ஆயிரம் வருட அரசாட்சி

இதை நான் எழுதிக்கொண்டிருக்கும் வேளையில் இஸ்ரவேலும் பாலஸ்தீனியர்களும் தீவிரமாக சண்டையில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஒவ்வொருமுறையும் இஸ்ரவேல் சண்டையில் ஈடுபடும்போதோ அல்லது தாக்கப்படும்போதோ அதில் அதிக அக்கறை எடுத்து எதிர்காலத்தைப்பற்றி தீர்க்கதரிசனம் சொல்ல கிறிஸ்தவர்களில் ஒருபகுதியினர் எப்போதுமே முயல்கின்றனர். இவர்களைப் பொறுத்தவரையில் இது இவர்களுடைய கிறிஸ்தவ நம்பிக்கையின் அடிப்படை அம்சம். இதற்குக் காரணம் என்னவென்றால் கிறிஸ்துவின் ஆயிரம் வருட ஆட்சிபற்றி இவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையே. அது என்னவென்று இனிப் பார்ப்போம்.

வெளிப்படுத்தல் விசேஷத்தில் காணப்படும் ஆயிரம் வருட ஆட்சி, கிறிஸ்துவின் தலைமையில், இஸ்ரவேலைத் தலைநகராகக்கொண்டும், யூதர்களை மையமாகக் கொண்டும் இவ்வுலகில் கிறிஸ்துவின் இரகசிய இரண்டாம் வருகைக்குப் பின்பு, ஏற்படும் என்று இவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். இந்த ஆயிரம் வருட கால அரசு நடக்கும்போது உலகில் சமாதானமும், பொருளாதார விருத்தியும் காணப்படும் என்றும், இது ஒரு பொற்காலமாக இருக்கும் என்பதும் இவர்களுடைய நம்பிக்கை. கர்த்தரின் திட்டங்கள் அனைத்தும் இந்த ஆயிரம் வருட அரசாட்சியை மையமாகக் கொண்டே அமைந்துள்ளன என்றும், கிறிஸ்து இவ்வுலகுக்கு வந்து சிலுவையில் மரித்ததெல்லாம் யூதர்கள் கர்த்தருடைய திட்டத்தை ஏற்றக்கொள்ளாததனால் ஏற்பட்ட விளைவே என்றும் இவர்கள் கூறுகிறார்கள். இஸ்ரவேலை மையமாகக்கொண்டு அமையவிருந்த ஆயிரம் வருட அரசாட்சிக்கு தடை ஏற்பட்டதனாலேயே இந்த உலகில் திருச்சபையை ஏற்படுத்த கர்த்தர் தீர்மானித்தார் என்றும் அது எப்போதுமே அவருடைய ஆரம்பத்திட்டமாக இருக்கவில்லை என்றும் இவர்கள் சொல்கிறார்கள். இந்த விதத்தில் விளக்கம் கொடுப்பவர்களை பிரி-டிரிபியூலேசன் டிஸ்பென்சேஷனலிஸ்ட் (Pre-Tribulation Dispensationalist) என்று அழைப்பார்கள். இந்தவிதத்தில் ஆயிரம் வருட அரசாட்சி பற்றி நம்பிவரும் இந்தக் கிறிஸ்தவர்கள் மத்தியில் இதுபற்றி வேறுபாடான பல்வேறு விளக்கங்களும் நிலவுகின்றன. இவர்களைப் பொறுத்தவரையில் இந்தப்போதனை அடிப்படைப் போதனை. இதை விசுவாசிக்காமல் இவர்கள் நடத்தும் இறையியல் கல்லூரிகளில் இருந்து ஒருவரும் பட்டம் வாங்கிவிட முடியாது. அந்தளவுக்கு இந்த விஷயத்தில் இவர்கள் கொள்கைப்பற்று உடையவர்களாயிருக்கிறார்கள்.

இதைப்பற்றி நாம் அலட்டிக் கொள்ள வேண்டுமா?

