ஆவிக்குரிய ஐக்கியத்தை ஏனைய சபைகளோடு எவ்வாறு வளர்த்துக்கொள்வது? – அலன் டன் (Alan Dunn)

இப்பகுதியில் நாம் ஒரே கோட்பாடுகளைப் பின்பற்றி ஆவிக்குரிய அன்போடு ஒருவரில் ஒருவர் நம்பிக்கை வைத்து, வளர்ந்து கொண்டிருக்கும் சீர்திருத்த பாப்திஸ்து சபைகளை மனதில் வைத்தே இதை எழுதுகிறோம். ஒரே கோட்பாடுகளை பின்பற்றாதவர்களுக்கு இவை பொருந்தாது.

1. பொதுவான கடிதத் தொடர்பை ஏற்படுத்தி நம்மோடு ஐக்கியத்திலுள்ள சபை நமது சபையையும், சபைக் காரியங்களையும் பற்றி அறிந்து ஐக்கியத்தில் வர துணை செய்தல் அவசியம்.

அ. அப்போஸ்தலரின் உதாரணம் – அப்போஸ். 15:31; 16:4. எருசலேம் சபையில் இருந்து மற்ற சபைகளுக்கு அனுப்பப்பட்ட கடிதம். கொலோ. 4:16 – லவோடீசியா சபையோடு இருந்த கடிதத் தொடர்பு. அப்போஸ்தலர்கள் சபைத் தலைவர்களாக இருந்த தனிநபர்களான தீமோத்தேயு, தீத்து போன்றவர்களுக்கு எழுதப்பட்ட கடிதங்களே இன்று புதிய ஏற்பாட்டுப் பகுதிகளாக உள்ளன.

ஆ. தனிப்பட்டவர்கள் பற்றிய அறிமுகக் கடிதங்கள் – அப்போஸ்தலர்கள் தனிநபர்களை அறிமுகக் கடிதத்துடன் ஏனைய சபைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

1. அப்போஸ். 18:27 அப்போலோ அறிமுகம். ரோமர் 16:1, 2 அறிமுகப்படுத்தப்படல். கொலோ. 4:10, 11 ஜோன் மார்க் அறிமுகம். 1 கொரி. 16:3 – சபையால் தகுதியுள்ளவர்கள் என்று தெரிவு செய்யப்பட்டவர்களை அப்போஸ்தலர்கள் மற்ற சபைகளுக்கு அறிமுகப்படுத்தினர். 2 கொரி. 3:1 – கொரிந்தியர்களைப் பார்த்து பவுல் உங்களுக்கு எங்களைப்பற்றிய அறிமுகக் கடிதம் தேவையா? என்று கேட்கிறார்.

இ. ஐக்கியத்திலுள்ள சபைகளை நேரடியாகப் போய்ப் பார்த்தல் – தொடர்ச்சியான கடிதத் தொடர்பு இருந்தாலும் நேரடியாக பார்த்துப் பழகுவதைப் போல் வராது. ஐக்கியம் வளர இது அவசியம்.

1. அப்போஸ். 15:32 – யெரூசெலேம் சபையும் அந்தியோகியா சபையும் பிரசங்கிகளைப் பகிர்ந்து கொண்டனர். எபேசி. 6:21, 22ல் டைகீகஸ் எபேசியாவுக்கு அனுப்பப்பட்டதாக வாசிக்கிறோம். கொலோ. 4:7-9ல் டைகாகஸ், ஒனேசிமஸ், மார்க்கு, இயேசு ஆகியோர் கொலோசே சபைக்கு அனுப்பப்பட்டிருந்ததைப் பார்க்க முடிகிறது. பவுல் பல சபைகளுக்குப் போயிருந்ததை நாம் பல இடங்களில் வாசிக்கிறோம் அப்போஸ். 14:21; 15:3, 36; 16:4, 5; 18:22, 23; 21:17-19.

2. சபை ஐக்கியம் வளர பவுல் பின்பற்றிய வழிகளைப் பார்த்து நாம் வியக்காமல் இருக்க முடியாது. ரோமர் 16:3-16ப் பாருங்கள். இப்பகுதியில் தனிப்பட்டவர்களின் பெயர்களைத் தந்து அவர்களுடைய தகுதி பற்றி பவுல் எழுதியிருப்பதைப் பார்க்கிறோம். இது அக்காலத்தில் சபைகளுக்கிடையில் இருந்த அன்பின் அடிப்படையில் இருந்த ஆத்மீக ஐக்கியத்தை விளக்குகிறது. சபைகளுடன் நெருங்கிய தொடர்பிருந்ததாலேயே இத்தகைய உறவை அவர்களால் அனுபவிக்க முடிந்தது.

