இயேசு நரகத்திற்குப் போனாரா?

ரோமன் கத்தோலிக்க மதம் இயேசு மரித்தபின் உயிர்த்தெழுவதற்கு முன்பு மூன்று நாட்களுக்கு நரகத்தில் போய் இருந்தார் என்று போதிக்கிறது. இதையே லூத்தரன் சபையும் விசுவாசிக்கிறது. வார்த்தை-விசுவாசம் (Word-Faith) என்ற பெயரில் கெரிஸ்மெட்டிக் கூட்டத்தில் ஆரம்பித்துள்ள ஒரு புதிய கூட்டமும் இதைப் போதிக்கிறது. கத்தோலிக்கரும், லூதரன்களும், கிறிஸ்து பாவத்தை அனுபவிப்பதற்காக நரகத்திற்கு போகாமல் பாவத்தை வெற்றி கொள்வதற்காக நரகத்திற்குப்‍ போனார் என்று போதிக்கிறார்கள். வார்த்தை-விசுவாசக் கூட்டத்தைச் சேர்ந்த ஜொய்ஸ் மாயர் (Joyce Mayer) என்ற பெண் ‘போதகி’!, கிறிஸ்து சிலுவையில் மரிக்கும்போதே பாவியானார் என்றும், அவர் மரித்தபின் நரகத்திற்குப் போய் தன் பாவத்திற்கான தண்டனையை அனுபவித்தார் என்றும், அதனாலேயே அவரால் பாவத்தின் கொடுமையை உணர்ந்து நம்மேல் பரிதாபப்பட முடிகின்றது என்றும் விளக்குகிறார். இன்று, சுவிசேஷ விசுவாசிகளில் பவர் கூட இந்தத் தவறான போதனையை உண்மை என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். வேதம் இதைப்பற்றி என்ன சொல்கிறது என்று ஆராய்வோம்.

இயேசு இறந்தபின் ஹேடிஸில் (Hades) இருந்தார் என்று வேதம் சொல்கிறது (அப்போஸ். 2:27). ஹேடீஸை ஒத்த பழைய ஏற்பாட்டு வார்த்தை சீயோல் (Sheol). இவை இரண்டும் வேதத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. தமிழ் வேதத்தில் ஹேடிஸை எல்லாப் பகுதிகளிலும் பாதாளம் என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள். இது காணப்படும் வேதப்பகுதி தரும் விளக்கத்திற்கேற்றமுறையில் இதை எல்லாப் பகுதிகளிலும் மொழி பெயர்ப்பதும் சுலபம் இல்லை. ஆனால், இந்த வார்த்தையை எல்லாப் பகுதிகளிலும் நரகமாக மட்டும் புரிந்துகொள்வது பெருந்தவறு. இது சில இடங்களில் நரகத்தைக் குறிப்பதாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது (லூக்கா 16:22). சில இடங்களில் இறந்தவர்கள் சரீரமும் ஆவியும் பிரிக்கப்பட்டு இருந்த நிலையைக் (disembodied state) குறிக்கிறது (அப்போஸ். 2:27, 31; வெளி. 1:12). சில வேளைகளில் இது கல்லறையாக (grave) விளக்கப்பட்டிருக்கிறது (மத். 11:23).

இயேசு இறந்தபின் ஆவியும், சரீரமும் பிரிக்கப்பட்ட நிலையில் இருந்தார் (State of Death). வெளிப்படுத்தர் விசேஷம் 1:12ல் பாதாளம் என்ற வார்த்தையை இந்த விளக்கத்தின்படியே புரிந்து கொள்ள வேண்டும். பேதுருவும் அப்போஸ்தலர் 2:25-31 வரையுள்ள வசனங்களில் சங்கீதம் 16:8-11ப் பயன்படுத்தி கிறிஸ்துவை பாதாளம் கட்டுப்படுத்தவில்லை என்ற இதே உண்மையை விளக்குகிறார் பேதுரு, இயேசு அழிவைக் காணமாட்டார் என்கிறார் (அப்போஸ். 2:24, 27, 31). அதனால்தான் இயேசு வெளிப்படுத்தின விசேஷத்தில் 1:12ல் மரணத்தாலும், பாதாளத்தாலும் தன்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்கிறார். ஏனெனில், அவற்றின் திறவுகோள்கள் அவரிடமே இருக்கின்றன. அவரே அவற்றைக் கட்டுப்படுத்துபவராக இருக்கிறார். இறந்தபின் இயேசுவின் ஆவி கர்த்தரை அடைந்தது (லூக்கா 23:43, 46). அவருடைய சரீரம் கல்லறையில் இருந்தது. ஆவியும், சரீரமும் பிரிக்கப்பட்ட இறந்த நிலையில் (Disembodied existence) இயேசு மூன்று நாட்கள் இருந்திருக்கிறார். அதன்பின் பிதா அவரை உயிர்த்தெழச் செய்தார். இயேசு இறந்தபின் நரகத்தை அடைந்தார் என்ற ரோமன் கத்தோலிக்க, லூதரன் போதனையில் எந்த உண்மையும் இல்லை. அது வேதத்தில் இல்லாத பேதைனை.

