கர்த்தருடைய சபையில் இன்று இரண்டு வகை ஊழியக்காரர் இருக்கிறார்கள். அவர்கள் மூப்பர்களும், உதவிக்காரர்களும் (1 தீமோத்தேயு 3). இவர்களே திருச்சபை ஊழியத்திற்காக இன்று கொடுக்கப்பட்டிருக்கும் நிரந்தர சபை ஊழியர்கள். இந்த இரண்டு வகை ஊழியமும் திருச்சபைக்கு மிக அவசியமானவை. இவை இல்லாமல் திருச்சபைகள் நல்ல முறையில் இயங்க முடியாது. ஒரு சபை ஆரம்பிக்கும் காலத்தில் இந்த ஊழியர்களைக் கொண்டதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், அந்த சபை வளருகிறபோது இந்த ஊழியங்களை அந்த சபை கொண்டதாக இருக்க வேண்டும். இன்று தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இருக்கும் சபைகளுக்கு இந்த ஊழியங்களைப் பற்றிய வேதபூர்வமான சிந்தனைகள் இல்லாமலிருப்பது நல்லதல்ல. அநேக சபைகளில் இந்த இருவகை ஊழியங்களின் தன்மை, அவற்றின் பயன்பாடுகள் தெறியாமல் மனித சிந்தனைப்படியான காரியங்களைச் செய்துவருகிறார்கள். முக்கியமாக உதவிக்காரர்கள் இன்று அநேக சபைகளில் மூப்பர்களுக்கான அதிகாரத்தைக் கொண்டு போதகர்கள் போல் நடந்து வருகிறார்கள். இந்த சபைகளுக்கு மூப்பர்களுக்கும், உதவிக்காரர்களுக்கும் இடையில் இருக்கும் வேறுபாடு புரியவில்லை. உதவிக்காரர்கள் மூப்பர்களைப்போல நடந்து கொள்வது தவறாகவும் சிலருக்குப் படவில்லை. சில சபைகளில் போதகர்களுக்கே உதவித்தொகை போதாத நிலையில் உதவிக்காரர்கள் சம்பளம் வாங்கிக்கொண்டு போதகர்களை ஆண்டு வருகிறார்கள். இதைவிட மோசமாக உதவிக்காரராக இருக்க எந்தத்தகுதியும் இல்லாதவர்கள் பல சபைகளில் உதவிக்காரர்களாக இருந்து வருகிறார்கள். இப்படிப் பலவிதமான குளருபடிகள் சபை ஊழியங்களைப் பொறுத்தவரையில் சபை சபையாக நடந்து வருகின்றன. இந்த ஆக்கத்தில் உதவிக்காரர்களைப் பற்றி வேதம் என்ன சொல்கிறது? யார் அப்பதவிக்கு நியமிக்கப்பட வேண்டும்? அவர்களுடைய பணிகள் என்ன? என்று ஆராய்வதே என் நோக்கம். சீர்திருத்த சிந்தனை கொண்டு வளர்ந்து வரும் சபைகளுக்கு இது உதவும் என்ற நம்பிக்கையில் இதை எழுதுகிறேன்.
அப்போஸ்தலர் நடபடிகளில் உதவிக்காரர்கள்
உதவிக்காரர்களைப் பற்றி புதிய ஏற்பாட்டில் நாம் முதன் முதலாக அப்போஸ்தலர் நடபடிகள் 6ம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். ஆதி சபை வளர்ந்து வருகின்ற அந்த ஆரம்பநாட்களில் சபைத் தலைவர்களாக அப்போஸ்தலர்கள் மட்டுமே இருந்தார்கள். அப்போஸ்தலர்கள் கிறிஸ்துவின் நேரடிப் பிரதிநிதிகள். அவர்கள் மட்டுமே அன்று கர்த்தரிடம் இருந்து வெளிப்படுத்தலைப் பெற்று சபைக்குத் தேவையானதை செய்து அதை வளர்த்து வந்தார்கள். அவர்கள் பன்னிரண்டு பேர் மட்டுமே. ஆனால், சீடர்களின் தொகை அந்தக்காலத்தில் வளர்ந்து பெறுகிறது. யூதர்களும், புறஜாதியாரும் கிறிஸ்துவை விசுவாசித்து சபை அங்கத்தவர்களாக சபையில் தொடர்ந்து இணைந்து வந்தார்கள். இவ்வாறாக சபை எண்ணிக்கையில் வளர்ந்து கொண்டிருந்த காலத்தில் யூதர்களுக்கும், கிரேக்கர்களுக்கும் மத்தியில் ஒரு சிக்கல் ஏற்பட்டது. கிரேக்கர்கள் தங்களுடைய விதவைகளுக்குத் தேவையானது கிடைக்கவில்லையென்றும், தங்களுடைய விதவைகள் புறக்கணிக்கப்படுவதாகவும், யூதர்களின் விதவைகள் அதிக உதவிகளைப் பெறுவதாகவும் குற்றம் சாட்டினார்கள். பெரிய கூட்டத்தில் இத்தகைய சிக்கல்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. இந்த நிலைமையை நீடிக்கவிட்டால் அது கைமீறிப்போகும் என்று உணர்ந்த அப்போஸ்தலர்கள் அதைத்தீர்க்க நடவடிக்கை எடுத்தனர்.
