இந்தியாவிற்காக கிறிஸ்தவர்கள் ஜெபிக்க வேண்டிய நேரமிது. நம்முடைய பத்திரிகையிலே ஜெபக்குறிப்புகளையோ, ஜெபத்தேவைகளையோ நீங்கள் இதுவரை பார்த்திருக்க மாட்டீர்கள். வேத சத்தியங்களை விளக்கிச் சொல்வதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு நாம் இந்தப் பணியைச் செய்து வருகிறோம். ஆனால், இந்திய நாட்டில் இன்று நிகழ்ந்து வரும் காரியங்கள் அந்நாட்டில் கிறிஸ்தவர்களுடைய வருங்காலத்தைப் பற்றி நம்மை சிந்திக்க வைத்திருக்கிறது. முக்கியமாக தமிழகத்தில் கொண்டு வரப்பட்டிருக்கும் கட்டாய மதமாற்றத் தடைச்சட்டம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலமையில் இந்திய நாட்டிற்காகவும், கிறிஸ்தவ சபைகளுக்காகவும், ஆத்துமாக்களுக்காகவும் வாசகர்கள் ஜெபிக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். ஜெபத்தால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை. நமது தேவன் ஜெபம் கேட்கிறவராக இருக்கிறார். அப்போஸ்தலர்கள் சுவிசேஷம் சொல்லுவதற்கு தடை ஏற்பட்டபோது திருச்சபை ஜெபத்தில் கூடிவந்து அப்போஸ்தலர்கள் மேலும் வல்லமையுடன் சுவிசேஷத்தை சொல்ல ஆசீர்வதிக்கும்படியாக ஜெபித்தார்கள். (அப்போஸ். 4). அவர்கள் கேட்டுக்கொண்டபடியே சுவிசேஷத்தை வல்லலமையோடு பிரசங்கிக்கும்படி அப்போஸ்தலர்களைக் கர்த்தர் ஆசீர்வதித்தார். இந்தியாவில் மெய்த்திருச்சபைகளின் ஊழியங்கள் தொடர்ந்து தடையில்லாது நடைபெறவும், சுவிசேஷத்தைக் கேட்டு மக்கள் மனந்திரும்பவும் கர்த்தருக்கு முன் நாம் மன்றாடவேண்டும். இந்தியாவை ஆளும் ஆட்சியாளர்களுக்காகவும், எதிரணியில் இருப்பவர்களுக்காகவும், அரசு ஊழியர்களுக்காகவும் ஜெபியுங்கள். அதிகாரத்தில் இருப்பவர்கள் அனைத்து மக்களையும் நீதியுடன் ஆள ஜெபியுங்கள் (ரோமர் 13; 1 தீமோ. 2:1-4). இந்திய நாட்டில் கர்த்தரின் சித்தம் நிறைவேற ஜெபியுங்கள்.