இவர்களுடைய நம்பிக்கை சரியானதா? என்றும், வேதம் போதிப்பதைத்தான் இவர்கள் நம்பிவருகிறார்களா? என்றும் நாம் ஆராய வேண்டியது அவசியம். ஏனென்றால் தமிழ் கிறிஸ்தவ மக்கள் மத்தியில் இந்தக் கோட்பாடு இன்று வேரூன்றி நிற்கிறது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, ஜே. என். டார்பியின் நூல்கள், சீ. ஐ. ஸ்போபீல்ட் வேதக்குறிப்புகள் போன்றவற்றாலும், நூற்றுக்கணக்கான அமெரிக்க கிறிஸ்தவ மிஷனரி இயக்கங்கள் மூலமாகவும் இது தமிழ்க்கிறிஸ்தவர்கள் மத்தியில் பரவி வேரூன்றி நிற்கிறது. பாலைவன மணலில் தலையைப் புதைத்துக் கொண்டு என்னை யாரும் பார்க்கவில்லை என்று நினைக்கும் தீக்கோழிபோல் நடந்து, இது ஒரு பெரிய காரியமில்லை, இதைப்பற்றியெல்லாம் நாம் அலட்டிக் கொள்ளக்கூடாது என்று இப்போதனையை நாம் அசட்டை செய்துவிட முடியாது. கிறிஸ்தவ விசுவாசத்தையும், கிறிஸ்தவ இறையியலையும் இப்போதனை இன்று ‍பெரிதும் பாதித்து வருகிறது. எனவே வேதம் ஆயிரம் வருட அரசாட்சி பற்றி என்ன சொல்கிறது என்று நாம் கவனிக்கத்தான் வேண்டும்.

வேதத்தை விளக்கும் விதி முறைகள்

ஆயிரம் வருட ஆட்சியை வேதத்தில் ஒரே ஒரு பகுதியில் மட்டுமே நாம் வாசிக்கிறோம். வெளிப்படுத்தல் விசேஷத்தில் 20 அதிகாரத்தில் மட்டுமே அதுபற்றிய குறிப்பு காணப்படுகின்றது (20:2. 4. 6). வேதத்தில் வேறு எங்கேயும் அதைப் பார்க்க முடியாது. இதிலிருந்து நாம் ஆரம்பத்திலேயே வேதவிளக்க விதிமுறைகள் பற்றிய ஒரு முக்கியமான உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும். வேதத்தின் ஒரு வசனத்தை வைத்துக் கொண்டு நாம் ஒருபோதும் ஒரு சத்தியத்தை உருவாக்கக்கூடாது. அது ஆபத்தானது. அதுவும் அந்த ஒரு வசனத்தில் சொல்லப்படுவதை நாம் வெளிப்படையாயும், தெளிவாயும் புரிந்து கொள்ள முடியாவிட்டால் அதிலிருந்து ஒரு போதனையை நாம் ஒருக்காலுமே உருவாக்கக்கூடாது. ஒரு வசனத்தில் இருக்கும் போதனை எப்போதும் பல வேதப்பகுதிகளால் நிரூபிக்கப்படுவது மிக அவசியம். இந்த அடிப்படையில் பார்த்தால் வெளிப்படுத்தல் விசேஷத்தின் 20ம் அதிகாரத்தின் ஆயிரம் வருட ஆட்சி பற்றிய குறிப்பை வைத்து உடனடியாக ஒரு முடிவுக்கு வந்து ஒரு போதனையை உருவாக்குவது தவறு. ஏனெனில் வெளிப்படையாக, தெளிவாக அந்த ஆயிரம் வருட ஆட்சி என்ன? என்று அந்த வசனத்தில் சொல்லப்படவில்லை. வேதத்தின் ஏனைய பகுதிகளை வைத்தே அது என்ன என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

இந்த 20ம் அதிகாரத்தின் 2ம், 3ம், 4ம், 5ம், 6ம், 7ம் வசனங்களில் காணப்படும் ஆயிரம் வருட அரசாட்சி பற்றி இந்த அதிகாரம் தானே முன்வந்து விளக்காதவரை இது இதைத்தான் குறிக்கிறது என்று நாம் தீர்மானமாக சொல்ல முடியாது. உண்மையில் இந்த அதிகாரம் அது என்ன என்பதை நேரடியாக விளக்கவில்லை என்பதை வேதத்தை முதல் தடவை வாசிப்பவர்கள்கூட புரிந்து கொள்வார்கள். இதற்கு பதிலளிக்கும் டிஸ்பென்சேஷனலிஸ்டுகள், இதில் புரிந்து கொள்வதற்கு என்ன இருக்கிறது? அதுதான் தெளிவாக ஆயிரம் வருடங்கள் என்று கொட்டை எழுத்துக்களில் மூன்று முறை சொல்லப்பட்டிருக்கிறதே, அதைவிட வேறு என்ன விளக்கம் வேண்டும்? ஆயிரம் வருடங்கள் என்றால் எழுத்து பூர்வமான ஆயிரம் வருடங்கள்தான். அதுகூட புரியவில்லையா? வேதத்தை எப்போதும் எழுத்துபூர்வமாக விளக்க வேண்டும் என்பது வேதவிளக்கவிதி முறைகளில் முக்கியமானது என்பது தெரியாதா? என்று முகத்தில் அடிப்பதுபோல் சொல்வார்கள்.

