இன்று மேலைத்தேசங்களிலும், கீழைத்தேசங்களிலும் கிறிஸ்தவர்கள் மத்தியில் ஒழுக்கக்குறைவு அதிகமாக காணப்படுவதை நாமெல்லோருமே அறிந்திருக்கிறோம். உலக இச்சை கிறிஸ்தவர்களுடைய வாழ்க்கையில் இன்று அதிகம் குடிகொண்டிருக்கிறது. இன்டர்நெட் மூலம் மனைவிக்குத் தெரியாமல் வேறு பெண்களோடு தொடர்பு கொண்டு பாலியல் இச்சைக்கு (Sexual perversion) தங்களை ஒப்புக்கொடுத்த ஊழியக்காரர்களைப் பற்றியும், தன்னினச்சேர்க்கைக்கு (Homosexuality) இடம்கொடுத்து ஒழுக்கத்தை இழந்த ஊழியக்காரர்கள் பற்றியும், பெண்ணாசையால் மனைவிக்குத் துரோகம் (Adultery) செய்த ஊழியக்கார்கள் பற்றியும் அடிக்கடி கேள்விப்படுகிறோம். கிறிஸ்தவ சபைகளும், நிறுவனங்களும் இன்று இத்தகைய அவலத்தைச் செய்பவர்களுக்குத் தாலாட்டுப்பாடிக் கொண்டிருக்கின்றன.
இத்தகைய ஒழுக்கக்கேடான செயலில் ஈடுபட்டு பிடிபட்ட ஊழியக்காரர்களை எப்படி நடத்துவது என்பதில் கிறிஸ்தவர்கள் மாறுபாடான எண்ணங்களைக் கொண்டிருப்பதை இன்று நாம் பார்க்கிறோம். குற்றம் செய்த ஒருவன் தன் பாவத்தை உணர்ந்து வருந்தி மன்னிப்புகேட்டால் அவனை நாம் மன்னிக்க வேண்டும் என்று சொல்லி ஒழுக்கத்தை இழந்துவிட்ட பல ஊழியக்காரர்களை இன்று மறுபடியும் ஊழியத்திற்கு அனுமதிக்கும் சபைகளையும், கிறிஸ்தவ நிறுவனங்களையும் பார்த்து வருகிறோம். இது தகுமா? இது முறையா? வேதம் இதை அனுமதிக்கிறதா? கோபத்தில் ஒருவரைத் திட்டிவிட்ட ஒரு ஆத்துமாவின் பாவமும், தன்னினச் சேர்க்கையில் ஈடுபட்ட அல்லது இன்னொரு பெண்ணோடு தொடர்பு வைத்து மனைவிக்குத் துரோகம் செய்தவர்களின் பாவமும் சமமானதா? அதில் வேறுபாடே இல்லையா? பாவங்கள் எல்லாம் பாவமாக இருந்தபோதும் எல்லாப் பாவங்களும் ஒரே தன்மையையும், ஒரே விதமான பாதிப்பையுமா ஆத்துமாக்களில் ஏற்படுத்துகின்றன போன்ற பல கேள்விகளுக்கு நாம் பதிலளிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
பாவத்தைப் பச்சைத்தண்ணீர் போல் குடித்துக் கொண்டிருக்கும் இன்றைய சமுதாயத்தின் கீழ்த்தரமான வாழ்க்கை முறையும், சிந்தனைப்போக்கும் கிறிஸ்தவர்களைப் பாதித்து, அவர்களைப் பாவத்தை அசட்டை செய்பவர்களாக மாற்றி இருப்பதை நம்மால் ஒத்துக்கொள்ளாமல் இருக்க முடியாது. பாவத்தின் பாவத்தை (Sinfulness of Sin) உணரும் சக்தியற்ற மரத்துப்போன மனதுள்ளவர்களாக அநேக கிறிஸ்தவர்கள் இருந்து வருவது இன்று கிறிஸ்தவத்தைப் பிடித்திருக்கும் பெரிய வியாதியாக இருக்கின்றது.
