வேதத்தில் உலகம் என்ற வார்த்தை பலவிதங்களில் பயன்படுத்தப்பட்டிருப்பதையும், கர்த்தரால் படைக்கப்பட்டு, மனிதன் வாழ்வதற்காகவும், அனுபவிப்பதற்காகவும் கொடுக்கப்பட்டிருக்கிற உலகத்தில், ஆதாமின் பாவத்திற்குப் பிறகும் மனிதனுக்கு நன்மை பயக்கக்கூடிய காரியங்கள் உண்டு என்பதையும் கடந்த இதழின் மூலம் அறிந்து கொண்டோம். அத்தோடு உலகம் என்ற வார்த்தை வேறொரு விதத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பதையும் அறிந்து கொண்டோம். 1 யோவான் 2:15-ல் உலகத்தில் அன்பு கூறாதீர்கள் என்று யோவான் சொன்னபோது, நமக்கு உலக இச்சை இருக்கக்கூடாது என்ற பொருளில் சொன்னார். நாம் நியாயபூர்வமாக, நமது விசுவாசத்திற்கும், கர்த்தருடைய பெயருக்கும், பங்கம் ஏற்படாதவகையிலும், பத்துக் கட்டளைகளை மீறாமலும் இந்த உலகத்தில் கர்த்தர் தந்திருப்பவைகளை அனுபவிக்கும் உரிமை உண்டு. அதை மீறுவதே உலக இச்சையாகும்.
உலக இச்சையைப் பற்றி பவுலும் ரோமர் 12-ல் “பிரபஞ்சத்திற்குரிய வேஷம்” என்று வர்ணிக்கிறார். இந்த உலகம் பாவத்தால் கறைபடிந்திருக்கிறது. பாவத்தால் கறைபடிந்து காணப்படம் இந்த உலகை சாத்தான் தனது கைங்கரியங்களுக்காகத் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறான். பாவத்தில் இருக்கும் மனிதர்கள் இந்த உலகத்தில் இருப்பவற்றைத் தங்களுடைய பாவத்தால் பாவகாரியங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ளுகிறார்கள். மனிதன் பல ஆராய்ச்சிகளைச் செய்து பேசும் படத்தைக் கண்டுபிடித்தான். பல நல்ல காரியங்களுக்கு அதைப் பயன்படுத்தலாம். விஞ்ஞான அறிவு, ஆன்மீக அறிவு வளரக்கூடி அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால், பாவத்திற்கு அடிமையாக இருக்கும் மனிதனால் அதை நன்மையான காரியங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளும் சிந்தனை வராது. தன்னுடைய இச்சைகளைத் தணித்துக் கொள்ள அதை எப்படிப்பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற விதத்திலேயே அவனுடைய சிந்தனை இருக்கும். இதன் விளைவைத்தான் இன்று தமிழினத்தின் சினிமா மோகத்தில் பார்க்கிறோம். ஒரு நாட்டை ஆளும் அளவுக்கு தமிழனின் பாவ சிந்தனைகள் பேசும்படத்தைக் கொண்டு போயிருக்கிறது. இதுவே உலக இச்சை. இந்த இச்சை விசுவாசிக்கு இருக்கக்கூடாது என்றுதான் யோவானும், பவுலும் சொல்லுகிறார்கள். இந்த இச்சை மாம்சத்திற்குரியது, ஆசிக்குரியதல்ல.
உலக இச்சைக்கு தன் வாழ்வில் விசுவாசி இடம் கொடுக்கக்கூடாது. அப்படி இடம் கொடுக்கும்போத அவன் உலக மனிதனின் அடையாளங்களைத் தன்னில் கொண்டவனாக கர்த்தருக்கு விசுவாசமில்லாதவனாக நடந்து கொள்ள நேரிடும். இந்த ஆபத்தைத்தான் 1 யோவான் 2:15 எச்சரிக்கையாக வெளிப்படுத்துகிறது. கிறிஸ்துவை விசுவாசிக்கு முன்பு நாம் உலக இச்சையில் நம்மை மறந்து இருந்து வந்திருக்கின்றோம். அப்போது நமக்கு பிதாவில் எந்த அன்பும் இருக்கவில்லை. ஆனால், கிறிஸ்துவை விசுவாசித்த பின்பு நாம் கிறிஸ்துவுக்கு அடிமையாக மாறியிருக்கிறோம். பிதாவின் அன்பு நம்மில் இருக்கிறது. அதற்கு பங்கம் ஏற்படுத்தக் கூடிய உலக இச்சை நம்மில் இருக்கக்கூடாது. உலக இச்சை விசுவாச வாழ்க்கைக்கு எதிரி. கிறிஸ்துவுக்கு பரமவிரோதி.
