ஊழியம் குடும்பச் சொத்தாகலாமா?

தமிழகத்திலும், தமிழகத்திற்கு வெளியிலுள்ள தமிழ் பேசும் மக்கள் வாழும் நாடுகளிலும் காணப்படும் கிறிஸ்தவ சபைகளிலும், ஊழியங்களிலும் பல காலமாக போதக ஊழியத்திற்கும், ஏனைய ஊழியங்களுக்கும் வருகின்றவர்கள் பெரும்பாலும் ஏற்கனவே அந்த ஊழியங்களில் இருப்பவர்களின் குடும்ப அங்கத்தினர்களாக இருந்துவருவதைக் காணலாம். நேருவுக்குப் பின் அவர் மகள் இந்திரா பிரதமராகியதும், அவருக்குப்பின் ராஜிவ் காந்தியும், இனி சோனியாவோ அல்லது ராகூலோ, பிரியங்காவோகூட பிரதமராகிவிடலாம் என்ற குடும்பப்பாரம்பரிய அரசியல் இந்தியாவில் பின்பற்றப்பட்டு வருவதைப் பார்க்கலாம். தமிழ் இனத்தில் குடும்பப்பாரம்பரிய தலைமை முறை ஆதியில் இருந்தே இருந்துவந்திருக்கின்றது. நாடான்ற தமிழரசர்கள் தங்கள் பிள்ளைகளை அரசர்களாக்கிப்பார்த்து மகிழ்ந்திருக்கிறார்கள். சாதிக்கொடுமை நிறைந்த நம்மினத்தில் குலவழக்கத்தைப் பின்பற்றி தொழில்கள் செய்து வரும் முறை இன்றும் இருந்துவருகின்றது. பிராமணனின் மகன் குலத்தொழிலைத் தொடர்ந்து பின்பற்றுவதும், கோவில் பூசாரியின் மகன் அதே தொழிலைத் தொடர்வதும், சக்கிலியனின் மகன் அவனுடைய குலத் தொழிலைச் செய்வதும் தமிழினத்தின் பாரம்பரிய குலவழக்கத் தொழில் முறை அமைப்பு. இது கர்த்தர் ஏற்படுத்திய வழிமுறையல்ல, மனிதன் தன் சுயநலத்தின் காரணமாக ஏனையோரை சுரண்‍‍டிப் பிழைப்பதற்காக ஏற்படுத்திக் கொண்டுள்ள தவறான வழிமுறை. இது சிறுபான்மையினரான ஓரினம் ஏனை இனங்களை ஆண்டுப் பிழைப்பதற்கு சமுதாயத்தில் வழிவகுத்து இன்றும் பல இனங்கள் தாழ்வான நிலையில், தாழ்வுமனப்பான்மையோடு தொடர்ந்தும் வாழ்ந்துவர வேண்டிய நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்தக் குலத்தொழில்முறை சமுதாயத்தில் ஒரு சில இனங்கள் தங்களுடைய அதிகாரத்தையும், பணபலத்தையும், ஆதிக்கத்தையும் தொடர்ந்து நிலைநாட்டிக் கொள்வதற்கும் வழிவகுக்கிறது.

