லா நாடுகளிலுமே ஒரு ஆன்மீகக் குழப்ப நிலை உலவுவதை ஒருவரும் மறுக்க முடியாது. பரிசுத்த ஆவியின் பெயரில் பலர் நடத்திவரும் நகைச்சுவைக் கூட்டங்களையும், ஆராதனை வேளைகளில் சபை, சபையாக நடந்துவரும் கூத்துக்களையும், விசுவாசி யார்? அவிசுவாசி யார்ஈ என்று அறிந்து கொள்ள முடியாத அளவுக்கு வித்தியாசமே இல்லாமல், இரண்டுங்கெட்ட நிலையில் சபை வாழ்க்கை அமைந்திருப்பையும் ஆன்மீகக் குழப்பம் என்றல்லாது வேறு எப்படி வர்ணிப்பது? வேதத்தின் அடிப்படையில் வளர வேண்டும், வாழ வேண்டும் என்ற இதயதாகமுள்ள விசுவாசிகளை இங்கும் அங்குமாக நாம் காண முடிந்தபோதும் பரவலாக தமிழினத்தின் மத்தியில் பொதுவாக ஓர் ஆன்மீகக் குழப்பநிலையையே நாம் காண்கிறோம். முடியாத தொடர்கதைபோல் இந்த ஆன்மீகக் குழப்பம் நம்மத்தியில் தொடர்ந்தும் நீடிக்கிறது. கிறிஸ்தவர்களும், கிறிஸ்தவ சபைகளும் இன்று எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சனைகளுக்கும் முடியாத தொடர்கதை போல் நம்மைச் சூழ்ந்துள்ள இவ்வான்மீகக் குழப்ப நிலையே காரணம்.

சூழ்நிலையைப் புரிந்து கொள்ள வேண்டியதன் அவசியம்

நம்மைச் சூழ்ந்துள்ள இந்த ஆன்மீகக் குழப்ப நிலைக்கான காரணத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டுமானால் நாம் வாழ்கின்ற சூழ்நிலையையும் சரிவர புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். நாம் வாழ்கின்ற சூழ்நிலையை ஆராய்ந்து அறிந்து கொண்டால் மட்டுமே, நமது சூழ்நிலையைப் பாதிக்கும் காரணிகளின் ஆதிக்கத்தில் இருந்து விடுபடுவதற்கான நடவடிக்கைகளை நாம் எடுக்க முடியும். ஆகவே, நாம் நமது கிறிஸ்தவ வாழ்க்கையிலும், திருச்சபையிலும் இன்று எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளை வெற்றிகரமாக சமாளிக்கவும், அவற்றில் இருந்து விடுபடவும் நாம் வாழும் சூழ்நிலையைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இயேசு கிறிஸ்துகூட பரிசேயர்களையும், சதுசேயர்களையும் பார்த்து ஒரு முறை (மத்தேயு 16:1-4), மாயக்காரரே. . . காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா? என்று கேட்டு கோபப்பட்டார். அதாவது, வீணாக அடையாளங்க‍ளை நாடித் திரிகிறீர்களே, அதைவிட்டு நீங்கள் வாழ்கிற காலத்தையும், அதன் நிகழ்ச்சிகளையும் விளங்கிக் கொள்ள முயற்சி செய்யுங்கள் என்று இயேசு அவர்களைக் கண்டித்தார். தான் வாழ்கின்ற காலத்தையும், சூழ்நிலையையும் சரியாகப் புரிந்து கொள்ளாமல் எந்தவொரு கிறிஸ்தவனும் கிறிஸ்தவ வாழ்க்கையை வெற்றிகரமாக வாழ்ந்துவிட முடியாது. சூழ்நிலையை அறிந்து கொள்ளுதல் கிறிஸ்தவ வாழ்க்கைக்கு அத்தியாவசியமானது என்று வேதம் தெளிவாகப் போதிக்கின்றது.

அப்படியானால், நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்தச் சூழ்நிலை எப்படிப்பட்ட சூழ்நிலை என்ற கேள்வி எழுவதில் தவறில்லை. இதற்குப் பதில் அளிக்க நாம் வேறெங்கும் போக வேண்டிய அவசியமில்லாமல் வேதத்தையே நாடிவர வேண்டி இருக்கிறோம். ஏனெனில், 2 தீமோத்தேயு 3:14-17-ன்படி, வேதமே நாம் எல்லாவற்றையும் ஆராய்ந்து அறியப் பய்னபடுத்தக்கூடிய பூரணமானதும், போதுமானதுமான அதிகாரபூர்வமான தேவ வார்த்தையாக இருக்கின்றது. வேதத்தை நாம் ஊன்றிப்படிக்கின்றபோது, நாம் வாழும் சூழ்நிலையைத் தெளிவாகவும், சந்தேகமற்றவகையிலும் படம்பி‍டித்துக் காட்டுகின்ற நூலாக பழைய ஏற்பாட்டின் நியாயாதிபதிகள் புத்தகம் அமைந்திருப்பதைக் காணலாம். நியாயாதிபதிகள் 21:25-ம் வசனம், “அந்நாட்களில் இஸ்ரவேலில் ராஜா இல்லை; அவனவன் தன் பார்வைக்குச் சரிபோனபடி செய்து வந்தான்” என்று அறிவிக்கின்றது. நியாயாதிபதிகளின் புத்தகத்தில் பலமுறை காணப்படுகின்ற (17:6; 18:1; 19:1; 21:25) இவ்வசனம் நியாயாதிபதிகள் வாழ்ந்த காலப்பகுதியைத் தெளிவாகப் படம் பி‍டித்துக் காட்டுவதைக் காண்கிறோம்.

நியாயாதிபதிகளின் காலம் – ஒரு சுருக்கமான விளக்கம்

நாம் வாழும் சூழ்நிலையை அறிந்து கொள்வதற்கு நியாயாதிபதிகள் வாழ்ந்த காலப்பகுதியைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியமாகின்றது. நியாயாதிபதிகள் நூலின் முதல் ஒன்றரை அதிகாரங்களும் யோசுவா இறப்பதற்கு முன்பாக இஸ்ரவேலர் கானான் தேசத்தவர்களுக்கு எதிராக அடைந்த ஆரம்ப வெற்றிகளைப்பற்றி விளக்குகின்றன. இவ்வெற்றிகளின் மத்தியில் இஸ்ரவேலர் தேவனைப் புறக்கணித்ததால் அவருடைய கோபத்தை எதிர்நோக்க வேண்டியிருந்தது. இரண்டாம் அதிகாரத்தின் முதல் ஐந்து வசனங்களும், அவருடைய கட்டளையை மீறியதன் காரணமாக, தேவன் அவர்களுக்கு விதித்த சாபத்தை எடுத்துக்கூறுகின்றன. “நான் உங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணி, உங்கள் பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தில் நான் உங்களைக் கொண்டு வந்துவிட்டு, உங்களோடே பண்ணின என் உடன்படிக்கையை நான் ஒருக்காலும் முறித்துப் போடுவதில்லை என்றும், நீங்கள் இந்தத் தேவத்தின் குடிகளோடே உடன்படிக்கை பண்ணாமல், அவர்கள் பலிபீடங்களை இடித்துபிடக்கடவீர்கள் என்றும் சொன்னேன்; ஆனாலும், என் சொல்லைக் கேளாது போனீர்கள்; ஏன் இப்படிச் செய்தீர்கள்? ஆகையால், நான் அவர்களை உங்கள் முகத்துக்கு முன்பாகத் துரத்துவதில்லை என்றேன்; அவர்கள் உங்களை நெருக்குவார்கள்; அவர்களுடைய தேவர்கள் உங்களுக்கக் கண்ணியாவார்கள்” என்றார். (நியாயாதிபதிகள் 2:1-4). நியாயாதிபதிகள் 2:6 முதல் 16:31 வரையிலான வேதப்பகுதிகள், இஸ்ரவேலரை நியாயம் விசாரித்த பல்வேறு நியாயாதிபதிகளின் காலத்தில், இஸ்ரவேலர்கள் தேவனை விட்டுப் பிரிந்து தங்கள் தங்கள் வழியில் போய்க் கொண்டிருந்த அவலத்தை எடுத்துக் கூறுகின்றன. இக்காலகட்டத்தில், இஸ்ரவேலர் கர்த்தரைப் புறக்கணித்தால் அந்நிய தேசத்தாரின் தாக்குதலுக்கும், ஆளுகைக்கம் உட்பட்ட, பின்பு நியாயாதிபதிகளின் மூலம் கர்த்தர் அவர்க‍ளை விடுவிப்பதையும் பார்க்கிறோம். இக்காலப்பகுதியில், ஒரு தொடர்கதைபோல், நான்குவிதமான ஆன்மீக சுழல்முறைச் சம்பவங்கள் நிகழ்வதைக் காணலாம்.