பவுல் ரோமர் 12:2-ன் மூலம் உலக இச்சை பற்றி அருமையான விளக்கத்தைத் தந்திருக்கிறார். அந்த வசனத்தை முதலில் பார்ப்போம். “நீங்கள் பிரபஞ்சத்திற்குரிய வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும், பிரியமும், பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூமாகுங்கள்” என்கிறார் பவுல். இதன் அடிப்படையில் உலக இச்சையைக் குறித்து மூன்று உண்மைகளை நாம் விளங்கிக் கொள்ள முடியும்.
1. வேதத்தின் போதனைகளுக்கு விரோதமான முறையில் சிந்திப்பது உலக இச்சையாகும்.
இந்த உலகத்திற்குரிய வேஷத்தைப்போடாமல் இருப்பதற்கு முதலில் நாம் நம்முடைய மனதைக் காத்துக் கொள்ள வேண்டும் என்கிறார் பவுல். நமக்கு உலக இச்சை ஏற்படுவதற்கு உலகத்தில் இருக்கும் பொருட்கள் அல்ல மூல காரணம். நமக்குள் இருக்கும் பாவம் தான் காரணம். நமது இருதயத்தை நாம் காத்துக் கொள்ளாவிட்டால் அது பாவகரமான சிந்தனைகளுக்கு இடம் கொடுத்து உலகத்து பொருட்களைத் தன்னுடைய இச்சையைத் தணித்துக் கொள்ள பயன்படுத்திக் கொள்ளப்பார்க்கும். ஆகவேதான் பவுல் நமது மனதைக் காத்துக்கொள்ளும்படியாக நம்மை எச்சரிக்கிறார்.
நமது மனதில் பாவகரமான எண்ணங்களுக்கு இடம் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் வேதபூர்வமான சிந்தனைகளை நாம் எப்போதும் கொண்டிருப்பது அவசியம். வேதபூர்வமான சிந்தனைகளே நம்மைக் கர்த்தரின் வழியில் கொண்டு செல்லும். வேதத்திற்கு விரோதமான சிந்தனைகளும், வேதத்தில் காணப்படாத, வேதம்போதிக்காத எண்ணங்களும் நம்மை உலகத்தின் பாதையில்தான் வழிநடத்தும். உதாரணத்திற்கு கடந்த இதழில் நாம் பார்த்த அந்த “ஜிம்சக், ஜிம்சக்” பாட்டை நினைவுகூறுங்கள். பாட்டை எழுதிய மனிதனுக்கு அத்தகைய சிந்தனைகள் ஏற்படுவதற்குக் காரணமென்ன? சுத்தமான வேதசிந்தனைகளை அந்த மனிதன் தன்னுடைய இருதயத்தில் வளர்த்துக் கொள்ளாததுதான். இதற்காக அந்த மனிதனை நாம் கிறிஸ்தவரே அல்ல என்று சொல்லவரவில்லை. அவர் கிறிஸ்தவராக இருந்தால், வேதத்தின் தூய்மையான தேவ பக்திக்குரிய வழிபாட்டு முறைகளுக்கு தன்னுடைய இருதயத்தில் இடம் கொடுத்திருந்தால் இந்த வகையிலான டப்பாங்கூத்துப் பாடல்களுக்கும் கர்த்தருக்கும் தொடர்பு இல்லை என்பதை உணர்ந்திருப்பார். ஆனால், அதைச் செய்யத்தவறி தமிழனுக்கு இன்று சினிமா பார்த்துப் பார்த்து ஓ! போடப் பிடிக்கிறது என்பதால் அந்தவிதத்தில் பாட்டெழுத ஆரம்பித்திருக்கிறார் இந்த மனிதர். வேத சிந்தனையைக் கொண்டிருந்து அதன் அடிப்படையில் நாட்டு மக்களின் போக்கை ஆராய்ந்து, அந்தப் போக்கு தவறு என்று உணர்ந்து அதைத் திருத்தும் வழியைப் பார்க்காமல் அதேபோக்கில் போகப்பார்ப்பது உலக இச்சையைத் தவிற வேறில்லை.