முதலில் பாவங்களைக்குறித்து வேதம் போதிக்கும் ஓர் உண்மையைப் பார்ப்போம். பாவங்கள் எல்லாமே பாவங்களாக இருந்தபோதும் சில பாவங்கள் மிகக் கொடூரமானவையும், அவற்றைச் செய்யும் ஆத்துமாக்களை அதிகம் பாதிப்பவையாகவும், அவற்றைச் செய்தவர்களைச் சுற்றி இருப்பவர்களையும் பாதிக்கின்றனவையாயும் இருக்கின்றன என்பது வேத்தின் போதனை. மனைவிக்குத் துரோகம் செய்து வேறு பெண்களோடு தொடர்பு வைப்பதையும், தன்னினச் சேர்க்கையில் ஈடுபடுவதையும் ஒருவரைக் கோபத்தில் நாம் திட்டி விடுகிறதற்கு சமமாகக் கருதுவது சாத்தானின் சிந்தனை. இவை இரண்டையும் கொடூரமான பாவங்களின் வரிசையிலேயே வேதம் சேர்க்கிறது. இத்தகைய பாவங்களைத் தொடர்ந்து செய்துவருகிறவர்கள் தேவ ராஜ்யத்தை அடையமாட்டார்கள் என்று வேதம் போதிக்கிறது. இதற்காக இந்தப்பாவங்களைச் செய்த விசுவாசிகள் மனந்திரும்பும்போது அவர்களை நாம் மன்னிக்கக்கூடாது என்று நான் சொல்ல வரவில்லை. மனந்திரும்புதல் உண்மையானதாக இருந்தால் மன்னிக்கத்தான் வேண்டும். ஆனால் அவனுடைய மனந்திரும்புதல் உண்மையானதா, மனந்திரும்பியவனை மன்னிப்பது எப்படி, என்பவற்றை அறிந்து கொள்ள சபை எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பதுதான் இன்று அநேகருக்கு விளங்காமல் இருக்கிறது. ஆகவே, இத்தகைய பாவங்களைச் செய்து பிடிபட்டவர்களை சபை என்ன செய்ய வேண்டும் என்று வேதம் விளக்குகின்ற உண்மைகளை நாம் ஆராய்வது அவசியம்.
முதல் கட்டம்:
இந்தக் கொடூரமான பாவங்களைச் செய்தவர்கள் பிடிப்பட்டவுடன் சபை செய்ய வேண்டிய முதல் காரியம் அவர்களோடு பேசிப்பார்த்தபின், அந்த மனிதனில் மனந்திரும்புதல் இருக்கின்றதோ இல்லையோ அதை சபைக்குத் தெரிவிக்க வேண்டும். இதை அநேக சபைகள் செய்வதில்லை. இந்தப் பாவங்கள் சாதாரணமான பாவங்களாக இல்லாமல் அதைச் செய்தவர்களையும், சபையையும், சுற்றி இருப்பவர்களையும் பாதித்திருப்பதால் சபைக்குத் தெரியாமல் அதை மறைக்கப் பார்ப்பது திருடனோடு சேர்ந்து போலிஸ்காரர்களும் திருடுவதற்கு ஒப்பானதாகும். சபை அதிகாரிகள் சபைக்குக் கட்டுப்பட்டவர்களாக இருப்பதால் இந்தக்காரியத்தை சபைக்குமுன் அவர்கள் கொண்டுவராவிட்டால் தங்களுடைய அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியவர்களாவார்கள்.
இந்த விஷயத்தை ஏன் சபைக்கு அறிவிக்க வேண்டும் என்பதற்கு இன்னுமொரு காரணமுண்டு. எவருமே இத்தகைய கொடூரமான பாவங்களை சிந்திக்காமலும், பல காலங்கள் அதில் ஏற்கனவே ஈடுபடாமலுமிருந்து (Premeditated) செய்வதில்லை. தாவீது பெத்சீபாவுடன் ஒழுக்கக்கேடாக நடப்பதற்கு முன் கெட்ட சிந்தனைகளை தன் மனத்தில் பல காலம் வளர்த்துக்கொண்டு மறைமுகமாக பெத்சீபாவின் நடவடிக்கைகளை கவனித்து வந்திருந்ததோடு அவளோடு தொடர்பு கொள்ள சரியான வேளையையும் எதிர்பார்த்து இருந்திருக்கிறான். அதுபோலத்தான் இந்தப்பாவங்களைச் செய்தவர்களும் பல காலம் யாருக்கும் தெரியாமல் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து பாவத்தில் ஈடுபட்டு வந்திருப்பார்கள். அது அவர்களுடைய சரீரத்திலும், இருதயத்திலும் ஆழமாகப் பதிந்து ஊறிப்போயிருக்கும். அவை உடனடியாக இலகுவாகப் போய்விடாது. என் சரீரத்தில் ஒருபகுதியில் இருந்த கட்டியை கடந்த மாதம் அறுவைச்சிகிச்சை