இது தமிழினத்தில் நாம் தொடர்ந்து பார்த்தவரும் ஓர் சமுதாய இழுக்கு, தீங்கு. இது எப்படி கிறிஸ்தவ சபைகளுக்குள்ளும், ஊழியங்களுக்கும் நுழைந்திருக்கிறது என்பதைத்தான் நாம் ஆராய வேண்டியவர்களாக இருக்கிறோம். இன்று தமிழ் நாட்டில் சுகம் தீர்க்கும் ஊழியம் செய்து வரும் ஒரு பிரபலமான மனிதரின் மகன், மனைவி, மகள், பேரப்பிள்ளைகள் மற்றும் குடும்ப அங்கத்தவர்கள் எல்லோரும் வரிசைக்கிரமமாக அந்த ஊழியத்தில் ஈடுபட்டு ஊழிய வர்த்தகத்தை நடத்தி வருகிறார்கள். இது பலரும் அறிந்த குடும்பவாரிசு ஊழியமுறை. ‍அதேநேரம் நம் கண்களுக்குத் தெரியாமல் சபை சபையாகவும், சபைக்கு வெளியிலும் ஊழியங்களில் இந்த முறை நிர்த்தாட்சன்யமாக பின்பற்றப்பட்டு வருகின்றத. சமீபத்தில் ஒரு போதகர் தன்னுடைய பதினைந்து வயது மகனை இறையியல் கல்லூரிக்கு அனுப்பத் தீர்மானித்தார். ஏனெனில், மகனும் தன்னைப்போல போதக ஊழியத்தில் நுழைந்து குடும்ப வழக்கத்தைப் பின்பற்றி தனக்குப்பின்னால் சபையையும் காத்துக்கொள்ள வேண்டும் என்ற நப்பாசைதான். பெரும்பாலான போதகர்கள் இதே போக்கைத்தான் பின்பற்றி வருகிறார்கள். எனக்குத் தெரிந்த இன்னொரு சபையில் போதகர் திடீரென கர்த்தரின் பாதத்தை அடைய ‍நேரிட்டது. அவர் வாழ்ந்த காலத்தில் தன் சபையில் எந்த‍வொரு ஊழியத்திற்காகவும் அவர் எவரையும் தயார் செய்யவில்லை, செய்யவும் விடவில்லை. அவர் இறந்தபிறகு சபையை அவருடைய உறவினர் ஒருவர் இன்றும் நடத்தி வருகிறார். தன்னுடைய மகன் ஊழியத்திற்கு வந்து போதகனாகி சபையைத் தொடர்ந்து கொண்டு நடத்த வேண்டும் என்ற ஆசையில் செயல்படாத போதகர்களை இன்று காண்பது அரிது.

இதில் என்ன தவறிருக்கிறது? உலகத்தல் ஏதோவொரு வேலையைச் செய்து பத்து காசு சம்பாதிப்பதைவிட, கர்த்தருக்காக என் மகன் உழைப்பது எத்தனை உத்தமமான காரியம். அதைப்போய் தவறு என்கிறீர்களே என்று சிலர் கேட்கலாம். உண்மைதான், போதகர் ஒருவரின் மகன் போதகனாக வருவதில் எந்தத் தவறுமில்லை. சபை வரலாற்றில் எத்தனையோ போதகர்களின் மகன்கள் போதக ஊழியத்திற்கு வந்திருப்பதை வாசிக்கலாம். அது கர்த்தர் அனுமதிக்கும் காரியம்தான். ஆனால், ஒவ்வொரு போதகனின் மகனும் நிச்சயம் ஊழியத்திற்குத்தான் வர வேண்டும், வேறு வேலைகளைச் செய்யக்கூடாது என்று நாம் வேதத்தில் எங்குமே வாசிக்க முடியாது. தாவீதையும் அவன் மகன் சாலமோனையும் உதாரணம் காட்டுவார்கள் சிலர். அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை இவர்கள் உணர்வதில்லை. வேதம் இதைப்பற்றி என்ன சொல்கிறது என்பதை இனி ஆராய்வோம்.

1. உடலை வருத்தி உழைக்கக்கூடிய நியாயமான எந்தத் தொழிலும் நன்மையானதே என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