அவர்கள் எடுத்த நடவடிக்கை பின்வருமாறு: (1) தங்களுடைய பிரதான ஊழியம் என்ன என்பதை முதலில் எல்லோருக்கும் விளக்கினார்கள் 6:2. (2) பந்தி விசாரனை செய்வதற்காக ஏழு பேரைத் தெரிவு செய்யும்படி சபையைக் கேட்டுக்கொண்டார்கள். அப்போஸ்தலர்களுடைய பிரதான ஊழியமான தேவ வசனத்தைப் போதிப்பதற்கும், ஜெபிப்பதற்கும் எந்தவிதத்திலும் தடை ஏற்படக்கூடாது. அந்த ஊழியங்கள் இடைவிடாமல் நடக்க வேண்டும். இதுவரை அப்போஸ்தலர்களால் தொடர்ந்து பந்திவிசாரிப்பது போன்ற காரியங்களிலும் ஈடுபட்டு வர முடிந்தது. ஆனால், சபை எண்ணிக்கையில் வளர வளர அவர்களால் அந்த வேலைகளைத் தொடர்ந்து செய்ய முடியாமல் போனது. அதுமட்டுமல்ல, அவர்கள் தொடர்ந்து பந்தி விசாரணையில் ஈடுபட்டு வந்தால் அவர்களுடைய பிரதான ஊழியமும் தடைப்பட்டுப் போகும் நிலை ஏற்படும். இதைத்தவிர்க்குமுகமாக ஆதி சபையில் முதன் முதலாக அப்போஸ்தலர்களால் உதவிக்காரர்கள் நியமிக்கப்பட்டார்கள். ஏன் ஏழு பேர் நியமிக்கப்பட்டார்கள்? என்ற கேள்வி எழலாம். இருந்த பிரச்சனையை சமாளிக்கவும், பந்திவிசாரணையை சரிவர செய்யவும் ஏழு பேர் போதுமானதாக இருந்தது என்று மட்டுமே கூறு முடியும். அத்தொகை தேவைக்கு ஏற்ப பின்பு உயர்ந்திருக்கலாம். அப்போஸ்தலர்கள் இவ்வாறாக ஏற்படுத்திய முறை எல்லோருக்கும் ஏற்புடையதாக இருந்தது. அத்தோடு பிரச்சனையும் ஒரு முடிவுக்கு வந்தது. சபையும் தொடர்ந்து பெரு வளர்ச்சி அடைந்தது.
இந்தவிதத்திலேயே முதன் முதலில் உதவிக்காரர்கள் சபையில் தோன்றியிருக்கிறார்கள். அப்போஸ்தலர் நடபடிகள் 6ம் அதிகாரத்தின் போதனைகள் மிக முக்கியமானவை. அவற்றை நாம் குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது. இந்தப்பகுதி சபை அதிகாரிகள் பற்றிய மூன்று முக்கிய போதனைகளைத் தெளிவாகத் தருகின்றன. (1) இன்று அப்போஸ்தலர்களின் பணியைத் தொடர்ந்து சபைகளில் செய்து வரும் போதகர்களினதும், மூப்பர்களினதும் பிரதான பணி பிரசங்கம் செய்வதும், போதிப்பதும், ஜெபிப்பதுமாகும். இன்றைய போதகர்களும், மூப்பர்களும் சபை அதிகாரிகளாக, தலைவர்களாக இருந்து இந்தக் காரியங்களுக்கே முதலிடம் கொடுத்து வாஞ்சையோடு அவற்றை செய்து வர வேண்டும். (2) அப்போஸ்தலர்கள் தாங்கள் செய்ய வேண்டிய கடமைகளைத்தான் சபை வளர்ச்சி கருதி உதவிக்காரர்கள் செய்யும்படிக் கொடுத்தார்களே தவிர தங்களுடைய பொறுப்புக்களையும் அவர்களுக்குக் கொடுத்துவிடவில்லை. இன்று சபையில் உதவிக்காரர்கள் செய்ய வேண்டிய அனைத்துக் காரியங்களுக்கும் போதகர்களும், மூப்பர்களுமே பொறுப்புடையவர்கள். (3) உதவிக்காரர்கள் சபைத்தலைவர்களான போதகர்களின் கீழ் இருந்து சபைக்குத் தேவையான அன்றாடத் தேவைகளைப் பொறுப்புடன் நிறைவேற்றி வரவேண்டும். அவர்கள் போதகர்களுக்கும், மூப்பர்களுக்கும் கட்டுப்பட்டு அவர்கள் வழிநடத்தலின்படி பணி செய்ய வேண்டும்.