மூலம் அகற்ற நேரிட்டது. அது எத்தனையோ மாதங்கள் எனக்கே தெரியாமல் உள்ளே வளர்ந்து கொஞ்சம் பெரிதாகி வெளியில் தெரிய ஆரம்பித்த பின்னால்தான் டாக்டரிடம் ஓடினேன். அது போலத்தான் இந்தப் பாவங்களைச் செய்கிறவர்களும் வெளியில் தெரியாமல் அதில் ஈடுபட்டு வந்திருப்பார்கள். பிடிபட்டவுடன் அவர்கள் அழுவது, தாம் பிடிபட்டுவிட்டோமே என்ற வெட்கத்தாலும் பயத்தாலும்தான். அது மனந்திரும்புதலுக்கான அடையாளமல்ல. அதனால்தான் சபைக்கு அதுபற்றி அறிவித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டிய அறுவை சிகிச்சை அவசியமாகிறது. வெறும் கைப்புண்ணுக்கு பிளாஸ்டர் போட்டு காயத்தை ஆற்றிக் கொள்ளலாம். வயிற்றில் வளரும் கட்டிக்கு பிளாஸ்டர் போட்டு ஆற்றிக் கொள்ள முடியுமா? அதற்கு அறுவை சிகிச்சை தேவை. ஆகவே, சபை அதிகாரிகள் இந்த விஷயத்தை ஒருவருக்கும் தெரியாமல் மறைத்துவிடப்பார்க்காமல் சபைக்கு (அங்கத்தவர்களுக்கு மட்டும்) முதலில் அறிவிக்க வேண்டும்.
சிலர் மத்தேயு 16-ன் படி இது சபைக்குத்தெரியாமல் சம்பந்தப்பட்டவர்களுக்கிடையில் தீர்த்துக்கொள்ளப்பட வேண்டிய பிரச்சனை என்று வேதம் தெரியாமல் பேசுவார்கள். மத்தேயு 16-ல் இரண்டு விசுவாசிகளுக்கு மத்தியில் நடந்த பிரச்சனை ஏனையோரைப் பாதிக்கவில்லை. அது இரண்டு பேர் மட்டுமே சம்பந்தப்பட்ட பிரச்சனையாக இருந்ததால் வேறு யாருக்கும் ஆரம்பத்தில் தெரிய வேண்டிய அவசியமிருக்கவில்லை. இங்கே நாம் பார்க்கின்ற கொடூரமான பாவங்கள் பலரையும் பாதித்திருக்கின்றன. இந்தப் பாவங்களைச் செய்தவர்களின் குடும்பமும் மனைவி, பிள்ளைகளைளும், சபை மக்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகவே, இது சபையின் முன் உடனடியாகக் கொண்டு வரப்பட வேண்டிய பிரச்சனையாக இருக்கின்றது. சபை குழம்பிவிடக் கூடாது என்று சில சபைகள் இதைச் செய்வதற்குத் தயக்கம் காட்டலாம். அது கர்த்தருக்கு எதிரான செயல். சபையை வளர்ப்பதற்கு உதவும் செயலல்ல.
இரண்டாம் கட்டம்:
சபைக்கு அறிவித்தபின் இந்தப்பாவங்களைச் செய்தவர்களில் மனந்திரும்புதலுக்கான எந்தவித அடையாளமும் இல்லாதிருந்தால் அவர்கள் உடனடியாக சபையில் இருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும் (Excommunication). இதற்குக் குறைந்த எதையும் செய்வது தகாது. செய்யவும் நமக்கு வேதம் அனுமதி தரவில்லை. மத்தேயு 16 இதையே இறுதி நடவடிக்கையாகக் காட்டுகிறது. அத்தோடு 1 கொரிந்தியர் 5:5ம் இதையே செய்யும்படி வலியுறுத்துகிறது. இதை சபை செய்ய வேண்டிய காரியமாக 2 கொரிந்தியர் 2:6ல் வாசிக்கிறோம். இந்த ஒழுங்கு நடவடிக்கை மூலம் மோசமான (பெண்களோடு தவறான தொடர்பு, தன்னினச் சேர்க்கை, வேத விரோதக் கொள்கைகளைக் கொண்டிருத்தல்) பாவங்களைச் செய்தவர்கள், அவர்கள் மெய்யான விசுவாசிகளாக இருந்தால் மனந்திரும்புவதற்கு வாய்ப்பை அளிக்கிறோம். இது கர்த்தர் ஏற்படுத்தியிருக்கும் வழி. இன்றைய சமுதாயத்தில் சிக்மன்ட் புரொடின் (Sigmund Freud) உளவியல் தத்துவங்கள் பரவியிருப்பதால் ஒருவன் மனந்திரும்புவதற்கு இத்தகைய நடவடிக்கைகள் சரியான வழியல்ல என்று பலர் தவறாக நம்புகிறார்கள். நமக்கு ஆத்மீக வழிகாட்டுவது வேதமே தவிர சிக்மன்ட் புரொயிடோ உலகப்பிரமானமான உளவியலோ அல்ல.