2. ஏனைய சபைகளோடு இணைந்து சுவிசேஷ ஊழியங்களில் ஈடுபடுதல்.

அ. சபைகளால் தெரிவு செய்யப்பட்டோர் தீர்மானிக்கப்பட்ட ஒரு ஊழியத்தில் இணைந்து செயல்படுதல். – இத்தகைய குழுக்கள் சமயாசமயம் தேவையானபோது மட்டுமே நிறுவப்பட்டதோடு அவை எந்தவித அதிகாரத்தையும் தம்மில் கொண்டிருக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட தேவையை நிறைவேற்ற அவை நிறுவப்பட்டதோடு அத்தேவை நிறைவேறியபின் அவை உடனடியாகக் கலைக்கப்பட்டன. குழு கலைக்கப்பட்டபின் அதிலிருந்தவர்கள் தங்கள் தங்கள் சபைகளில் தொடர்ந்திருந்து செயல்பட்டனர். அவர்கள் ஒரு குழுவாக செயல்பட்டபோது தங்கள் சபை மூப்பர்களின் வழிகாட்டலின்படியே செயல்பட்டனர். ஒரு பாரா-சர்ச் (Para-Church) இயக்கம் போல் அவர்கள் தொடர்ந்து சபைகளில் இருந்து செயல்படவில்லை. சபை செய்ய வேண்டிய எத்தனையோ ஊழியங்களை ஒரே கோட்பாடுகளைப் பின்பற்றும் சபைகள் இணைந்து போதகர்களின் வழி நடத்தலின்படி செய்ய முடியும். இவற்றைச் செய்ய சபைக்கு வெளியில் ஒரு அசோசியேஷன் அவசியம் இல்லை. செலவும் குறைவு.

1. 1 கொரி. 16:3, 4 பவுலோடு போவதற்காக கொரிந்து சபையில் ஒரு குழு நியமிக்கப்பட்டது. 2 கொரி. 8:16-24 ல் தனி நபர்கள் வேறு சில சபைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்டதாகப் பார்க்கிறோம். அப்போஸ். 20:4-6ல், பல சபைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 9 பேல் பவுலோடு போகும்படியாகத் தெரிவு செய்யப்படுவதைப் பார்க்கிறோம்.

2. ஒரே கோட்பாட்டைப் பின்பற்றும் சபைகள் இத்தகைய சுவிசேஷ ஊழியக்குழுக்களை தாங்களே முன்வந்து ஏற்படுத்தினர். யாரும் அவர்களை வற்புறுத்தவில்லை. கர்த்தர் தன்னுடைய பராமரிப்பின் மூலம் இவ்வாறாக சபைகளை வழிநடத்தி சுவிசேஷ ஊழியத்தில் ஈடுபடும்படிச் செய்கிறார். ஒரே கோட்பாட்டைப் பின்பற்றாத சபைகள் இவ்வாறு இணைந்து ஒருவரில் ஒருவர் நம்பிக்கை வைத்து இயங்க முடியாது.

ஆ. ஒரே கோட்பாட்டைப் பின்பற்றும் சபைகள் இணைந்து ஒருவருக்கொருவர் பண உதவியும் செய்து கொண்டதை புதிய ஏற்பாட்டில் பார்க்கிறோம்.

1. பிலிப். 4:15, 16ல். பவுல் தெசலோனிக்காவில் சபை நிறுவும் ஊழியத்திற்காக பிலிப்பியர் சபை பண உதவி செய்ததைப் பார்க்கிறோம். 2 கொரி. 11:9ல், பவுல் கொரிந்தில் இருந்தபோது மசிதோனியரிடம் இருந்து ஊழியத்திற்காக பண உதவி பெற்றதாக வாசிக்கிறோம். 3 யோவானில் ஊழியத்திற்கான இத்தகைய பண உதவியை யோவான் உற்சாகப்படுத்தி எழுதுகிறார்.

