எது பிரசங்கம்?

ஏன் பிரசங்கம்? என்ற கேள்விக்கு கடந்த இதழில் பதில் அளித்திருந்தோம். ஏனைய எல்லா செய்திப்பரவல் சாதனங்களையும்விட பிரசங்கமே கர்த்தருடைய சித்தத்தை வெளிப்படுத்துவதற்காக தெய்வீக வழிநடத்தலின்படி நியமிக்கப்பட்டிருக்கிறது. பிரசங்கத்தை ஆசீர்வதிப்பதுபோல் கர்த்தர் வேறு எதையும் ஆசீர்வதிப்பதில்லை என்பதில் நான் உறுதியானதும், அசைக்க முடியாததுமான நம்பிக்கை வைத்திருக்கிறேன். இது மாம்ச ரீதியிலான நம்பிக்கையல்ல. வேதம் நமக்குப் போதிக்கும் சத்தியத்தின் அடிப்படையிலான நம்பிக்கை. அத்தகைய நம்பிக்கையை நெஞ்சில் கொண்டிராத எந்தப்பிரசங்கியும் பரிசுத்த ஆவியின் வல்லமையைத் தன்னுடைய ஊழியத்தில் காணமுடியாது என்பதையும் நான் உறுதியாக நம்புகிறேன்.

இனி, எது பிரசங்கம்? என்ற கேள்விக்கு நான் பதிலளிக்க வேண்டும். பிரசங்கம் எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்தக் கேள்வியைக் கேட்பதன் மூலம் ஆராயப்போகிறோம். அதாவது பிரசங்கத்தின் உள்ளடக்கம் எப்படி இருக்க வேண்டும் என்று பார்ப்பதல்ல இந்த ஆக்கத்தின் நோக்கம். இதை நாம் இன்னொரு ஆக்கத்தில் பார்க்கப்போகிறோம். ஆனால் பிரசங்கி, ஏனைய செய்திப் பரவல் முறைகளையெல்லாம் தவிர்த்து பிரசங்கத்தைப் பயன்படுத்தி பிரசங்கம் செய்யும்போது அது எத்தகைய தன்மைகளைக் கொண்ட பிரசங்கமாக இருக்க வேண்டும் என்று பார்ப்பதுதான் இந்த ஆக்கத்தின் நோக்கம். பேசுகிற பேச்செல்லாம் பிரசங்கமாகிவிடாது என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை. பிரசங்கம் என்ற பெயரில் உப்புச்சப்பில்லாத பேச்சுக்களையும், ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத வரட்டு வாதங்களையும், இருதயத்தைப் பாதிக்கும் வல்லமையே இல்லாத செய்திகளையும் வாராவாரம் கேட்டுவர வேண்டிய நிலை இன்று அநேக தமிழ் ஆத்துமாக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. அதுபற்றி எத்தனையோ தடவை இந்தப் பத்திரிகையில் குறிப்பிட்டிருக்கிறோம். இந்த ஆக்கத்தில் மெய்யான பிரசங்கத்தில் நாம் எப்போதும் அடையாளங் காணக்கூடிய அவசியமான சில குணாதிசயங்களை ஆராய்வோம்.

எல்லாவகைப் பேச்சுக்களும் பிரசங்கமாகிவிடாது

பேச்சுக்களில் பலவகைகள் இருக்கின்றன. கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும், இறையியல் கல்லூரிகளிலும் கொடுக்கப்படும் விரிவுரைகளும் பேச்சுதான். கதாகாலாட்சேபம் செய்வதும் ஒருவகைப் பேச்சுத்தான். ஒரு விஷயத்தைக் குறித்து தர்க்கம் செய்வதும் பேச்சோடு தொடர்புடையதுதான். ஆனால், இவையெல்லாம் பிரசங்கமாகிவிட முடியாது. மற்ற எல்லாவற்றையும் விட பிரசங்கம் வித்தியாசமானது. உதாரணத்திற்கு விரிவுரையை எடுத்துக் கொள்வோம். பிரசங்கத்தில் இருக்கும் சில தன்மைகளை நாம் விரிவுரையில் பார்க்க முடியாது. விரிவுரை பிரசங்கத்தைவிட அடிப்படையிலேயே வேறுபாடுடையது. விரிவுரையாளன் ஒரு விஷயத்தைக் குறித்துப் பேசும்போது அந்த விஷயத்தைப்பற்றிய அத்தனை உண்மைகளையும் சேகரித்து விளக்குகிறான். அப்படி விளக்கமளிப்பது மட்டுமே அவனுடைய குறிக்கோளாக இருக்கின்றது. ஆனால் பிரசங்கி ஒரு விஷயத்தை விளக்குவதோடு மட்டும் நின்று விடமுடியாது. அந்த விஷயத்தை ஆணித்தரமாக விளக்கி, அதை ஏன் நாம் விசுவாசிக்க வேண்டும் என்பதற்கான காரணங்களைச் சுட்டிக்காட்டி, அதை நாம் நிச்சயமாக பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்துவதும் பிரசங்கியினுடைய இலட்சியமாக இருக்கும். ஒரு விரிவுரையாளன் இதைச் செய்ய வேண்டிய அவசியமில்லை. விஷயத்தை ஆதாரத்தோடு சொல்லுவதுடன் அவனுடைய கடமை முடிந்துவிடுகிறது. ஆனால், பிரசங்கி அதற்கு மேல் ஒரு படி போய் சொல்லப்பட்ட விஷயத்தின்படி நாம் நடக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறான். பிரசங்கியால் ‍இதைச் செய்யாமல் இருக்க முடியாது. இது அவனுடைய உயிர் மூச்சு. இதைச் செய்யாதவன் பிரசங்கியாகவும் இருக்க முடியாது. இது பிரசங்கத்திற்கும் விரிவுரைக்குமிடையில் உள்ள ஒரு முக்கியமான வேறுபாடு. இந்த வேறுபாட்டைத்தான் ஏனைய பேச்சு வகைகளுக்கும் பிரசங்கத்திற்கும் இடையில் பார்க்கிறோம். ஏனைய பேச்சுவகைகள் செய்ய முடியாத காரியத்தை, அதாவது மனிதனின் இருதயத்தைத் தொட்டுத் தட்டி எழுப்பி கர்த்தரின் வார்த்தையின்படி நடக்க வேண்டும் என்று குரல் எழுப்ப பிரசங்கத்தால்தான் முடியும்.