அதேநேரம் பாவம் செய்த விசுவாசியின் நடவடிக்கைகளோ அல்லது அறிக்கையோ நம்பக்கூடியதாக இல்லாமலிருக்குமானால் சபை அந்த விசுவாசியின் அங்கத்துவ சிறப்புரிமைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் (திருவிருந்தில் பங்கு கொள்ளுதல், அங்கத்துவக் கூட்டங்களில் கலந்து கொள்ளுதல் போன்றவையே அவை). அதே நேரம் இத்தகைய பாவங்களைச் செய்த மனிதன் மூப்பராகவோ, போதகராகவோ, உதவியாளராகவோ அல்லது ஏதாவது கிறிஸ்தவ ஊழியத்தைச் செய்பவராகவோ, சபையில் போதனை செய்பவராகவோ இருந்தால் நாம் ஏற்கனவே பார்த்ததுபோல் அந்தப் பொறுப்புக்களில் இருந்து அந்த மனிதர் எல்லோருடைய நன்மைக்காகவும் உடனடியாக நீக்கி வைக்கப்பட வேண்டும்.
மோசமான பாவத்தை செய்து பிடிபட்டவர்களில் ஆரம்பகட்டமான மெய்யான மனந்திரும்புதலுக்கான அடையாளங்கள் தென்பட்டால், அவர்கள் சபை முன் தங்களுடைய பாவங்களுக்கான வருந்தி மன்னிப்புக் கேட்டு, தங்களைத் திருத்துவதற்கு சபை கொண்டுவரும் ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு கட்டுப்படுவதாக அறிக்கையிட வேண்டும். குடும்பத்தையும், சபையையும் பாதித்து இந்தப்பாவத்தை விசுவாசி செய்திருப்பதால் மெய்யான மனந்திரும்புதல் ஏற்பட்டிருக்கிறதா என்று பார்க்கவும், விசுவாசி திருந்தி வாழவும், சபை நம்பிக்கையோடு சகல உதவிகளையும் செய்வதற்கும் இது அவசியம். அதேநேரம் இவர்கள் ஊழியக்காரர்களாக இருந்தால் அந்தப் பொறுப்புகளில் இருந்து உடனடியாக அகற்றப்படவேண்டும். மனந்திருந்தியதற்கான அடையாளங்கள் இருந்தபோதும் பொறுப்பான ஊழியங்களில் தொடர்ந்து ஈடுபடுவதற்கு இவர்களுக்கு தகுதியில்லை. 1 தீமோத்தேயுவும், தீத்துவும் ஊழியக்காரர்களுக்கான இலக்கணங்களை விபரிக்கும்போது அவர்கள் பிறரால் குற்றம் சாட்டப்படாதவர்களாகவும், மனைவிக்குத் துரோகம் செய்யாதவர்களாகவும், குடும்பத்தை நன்றாக நடத்துபவர்களாகவும் இருக்க வேண்டும் என்று போதிக்கின்றன. இந்தப் பாவங்களைச் செய்தவர்கள் மனந்திரும்பி குடும்ப வாழ்க்கையில் சீர்பெற்றாலும், மீண்டும் சபையில் தொடர்ந்து திருந்திய அங்கத்தவர்களாக வாழ்ந்தாலும், அவர்களுக்கு பாலியல் உறவில் பலவீனம் இருப்பதால் ஆத்துமாக்களோடு தொடர்பு கொண்டு அவர்களை வழி நடத்த வேண்டிய மகிமையுள்ள ஊழியத்தை அவர்களுக்குக் கொடுப்பது தகாது. இதை வேதம் கடுமையாக நிராகரிக்கிறது. ஒருவன் மனந்திருந்தி விட்டாலும் மறுபடியும் அந்தப் பாவத்தைத் தொடர்ந்து செய்ய மாட்டான் என்பது நிச்சயமில்லை. மனந்திருந்திவிட்டாலும் அந்த விசுவாசிக்கு எதில் பலவீனமிருக்கிறதோ அதன் பக்கம் தலை காட்டாமல் இருப்பதால் மட்டுமே அவன் திருத்தமான வாழ்க்கையை வாழ முடியும். தாவீதை உதாரணம் காட்டி சிலர் அப்படிச் செய்ய வேண்டிய அவசியமில்லை என்பார்கள். தாவீதின் உதாரணத்தை இங்கு பயன்படுத்துவது முறையல்ல. தாவீது தன் பாவத்தின் காரணமாக அனுபவித்த சிட்சைகளை இவர்கள் எண்ணிப்பார்க்க மறந்து விடுகிறார்கள். அவன் பல காலம் அரச பதவியை இழந்து மக்கள் இகழக்கூடிய வாழ்க்கை வாழ்ந்ததையும், வாழ்நாள் பூராவும் அமைதியில்லாமல் போரில் ஈடுபட வேண்டியிருந்ததையும் மறந்துவிடுகிறார்கள். பாவத்தின் காரணமாகப் பிறந்த அவனுடைய குழந்தையும் இறந்தது.
