யோவான் தன்னுடைய நிருபத்தில் பின்வருமாறு எழுதியிரக்கிறார்: “உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள். உலகமும் அதன் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ நிலைத்திருப்பான்.”
விசுவாசி உலக இச்சைகளுக்கு தன்னைப் பலிகொடுத்து தன்னுடைய சாட்சியை இழந்துவிடக்கூடாது என்று உலக இச்சைகளின் ஆபத்தைப்பற்றி எச்சரித்து யோவான் எழுதிய வார்த்தைகள் இவை. இன்று இந்த வார்த்தைகளையெல்லாம் உதறித்தள்ளிவிட்டு உலக இச்சைகளை நாடிப்போய்க் கொண்டிருக்கிற திருச்சபை. உலகம் ஆசையாய் அனுபவிக்கின்றவற்றை நாமும் அனுபவிப்பதில் என்ன தவறு என்று கேட்டு உலகத்தை பிரதிபலிக்கும் இசையையும், ஆராதனை முறைகளையும், வியாபாரரீதியிலான ஊழிய முறைகளையும் சபைக்குள் நுழைத்து அழகு பார்க்கிறது சபை. உலகத்தைப் பின்பற்றி சபைகளிலும், ஊழியத்திலும் இன்று அநேகர் செய்துவரும் அட்டூழியங்கள் சொல்லி மாளாது.
சமீபத்தில் எனக்கு ஒருவர் தான் எழுதி இசையமைத்த பாடல்களின் பாட்டுக்கெசட்டை அனுப்பி வைக்கப்போவதாகக் கூறி பாடல் வரிகளை மட்டும் அனுப்பி வைத்திருந்தார். அதில் ஒரு பாடலின் வரிகள் இப்படி இருந்தது:
ஜிம்சக் ஜிம்ஜிம் ஜிம்சக் – (2)
தில்லானா பாட்டியத்தான் ஏசு நாதர் தேடுறார் – ஜிம்சக்
சீப்பான ஆளு வேணாம் வெய்ட்டா தான் கேக்குறார் – ஜிம்சக்
அறுவடைக்கு எஜமானர் ஆவியானவர் ஆளெடுத்தா
அப்பாயின்மன்ட் ஆடரோட ஒபன் டோர் உனக்கிருக்கு – ஜிம்சக்
இது ஒரு உதாரணம்தான். அதிலிருந்த அத்தனை பாடல்களும் இந்த வகையில்தான் இருந்தன. வாலியும், வைரமுத்துவும் கிறிஸ்தவ உலகில் இல்லாத குறையைத் தீர்க்கப் பாடுபட்டுக் கொண்டிருக்கும் கூட்டங்களின் சேவைதான் இத்தகைய பாடல்கள். உலக இச்சை பலரை எந்தளவுக்கு இன்று ஆக்கிரமித்திருக்கிறது என்பதற்கு இத்தகைய பாடல்கெசட்டுகள் நல்ல உதாரணம்.
உலக ஆசை இன்று இத்தோடு மட்டுமா நிற்கிறது. ஆராதனை, ஊழியம், சொந்த வாழ்க்கை என்று தமிழ் கிறிஸ்தவ உலகத்தில் அது ஆக்கிரமிக்காத இடமில்லை. போட்டியும், பொறாமையும், எரிச்சலும், குரோதமும், பெண்ணாசையும், மண்ணாசையும், பொருளாசையும் ஊழியக்காரர்களையும், கிறிஸ்தவர்களையும் இன்று மகுடி நாதத்தில் மயங்கி நிற்கும் நாகத்தைப் போல மயக்கி வைத்திருக்கின்றன.
உலக இச்சை எது? உலக ஆசையைத் துறந்து விசுவாச வாழ்க்கையை நாம் இந்த உலகத்தில் எப்படி வெற்றிகரமாக வாழ்வது? உலக இச்சைக்கு திருச்சபையில் இடம்கொடாமல் இருப்பதெப்படி? என்று அறிந்து கொள்வதற்கு வேதம் உலகத்தைப் பற்றியளிக்கும் பொதுவான போதனைகளையும், உலகத்தில் நாம் நியாயபூர்வமாக எதை, எப்படி அனுபவிக்க வேண்டும் என்பதையும் முதலில் தெரிந்து கொள்வது அவசியம்.