2. இத்தகைய பண உதவியை சபைகள் தொடர்ந்து நீடிக்க வேண்டிய அவசியமில்லை. பவுல் பல சபைகளிடம் இருந்து உதவி பெற்றபோதும் உள்ளூர் சபையே சுவிசேஷ ஊழியத்தைப் பொறுப்பேற்று அதற்கான தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறார்.

3. கடிதத் தொடர்பு வைத்திருப்பதும், சபைகளோடு இணைந்து பணியாற்றுவதும் ஜெபத்தால் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

1. உதாரணம்: மத்தாயஸை அப்போஸ்தலனாக நியமிக்க அப்போஸ். 1:14 இல் சபை ஜெபித்தது. அப்போஸ். 2:42இல் ஜெபம் சபையில் ஒரு முக்கிய அங்கமாக இருந்ததைக் கவனிக்கலாம். பிரசங்கத்திற்கு முன் ஜெபம் செய்யப்படுவதை 4:31இல் பார்க்கிறோம் (29-31). அப்போஸ். 10இல் பேதுருவும், கோர்னேலியஸீம் ஜெபத்தில் இருப்பதைப் பார்க்கிறோம். 12:5இல் சபை சிறையிலிருக்கும் பேதுருவுக்காக ஜெபிப்பதைப் பார்க்கிறோம். பிரசங்கிகள் அனுப்பப்படுவதற்கு முன் 13:3 இல் சபை ஜெபித்தது.

2. அப்போஸ்தலர்கள் ஜெபிக்கும்படி சபையை வழிநடத்தியுள்ளார்கள். தன்னுடைய ஊழியத்திற்காக ஜெபிக்கும்படி ரோமர் 15:30-32ல் பவுல் கேட்டுக்கொள்கிறார். 2 கொரி. 1:11ல் பவுல் விடுதலைக்காக ஜெபிக்கும்படி கேட்டுக்கொள்கிறார். எபேசி. 6:18-20 விசுவாசிகளுக்காகவும், பிரசங்கத்திற்காகவும் ஜெபம் செய்யும்படி பவுல் போதிக்கிறார். பிலிப். 1:19இல் விடுதலைக்காக ஜெபிக்கும்படி பவுல் கேட்கிறார்.

3. மத்தேயு 9:36-38. சுவிசேஷ ஊழியத்தைக் கர்த்தரே ஆசீர்வதிக்கிறார். அதற்காக ஜெபம் செய்யப்பட வேண்டும்.

சீர்திருத்த சபைகளுக்கிடையில் நெருங்கிய உறவேற்படுவதற்கு சபை ஜெபக்கூட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. நம்மோடு உறவேற்படுத்திக் கொண்டுள்ள சபைகளுடைய தேவைகளுக்காக நாம் அன்போடும், நம்பிக்கையோடும் ஜெபிக்கும்போது அவர்களோடு நமது உறவு வளர்கிறது. அவ்வாறு ஜெபிக்கும்போது ஆவியானவர் நமது இருதயத்தில் அவர்கள்மீது நமக்கிருக்கும் அன்பை வளர்த்து அவர்களுடைய தேவைகளை சந்திக்கம் ஆர்வத்தை ஏற்படுத்துகிறார். இவ்வாறு ஜெபிக்கும்போதே நாம் உறவு வைத்திருக்கும் சபைகளின் ஊழியங்களின்மீது நமக்கு ஒரு வாஞ்சையை கர்த்தர் ஏற்படுத்தி அவர்களோடு சேர்ந்து உழைக்கும்படிச் செய்கிறார்.

4. ஒரே கோட்பாட்டைப் பின்பற்றும் சபைகள் ஒருவருக்கொருவர் இணைந்து ஆலோசிப்பதோடு ஆலோசனையும் கூறிக் கொள்ள வேண்டும்.

1. தனி மனிதர்களைப்போலவே சபைகளுக்கு மத்தியிலும், முதிர்ச்சியடைந்த, நமக்கிருப்பதைவிட அதிக வரங்களைக் கொண்ட, அனுபவத்தை அதிகமாகப் பெற்ற சபைகள் காணப்படும். அவற்றை நாம் பயன்படுத்தி ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வது மிகவும் அவசியம்.