இதுபற்றி பெரும் பிரசங்கியான ஸ்பர்ஜன் பின்வருமாறு சொல்லுகிறார், “மோசமான பாவங்களைச் செய்த ஊழியக்காரர்களைப் பற்றி நான் கடுமையான எண்ணங்களைக் கொண்டிருக்கிறேன். அவர்கள் மனந்திருந்தி சபைக்குள் மறுபடியும் ஏற்றுக்கொள்ளப்படுவார்களானால் அதற்காக நான் மிகவும் ஆனந்தமடைவேன். ஆனால், மோசமான பாவங்களைச் செய்த அத்தகைய மனிதர்கள் மறுபடியும் பிரசங்க மேடைக்கு பிரசங்கிக்கப்போவதை நான் மிகவும் எதிர்க்கிறேன். வெளிப்படையான ஓழுக்கக்கேடான நடத்தையுள்ள மனிதன் மெய்யாகவே ஆழமான மனந்திரும்புதலைக் கொண்டிருந்தாலும் அந்த மனிதனுடைய வாழ்க்கையில் ஊழியத்திற்கு இனி இடமில்லை. ஊழியத்திற்கு வருகிறவர்களைப் பற்றி எந்தவிதமான ஒழுக்கக்கேடு சம்பந்தமான குற்றாச்சாட்டுகளும் இருக்கக்கூடாது.” இது மகா பிரசங்கியான ஸ்பர்ஜன் சொன்னது. இதன் அடிப்படையிலே சமகாலத்துப் போதகரான ஜோன் ஆர்ம்ஸ்ம்ரோங் (John Armstrong, USA) ஒரு நூலை எழுதியிருக்கிறார். அந்த நூலில் மோசமான பாவங்களைச் செய்தவர்கள், எத்தனை தூரம் மனந்திருந்தினாலும் ஏன், ஊழியத்தில் தொடர்ந்தும் இருக்கக்கூடாது என்பதற்கான ஒன்பது காரணங்களைச் சுட்டிக் காட்டுகிறார். அத்தோடு, ஆம்ஸ்ட்ரோங், “பாலியல் ஒழுக்கக்கேடான வாழ்க்கை வாழ்ந்து அகப்பட்டுத் திருந்திய போதகர்களை மறுபடியும் ஊழியத்துக்கு அழைப்பது என்ற தற்கால வழக்கத்தை கிறிஸ்தவ வரலாற்றிலேயே காணமுடியாது” என்றும் கூறுகிறார்.
மூன்றாம் கட்டம்:
கேடான பாவத்தைச் செய்த ஊழியக்காரர் தனது மனந்திரும்புதலுக்கு அடையாளமான நடவடிக்கைகளோடு, சபைமுன் பாவ அறிக்கையும் கொடுத்துவிட்டார் என்று வைத்துக்கொள்வோம். அந்த மனந்திரும்புதல் வேதம் போதிப்பதுபோல் மெய்யானதாக இருக்கவும், அவர் திருந்தி வாழவும் தேவையான உதவிகளை சபை செய்ய வேண்டியது அவசியம். அது ஒரு வாரத்திலோ, ஒரு வருடத்திலோ நடந்து விடுகிற காரியமில்லை. பாவம் செய்து திருந்தியவரைத்தவிர சபையும் அந்த மனிதரின் குடும்பமும், நண்பர்களும் கூட இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரோடும் மீண்டும் சரியான உறவை ஏற்படுத்தி நல்வாழ்வு வாழ்வதென்பது எக்ஸ்பிரஸ் வேகத்தில் நடந்துவிடுகிற ஒரு காரியமல்ல. இதற்கெல்லாம் உதவுமுகமாக சபை அவருக்கு கைகொடுத்து ஜெபிக்கவும், வழிநடத்தவும் வேண்டும்.