வேதபூர்வமான சிந்தனைகளை இருதயத்தில் வளர்த்துக் கொள்ளாமல், அதன் அடிப்படையில் எதையும் ஆராய்ந்து பார்த்து வாழப்பழகாமல் விட்டதால்தான் லோத்தும், தேமாவும் இந்த உலக ஆசையால் மண்ணாய்ப் போனார்கள். தங்களுடைய குடும்பங்களுக்கும் அவர்களால் எந்த நன்மையும் வாய்க்கவில்லை. உலக ஆசையால் வீணாய்ப் போனவர்களை அடையாளங் கண்டு கொள்ள வேதத்தில் இன்னும் பல உதாரணங்களை நாம் பார்க்க முடியும்.
இன்றைக்கு பெந்தகொஸ்தே சபைகளிலும், நவீன சுவிசேஷ போக்கைப் பின்பற்றும் சபைகளிலும் சபை வழிபாட்டு வேளைகளில் பயன்படுத்தப்படும் இசைக்கருவிகளையும், பாடல்களில் வழி நடத்துபவர்களையும் எடுத்துக் கொள்ளுங்கள். சபை ஆராதனைவேளையில் இவைகளுக்கே இன்று முதலிடம் கொடுக்கப்படுகிறது. காது செவிடாகும் அளவுக்கு டிரம் அடித்தும், இலெக்டிரிக் கிட்டார் வாசித்தும் ஆத்துமாக்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் வேடிக்கை நிகழ்ச்சி ஆராதனை வேளையில் நடந்து வருவதை நாம் அறிவோம். இது பக்தியை எப்படிக் கிளறிவிடும் என்று ஒருவரும் வேதத்தைத் திறந்து ஆராய்வதில்லை. கர்த்தருக்கு இது பிடித்தமானதாக இருக்குமா என்று கேள்வி எழுப்புவதில்லை. தாவீது ஆடினான், இசைக்கருவிகள் வாசித்தான்என்று ஏதோ தாவீதுக்குப் பக்கத்தில் இருந்து பார்த்ததுபோல் விதண்டாவாதம் செய்வார்களே தவிர, தேவ பயத்துடன் ஆராதனை வேளையில் இசை எப்படி இருக்க வேண்டும் என்று சிந்தித்ததுப் பார்ப்பதில்லை. கையையும், கால்களையும் ஆட்டுவது எப்படி ஆராதனையாகும்? நமக்கு அது உற்சாகத்தைக் கொடுக்கலாம், இனிக்கலாம்; ஆனால், கர்த்தர் அதை அனுமதித்திருக்கிறாரா? என்ற சிந்தனையே ஒருவருக்கும் எழுவதில்லை. மனித சிந்தனைகளுக்கு இடம் கொடுத்து இருதயம் மரத்துப்போனால் கர்த்தரின் வேத சிந்தனைகளுக்கு அது இடம் கொடுக்க வாஞ்சையாய் இருக்காது.
வேத போதனைகளுக்கு விரோதமான முறையில் சிந்திக்காமல் இருக்க இரண்டு காரியங்களை ஒவ்வொரு விசுவாசியும் அவசியம் செய்ய வேண்டும். முதலில், வேத போதனைகளில் மேலான அறிவைப் பெற்றுக்கொண்டு நமது சிந்தனைகள் அதன்படி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். எகிப்து நாட்டின் தலைவனின் மனைவி தவறான உறவுகொள்ளத் தன்னை அழைத்தபோது, அந்த உறவு தவறு என்று வேத சிந்தனை ஆணித்தரமாக இருதயத்தில் இருந்ததால்தான் யோசேப்பு அங்கிருந்து உடனடியாக ஓட்டம் பிடித்தான். ஆணும், ஆணும், பெண்ணும் பெண்ணும் சரீர உறவு கொண்டு சேர்ந்து வாழ்வது தப்பில்லை என்ற இக்காலத்து சிந்தனைகளையும், எந்தப் பெண்ணோடும் திருமணத்திற்கு முன் சரீர உறவு வைத்துக் கொள்வது அப்படி ஒன்றும் பெரிய பாவமில்லை என்று எண்ணுகின்ற இக்காலத்து மனிதர்களுடைய சிந்தனைகளையும் அவன் கொண்டிருந்தால் அன்று உலக இச்சைக்கு அவன் பலியாகியிருப்பான். யோசேப்பின் இருதயத்தில் கர்த்தரின் கட்டளைகளைத் தவிர வேறு சிந்தனைகளுக்க இடமிருக்கவில்லை. இதுவும் சரி, அதுவும் சரி என்று வாதிடும் பிசாசுத்தனமான சிந்தனைகளுக்கு அவன் தன் வாழ்வில் இடம் கொடுக்கவில்லை. அவனுடைய இருதயம் கர்த்தரின் வேதத்தால் மட்டுமே நிரப்பப்பட்டிருந்தது.