அ. 1 தெச. 1:7 வேத வசனங்களை எவ்வாறு ஆர்வத்தோடு அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்கு தெசலோனிக்கேயர் மற்றவர்களுக்கு உதாரணமாக இருந்தனர். அதேபோல் தெசலோனிக்கேயர் யூதியாவில் இருந்த கிறிஸ்தவர்களைப் பின்பற்றி எதிர்ப்புகளையும், உபத்திரவங்கயையும் பொறுத்துக்கொண்டார்கள் (2:14).

ஆ. வேதபூர்வமான உதாரணத்துடன் செயல்படும் சபை மற்ற சபைகளுக்கு பெருந்துணையாக இருக்கின்றது. அத்தகைய சபைகள் தகுந்த ஆலோசனைகளை மற்ற சபைகளுக்கு அளிக்க முடியும்.

2. இந்தியோகியா, யெருசெலேமில் இருந்த சபைகள் இதற்கு உதாரணம். (அப்போஸ். 15).

அ. அப்போஸ். 15ஆம் அதிகாரம் டினோமினேசன்களை ஏற்படுத்துவதற்கும், அசோசியேஷன்களை உருவாக்குவதற்கும், சபைகளுக்கு வெளியில் சபைகள் மேல் அதிகாரம் செலுத்தும் கமிட்டிகளை ஏற்படுத்துவதற்கும் எந்த அதிகாரத்தையும் கொடுக்கவில்லை. அநேகர் இப்பகுதியைத் தவறாகப் புரிந்து கொண்டு வேதம் போதிக்காத செயல்களை செய்து வருகிறார்கள். அப்போஸ். 15ல் நாம் அப்போஸ்தலர்கள் அதிகாரபூர்வமாக செய்த செயலைப் பற்றி வாசிக்கிறோம். அப்போஸ்தலர்களுக்கிருந்த அதிகாரம் இன்று ஒருவருக்கும் இல்லை.

1. இப்பகுதியில் வேத சத்தியம் பற்றிய ஒரு பிரச்சனையையும், இரு உள்ளூர் சபைகளுக்கிடையில் ஏற்பட்ட பிரச்சனையையும் பற்றி வாசிக்கிறோம். அந்தியோகியா சபையிலிருந்த சிலர் எருசலேம் சபைக்குத் தொல்லை கொடுத்தனர்.

2. அப்போஸ்தலர்கள் வேத சத்தியங்களை தெளிவுபடுத்தி சபைகள் நடந்து கொள்ள வேண்டிய முறைபற்றி ஆலோசனை தந்தனர்.

3. 15:30, 31 வசனங்கள் ஏனைய சபைகளைப்போலவே அந்தியோகியா சபையும் அப்போஸ்தலர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டது. இவ்வாலோசனைகளைப் பெற்றுக்கொண்ட சபைகள் அவை அப்போஸ்தல அதிகாரம் கொண்டுள்ளதைப் புரிந்து ஏற்றக்கொண்டனர். அவை அப்போஸ்தல அதிகாரம் கொண்டபடியாலேயே இன்று அவை வேதத்தின் ஒரு பகுதியாக இருக்கின்றன.

ஆ. அப்போஸ். 15 இன்படி உலக முழுதும் பரவியிருக்கும் சபைகளுக்கு அதிகாரபூர்வமாக கட்டளையிடக்கூடிய தகுதி அப்போஸ்தல அதிகாரத்திற்கு மட்டுமே உண்டு. ஆகவே, அப்போஸ். 15 இன்படி சபைகளுக்க வெளியே அதிகாரமுள்ள எந்த அமைப்பையும் ஏற்படுத்துவது அப்போஸ்தல அதிகாரத்தை மறுபடியும் ஏற்படுத்தும் முயற்சியாகும். கர்த்தருடைய வார்த்தையின்படி இன்று உள்ளூர் சபை மேல் ஆட்சி செய்யக்கூடிய எந்த அமைப்பும் இல்லை.

3. இன்று அப்போஸ்தல அதிகாரம் வேதத்திற்கு மட்டுமே உள்ளபடியால் வேதம் போதிக்கும் சத்தியங்களை நாம் புரிந்து கொண்டு நம்மோடு தொடர்புள்ள சபைகளுடைய ஆலோசனைகளை நாம் பெற்று நடக்க வேண்டும்.