உலகத்தைப் பற்றிய வேத போதனை
“உலகம்” என்ற வார்த்தை வேதத்தில் பலவிதங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கர்த்தர் படைத்துள்ள, மனிதனும் ஏனைய ஜீவராசிகளும் வாழும் இடமாக அதை வேதத்தின் மூலம் அறிந்து கொள்கிறோம். உலகத்தைக் கர்த்தர் உருவாக்கினார் (ஆதி. 1:26-31). மனிதன் வாழவும் தன்னுடைய படைப்புகள் மேல் அவன் ஆதிக்கம் செலுத்தி அனுபவிக்கவும் கர்த்தர் உலகத்தைத் தோற்றுவித்தார் (ஆதி. 3). மனிதனோடு உலகமும் பாவத்தினால் கறைபடிந்து தன்னுடைய மீட்சியை எதிர்பார்த்து நிற்கின்றபோதும் (ரோமர் 8), அது தொடர்ந்து தேவனுடைய நித்திய வல்லமை, தேவத்துவம் என்பவைகளை உலக மக்களுக்குப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது (ரோமர் 1:20). பாவத்தால் கறைபடிந்த இந்த உலகத்தின் மூலம் கர்த்தர் தொடர்ந்து தன்னுடைய சித்தங்களை நிறைவேற்றி வருகிறார். இந்த உலகம் கர்த்தருக்கு சொந்தமானது என்றும், கர்த்தருடைய காரூண்யம் இந்த பூமியில் தொடர்ந்து நிறைந்திருக்கிறது எனுறும் சங்கீதக்காரன் சொல்லுகிறான் (சங். 89:11; 24:1; 33:4; 104). பாவத்தின் காரணமாக ஒரு காலத்தில் உலகம் அழியப்போகிற போதும் அந்தக்காலம் வருகிறவரை கர்த்தர் தொடர்ந்து தன்னுடைய மக்களை இந்த உலகத்திலிருந்து இரட்சித்து தனது மகிமைக்காக திருச்சபைகளை உருவாக்கி வருகிறார்.
அதேவேளை, இந்த உலகத்தில் வாழும் மக்களின் சிந்தனைப்போக்கையும், வாழ்க்கை முறையையும் குறிப்பதாகவும் “உலகம்” என்ற வார்த்தை வேதத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த உலகத்தின் தேவனாக சாத்தான் இருந்து வருகிறான் (யோவான் 12:21; 14:30). பிசாசான சாத்தான் தன்னுடைய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக இந்த உலகத்தையும், உலகத்து மக்களையும் பயன்படுத்திக் கொள்கிறான். சாத்தானின் பிடியில் இருக்கும் மக்கள் கர்த்தரின் வழிகளின்படி வாழாமல் பாவ சிந்தனைகளோடு பாவத்தைச் செய்துவருகிறார்கள். பாவத்தில் இருக்கும்வரை சாத்தானின் வழிகளின்படி இவர்களுடைய சிந்தனை அமைந்திருக்கும். இந்தப் பாவகரமான சிந்தனைப்போக்கைப் பின்பற்றும் மக்களைக் குறிக்கவும் “உலகம்” என்ற வார்த்தை வேதத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த விதத்திலேயே 1 யோவான் 2:15; யாக்கோபு 4:4; 1:27; கொலோசெயர் 2:20; 2:8; எபேசியர் 2:2; ரோமர் 12:2 ஆகிய பகுதிகளில் உலகம் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.
தேவன் நமது நன்மைக்காக அனைத்தையும் படைத்தார்
இந்த உலகத்தில் மனிதர்கள் அனுபவிப்பதற்காக கர்த்தர் ஜீவராசிகளையும், தாவர வகைகளையும் படைத்தார். அவற்றைக் கவனமாக பராமரித்து தன்னுடைய தேவைகளுக்காக மனிதன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது கர்த்தரின் கட்டளை. இவற்றைத் தவிர மனிதனுக்குத் துணையாக கர்த்தர் பெண்ணைப் படைத்தார். மனிதன் திருமண வாழ்க்கையில் ஈடுபட்டு தன் வம்சத்தை விருத்தி செய்து கொள்ளும்படி அவனைக் கர்த்தர் ஆசீர்வதித்தார். கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கின்ற இவை அனைத்தும் மனிதனுடைய பக்திவிருத்திக்கு பங்கமாக இருந்துவிடாது. இவற்றை அனுபவிக்கக்கூடாது என்று தடைசெய்பவர்களைப் பொய்யர்கள் என்று அழைத்து பவுல் கண்டித்து எழுதினார் (1 தீமோ. 1:1-4). கிறிஸ்தவ வரலாற்றில் கத்தோலிக்கர்கள் குருமார்களையும், கன்னியாஸ்திரிகளையும் தோற்றுவித்து அவர்கள் திருமண வாழ்க்கையில் ஈடுபடத் தடை செய்தனர். இதேபோல் அனாபாப்திஸ்துகளும் நடந்து வந்தனர். இவர்கள் வேதத்திற்கு முரணான போக்கைப் பின்பற்றினர். அனாபாப்திஸ்துகளும், அவர்களுக்கு முன்பு வரலாற்றில் காணப்பட்ட சபைத் தலைவர்களில் சிலரும் உலகம் தங்களுடைய பக்தி விருத்திக்குப் பங்கம் விளைவித்துவிடும் என்ற தவறான நம்பிக்கையால் காடுகளில் போய் மறைந்து வாழ்ந்தனர். சிலர் உயரமான தூண்களை நிறுவி, மனிதத்தொடர்பே வேண்டாம் என்று விலகிப்போய் அத்தூண்களில் ஏறி இருந்து வாழ்ந்தனர். பக்தியான வாழ்க்கைக்கு தம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்களே இடையூராக இருக்கிறார்கள் என்ற தவறான எண்ணத்தினால் இவர்கள் இவ்வாறு நடந்து கொண்டனர்.