அ. இஸ்ரவேலர் அநீதியாக கர்த்தரைப் புறக்கணித்தல்.

ஆ. அவர்களைத் திருத்தும் பொருட்டு தேவன் அவர்களைத் தண்டித்தல்.

இ. இஸ்ரவேலர் தண்டனையைத் தாங்க முடியாது மறுபடியும் தேவனிடம் கதறி ஓடி வருதல்.

ஈ. அவர்களுடைய கூக்குரல் கேட்டு தேவனும் அவர்களைத் தண்டனையில் இருந்து விடுவித்தல்.

ஆனால், அந்நியரிடமிருந்து விடுதலை பெற்ற இஸ்ரவேலர்கள் குறுகிய காலம் மட்டும் மனம்மாறி வாழ்ந்து, மறுபடியும் தேவனை விட்டு விலகி ஓடினார்கள். இவ்வாறாக, ஒரு தொடர்கதைபோல் சுழல்முறையாக இச்சம்பவங்கள் மீண்டும், மீண்டும் தொடர்ந்து இஸ்ரவேலில் நிகழ்ந்து வந்தன.

நியாயாதிபதிகளின் கடைசி ஐந்து அதிகாரங்களும் (அதிகாரம் 17-21) இந்நிகழ்ச்சிகளை விளக்கம் உதாரணங்களாக இருக்கின்றன. இவ்வைந்து அதிகாரங்களிலும் காணப்படும் நிகழ்ச்சிகள், நியாயாதிபதிகளின் வரலாற்றின் இறுதிக் காலத்தில் நிகழ்ந்ததாக அல்லாமல் ஆரம்பகாலத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளாய் உள்ளன. அதாவது, இவை சிம்சோனுடைய காலத்துக்குப் பிறகு நிகழ்ந்தவைகளாக அல்லாமல் யோசுவா இறந்தவுடன் நிகழ்ந்த நிகழ்ச்சிகளாக உள்ளன. இதை உணர்த்தும் இரண்டு காரணிகளை நாம் 17-21 வரையுள்ள அதிகாரங்களிலே பார்க்க முடிகின்றது.

முதலாவதாக, நியாயாதிபதிகள் 17, 18-ம் அதிகாரங்களில் கூறப்பட்டுள்ளபடி தாண் கோத்திரத்தார் தாம் குடியிருப்பதற்கு நாடு தேடி, கர்த்தர் தாம் சுதந்தரித்துக் கொள்வதற்காக கொடுத்திருந்த பகுதிகளை அடைவதற்க கானான் தேசத்தின் வடபகுதியின் மலைப் பிரதேசத்திற்குப் போவது பற்றி ஏற்கனவே யோசுவாவின் புத்தகத்தில் கூறப்பட்டிருப்பதை வாசிக்கலாம். ஆகவே, இச்சம்பவம் நியாயாதிபதிகளின் வரலாற்றின் ஆரம்பகாலப்பகுதியில், அதாவது யோசுவா இறந்தபின் உடனடியாக நிகழ்ந்தவை என்பது தெளிவாகிறது.

இரண்டாவதாக, நியாயாதிபதிகள் 20:27-28-ல் பென்யமின் குலத்தாரோடு ஏற்பட்ட யுத்தத்தின்போது நிகழ்ந்த சம்பவமொன்றின் குறிப்பு காணப்படுகின்றது. இங்கே, எண்ணாகமத்தில் நாம் சந்திக்கின்ற, எலெயாசரின் மகன் பினெகாஸைப்பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. பினேகாஸ் இன்னும் உயிரோடிருந்திருப்பானேயானால், இச்சம்பவம் நியாயாதிபதிகளின் வரலாற்றின் ஆரம்ப காலத்தில் நிகழ்ந்தவை என்பதை நமக்குத் தெளிவாக உணர்த்துகின்றன. அத்தோடு, இச்சம்பவங்கள், யோசுவா இறந்த நினைவகலுமுன்பே இஸ்ரவேலர் ஆன்மீக, சமூக குழப்ப நிலையை நோக்கித் துரித நடைபோடத் துவங்கிவிட்டதையும் நமக்குத் தெளிவுபடுத்துகின்றன.

இக்காலத்தில் இஸ்ரவேலர் மத்தியில் காணப்பட்ட ஆன்மீகக் குழப்பம், ஒழுக்கக்கேடுகள், தெய்வப்புறக்கணிப்பு ஆகியவற்றைப் படம்பிடித்துக் காட்டும் உதாரணங்களாக இக்கடைசி ஐந்து அதிகாரங்களும் உள்ளன. ஆகவேதான், நியாயாதிபதிகளின் புத்தம், இக்காலத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது “அந்நாட்களில் இஸ்ரவேலில் ராஜா இல்லை; அவனவன் தன் பார்வைக்குச் சரிபோனபடி செய்து வந்தான்” என்று கூறுவதைக் காண்கிறோம். இதற்குப் பொருலென்னவென்றால், அந்நாட்களில் இஸ்ரவேலில் ஒருவருமே கர்த்தரையோ அவருடைய வார்த்தையையோ மதிக்கவில்லை என்பதுதான். அதன் விளைவாக அவனவன் தன்தன் மனம் போனபடி நடந்துவந்தான் என்கிறது இந்த வசனம். இதை வேறுவிதமாகக் கூறப்போனால், எவரெவர், தேவனுடைய வார்த்தையை விட்டுவிலகிப் போகிறார்களோ, அவருடைய வார்த்தைக்குக் கட்டுப்பட மறுக்கிறார்களோ அவர்ளுடைய இதயத்தில் சுய இயல்பே ஆட்சி செய்யும். ஆகவே, அவர்கள் தங்கள் இயல்பின்படியே செயல்பட்டு, கர்த்தரைப் புறக்கணிக்கிறார்கள்.

இவ்வசனம், இஸ்ரவேலர்களின் நடத்தை‍யை மட்டுமல்லாமல் இக்காலத்தில் நாம் பார்க்கக்கூடியதாக இருக்கின்ற பல சபைகளின் நடத்தையும், விசுவாசிகளினுடைய நடத்தையையும் தெளிவாகப் படம் பி‍டித்துக் காட்டுகின்றது. இன்று விசுவாசிகள் என்று தங்களை அழைத்துக் கொள்கிறவர்களுடைய வாழ்க்கையில் மட்டுமல்லாது, சபைகளிலும் கர்த்தருடைய வார்த்தைக்கு மதிப்பில்லை. பலரும் பெயருக்கு வேதத்தைப் பயன்படுத்துவதைத்தான் பார்க்க முடிகின்றதே தவிர உண்மையோடும், அது மெய்யான தேவனின் சத்திய வசனம் என்ற உள்ளுணர்வோடும், தங்களுடைய வாழ்க்கை, சபை வாழ்க்கை மற்றும் உலக காரியங்கள் எல்லாவற்றிலும் அதன் வழியைப் பின்பற்றி நடக்க முயற்சிப்பவர்களைப் பார்ப்பது இன்று மிக அரிதாக இருக்கின்றது. இந்நாட்களில் நம் இராஜாவான கர்த்தருக்கு மதிப்பில்லை. அவனவன் தன் தன் மனம்போனபடி நடந்து வருகின்றான். நடைமுறையில் தமிழினத்தின் மத்தியில் காணப்படும் கிறிஸ்தவ சமுதாயத்தில் நாம் தெளிவாகப் பார்க்கக்கூடியதாக இருக்கின்ற இந்த உண்மையை மேலும் விளங்கிக் கொள்ள நியாயாதிபதிகள் 17-வது அதிகாரத்தை சிறிது விளக்கமாகப் பார்ப்போம்.