பிரசங்கம் வேதபூர்வமான அதிகாரம் கொண்டதாக இருக்க வேண்டும்

மெய்யான பிரசங்கம் அதிகாரம் கொண்ட பிரசங்கமாக இருக்கும். பல பிரசங்கிகளின் பிரசங்கத்தில் இன்று வேத அதிகாரத்தையே பார்க்க முடியாது. அதிகாரம் என்று நான் கூறும்போது ஆத்துமாக்களை ஆட்டி வைக்கப்பார்க்கும் மாம்சத்துக்குரிய அதிகாரத்தொனியைக் குறிப்பிடவில்லை. அதையே இன்று பல பிரசங்கிகளிடம் பார்க்கிறோம். நான் கூறும் அதிகாரம் பிரசங்கி செய்யும் பிரசங்கத்திலும், அந்தப்பிரசங்கத்தின் மூலம் விளக்கப்படும் சத்தியத்திலும் காணப்படம். புதிய ஏற்பாட்டில் நாம் பார்க்கும் பரிசேயர்கள் பிரசங்கித்தபோது அங்கே மாம்சத்துக்குரிய அதிகாரத்தையே யூத மக்கள் பார்த்தார்கள். ஆனால், அவர்கள் இயேசுவின் பிரசங்கத்தைக் கேட்டபோது “அவர் வேதபாரகரைப்போல் போதியாமல், அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தபடியால் ஜனங்கள் அவருடைய போதகத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள்” என்று வேதம் கூறுகிறது. இது மாம்சத்துக்குரிய அதிகாரத்திற்கும், மெய்யான பிரசங்கத்தில் இருக்கும் அதிகாரத்திற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை விளக்குகிறது.

பிரசங்கங்கள் வேத அதிகாரம் கொண்டதாக இருக்க வேண்டுமானால் பிரசங்கி பின்வரும் தன்மைகளைக் கொண்டிருக்க வேண்டும்.

அ. வேதத்தின் அதிகாரத்தில் பிரசங்கிக்கு நம்பிக்கை இருக்க வேண்டும்.

பிரசங்கம் அதிகாரம் கொண்டதாக இருக்க வேண்டுமானால் முதலில் பிரசங்கிக்கு வேதத்தின் அதிகாரத்தில் நம்பிக்கை இருக்க வேண்டும். வேதத்தை நம்பாத பலர் இன்று பிரசங்கம் செய்வதில் ஈடுபட்டிருப்பது கிறிஸ்தவத்திற்கே ஏற்பட்டிருக்கும் இழுக்காகும். இவர்கள் வேதத்தை தங்களுடைய சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்களே தவிர அதை நம்பிப் போதிக்கும் பணியைச் செய்யவில்லை. வேதம் தனக்குள் சர்வ அதிகாரத்தையும் கொண்டதாக இருக்கிறது. அது கர்த்தருடைய தெளிவான வார்த்தை. அதில் தவறுகளுக்ளோ, குறைபாடுகளுக்கோ, குழப்பங்களுக்கோ எந்தவிதமான இடமும் இல்லை. அது கர்த்தருடைய நிறைவான சித்தத்தை மக்களுக்கு வெளிப்படுத்துகின்ற, கர்த்தரால் நமக்களிக்கப்பட்டள்ள ஒரே நூல். வேதத்திற்கு புறத்தில் இருந்து எதன் மூலமும், எவர் மூலமும் கர்த்தருடைய சித்தத்தை இன்று நாம் அறிந்து கொள்ள முடியாது. இத்தகைய தன்மைகளை வேதம் தனக்குள் கொண்டிருப்பதால்தான் அது அதிகாரமுள்ள கர்த்தருடைய வார்த்தையாக இருக்கின்றது. அதனால்தான் வேதம் அதிகாரம் கொண்டது என்று சொல்லுகிறோம். இந்த சத்தியங்களை முழு இருதயத்தோடும் நம்புபவனாக பிரசங்கி இருக்க வேண்டும். வேதத்தின் இந்த அரிய தன்மைகளை நம்பாதவர்கள் வேதத்தை சந்தேகக் கண்ணோடு பார்க்கிறார்கள். வேதத்தில் குறைகாணுபவர்களும், வேதத்தின் மூலம் மட்டுமே கர்த்தருடைய சித்தம் வெளிப்படுத்தப்படுகிறது என்பதை விசுவாசிக்க மறுக்கிறவர்களும் அதை அதிகாரம் கொண்ட கர்த்தருடைய வார்த்தையாக ஏற்றுக்கொள்வதில்லை. கர்த்தரின் (வேதத்தின்) அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மெய்யான பிரசங்கிகளாக இருக்க முடியாது. அவர்களால் அதிகாரத்தோடு பிரசங்கிக்கவும் முடியாது. அவர்களுடைய பிரசங்கம் மாம்சத்திற்குரியதாக மட்டுமே இருக்கும்.

