இரகசிய கிறிஸ்தவர்கள் என்ற பெயரில் ஒரு புது கிறிஸ்தவக் கூட்டத்தை தமிழகத்தின் சில சுவிசேஷகப் பிரசங்கிகள் உருவாக்கியிருக்கிறார்கள். ஒரு மனிதரைப்பற்றி எழுதிய ஒரு கிறிஸ்தவ பிரசங்கியார் அவரை இரகசிய கிறிஸ்தவர் என்று அழைத்து எழுதியிருந்ததை நான் சிலவருடங்களுக்கு முன் ஒரு பத்திரிகையில் வாசித்திருக்கிறேன். இரகசிய கிறிஸ்தவர்கள் என்று ஒரு கூட்டம் உண்மையில் இருக்கிறதா? இவர்கள் யார்? வேதம் இதுபற்றி என்ன சொல்லுகிறது என்று நாம் பார்ப்பது அவசியம்.
இரகசிய கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படுகிறவர்கள், கிறிஸ்துவை விசுவாசித்தபோதும் தங்கள் வீடுகளில் கிறிஸ்துவை அறியாத பெற்றோர்களிடமோ அல்லது உறவினர்களிடமோ அல்லது கணவன் மாரிடமோ படவேண்டிய துன்பங்களிலிருந்து தப்புவதற்காக இரகசியமாக கிறிஸ்துவை ஆராதிப்பவர்கள் என்று இப்பிரசங்கிகள் விளக்கம் தருகிறார்கள். இரகசிய கிறிஸ்தவர்கள் தம்மை கிறிஸ்தவர்கள் என்று வெளிப்படையாக அழைத்துக் கொள்ளமாட்டார்கள். பெற்றோர்கள் அல்லது கணவனுடைய கோபத்திற்குப் பயந்து புற மத சடங்குகளையும் இவர்கள் தொடர்ந்து பின்பற்றுவார்கள். வீட்டாருக்குப் பயந்து நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்வதையும், கோவிலுக்குப் போவதையும், வேறு சடங்குகளைச் செய்வதையும் இவர்கள் விட்டுவிடுவதில்லை. விசுவாசி என்று தன்னை அழைத்துக்கொள்ளும் மனைவி கணவனுக்கு அது ஒருபோதும் தெரியாமலேயே வாழ்வார்கள். ஆனால் இரகசியமாக வேதத்தை வாசித்தும், ஜெபித்தும் வருவார்கள். தாம் கிறிஸ்தவர் என்ற உண்மை தெரிந்து விடும் என்பதற்காக சபைக்கும் வழமையாகப் போக மாட்டார்கள். இவர்களே இரகசிய கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
பெரும்பாலும், இந்துக்களாகவோ அல்லது வேறு மதத்தைச் சேர்ந்தவர்களாகவோ இருந்து கிறிஸ்துவை அறிந்து கொள்கிறவர்களுக்கு வீட்டிலும், உறவினர்கள், நண்பர்கள் மத்தியிலும் எதிர்ப்பு ஏற்படுவது சகஜம். கிறிஸ்துவை அறியாத மக்கள் கிறிஸ்துவை அறிந்து கொள்கிறவர்களை துன்புறுத்தி வந்துள்ளதை வேதம் விளக்குகிறது. யூத மதத்தவனாக இருந்து கிறிஸ்துவை அறிந்து கொண்ட குருடனைப் பல கேள்விகள் கேட்டுக் குடைந்து துன்புறுத்த முயன்ற யூத மதப் பரிசேயர்களைப் பற்றி புதிய ஏற்பாட்டில் வாசிக்கிறோம். யூத மதத்திலிருந்து விலகி கிறிஸ்துவை அறிந்து கொண்டவர்களைத் துன்புறுத்திய சவுலைப் பற்றியும் வேத்தில் வாசிக்கிறோம். ஸ்தீபன் கொலை செய்யப்படுவதை கண்ணால் பார்த்து மகிழ்ந்தான் சவுல் என்கிறது வேதம். இப்படி கிறிஸ்துவுக்காக துன்பப்பட்ட ஏராளமானவர்களைப் பற்றி வேதம் சாட்சி அளிக்கிறது. இவர்கள் எல்லோருமே கிறிஸ்துவை மெய்யாக விசுவாசித்தார்கள். தாம் வாழ்க்கையில் துன்பப்படப் போவதும் இவர்களுக்குத் தெரிந்திருந்தது. இருந்தபோதும் கிறிஸ்துவில் தமக்கிருக்கும் விசுவாசத்தை வெளிப்படையாக அறிவிக்க இவர்களில் எவருமே தயங்கியதாக நாம் வேதத்தில் வாசிப்பதில்லை. குருடனாக