நியாயாதிபதிகள் 17 – கர்த்தருக்கு விரோதமாக எழுந்த ஆலயம்

இந்த வேதப்பகுதியை நாம் சரிவரப் புரிந்துகொள்ள வேண்டுமானால், இக்காலகட்டத்தில் இஸ்ரவேலில், ஏற்கனவே கர்த்தரால் அதிகாரபூர்வமாக இஸ்ரவேலரின் வழிபாட்டிற்கென்று நியமிக்கப்பட்ட ஓர் ஆலயம் இருந்ததென்ற உண்மையை மனதில் கொள்வது அவசியம். இவ்வாலயம், ஆரம்பத்தில் மோசேயினால் வனாந்தரத்தில் எழுப்பப்பட்டு, பின்பு கர்த்தருடைய தெய்வீக வழிநடத்தலின்படி சீலோ பட்டணத்தில் நிறுவப்பட்டது. அதுமட்டுமல்லாமல், தேவனால் நியமிக்கப்பட்ட இந்த இடத்திலுள்ள ஆலயத்தில் மட்டுமே இஸ்ரவேலர் கூடி வந்து, அவரை முறையாக, அவர் வழிப்படி வழிபட வேண்டுமென்று அவர்களுக்க கட்டளையிடப்பட்டிருந்தது. உபாகமம் 12:1-14 வரையிலான வசனங்கள். இதற்கான ஏற்பாட்டைப்பற்றித் தெளிவாக விளக்குகின்றன. இவ்வசனங்களின்படி கர்த்தர் நியமித்த இடத்திலல்லாது வேறொரு இடத்தில் அவரை அவர்கள் வழிபட முடியாது. இதேபகுதியில் 8-ம் வசனத்தில் அவனவன் தன்தன் பார்வைக்குச் சரியானதையெல்லாம் செய்கிறதுபோல் நீங்களும் செய்யாது இருங்கள் என்றும் தேவன் கூறியிருந்தார்.

இஸ்ரவேலரின் ஆரம்ப வெற்றிகளுக்குப்பின், கர்த்தர் எப்பிராயீம் மலைத்தேசத்தில் உள்ள சீலோவைத் தன் வழிபாட்டிற்காகத் தெரிவு செய்தார். இதன் நிறைவேற்றுதலைக் குறித்து யோசுவா 18:1-ம் வசனத்தில் இஸ்ரவேல் புத்திரரின் சபையெல்லாம் சீலோவில்கூடி, அங்கே ஆசரிப்புக்கூடாரத்தை நிறுத்தினார்கள் என்று கூறப்பட்டுள்ளது. உபாகமம் 12-ல் கூறப்பட்டபடி யோசுவாவின் காலத்தில், இது இவ்வாறாக நிறைவேறியது. ஆகவே, கர்த்தர் தாமே தன்னுடைய வழிபாட்டிற்கான இடத்தைத் தெரிவு செய்து நியமித்திருப்பதால் அதைமீறி வேறொரு இடத்தில் ஆலயம் எழுப்புவது அவருக்கு விரோதமான காரியம். ஆனால், நியாயாதிபதிகள் 17-ம் அதிகாரத்தில், மீகா கர்த்தருடைய கட்டளையை மீறித் தன்னுடைய இல்லத்திலேயே ஓர் ஆலயத்தை அமைத்ததைப் பார்க்கிறோம். நியாயாதிபதிகள் 18:31-ன்படி, பின்பு தாண்புத்திரர் கர்த்தருடைய ஆலயம் சீலோவில் இருந்த காலம் முழுவதும் மீகா உண்டுபண்ணின சுரூபத்தை வைத்துக் கொண்டிருந்தார்கள் என்று வாசிக்கிறோம்.

தேவனுக்கெதிராக ஆலயம் எழுப்பிய மீகாவின் செயலை நாம் எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. ஏனெனில், கர்த்தருடைய ஆலயம் எப்பிராயீமில் இருந்தது மட்டுமல்லாமல், நியாயாதிபதிகள் 17:1-ன்படி, மீகாவும் எப்பிராயீமிலேயே வாழ்ந்து வந்தான். ஆகவே, கர்த்தருடைய ஆலயம் மீகா போய் வழிபட முடியாதளவுக்கு தூரத்தில் இருக்கவில்லை. அப்படியிருக்க அவன் கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்து தன்வீட்டிலேயே அவருக்கு எதிராக ஆலயம் எழுப்பியது கர்த்தருக்கு விரோதமான செயல். இச்சம்பவங்களை மனதிலிருத்திக் கொண்டு நாம் நியாயாதிபதிகள் 17-ம் அதிகாரத்தை விபரமாகப் பார்ப்போம்.

ஆலயம் எழுப்பிய மீகாவின் அறிவற்ற செயல்

மீகாவின் அறிவற்ற செயலை இவ்வாலயத்தின் ஆரம்ப‍மே எடுத்துச் சொல்கிறது. கர்த்தர் இத்தகைய செயலுக்கு எதிராக எத்தனையோ போதனைகளை ஏற்கனவே கொடுத்திருக்கும்போது மீகா இந்தக் காரியத்தைச் செய்திருக்க வேண்டிய அவசியமேயில்லை. இது முற்றிலும் தெய்வபக்தியற்ற செயல். இங்கு நாம் மீகாவின் அறிவற்ற செயலை மட்டுமல்லாது, அவனுடைய செயல்களுக்குக்கெல்லாம் மூல காரணமாயிருந்த, இஸ்ரவேலில் இக்காலகட்டத்தில் ஆன்மீக, சமூக, ஒழுக்கத்துறைகளில் காணப்பட்ட குழப்ப நிலையையும் கவனிப்பது அவசியம். இஸ்ரவேலின் ஆன்மீக, சமூக, ஒழுக்கக் குழப்பநிலை‍யை மீகாவின் ஆலயம் எழுப்பப்பட்டவிதத்தில் தெளிவாகக் காணமுடிகின்றது. இங்கே நாம் பார்க்கின்ற சிரிப்புக்கிடமான செயல் என்னவென்றால், மீகா இந்த ஆலயத்தை கர்த்தருக்காக கர்த்தருடைய பெயரில் கட்டியதுதான். ஆலய சம்பந்தமான அனைத்துக் காரியங்களையும் மீகா கர்த்தருடைய பெயரில், கர்த்தருக்காகவே செய்வதாக எண்ணினான். ஆனால், மீகாவினுடைய தெய்வ வழிபாடு, கர்த்தருடைய வார்த்தையில் போதிக்கப்படும் அத்தனை வழிபாட்டு முறைகளையும் மீறியதாக இருந்தது.

அ. மீகாவின் திருட்டு

இவ்வதிகாரத்தின் ஆரம்ப வசனங்களில் மீகா தன் தாயிடமிருந்து ஆயிரத்து நூறு வெள்ளிக்காசுகளைத் திருடுவதைப் பார்க்கிறோம். ஆரம்பத்தில், யார் இந்தக் காரியத்தைச் செய்தது என்பதை அறியாத தாய் திருடனை வாயார சபிக்கிறாள். அச்சாபத்திற்கு அஞ்சிய மீகா கொஞ்சக் காலம் சென்ற பின் தன் தாயிடம் வந்து வெள்ளிக்காசுகளைத் தான்தான் திருடியதாக ஒப்புக் கொள்ளுகிறான். அதைக் கேட்ட அவனுடைய தாய் மகனை எந்தவிதத்திலும் திட்டாமலும், திருத்தாமலும் கர்த்தருடைய பெயரால் அவனை ஆசீர்வதிக்கிறாள். இங்கே நாம் எந்த விதத்திலும் அந்த தாயின் செயலைப் பாராட்ட முடியாத நிலையில் இருக்கிறோம். வெள்ளிக்காசுகள் காணாமல் போனபோது திருடனைத் திட்டிச் சபித்த தாய், அதைத் தன்னடைய மகனே செய்திருக்கிறான் என்று அறிந்தபின் சுயநலத்தால் அவனுடைய தவறுகளுக்கு தானே உடந்தையாக இருக்கிறாள். இந்தத் தாய் தன்னடைய மகனுக்கு எந்தவிதத்திலும் முன்னுதாரணமாக இருக்கவில்லை. அவள் தன் மகள் செய்த தவறை தண்டிக்க மறுக்கம் தன்னலமுள்ள அன்‍னை. அவளுடைய பலவீனத்தை அறிந்து ‍அதைத் தன்னுடைய தவறுகளுக்கு வாய்க்காலாக அமைத்து வாழ்கிறான் மகன். ஒரு குடும்பம் எப்படி அமையக் கூடாதென்பதற்கு இந்த இருவரும் நல்ல உதாரணங்கள். மீகா வெள்ளிக்காசுகளைத் திருடியதாக ஒப்புக்கொண்டாலும், அது உண்மையான மனமாற்றத்தினால் ஏற்பட்டதல்ல. தாயின் சாபம் தன்னைப் பாதித்துவிடக்கூடாது என்ற பயத்தாலேயே அவன் தான் செய்ததை ஒப்புக்கொண்டான். அதுவும் காலம் சென்றே அதைச் செய்தான். தாயின் கோபமும், எரிச்சலும் குறையட்டம், அதற்குப்பிறகு சொல்லிக்கொள்ளலாம் என்றிருந்தானோ என்னவோ. மீகாவில் நாம் இங்கே எந்தவிதமான மனந்திரும்புதலுக்கான மனமாற்றத்தையும் பார்க்கவில்லை.