இவர்கள் கூறுவதில் ஓரளவுக்கு உண்மை இருக்கின்றது. வேதவசனங்களுக்கு நாம் எப்போதும் எழுத்து பூர்வமாக விளக்கம் (Literal interpretation) கொடுக்க வேண்டும் என்பது வேதவிளக்க விதி. ஆனால், எழுத்துபூர்வமாக விளக்கம் கொடுப்பது என்பது என்ன? என்பதைத்தான் இவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. இவர்கள் வேதத்தின் ஒவ்வொரு வசனத்திற்கம், சொல்லுக்கும் எழுத்துபூர்வமாக அல்லாமல் வேறு எந்தவிதத்திலும் விளக்கம் கொடுக்கக்கூடாது என்கிறார்கள். இது நடைமுறைக்குக்கூட பொருந்தாத ஒருவாதம். உதாரணத்திற்கு, நான் ஒரு உண்மையைக் கதை மூலமாக சொல்லப்போகிறேன் என்று சொன்னால் அந்தக்கதை மூலம் நான் சொல்லப் போகும் உண்மையைத்தான் புரிந்து கொள்ள வேண்டுமே தவிர நான் சொல்கிற கதையின் ஒவ்வொரு பகுதிக்கும் பொருள் தேடி அலையக்கூடாது. கதை விளக்கும் உண்மைதான் அவசியமே தவிர கதையின் ஒவ்வொரு பகுதியும் அல்ல. கதையின் ஒவ்வொரு பகுதிக்கும் சொல்லுக்கு சொல் விளக்கம் தேடி அலைந்தால் அது விளக்கும் உண்மையைக் கண்டுபிடிக்க முடியாது. எனவே எழுத்துபூர்வமாக சொல்லுக்கு சொல் விளக்கம் கொடுப்பது என்பது ஒரு கதையை கதை என்று உணர்ந்து விளக்கம் கொடுப்பதாகும். கதையைக் கதையாகவும், வரலாற்றை வரலாறாகவும், சங்கீதங்களை சங்கீதங்களாகவும், உவமைகளை உவமைகளாகவும், அடையாளங்களை அடையாளங்களாகவும் பார்க்கப் பழகிக் கொள்ள வேண்டும். அதேநேரம் தெளிவாகவும், நேரடியாகவும் விளக்கம் தரும் பகுதிகளை வேறுவிதத்தில் பார்க்கவும் (உருவகப்படுத்தக் – Allagorizing) கூடாது. இந்த முறையில் உள்ளதை உள்ளபடியாக படித்து விளக்கம் கொடுப்பதைத்தான் எழுத்து பூர்வமாக விளக்கம் கொடுப்பது என்று வேத வல்லுனர்கள் சொல்லுகிறார்கள். அது புரியாமல் ஒரு உவமையை உவமை என்று தெரியாமல் அதன் எல்லாப் பகுதிகளுக்கும் விளக்கம் கொடுப்பது அறிவீனத்தைத் தவிர வேறில்லை.

வெளிப்படுத்தல் விசேஷம் அடையாள மொழிகளால் நிரம்பி வழிகிறது. வேதத்தின் இந்த நூல் மட்டுமே இந்தளவுக்கு அடையாள மொழிகளைக் கொண்டிருக்கிறது. உதாரணமாக 20ம் அதிகாரத்தின் ஆரம்பத்தில் (20:1, 2) ஒரு தூதன் சாத்தானைப் பிடித்து ஒரு பெரிய சங்கிலியால் கட்டி வைக்கிறான் என்று வாசிக்கிறோம். இதற்கு நாம் எப்படி சொல்லுக்கு சொல் விளக்கம் கொடுக்க முடியும்? எழுத்துபூர்வமாக விளக்கம் கொடுத்தால் சாத்தான் இன்று பெரிய சங்கிலியால் கட்டப்பட்டு எங்கோ ஒரு சிறையில் அல்லவா இருக்க வேண்டும். இதை வாசிக்கும்போதே நமக்கு இது அடையாள மொழி என்பது புரிகிறது. ஆகவே, இங்கே அடையாள மொழியில் போதிக்கப்படும் சத்தியம் என்ன என்பதை நாம் ஆராய வேண்டியவர்களாக இருக்கிறோம்.