கர்த்தர் படைத்திருக்கும் அனைத்தையும் நாம் ஜெபத்தோடு அனுபவிக்கலாம் என்று வேதம் போதிக்கிறது (1 தீமோ. 4:4). கர்த்தருடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்தாதவிதத்திலும், நாம் நியாயபூர்வமாக அனுபவிக்க வேண்டியவற்றின் மூலம் பாவத்தைச் செய்துவிடாமலும், பிறருடைய விசுவாசத்திற்கு பங்கம் ஏற்படுத்தாத விதத்திலும் கர்த்தர் படைத்திருக்கும் அனைத்தையும் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். உணவில் எதையும் கர்த்தர் தடை செய்யவில்லை (அப்போஸ். 11:1-10). ஆனால், அளவுக்கதிகமாக சாப்பிடுவது பாவம். ஏனெனில், அது நமது சரீரத்திற்கு தீங்கு விளைவிக்கும். பெருங்குடியனாக இருப்பது பாவம். ஏனெனில், அது நமது சரீரத்தையும் கெடுத்து, மற்றவர்களுடைய விசுவாசத்திற்கும் இடையூராக அமையும். பத்துக்கட்டளைகளில் ஒன்றான ஆறாம் கட்டளை நமது சரீரத்திற்கு நாம் எந்தத் தீங்கும் விளைவிக்கக்கூடாதென்று வலியுறுத்துகிறது. அத்தோடு, பிறருடைய விசுவாசத்திற்குப் பங்கம் வராமல் இருக்க வேண்டுமென்பதற்காக சிலைகளுக்கு படைக்கப்பட்ட உணவை நாம் அவர்கள் முன் அருந்தாமல் இருப்பது நல்லது என்கிறார் பவுல் (ரோமர் 14:14; 1 கொரி. 10:23-33). சிலைகளுக்கு படைக்கப்பட்ட உணவில் ஒருபோதும் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை. ஆனால், பலவீனமானவர்களுக்கு அந்த அறிவு இல்லை என்பதால் அவர்களுக்கு உதவ வேண்டும் என்று பவுல் அறிவுரை செய்கிறார். பவுலின் இந்தப் போதனையைத்தான் நாம் அனுபவிக்கும்படியாக கர்த்தர் அனுமதித்திருக்கின்ற அனைத்துக் காரியங்களிலும் பின்பற்ற வேண்டும். நமக்கு சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் அசட்டையாக வாழ்கின்ற கிறிஸ்தவர்கள் மிகவும் பலவீனமானவர்கள். அவர்கள் கிறிஸ்து தந்திருக்கும் சுதந்திரத்தை தங்களுடைய சுயநலத்துக்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். பவுல் சொல்கிறார்: “எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது, எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன்.” (கலா. 6:12). இதிலிருந்து அப்போஸ்தலனான பவுல் தன்னுடைய கிறிஸ்தவ சுதந்திரத்தை மற்றவர்களுக்கு பங்கம் வராதபடி தன் வாழ்வில் கவனத்தோடு அனுபவித்ததோடு, கர்த்தர் அனுமதித்திருந்த அனைத்தையும் சுத்தமான மனச்சாட்சியுடன் அனுபவித்திருந்தார் என்பதை அறிகிறோம்.
எது உலக இச்சை?