ஆ. தாய் தந்த மன்னிப்பு

மீகாவின் தாய் தனது வெள்ளிக்காசுகள் திருடுபோனதை அறிந்ததும் ஒரு நிமிடம்கூடத் தாமதிக்காமல் திருடனை வாயார சபிக்கிறாள். பின்பு அவ்வெள்ளிக்காசுகளைத் தன்னுடைய மகனே திருடினான் என்றறிந்ததும் உடனடியாக அவனை ஆசீர்வதிக்கிறாள். தன்னுடைய சாபம் மகனைப்பாதித்து விடக்கூடாது என்று அவனை உடனடியாக மன்னித்து கர்த்தரின் பெயரால் ஆசீர்வாதிக்கிறாள். இது பார்ப்பதற்க பெருமிதப்படக்கூடிய செயலாகத் தென்பட்டாலும், மீகாவின் தாயின் இருளடைந்த இருதயத்தின் தடுமாற்றத்தைத்தான் வெளிப்படுத்துகிறது. தாயும், மகனும் இங்கே சுயநலத்தின் ஆளுகையின் கீழ் ஒருவரையொருவர் ஏமாற்றிக் கொள்ளகிறார்கள். இருவருடைய வாழ்க்கையிலும் மெய்யான தெய்வ பயத்திற்கோ, கர்த்தருடைய கட்டளைகளுக்கோ எந்தவிதமான இடமும் இருக்கவில்லை. தெய்வ பக்தியுள்ளவர்களின் வாழ்க்கையில் இத்தகைய போலித்தனங்களுக்கு இடமிருக்காது.

இ. மீகாவின் பாவம்

இந்த வேதப்பகதியில் நாம் மீகாவின் பாவத்தை ஆராய்கிறபோது, அவன் கர்த்தரின் பெயரில் ‍அவருக்கெதிராக எழுப்பிய ஆலயத்தைக் குறித்துத்தான் சிந்திக்கின்றோம். தன் மகனே திருடன் என்பதை உணர்ந்த மீகாவின் தாய் அதற்கப் பிராயச்சித்தம் செய்யத் தீர்மானித்தான். மகனை அழைத்து கர்த்தரின் பெயரில் வெள்ளிக்காசுகளை அவன் கையில் கொடுத்து, வெட்டப்பட்ட ஒரு சுரூபத்தையும், வார்ப்பிக்கப்பட்ட ஒரு விக்கிரகத்தையும் செய்யும்படியாகச் சொன்னான். தாயினுடைய வேண்டுதலின்படி மீகாவும் சுரூபத்தையும், விக்கிரகத்தையும் மட்டுமல்லாமல், ஒரு ஏபோத்தையும் உண்டுபண்ணினான். ஏபோத்து ஆசாரியர்கள் அணியும் அலங்கரிக்கப்பட்ட ஒரு விசேஷ ஆடை. இஸ்ரவேலர் மத்தியில், அது கர்த்தருடைய சித்தத்தை அறிந்துகொள்ள உதவும் வல்லமையுடையது என்ற ஒரு நம்பிக்கை இருந்தது. தாயும் மகனுமாக சேர்ந்து ஆலயம் எழுப்பும் பணியில் ஈடுபட்டார்கள். ‍எல்லாவற்றையும் செய்து முடித்த மீகாவுக்கு ஒன்று மட்டும் குறையாகத் தெரிந்தது. தன் வீட்டில் எழுப்பப்படுகிற ஆலயத்தில் ஆலய வழிபாட்டுக் காரியங்களைச் செய்ய ஒரு ஆசாரியன் இல்லையே என்ற குறைதான் அது. அந்தக் குறையையும் நிவர்த்தி செய்ய மீகா, தன் குமாரர்களில் ஒருவனையே ஆசாரியனாககப் பிரதிஷ்டை செய்தான். இப்படியாக செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தம் தேட தாயும் மகனும் கர்த்தருக்கென்று ஆலயமெழுப்பினார்கள். இவையனைத்திலும் நான்கு முக்கிய விஷயங்களில் அவர்கள் கர்த்தருடைய தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ள சத்தியங்களை மீறினார்கள் என்பதை அறியலாம்.

1. பத்துக் கட்டளைகளில் இரண்டாவது கட்டளையை மீகா மீறினான். (யாத்திராகமம் 20:4-6). கர்த்தருடைய இரண்டாவது கட்டளை, மேலே வானத்திலும் பூமியிலும், பூமியின் கீழ்த்தண்ணீரிலும் உண்டாகியிருப்பவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும், யாதொரு விக்கிரகத்தையாகிலும், நீ உனக்கு உண்டாக்க வேண்டாம் . . . என்று தெரிவிக்கின்றது. இதை மீகாவும், அவனுடைய தாயும் வெளிப்படையாகவே மீறினார்கள்.

2. கர்த்தர் ஏற்கனவே கட்டளையிட்டு பணித்திருந்த இடத்தில் (சீலோ) அவரை வழிபடாமல், தன் இல்லத்திலேயே மீகா இவருக்கு ஆலயம் ‍எழுப்பி அவருடைய வார்த்தையை வெளிப்படையாக மீறினான்.

3. கர்த்தருடைய ஆலயத்தில் ஆசாரியனா இருக்கிறவன் லேவியரின் கோத்திரத்தில், அதுவும் ஆரோனின் குடும்பத்தில் இருந்து தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற கர்த்தரின் கட்டளையை மீறி, மீகா, எப்பிராயீம் தேசத்தவனாகிய தன் சொந்த குமாரனையே தான் எழுப்பிய ஆலயத்தில் ஆசாரியனாக நியமித்து கர்த்தரின் வார்த்தையை மீறினான்.

4. இத்தனைக்கும் மேலாக அவர்களுடைய பாவத்தின் கோரத்தன்மையை இன்னொன்றில் நாம் பார்க்க முடிகின்றது. தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ள கர்த்தரின் வார்த்தையை வெளிப்படையாக மீறிய மீகாவும், அவனுடைய தாயும் தாம் செய்கின்ற அத்தனையையும் கர்த்தருக்காக, அவருடைய பெயரில் செய்ய முற்பட்ட ஆணவமே அந்தக் கோரத்தன்மையாகும்.

இவ்வாறாக மீகா கர்த்தரின் பெயரில் தன் இல்லத்தில் ஓர் ஆலயத்தை அவருடைய வார்த்தைக்கு எதிராக ஏற்படுத்தினான். இருந்தபோதும் இவையனைத்திலும் ஒரேயொரு காரியம் மட்டும் மீகாவுக்குத் திருப்தியளிக்கவில்லை. அவனுடைய ஆலயத்தின் ஆசாரியனாக லேவியர் கோத்திரத்தில் இருந்து வந்த ஒருவன் இல்லாததே அந்தக் குறையாகும். அது அவனுடைய மனதை எப்போதும் உறுத்திக் கொண்டிருந்தது. ஆலயம் எழுப்பி தன் பாவத்தையும், சாபத்தையும் தீர்த்துக்கொள்ளும் காரியத்தில் ஈடுபட்டிருந்த மீகா லேவியன் ஒருவனை ஆசாரியனாக வைத்துக் கொண்டால் தன் பாவமெல்லாம் போய்விடும் என்று கனவு கண்டான். கர்த்தருடைய வழிகளை நாடி அவரை அடைய முயலாமல் இந்த உலகில் எத்தனை பேர் மீகாவையும், அவனுடைய தாயையும் போல் தங்களுடைய சொந்த வழிகளில் போய் கர்த்தருடைய சமாதானத்தைப் பெற்றக் கொள்ளும் வீண் முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.

இனி மீகா எப்படி ஒரு லேவியனை ஆசாரியனாத் தேடிக் கொண்டான் என்பதைப் பார்ப்போம்.

மீகாவின் ஆலயத்தின் ஆசாரியன்

அ. லேவியனின் பரதேசித்தனம்

இவ்வதிகாரத்தின் 7-ம் வசனம் பெத்லகேமைச் சேர்ந்த லேவியனாகிய ஒரு வாலிபனை நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறது. இவ்வாலிபன் தன் ஊரைவிட்டுப் புறப்பட்டு வேறிடத்திற்குப் போகும்படிப் பிராயணம் செய்தான். அவனுடைய செயலில் இரு பெரும் தவறுகளை நாம் காண்கிறோம். முதலாவதாக, அவனுடைய பிரயாணத்தின் நோக்கம் சந்தேகத்திற்கிடமான நிலையிலிருப்பதை 8-ம் வசனம் எடுத்துச் சொல்கிறது. ஏனெனில், அவன் எங்கேயாகிலும் பரதேசியாகப்போய் தங்கும்பயாக யூதாவைவிட்டுப் புறப்பட்டுப் போனான் என்று வாசிக்கிறோம். அவன் தான் இருந்த இடத்தில், கர்த்தர் அளித்துள்ள பணியில் திருப்தி அடையாமல், சுயநலமுள்ளவனாய், பொருளாசை கொண்டு வேறிடம் தேடி அலைந்தான். இதைவிட ‍வேறு ஏதாவது வசதியாகக் கிடைக்குமா என்று பரதேசி போல் அவன் அலையத் துடித்தான். இன்று இந்த லேவியனைப்போல, பரதேசிகள் போல் பெரிய ஊழியங்களையும், பணவசதியையும் பெயரையும் பெற்றுத்தரும் ஊழியங்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கின்ற ஊழியக்காரர்கள் அநேகர். கர்த்தர் கொடுத்திருக்கும் ஊழியத்தை செய்ய விருப்பமில்லாமல் இக்கரைக்கு அக்கரை பச்சை என்று அலைகிறவர்கள் இந்த லேவியனைப் போன்றவர்களே.