டிஸ்பென்சேஷ்னலிஸ்டுகள் விடும் பெருங்குறை அவர்களுடைய வேதவிளக்க விதிமுறையே (Interpretative principle). வேதம் நேரடியாக விளங்கிக் கொள்ளக்கூடிய பகுதிகளை (பவுலின் நிருபங்கள் போன்றவை) மட்டும் கொண்டிராமல் வரலாற்றையும், உவமைகளையும், சங்கீதங்களையும், உருவகங்களையும், அடையாளங்களையும் உள்ளடக்கியதாக இருக்கின்றதென்ற உண்மை இவர்களுக்கு புரிந்திருந்தபோதும் அவை எல்லாவற்றிற்கும் இவர்கள் எழுத்து பூர்வமாக, சொல்லுக்கு சொல் விளக்கம் கொடுக்கிறார்கள். இது பெரும் தவறு. இவர்களுடைய வேதவிளக்க முறையே இவர்களுடைய தவறான போதனைகளுக்கெல்லாம் காரணமாக அமைந்துவிடுகிறது.

வெளிப்படுத்தல் விசேஷத்தின் 20ம் அதிகாரம்

இனி ஆயிரம் வருட அரசாட்சி பற்றி பேசும் வெளிப்படுத்தல் விசேஷத்தின் 20ம் அதிகாரத்தைக் கவனிப்போம். இந்த அதிகாரத்திலிருந்து நாம் சுருக்கமாக ஆயிரம் வருட ஆட்சிக்கான விளக்கத்தை மட்டுமே கொடுக்க முடியும். ஏனைய பகுதிகளை விளக்க இந்த ஆக்கத்தில் இடமில்லை. ஆகவே, வாசகர்கள் நாம் கொடுக்கப்போகும் விளக்கத்தையும், வசனங்களையும் வைத்து மேலும் ஆராய்ந்து ஏனைய பகுதிகளையும் படிப்பது பயன்தரும்.

இப்பகுதியில் காணப்படும் ஒழுங்கை (Order) முதலில் கவனிப்போம். 2ம் வசனம் ஆயிரம் வருட ஆட்சியைப் பற்றி அறிவிக்கிறது. ஆயிரம் வருடங்கள் முடியும் தருவாயில் வலுச்சர்ப்பம் சிறையில் இருந்து விடுவிக்கப்படும் (7ம் வசனத்தைப் பாருங்கள்). இந்த விடுதலை கொஞ்சக்காலத்துக்குத்தான் என்று 3ம் வசனம் சொல்கிறது. இதுவே சாத்தானின் கொஞ்சக்காலம் (Satan’s little season) என்று அழைக்கப்படுகிறது. வலுச்சர்ப்பத்தின் இந்தக் கொஞ்சக்கால விடுதலைக்குபின் இயேசுவின் இரண்டாம் வருகை நிகழும் என்றும், அப்போது அவர் வெள்ளைச் சிங்காசனத்தில் அமர்ந்திருப்பாரென்றும், அவ்வேளையில் மரித்தோராகிய சிறியோரும், பெரியோரும் உயிர்த்தெழுவார்களென்றும் 11ம், 12ம் வசனங்களில் வாசிக்கிறோம். வேதத்தின் ஏனைய பகுதிகளில் சொல்லப்பட்டிருப்பது போலவே இப்பகுதியும் இரண்டாம் வருகைகுப்பிறகு இறுதி நியாயத்தீர்ப்பு நிகழும் என்று சொல்கிறது (13ம் வசனம்). எனவே பின்வரும் படிமுறை விபரத்தை இவ்வதிகாரம் அளிக்கிறது:

(1) ஆயிரம் வருட அரசாட்சி

(2) அடுத்து, சாத்தானின் கொஞ்சக்காலம் (Satan’s little season)

(3) கிறிஸ்துவின் இரண்டாம் வருகையும், மரித்தோரின் உயிர்த்தெழுதலும்

(4) நியாயத் தீர்ப்பு

இதுவே இப்பகுதியில் உள்ள ஒழுங்குமுறை. இதை நாம் மாற்றப் பார்க்கக்கூடாது. கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்குப்பிறகு யூதர்களைக் கொண்ட ஆயிரம் வருட ஆட்சி ஏற்படும் என்று சொல்பவர்கள் நல்ல நோக்கத்தைக் கொண்டிருந்தாலும் அப்போதனைக்கு இந்தப்பகுதியில் இடமில்லை. அவர்கள் இங்கே தெளிவாகக் காணப்படும் ஒழுங்குமுறையை தங்கள் வசதிக்கேற்ப மாற்றி அமைத்துக்கொள்கிறார்கள். வெளிப்படுத்தல் விசேஷத்தின் 20ம் அதிகாரம் போதிப்பதை அதில் காணப்படும் விளக்கத்தின்படியே புரிந்து கொள்ள வேண்டும்.