வேதத்தோடு எதையும் சேர்க்கவும்கூடாது. அதிலிருந்து எதையும் அகற்றவும் கூடாது என்று இயேசு சொன்னார். சாத்தான் தன்னை சோதித்தபோது அந்த வேதத்தை மட்டும் பயன்படுத்தியே சாத்தானை அவர் விரட்டியடித்தார். தனக்குள்ளாக பூரணத்துவத்தையும், சகல வல்லமையையும் அவர் கொண்டிருந்தபோதும், இயேசு வேதத்தை அதிகாரத்துடன் பயன்படுத்தி சாத்தானை மடக்கி விரட்டியதை எண்ணிப்பாருங்கள். அன்று இயேசு அற்புதங்களை நாடவில்லை, அதிசயங்களைச் செய்யவில்லை. வேதத்தை மட்டுமே வாளாகப் பயன்படுத்தி (எபேசியர் 6) வேதத்துரோகியாகிய பிசாசை அடக்கினார். இயேசு வேதத்தின் பூரணத்துவத்தையும், அதிகாரத்தையும் விசுவாசித்தார். அதனால்தான் அவருடைய பிரசங்கங்கள் மக்கள் ஆச்சரியமடையும்படி அதிகாரத்துடன் இருந்தன. எதிரிகளை அசைத்தன. பலருடைய கண்களைத் திறந்தன. வேதத்தின் அதிகாரத்தில் நம்பிக்கை வைத்துப் பிரசங்கித்த இயேசுவே நமக்கெல்லாம் முன்னோடி அவரைப்போல வேத்தின் அதிகாரத்தில் நமக்கு நம்பிக்கை இருந்தால்தான் நமது பிரசங்கங்கள் அதிகாரத்துடன் இருக்க முடியும்.

ஒரு பிரசங்கி மாம்சத்திற்குரிய வல்லமையோடு வேதத்தை பிரசங்கித்து விடலாம். யூதாசு திருடனாகவும், இயேசுவைக் காட்டிக் கொடுத்தவனாகவும் இருந்தபோதும் தன் வாழ்நாளில் பிரசங்கமும் செய்திருக்கிறான். இப்படிப் பலரை வேதத்தில் இருந்து நாம் உதாரணம் காட்ட முடியும். ஆகவே, பிரசங்கிக்கிறவர்களெல்லாம் வேதத்தைப் பயன்படுத்திக் கொள்வதால் அவர்களுடைய பிரசங்கம் அதிகாரமுள்ளதாக இருந்துவிடாது. வேதத்தின் புனிதத்தன்மைகளை உணர்ந்து, அறிந்து, விசுவாசித்துப் பிரசங்கிக்கிறவர்கள் மட்டுமே ஆவிக்குரிய அதிகாரத்தோடு வேதத்தை பிரசங்கிக்க முடியும்.

ஆ. பிரசங்கி வேதத்தின் அதிகாரத்தில் நம்பிக்கை வைத்து பிரசங்கத்தை தயாரிக்க வேண்டும்.

வேதம் சகல அதிகாரமும் கொண்டது என்று விசுவாசிப்பவர்கள் வேத போதனைகளை ஏனோதானோவென்று பிரசங்கிக்கப் பயப்படுவார்கள். அவர்கள் சர்வ அதிகாரம் கொண்ட கர்த்தரின் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டு, தேவபயத்துடன் பிரசங்கத்தைத் தயாரித்துப் பிரசங்கிப்பவர்களாக இருப்பார்கள். ஏனெனில் பிரசங்கி மாம்சத்துக்குரிய செய்தியைப் பிரசங்கிக்காமல் தெய்வீக செய்தியைப் பிரசங்கிக்கிறான் என்று மார்டின் லொயிட் ஜோன்ஸ் சொல்லியிருக்கிறார். அந்த தெய்வீக செய்தியின் மூலம் கர்த்தருடைய அதிகாரத்தை ஆத்துமாக்கள் உணர வேண்டுமானால், பிரசங்கி பிரசங்கத்தை ஆவியின் துணையோடு கவனத்தோடு தயாரிப்பான்.