நம்மைப் படைத்த கர்த்தர் நாம் உழைப்பவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். ஆகவே, மனிதர்கள் எல்லோரும் ஏதாவதொரு தொழிலைச் செய்ய வேண்டும். அது போதகர்களுடைய பிள்ளைகளுக்கும் பொருந்தும். சில போதகர்கள், ஊழியக்காரன் உழைத்துச் சம்பாதிப்பது தவறு, அது ஊழியம் செய்பவனுக்கு இழுக்கு என்ற தவறான எண்ணத்தைக் கொண்டிருக்கிறார்கள். இது வேதத்தைப் படித்ததால் ஏற்பட் சிந்தனை அல்ல, அவர்கள் தாங்களாகவே வளர்த்துக்கொண்ட கற்பனை. எல்லா இடங்களிலும் எல்லாப் போதகர்களும் முழு நேர ஊழியம் செய்து சபையில் இருந்து ஊதியம் பெற வேண்டும் என்றால் முடியுமா? புதிதாக உருவாகின்ற சபைகளும், சிறு சபைகளும் போதகர்களுடைய எல்லாத் தேவைகளையும் நிறைவேற்றி வைக்கும் அளவுக்கு பணவசதியைக் கொண்டிருப்பதில்லை. அத்தகைய சபைகளைப் போதகர்கள் நிராகரித்து விடமுடியுமா? சபையால் பணம் கொடுக்க முடியவில்லை என்பதால் ஊர் பேர் தெரியாதவர்களிடமெல்லாம் பணம் கேட்டு அலைய முடியுமா? நிலமைக்கு ஏற்றபடி சபை வளர்ந்து தங்களுடைய தேவைகளை நிறைவேற்றி வைக்கும்வரை ஊழியத்தோடு வேறு ஒரு வேலையை செய்வது வேதபூர்வமான செயல். அதை இழுக்கு என்று சொல்பவர்களுக்கு ஊழியம் என்றால் என்னவென்று தெரியவில்லை என்றுதான் அர்த்தம். ஊழியக்காரன் வேலை செய்தால் ஊரில் தவறாகப் பேசுவார்கள், நம்மை மதிக்கமாட்டார்கள் என்று ஒரு ஊழியக்காரர் ஒருதடவை சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். இத்தகைய எண்ணங்கள் நாமாக வளர்த்துக்கொண்ட எண்ணங்கள். உண்மையில் தன் சொந்தக்கையை நம்பி உழைத்துப் பிரசங்கிக்கிறவர்களை ஊர் மக்கள் நிச்சயம் மதிப்பார்கள்; கர்த்தரும் ஆசீர்வதிப்பார்.

இதற்காக நாம் எல்லாப் போதகர்களும் ஒரு வேலையைத் தேடிக்கொள்ள வேண்டும் என்று சொல்லவில்லை. பெரிய சபைகளைக் கொண்டிருப்பவர்களுக்கு போதிப்பதற்கம், ஆத்துமாக்களுடைய தேவைகளைக் கவனிப்பதற்கும் நேரம் தேவை. பெரிய சபைகளால் போதகர்களுடைய வசதிகளை நிறைவேற்றக்கூடியதாக இருக்கும். ஆனால், சிறு சபைகளாலும், புதிய ஊழியத்தை ஆரம்பிப்பவர்களும் அத்தகைய வசதிகளை ஊழியத்தில் எதிர்பார்க்க முடியாது. ஊழியம் வளரும்வரை அவர்களை தங்கள் தேவைகளைக் கவனித்துக்கொள்ளும் வகையில் வேலைசெய்வது நியாயமானது. ஐந்து, ஆறு ஆத்துமாக்களை மட்டும் வைத்துக்கொண்டு சிலு ஊழியத்தில் ஈடுபட்டிருக்கிற மனிதன் நியாயமாக ஒரு தொழிலைச் செய்து தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளப் பார்க்க வேண்டும். சபைகளால் தனக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தரமுடியாத நிலை இருந்தபோது பவுல் அப்போஸ்தலன் தனக்கு தெரிந்த கூடாரம் செய்யும் பணியைச் செய்து தன்னுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொண்டான் என்று வேதம் சொல்கிறது. பவுல் உடலை வருத்தி உழைப்பதற்கு தயங்கவில்லை. உழைப்பது எவருக்கும் இழுக்காகாது. உழைக்க மறுக்கிறவன்தான் சமுதாயத்துக்கு தீங்கானவன். இன்று பலர் உழைப்பதற்கு தயங்குவதாலும், வெட்கப்படுவதாலும் ஊழியத்தை வாய்க்காலாகப் பயன்படுத்தி வளர முயல்வது நமக்குத் தெரியாததல்ல.