1-3 வசனங்களில் யோவான் கண்ட காட்சி

இந்தக்காட்சி அடையாள மொழியில் இருக்கிறது. இதற்கு உடனடியாக பொருள் தேடமுயலாமல் முதலில் அதை எழுத்துபூர்வமாக விளங்கிக்கொள்வோம். ஒரு தூதன் பரலோகத்தில் இருந்து வருவதை யோவான் பார்க்கிறான். அவன் கையில் ஒரு திறவுகோள் இருக்கிறது. அந்தத் திறவுகோளால் அவன் பாதாளத்தை மூடி அதில் முத்திரை வைக்கப் போகிறான். பாதாளம் ஆழமானது அதன் மேல் ஒரு மூடி இருக்கிறது. அந்த மூடியைத் திறக்கலாம். அதை மூடித் திறக்கமுடியாதபடி முத்திரை போட்டும் வைக்கலாம். தூதனின் கைகளில் இரண்டு பக்கங்களிலும் தொங்கிக் கொண்டிருக்கும் பெரிய இரும்புச் சங்கிலி இருக்கிறது. இந்தக் காட்சியின்படி தூதன் ஒருவனை சங்கிலியால் கட்டி பாதாளத்தில் தள்ளி அதைத் திறக்க முடியாதபடி மூடி முத்திரையிடப் போகிறான். யோவான் அப்போது திடீ‍ரென வலுச்சர்ப்பமொன்றைக் காண்கிறான். அதுவே, சாத்தான் என்று அழைக்கப்படும் பிசாசு. தூதன் சாத்தானைப் பிடித்து சங்கிலியால் அசைய முடியாதபடி இருக்கமாகக் கட்டி பாதாளத்தில் தள்ளி அதன்மூடிக்கு முத்திரை ‍இடுகிறான். சாத்தான் ஆயிரம் வருடங்களுக்கு இப்படியாக கட்டி வைக்கப்படுகிறான். இதுவே யோவான் கண்ட காட்சி.

காட்சிக்கான விளக்கம்

இதில் நாம் பார்க்கும் வலுச்சர்ப்பம் பிசாசாகிய சாத்தான். அவன் தூதனால் கட்டிவைக்கப்படுவதற்கும், உலக நாடுகளுக்கும் பெருந்தொடர்பு இருக்கின்றது மத்தேயு 12:29; லூக்கா 10:17, 18 – யோவான் 12:20-32 ஆகிய பகுதிகள் இது என்ன என்று விளக்குகின்றன. மத்தேயு 12:29ல் அது காணப்படும் பகுதியின் போதனையின்படி இயேசு தன்னுடைய முதலாம் வருகையின்போது பலவானாகிய பெயல்சேபூலைக் கட்டிவைக்கிறார். லூக்கா 10:17, 18 லும் யோவான் 12:20-32லும் பெயெல்சேபூல் எந்தவிதத்தில் கட்டிவைக்கப்படுகிறான் என்பதை, அதாவது இப்பகுதிகான விளக்கம் என்ன என்பதைத் தெரிவிக்கின்றன. இப்பகுதிகள், உலக நாடுகளெல்லாம் நற்செய்தி பரவுவதை சாத்தான் தடைசெய்யமுடியாதபடி இயேசு அவனுடைய ஆதிக்கத்தைப் பெருமளவுக்கு அடக்குகிறார் என்று விளக்குகின்றன. நற்செய்திப் பிரசங்கத் செய்யும்படித் தான் அனுப்பிய எழுபதுபேரும் சந்தோஷத்தோடு திரும்பி வந்தபோது இயேசு அவர்களைப்பார்த்து, “சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன்” என்றார். யோவான் 12ன்படி, சில கிரேக்கர்கள் இயேசுவைப் பார்க்க விரும்பியபோது, இயேசு அவர்களப்பார்த்து, “இப்பொழுதே இந்த உலகத்தின் அதிபதி (சாத்தான்) புறம்பாகத் தள்ளப்படுவான். நான் பூமியில் இருந்து உயர்த்தப்பட்டிருக்கும்போது, எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக்கொள்வேன்” என்றார். இயேசு இங்கே யூதர்களை மட்டும் இழுத்துக்கொள்வேன் என்று சொல்லாமல் “எல்லாரையும்” இழுத்துக்கொள்வேன் என்று சொல்லியிருப்பதைக் கவனியுங்கள். அதாவது யூதர்கள், கிரேக்கர்கள் அனைவரையும் அவர் இழுத்துக் கொள்ளப் போகிறார்.