உதவிக்காரர்களுக்கான இலக்கணங்கள்
உதவிக்காரர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று வேதம் தெளிவாக விளக்குகிறது. சபைகள் உதவிக்காரர்களை தாம் நினைத்ததுபோல நியமித்துவிட முடியாது. 1 தீமோத்தேயு 3:8-13 வரையில் காணப்படும் வசனங்களில் உள்ள இலக்கணங்களைக் கொண்டவர்களாக அவர்கள் இருக்க வேண்டும். உண்மையில் சொல்லப்போனால் 1 தீமோத்தேயு 3ல் கொடுக்கப்பட்டுள்ள மூப்பர்களுக்கும், உதவியாளர்களுக்குமான இலக்கணங்களில் பெரும் வேறுபாடுகள் இல்லை. உதவிக்காரர்களுக்கான இலக்கணங்களை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
(1) நன்னடத்தை
(2) விசுவாசம்
(3) குடும்ப வாழ்க்கை
இந்த மூன்று பிரிவுகளுக்குள் அந்த இலக்கணங்களை அடக்கலாம். இந்த இலக்கணங்களோடு பொருந்தி வராதவர்களை உதவிக்காரர்களாக சபை ஒருபோதும் நியமிக்கக்கூடாது. உதவிக்காரர்களும் சாதாரண மனிதர்கள்தான். அவர்கள் பூரணமானவர்களாக ஒருபோதும் இருந்துவிட முடியாது. இருந்தாலும் இந்த இலக்கணங்களைக் கொண்டிராதவர்கள் நேர்மையாகவும், நீதியாகவும் உதவிக்காரர்களுக்கான பொறுப்புக்களை கொண்டு நடத்த முடியாது.
(1) நன்னடத்தை (1 தீமோத். 3:8) – உதவிக்காரர்கள் பொய் பேசாதவர்களாகவும், புறம்பேசாதவர்களாகவும் இருக்க வேண்டும். இரட்டை நாக்கு அவர்களுக்கு இருக்கக்கூடாது. சபையாரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாக அவர்கள் நடந்து கொள்ள வேண்டும். இரட்டை நாக்குள்ளவர்களை ஒருநாளும் நம்ப முடியாது. இந்தவிஷயத்தில் சபை மிகக்கவனமாக நடந்து கொள்ள வேண்டும். அவர்கள் மதுபானப்பிரியர்களாக (மது வெறியர்களாக) இருந்துவிடக்கூடாது. மதுவின் மயக்கத்திற்கு உள்ளானவர்கள் சபையாரின் நன்மையைக் கவனிக்கமாட்டார்கள். மதுவைப்பற்றியே எண்ணிக் கொண்டிருப்பார்கள். மதுவெறியர்களுக்கும் இந்தப் பதவிக்கும் வெகுதூரம். அடுத்ததாக, அவர்கள் இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவர்களாக இருக்கக்கூடாது. அதாவது, சுலபமாக பணம் சம்பாதிக்க ஆசைப்படுகிறவர்களாக இருக்கக்கூடாது. பணவிஷயத்தில் நல்ல எண்ணங் கொண்டவர்களாக இருக்க வேண்டும். சுலபமாக பணம் சம்பாதிக்கப் பார்க்கிறவர்கள் நேர்மையாக ஒருபோதும் அதைச் சம்பாதிக்க மாட்டார்கள். அவர்களுக்கு யூதாசைப் போல பணத்திலேயே குறி இருக்கும். சபைப் பணத்தையும் சரியானவழியில் செலவழிக்க அவர்களுக்கு எண்ணம் இருக்காது. தேவையான ஊழியத்துக்கு பணம் செலவழிக்க அவர்களுக்கு மனதிருக்காது. யூதாஸ் விலைமதிப்பில்லாத தைலப்புட்டியை விற்று அதில் ஒரு பங்கை தனக்கு உடமையாக்கிக் கொள்ள மனம் வைத்திருந்தான் என்பதை நினைத்துப்பாருங்கள். யூதாசைப் போன்ற இழிவான ஆதாயத்தை நாடுகிறவர்கள் உதவிக்காரர்களாக இருக்கக்கூடாது. நல்லொழுக்கமுள்ளவர்களாக உதவிக்காரர்கள் இருக்க வேண்டும். ஒழுக்கம் எல்லோருக்கும் அவசியம். அதிலும் சபை அதிகாரிகள் அதில் சிறப்பான பெயர்பெற்றவர்களாக இருக்க வேண்டும். நல்ல பேச்சு, அன்பு, நேர்மை, நேரம் தவறாமை (இது ஒழுக்கம் சம்பந்தமானது என்பது அநேகருக்குத் தெறியாது) எல்லாவற்றிலும் அவர்கள் சபையாருக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