இரண்டாவதாக, வேதவிரோதமான சிந்தனைகளுக்கும், வேதத்தால் அங்கீகரிக்கப்படாத எண்ணங்களுக்கும் நமது இருதயத்தில் இடம் கொடுக்கக் கூடாது. சாத்தான் நம்மைக் கெடுப்பதற்காக எதையும் செய்யப்பார்ப்பான். “வேதத்தில் அது பற்றி எதுவும் இல்லைதான். ஆனால், வேதம் எல்லாவற்றையும் பற்றி விளக்கங் கொடுக்கவில்லை. நாமே சில காரியங்களைப் பற்றி சொந்தமாகத் தீர்மானம் செய்து கொள்ள வேண்டும்” என்று அவன் நம்மோடு வாதாடுவான். உதாரணத்திற்க இன்று விசுவாசி, விசுவாசியில்லாதவர்களோடு திருமண உறவு வைத்துக்கொள்ளக்கூடாது என்பதில் அநேக கிறிஸ்தவர்களுக்கு சரியான ஞானமில்லாதிருக்கின்றது. அவள் விசுவாசி இல்லைதான். ஆனால், திருமணத்திற்குப் பிறகு எப்படியாவது கர்த்தரிடம் வந்துவிடுவாள் பாஸ்டர், என்று என்னிடமே சொன்னவர்கள் இருக்கிறார்கள். இதைத்தான் பிசாசின் சிந்தனை என்று வேதம் சொல்கிறது. இதுபற்றி வேதம் மிகத் தெளிவாகப் போதிக்கிறது. விசுவாசி, விசுவாசியை மட்டுமே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது கர்த்தரின் தெளிவான கட்டளை. ஒரே சத்தியத்தையும், எண்ணங்களையும் கொண்டிராதவர்கள் சேர்ந்து வாழ முடியாது. இருட்டும், ஒளியும் இணைந்திருக்க முடியாது. இதற்கு எதிராக வாதாடுகிறவர்களுடைய இருதயம் உலக இச்சைக்குப் பறிபோயிருக்கிறது என்றுதான் அர்த்தம்.
எந்த விஷயமாக இருந்தாலும், அதைப்பற்றி வேதம் என்ன சொல்கிறது? என்று ஆராய்ந்து அறிந்து கொள்ளுகிற மனப்பான்மையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். வேதவிரோத எண்ணங்களையும், வேதத்தால் அங்கீகரிக்கப்படாத சிந்தனைகளையும் நமது மனதில் நுழையவிடாமல் தடுக்க இதைத் தவிர வேறு வழியில்லை. வேதம் என்ன சொல்லுகிறது என்று அறிந்து கொள்வதில் அக்கறை இல்லாதவர்கள்தான் அசட்டையாக இருந்து தம்மை அறியாமலேயே உலக ஆசைக்குப் பலியாவார்கள். வேத ஞானம் வரண்டு போய்க்காணப்படும் தமிழினத்தில் உலக ஆசை உறுதியாய் பதிந்திருப்பதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. பெனிஹின், தினகரன், எசேக்கியா ஜோன்ஸ், சாம் ஜெபத்துரை என்று தனி மனிதர்களின் மோசமான போதனைகளுக்கு தங்களை ஒப்புக்கொடுத்து, அவர்களுடைய வலையில் இருந்து விடுபட முடியாமலும், சுயமாக சிந்திக்க முடியாமலும் அல்லாடிக்கொண்டிருக்க தமிழ் மக்களால் வேதவிரோதமான சிந்தனைகள் தங்களுடைய இருதயத்தில் நுழையாமல் இருப்பதைத் தடுக்க முடியாமலிருக்கிறது.