பழைய ஏற்பாட்டுக் காலத்தில் இரட்சிப்பு பெருமளவில் யூதர்கள் மத்தியில் நிகழ்ந்தது. அது இப்போது முற்றாக மாறுகின்றது. திருச்சபை உலகம் முழுவதும் ஏற்படுத்தப்படுகின்றது. நற்செய்தி எல்லா இடங்களிலும் பிரசங்கிக்கப்பட்டு உலகத்தில் உள்ள, தெரிந்து கொள்ளப்பட்டவர்களெல்லாம், திருச்சபைக்குள் கொண்டுவரப்படுகின்றனர். கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை அறிவிக்கின்ற ஆரம்ப அடையாளமாக இந்த நற்செய்தியின் காலம் இருக்கின்றது.

எனவே, சாத்தான் ஆயிரம் வருடங்களுக்கு கட்டிவைக்கப்படுவது என்பது, கிறிஸ்துவின் முதலாம் வருகையில் ஆரம்பித்து அவருடைய இரண்டாம் வருகைவரையும் உள்ள இந்த நற்செய்திக் காலத்தைக் குறிக்கின்றது. அந்த ஆயிரம் வருட காலத்தின் மத்தியிலேயே நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்தக் காலப்பகுதியில் திருச்சபை மூலம் நாடுகள் பூராவும் நற்செய்தி பரவுவதை சாத்தானால் தடைசெய்ய முடியாது. அதேவேளை நாடுகளைப் பயன்படுத்தி சுவிசேஷத்தைப் பரப்பிக் கொண்டிருக்கும் திருச்சபையை சாத்தானால் அழிக்கவும் முடியாது. இந்தக் காலப்பகுதியில் உலகம் முழுவதும் சுவிசேஷம் பரவினாலும் முழு உலகமும் கிறிஸ்தவ உலகமாக மாறிவிடாது. அதேவேளை சாத்தானும் தன்னுடைய எதிர்ப்பைக் காட்டிக் கொண்டே இருப்பான். அழிவு வேலைகளையும் செய்து கொண்டிருப்பான். அவன் கட்டி வைக்கப்பட்டிருந்தாலும் அவனுடைய திருவிளையாடல்கள் நின்றுவிடாது. அவன் திமிறிக் கொண்டு நாச வேலைகளில் ஈடுபட்டாலும் இந்த நற்செய்திக் காலப்பகுதியில் உலகம் பூராவும் உள்ள தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் அவனுடைய பொய்யை நிராகரித்து சத்தியத்தை விசுவாசிப்பதை அவனால் தடுத்து நிறுத்த முடியாது. இயேசுவின் இரண்டாவது வருகைக்கு முன்பாக சாத்தான் கொஞ்சக்காலத்துக்கு விடுதலை செய்யப்படும்போது அவன் பேரட்டூழியங்களைச் செய்வான். இதுவே அந்திக் கிறிஸ்துவின் காலமாகவும் இருக்கும். இக்காலத்தில் நற்செய்தி ஊழியங்கள் பாதிக்கப்படும். திருச்சபை உபத்திரவத்தைச் சந்திக்கும்.

சிறையில் சாத்தான், பரலோகத்தில் பரிசுத்தவான்களின் ஆட்சி

இந்த உலகத்தில் நடக்கும் ஆயிரம் வருட காலம் சாத்தான் கட்டி வைக்கப்பட்டிருக்கும் காலமென்று இதுவரை விளக்கினோம். அதேவேளை பரலோகத்தில் காணப்படும் ஆயிரம் வருடங்கள் பரிசுத்தவான்களின் ஆளுகையின் காலமாக இருக்கின்றது. இவை இரண்டும் பிரிக்க முடியாதபடி இணைந்திருக்கின்றன. வெளிப்படுத்தல் விசேஷத்தின் 20ம் அதிகாரத்தின் 4-6 வரையிலான வசனங்கள் பரிசுத்தவான்களின் ஆயிரம் வருட பரலோக ஆட்சியைப்பற்றி விளக்குகின்றன. இயேசு இந்த உலகத்தில் திருச்சபையை நிறுவி, சாத்தானைக் கட்டி ஆயிரம் வருட ஆட்சியை ஆரம்பித்த அதேவேளை ராஜாவாக பரலோகத்திலும் பரிசுத்தவான்களுடன் இணைந்து ஆள்கிறார். இதை இனி சிறிது விளக்கமாகப் பார்ப்போம்.

பரலோக ஆட்சி எப்போது நடக்கப்போகிறது?