பாலியல் பாவங்களைச் செய்த விசுவாசிகளுக்கு அதற்குப் பிறகும் சோதனைகள் ஏற்படலாம். அவர்கள் நல்ல சிந்தனைகளைக் கொண்டிருக்கவும், ஒழுக்கமான வாழ்க்கை வாழவும் அதிக பிரயாசை எடுக்க வேண்டியது அவசியம். இரகசியமாக ஒருவருக்கும் தெரியாமல் இருதயத்தில் ஊறிப்போயிருக்கும் பாவ சிந்தனைகளையும், பாவத்தை நாடிப்போகும் இருதயத்தையும் கட்டிப்போடுவதென்பது இலேசான காரியமல்ல. தன்னினச் சேர்க்கையில் ஈடுபட்டு அழிந்தவர்கள் தனிமையில் ஒருபோதும் இன்னொருவரோடு காலத்தைச் செலவழிப்பதைத் தவிர்க்க வேண்டும். பெண்களோடு ஒழுக்கக் கேடான செயல்களில் ஈடுபட்டவர்கள் பெண்களோடு சகஜமாக பழகுவதையும், தனிமையில் அவர்களோடு இருப்பதையும் எக்காலத்துக்கும் தவிர்க்க வேண்டும். மன்னிப்புக் கேட்டுவிட்டால் மட்டும் போதும், பாவம் தன்னால் காற்றில் பறந்து போய்விடும் என்று கனவு காண்கிறவர்களே இன்று விழுந்துபோன பலர் தொடர்ந்து அந்தப் பாவங்களைச் செய்வதற்குக் காரணமாக இருந்துவிடுகின்றார்கள். இதனால்தான், ஜிம்மி சுவகர்ட்டும், ஜிம் பேக்கரும் இன்று மறுபடியும் ஊழியத்துக்கு கல்லான இருதயத்தோடு திரும்பவும் வந்திருக்கிறார்கள். பாலியல் பாவங்களைச் செய்தவர்களுக்கு அவற்றை விட்டுவிடுவது என்பது இலகுவான காரியமல்ல. அதனால்தான் சபை, முறையான ஒழுங்கு நடவடிக்கைகளை எடுத்து திருந்துவதற்கான அடையாளங்களைக் கொண்டிருப்பவர்களுக்கு தொடர்ந்தும் ஊழியத்தைக் கொடுத்துக் கெடுத்துவிடாமல் அவர்கள் திருத்தமான வாழ்க்கை நடத்துமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஜோன் ஆம்ஸ்ட்ரோங் (John Armstrong) சொல்லுகிறார், “கிறிஸ்து தன் சபையின்மேல் வைத்திருக்கும் அன்பையே பாவம் எப்போதும் தாக்குகிறது. கிறிஸ்து தன் சபைக்குக் கணவனாக இருந்து போஷிப்பதுபோல ஒவ்வொரு கணவனும் தன் மனைவியைப் போஷித்துப் பாதுகாக்க வேண்டும். கிறிஸ்துவின் உதாரணத்தைத் தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்காமல் அதைத் துச்சமாக எண்ணிக் காலில் போட்டு மிதிப்பவர்களை சபை நடத்த அனுமதித்தால், சபை தன் கணவனாகிய கிறிஸ்து மேல் அன்புகாட்டி, அவருக்கு விசுவாசமாக பரிசுத்தத்தோடு இருக்க வேண்டும் என்று நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்?.” ரொபட் மரே மெக்செயின் (Robert Murray M’Cheyne), என்ற ஸ்கொட்லாந்துப் போதகர், “சபை மக்களின் முதன்மையான தேவை அவர்களுடைய போதகரின் வாழ்க்கையில் காணப்படும் அதி உயர்ந்த ஒழுக்கமும் பக்தியும்தான்” என்று கூறியிருக்கிறார். ஆகவே, ஊழியர்களின் ஒழுக்கத்தைக் குறித்த விஷயத்தில் சபை ஒருபோதும் அசட்டையாக இருக்க முடியாது.