இந்த இதழோடு திருமறைத்தீபம் முதல் முறையாக ஸ்ரீலங்கா வாசகர்களுக்காக மட்டும் ஸ்ரீலங்காவில் அச்சிடப்பட்டு அனுப்பப்படும். ஸ்ரீலங்கா வாசகர்கள் திருமறைத்தீபத்தை கொழும்பு நகரில் இருக்கும் கிருபை இலக்கிய நிர்வாகிகளிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம். பத்திரிகையை விநியோகிக்க ஆவலுடன் முன்வந்துள்ள கிருபை இலக்கிய நிர்வாகத்தை சேர்ந்தவர்களுக்க எமது நன்றி! இவர்களுடைய ஊழியத்தின் மூலம் பத்திரிகை மேலும் பலரைச் சென்றடைந்து, ஸ்ரீலங்கா தேசத்தில் சீர்திருத்த சத்தியங்களைப் பலரும் அறிந்து கொள்வதன் மூலம் கர்த்தருக்கு மகிமை சேர ஜெபிப்போம்.
சீர்திருத்த விசுவாசம் என்ற பெயரில் ஓர் புதிய நூலை வெளியிட்டுள்ளோம். இதை எங்கு, எப்படிப் பெற்றுக் கொள்ளலாம் என்பதற்கான விபரங்களை இந்த இதழில் (பக்கம் 28) பார்க்கலாம். சீர்திருத்த விசுவாசத்தைப் பற்றிப் பலரும் அறிந்து கொள்ளவும், சீர்திருத்த விசுவாசத்தைப் பின்பற்றுபவர்கள் சரியான வழியில் போகவும் இந்த நூல் உதவும் என்று நம்புகிறேன்.
பக்தி இயக்கத்தைப் பற்றி (Pietism) நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்களோ, நான் அறியேன். ஆனால், கிறிஸ்தவ வரலாற்றில் 17-ன் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் தலைதூக்கிய இந்த இயக்கத்தின் மூலம் பின்னால் கிறிஸ்தவத்திற்கு எத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்பதை விளக்கும் ஓர் ஆக்கத்தை இந்த இதழில் வாசிக்கலாம். இன்று நம் மத்தியில் காணப்படம் பெந்தகொஸ்தே, கெரிஸ்மெட்டிக் இயக்கங்களுக்கும், பல புதிய சுவிசேஷ இயக்கக் கோட்பாடுகளுக்கும் இந்த பக்தி இயக்கத்தின் போதனைகள் முன்னோடியாக இருந்திருக்கின்றன என்பதை அறியதவர்கள் அநேகர். இந்த ஆக்கம் வாசகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
கடந்த இதழ் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக பலர் எழுதியிருந்தீர்கள். இந்த இதழில் வரும் ஆக்கங்களும் உங்களை சிந்திக்க வைத்து, உங்களுடைய ஆத்மீக வாழ்க்கையின் வளர்ச்சிக்கு துணை செய்யும் என்பதில் எங்களுக்கு எந்தவித சந்தேகமுமில்லை. கர்த்தரின் ஆசீர்வாதம் உங்களெல்லோருடனும் தொடர்ந்திருக்கட்டும்.
– ஆசிரியர்