இருந்து கண்கள் குணமான மனிதன் யூதர்களைப் பார்த்து இயேசு என் கண்களைத் திறந்தார் எனக்கு வாழ்வு கொடுத்தார் என்று கூறத் தயங்கியதில்லை. அதேபோல் அப்போஸ்தலர் நடபடிகள் முழுவதும் இந்தவிதமாகவே கிறிஸ்துவை அறிந்து கொண்ட அனைவரும் பகிரங்கமாக எல்லோரும் அறியும்படி தம்மை வெளிப்படுத்திக் கொண்டார்கள் என்று வாசிக்கிறோம். அத்தோடு தாம் இதுவரை வாழ்ந்து வந்த வாழ்க்கையையும் உடனடியாகத் துறந்து கிறிஸ்துவை முழு மனத்தோடு பின்பற்றினார்கள் என்றும் அறிந்து கொள்கிறோம். அப்போஸ்தலர் நடபடிகள் 17ஆம் அதிகாரத்தில் நாம் வாசிக்கும் யூதனாகிய யாசோன் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு எல்லோரும் அறியும்படியாக வாழ்ந்தான். அதனால்தான் பவுலையும், கிறிஸ்தவ நற்செய்தியையும் பிடிக்காத யூதர்கள் யாசோன் வீட்டில் புகுந்து அவனை இழுத்துக்கொண்டு போனார்கள். யாசோன் இரகசியக் கிறிஸ்தவனாக நடித்திருந்தால் யூதர்கள் அவனைத் தேடிப்போயிருக்க மாட்டார்கள். 18ம் அதிகாரத்தில் நாம் வாசிக்கும் யூஸ்து (7), ஜெப ஆலயத்தலைவனாகிய கிறிஸ்பு (8), சொஸ்தேனே (17) ஆகியவர்களும் கிறிஸ்தவர்களாக பகிரங்கமாக எல்லோரும் அறியும்படி வாழ்ந்தார்கள். அவர்கள் எதிர்ப்பையும், துன்புறுத்தலையும் தங்களுடைய வாழ்க்கையில் சந்தித்தப்போதும் இரகசியமாக வாழ ஒருபோதும் முயற்சி செய்யவில்லை.
இதேபோல் கிறிஸ்தவ வரலாற்றை எடுத்துப் பார்த்தாலும் கிறிஸ்தவர்கள் உலகில் இரகசியமாக வாழ முயலவில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம். பதினாறாம் நூற்றாண்டுக் காலத்தில் ரோமன் கத்தோலிக்க சபையும் போப்பும் கிறிஸ்துவை விசுவாசித்தவர்களைத் தொலைப்பதையே முழு நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வந்த காலத்தில் கிறிஸ்தவர்கள் மறைந்து வாழ முயலாமல் வேதத்தை பகிரங்கமாக ஏனைய மொழிகளில் மொழி பெயர்த்தும், வாசித்தும் வந்தார்கள். பிடிபட்டபோது கழுமரத்தில் மடிவதற்கு சந்தோஷத்தோடு கழுத்தை நீட்டினார்கள். மார்டின் லூதர் தன்னுடைய போதனைகளை நிராகரிக்க மறுத்து ரோமன் கத்தோலிக்க சபையை பகிரங்கமாக எதிர்த்தார். ஜோன் விக்றிப்பும், வில்லியம் டின்டேலும் அவர்களுக்குப் பின் வந்த அனைவரும் இதையே செய்தனர். தலையே போனாலும் கிறிஸ்துவை மறுதலிப்பதில்லை என்பதே இவர்களின் இலட்சியமாக இருந்தது. சிலுவையையும், ரோமன் கத்தோலிக்க சடங்கு முறைகளையும் இவர்கள் பகிரங்கமாக நிராகரித்து கிறிஸ்துவுக்கு இரத்த சாட்சிகளாக இருந்தனர். பொக்ஸ் என்பவர் எழுதிய கிறிஸ்துவுக்கு இரத்த சாட்சிகளாக வரலாற்றில் மரித்தவர்களுடைய வாழ்க்கை (Fox’s Martyrsk) கிறிஸ்தவர்கள் ஒருபோதுமே இரகசியமாக வாழ முயற்சி செய்யவில்லை என்பதற்கு சாட்சியாக இருக்கின்றது. இவர்களெல்லாம் இரகசியமாக வாழ்ந்திருந்தால் சுவிசேஷக் கிறிஸ்தவத்தை இன்று நாமெல்லாம் அறிந்துகொள்ளும் வழி ஏற்பட்டிருக்காது. இரகசிய கிறிஸ்தவர்கள் என்ற வார்த்தைப் பிரயோகமே கிறிஸ்தவ வரலாறு அறியாத வார்த்தைப் பிரயோகம்.
கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள் இரகசியமாக வாழலாம் என்ற போதனையை உருவாக்கியவர்கள் அரிமத்தியா ஊரைச் சேர்ந்தவனான யோசேப்பு என்ற மனிதனின் வாழ்க்கையை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வார்கள் (மத்தேயு 27:57; யோவான் 19:38). இந்த மனிதன் செல்வந்தனாகவும், யூத ஆலோசனை சபையில் அங்கத்தவனாகவும் இருந்தான். இவன் இயேசுவை விசுவாசித்தபோதும் யூதர்களுக்குப் பயந்தான். உத்தமனும், நீதிமானாயுமிருந்த இவன் இயேசுவுக்கெதிரான யூத ஆலோசனை சபையின் முடிவுகளுக்கும் செய்கைகளுக்கும் ஒருபோதும் ஒத்துப் போகவில்லை (லூக்கா 23:51). ஆரம்பத்தில் இவன் யூதர்களுக்குப் பயந்தபோதும் இயேசு இறந்தபின் தைரியத்தோடு பிலாத்துவிடம் போய் இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டு போக அனுமதிபெற்று அதனை மெல்லிய துப்பட்டியிலே சுற்றி கல்லறையிலே வைத்தான்.
யோசேப்பு யூதர்களுக்குப் பயந்தது மனித சுபாவத்தால். அதற்காக அவன் வெளிப்படையாக தன்னை ஒருபோதும் விசுவாசியாகக் காட்டிக் கொள்ளவில்லை என்று வேதம் சொல்லவில்லை. யூத ஆலோசனை சபையின் முடிவுகளுக்கெதிரான தனது சம்மதமின்மையையும் அவன் ஏதோ ஒருவிதத்தில் சபையில் வெளிப்படுத்தியிருக்கிறான். வேதம் அவன் யூதர்களுக்குப் பயந்ததைப் பாராட்டிப் பேசவில்லை. அவனைப்போல பயப்பட வேண்டும் என்றும் போதிக்கவில்லை. யோசேப்பு நல்ல மனிதனாக இருந்தபோதும் யூதர்களுக்கு அவன் பயந்தது சரியல்ல. அத்தோடு, இறுதியில் யோசேப்பு மனம்மாறி தைரியத்துடன் தான் யார் என்பதையும் காட்டிக்கொண்டான். சாதாரண மனிதர்களுக்குப் பயன்படுகிறவர்கள் மட்டுமே இரகசியமாக வாழப் பார்ப்பார்கள். மெய்க்கிறிஸ்தவர்கள் அத்தகைய பயங்களிலிருந்து விடுதலை பெறவே முயற்சிப்பார்கள். ஆகவே, யோசேப்புவை உதாரணமாக எடுத்துக்கொண்டு விசுவாசிகள் துன்புறுத்தலில் இருந்து தப்புவதற்காக தங்களைக் காட்டிக்கொள்ளாமல் வாழலாம் என்ற போதனை தவறானது. வேதத்தில் இல்லாதது. வேதத்தில் வேறு எந்த ஒரு மனிதனும் இந்தவிதமாக வாழ்ந்ததாக நாம் வாசிப்பதில்லை.