(2) விசுவாசம் (1 தீமோத். 3:8) – உதவிக்காரர்கள் “விசுவாசத்தின் இரகசியத்தை சுத்த மனச்சாட்சியில் காத்துக் கொள்ளுகிறவர்களா இருக்க வேண்டும்” என்று வேதம் சொல்கிறது. இதற்கு என்ன பொருள் என்று பார்ப்போம். முதலில் உதவிக்காரர்கள் நல்ல கிறிஸ்தவர்களாக வேதபோதனைகளில் தேளிவுள்ளவர்களா இருக்க வேண்டும். “விசுவாசத்தின் இரகசியம்” என்பது கிறிஸ்தவ விசுவாசத்தைக் குறித்த தெளிவான போதனைகளைக் குறிக்கின்றது. சபைப்பணத்தையும், கட்டட வேலைகளையும், பார்த்துக்கொள்ளப்போகிற உதவிக்காரர்களுக்கு இதெல்லாம் எதற்கு? என்ற முறையில் சிந்தித்து பல சபைகள் தவறான மனிதர்களை உதவிக்காரர்களாக நியமித்து இன்று கையைக் கடித்துக் கொண்டிருக்கின்றன. சபையின் காரியங்களை பொறுப்பாக கவனிக்கப் போகிறவர்களுக்கு சத்தியத்தில் உறுதி இருப்பது அவசியம். நாம் விசுவாசிக்கும் சத்தியம் என்ன? என்பது உதவிக்காரர்களுக்கு தெளிவாக தெரிந்திருக்க வேண்டும். அவர்கள் இறையியல் கல்லூரிகளுக்கப் போயிருக்கத் தேவையில்லை. ஆனால், கிறிஸ்து யார்? இரட்சிப்பின் மகிமை என்ன? கிறிஸ்து நமக்காக சிலுவையில் எதைச் செய்தார்? அவருடைய சபையின் மகிமை என்ன? அந்தச் சபை இந்த உலகில் செய்ய வேண்டிய பெரும்பணி என்ன? கர்த்தர் தந்துள்ள பத்துக்கட்டளைகளின் தன்மை என்ன? என்பதுபோன்ற வேத இரகசியங்களில் அவர்களுக்கு தெளிவான அறிவு இருக்க வேண்டும். இவற்றில் ஞானமில்லாத உதவிக்காரர்கள் விசுவாசத்தோடும், உண்மையோடும் கர்த்தருக்காக பணி செய்ய முடியாது.
மேலும் 1 தீமோத். 3:8, உதவிக்காரர்கள் “விசுவாசத்தின் இரகசியத்தை சுத்தமான மனச்சாட்சியுடன் காத்துக்கொள்ள வேண்டும்” என்கிறது. உதவிக்காரர்களுடய மனச்சாட்சி சுத்தமாக இருக்க வேண்டும். இந்த வேத இரகசியங்களை அவர்கள் உண்மையிலேயே விசுவாசிக்கிறவர்களாகவும், அவற்றிற்காக உயிரையே கொடுப்பவர்களாகவும் இருக்க வேண்டும். இன்று சபைகளில் உதவிக்காரர்களாக இருப்பவர்களுக்கு இத்தகைய மனச்சாட்சியோ, வேத அறிவோ இல்லாமலிருக்கிறது. பெருமைக்காக பலர் இந்தப்பதவியில் நுழைந்திருக்கிறார்கள். கர்த்தரின் வருகையின்போது அவர்களுக்கு நிச்சயம் தண்டனை காத்திருக்கிறது. அவர்களை நியமித்த சபைகளும் கர்த்தருக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கும். சீர்திருத்த சபைகள் உதவிக்காரர்கள் விசுவாச அறிக்கையையும், வினாவிடைப் பாடங்களையும் படித்து அவற்றில் ஞானமுள்ளவர்களாக இருக்கிறவர்களாக பார்த்துக்கொள்ள வேண்டும். வேதசத்தியங்களில் வாஞ்சை இல்லாத உதவிக்காரர்கள் வேதபூர்வமாக சபைக்காரியங்களை எப்படிச் செய்ய முடியும்? சில போதகர்கள் தமக்கு தலையாட்டிப் பொம்மைகள் தேவையென்று சிலரை உதவிக்காரராக நியமித்திருக்கிறார்கள். வேறுசிலர் சபையில் பணக்காரர்களாகவும், பெரிய மனிதர்களாகவும் இருந்த காரணத்திற்காக இந்தப் பதவிக்கு வந்திருக்கிறார்கள். பாட்டன், தாத்தா காலத்திலிருந்து ஒரு குடும்பம் சபையில் இருந்தது என்பதற்காக அதில் உள்ளவர்கள் உதவிக்காரர்களாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இதெல்லாம் கர்த்தருடைய வழிகள் அல்ல. சபை இன்று எவ்வளவு மோசமான நிலமையில் இருக்கிறது என்பதற்கு இவையெல்லாம் உதாரணங்கள்.