இந்த உலகத்தில் ஆயிரம் வருட ஆட்சி கிறிஸ்துவின் முதலாவம் வருகையில் ஆரம்பித்து அவருடைய இரண்டாம் வருகை சமீபிக்கும்வரை நடக்கும் என்று ஏற்கனவே பார்த்தோம். இரண்டாம் வருகைக்கு முன்பாக சாத்தான் கொஞ்சக்காலத்துக்கு கட்டவிழ்க்கப்பட்டு தன்னுடைய அட்டகாசங்களைச் செய்ய அனுமதிக்கப்படுவான். இந்தக் காலமே அந்திக் கிறிஸ்துவின் காலமும் பேருபத்திரவ காலமுமாக இருக்கும். இதன்பின் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை நிகழும். பரலோகத்தில் இக்காலத்தில் எந்தவித உபத்திரவத்திற்கும் இடமிருக்காது. இவ்வுலகில் நாம் பார்க்கப்போகும் ‘சாத்தானின் கொஞ்சக்காலத்திற்கு’ பரலோகத்தில் இடமில்லை. ஆகவே, பரலோகத்தில் பரிசுத்தவான்களின் ஆயிரம் வருட ஆட்சி கிறிஸ்துவின் முதலாம் வருகையில் இருந்து இரண்டாம் வருகைவரையும் முழுமையாக எந்தவிதத்தடையும் ஏற்படாது நடக்கும். இக்காலப்பகுதியில் பரலேகத்தில் உள்ள பரிசுத்தவான்ள் சரீரம் இல்லாதவர்களாக ஆத்துமாக்களாக மட்டுமே இருந்து ஆள்கிறார்கள் என்று 4-6 வரையுள்ள வசனங்கள் சொல்வதையும் கவனியுங்கள். கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போது அவர்களுடைய சரீரங்கள் உயிர்த்தெழுந்து ஆமத்துமாக்களோடு இணைந்து கொள்ளும். ஆகவே, கிறிஸ்துவின் இரண்டாம் வருகைவரையுமே பரலோகத்தில் பரிசுத்தவான்களின் ஆட்சி நடைபெறுகிறது.

பரலோக ஆட்சி எங்கே நடக்கப்போகிறது?

எங்கே சிங்காசனங்கள் இருக்கின்றனவோ அங்கேயே இவ்வாட்சி நடக்கப்போகின்றது (4). கிறிஸ்துவின் சிங்காசனமும், அவருடைய மக்களும் பரலோகத்திலேயே இருக்கிறார்கள் என்று வெளிப்படுத்தல் விசேஷத்தின் ஏனைய பகுதிகள் அனைத்தும் விளக்குகின்றன. அங்கேயே கிறிஸ்துவிற்கான சாட்சியின் நிமித்தம் இரத்தசாட்சியாக மரித்தவர்களுடைய ஆத்துமாக்களும் சரீரமற்று இருக்கின்றன. யோவான் ஆத்துமாக்களைய தன்னுடைய விண்ணகக் காட்சியில் கண்டார்; சரீரங்களையல்ல. அந்த ஆத்துமாக்கள் பரலோகத்தில் இருக்கிறார்கள். அங்கேயே கிறிஸ்துவும் இருக்கிறார். 4ம் வசனத்தில் அவர்கள் கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருடங்கள் அரசாண்டார்கள் என்று வாசிக்கிறோம். தமிழ் வேதத்தில் 4ம் வசனத்தின் கடைசிப்பகுதியில், “அவர்கள் உயிர்த்துக் கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருடங்கள் அரசாண்டார்கள்” என்று வாசிக்கிறோம். இந்த வசனத்தில் “உயிர்த்து” என்ற வார்த்தை எதைச் சொல்கிறது என்பதை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். அந்த ஆத்துமாக்கள் ஜீவனுள்ளவையாக பரலோகத்தில் இருக்கின்றன என்ற உண்மையை விளக்குகின்றது.

இவ்வாட்சியின் மெய்த்தன்மை என்ன?