பிரசங்கம் அதிகாரமுள்ளதாக இருக்க வேண்டுமானால் அது பூரணமாக வேத அடிப்படையில் அமைந்ததாக, எந்தவித மனித ஞானத்திற்கும் இடமளிக்காததாக இருக்க வேண்டும். ஆகவே, பிரசங்கி விளையாட்டுத்தனமாக இருந்து நேரத்தை வீணாக்காமல், தன்னுடைய சிந்தனையில் சடுதியாக உதிக்கும் வேத சம்பந்தமற்ற பேச்சுகளைப் பேசுவதைத் தவிர்க்குமுகமாக பிரசங்கத்தைக் கவனத்தோடும், ஜெபத்தோடும், ஆராய்ந்து தயாரிப்பது அவசியம். கர்த்தருடைய வசனத்தின் அதிகாரத்தை ஆவியின் வல்லமையால் ஆத்துமாக்கள் உணர வேண்டுமென்ற ஒரே இலட்சியத்தோடு இரவும் பகலும் பாடுபட்டுப் பிரசங்கத்தைத் தயாரித்துப் பிரசங்கிப்பவர்களே மெய்யான பிரசங்கிகள். இப்படிப் படித்துத் தயாரித்துப் பிரசங்கித்ததால்தான் லூதரையும், கல்வினையும், பியூரிட்டன் பெரியோர்களையும், ஸ்பர்ஜனையும் அவர்கள் இறந்த பின்பும் உலகம் பாராட்டிப் பேசிக் கொண்டிருக்கிறது. அவர்களுடைய பிரசங்கங்களும் இன்றும் அழிவற்றதாக பலருக்கும் பயனளித்து வருகின்றன.

இ. பிரசங்கத்தை தேவ பயம் கலந்த அதிகாரத்துடன் பிரசங்கிக்க வேண்டும்.

வேதத்தை தேவபயத்தோடு படித்து பிரசங்கத்தைத் தயாரித்தபின் நமது கடமை முடிந்துவிடுவதில்லை. அதை ஆத்துமாக்களுக்குமுன் பிரசங்கிக்க வேண்டிய பெருங்கடமை இருக்கிறது. பிரசங்கத்தைத் தயாரித்தபோது பிரசங்கிகள் எடுத்த அத்தனை அக்கறையையும் பிரசங்கம் செய்யும்போதும் காட்ட வேண்டும். பிரசங்க மேடையில் ஒரு நடிகனைப்போல நடிக்கவோ (பெனிஹின்), கோமாளியைப்போல கூத்தாடவோ (பாதர் பேர்க்மன்) முயற்சி செய்யக்கூடாது. பிரசங்கம் செய்யும்போது மாம்சத்துக்குரிய எண்ணங்கள் எதுவும் நமது மனத்தை அலைக்கழிக்காமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கர்த்தருக்குப் பயந்து, ஆத்துமாக்களின் ஆத்தும வளர்ச்சியை மட்டுமே மனதில் கொண்டு பிரசங்கிக்க வேண்டும். பிரசங்கத்தை நன்றாகத் தயாரித்துவிட்டேன் நிச்சயம் நமக்கு இன்று பாராட்டு கிடைக்கும் என்றெல்லாம் சிந்தனை போகக்கூடாது. மிகவும் மனத்தாழ்மையுடனும், ஆத்ம சுத்தத்துடனும் பிரசங்கம் செய்ய வேண்டும். பிரசங்கத்தை கர்த்தருடைய அதிகாரத்துடன் பிரசங்கிப்பதற்கு இத்தகைய மனநிலை பிரசங்கிக்கு அவசியம்.

இன்று அநேக பிரசங்கிகள் பிரசங்க மேடை மூலம் ஆத்துமாக்களை மாம்சத்துக்குரிய விதமாக அதிகாரம் செய்து வருகிறார்கள். இத்தகைய பிரசங்கிகள் பிரசங்கிக்கும்போது ஆத்துமாக்களுக்கு கர்த்தரின் அதிகாரமோ, வேதத்தின் அதிகாரமோ தெரிவதில்லை. பிரசங்கியின் மாம்சத்துக்குரிய பலவீனமான அதிகாரம் மட்டுமே தெரிகிறது. இதனாலேயே இன்று நம்மத்தியில் பிரசங்கத்தின் வல்லமையைப் பார்க்க முடியாதிருக்கின்றது. எப்போதும் பிரசங்கத்தின் மூலம் கர்த்தருடைய வல்லமை மட்டுதே ஆத்துமாக்களுக்கு புலப்பட வேண்டும். அந்த நோக்கத்துடன்தான் மெய்யான பிரசங்கி எப்போதும் பிரசங்கத்தைக் கவனத்தோடு தயாரிப்பான். இனி அந்தப் பிரசங்கத்தைக் கர்த்தரின் மகிமைக்காக, அவருடைய அதிகாரம் மட்டுதே தெரியக்கூடியதாக பிரசங்கிக்க வேண்டியது அவனுடைய கடமை. இதற்காக பிரசங்கி அதிகமாக நெடுநேரம் ஜெபத்தில் ஈடுபட வேண்டியிருக்கிறது. என்னுடைய பிரசங்கத்தால் கர்த்தர் உயர வேண்டும், அவர் மகிமை அடைய வேண்டும் என்ற ஜெபத்தோடு பிரசங்கிகள் பிரசங்க மேடைக்குப் போக வேண்டும். அதனால்தான் தேவ பயமுள்ள பிரசங்கிகள் எத்தனை வருடங்கள் பிரசங்கித்திருந்த போதும், ஒவ்வொரு முறையும் பிரசங்க மேடையில் ஏறும்போது முதல் முறையாகப் பிரசங்கிக்கப் போவது போன்ற உணர்வோடு போவார்கள். அத்தகைய மனநிலை இல்லாதவர்களால் மெய்யான தேவபயத்தோடும், கர்த்தரின் அதிகாரத்தோடும் பிரசங்கிக்க முடியாது.

பிரசங்கத்தை ஆவியின் பலத்துடன் பிரசங்கிக்க வேண்டும்.