(3) குடும்பம் (1 தீமோத். 3:11, 12) – உதவிக்காரர்களின் குடும்ப வாழ்க்கை கர்த்தரை மகிமைப்படுத்துவதாக இருக்க வேண்டும். சபைப் போதகர்களிடம் எதிர்பார்க்கப்பட்ட அதே சிறப்பான குடும்ப வாழ்க்கையை வேதம் உதவிக்காரர்களிடமும் எதிர்பார்க்கிறது. உதவிக்காரர்கள் தங்களுடைய மனைவிமாருக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். பிள்ளைகள் பெற்றோரின் பேச்சைக் கேட்டு நடப்பவர்களாக இருக்க வேண்டும். வீடு சரியில்லாத உதவிக்காரர் சபையில் விசுவாசமாக வேலை செய்ய முடியாது. மனைவி, பிள்ளைகள் ஆராதனைக்கு சரியாக வராமலும், ஆலய வேலைகளில் அக்கறையில்லாதவர்களாகவும் இருந்தால் அது உதவிக்காரர்களுக்கு நல்லதல்ல. உதவிக்காரர்களின் மனைவிமார் நல்லொழுக்கமுள்ளவர்களாகவும், பக்திவிருத்தியுள்ளவர்களாகவும், புறம்பேசாதவர்களாகவும், உண்மையுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். சபை அதிகாரிகளின் குடும்ப வாழ்க்கைக்கும், ஊழியத்திற்கும் பெருந்தொடர்பிருப்பதை வேதம் இதன் மூலம் சுட்டிக்காட்டுகிறது.
உதவிக்காரர்கள் தெரிவு செய்யப்பட வேண்டிய முறை
இன்று அநேக சபைகளில் உதவிக்காரர்கள் வேத முறைப்படி தெரிவு செய்யப்படுவதில்லை. உலகப்பிரகாரமான முறையில் சபை அதிகாரிகள் தெரிவுசெய்யப்படுகிறார்கள். எனக்குத் தெரிந்த ஒரு திருச்சபைப் பிரிவில் உள்ள சபைகளில் விசுவாசிகளாக இல்லாதவர்களையும் உதவிக்காரர்களாக தெரிவு செய்திருக்கிறார்கள். இதனால் அந்த சபைகள் இன்று ஆத்மீக பலத்தை இழந்து மிகவும் மோசமான நிலையை அடைந்திருக்கின்றன. வேதம் சொல்கிறபடி நடந்தால் இந்தக்காலத்தில் ஊழியமே செய்யமுடியாது என்று ஒரு சபையைச் சேர்ந்த உதவிக்காரர் என் காதுபட சொல்லியிருக்கிறார். இதெல்லாம் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் சபை அதிகாரிகள் எந்தளவுக்கு ஆத்மீக பலத்தையும், ஞானத்தையும் கொண்டிராதவர்களாக இருக்கிறார்கள் என்பதற்கான சில உதாரணங்கள்.
உதவிக்காரர்களாக எவரையும் அவசரப்பட்டும், சபை வேலை செய்ய எவராவது தேவை என்ற எண்ணத்திலும், உலக வழக்கத்தைப் பின்பற்றியும் நியமித்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் வேதம் அவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டிய முறைகளை நமக்கு விளக்குகிறது. மறுபடியும் நாம் அப்போஸ்தலர் 6, 1 தீமோத்தேயு 3 ஆகிய வேதபகுதிகளை ஆராய வேண்டும். இப்பகுதிகள் உதவிக்காரரை எப்படித் தெரிவு செய்ய வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை விளக்குகின்றன. இவற்றை நான் படிமுறையாக பின்வரும் முறையில் குறிப்பிட விரும்புகிறேன்:
(1) சபைப்போதகர்களும், மூப்பர்களும், உதவிக்காரர்களாக நியமிக்கப்பட வேண்டியவர்களை சபைக்கு அறியத்தர வேண்டும். – அப்போஸ்தலர் நடபடிகள் 6ம் அதிகாரத்தில இதை நாம் பார்க்க முடிகிறது. உதவிக்காரர் சபைக்குத் தேவை என்ற எண்ணம் ஆத்துமாக்களுக்கு முதலில் தோன்றவில்லை. அத்தகைய திட்டத்தைக் கொண்டு வந்தவர்கள் அப்போஸ்தலர்களே. அப்போஸ்தலர்களே உதவிக்காரர்களுக்கு இருக்க வேண்டிய தகுதிகளைக் குறிப்பிட்டு சபையில் அத்தகைய மனிதர்கள் இருக்கிறார்களா என்று பார்க்கச் சொன்னார்கள். அப்படித் தகுதியுள்ள மனிதர்களை நீங்கள் ஆராய்ந்து அங்கீகரிக்கும்போது அவர்களை நாங்கள் அப்பதவிக்கு நியமிப்போம் (அவர்களை இந்த வேலைக்காக நாங்கள் ஏற்படுத்துவோம்) என்று அப்போஸ்தலர்கள் சொல்லியிருப்பதைக் கவனிக்கவும். ஆகவே, உதவிக்காரரை நியமிக்கும் பணி இன்று அப்போஸ்தலர்களிடம் இருந்து சபை மூப்பர்களுக்கு வந்திருக்கின்றது.