எபேசியர் 4:10ல் கிறிஸ்து பூமியின் தாழ்விடங்களில் இறங்கினார் (lower parts of the earth- NKJV) என்றிருக்கிறது. இது கிறிஸ்து நரகத்திற்குப் போனதைக் குறிக்கிறது என்று சிலர் கூறுவார்கள். ஆனால், இங்கே ஹேடீஸ் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட வில்லை. அத்தோடு, இது கிறிஸ்து உன்னதத்திற்கு ஏறியதுபோல இந்த உலகத்திற்கும் இறங்கினார் என்பதை மட்டுமே விளக்குகிறது. அவர் ஏறியது போல் இறங்கியும் வந்தார் என்பதை மட்டுமே விளக்குகிறது. இந்தப் பகுதி சொல்லாததை நாம் இதில் திணிக்கப் பார்க்கக்கூடாது.

இயேசு நரகத்திற்குப் போனார் என்பதை சுட்டிக் காட்ட 1 பெதுரு 3:19ஐ அடிக்கடி சிலர் நினைவுபடுத்துவார்கள். ஆனால் இந்தப் பகுதி அதைப் போதிக்கவில்லை. ‘அநத் ஆவியிலே அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார்’ என்று 19ம் வசனம் சொல்லுகிறது. இந்தப்பகுதி, பழைய ஏற்பாட்டுக் காலத்தில் நோவா கர்த்தரை விசுவாசிக்க மறுத்தவர்களுக்கு பிரசங்கம் செய்ததையும், அவ்வாறு நோவா பிரசங்கம் செய்தபோது கிறிஸ்துவே நோவா மூலம் அவிசுவாசிகளுடன் பேசினார் என்றும் சொல்லுகிறது. காவலில் இருந்த ஆவிகள் என்பது அக்காலத்தில் பாவத்தால் சிறைபிடிக்கப்படிருந்தவர்களைக் குறிக்கிறது. எட்டுபேர் மட்டுமே அன்று வார்த்தையைக் கேட்டு மனந்திரும்பியவர்கள். இந்தப் பகுதி இயேசு நரகத்திற்குப் போனார் என்ற போதனையைத் தரவில்லை (1:10, 11 ஐயும் இப்பகுதியோடு ஒப்பிட்டுப் பாருங்கள் – பழைய ஏற்பாட்டில் தீர்க்கதரிசிகள் பிரசங்கித்தபோது கிறிஸ்துவின் ஆவி அவர்களில் இருந்தது என்று பேதுரு இவ்வசனங்களில் விளக்குகிறார்).

இயேசு நரகத்திற்குப் போகவில்லை; இறந்தபின் தன் பிதாவையே அடைந்தார் என்பதற்கு அவருடைய வார்த்தைகளே தெளிவான சாட்சிகளாக இருக்கின்றன. இயேசு தான் இறப்பதற்கு முன்பாக தனக்குப் பக்கத்தில் சிலுவையில் அறையப்பட்டிருந்த மனந்திரும்பிய திருடனைப்பார்த்து, ‘இன்றைக்கு நீ என்னுடனேகூட பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்கிறேன் என்றார்’ (லூக்கா 23:43). இயேசு நரகத்திற்குப் போவதாக இருந்தால் இப்படிச் சொல்லியிருக்க மாட்டார். மாறாக அவர் பரலோகத்திற்குப் போகப்போவதை அவருடைய வார்த்தைகள் தெளிவாக விளக்குகின்றன. சிலர் பரதீசு என்பது பரலோகம் அல்ல. அது வேறு ஒரு இடம். பரலோகம் போவதற்குமுன் இறப்பவர்கள் இங்கு போகிறார்கள் என்கிறார்கள். இதுவும் தவறு. வேதத்தில் பரலோகமும், பரதீசும் ஒரே இடத்தையே குறிக்கின்றன. அதாவது, பரலோகத்தையே குறிப்பதாக இருக்கின்றன. மேலும் லூக்கா 23:46ல், இயேசு ‘பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்’ என்று சொன்னார். இயேசுவே, தன் ஆவியை பிதாவின் கரங்களில் ஒப்படைத்திருக்கும்போது அவர் இறந்தபின் நரகத்திற்குப் போனார் என்று எப்படிச் சொல்ல முடியும்.

இயேசு நரகத்திற்குப் போனார் என்பது வேதமறியாத போதனை. அவருடைய ஆவி கர்த்தரையே அடைந்தது என்பதைத்தான் வேதப்பகுதிகளும், அவருடைய வார்த்தைகளும் விளக்ககின்றன.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s