பவுல் அப்போஸ்தலன் தெசலோனியருக்கு எழுதிய நிருபத்தில் தன்னுடைய பிரசங்கத்தைப் பற்றி விளக்கும்போது, “எங்கள் சுவிசேஷம் உங்களிடத்தில் வசனத்தோடே மாத்திரமல்ல, வல்லமையோடும், பரிசுத்த ஆவியோடும், முழு நிச்சயத்தோடும் வந்தது” என்று விளக்குகிறார். பவுல் தன்னுடைய பிரசங்கத்தை தேவ பயத்தோடு படித்தும், ஆராய்ந்தும் தயாரித்ததோடும், அதனை அதிகாரத்தோடு பிரசங்கித்ததோடும் தன்னுடைய கடமை முடிந்துவிட்டதாகக் கருதவில்லை. அந்தப்பிரசங்கம் பரிசுத்த ஆவியின் வல்லமையைக் காண வேண்டும் என்றும் பவுல் எதிர்பார்த்திருந்தார். பவுலினுடைய பிரசங்கத்தில் ஆவியின் வல்லமை இருந்ததென்பதை பவுல் மட்டும் அல்ல, தெசலோனிக்கேயரும் உணர்ந்திருந்தனர். ஆவியின் வல்லமையை அவர்கள் அனுபவித்திருந்தனர். இதன் மூலம் பிரசங்கங்கள் எப்போதும் ஆவியின் வல்லமையோடு கொடுக்கப்பட வேண்டும் என்ற சத்தியத்தை அறிந்து கொள்கிறோம். இதையே பவுல் கொரிந்தியருக்கு எழுதிய நிருபத்திலும் பின்வருமாறு கூறுகிறார்: “என் பேச்சும் என் பிரசங்கமும் மனுஷ ஞானத்திற்குரிய நயவசனமுள்ளதாயிராமல், ஆவியினாலும், பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்டதாயிருந்தது.”

ஆவியின் வல்லமையைப் பற்றிய பல தவறான, வேதத்திற்கு விரோதமான எண்ணங்கள் கிறிஸ்தவர்கள் மத்தியில் இருக்கின்றன. அந்தத் தவறான எண்ணங்களுக்கு நாம் இடம் கொடுக்கக்கூடாது. பெந்தகொஸ்‍தே அல்லது கெரிஸ்மெட்டிக் பிரசங்கி ஆத்துமாக்கள் அந்நிய பாஷை பேசுவதும், நிலத்தில் திடீரென மயங்கி விழுவதும், உணர்ச்சி வசப்பட்டுத் துள்ளிக்குதிப்பதுமே தனது பிரசங்கம் ஆவியின் பெலத்தைப் பெற்றிருப்பதற்கு அடையாளமாகக் காண்கிறான். பவுல் தெசலோனிக்கேயருக்கு எழுதிய நிருபத்தில் இத்தகைய அனுபவங்களோடு தன்னுடைய பிரசங்கம் இருந்ததாக எழுதவில்லை. வேதபோதனைகளை தவறாக விளங்கிக் கொள்வதாலேயே பெந்தகொஸ்தேகாரர்கள் பிரசங்கத்தில் பரிசுத்த ஆவியின் வல்லமைக்கு அடையாளமாக நாம் மேலே பார்த்த அனுபவங்கள் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இயேசுவின் மலைப்பிரசங்கத்தில் பரிசுத்த ஆவியின் வல்லமை இருந்தது. ஆனால் அவருடைய பிரசங்கத்தைக் கேட்டவர்கள் இத்தகைய அனுபவங்களை அன்று அடைந்ததாக சுவிசேஷ நூல்கள் நமக்கு அறிவிக்கவில்லை. அப்போஸ்தலர்கள் பிரசங்கித்த ஒவ்வொரு தடவையும் இத்தகைய அனுபவங்களை ஆத்துமாக்கள் அடையவில்லை என்பதை புதிய ஏற்பாட்டை முறையாக வாசித்துப் பார்ப்பவர்களுக்கு விளங்கும். இத்தகைய அனுபவங்களை ஆத்துமாக்கள் பெற்றுக்கொள்ளாத இடங்களில் எல்லாம் அப்போஸ்தலர்களின் பிரசங்கத்தில் அதிகாரமோ ஆவியின் வல்லமையோ இல்லையென்று கூறிவிட முடியுமா? அங்கெல்லாம் மக்கள் பிரசங்கத்தைக் கேட்டு கர்த்தரை விசுவாசித்திருந்தார்கள். ஆகவே, பிரசங்கத்தில் பரிசுத்த ஆவியின் வல்லமைக்கு அடையாளம் அந்நிய பாஷை பேசுவது போன்ற அற்புதங்களோ, அடையாளங்களோ அல்ல என்பதை கிறிஸ்தவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். பிரசங்கத்தோடு இத்தகைய அனுபவங்கள் சேர்ந்துவரும் என்பது, பெந்தகொஸ்தேகாரர்கள் வேதப்பகுதிகளை சரியாக ஆராயாமல் கட்டிவிட்ட கதை என்பதை நாம் உணர்வது அவசியம்.