(2) சபை அங்கத்தவர்கள், மூப்பர்கள் தேரிந்தெடுத்திருப்பவர்களை வேத அடிப்படையில் ஆராய்ந்து பார்க்க வேண்டும் (அப்போஸ். 6:3; 1 தீமோத்தேயு 3:10) – சபை மூப்பர்கள் (இது போதகர்களையும் உள்ளடக்கியது) சபையில் உதவிக்காரராக இருப்பதற்கு தகுதியானவர்கள் யார் என்று கூர்ந்து கவனிக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். இதற்கு அவர்கள் சபையின் துணையையும் நாடலாம், வருடாவருடம் அத்தகைய தகுதி உள்ளவர்களை மூப்பர்களுக்கு அறியத்தரும்படி சபை அங்கத்தவர்களைக் கேட்கலாம். ஆனால், இறுதி முடிவு மூப்பர்கள் கரத்திலேயே இருக்கிறது என்பதை சபையார் உணர வேண்டும். இத்தெரிவில் போட்டி, பொறாமைக்கு இடமில்லை. இது கர்த்தரின் ஊழியம் சம்பந்தமான காரியம். உதவிக்காரர்கள முன்னதாக சோதித்துப் பார்க்கப்பட வேண்டும் என்று 1 தீமோத்தேயு 3:10 சொல்வதைக் கவனியுங்கள். இவ்வாறாக மூப்பர்கள் கவனித்து தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர்களை அவர்கள் சபைக்கு முறையான ஒரு சபைக்கூட்டத்தில் அறியத்தர வேண்டும். (இதெல்லாம் முறையாக அங்கத்தவர்களையும், சபை சட்டவிதிகளையும், கொண்டமைந்த சபைகளுக்கே பொருந்தும். சபை அங்கத்துவமோ, சட்ட விதிகளோ இல்லாது சபை என்ற பெயரில் கூடிவரும் கூட்டங்களுக்கு இவை பொருந்தாது. ஏனெனில் அவற்றை நாம் வேதபூர்வமான சபைகளாக அங்கீகரிக்க முடியாது). அதுமட்டுமல்லாமல், உதவிக்காரர்களாவதற்கு தகுதியுள்ளவர்களாக பெயர்குறிப்பிடப்பட்டவர்களைப்பற்றி சபை சிந்தித்து ஆராய மூப்பர்கள் அவர்களுக்கு குறிப்பிட்ட கால தவணையும் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு ஒன்றோ, இரண்டோ மாதங்கள். இந்தக் காலதவணையில் சபை அங்கத்தவர்கள் ஜெபத்தோடு பெயர் குறிப்பிடப்பட்டவர்களுக்கு உதவிக்காரராகும் தகுதி உண்டா என்று வேத அடிப்படையில் சிந்திக்க வேண்டும். இப்படிச் செய்யும்போது சபையார் தன்னலமில்லாதவர்களாக, தேவ பயத்தோடு அந்தக் காரியத்தில் ஈடுபட வேண்டும். இந்தக்குறிப்பிட காலப்பகுதியில் எவர்மீதாவது பெரும் சந்தேகமிருந்தால் அதை மூப்பர்களுடைய கவனத்திற்கு சபையார் கொண்டு வரலாம். அது மூப்பர்கள் அவர்களைப் பற்றி மேலும் ஆராய துணை செய்யும்.
(3) சபை மூப்பர்கள் உதவிக்காரர்களை நியமிக்க வேண்டும் – உதவிக்காரர்களாக நியமிக்கப்பட பெயர் குறிப்பிடப்பட்டவர்களை சபையார் ஆராய்ந்து பார்ப்பதற்காக கொடுக்கப்பட்ட காலப்பகுதி நிறைவேறியவுடன், பெயர் குறிப்பிடப்பட்டவர்களில் எவர் மேலும் எந்தவிதமான தகுதிக்குறைகள் கண்டுபிடிக்கப்படாமல் இருந்தால் மூப்பர்கள் சபை அங்கத்தவர்களை குறிப்பிட்ட ஒரு நாளில் கூட்டி உதவிக்காரர்களை முறையாகத் தெரிவு செய்ய வேண்டும். தெரிவு செய்யப்பட்டவர்கள் வேறு ஒரு நாளில், விசேஷ ஆராதனைக்கூட்டத்தில் எல்லோருக்கும் முன்பாக அங்கீகரிக்கப்பட்டு உதவிக்காரர்களாக நியமிக்கப்பட வேண்டும். இந்தக்கூட்டத்தில் உதவிக்காரர் பற்றிய பிரசங்கத்தோடு, மூப்பர்கள் கைவைத்து உதவிக்காரர்களுக்காக ஜெபம் செய்து அவர்களை உதவிக்காரர்களாக நியமிக்க வேண்டும். இந்நாளில் உதவிக்காரர்கள் சபை முன் உறுதிமொழி எடுத்துக் கொள்வதும் அவசியம். இந்தவிதமாக உதவிக்காரர்கள் தெளிவு செய்யப்பட்டு நியமிக்கப்பட வேண்டும்.
