எல்லா சபைப்பிரிவுகளுக்கும் பொருந்தி வருகிற இறையியல் கல்லூரிகள் (Inter-Denominational Bible College) என்ற இறையியல் கல்லூரி விளம்பரங்களை நீங்கள் அடிக்கடி பார்த்திருப்பீர்கள். இதற்கு பொருள் என்ன என்று எல்லோருமே சிந்தித்துப் பார்த்திருக்க மாட்டோம். ஆனால், சிந்திக்காமல் இருந்துவிட்டால் எப்போதுமே நமக்கு ஆபத்துத்தான் காத்திருக்கிறது. ஆகவே, இதைப்பற்றி நாம் ஆராய்வது அவசியம். சமீபத்தில் நான் வாசித்த இந்திய சபை சரித்திரம் பற்றிய ஒரு ஆங்கில நூலில் உள்அட்டையில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது. “இது செராம்பூர் இறையியல் கல்லூரியினால் பட்டப்படிப்புக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், பட்டப்படிப்புக்கு இதைமட்டும் உத்தியோகபூர்வமான வரலாற்று நூலாகப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், ஏனைய சபைப்பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் சில முக்கியமான வேதபோதனைகளைக்குறித்த வேறுபாடான கோட்பாடுகளைக் கொண்டிருக்கிறார்கள் என்பதால் இந்நூலின் கருத்துக்களை மட்டும் ஏற்றக்கொள்ள வேண்டும் என்று நாம் வற்புறுத்தவில்லை” என்று எழுதப்பட்டிருந்தது. இந்த விளக்கம் ஓரளவுக்கு இன்டர்-டிநோமினேஷனல் இறையியல் கல்லூரிகள் பற்றிய உண்மையை எடுத்துக் காட்டுவதாக இருக்கின்றது.
இன்டர்-டினோமினேஷனல் இறையியல் கல்லூரிகள் எல்லா சபைப்பிரிவுகளும் சத்தியத்தைப் பின்பற்றுகின்றன என்ற அடிப்படைக் கோட்பாட்டைக் கொண்டு இயங்குகின்றன. ஆகவே, எந்த சபைப் பிரிவின் கோட்பாடுகளுக்கும் எதிரான எந்தப்போதனையோ, விளக்கமோ அந்தக் கல்லூரிகளில் கொடுக்கப்படமாட்டாது. அந்தக் கல்லூரிகளின் விசுவாச அறிக்கையை வாங்கிப் பார்த்தால் அதில் குறைந்தளவான அடிப்படை உண்மைகள் பற்றிய மேலெழுந்தவாரியான விளக்கம் மட்டுமே காணப்படும். அதாவது, எவருடைய கோட்பாட்டிற்கும் எதிரானதாக இருந்துவிடாதபடி கவனத்துடன் எழுதப்பட்டிருக்கும். உதாரணமாக பெந்தகொஸ்தே இயக்கங்களுக்கு எதிரான விளக்கங்கள் இருக்காது. சபை அமைப்பு, திருமுழுக்கு, இறுதிக்கால சம்பவங்கள், ஆவிக்குரிய வரங்கள், மீட்பைப்பற்றிய வேதபோதனைகள், பரிசுத்த ஆவிபற்றிய போதனைகள் அத்தனையும் எந்தசபைப்பிரிவையும் பாதிக்காத விதத்தில் விளக்கப்பட்டிருக்கும். முக்கியமாக எல்லா சபைப்பிரிவுகளையும் சேர்ந்தவர்கள் விரிவுரையாளர்களாக இருப்பார்கள். மொத்தத்தில் கிறிஸ்து ஆண்டவர், அவரை நம்பினால் இரட்சிப்பு என்பதைத் தவிர ஏனைய எல்லா வேதபோதனைகளையும் பொறுத்தவரையில் எந்த சபைப்பிரிவையும் பாதிக்காத விதத்தில் விளக்கங்கள் இருக்கும். உதாரணமாக தீர்க்கதரிசனம் இன்று உண்டா? என்று ஒரு மாணவர் விரிவுரையாளரைப் பார்த்துக் கேட்டால், அவர், “அப்படி இருப்பதாக ஒரு பிரிவினர் நம்புகிறார்கள். இல்லை என்று இன்னொரு பிரிவினர் நம்புகிறார்கள். உறுதியாக எதையும் சொல்ல முடியாது. எதில் உண்மை இருக்கிறது என்று நீங்களே தீர்மானித்துக் கொள்ள வேண்டும்” என்று பதில் சொல்லுவார். இப்படியே எல்லாப் போதனைகளுக்கும் அவர்கள் கொடுக்கும் விளக்கம் இருக்கும். இறையியல் மாணவன் இறுதியில் வேதத்தில் எல்லாப் போதனைகளுக்கும் இரண்டுக்கு மேற்பட்ட அர்த்தம் இருக்கிறது; உறுதியாக எதுவும் வேதத்தில் சொல்லப்படவில்லை என்ற நம்பிக்கையுடன் சபைக்குத் திரும்பி வருவான். இது முறையா? என்று சிந்திக்காமல் சீர்திருத்தப் போதனைகளை விசுவாசிக்கிறவர்கள் சும்மா இருந்துவிட முடியுமா? இந்தமுறையில் அமைந்த இறையியல் கல்லூரிகளாலும், சபைகளாலும் வரும் ஆபத்தைக்குறித்து சிந்தித்துப் பாருங்கள்:
1. இவர்கள் வேதத்தின் அதிகாரத்தைப் பற்றிய தவறான கொள்கையுடையவர்கள். வேதம் தெளிவான, அசைக்கமுடியாத ஒரே சத்தியத்தைப் போதிக்கிறது என்று இவர்கள் நம்புவதில்லை. அதில் பலவித கருத்துக்களுக்கும் இடமுண்டு என்ற அடிப்படை நம்பிக்கையை இவர்கள் கொண்டிருக்கிறார்கள். இதனால் வேதத்தை விளக்க இவர்ள் பயன்படுத்தும் வேதவிளக்க முறைகளும் தவறானதாகவே இருக்கும். இவர்களில் பெரும்பாலானோர் வேதம் கர்த்தரின் இறுதித் தீர்ப்பு என்பதையும் நம்புவதில்லை. அதாவது, கர்த்தர் வேதத்தின் மூலம் மட்டுமல்லாது தனி மனிதர்களின் தீர்க்கதரிசனத்தின் மூலமும், வேறு வழிகளிலும் தன்னுடைய சித்தத்தைத் தொடர்ந்தும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்ற ஆபத்தான நம்பிக்கையையும் கொண்டிருக்கிறார்கள். இந்நம்பிக்கை வேதத்தின் அதிகாரத்திற்கும் அதன் போதுமான தன்மைக்கும் எதிரானது. இத்தகைய போதனைகளைத்தரும் கல்லூரிகளில் படிக்கும் விசுவாசிகளும், இந்த விதத்தில் செயல்படும் சபையிலிருப்பவர்களும் சத்தியம் ஒன்றல்ல, அது பல சாயல்களைக் கொண்டது என்ற நம்பிக்கையிலும், வேதம் கர்த்தரின் வார்த்தைதான், இருந்தாலும் அதுவே எல்லாவற்றிற்கும் முடிவான இறுதித் தீர்ப்பளிக்கும் கர்த்தரின் வார்த்தையல்ல என்ற விசுவாசத்திலும் வளருவார்கள். இதைவிட பேராபத்து ஆத்துமாக்களுக்கு இருக்க முடியாது.
2. இத்தகைய கல்லூரிகள் சமய சமரசப்போக்குள்ளவை (Ecumenism). எல்லா சபைப்பிரிவுகளையும் திருப்திப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டு இவை இயங்குவதால் எல்லா சபைப்பிரிவுகளும் வேதபூர்வமானவை என்ற அடிப்படை நோக்கத்தைக் கொண்டு இவை செயல்படுகின்றன. இதனால் சபைப்பிரிவுகளின் போதனைகளையும், அவற்றின் தன்மையையும் வேதத்தை அடிப்படையாகக் கொண்டு ஆராய்வதை இலை எப்போதும் விரும்புவதில்லை. வேத விரோதக் கொள்கையான சமய சமரசப் போக்கைப் பின்பற்றி சத்தியத்தை மூடி மறைத்து விசுவாசிகளின் மனச்சாட்சியை மனித ஞானத்திற்கு அடிமைப்படுத்துவதைத் தொழிலாகக் கொண்டு இவை இயங்கி வருகின்றன. வேதத்திற்கே எனது மனச்சாட்சி அடிமை என்று சொன்ன மார்டின் லூதரைப் போன்றவர்களை இவர்கள் மத்தியில் பார்க்க முடியாது.
3. இவ்வாறு இயங்கி வரும் கல்லூரிகளும், சபைகளும் சத்தியத்தை மறைத்து வைப்பதோடு, திருச்சபையையும் இருண்டகாலத்தை நோக்கி இட்டுச் செல்கின்றன. இக்கல்லூரிகளில் படித்து பட்டத் பெற்று போதகர்களாக வருகிறவர்களால் ஆத்துமாக்களின் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பேராபத்து ஏற்படுகின்றது. சத்தியம் பல சாயல்களைக்கொண்டு தனி மனிதன் தான் விரும்பியவிதத்தில் புரிந்து கொள்ளக்கூடிய தன்மையுள்ளது என்று போதித்து இப்போதகர்கள் ஆத்துமாக்களை யெரேபொகாமைப்போல் கர்த்தரின் கட்டளைகளுக்கு எதிராக வழிநடத்துவார்கள்.
இதை வாசித்த பின்பும் சிலர் திருந்த மறுப்பார்கள். அதில் எந்த ஆச்சரியமும் இல்லை. வேதஅடிப்படையில் சிந்திக்கும் பக்குவத்தை இழந்து மரத்துப்போன இதயங்களுக்கு சத்தியம் புரியாது. வாசகர்களே சிந்திக்க ஆரம்பியுங்கள்!