முதலில் பரிசுத்த ஆவியின் வல்லமை எங்கே இருக்காது என்பதைப் பார்ப்பது அவசியம். வேதத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டு பிரசங்கிக்கப்படாத பிரசங்கங்கள் இருக்கின்ற இடங்களில் பரிசுத்த ஆவியின் வல்லமையை நில்லயமாக பார்க்க முடியாது. சோம்பேறிப் பிரசங்கிகளின் பிரசங்கத்திலும், வெறும் அரசியல், சமூக உயர்வுக்கான பேச்சுக்களிலும், கதைசொல்லுவதையும், பாடல் கச்சரிகள் நடத்துவதையும் தொழிலாகக் கொண்டிருப்பவர்கள் மத்தியிலும் பரிசுத்த ஆவியின் வல்லமையை ஒருபோதும் பார்க்க முடியாது. பரிசுத்த ஆவியானவர் சத்தியத்தின் ஆவி என்று வேதம் சொல்லுகிறது. அவர் சத்தியத்திற்கு சொந்தக்காரர். சத்தியத்தை உணர்த்தும் பணியைச் செய்கிறவர். ஆத்துமாக்களின் இருதயத்தில் சத்தியத்தைப் பயன்படுத்தியே அவர் பாவங்களை உணரச் செய்கிறார். சத்தியத்திற்கே இடமில்லாத இடங்களில் அவருக்கு என்ன வேலை? சத்தியம் தெளிவாகவும், கர்த்தருக்கு மகிமை தரும் விதத்திலும் பிரசங்கிக்கப்படும் இடங்களில் மட்டும்தான் ஆவியின் வல்லமையைப் பார்க்க முடியும்.

கிறிஸ்து எங்கே வல்லமையாகப் பிரசங்கிக்கப்படுகிறாரோ அங்கே ஆவியின் வல்லமையைப் பார்க்கலாம். ஏனெனில், ஆவியானவர் இந்த உலகத்திற்கு வந்ததே கிறிஸ்துவை மகிமைப்படுத்தத்தான் (யோவான் 14:26; 15:26; 16:13-15). பிரசங்கங்கள் கிறிஸ்துவைப் பற்றிய ‍தெளிவான போதனைகளைக் கொண்டிருக்க வேண்டும். பாவிகள் அவரைத் தேடி ஓடிவரத் துணைசெய்யும் அளவுக்கு கிறிஸ்து பிரசங்கங்களை அலங்கரிக்க வேண்டும். இதை இன்று அநேகர் மறந்துவிட்டு சபைகளில் வாந்தி எடுப்பதையும், குரங்கைப்போலக் கூத்தாடுவதையும், நாயைப்போலக் குறைப்பதையும், ஆத்துமாக்களை நிலத்தில் விழுந்து புரள வைப்பதையும் ஆவியின் அடையாளங்களாக எண்ணி வருகின்றனர். அது அசுத்த ஆவியின் நடமாட்டத்திற்கான அறிகுறி. இத்தகைய அவலட்சனமாக காரியங்களுக்கு இடம் கொடுப்பவர்களுடைய வாழ்க்கையில் ஆவியின் கிரியைகளைப் பார்க்க முடியாது.