இது கிறிஸ்துவோடு ஆத்துமாக்கள் ஜீவனுடன் வாழ்வதை விளக்குகிறது. 4ம் வசனம் அவர்கள் உயிர்த்துக் கிறிஸ்துவுடனேகூட அரசாண்டார்கள் என்று கூறுகிறது. இந்த உலகில் அவர்கள வெறுத்து அழித்தவர்களுக்க உண்மையில் முழுத்தோல்விதான். பரலோகத்தில் இந்த ஆத்துமாக்கள் கிறிஸ்துவோடு சகல நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறார்கள். அவர்கள் கிறிஸ்துவோடு குதிரைகளில் செல்வதாக அடையாள மொழியில் விளக்கப்படுகிறது. அவர்கள் கிறிஸ்துவோடு நியாயந்தீர்ப்பதோடு, கிறிஸ்துவின் நீதியைத் தொடர்ந்து பாராட்டித் துதிக்கிறார்கள். கிறிஸ்துவின் ஆட்சியின் மகிமையில் அவர்களுக்கு ஒரு பங்கு இருக்கிறது. கிறிஸ்துவோடு அவர்கள் சிங்காசனத்‍தில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களுடைய நெற்றியில் கிறிஸ்துவின் பெயர் இடப்பட்டிருக்கிறது. கிறிஸ்துவோடு இவர்ள் அனைவரும் தங்கள் தலையில் தங்கக் கிரீடத்தை அணிந்திருக்கிறார்கள். இப்படியாக இவர்கள் பரலோகத்தில் ஆள்கிறார்கள்.

யார் இதில் பங்குகொள்கிறார்கள்?

முதலாவதாக கிறிஸ்துவுக்காக இரத்த சாட்சியா மரித்தவர்களும் – “தேவனுடைய சாட்சியினிமித்தமும், வசனத்தினிமித்தமும் சிரச்சேதம் செய்யப்பட்டவர்களுடைய ஆத்துமாக்கள்” (4). இரண்டாவதாக கிறிஸ்துவுக்குள் மரித்த அனைத்துக் கிறிஸ்துவர்களும் – “மிருகத்தையாவது அதன் சொரூபத்தையாவது வணங்காமல் இருந்தவர்கள்” (4). இவர்களே கிறிஸ்துவோடு பரலோகத்தில் ஆயிரம் வருடங்களுக்கு ஆளுகிறார்கள்.

இதுவே வெளிப்படுத்தல் விசேஷம் விளக்கும் ஆயிரம் வருட ஆட்சி. இது உலகத்தில் எழுத்து பூர்வமாக (Literal) யூதர்களைக் கொண்ட அமையப்போகும் கிறிஸ்துவின் ஆட்சியைக் குறிக்கவில்லை. கிறிஸ்துவின் முதலாம் வருகையிலிருந்து இரண்டாம் வருகை சமீபிக்கும் காலம் வரையிலான ஒரு நீண்ட காலப்பகுதியை மட்டுமே விளக்குகிறது. இந்தக்காலப்பகுதியில் பரலோகத்தில் ஆத்துமாக்கள் கிறிஸ்துவோடு ஆட்சி செய்கிறார்கள். இக்காலப்பகுதியில் சாத்தான் நாடுகளை மயக்கித் தன்வசப்படுத்தி திருச்சபையை அழிக்க முடியாதளவுக்குக் கட்டி வைக்கப்பட்டுள்ளான். இவ்வதிகாரத்தின் 1-10 வரையிலான வசனங்கள் கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்பு நிகழும் காரியங்களையே விளக்ககின்றன. அவருடைய வருகைக்கு முன்பு சாத்தான் கட்டவிழ்த்து விடப்பட்டு கொஞ்சக்காலம் அட்டூழியங்களைச் செய்வான் (7-9). இறுதியில் அவனைக் கிறிஸ்து தன்னுடைய வருகையின்போது நிர்மூலமாக்குவார் (8-10). அதற்குப் பின்பே நியாயத்தீர்ப்பு அனைவருக்கும் நிகழும். இதிலிருந்து பிரி-டிரிபியூலேசனல் டிஸ்பென்சேஷனலிசம் இவ்வதிகாரத்திற்குக் கொடுக்கும் விளக்கம் எத்தனைத் தவறானது என்பதைப் புரிந்து கொள்ளலாம். அடையாள மொழியில் காணப்படும் இப்பகுதிக்கு அவர்கள் எழுத்து பூர்வமான விளக்கம் கொடுத்து எதிர்காலத்தில் யூதர்களைக் கொண்ட தேவ இராஜ்யம் இந்த உலகத்தில் ஏற்படும் என்ற சொல்வது வேதத்தில காண முடியாத போதனை. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நற்செய்திக் காலப்பகுதியிலேயே தேவ இராஜ்யமும் கர்த்தருடைய மக்கள் மத்தியில் நடந்து கொண்டிருக்கிறது. வரப்போகும் ராஜா நீதியின் தேவனாக எல்லோரையும் நியாயந்தீர்க்க வரப்போகிறார். யூத இராஜ்யத்தை நிறுவுவதற்காக அல்ல.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s