இதுபற்றிய தெளிவான வேதபோதனைகளைப் பார்த்தால் அவை கிறிஸ்தவர்கள் தம்மை மனிதர்கள் முன் வெளிப்படுத்திக் கொள்ளாமல் வாழ்வதை மோசமான செயலாகவே கருதுவதைப் பார்க்கிறோம். இதைப்போதிக்கும் தெளிவான ஒரு வேதபகுதியைப் பார்ப்போம். மாற்க்கு 8:34-38 வரையிலான வசனங்களைப் பார்ப்போம். இவ்வேதப்பகுதிக்கு முன்னால் உள்ள பகுதியில் (31-33) கிறிஸ்து தன்னுடைய மரணத்தைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவதைப் பேதுரு தடைசெய்ய முயலுவதைப் பார்க்கிறோம். ஆனால் இயேசு பேதுருவைக் கடுமையாகக் கண்டித்துப் பேசுவதைப் பார்க்கிறோம். இதிலிருந்து மனிதர்களுக்குப் பயந்து இரகசியமாக இந்த உலகத்தில் வாழ்வதற்காக தான் வரவில்லை என்றும், இவ்வுலக இன்பத்தை அனுபவிப்பதைவிட மேலான காரியங்களைச் செய்யவே தான் வந்திருப்பதாகவும் இயேசு உணர்த்துகிறார்.
இதற்கு அடுத்த பகுதியில் (34-38) இயேசு உடனடியாக சீடர்களை தம்மிடத்தில் வரும்படி அழைத்து தன்னைப் பின்பற்றுபவர்கள் தங்களை வெறுத்து தாங்கள் சுமக்க வேண்டிய சிலுவையை சுமந்து தம்மைப் பின்பற்றவேண்டும் என்று போதிக்கிறார். அதாவது, தாம் சுமக்க வேண்டிய பாரத்தையும், அனுபவிக்க வேண்டிய துன்பத்தையும் இவ்வுலகில் அனுபவிக்க மறுக்கிறவன் தன்னுடைய மெய்யான சீடனாக இருக்க முடியாது என்கிறார் இயேசு. 39வது வசனத்தில் முடிவாக, “இந்த சந்ததியில் என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக் குறித்தும் எவன் வெட்கப்படுவானோ, அவனைக்குறித்து மனுஷ குமாரனும் தமது பிதாவின் மகிமைபொருந்தினவராய் பரிசுத்த தூதர்களோடுங்கூட வரும்போது வெட்கப்படுவார்” என்றார். இதன் மூலம் இயேசு, எந்த ஒரு கிறிஸ்தவனும் மனிதர்கள் முன்னால் தன்னுடைய போதனைகளைக் குறித்தும் தம்மைக் குறித்தும் வெட்கப்படாமலும், தம்மைப்பற்றி வெளிப்படையாகப் பேசி தனக்காக வாழ முயற்சி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார். மனிதக்ளுக்குப் பயந்து தன்னை வெளிப்படையாக அறிக்கையிடாமல் வாழ்பவர்களைப் பார்த்து நியாயத்தீர்ப்பு நாளில் தான் வெட்கப்படப்போவதாகவும் கூறுகிறார். இந்த உலகத்து மக்களை சமாதானப்படுத்தி அவர்கள் மனங்கோனாமல் இருக்க இரகசியமாக வாழ முயச்கிறவன் மெய்யான கிறிஸ்தவனாக இருக்க முடியாது என்பதையே 35ம் வசனத்தில், “தன் ஜீவனை இரட்சிக்க முயல்கிறவன் அதை இழந்து போவான்” என்று எச்சரிப்பதன் மூலம் விளக்குகிறார். உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டு தன்னுடைய ஜீவனை நஷ்டப்படுத்திக்கொள்வதால் ஒருவனும் எந்த ஆதாயமுமில்லை என்கிறார் இயேசு (36). ஆகவே, இந்த சந்ததியில் ஒரு கிறிஸ்தவன் மறைமுகமாக வாழ முயற்சி செய்யக்கூடாது. தன்னுடைய