அ. அப்போஸ். 11:22 இல் அந்தியோகியாவில் இருந்த சபையார் அனுபவத்தில் மதிர்ந்த எருசலேமில் இருந்து வந்த பர்னபாவின் ஆலோசனையையும் பவுலின் ஊழியத்தையும் ஏற்றுக் கொண்டனர்.

ஆ. தேவ மக்களுக்கு ஆலோசனை சொல்லக்கூடிய தகுதியுள்ளவர்களின் பொறுப்புக்களைப் பற்றி நீதிமொழிகளில் அதிகமாகப் பார்க்கலாம்.

4. நாம் அப்போஸ்தல அதிகாரத்துடன் எழுதப்பட்டுள்ள வேத சத்தியத்திற்கும், மற்றவர்களுக்கு நாம் சொல்லக்கூடிய ஆலோசனைகளுக்குமிடையில் இருக்கும் வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும். (1 கொரி. 7:25; 2 கொரி. 8:10-11). ஆலோசனை கட்டளைகளிலிருந்து வேறுபடுகின்றது. ஒரு ஒழுக்க விதி பற்றிய கட்டளை அவ்வொழுக்க விதியை எப்படி நடைமுறையில் கொண்டுவர வேண்டும் என்று நாம் தரக்கூடிய ஆலோசனையில் இருந்து வேறுபடுகின்றது. சீர்திருத்த சபைகள் தாம் நம்பிக்கையுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கும் சபைகளிடம் இருந்து சபை நடத்துவதற்கான தகுந்த ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வது வேத பூர்வமான செயலாகும்.

சபை ஐக்கியம்

“சபைகளுக்கிடையில் இருக்க வேண்டிய ஒற்றுமை அன்பினால் கட்டி எழுப்பப்பட வேண்டும். ஏனெனில், சபை ஐக்கியம் அன்பின் ஆத்மீக ஐக்கியமாக இருக்கின்றது. இத்தகைய ஒற்றுமை ஆவியினால் உருவாகின்றது. உலகப்பிரகாரமான செயல்களாலும், அசோசியேஷன் போன்ற அமைப்புகளாலும் சபைகளுக்கிடையில் ஆவியால் மட்டுமே ஏற்படுத்தக்கூடிய அன்பின் ஐக்கியத்தை ஒருபோதும் உருவாக்கிவிட முடியாது.”
– அலன்டன் (கிறேஸ் கவனன்ட் சபை, நியூ ஜேர்சி, யூ. எஸ். ஏ)

“சபைகளுக்கிடையில் மெய்யாக இருக்க வேண்டிய உறவை சபைப் போதகர்கள் தங்களுக்கிடையில் இருக்கும் நெருங்கிய நட்பின் மூலம் மட்டுமே ஏற்படுத்திக்கொள்ள முடியும். இத்தகைய சூதுவாதில்லாத உளமார்ந்த நட்பை ஏற்படுத்திக்கொள்ளாமல் சபைகளுக்கிடையிலான ஐக்கியத்தைப் பற்றிப் பேச முடியாது. சத்தியத்தைப் பின்பற்றாதவர்களோடும், சபைக் கட்டுப்பாட்டு விதிகளைப் பின்பற்றாதவர்களோடும் நமக்கு உறவு இருக்க முடியாது. உறவுல்லாத இடத்தில் நட்புக்கு இடமில்லை. ஒருவர் சபைப் போதகர் என்பதற்காக அவரை நாம் கேள்வி முறையில்லாமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வேதம் எங்கும் சொல்லவில்லை. அவர் எப்படிப்பட்ட மனிதர் என்பதை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அவரும் நம்மைப்பற்றி நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். போதகர்களுக்கிடையில் நல்லுறவும் நம்பிக்கையும் இருக்க வேண்டுமானால் போதகர்கள் அதற்கான வழிவகைகளை நாட வேண்டும். ஒருவரோடொருவர் ஒளிவு மறைவில்லாமல் நடந்து கொள்ள வேண்டும். மற்றப் போதகர்கள் நம்மை நன்றாகப் புரிந்து கொள்ளும் வசதியை ஏற்படுத்தித்தர வேண்டும். இவற்றின் மூலம் ஆவியானவர் ஏற்படுத்தித் தரும் ஆழமான ஐக்கியத்தை வெறும் அசோசியேஷன்களோ, கமிட்டிகளோ உருவாக்கிவிட முடியாது.”

-ஆசிரியர்

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s