போதகர்களே, உழைப்பதில் தவறில்லை என்று இருக்கும்போது, அவர்களுடைய பிள்ளைகள் உழைப்பதில் என்ன தவறிருக்க முடியும்? போதகர்கள் தங்களுடைய பிள்ளைகள் படித்து அவர்களுக்கு எதில் திறமை இருக்கிறதோ அந்தத் தொழிலை செய்ய அனுமதிக்க வேண்டும். அவர்கள் அவசியம் ஊழியத்துக்குத்தான் வரவேண்டும் என்று வேதம் எங்குமே போதிக்கவில்லை. உடலை வருத்தி உழைப்பது ஊழியத்தைவிட தரத்தில் குறைவானது என்ற தவறான எண்ணத்தை அநேகர் கொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாக அநேக ஊழியக்காரர்கள் தங்கள் பிள்ளைகள் ஊழியத்தில் ஈடுபட வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். இது தவறான செயல். ஊழியம் என்பது கர்த்தல் சிலரை அழைத்துக் கொடுக்கும் பணி. அதில் நினைத்தவர்கள் எல்லாம் நுழையப்பார்ப்பது தவறு. ஊழியம் செய்வதற்கென்று பல தகுதிகள் இருக்கின்றன. அந்தத்தகுதிகள் இருந்து சபைகளால் அங்கீகரிக்கப்பட்டவர்களே எந்த ஊழியத்திலும் ஈடுபட வேண்டும். இது கர்த்தர் சபைகளில் ஏற்படுத்தியிருக்கும் வழிமுறை. ஊழியத்திற்கு வராதவர்களை கர்த்தர் தனது இராஜ்யத்தில் இரண்டாந்தரப் பிரஜைகளாகக் கருதுவதில்லை. ஊழியம் செய்பவனையும், உலகத்தில் வேறு தொழில்களைச் செய்கிற விசுவாசியையும் கர்த்தர் ஒரேவிதமாகத்தான் நேசிக்கிறார். இருவரும் தங்கள் தங்கள் பொறுப்புக்களை கர்த்தருக்கென்று விசுவாசமாக செய்ய வேண்டும். ஊழியம் செய்கிறவர்களுக்கென்று பரலோகத்தில் விசேஷ வசதிகள் கிடைக்கப்போவதில்லை. ஊழியம் செய்கிறவர்களை ஆத்துமாக்கள் மதிக்கவேண்டியது அவசியம்தான். ஆனால், அவர்களை அதிசயப் பிறவிகள் போலவும், இராஜாக்கள் போலவும் நடத்த வேண்டும் என்று வேதம் போதிக்கவில்லை. ஊழியக்காரர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பை கர்த்தருக்கு முன்பும், ஆத்துமாக்களுக்கு முன்பும் உண்மையோடும், விசுவாசத்தோடும் செய்யாமல்போனால் அவர்களைத் தொடர்ந்து மதிக்க வேண்டும் என்று வேதம் போதிக்கவில்லை. ஊழியத்தை விசுவாசத்தோடு உழைத்து நடத்தாதவன் உண்மையான ஊழியக்காரனாக இருக்க முடியாது.

2. ஊழியத்தில் குடும்ப வாரிசு முறையையும், குடும்பத்தலைமை முறையையும் வேதம் எந்தவிதத்திலும் அங்கீகரிப்பதில்லை.

போதகப்பணிக்கு நியமிக்கப்பட்டிருக்கின்ற மனிதனுக்குதான் போதக ஊழியம் கொடுக்கப்பட்டிருக்கின்றதே தவிர அவனுடைய முழுக்குடும்பத்திற்கும் அல்ல. சபை அந்தக் குடும்பத் தலைவனை மட்டுமே போதகனாக நியமித்திருக்கிறது. அதைப்பயன்படுத்தி போதகன் தன் மகனைத் தான் செய்கின்ற தொழிலுக்கு வாரிசாக உருவாக்க ஆசைப்படுவது அடாவடியான செயல். வேதம் போதிக்கின்ற ஊழியக்காரனுக்குரிய தகுதிகளில், ஊழியக்காரன் போதகனின் மகனாக இருக்க வேண்டும் என்று எழுதப்படவில்லை. பலர் தங்களுடைய முழுக்குடும்பத்தையுமே அந்தப்பணிகளில் ஈடுபடுத்தி விடுகிறார்கள். இதை சபைகள் சகித்துக்கொண்டிருப்பதுதான் பெரிய ஆச்சரியம். சபையாருக்கு இதுபற்றிய வேதபோதனைகள் போதிக்கப்படாததாலும், நமக்கேன் வம்பு என்று பலர் பேசாமல் இருந்துவிடுவதாலும்தான் பல போதகர்கள் குடும்ப வாரிசு முறையை சபைகளில் ஏற்படுத்தி விடுகிறார்கள்.