உதவிக்காரர்களின் பணி
உதவிக்காரர்கள் எத்தகைய பணிகளை செய்வதற்காக தெரிவு செய்யப்படுகிறார்கள் என்பதை நாம் ஆராய்வதும் அவசியம். இன்று பல சபைகளில் உதவிக்காரர்கள் போதகர்களைப் போல அதிகாரத்துடன் நடந்து கொள்கிறார்கள். போதகர்கள் மீது அதிகாரம் செய்யும் உதவிக்காரர்களும் பல சபைகளில் இருக்கிறார்கள். உதவிக்காரர்களின் தொல்லைகளினால் ஊழியம் செய்ய முடியாமல் துன்பப்பட்ட பல போதகர்களையும் நான் அறிவேன். இதற்கெல்லாம் காரணம் சபையில் உதவிக்காரர்களின் பணி என்ன என்பதும் அவர்களுக்கு உள்ள அதிகாரம் என்ன என்பதும் பலருக்குத் தெரியாததுதான். வேதத்தில் இதெல்லாம் தெளிவாக எழுதப்பட்டிருந்தபோதும் சபைள் வேதத்தை புறக்கணித்து உலகப்போக்கைப் பின்பற்றத் தொடங்கியதாலும், ஆத்மீகபலமிழந்து வாழத்தொடங்கியதாலும் உதவிக்காரர்கள் சபைகளில் போதகர்களை உதைப்பதுதான் தங்கள் வாழ்க்கையின் இலட்சியம் என்று வாழத்தொடங்கிவிட்டார்கள்.
உதவிக்காரர் என்ற வார்த்தைக்கு கிரேக்கத்தில் ஊழியக்காரன் (Servant) என்பது பொருள். அதாவது, சேவகன் என்று அர்த்தம். உதவிக்காரர்களின் பணி சபையாருக்கு சேவகம் செய்வதுதான். சேவகன் எங்கும் அதிகாரம் செய்கிறவனாக இருக்கமாட்டான். அதேபோல் உதவிக்காரர்கள் சபை அதிகாரிகளின் ஒருவராக இருந்தாலும் சபையை ஆளும் அதிகாரம் அவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை. அது போதகர்களுக்கு, அதாவது மூப்பர்களுக்கத்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. உதவிக்காரர்கள் போதகர்களின வழிகாட்டுதலின்படி சபை நிர்வாகக்காரியங்களை விசுவாசத்துடன் செய்வதற்காக நியமிக்கப்படுகிறார்கள். ஆகவே, உதவிக்காரர்கள் போதகர்களைப்போலவும், மூப்பர்களைப்போலவும் சபையில் நடந்து கொள்ளக்கூடாது. ஆதி சபையில் (அப்போஸ். 6) ஆரம்பத்தில் உதவிக்காரர்கள் நியமிக்கப்பட்டபோது அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணி பந்தி விசாரணை செய்வது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. அவர்களில் சிலர் பிரசங்கம் செய்யக்கூடிய வல்லமையை உடையவர்களாக இருந்தபோதும் அது அவர்களுடைய அதிமுக்கிய பணியாக இருக்கவில்லை. கருணைக்குரிய காரியங்களைச் செய்வதற்காகவே அவர்களை அப்போஸ்தலர்கள் நியமித்தார்கள். அதுவும் அப்போஸ்தலர்களின் மேற்பார்வையில் அவர்கள் அந்தக் காரியங்களை செய்யவேண்டியிருந்தது. போதகர்களுக்கும், உதவிக்காரர்களுக்கும் அப்படியொன்றும் வேறுபாடு இல்லை என்று சொல்பவர்களுக்கு வேதசத்தியமே தெரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
வேதத்தில் மூப்பர்களின் அதிகாரத்தைப் பற்றிப்பேசும் பின்வரும் வசனங்களை ஆராய்ந்து பாருங்கள். இது உதவிக்காரர்களுக்கு ஒருபோதும் பொருந்தாது. 1 தீமோத்தேயு 5:17 – “நன்றாய் விசாரனை செய்கிற (ஆளுகிற) மூப்பர்களை, விசேஷமாகத் திருவசனத்திலும், உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை, இரட்டிப்பான கனத்திற்குப்பாத்திரராக எண்ண வேண்டும்” என்று பவுல் கூறியிருக்கிறார். இவ்வசனத்தில் காணப்படும் விசாரணை என்ற வார்த்தை ஆங்கில வேதத்தில் Rule என்று மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. இவ்வார்த்தை மூப்பர்களுடைய பணியைக் குறிப்பதாகும். இதற்கு “ஆளுதல்” என்று பொருள். மூப்பர்கள் சபையை திருவசனத்தைப் பிரசங்கிப்பதன் மூலமும், மேய்ப்பதின் மூலமும் ஆள வேண்டிய கடமைப்பொறுப்பைக் கொண்டிருக்கிறார்கள். அப்பணி வேறு எவருக்கும் கொடுக்கப்படவில்லை. இவ்வசனம் மூப்பர்களில் அந்தப்பணியை சிறப்பாக செய்கிறவர்களுக்கு சபை இரண்டு மடங்கு உதவித்தொகை கொடுத்து ஊக்கப்படுத்த வேண்டும் என்று சொல்கிறது. ஆகவே, இவ்வசனத்தின்படி சபையை ஆளும் பொறுப்பு போதகர்களுக்கும், மூப்பர்களுக்குமே கொடுக்கப்பட்டிருக்கிறது, உதவிக்காரர்களுக்கல்ல. இதே வார்த்தையே 1 தீமோத்தேயு 3:4, 5லும் பயன்படுத்தப்பட்டுள்ளது. தன்னுடைய சொந்தக்குடும்பத்தை ஆள முடியாத ஒருவன் சபையை எப்படி ஆள முடியும் என்று எழுதப்பட்டிருப்பதை இந்த வசனங்களில் வாசிக்கிறோம். குடும்பத்தை ஆளுகிறவன் குடும்பத் தலைவனே. குடும்பத்தை ஆள்வதுபோல போதகன் சபையை ஆள வேண்டியவனாக இருக்கிறான்.