இரண்டாவதாக, லேவியன் கர்த்தருடைய வார்த்தையை மீறினான். யோசுவாவின் காலத்தில் லேவியர்கள் வசிப்பதற்குக் கொடுக்கப்பட்டிருந்த நகரங்களக்கு வெளியில் அவர்கள் போகக்கூடாதென்று கர்த்தரடைய கட்டளை இருந்தபோது, லேவியனாகிய வாலிபன் தவறான எண்ணத்தோடு யூதாவின் பெத்லகேமைவிட்டுப் புறப்பட்டுப் போனான். கர்த்தர் நம்மை அழைத்துக் கொடுத்திருக்கின்ற இடத்தைவிட்டு வேதபூர்வமான காரணங்களில்லாமல் நாம் அகலக்கூடாது. லேவியனாகிய வாலிபனைப் பொறுத்தவரையில் அவன் தன் ஊரைவிட்டுப் போவதற்கு எந்தவிதமான வேதபூர்வமான நல்ல நோக்கங்களும் இருக்கவில்லை.

ஆ. லேவியனோடு மீகாவின் உடன்படிக்கை

அப்படியாக யூதாவைவிட்டுப் புறப்பட்டுப்போன வாலிபன், எப்பிராயீம் மலைதேசத்தில் உள்ள மீகாவின் இல்லத்தை வந்தடைந்தான். அங்கே அவன் மீகாவைச் சந்தித்த‍போது தான் தேடிக்கொண்டிருந்தபடி லேவியன் ஒருவன் வந்துவிட்டான் என்ற மகிழ்ச்சியில் மீகா அவனோடு ஒரு உடன்படிக்கையை செய்து கொண்டான். லேவியனான வாலிபனுடைய நோக்கங்கள் பக்திமார்க்கமானவையல்ல என்பதை அவன் மீகாவின் வீட்டு ஆலயத்தில் ஆசாரியனாக இருக்கச் சம்மதித்ததிலிருந்து அறிந்துகொள்ள முடிகின்றது. மீகா லேவியனுக்கு கொடுக்கச் சம்மதித்த சம்பளத்திலிருந்து லேவியனுடைய இருதயத்தை ஆண்டு கொண்டிருந்த பொருளாசையைப் பார்க்க முடிகின்றது. கர்த்தருடைய கட்டளைகளுக்கு எதிரான செயல் என்றும் பாராமல் பணத்தாசையால் லேவியன் மீகாவின் வீட்டு ஆலய ஆசாரியனாக இருக்கச் சம்மதித்தான். கர்த்தர் லேவியப்பணிக்கு அளித்திருந்த மதிப்பையும், உயர்வையும் அவன் தன்னுடைய இழி செயலின் மூலம் வீதிக்குக் கொண்டு வந்தான். லேவியனின் சுயநலமும் அவன் கண்களைக் குருடாக்கி தனது பணியின் மகத்துவத்தை உணரும் சக்தியையும் அவனில் இல்லாமலாக்கி இருந்தது.

இந்த லேவியனைப்போலவே பல ஊழியக்காரர்கள் கர்த்தரின் ஊழியத்தின் மகிமையை உணராது தங்களுடைய சுயநலப்போக்கினால் ஊழியத்திற்கு அவமரியாதையை ஏற்படுத்தி விடுகிறார்கள். சபையைச் சுரண்டி வாழ்ந்தும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியும், ஆடுகளைத் துஷ்பிரயோகம் செய்தும் வாழ்ந்து வருகின்ற போதகர்கள் இந்த லேவியனைப் போன்றவர்களே. அவர்கள் உலகமே உயர்வாக மதிக்க வேண்டிய ஊழியத்திற்கு பேரிழுக்கைத் தேடித்தருகிறார்கள்.

லேவியனுடைய நோக்கங்களையும், எண்ணங்களையும் பற்றிஎந்தக் கவலையும் கொள்ளாமல் அவனைத் தனது சுயநல நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக் கொண்ட மீகாவின் நடத்தை அவனுடைய உலகப் பிரகாரமான ஆன்மிக ஆர்வத்தை எடுத்துக் காட்டுகின்றது. அவனுடைய செயல்களில் எதுவுமே மெய்யான தெய்வபக்திக்குரிய செயல்களாக இருக்கவில்லை.

இ. மீகாவின் வீட்டு ஆலயத்தில் லேவியனின் பிரதிஷ்டை

இவ்வதிகாரத்தின் 11-ம் வசனத்தில் மீகா லேவியனைத் தன் ஆலயத்தின் ஆசாரியனாகப் பிரதிஷ்டை செய்தான் என்று வாசிக்கிறோம். தன்னுடைய வழிபாட்டு முறையிலிருந்த குறையை இதன் மூலம் போக்கிக்கொண்டதாக மீகா சந்தோஷப்பட்டான். இக்குறையை நிவர்த்தி செய்தவுடன், “எனக்கு ஆசாரியனாக லேவியன் அகப்பட்டபடியால், கர்த்தர் எனக்கு நன்மை செய்வார் என்று அறிந்திருக்கிறேன்” என்று சொல்லி மீகா ஆனந்தப்பட்டான். தங்களுடைய சொந் சுயநல எண்ணங்களின்படி கர்த்தருக்கு இலஞ்சம் கொடுத்தும், ‍பூசைகள் நடத்தியும், மொட்டை அடித்தும், தான தருமங்களைச் செய்தும், கோயில் குளமெல்லாம் அலைந்தும் தங்களைத் தாங்களே திருப்தி செய்து கொண்டு நரக துன்பத்தை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருக்கிறவர்கள் அறியாமையால் அனுபவிக்கின்ற போலி ஆனந்தத்தைத்தான் மீகாவின் ஆனந்தம் நினைவுபடுத்துகிறது.

மீகாவின் செயல்கள் அனைத்தும் அவனுடைய இருளடைந்த இருதயத்தையும், சுயநல நோக்குக்கொண்ட வழிபாட்டுமுறைகளையும்தான் படம்பிடித்துக் காட்டுகின்றன. மீகாவின் செயல்களிலிருந்து நாம் அறிந்துகொள்ள வேண்டிய முக்கியமான உண்மையொன்றுண்டு — எந்தவொரு மனிதனும் உண்மையாக, தன்னுடைய பாவங்களுக்காக வருந்தி மனந்திருந்தாமல், தன்னுடைய சமய வழிபாட்டு முறைகளை மட்டும் நல்ல முறையில் சீர்படுத்திக்கொண்டு தன்னைத்தானே போலியாகத் திருப்திப்படுத்திக் கொள்ள முடியும் என்பதுதான். கர்த்தரை மதிக்காத, ஒழுக்கமற்ற, தெய்வ பக்தி என்பதே என்னவென்றறியாத, தீய நோக்கங்கொண்ட மீகாவிற்குக்கூட இந்தவளையில் போலியான ஆன்மீக ஆர்வம் இருந்தது. ஆரம்பத்தில், கர்த்தருடைய வார்த்தைக்கு விரோதமாக தன்னுடைய சொந்தக் குமாரனையே ஆசாரியனாக நியமித்தபோதும், அதில் திருப்தி அடையாமல் ஒரு லேவியனைத் தேடிப்பிடித்து அவனை ஆசாரியனாக்கி, கர்த்தர் அப்போது தன்னோடிருக்கிறார் என்று தவறாக தனக்குள் எண்ணிக் கொண்டான் மீகா. இத்தனைக்கும் காரணம் மீகாவிற்கு தாயின் சாபத்தில் இருந்த பயம்தான். அது தன்னைத் தொட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் மீகா தன் தாயோடு சேர்ந்து ஆன்மீக அக்கறை என்ற பெயரில் இத்தனை போலி சமய வழிபாடுகளையம் நடத்தினான். ஆனால், பாவியாகிய மீகா தன் பாவ விடுதலைக்கு அவசியமான கர்த்தரின் வழிமுறைகளை நாடவில்லை.