எல்லா ஊழியக்காரர்களுக்கும் இருக்க வேண்டிய தகுதிகளைப் போதிக்கும் புதிய ஏற்பாட்டுப் பகுதிகள், 1 தீமோத்தேயு 3-ம், தீத்து 1-ம் தான். இந்தப் பகுதிகளில் கொடுக்கப்பட்டிருக்கும் தகுதிகளின் அடிப்படையில் மட்டுமே போதக ஊழியத்திற்கும், பிரசங்க ஊழியத்திற்கும், மூப்பர்களாகவும், உதவியாளர்களாகவும் வருகிறவர்கள் அங்கிகரிக்கப்பட வேண்டும். இந்தப் பகுதிகளில் குடும்ப வாரிசு முறையோ, குடும்பத்தலைமை முறையோ போதிக்கப்படவில்லை. இயேசு கிறிஸ்துவோ, அப்போஸ்தலர்களோ குடும்ப வாரிசு முறையை சபைகளில் ஏற்படுத்தவில்லை. தங்களுடைய குடும்ப அங்கத்தவர்களை அவர்கள் ஊழியத்திற்குள் நுழைத்ததாகவும் நாம் வேதத்தில் வாசிப்பதில்லை. தங்களுடைய குடும்ப அங்கத்தவர்கள் விசுவாசிகளாக இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்களே தவிர, ஊழியத்திற்கு தங்களுடைய வாரிசுகளாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை.

3. குடும்ப வாரிசு ஊழியமுறை வேதத்தின் மூலம் கர்த்தர் வெளிப்படுத்தியிருக்கின்ற சபை அமைப்பை முற்றாக நிராகரிக்கிறது.

வேதம் சபை அமைப்பு முறை பற்றி மிகத் தெளிவான போதனைகளைக் கொடுத்திருக்கும்போது ஓர் போதகனுடைய அல்லது ஊழியக்காரனுடைய குடும்ப அங்கத்தவர்களை சபை ஊழியங்களில் அவர்கள் இருக்கும்போதே அல்லது அவர்களுக்குப்பிறகோ ஈடுபடுத்துகிறபோது, சபை அமைப்பு பற்றிய வேத போதனைகள் நிராகரிக்கப்படுகின்றன. உலகப்பிரகாரமான முறைகள் இதன் மூலம் சபைகளுக்கள் நுழைகின்றன. குடும்ப வாரிசு முறையைப் பின்பற்றும் சபைகள் வேதஞானமில்லாத சபைகளாக மட்டுமல்லாமல், வேதபோதனைகளை நிர்த்தாட்சன்யமாக புறக்கணிக்கிறவைகளாகவும் இருப்பதைப் பார்க்கலாம். முக்கியமாக தனி ஊழியங்களை நடத்துகிறவர்கள் மத்தியில் இத்தகைய குடும்ப வாரிசு ஊழியமுறை அதிகமாகக் காணப்படும். அதை நடத்துகிறவர்கள் குடும்பச்சொத்தைப் பாதுகாப்பதுபோல் தங்கள் ஊழியங்கள் எப்போதும் குடும்பத்துக்கு சொந்தமாக இருக்க வேண்டும் என்ற ஆசையில் இம்முறையைப் பின்பற்றுவார்கள். எனக்குத் தெரிந்த ஒரு கிறிஸ்தவ ஊழியத்தை நடத்துகிறவர் மரணமானதால் இப்போது அவருடைய மனைவியார் அந்த ஊழியத்தை நடத்த ஆரம்பித்திருக்கிறார். தமிழ் கிறிஸ்தவ உலகில் இது இன்று சாதாரணமாகவே நடந்துவருகின்றது.