இன்னுமொரு வசனத்தையும் பார்ப்போம். எபிரேயர் 13:7 – “தேவ வசனத்தைப் போதித்து உங்களை நடத்தினவர்களை (ஆண்டவர்களை) நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப்பற்றுங்கள்” என்றிருக்கிறது. இங்கே “நடத்தினவர்கள்” என்றிருக்கும் வார்த்தை நான் ஏற்கனவே 1 தீமோத்தேயு 3லும், 5லும் பார்த்த அதே வார்த்தைதான். “ஆண்டவர்களை” என்று இது மொழி பெயர்க்கப்பட்டிருக்க வேண்டும். இதே வார்த்தைதான் மறுபடியும் எபிரேயர் 13:17லும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. “உங்களை நடத்தினவர்களை” என்று இவ்வசனத்தில் வாசிக்கிறோம். இதற்கும் உங்களை ஆளுகிறவர்கள் என்பதே அர்த்தம். உங்களை ஆளுகிறவர்களுக்கு நீங்கள் கீழ்ப்படியுங்கள் என்கிறார் எபிரேயர் நிருபத்தை எழுதியவர்.
இவ்வசனங்களின் மூலம் போதகர்கள், மூப்பர்களின் பணி சபையை ஆள்வது என்று அறிந்து கொள்ள முடிகின்றது. உதவிக்காரர்களுக்கு அந்தப்பணி கொடுக்கப்படவில்லை. உதவிக்காரர்களைப்பற்றி விளக்கம் கொடுக்கும் வேதப்பகுதிகள், அவர்கள் மூப்பர்களின் மேற்பார்வையிலேயே செயல்பட வேண்டும் என்பதைத் தெளிவாக விளக்குகின்றன.
இனி, உதவிக்காரர்களின் பணி என்ன என்று பார்ப்போம். பந்தி விசாரிப்பு என்று பொதுவாக அப்போஸ்தலர் நடபடிகள் 6ம் அதிகாரம் விளக்குகிறது. அதாவது, சபையின் தேவைகளைக் கவனித்து அவற்றை நிறைவேற்றி வைப்பது என்பதை இதன் மூலம் அறிந்து கொள்கிறோம், அதற்குள் சகலவிதமான வேலைகளும் அடங்கும். சபைக்கட்டட வேலைகளைக் கவனித்தல், அதை நிர்வாகித்தல், சபைப் பணவிஷயங்களை பொறுப்பாகக் கவனித்தல், போதகர்களின் தேவைகள் அனைத்தையும் பொறுப்போடு நிறைவேற்றுதல், சபையில் உதவி தேவைப்படுகிறவர்களின் தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றுதல், சுவிசேஷ ஊழியம், சபை அமைத்தல் போன்ற ஊழியங்களுக்குத் தேவையான சகல நிர்வாக உதவிகளையும் செய்து கொடத்தல் என்று இப்படிப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இவையனைத்தையும் உதவிக்காரர்கள் மூப்பர்களுடைய ஆலோசனைப்படியும், அவர்களுடைய வழி நடத்தலின்படியும் நிறைவேற்ற வேண்டும். உதவிக்காரர்கள், மூப்பர்களுக்க பதிலளிக்க வேண்டியவர்கள் என்பதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. ஆதி சபையில் அப்போஸ்தலர்கள் தாங்கள் செய்துவந்த நிர்வாக வேலைகளை உதவிக்காரர்கள் செய்யும்படிக் கொடுத்தபோதும் அவ்வேலைகளுக்கான பொறுப்பையும் அவர்களிடம் தாரைவார்த்துக் கொடுத்துவிடவில்லை. அப்போஸ்தலர்களே ஆதி சபையில் உதவிக்காரர்களின் மேலதிகாரிகளாக இருந்தனர். அதேபோல், சபையின் சகல ஊழியங்களக்கும் இன்று மூப்பர்களே பொறுப்பானவர்களாக இருப்பதால் (Responsible) உதவிக்காரர்கள் அவர்களுக்குக்கீழ் சபையில் சேவகர்களாக இருந்து கர்த்தரை மகிமைப்படுத்த வேண்டும்.