நியாயாதிபதிகள் 17-வது அதிகாரத்தின் சம்பவங்களை நியாயாதிபதிகள் வாழ்ந்த காலத்தின் சமூக, ஒழுக்க, ஆன்மிகக் குறைவுடைய குழப்பமான சூழ்நிலையைப் படம் பி‍டித்துக் காட்டுகிறது. நியாயாதிபதிகள் புத்தகம் முழுவதிலும் இதைத்தான் நாம் அடிக்கடி பார்க்கிறோம். கர்த்தராகிய ராஜாவிற்கு அன்று மனிதன் மதிப்புத் தர மறுத்தது போலவே இன்றும் மனிதர்கள் அவரை நிராகரித்துவிட்டு தங்கள் வாழ்க்கையைத் தாமே நடத்த முயன்று வருகிறார்கள். அங்கே நாம் பார்க்கின்ற அதே ஆன்மீகக் குழப்பமான சூழ்நிலையின் மத்தியிலேயே நாமும் இன்று வாழ்ந்து வருகின்றோம். நாம் வாழும் சமுதாய சூழ்நிலையை ஆராய்ந்து புரிந்து கொள்ள மறுக்கின்ற, அலட்சியப்படுத்துகின்ற எவரும் இன்றைய சூழ்நி‍லையில் நேர்மையான கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ்வது கடினமான காரியம்.

இதுவரை நியாயாதிபதிகள் புத்தகத்திலிருந்து நாம் பார்த்த காரியங்களின் மூலம் மூன்று முக்கியமான பாடங்களைக் கற்றக்கொள்கிறோம்.

1. கர்த்தருடைய வார்த்தையின் அதிகாரத்துக்கு நாம் எப்போதும் கட்டுப்பட வேண்டும்.

இதுவே நாம் முதலாவதாக கற்றுக்கொள்கிற பாடம். இஸ்ரவேலர்கள் அந்தக்காலத்தில் கர்த்தரின் ஆளுகையை நிராகரித்தார்கள். “அக்காலத்தில் இஸ்ரவேலில் ராஜா இல்லை” என்ற வார்த்தைகள் அதையே சுட்டிக் காட்டுகின்றன. கர்த்தரை நிராகரித்து விட்டு நாம் இவ்வுலகில் காலம் தள்ளிவிட முடியாது. நமக்கு ஜீவனைக்கொடுத்த கர்த்தர் நம்மை ஆண்டு வருகிறார். கர்த்தருடைய வார்த்தையை உதாசீனம் செய்த மீகா அதற்கான தண்டனையைத் தன் வாழ்‍க்கையில் அனுபவிக்க நேர்ந்தது. அவனும் அவனைப் போன்றோரும் செய்த பாவங்கள் இஸ்ரவேலைப் பிற்காலத்தில் தொடர்ந்தும் வாட்டியதை வரலாறு நமக்கு விளக்குகிறது. தன்னுடைய இல்லத்தில் மீகா எழுப்பிய ஆலயம்தான்  பிற்காலத்தில் யெரபோவாம் தாணிலும், பெத்தேலிலும் ஆலயமெழுப்பி இஸ்ரவேலைப் பாவத்தில் வழிநடத்தவும் காரணமாக இருந்தது. இஸ்ரவேலில் இக்காலப்பகுதியில் காணப்பட்ட எல்லா வகை சமூக, கலாச்சார, ஒழுக்க, ஆன்மீகக் குழப்ப நிலைக்கும் கர்த்தருடைய வார்த்தைகளை சட்டை செய்யாமல் மக்கள் வாழ்ந்ததே காரணமாக அமைந்தது.

இதே சூழ்நிலையைத்தான் இன்று தமிழினத்திலும் பார்க்கிறோம். கர்த்தருடைய வார்த்தையை சபைகளும், கிறிஸ்தவர்களும் உதாசீனம் செய்து வருகிறார்கள். கர்த்தருடைய வார்த்தை அவசியம்தான் ஆனால், அதே நமக்கு ஜீவன் என்பதுபோல் எல்லாவற்றிற்கும் அதை நாடி ஓட வேண்டியதில்லை என்று சொல்லித்திரிகிற போதகர்கள், கிறிஸ்தவ தலைவர்கள்தான் எத்தனை பேர். எப்படியோ சுவிசேஷத்தை மட்டும் சொல்லி சபையை ஒருவிதமாக நடத்திக்கொண்டு போய்விட்டால் போதம் என்ற மனநிலையோடு சபை அமைப்பு, சபை ஒழுங்குக் கட்டுப்பாடு, ஆராதனை முறைக்,ள பிரசங்க ஊழியம் ஆகியவற்றில் எல்லாம் அக்கறை செலுத்தாமல் காலத்தைப் போக்கி கொண்டிருக்கிற, சபை சீர்திருத்தத்திற்கே எதிரிகளான போதகர்கள்தான் எத்தனைபேர். சத்தியத்தையே மறைத்துவைத்து, ஆத்துமாக்கள் வளர்வதற்கு வழிவிடாமல் இருந்துவரும் இவர்கள் வேதத்தின் அதிகாரத்துக்கு கட்டுப்பட மறுக்கிறார்கள்.

வேதம் ஆட்சி செய்யாத இடத்தில் கர்த்தர் இருக்க மாட்டார் என்பது இவர்களுக்குத் தெரிவதில்லை. அரைகுறையாக வேதத்தைப் பயன்படுத்திக் கொண்டால் போதும், அதற்க மேல் போகத் தேவையில்லை என்று தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக் கொள்ளும் இவர்கள் மீகாவும், லேவியனும் அப்படித்தான் வாழ்ந்தார்கள் என்பதை உணர்வதில்லை. “வாழ்ந்தால் என் வேதத்தின்படி, எனக்காக மட்டும் நீ வாழ வேண்டும், இல்லாவிட்டால் நீ வேத விரோதி” என்று கருதும் கர்த்தரின் எண்ணங்களுக்கு இவர்கள் தங்களுடைய இருதயங்களில் இடம் கொடுப்பதில்லை. சபை ஊழியம் என்ற பெயரில் வேத வைராக்கியமற்ற ஓநாய்க்கூட்டத்தை வளர்ப்பவர்களை கர்த்தர் ஓநாய்களாகத்தான் கருதுகிறார் என்பதை இவர்கள் அறிவதில்லை. “உன் பேரில் எனக்குக் குறையுண்டு, நீ மனந்திரும்பு, ஜெயங்கொள்ளு, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து உன் விளக்குத் தண்டத்தை அதனிடத்தில் இருந்து நீக்கி விடுவேன். உன் கிரியைகளுக்கேற்ற பலனைத்தான் நீ அனுபவிப்பாய்.” என்ற இராஜாவாகிய இயேசுவின் வார்த்தைகளை இவர்கள் வாசித்தாலும் (வெளிப்படுத்தல்) அவற்றின் உள்ளர்த்தங்களை விளங்கிக் கொள்ளும் பக்குவத்தை இழந்து நிற்கிறார்கள்.

பாரம்பரியத்திற்கு தூபம்போட்டு, சடங்காச்சாரியங்களுக்க தலை வணங்கி வருடத்துக்கு ஒரு வருடாந்த விழா, வாலிபர் முகாம், பெண்கள் முகாம், ஊழியக்காரர் முகாம் என்று இவற்றை மட்டும் தொடர்ந்து நடத்துவதைத் தொழிலாகக் கொண்டிருக்கும் சபைகளும், சபைப் பிரிவினரும் வருடா வருடம் வேதபூர்வமாக சபை வளர்ந்திருக்கிறதா என்பதையே சிந்தித்துப் பார்ப்பதில்லை. அந்த வம்பெல்லாம் நமக்கெதுக்கு? யார் எப்படி ‍இருந்தால் நமக்கென்ன? ஏதோ, சபை ஓடிக்கொண்டிருந்தால் போதும் என்ற அசட்டையாக காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் போதகர்கள் கர்த்தரின் வார்த்தையை துச்சமாக எண்ணுகிறவர்கள். இதை வாசித்துக் கொண்டிருக்கிறபோதும் உங்கள் உள்ளத்தை நீங்கள் செய்யும் தவறுகள் உறுத்தாவிட்டால் பரிசுத்த ஆவியின் எந்தக் கிரியையையும் உங்கள் ஊழியத்தில் நீங்கள் பார்க்க முடியாது என்பதை அறிடிவர்களா?