யோவான் “உலகத்தின் மீது அன்புகூராதிருங்கள்” என்று சொன்ன வார்த்தைகளுக்கு அர்த்தம் நாம் வாழ்கின்ற இந்த உலகத்தை நாம் வெறுக்க வேண்டுமென்பதல்ல. கர்த்தர் படைத்திருப்பவற்றை நாம் நியாயபூர்வமாக, சுதந்திரத்தோடு அனுபவிக்கும் உரிமைக்கும், உலகத்தின் மீது அன்பு கூறுவதற்கும் இடையில் பெரும் வேறுபாடுண்டு. யோவான் நமக்கு உலக இச்சைதான் (உலக ஆசை) இருக்கக்கூடாதென்று சொல்கிறார். இந்த உலக இச்சையை பவுல் மாம்சத்தின் இச்சையாக வர்ணிக்கிறார். இதையே வேதம் சாத்தானின் பிடியிலுள்ள இந்த உலக மக்களின் வாழ்க்கைத் தத்துவம் என்று விளக்குகிறது. பவுல் ரோமர் 12:2-ல் இதை “பிரபஞ்சத்துக்குரிய வேஷம்” என்று வர்ணிக்கிறார். இது விசுவாசிகள் போடக்கூடாத வேஷம்.
உலக இச்சை என்பது நம்முடைய சரீரத்தோடும், கண்களோடும், சித்தத்தோடும் சம்பந்தமுடையதென்று யோவான் விளக்குவதைப் பார்க்கிறோம். நம்முடைய சரீரத்தை பாவமான காரியங்களுக்கு உட்படுத்தும்போதும், நமது கண்கள் பாவமானவற்றைப் பார்த்து இரசிக்கின்றபோதும், நமது மனம் பாவமான எண்ணங்களைச் சுமந்து அவற்றை எண்ணி ஆனந்தமடைகின்றபோதும் நாம் உலக இச்சைக்குக் கட்டுப்பட்டிருக்கிறோம் என்று அர்த்தம். இதனால் தான் இத்தகைய மனப்போக்கும், செய்கைகளும் பிதாவிடமிருந்து வந்தவையல்ல என்கிறார் யோவான் (1 யோவான் 2:16). இந்த இச்சைகள் பாவத்தின் காரணமாக மனிதனுடைய மனதில் உருவெடுத்து, அவனுடைய சித்தத்தைப் பாதித்து, அவனுடைய சரீரத்தையும் பாவச்செயல்களுக்கு உட்படுத்துகின்றன. விசுவாசி இந்த சிந்தனைப் போக்கிற்கும், செயல்களுக்கும் தன்னை ஒப்புக்கொடுக்கக் கூடாதென்றாலும், பாவத்தின் எச்சங்களைத் தன்னில் கொண்டிருப்பதாலும், பாவ உலகில் வாழ்ந்து கொண்டிருப்பதாலும் அடிக்கடி பாவத்தின் தாக்குதலுக்கு உள்ளாகி அதனால் பாதிக்கப்படலாம். ஆனால், பாவத்தை எதிர்த்துப் போராடி வெற்றி கொள்வதே விசுவாச வாழ்க்கை என்று வேதம் விளக்குகிறது. ஆகவே, உலக ஆசைக்கு தன்னை ஒப்புக் கொடுக்காமல், அதை வெறுத்து, எதிர்த்துப் போராடி கர்த்தருக்குப் பிரியமான பரிசுத்த வாழ்க்கை வாழ வேண்டியது ஒவ்வொரு விசுவாசியினுடையதும் கடமை.
உலகத்தின் மீது அன்புகூர்ந்து அதன் வாழ்க்கைத் தத்துவத்திற்கு அடிமைப்பட்டு வாழ்கிறவர்கள் தேவ இராஜ்யத்தை அடைய மாட்டார்கள் என்கிறார் பவுல் (1 கொரி. 6:9, 10). அத்தகைய வாழ்க்கை முறையிலிருந்து விடுபட்டிருக்கிற விசுவாசிகள் அதற்கு மறுபடியும் தங்களை ஒப்புக்கொடுப்பது அநியாயம். உலக ஆசை பலவிதங்களில் விசுவாசியைப் பாதிக்கின்றது. அவனைக் கர்த்தருக்காக வாழவிடாமல் தடுக்கிறதாய் இருக்கிறது. பலவீனமான விசுவாசிகளின் மூலமும், போதகர்கள், ஊழியக்காரர்கள் மூலமும் திருச்சபைகளுக்குள்ளும் அது நுழைந்து விடுகிறுது. அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்பைத்தான் இன்று உலகத்தைப் பிரதிபலிக்கும் சபை ஆராதனை முறைகளிலும், வியாபார ரீதியிலான ஊழிய முறைகளிலும், பெண்ணாசையாலும், பொருளாசையாலும், மண்ணாசையாலும் விழுந்து போகிற ஊழியக்காரர்களிலும் தமிழ் கிறிஸ்தவ உலகில் பார்க்கிறோம்.
“உலக ஆசை நிலைக்காது; தேவனுடைய சித்தத்தின்படி வாழ்கிறவன் மட்டுமே நிலைத்திருப்பான்” என்கிறது வேதம்.
(வளரும்)