பிரசங்கம் எவ்வாறு பரிசுத்த ஆவியோடு வரும்? பரிசுத்த ஆவியின் வல்லமையை பிரசங்கத்தில் எப்படிப் பார்க்கலாம்? என்ற கேள்விகளுக்கு நிச்சயம் பதிலளித்தாக வேண்டும். இதைப்பற்றி இன்றைய தலைமுறையினர் மத்தியில் சிறந்த பிரசங்கி என்று பெயர் பெற்றுள்ள அல்பர்ட் என். மார்டின் (Albert N. Martin) கூறுவதைப் பார்ப்போம்: “பிரசங்கத்தின்போது கொடுக்கப்படும் ஆவியின் வல்லமையை சில பிரசங்கிகள் விளக்குகின்றபோது, தாங்கள் ஆவியானவரால் தூக்கிச்செல்லப்படுவதுபோன்ற ஓர் அனுபவமாக அது இருந்தது என்று குறிப்பிடுகின்றனர். அதாவது, ஆவியானவரின் வல்லமை இருக்கின்ற வேளைகளில் எந்தவிதமான தடங்கலோ, தடையோ இல்லாமல் தங்களால் சுலபமாக சத்தியத்தைப் பிரசங்கிக்க முடிந்திருக்கிறது என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள். அத்‍தோடு, பிரசங்கித்துக்கொண்டிருந்தபோது, பேசுவது சுலபமாக இருந்ததாகவும், கருத்துக்கள் தடங்கலின்றித் துள்ளிப்பாய்ந்தும் வந்திருப்பதாகவும் கூறியுருக்கிறார்கள். முக்கியமாக பாவிகளுக்கு கிறிஸ்துவைப் பற்றி எடுத்துச் சொல்லுகிற வேளைகளில் இந்தவிதமாக தங்களால் ஆவியின் துணையோடு பிரசங்கம் ‍செய்ய முடிந்திருப்பதாகக் கூறியிருக்கிறார்கள். அத்தோடு, ஆவியின் வல்லமை இருக்கும்போது பிரசங்கிக்கும், ஆத்துமாக்களுக்கும் இடையில் பிரிக்க முடியாததொரு தொடர்பு ஏற்பட்டு ஆத்துமாக்கள் பிரசங்க வார்த்தைகள் ஒவ்வொன்றையும் காதுகொடுத்துக் கேட்டு வாஞ்சையோடு மனத்தில் வாங்கிக் கொள்கிறார்கள். சத்தியத்தை ஆத்துமாக்கள் ஆவியின் வல்லமையால் தடையின்றிப் பெற்றுக் கொள்ளும் இந்த அனுபவமே ஆவியின் வல்லமைக்கு எடுத்துக்காட்டு” என்கிறார் அல்பர்ட் என். மார்டின். இத்தகைய ஆவியின் வல்லமை பிரசங்கியின் பேச்சுத்திறத்திலோ, பிரசங்க மேடையில் அவர் நடந்துகொள்கிற விதத்திலோ தங்கியிருக்கவில்லை. பிரசங்கம் ஆவியின் வல்லமையோடு அளிக்கப்படுகிறபோது பிரசங்கியும் நிச்சயமாக ஆவியின் வல்லமையால் பெரிதும் பாதிக்கப்படுகிறான். ஆனால், இது அவன் சுயமாக உருவாக்கிக்கொள்கிற ஒரு அனுபவம் அல்ல. ஜோர்ஜ் விட்பீல்ட் (George Whitefield), ஜொனத்தன் எட்வர்ட்ஸ் (Jonathan Edwards), ஸ்பர்ஜன் (Spurgeon) போன்றோர் தங்களுடைய பிரசங்க ஊழியத்தில் இந்தவிதமாக ஆவியின் வல்லமையை அனுபவித்திருப்பதாகக் கூறியிருக்கிறார்கள். ஜொனத்தன் எட்வர்ட்ஸ் ஒருமுறை கடல் கடந்து இங்கிலாந்துக்குப் போய் ஜோர்ஜ் விட்பீல்டின் பிரசங்கத்தைக் கேட்கச் சென்றார். அதைப்பற்றி எட்வர்ட்ஸ் பின்வருமாறு விபரிக்கிறார்: “விட்பீல்ட் பிரசங்கிக்க ஆரம்பித்தபோது முதல் ஐந்து நிமிடங்களில் அது எனக்கு சாதாரணமானதாகத்தான் தோன்றியது. இந்தப் பிரசங்கத்தை அவர் ஏற்கனவே பல முறை பிரசங்கித்திருக்கிறார் என்பதையும் என்னால் உணர முடிந்தது. அதைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தபோது அந்தப் பிரசங்கத்தில் இருந்த ஆவியின் வல்லமையை என்னால் உணர முடிந்தது. பிரசங்கியையும் மீறிய ஒரு சக்தி (ஆவியானவர்) விட்பீல்டை அற்புதமாக அன்று பயன்படுத்தினார். மக்கள் கூட்டம் பிரசங்கத்தால் அன்று பாதிக்கப்பட்டு கண்ணீர் விட்டது. இந்த மனிதனின் பிரசங்கத்தைக் கேட்க ஆயிரக்கணக்கானோர் ஏன் கூடி வருகிறார்கள் என்பதை நான் அன்றுதான் உணர்ந்தேன்” என்று எட்வர்ட்ஸ் கூறியுள்ளார்.

இத்தகைய ஆவியின் வல்லமையை பிரசங்கிகள் இன்றும் அனுபவிக்க முடியும். இது விட்பீல்டுக்கும், எட்வர்ட்ஸீக்கும், ஸ்பர்ஜனுக்கும் மட்டும் சொந்தமானதல்ல. ஆனால், ஆவியின் வல்லமையோடு பிரசங்கிக்க முடியாதபடி பிரசங்கிகுள் இன்று உலகப்பிரகாரமாக நடந்து தங்களுடைய ஊழியங்களை சிதறடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஊழியத்திற்கே வர அருகதை இல்லாதவர்கள் பிரசங்க ஊழியத்தில் ஈடுபட்‍டிருப்பதாலும், பிரசங்கம் செய்வதில் நம்பிக்கையை இழந்து வேறு சாதனங்களை நாடிப் பிரசங்கிகள் ஓடுவதாலும், பிரசங்கம் செய்பவர்கள் தேவ பயத்தோடு பிரசங்கத்தைத் தயாரித்துப் பிரசங்கிக்காததாலும் ஆவியின் வல்லமையை இன்று பார்க்க முடியாதிருக்கின்றது. இந்த நிலைமாற நல்ல பிரசங்கிகள் நமக்கு இன்று தேவை.

பிரசங்கம் ஆத்துமாக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்கு மகிமை சேர்ப்பதே ஒவ்வொரு பிரசங்கியினுடைய ஊழியத்தின் இலட்சியமாக இருக்க வேண்டும். ஆனால், அந்த இலட்சியத்தை மனதில் கொண்டு உழைக்கும் பிரசங்கியின் ஊழியத்தால் ஆத்துமாக்களின் வாழ்க்கையில் ஆத்மீக மாற்றம் ஏற்பட வேண்டும். அத்தகைய ஆத்மீக மாற்றம் ஆத்துமாக்களில் ஏற்படுவதன் மூலம்தான் கிறிஸ்து மகிமைப்படுத்தப்படுகிறார். மனிதர்களுடைய மனதை மாற்றும் சக்தி பிரசங்கிக்கு இல்லை. அதைக் கர்த்தரால் மட்டுமே செய்ய முடியும். ஆனால், கர்த்தர் அதை வேதப் பிரசங்கங்களின் மூலமாகவே ஆத்துமாக்களில் செய்கிறார். இதை மனதில் வைத்துக் கொண்மே எந்தப் பிரசங்கியும் உழைக்க வேண்டும்.

