இந்தப்பகுதியில் இன்று சுகமளிப்புக்கூட்டங்கள் நடத்தி வருபவர்களைப் பற்றி நாமெல்லோரும் சிந்தித்துப் பார்க்கும்படியாக எழுதத்துணிந்திருக்கிறேன். கூட்டத்துக்கு வாருங்கள், உங்களுடைய தீராத தலைவலி நீங்கும், அற்புதங்கள் நடக்கும் என்ற அறிவிப்போடு சுகமளிப்புக் கூட்டங்கள் பட்டிதொட்டியெல்லாம் நடந்து வருகிறன. வீட்டில் கஞ்சி இல்லாமல் காயும் வயிறுகளும், மூடநம்பிக்கை நிறைந்தவர்களும் ஏதாவது நடந்தாலும் நடக்கும் என்ற நினைப்பில் இந்தக் கூட்டங்களுக்குப் போய்வருகின்றார்கள். கிறிஸ்துவின் பெயரைச் சொல்லி நடந்து வரும் இந்தக்கூட்டங்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று என்னைக் கேட்காதவர்கள் இல்லை. நண்பர்களே! ஆரம்பத்திலேயே என் பதிலை சொல்லிவிட்டு அதற்குக் காரணம் என்ன என்பதை உங்களுக் விளக்குகிறேன். இந்த சுகமறிப்புக்கூட்டங்கள் வைத்து ஆத்துமாக்களின் பிணிகளைத் தீர்க்கும்படி இயேசுவோ, வேதமோ ஒருபோதும் கட்டளையிடவில்லை. கிறிஸ்தவ வேதத்தில் அப்படியொரு போதனையைப் பார்க்க முடியாது. அப்படி ஆண்டவர் சொல்லியிருந்தால் நானே இப்படிக் கூட்டங்கள் போடத் தொடங்கியிருப்பேன். இதை வாசித்த உடனேயே பெந்தகோஸ்தே ஆத்துமாக்கள், இவன் ஆவியில்லாதவன் அதனால்தான் இப்படிப்பேசுகிறான் என்று என்னைத் திட்டுவார்கள் என்பதும் எனக்குத்தெரியும்.
சுகமளிப்பு கூட்டம் நடத்துபவர்கள் எல்லாம் வேதபோதனைகளுக்கு தவறான விளக்கத்தைக் கொடுத்து தங்களை நியாயப்படுத்திக் கொள்கிறார்கள். உதாரணத்திற்கு, இயேசு நோய்களைத் தீர்த்திருக்கிறார், இறந்தவர்களை உயிர்த்தெழச் செய்திருக்கிறார், அவருடைய அப்போஸ்தலர்களும் அப்படிச் செய்திருக்கிறார்கள் என்று நியாயம் பேசுவார்கள். போதாததற்கு, இயேசு தான் செய்ததைவிட பெரிய காரியங்களை எங்களை வைத்து செய்யப்போவதாகக் கூறியிருக்கிறார் என்றெல்லாம் சொல்லுவார்கள். இதெல்லாம் கேட்பதற்கு நன்றாய்த்தான் இருக்கிறது. ஆனால், வேதத்திற்கு இந்த முறையில் விளக்கம் கொடுக்கக்கூடாதென்பது இவர்களுக்குத் தெரியவில்லை. நாம் விளக்கிச் சொன்னாலும் இவர்கள் நம்புவதாயில்லை.
ஒரு கார் எஞ்சினுக்குரிய மெனுவலை (Manual) வைத்துக்கொண்டு அந்த எஞ்சின் பழுதானால் அதடின ரிப்பேர் செய்துவிடலாம். அந்த மெனுவல் நாம் என்ன செய்ய வேண்டும் என்று சகலதையும் விளக்கும். ஆனால், வேதப் புத்தகம் கார் எஞ்சின் மெனுவல் போன்றதல்ல. அதை வாசித்துப்பார்த்து அதிலுள்ளவர்கள் இப்பச் செய்திருப்பதால் நாமும் அப்படிச் செய்யலாம் என்று எதையும் செய்யப்பார்க்க முடியாது. வேதம் வரலாற்றையும், போதனைகளையும் உள்ளடக்கி தேவகோபத்திலிருந்து மீண்டு கர்த்தரை நாம் எப்படி அறிந்து கொள்வது என்பதை நமக்கு விளக்கும் நூலாக இருக்கிறது. அதுவே அதன் அடிப்படைப் போதனை. வித்தை காட்டுபவர்களாகவும், மாஜிக் செய்பவர்களாகவும், பிணி தீர்ப்பவர்களாகவும் நம்மை மாற்றுவதற்காக கர்த்தர் வேதத்தைத் தரவில்லை. ஆத்துமாக்கள் இந்த உலகத்தில் அற்புதங்கள் செய்பவர்களாக மாற வேண்டும் என்பதல்ல கர்த்தரின் திட்டம். அவர்கள் இரட்சிப்பின் வழிகளை வேதத்தின் மூலம் அறிந்து கொண்டு, மனந்திரும்பி தன்னை விசுவாசிக்கின்ற அற்புதம் நடப்பதற்காக மட்டுதே அவர் வேதத்தைக் கொடுத்திருக்கிறார். பாவியாகிய ஒரு மனிதன் கிறிஸ்துவின் மூலம் பாவ விடுதலையை அடைந்து அவரை விசுவாசிப்பதைவிட மிகப்பெரிய அற்புதம் இந்த உலகத்தில் இருக்க முடியாது. அந்த அற்புதத்தையே ஆத்துமாக்களில் வேதம் செய்கிறது.