குடும்ப வாரிசு முறையை ஊழியங்களில் ஏற்படுத்துவதால் வேதம் எந்தவகையில் நிராகரிக்கப்படுகின்றது என்பதை ஆராய்வது அவசியம். உதாரணத்திற்கு அந்த முறை சரிதான் என்று நம்புகின்ற ஒரு சபையை எடுத்துக் கொள்வோம். அந்த சபைப் போதகனின் மன‍ைவி ஏற்கனவே பல ஊழியங்களில் சபையில் ஈடுபட்டிருப்பார். பெண்கள் ஊழியம், ஏன், உதவியாளர்களாகவும், போதகர்களாகவும் கூடப் பல போதகர்களின் மனைவிமார் இன்று இருந்துவருகிறார்கள். அந்தப்போதகனின் மகன் ஆரம்பத்தில் இருந்தே ஊழியத்திற்கு வர‍வேண்டும் என்று குடும்பம் தீர்மானித்திருக்கும். இது சகஜம்தான் என்று ஏற்றக்கொள்ளும் மனநிலை கொண்டதாகத்தான் சபையும் இருக்கும். இது சரியல்ல என்று சிந்திக்கிறவர்கள் அத்தகைய சபைகளில் இருக்கமாட்டார்கள். இந்தக் காரியங்களில் வேத சிந்தனைகள் எல்லாம் கொண்டிருக்கும் விதத்தில் அந்த சபை ஆத்துமாக்கள் வளர்க்கப்பட்டிருக்க மாட்டார்கள். அடுத்தபடியாக வளர்ந்து வருகின்ற போதகனின் மகன் இறையியல் கல்லூரிக்கு, அவன் 15, 16 வயது இருக்கம்போதே அனுப்பி வைக்கப்படுகிறான். படிப்பு முடிந்து வந்ததும் தன் தகப்பனுக்கு உதவிப் போதகனாக இருப்பான். தகப்பன் இறந்த பிறகு தானே போதகனாக வந்துவிடுவான். இதுதான் குடும்ப வாரிசு தலைமை முறை. இதேபோல் அவனுடைய முழுக்குடும்பமும் சபை ஊழியங்களில் ஏதோ ஒன்றிற்குள் நுழைந்திருக்கம். இதுபற்றி சபையில் எவரும் கேள்வி கேட்க முடியாது.