மக்கள் இரகசிய வாழ்க்கை வாழ்வதற்காக கிறிஸ்து பகிரங்கமாக சிலுவையில் தன்னைப் பலி கொடுக்கவில்லை. பாவம் நிறைந்த மனிதர்களின் கரங்களில் அகப்பட்டு துன்புறுத்தலுக்குள்ளாகி, நிந்திக்கப்பட்டு இறுதியில் சிலுவையில் மரித்த தேவன் தமது மக்கள் தாம் இலவசமாகக் கொடுத்த இரட்சிப்புக்குரிய வாழ்க்கையை எல்லா மக்களும் அறிந்து கொள்ளும்படி தேவ பலத்தோடு வாழும்படியே போதித்துள்ளார். கிறிஸ்து காட்டிக் கொடுக்கப்பட்டு சிறைப்பட்டபின் பேதுரு மாம்சத்தின் பலத்தால் ஒரு பெண் முன்னால் கிறிஸ்துவை மறுதலித்தான். அவரைத் தனக்குத் தெரியாது என்று கூறினான். பேதுரு பின்பு தன் செயலைக்குறித்து வெட்கப்பட்டு இருதயத்தில் குத்தப்பட்டு அழுதான். மனம் வருந்தினான் என்று வேதம் சொல்லுகிறது. மனிதர்களுக்கப் பயந்து தன்னைப்பற்றிக் கேள்விப்படவில்லை என்று கூறி பேதுரு வாழ்வதை இயேசு விரும்பவில்லை. பேதுருவை பின்பு கிறிஸ்து சந்தித்து திருத்தியதாக வேதத்தில் வாசிக்கிறோம்.
இந்தக் குடும்பங்களில் இருந்து கிறிஸ்துவை அறிந்து கொள்பவர்களும், இந்துக்களான கணவர்களுடன் வாழ வேண்டிய சூழ்நிலையில் இருக்கும் பெண்களும் பல துன்பங்களை அனுபவிக்க வேண்டிய நிலை இருக்கின்றது. பெற்றோராலும், கணவன்மாராலும் துன்புறுத்தலுக்குள்ளாகும் நிலை உள்ளது. இருந்தபோதும் இத்தகைய குடும்ப சூழ்நிலைகளில் இருந்து சுவிசேஷத்தைக் கேட்டு பாவத்திலிருந்து விடுபட்டு கிறிஸ்துவை அறிந்து கொண்டவர்களாலேயே அவர்களுடைய குடும்பங்களுக்கும் மீட்பு வரமுடியும். பல துன்பங்களுக்கும் மத்தியில் கிறிஸ்துவை விசுவாசித்து அவருக்கு சாட்சியாக வாழ்வதே கிறிஸ்தவ வாழ்க்கை. இதையே, என்னைப் பின்பற்றுவாயானால் உன்னுடைய சிலுவையை நீ சுமக்கத் தயாராக இருக்க வேண்டும் என்று சொன்னதன் மூலம் இயேசு விளக்குகிறார். துன்பமே இல்லாத வாழ்க்கையைத் தருவதாக இயேசு ஒருபோதும் வாக்களிக்கவில்லை. துன்பமில்லாத வாழ்க்கையை இயேசு தருவார் என்று சொல்லுபவர்கள் பொய்யர்கள். மறைமுகமாக கிறிஸ்துவைத் தெரியாது என்று மறுத்து வாழ முயலாமல் தங்களுடைய நல்ல விசுவாசமுள்ள நடத்தையாலும், அன்பாலும், உறுதியான ஜெபத்தாலும் கிறிஸ்தவர்கள் கர்த்தரை அறியாதவர்களுக்கு சாட்சியாக இருக்க வேண்டும். கிறிஸ்துவை அறிந்து கொண்ட ஒரு வாலிபனோ, வாலிபப் பெண்ணோ பெற்றோர்களை மதித்து அன்போடு நடந்து கொண்டால் அதைப் பார்க்கும் பெற்றோரின் மனம் மகிழாமலா போகும்? அதற்காக அவர்கள் உடனடியாக மனம் மாறிவிடுவார்கள் என்று நான் சொல்லவில்லை. கிறிஸ்தவ வாழ்க்கையின் பலமும், வல்லமையான சாட்சியும் கிறிஸ்துவை அறியாதவர்களை அவரைப் பற்றி சிந்திக்க வைக்கும் என்பதுதான் வேதம் போதிக்கும் உண்மை.