ஆத்தும மாற்றத்தை ஏற்படுத்தாத எந்தப் பிரசங்கமும் மெய்யான பிரசங்கமாக இருக்க முடியாது. பிரசங்கத்தைத் தயாரிக்கிறவன் ஆத்துமாக்களின் தேவைகளை உணர்ந்து, அவற்றை மனதில் கொண்டே பிரசங்கங்களைத் தயாரிக்க வேண்டும். எந்த வேதப்பகுதியைப் பயன்படுத்தி பிரசங்கத்தைத் தயாரிக்கும்போதும் அது ஆத்துமாக்களின் வாழ்க்கையில் பரிசுத்தத்தை ஏற்படுத்தும்படியான போதனைகளைக் கொண்டிருப்பதாகத் தயாரிப்பது அவசியம். இதற்காக பிரசங்கிக்கு தகுந்த வேத அறிவு இருப்பது மட்டுமன்றி தன்னுடைய ஆடுகளின் சுகநலன்களும் தெரிந்திருக்க வேண்டும். அது தெரியாத பிரசங்கியால் ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்தும் பிரசங்கங்களைத் தயாரிக்க முடியாது. தான் ஊழியம் செய்யும் ஆத்துமாக்களை அன்போடு நேசிக்காமலும், அவர்களின் வாழ்க்கையில் அக்கறை கொள்ளாமலும், அவர்களோடு அந்நியோன்யமாகப் பழகாமலும் ஊழியம் செய்கிறவர்கள் ஆவிக்குரிய பிரசங்கிகளாக இருக்க முடியாது. ஆத்துமாக்களுடன் பழகத்தெரியாத பிரசங்கி தன்னில் பெரிய பிரச்சனையைக் கொண்டிருக்கிறான். ஆத்துமாக்களோடு கூடுதலாக பழகினால் நம்மை மதிக்கமாட்டார்கள் என்று சில பிரசங்கிகள் நினைப்பதுண்டு. அவர்களுடைய சிந்தனையில் கோளாறு இருக்கிறது. பிரசங்கி ஆத்துமாக்களோடு பழக வேண்டிய விதத்தில் பழகி, அவர்களுடைய வாழ்க்கையில் தனக்கு அக்கறை இருக்கிறது என்ப‍தை அவர்கள் அறிந்திருக்கும்படிப் பார்த்துக்கொள்ள வேண்டும். அதைச் செய்ய முடியாதவர்கள் பிரசங்கி ஊழியத்தை விட்டுவிடுவது நல்லது.

ஆத்துமாக்களின் தேவைகளை மனத்தில் கொண்டு பக்குவத்தோடு பிரசங்கங்களை பிரசங்கி தயாரித்தபோதும் அதனால் ஆத்துமாக்கள் பயன்பட ஆவியானவர் கிரியை செய்வது அவசியம். ஆவியானவரைப் பிரசங்கியால் ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், விசுவாசத்தோடு தயார் செய்யப்பட்ட பிரசங்கத்தை ஆவியானவர் நிச்சயம் பயன்படுத்துவார் என்ற நம்பிக்கை பிரசங்கிக்கு எப்போதும் இருக்க வேண்டும். அந்த நம்பிக்கை இல்லாமல் ஒருவரும் பிரசங்கிக்கப் போகக்கூடாது.

பிரசங்கத்தின் மூலம் எப்போதும் இரண்டில் ஒரு காரியம் நடக்க வேண்டும். ஒன்றில் அது ஆத்துமாக்களின் இருதயத்தை அசைத்து கர்த்தரின் வழிப்படி நடக்க அவர்களை உந்தித் தள்ளுவதாக இருக்க வேண்டும். அல்லது, அவர்களுடைய சுயரூபத்தை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும். இந்த இரண்டில் ஒன்றை செய்யாதது ஒருபோதும் வேத பிரசங்கமாக இருக்க முடியாது. இதனால்தான் ஜோர்ஜ் விட்பீல்ட் போன்றோரின் பிரசங்கத்தால் மக்கள் மனம்மாறி கர்த்தரை விசுவாசித்தது மட்டுமல்லாமல், வேறு சிலர் அவரை எதிர்க்கவும் செய்தார்கள். மனிதனின் மனதை அச‍ைக்காத, இருதயத்தைப் பாதிக்காத பிரசங்கத்தால் எந்தவிதமான நன்மையுமில்லை. தன்னுடைய பிரசங்கத்தால் ஆத்துமாக்கள் நிச்சயம் இயேசுவிடம் வருவார்கள் என்ற நம்பிக்கையோடு பிரசங்கிகள் எப்போதும் பிரசங்க மேடைக்குப் போக வேண்டும் என்று ஸ்பர்ஜன் சொல்லியிருக்கிறார். பிரசங்கி டெலிவிஷன் செய்தியாளனைப் போல அனலும் இல்லாமல் குறிருமில்லாமல் (Cool Communicator) தேவ செய்தியைப் பிரசங்கிக்கக் கூடாது. ரிச்சட் பெக்ஸ்டல் என்ற பியூரிட்டன் பிரசங்கி சொன்னது போல், “மரணத்தின் வாசலில் இருக்கும் மனிதன் மரித்துக் கொண்டிருக்கும் மனிதனுக்கு பிரசங்கிப்பது போல்” நாம் பிரசங்கம் செய்ய வேண்டும்.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s