இனி இதில் இருக்கும் தவறை ஆராய்வோம். முதலில், சபையில் எந்த ஊழியத்திற்கம் யார் வர வேண்டும் என்ற தீர்மானத்தை குடும்ப அடிப்படையில் தீர்மானிக்க கர்த்தர் அனுமதிக்கவில்லை என்பதைப் பார்த்தோம். அதற்கு முரணாக 15, 16 வயது இருக்கும் ஒரு வாலிபன், அவன் விசுவாசியாக சபையில் அங்கத்தவனாக இருந்து, வளர்ந்து முதிர்ச்சியடைந்து, சபை ஆத்துமாக்கள் எல்லோரும் அறிந்திருக்கும்படியாக ஊழியத்திற்கான அழைப்பையும், தகுதிகளையும் கொண்டிருப்பதற்கு முன்பாக இறையியல் கல்லூரிக்கு (பெரும்பாலும் வேதபோதனைகளையே தராத கல்லூரிகளுக்கு) அனுப்பி வைக்கப்படுகிறான். இந்த முறை வேதத்தில் எந்தப்பகுதியில் போதிக்கப்பட்டிருக்கிறது? சபைப் போதகனுடைய மகன் என்ற ஒரே தகுதியைத் தவிர (அது தகுதியே அல்ல) அந்த வாலிபனுக்கு வேறு எந்தத் தகுதியும் இருக்காது. குலோத்துங்க சோழனின் மகன் அரச கட்டில் ஏறியே ஆக‍வேண்டும் என்ற போக்கில் போதகனுடைய மகனும் போதகனாக வேண்டும் என்ற குடும்ப வாரிசு முறை இப்படியாக சபையில் ஆரம்பமாகிறது. புதிய கிறிஸ்தவர்களும், வாழ்க்கையிலும், கிறிஸ்தவ அனுபவங்களிலும் முதிர்ச்சி இல்லாதவர்களும் ஊழியக்காரர்களாக இருப்பதற்கு தகுதி இல்லை என்பது வேத போதனை. இதற்கெல்லாம் முரணாக அந்த வாலிபன் போதகனுடைய மகன் என்ற காரணத்திற்காகவும், குடும்ப வாரிசு முறையை சபையில் உருவாக்குவதற்காகவும் ஊழியத்திற்குள் நுழைக்கப்படுகிறான். அதேநேரத்தில் சபையில் கிறிஸ்துவை அறிந்திருந்த, கிறிஸ்தவ அனுபவங்களில் வளர்ந்து பல வரங்களையும் பெற்றிருக்கின்றவர்களெல்லாம் மறக்கப்படுகிறார்கள். அவர்களைப்பற்றி யாரும் சிந்திப்பதும் கிடையாது. ஒருவேளை சிந்தித்தாலும் போதகனின் மகனாக இல்லாத குறையால் அவர்கள் போதக ஊழியம் தவிர்ந்த ஏனைய ஊழியங்களுக்கு மட்டுமே அங்கீகரிக்கப்படுவார்கள். இத்தனைக்கும் மத்தியில் இதுபற்றி வேதம் என்ன சொல்கிறது என்ற சிந்தனையே ஒருவருக்கும் இருக்காது. வேதம் நிர்த்தாட்சன்யமாக இங்கே நிராகரிக்கப்படுகிறதைப் பார்க்கிறோம்.

அத்தோடு, போதகனின் மகனான அந்த வாலிபனுக்கு சிறுவயதில் இருந்தே ‘ஊழியப்பால்’ ஊட்டப்பட்டிருக்கும். அவனுடைய ஆசாபாசங்களையும், விருப்பு வெறுப்புகளையும் ஒருவரும் நினைத்தும் பார்க்க மாட்டார்கள். அவனுக்கு சொந்தமாக சிந்திக்கும் அனுமதியும் இருக்காது. போதகனாக வருமுன்பே எதிர்காலப்போதகன் என்ற முறையிலேயே சபையும் அவனை நடத்திவரும். இதையெல்லாம் எந்த வேதப்புத்தகத்தில் நாம் வாசிக்கிறோம்? இதுவே இன்று தமிழ் சபைகளையும், ஊழியங்களையும் பிடித்திருக்கும் ஒரு சாபக்கேடு.

4. குடும்ப வாரிசு ஊழியமுறை சபையை அல்லது ஊழியத்தை ஒரு குடும்பத்தின் அதிகாரத்தின் கீழும், ஆதிக்கத்தின் கீழும் கொண்டு வருகின்றது.

இந்தக்குடும்ப வாரிசு முறையால் சபைகளும், ஊழியங்களும் சில குடும்பங்களின் ஆதிக்கத்தின் கீழும், அதிகாரத்தின் கீழும் கொண்டு வரப்படுகின்றன. ஆத்துமாக்கள் கர்த்தரின் வசனத்தின்படி வளர்த்தெடுக்கப்படாமல் ஒரு குடும்பத்தின் வேதத்திற்குப்புறம்பான ஆதிக்கத்தில் அகப்பட்டு வளர வேண்டியிருக்கிறது. இந்தக் குடும்ப வாரிசு முறையைப் பின்பற்றுகிறவர்களெல்லாம் தாங்கள் செய்யும் அநியாயங்களுக்கம், தவறுகளுக்கும் கர்த்தரையும் சாட்சியாக இழுத்துக் கொள்வார்கள். ஊழியத்திற்கு குடும்பத்தோடு வருமாறு தங்களைக் கர்த்தர் அழைத்திருக்கிறார் என்று சொல்கின்ற எத்தனைபேரைப்பற்றி நாம் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறோம்.