மீகா, அவன் தாய், லேவியனான வாலிபன் என்று அனைவரும் ஒட்டு‍மொத்தமாக கர்த்தரின் வார்த்தையையும், அதிகாரத்தையும் நிராகரித்ததோடு தங்களுடைய சொந்த எண்ணங்களையே வேதமாகக் கருதினார்கள். இது இன்று தமிழினத்தின் மத்தியில் காணப்படும் கிறிஸ்தவத்தில் இல்லை என்று எவராலது மறுத்துப் பேசமுடியுமா? போதகரில் இருந்து சபையில் அனைவரும் இன்று கர்த்தரின் வார்த்தைக்கு கட்டுப்படுவதில்லை. சத்தியம் பெரிதல்ல, பேசுகிறவன்தான் முக்கியம் என்று, சத்தியம் வீசை என்ன விலை என்று கேட்கிற மனிதர்களையெல்லாம் சபை மேடையில் ஏற்றிக் கொண்டிருக்கிற சபைத் தலைவர்களை நாம் அறியாமலா இருக்கிறோம்? ஆராதனை செய்தால் போதும் அது எப்படி இருக்க வேண்டும் என்பதில் எல்லாம் அக்களை செலுத்த வேண்டிய அவசியமில்லை என்று மீகாவைப் போல சபைகளில் கர்த்தருக்கு தங்கள் சொந்தக் கோவில்களை எழுப்பிக்கொண்டிருக்கிற போதகர்களும், சபைத் தலைவர்களும் இன்ற நம்மத்தியில் இல்லாமலா போய்விட்டார்கள்? தமிழினத்தின் மத்தியில் சத்தான் கிறிஸ்தவம் இல்லை என்று நமக்குத் தெரிகிறது. ஆனால், அதற்குக் காரணம் நம்மத்தியில் சார்ஸ் வைரஸ் போல் இருக்கும் வேதம் பற்றிய தவறான கருத்துக்களும், கர்த்தரின் அதிகாரத்தை நிராகரிக்கும் போலிக்கூட்டமும்தான் என்பதை அறிந்து கொள்ளவிட்டால் எதிர்காலம் எப்படிச் சுடர்விட முடியும்?

நண்பர்களே! கர்த்தரின் வார்த்தைக்கு மதிப்புக் கொடுங்கள். எதையும் அவருடைய வார்த்தையை வைத்து ஆராய்ந்து பாருங்கள். இதுவும் சரி, அதுவும் சரி என்று மதில் மேல் இருக்கும் பூனையைப் போல் இருக்கப் பழகாமல் கர்த்தரின் வார்த்தை போதிக்கும் சத்தியங்களுக்காக உயிர் கொடுக்கப் பழகுங்கள். கர்த்தரின் வார்த்தைக்கு மதிப்புத் தராதவர்கள் அவருடைய மக்களாக இருக்க முடியாது. போதகர்களே! ஊழியத்தை வைத்து உங்களை வளர்ப்பதில் காலத்தைச் செலுத்தாமல், அந்த ஊழியத்தின் பெருமையைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். உங்களால் வளர முடியாமல் போகிற ஒவ்வொருவருக்காவும், உங்களால் சத்தியம் தெரியாமல் வீணாய்ப்போகிற ஒவ்வொருவருக்காவும் நீங்கள் நியாயத்தீர்ப்பு நாளில் கணக்குக் கொடுக்க வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள். சத்தியத்தை சத்தியமாகப் போதித்துப் பிரசங்கம் செய்யாமலும், சத்தியத்தின் அடிப்படையில் மட்டும் சபை நடத்தாமலும் போனால் உங்களக்கும் பரதேசியாகத் திரிந்த லேவிய வாலிபனுக்கும் என்ன வித்தியாசம்?

வேதம் வேதமாகக் கருதப்பட்ட, கர்த்தரின் அதிகாரத்திற்கு கட்டுப்படுகின்ற சபைகளும், ஆத்துமாக்களும் வளர்கின்றபோதே தமிழினத்தின் மத்தியில் இன்று காணப்படும் ஆன்மீகக் குழப்பம் நீங்கும். நண்பர்களே! எல்லாம் நன்றாய்த்தான் போய்க்கொண்டிருக்கிறது என்று நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் நேரமல்ல இது. சத்தியத்திற்காக உழைக்கிறவர்கள் உருவாக வேண்டிய காலமிது. அந்தக்கூட்டத்தில் நீங்கள் சேர்வீர்களா?

2. கட்டற்ற தன்னல நடத்தையுடையவன் (Rampant Individualism) கர்த்தருக்கு எப்போதுமே விரோதியாக இருப்பான்

இஸ்ரவேலர் மத்தியில் காணப்பட்ட ஆன்மீக, சமூக, ஒழுக்கக் குழப்ப நிலைக்கு இஸ்ரவேலரின் கட்டற்ற தன்னலநடத்தையே காரணமாக இருந்தது. இதனை நாம் மீகாவிலும், அவனுடைய தாயிலும், லேவியனாகிய வாலிபனிலும் பார்க்கிறோம். கட்டற்ற தன்னல நடத்தை என்பது, கர்த்தரின் வார்த்தைக்குக் கட்டப்படாது, தானே தனக்குத் தெய்வமாய், தான்தோன்றித்தனமாய் நடப்பதுதான். இப்படி வாழ்கிறவர்கள் கர்த்தரையும் தங்களுடைய பாவத்திற்குத் துணை கொள்ளத் தயங்கமாட்டார்கள். எங்கெங்கு கர்த்தருடைய வார்த்தைக்கு மதிப்பில்லையோ அங்கெல்லாம் கட்டற்ற தன்னல நடத்தையின் ஆட்சியைத்தான் பார்க்க முடியும். மீகா கர்த்தருடைய வார்த்தையை மீறி ஆலயம் எழுப்பினான். லேவியன் கர்த்தருடைய வார்த்தையை மீறி பரதேசியாக அலைந்தான். இத‍ற்கெல்லாம் காரணம் அவர்களுடைய கட்டற்ற தன்னல நடத்தைதான்.

இன்று இது தமிழினத்திலும் தாண்டவமாடிக் கொண்டிருப்பதை வெட்ட வெளிச்சமாகப் பார்க்கிறோம். விசுவாசியாக மாறி மூன்று மாதம் முடிவதற்குள் கர்த்தர் கனவில் பேசினார் என்று சொல்லி தன் வீட்டிலேயே ஒரு ஊழியத்தை ஆரம்பித்து நடத்துகிற மனிதன் இந்த இனத்தைச் சேர்ந்தவனே. ஊழியம் என்றால் என்னவென்றே தெரியாமல், வேதத்திலும் நல்லறிவு இல்லாமல் தனி ஊழியம் நடத்திக் கொண்டிருக்கின்ற ஒரு பெருங்கூட்ட‍மே இன்று தமிழினத்தில் இருக்கிறது. தங்களுடைய இருதயத்தில் ஏற்படுகின்ற வெறும் குருட்டார்வத்தைக் கர்த்தரின் அழைப்பாகத் தவறாகக் கருதி ஊழியம் செய்யப் புறப்பட்டிருக்கின்ற இந்தக்கூட்டத்திற்கு தங்களுடைய செய்கை தவறானது, வேதபோதனைகளுக்கெல்லாம் முரணானது என்பது புரிவதில்லை. கர்த்தர் அழைத்தபோதும் தயங்கித் தாழ்மையை வெளிப்படுத்திய ஏசாயா, யெரேமியா போன்றோர் எங்கே, கர்த்தர் அழைப்பதற்கு முன்பே வேட்டியை ம‍டித்துக் கட்டிக்கொண்டு முன்னால் நிற்கும் நம் மனிதர்கள் எங்கே.

இதற்கும் மேலாக பலர் எந்த இடத்திலும் நிலைத்து நிற்காமல் பரதேசி போல் அலைந்து கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு சபையென்றாலே அவர்ஜி. சபைத்தொடர்பில்லாமல், ஒருவருக்கும் கட்டுப்படாமல், லேவியனைப்போல அலைந்து கொண்டிருப்போரை நாம் அன்றாடம் சந்திக்கிறோம். அதுவும் சபையைக் காணாத விசுவாசிகள் கூட்டம் தமிழினத்தில் பெரிய கூட்டம். இவர்களுக்கு கிறிஸ்வத்தைப் பற்றிய அரிச்சுவடி கூடத்தெரியாது. கட்டற்ற தன்னல நடத்தையால் இந்தக்கூட்டத் எந்தச்சபைக்கும் தன்னை ஒப்புக் கொடுக்காது. கர்த்தரை விசுவாசித்தது ஒரு சபையில், ஞானஸ்நானம் வாங்குவது இன்னொரு சபையில், ஆன்மீக நன்மைகளைப் பெறுவது வேறொரு சபையில், திருமணத்தை முடிப்பது இன்னொர சபையில் என்று சபை சபையாக அலைந்து கொண்டிருக்கும் இவர்களக்கும் நியாயாதிபதிகள் புத்தகத்தில் நாம் சந்திக்கும் நபர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இவர்கள் கர்த்தருடைய வார்த்தைக்கு கட்டுப்பட மறுக்கும் மனநிலை கொண்டவர்களாக இருக்கிறார்கள். மீகாவின் சாயலைத்தான் இவர்களில் நாம் பார்க்கிறோம். லேவியனின் போக்கைத்தான் இவர்களில் காண்கிறோம்.