அற்புதம் செய்தால் ஆத்துமாக்கள் இயேசுவை விசுவாசிக்க இலகுவாக இருக்குமே என்று நினைப்பவர்கள் அநேகர். சரீரசுகத்தைக் கொடுத்து ஒரு மனிதனை இயேசுவை விசுவாசிக்க வைக்கமுடியாது. அதனால்தான் இயேசு, வேதத்தை விசுவாசிக்காதவன், இறந்துபோன எவரும் உயிர்த்தெழுந்தாலும்கூட கர்த்தரை விசுவாசிக்க மாட்டான் என்று சொன்னார். அற்புதங்களைப்பார்த்து பாவிகள் இரட்சிப்பை அடைவார்கள் என்று மனக்கணக்கு போட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு இயேசுவின் வார்த்தைகளில் நம்பிக்கை இல்லை. வேறுசிலர், சுகமளிப்புக்கூட்டங்களில் அற்புதங்கள் நடப்பதைப்பார்த்திருக்கிறேனே என்று சொல்லுவார்கள். சகோதரனே! சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே என்று பவுல் 2 கொரிந்தியரில் கூறியிருப்பதை மறந்துவிட்டாயா? மோசேக்கு முன் பாரோனின் மந்திரவாதிகளும் மோசே செய்த அதே அற்புதங்களைச் செய்து காட்டவில்லையா? அப்படியானால், சுகமளிப்புக்கூட்டம் நடத்துகிறவர்கள் எல்லாம் பிசாசின் ஊழியக்காரர்களா? என்று நீங்கள் கேட்கலாம். சகோதரர்களே! நானும் உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன். பதில் சொல்லுங்கள். நாம் வேதத்தை நம்ப வேண்டுமா! கண்ணால் காண்பவற்றை நம்ப வேண்டுமா? கண்ணால் பார்க்கக்கூடியதெல்லாம் கர்த்தருடைய செயல்கள் என்று நம்பினால் பாரோனின் மந்திரவாதிகள் செய்தவையும் உண்மையானவை என்றல்லவா ஆகிவிடும். வேதம் மட்டுமே என்றைக்கும் பொய் சொல்லாது. ஆகவே, வேதத்தை வைத்து எதையும் ஆராய்வதே சிறப்பானது. வேதம் சொல்கிறது, இயேசுவைப்போலவோ, அப்போஸ்தலர்களைப்போலவோ இன்று ஒரு தனிமனிதனும் அற்புதங்கள் செய்ய முடியாதென்று. அப்படியானால், அற்புதங்கள் செய்கிறோம் என்று சொல்கிறவர்கள் பேச்சை நாம் நம்பாமல் இருப்பதே கர்த்தருக்கு விசுவாசமாக இருப்பதற்கு அறிகுறி. அதைவிட்டு, அற்புதம் செய்கிறோம் என்று சொல்லுகிற மனிதர்களை நம்பினால் நமது விசுவாசம் கெட்டுவிடும். இயேசுவை விசுவாசித்து வளரவேண்டிய நாம் சுகமளிப்பு கூட்டம் நடத்துகின்ற மனிதர்களை விசுவாசித்து வீண்போய்விடக்கூடாது.
நண்பர்களே! உங்கள் வாழ்க்கையில் தொல்லைகள் மிகுந்திருக்கின்றன என்பது எனக்குப் புரிகிறது. ஆனால், அதற்கு வடிகால் சுகமளிப்புக்கூட்டம் நடத்தும் மனிதர்களல்ல. தொல்லைகளுக்கு மத்தியில் நம்மை வழிகாட்டி தைரியப்படுத்தக்கூடியது கர்த்தரின் வேதம் மட்டுமே. வேதத்தை அன்றாடம் வாசித்து ஜெபத்தில் உங்கள் தொல்லைகள் அனைத்தையும் கர்த்தர் முன்வைத்து அவருடைய பதிலுக்காக காத்து நிற்பீர்களானால் அற்புதங்களின் தேவனாகிய கர்த்தர் உங்களைப் பெலப்படுத்துவார். உங்களுக்கு வேறு எதுவுமே தேவையில்லை. இன்று அற்புதங்கள் செய்கிறோம், சுகமளிக்கிறோம் என்றுகூறி அநேக ஆத்துமாக்களை ஏமாற்றிப் பணம் சேர்த்துக்கொண்டிருக்கும் ஒரு பெருங்கூட்டமே தமிழர்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. பத்தோடு பதினொன்றாக நீங்களும் ஏமாறிக்கொண்டிருப்பவர்கள் கூட்டத்தில் சேர்ந்துவிடாதீர்கள். முடிந்தால் பிசாசு தெரிந்து கொள்ளப்பட்டிருப்பவர்களையும் வஞ்சிக்கப்பார்ப்பான், என்ற இயேசுவின் வார்த்தைகளை மீண்டும் நினைவுகூறுங்கள். அவர் வழியில் மட்டும் போங்கள். வேதத்தை மட்டும் போதிக்கும் நல்ல திருச்சபையில் சேர்ந்து கர்த்தரை ஆராதனை செய்யுங்கள்!