வேத அறிவு இருந்தால் மட்டுமே எவர் சொல்வதையும் கேட்டு ஆராய்ந்து தவறானவைகளைத் தவிர்த்துக் கொள்ள முடியும். ஆத்துமாக்கள் போலிப்பிரசங்கங்களைக் கேட்பதைத் தவிர்க்க வேண்டும். வேதம் போதிக்கப்படாத இடத்தில் காலடி எடுத்து வைக்கக்கூடாது. வாக்குத்தத்த வசனங்களைத் தந்து நம்மை ஏமாற்றப் பார்க்கும் மனிதர்களுடைய வலையில் வீழ்ந்து விடக்கூடாது. சமீபத்தில் நான் பார்த்த ஒரு கிறிஸ்தவ துண்டுப்பிரசுரத்தில், “கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார்” என்ற வாக்குத்தத்த வசனம் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த வசனத்தை நம்பிப் பத்துத்தடவைகள் திரும்பத் திரும்பச் சொன்னால், கர்த்தர் உன்னை நிச்சயம் ஆசீர்வதிப்பார் என்று அதில் எழுதப்பட்டிருந்தது. இது பயித்தியக்காரத்தனம் என்பது எத்தனை பேருக்குப் புரிகிறது. அந்த வசனத்தை எந்த சந்தர்ப்பத்தில் எதற்காக கர்த்தர் சொன்னார் என்று ஆராய்ந்து பார்க்காமல் மெஜிக் போலத் திரும்பத் திரும்ப சொல்லிப் பார்ப்பதால் எந்தவிதமான ஆசீர்வாதமும் ஒருவருக்கும் கிடைக்காது. இது தெரியாமல் அந்தத்துண்டுப்பிரசுரத்தை விநியோகிக்கும் மனிதனை நம்பி அவனுக்கு பணத்தையும் அனுப்பி வீணாய்ப் போகிற தமிழ் மக்கள் அநேகர். இது வேதம் தெரியாததால் வருகின்ற வினை.
வேதத்தால் அங்கீகரிக்கப்படாத சிந்தனைகளுக்கு நம்முடைய இருதயத்தில் இடம் கொடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும் அவசியம். அதாவது, வேதம் தெளிவாகப் போதிக்கின்றவற்றிற்கு எதிராகப் போகாமலிருப்பதம் அவசியம். அதேநேரம், வேதம் ஒரு காரியத்தைச் செய்யக்கூடாது என்று எங்கும்சொல்லவில்லை ஆகவே, அதைச் செய்தால் தப்பில்லை என்று சொல்லுகின்ற இருதயம் நமக்கிருக்காமலும் பார்த்துக் கொள்வது அவசியம். முதலாவதைச் செய்கிற பலர் இரண்டாவதில் கோட்டைவிட்டு விடுகிறார்கள். கர்த்தரைப் பொறுத்தவரையில் முதலாவதைப் போல இரண்டாவதும் மிக முக்கியமானது. ஒன்றை மட்டும் செய்துவிட்டு மற்றதை செய்யாமல் இருக்கப் பார்ப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும். உதாரணத்திற்கு, தனி ஊழியம் செய்யக் கூடாதென்று வேதத்தில் எங்கும் சொல்லப்படவில்லை என்று ஒருவர் வாதாடுகிறார் என்று பார்த்துக் கொள்வோம். அப்படி நேரடியாக எழுதி வைக்கப்பட்டிருக்காவிட்டாலும், சபை எப்படி, யாரால் நிறுவப்பட வேண்டும், அந்த ஊழியத்தை யார் செய்ய வேண்டும் என்று விளக்கமாகப் போதிக்கின்ற பகுதிகளை நாம் ஆராய்ந்து பார்த்தால் மட்டுமே தனி ஊழியம் செய்யப் புறப்படுவது பரதேசித்தனமானது என்ற உண்மை கரன்ட் அடித்ததுபோல் புலப்படும். ஆகவே, நாமே ஒன்று வேதத்தில் இல்லை என்று அலட்சியமாக முடிவெடுத்து ஆபத்தை விலைக்கு வாங்கிக் கொள்ளாமல் கர்த்தருக்கும் பிடிக்காததை செய்யப் பயப்படும் இருதயம் நமக்கிருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம்.
(அடுத்த இதழில் நிறைவு பெறும்)