சபைகளும், ஊழியங்களும் குடும்பங்களால் ஆட்சி செய்யப்படும்போது தவறுகள் அடுக்கடுக்காக ஏற்படும். அந்தக் குடும்பங்களின் விருப்பு, வெறுப்புகளுக்கு ஏற்றவிதத்தில்தான் சபைகளில் அனைத்துக் காரியங்களும் நடைபெறும். அந்தக்குடும்பங்கள் செய்யும் தவறுகளைத் தட்டிக்கேட்பதற்கும் திருத்துவதற்கும் ஒருவரும் இருக்க மாட்டார்கள். அப்படி தட்டிக்கேட்பவர்கள் தொடர்ந்தும் சபைகளில் இருக்க முடியாதபடி அந்தக்குடும்பங்கள் பார்த்துக் கொள்ளும். சபை ஊழியங்கள் பற்றிய எல்லா முடிவுகளும் அந்தக் குடும்ப அங்கத்தவர்களால் எடுக்கப்படுவதால் கர்த்தரின் பேச்சுக்கு சபையில் இடம் ‍இருக்காது. சபைப் பணவிஷயங்கள் எல்லாம் அந்தக்குடும்பத்தின் அதிகாரத்தில் இருக்கும். அந்தக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களே பெரிய படிப்புப் படிக்கப் போவார்கள்; சபைகளிலும், சபைக்கு வெளியிலும் பெரும் பதவிகளில் இருப்பார்கள்; அவர்கள் மட்டுமே கர்த்தரின் பணத்தை வைத்து தங்களை வளர்த்துக் கொள்வார்கள். கேள்வி முறை இல்லாமல் அவர்கள் பணத்தைக்கையாளுவதைக் கேட்பதற்கு ஒருவருக்கும் அதிகாரம் இருக்காது. இவர்களும் இவர்களுடைய குடும்பங்களும் அரசியல்வாதிகள் வளர்வதுபோல் வளர பாமர நாட்ட மக்கள் அப்படியே இருந்த நிலையிலேயே எப்போதும் இருப்பதுபோல் ஆத்துமாக்களும் இருந்துவருவார்கள். வேதத்திற்குப் புறம்பான இத்தனை அநியாயங்களையும் கர்த்தரின் பெயரில் சபைகளில் இருக்க அனுமதிக்கலாமா?

இதைக்குறித்து ஆத்துமாக்கள் செய்ய வேண்டியது என்ன? குடும்ப வாரிசுமுறை நடக்கும் சபைகளும், ஊழியங்களும் இருக்கும் இடத்திற்கே நீங்கள் போகக்கூடாது. வேதம் போதிக்காத செயல்கள் நடக்கும் இடத்திற்குப் போவதால் நமது ஆத்மீக வாழ்க்கைக்குத்தான் ஆபத்து ஏற்படும். அத்தகைய குடும்ப வாரிசுமுறையைப் பின்பற்றும் எந்த ஊழியத்திற்கம் பணம் கொடுக்கக்கூடாது. கர்த்தரின் அனுமதியில்லாத அந்த முறையால் வேதபோதனைகளை மீறி எந்த நன்மையும் ஏற்பட்டுவிட முடியாது. இது இன்று நமது மக்களையும், ஊழியங்களையும் பி‍டித்திருக்கும் கொடிய ‘சார்ஸ்’ வியாதி. நாம் வேதத்தைப் படிக்காமலும், ஆராயாமலும், அதன்படி சிந்திக்க மறுப்பதாலுமே இத்தகைய கொடுமைகள் கர்த்தரின் பெயரில் கிறிஸ்தவ சபைகளிலும், ஊழியங்களில் நடந்து வருகின்றன. அவர்கள் செய்யும் அநியாயங்களைக் கர்த்தர் பார்த்துக்கொள்வார் என்று எண்ணி நாம் அமைதியாக இருப்பதை கர்த்தர் விரும்பவில்லை. இத்தகைய அநியாயங்களக்கு துணைபோகும் எந்தக்காரியத்தை நாம் செய்திருந்தாலும் நமக்கும் நியாயத்தீர்ப்பு நாளில் தண்டனை கிடைத்தே தீரும்.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s