வேதம் போதிக்கும் விசுவாசிகள் கர்த்தரின் வார்த்தைக்கும், அவருடைய சபைக்கும் தங்களை ஒப்புக்கொடுத்தவர்களாக இருப்பார்கள். அவர்களுடைய வாழ்க்கையில் தாழ்மைக்கு முதலிடம் இருக்கும். யோவான் ஸ்நானனைப்போல அவர்கள் கிறிஸ்து உயர வேண்டும், நாம் சிறுக வேண்டும் என்ற மனநிலையைக் கொண்‍டிருப்பார்கள். நண்பர்களே! இதுவரை கட்டற்ற தன்னல வாழ்க்கையை நடத்தியிருந்தால் இன்றோடு அதற்கு முடிவுகட்டி கர்த்தருடைய வார்த்தைக்குக் கட்டுப்பட்டு அவருடைய மெய்யான சபை வாழ்க்கைக்கு உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஒப்புக் கொடுங்கள்.

3. மெய்யான தெய்வபக்தியில்லாத வெறும் ஆன்மீக உணர்ச்சிகள் கர்த்தருக்கு விரோதமானவை

மீகாவின் வாழ்க்கையிலும் அவனுடைய தாயின் வாழ்க்கையிலும் இருந்தது தெய்வ பக்தியல்ல. அது ஆன்மீக உணர்ச்சி என்ற பெயரில் நடத்தப்பட்ட போலித்தனமான ஒரு நாடகம் மட்டுமே. இதற்க இன்று உலகில் பல உதாரணங்களைக் காட்டலாம். பெனி ஹின் நடத்தி வரும் நாடகத்தை இன்று உலகம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. சில வருடங்களுக்கு முன் இதே உலகம் சிரிப்பலை மோகத்தை சந்தித்தது. ஆன்மீக உணர்ச்சிப் பிரவாகம் என்ற பெயரில் நாயைப் போல் குரைத்த கூட்டத்தைப் பற்றியும் நம்மினம் கேள்விப்படாமலில்லை. நம்மினத்திலும் இதேவிதமாக நாடகத்தை பட்டி தொட்டியெல்லாம் நடத்தி வருகிறவர்கள் அநேகர். பவுல் அப்போஸ்தலன் கூட கொரிந்து சபையில் அடக்கமில்லாமல், கர்த்தரின் வார்த்தைக்கு கட்டுப்படாமல் தான் தோன்றித்தனமாக அந்நிய பாஷை பேசவும், தீர்க்கதரிசனம் சொல்லவும் முயன்ற கூட்ட‍த்தை அடக்க வேண்டியிருந்தது. ஆன்மீக உணர்ச்சி வெளிப்பாடு என்ற பெயரில் நடக்கும் இந்தக் காரியங்களுக்கும் மெய்க்கிறிஸ்தவத்திற்கும் எப்போதும் தொடர்பு இருந்ததில்லை. எங்கே உணர்ச்சிகள் வெள்ளம் போல் கட்டுப்படுத்த முடியாமல் தறிகெட்டு ஓடுகின்றதோ அங்கே ஆபத்து இருக்கின்றது என்றுதான் அர்த்தம். புதுப்படமொன்று வெளிவந்த நாளில் தி‍யேட்டரில் மக்கள் போடுகிற ஆரவாரத்தை சபையில் பார்க்கும் நிலை ஏற்பட்டால் அங்கு கிறிஸ்தவத்திற்கு இடமில்லை என்றுதான் பொருள்.

மெய்யான தெய்வபக்தி வேதபோதனைகளுக்குக் கட்டுப்பட்டது. அது வேதத்திற்கு விரோதமாக நடக்காது. அதற்கும் உணர்ச்சிகளுக்கும் தொடர்பில்லை என்று கூறுவது தகாது. ஆனால், அங்கே உணர்ச்சிகள் வாய்க்காலில் ஓடும் தண்ணீரைப்போல கட்டுப்பாட்டோடு ஓடிக்கொண்‍டிருக்கும். வாய்க்காலுக்கு வெளியில் பாயப்பார்க்கும் தண்ணீர் கட்டுப்பாடில்லாதது. போலிச்சமய உணர்ச்சிகள் ஒரு மனிதனை பரலோகத்திற்கு அழைத்துப்போகும் வல்லமையைக் கொண்டிருக்காது. அவை பரிசுத்த ஆவியின் கிரியைகளினால் உண்டான உணர்ச்சிகள் அல்ல. பரிசுத்த ஆவியின் செயலினால் ஆத்துமாக்களில் ஏற்படும் மெய்யான ஆன்மீக உணர்வுகள் தேவையற்ற ஆரவாரத்தை நாடாது பாவத்திற்கு எதிரான போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி கர்த்தருடைய வார்த்தையின்படி பரிசுத்த வாழ்க்கையை இந்த உலகில் நடத்துவதை இலட்சியமாகக் கொண்டிருக்கும்.

மீகா, அவனுடைய தாய், லேவியன் போன்றவர்களை உதாரணங்காட்டித்தான் பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதிய நிருபத்தில், “தேவ பக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு” என்று உபதேசம் செய்தார் (2 தீமோத்தேயு 3:5). வேத பக்திக்கு அவசியமான மனந்திரும்புதலை வலியுறுத்திய இயேசு, அவ்வாறாக மனந்திருந்தியவர்களிடமிருந்து அதற்குரிய கனிகளை எதிர்பார்க்கிறார் (மாற்கு 3:8). அக்கனிகள் ஒருவனுடைய தாலந்துகளாகவோ, அவன் செய்யும் அற்புதங்களோ அல்ல என்பதை விளக்கிய இயேசு, அந்நாளில் அனேகர் என்னை நோக்கி: “கர்த்தவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அனேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது நான் உங்களை ஒருக்காலும் அறியவில்லை; அக்கிரம செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்கு சொல்லுவேன்” என்று கூறுகிறார். மனந்திரும்புதலுக்குரிய ஆவிக்குரிய வாழ்க்கையின் அடையாளங்கள் ஆவியின் வரங்களில் தங்கியிருப்பதாக தவறாக எண்ணிக் கொண்டிருப்பவர்கள் இயேசுவின் இந்த வார்த்தைகளை சிந்தித்து ஆராய்ந்து பார்ப்பது நல்லது.

வேத பக்தியின் வேஷத்தைத் தரிப்பவர்களைக் குறித்து எச்சரிக்கை செய்யும் ஆண்டவர், “அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; முட் செடிகளில் திராட்சைப் பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப் பழங்களையும் பறிக்கிறார்களா? அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ நல்ல கனிகளைக் கொடுக்க மாட்டாது. நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும். ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்” என்றார். ஆனால், பரலோகத்தில் பிரவேசிக்கும் மெய்யான தெய்வபக்தியைக் கொண்டவர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, “அவர்கள் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தப்படி செய்பவர்களாயிருப்பார்கள்” என்று ஆணித்தரமாக எடுத்துரைக்கிறார்.

இத்தகைய தெய்வபக்தி இஸ்ரவேலர்கள் மத்தியில் இல்லாதிருந்ததோடு, இன்று நம்மினத்தின் மத்தியிலும் காண முடியாத அபூர்வப் பொருளாக இருக்கின்றது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மட்டுமே தன் ஆவியின் மூலமாக இத்தகைய தெய்வபக்தியைத் தரக்கூடியவராக இருக்கிறார். அவராலேயன்றி வேறொருவர் மூலமாகவும் தேவனுடைய இராஜ்ஜியத்துக்குள் எவரும் பிரவேசிக்க முடியாது என்று வேதம் தெளிவாகச் சொல்லுகிறது. எவருடைய வாழ்க்கையில், தேவனால் கொடுக்கப்படும், மனந்திரும்புதலோடு கூடிய விசுவாசம் இருக்கிறதோ, அங்குதான் உண்மையான தெய்வபக்திக்கான எல்லா ஏதுக்களும் காணப்படும். ஆகவே, கர்த்தருடைய வார்த்தையின் அடிப்படையில் அமைந்த இத்தெய்வபக்தியை நாம் அனைவரும் நாடி வந்து இன்று எம்மைச் சூழ்ந்திருக்கும் ஆன்மீகக் குழப்பநிலையில் இருந்து விடுதலை பெறுவோமாக.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s